வியாழன், நவம்பர் 22, 2018

மொழி அறிவியல் சிந்தனைகளை உள்வாங்கி மிளிரவேண்டும்


மொழி அறிவியல் சிந்தனைகளை உள்வாங்கி மிளிரவேண்டும்


(இரண்டாம் பருவ புதிய பாடநூல்கள்: ஒரு பார்வை - பகுதி: 07) 
 
மு.சிவகுருநாதன்

 (ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பு இரண்டாம் பருவ தமிழ்ப்  பாடப்பகுதிகள் பற்றிய கருத்துகள்.)





  ‘வீட்டிற்கோர் புத்தகச் சாலை’ என்னும் அண்ணாவின் வானொலி உரையின் கட்டுரை வடிவம் ஒன்று பாடமாக வைக்கப்பட்டுள்ளது. வீடுதோறும் நூலகமும் வாசிப்புப் பழக்கமும் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் கட்டுரை இது. இப்பாடத்தில் அண்ணா எழுதிய நூல்கள் அல்லது அவர் வாசித்த, அவர் வீட்டிலிருந்த நூல்களின் பட்டியல் அளித்திருக்கலாம். ஆனால் அண்ணாவின் பொன்மொழிகள் பட்டியிடப்படுகின்றது (பக்.15). “முற்றும் துறந்த முனிவனல்ல”, போன்ற அண்ணாவின் பொன்மொழிகளை இணைக்காமல் விட்டதற்கு நாம் மகிழ்ச்சியடையலாம்! 

   இது அண்ணாவைப் பற்றிய பாடமா? அல்லது வாசிப்பை வலியுறுத்தும் பாடமா என்பதில் பாடநூல் குழுவினருக்குப் பெருத்த அய்யம் ஏற்பட்டிருக்கும்  போலும்! நூல்கள் அனுப்பவேண்டி பதிப்பகத்திற்குக் கடிதம், படத்தொகுப்பு ஆகியவையே இப்பாடத்திற்கான செயல்பாடுகள். “துறைமுகம் பற்றிய தகவல்களைப் படங்களுடன் திரட்டுக”, (பக்.36, கற்பவை கற்றபின்) என்று  சொல்கிறது. படங்களை வெட்டி ஒட்டுவதே எல்லாப்பாடங்களுக்குமான ஒரே செயல்பாடாய்ப் போன அவலத்தை என்ன செய்வது? பொருளியலுக்குக் கூட கல்விக்கடன் கேட்டு விண்ணப்பம் எழுதுவதுதானே இங்கு செயல்பாடாக இருக்கிறது?

   இவர்கள் பாடநூலில் செயல்பாடுகளை அளிக்காமல் இருந்தாலாவது பரவாயில்லை. இது ஒருசில ஆசிரியர்களாவது பாடத்தை ஒட்டிய, மாணவர்களுக்கு ஏற்ற செயல்பாடுகளை திட்டமிட, அளிக்க வழிவகுக்கும். ஆசிரியர்களும் மாணவர்களும் தங்கள் வீட்டு நூலகத்திலுள்ள சிறந்த நூல்களின் (10 லிருந்து 100 வரை) பட்டியலை அளிக்கச் சொல்லமே! கடிதம் எழுதுவது மட்டுந்தான் மொழிப்பயிற்சியா? கடிதம் எழுதுவதற்குப் பதிலாக இறுதியாக வாசித்த அல்லது வாசித்துக் கொண்டிருக்கும்  நூலைப் பற்றிய அறிமுகம் / மதிப்புரை / திறனாய்வு எழுதிவரச் செய்யுமாறு செயல்பாட்டை அளித்தால் என்ன? இவற்றை ஆசிரியரும் செய்து மாணவர்களையும் செய்ய ஊக்கப்படுத்தும் வகையில் அல்லவா பாடங்கள், அதுவும் குறிப்பாக மொழிப்பாடங்கள் இருக்க வேண்டும்? குழந்தைகளின் படைப்பாற்றலை பிறகு எவ்வாறு வெளிக்கொணர்வது?

   ‘நூல்வெளி’ பகுதியில், “சென்னை மாகாணத்தைத் ‘தமிழ்நாடு’ என்று மாற்றித் தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார்”, (பக்.16) (அண்ணாவின் சிறுகதைத்திறன் ப.373 முனைவர் பெ.குமார்) 

     மாகாணம், மாநிலம் இரண்டையும் ஏன் குழப்புகிறார்கள்? மாகாணமும் மாநிலமும் ஒன்றல்ல. இந்திய விடுதலைக்குப் பிறகு சென்னை மாகாணம் 1950 வரை நீடித்தது. இந்தியா குடியரசானதும் முன்னர் மாகாணங்களாக இருந்த அசாம், மேற்கு வங்காளம், பீகார், ஒரிசா, சென்னை (மதராஸ்), பம்பாய், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் ஆகிய ஒன்பது A பிரிவு மாநிலங்களாக மாற்றப்பட்டன. 1953 அக்டோபர் 01 இல் மொழி வாரி மாநிலமாக ஆந்திரா உருவானது.  1956 மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி 14 மாநிலங்கள் உருவாயின. இப்போதுள்ள எல்லைகளுடன் சென்னை (மதராஸ்) மாநிலம் 1956 நவம்பர் 01 இல் உதயமானது. சென்னை (மதராஸ்) மாநிலம் என்பதை அண்ணா முதல்வரான பின் 1967 ஏப்ரல் 16 இல் சென்னை மாநிலத்தைத் ‘தமிழ்நாடு’ என்று மாற்றினார்.  

   பொதுவாகப் படைப்புகளைக் கூட சொற்கள், சொற்றொடர்கள் ஆகியவற்றைத் திருத்தப்பட்ட பிறகே பாடநூலில் வெளியாகின்றன. எனவே இவ்வாறு பிழையான குறிப்பை ‘நூல்வெளியில்’ வெளியிட வேண்டிய தேவையென்ன? 

   2009 இல் அண்ணா உருவம் பொறித்த ஐந்து ரூபாய் நாணயம் வெளியிட்டது சொல்லப்படுகிறது (பக்.14). அந்நாணயம் வழக்கத்திற்கு மாறாக அண்ணாவின் தமிழ்க் கையொப்பத்துடன் வெளியானது. திருவாரூர் ஆசிரியத் தோழர் குருங்குளம் முத்துராஜாவின்  நாணயங்களில் தமிழ் எழுத்துகள் இடம்பெற விடுக்கப்பட்ட கோரிக்கையும் இது குறித்து ‘தினத்தந்தி’ (28.01.2007) இதழில் எழுதிய குறிப்பும் தமிழ் எழுத்துகளை நாணயத்தில் பொறிக்க விதியில்லாததால் அவரது தமிழ்க் கையொப்பத்தைப் பொறிக்கச் செய்த அப்போதைய முதல்வர் மு.கருணாநிதியின் செயல்பாடும் குறிப்பிடத்தகுந்தது. (நாணயம்,  தினந்தந்தி குறிப்பு – படம் இணைக்கப்படுகிறது.)  




   தி.ஜானகிராமனின் (தி.ஜா.) ‘செய்தி’ என்னும் சிறுகதை ‘விரிவானம்’ பகுதியில் (பக்.71) இடம்பெற்றுள்ளது. இக்கதை 1955 இல் சுதேசமித்தரனில் வெளியானது. பாடநூலுக்கென திருத்தங்கள், சுருக்கங்கள் செய்யப்பட்ட கதை இது. இவ்வாறு திருத்தங்கள் செய்வது மறைந்த படைப்பாளியை மீண்டும் சாகடிக்கும் வேலை. உங்களுக்கு மு.வ. போன்றவர்களின் வகைமாதிரிகள்தான் தேவை என்றால் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதானே! ஏன் தி.ஜா. போன்ற படைப்பாளிகளைச் சிதைக்கின்றீர்கள்? 

     தி.ஜா. சுமார் 120 சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது மொத்தச் சிறுகதைகளைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. (வெளியீடு: டிச. 2014, விலை: ரூ. 990, பதிப்பாசிரியர்: சுகுமாரன்)  இவற்றில் ஏன் இந்தக் கதையைத் தேர்வு செய்தனர் என்று விளங்கவில்லை. சிறுகதை நிறைய வெட்டுகளை எதிர்கொண்டுள்ளது. ‘மிஸ்டர் ஐயர், மிஸ்டர் பிள்ளை (மிஸ்டர் பிள்ளை - மிஸ்டர் மணி ஆகும் இடமும் உண்டு)  போன்ற வெட்டுகளும் சில பக்கங்கள், பத்திகள் முழுமையாக வெட்டியபிறகு பாடநூல் பகுதி கிடைத்துள்ளது. இதன் வெட்டுண்ட பகுதியில் கிடைக்கும் தஞ்சை மண்வாசனையை வெளிப்படுத்தும் சொற்கள் சிலவற்றைப் பட்டியலிடுவோம். ‘ஹும்காரம், ஜீவன், நவதான்ய கோத்ரம், ஸ்வானுபூதி, ரஞ்ஜகம், ஜதை வேஷ்டி, மனித சரீரம், அபஸ்வரம், நமஸ்காரம், நூறு ஜன்மம், பாலாபிஷேகம், சங்கீத கோஷ்டி, முகஸ்துதி, ஆலாபனம், கீர்த்தனம்’. இவை போதுமென்று நினைக்கிறேன். மண்வாசனை தூக்கலாகி தும்மல் வந்துவிடப்போகிறது! 

   இதன் ‘நூல்வெளி’யில் தி.ஜா. “தஞ்சை மண் வாசனையுடன் கதைகளைப் படைத்தவர்”, (பக்.75) என்று அறிமுகம் செய்யப்படுகிறார். இக்கதையில் தஞ்சை மண் வாசனை எங்கு மணக்கிறது? தஞ்சை வட்டார வழக்குகள் ஏதேனும் இக்கதையில் உள்ளதா? சி.எம்.முத்து, சோலை சுந்தரபெருமாள் போன்றோர் தஞ்சை வட்டார மக்கள் மொழியில் எழுதிப் புகழ்பெற்றோர். இக்கதைகள் யாருடைய மொழியைப் பேசுகிறது? 

    “தஞ்சாவூர் தமிழுக்கு அளித்த கொடை உ.வே.சாமிநாதர், மௌனி, தி.ஜானகிராமன், தஞ்சை பிரகாஷ், தஞ்சை இராமையா தாஸ், தஞ்சாவூர்க் கவிராயர் ஆகியோர்”, (பக்.75) எனக் குறிப்பிடப்படுகிறது. இப்பட்டியலில் க.நா.சு., கு.ப.ரா., கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம் போன்றோருக்கு இடமில்லை. சி.எம்.முத்து, சோலை சுந்தரபெருமாள், சு.தமிழ்ச்செல்வி, யூமா. வாசுகி, நக்கீரன் போன்றோர் இவர்கள் கண்ணில் பட வாய்ப்பே இல்லை. பெயரோடு தஞ்சாவூரை இணைத்துக் கொண்டவர்களே தஞ்சை எழுத்தாளர்கள் என வரையறை ஏதும் உண்டோ என்னவோ! இதுகூட பரவாயில்லை, வேறு ஏதேனும் சாதி (வர்ண) வரையறைகள் இருந்து தொலைக்கப் போகிறது? எழுத்தாளர் சாரு நிவேதிதாவும் (நாகூர்) ஒருங்கிணைந்த தஞ்சைப் பகுதியைச் சேர்ந்தவர்தான். தற்போதைய திருவாரூர் மாவட்டத்தில் (இடும்பாவனம்) பிறந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் (நாகூர்) வாழ்ந்தவர்.

“கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம் அந்நி லத்தில்
புல்விளைந் திடலாம் நல்ல புதல்வர்கள் விளைதல் இல்லை”, (பக்.8)
“கல்வியறிவு இல்லாத பெண்கள் பண்படாத நிலத்தைப் போன்றவர்கள்”, (பக்.9)

      என்கிற பெண்களை நிலமாக, பொருளாக அணுகும்முறை தவிர்க்கப்படவேண்டும். பாரதிதாசன் எழுதிவிட்ட காரணத்திற்காக இவற்றைச் சொல்லித் தரத்தேவையில்லை. இவ்வரிகளைத் தவிர்த்துவிடுவதில் எவ்விதச் சிக்கலும் இல்லை. 

    டாக்டர் முத்துலெட்சுமி, மூவாலூர் இராமாமிர்தம், சாவித்திரி பா புலே, பண்டித ரமாபாய், ஐடாஸ் சோபியா ஸ்கட்டர், மலாலா போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றனர். (பக்.4,5,6)  டாக்டர் முத்துலெட்சுமி சட்டமன்ற மேலவைத் துணைத்தலைவராகப் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றியதையும் குறிப்பிட்டிருக்கலாம். அறிஞர் அண்ணா (பக்.13), சொல்லின் செல்வர் ரா.பி.சே. (பக். 51) என்றெல்லாம் அடைமொழியுடன் எழுதுபவர்கள் முத்துலெட்சுமி என்றும் வெறுமனே குறிப்பதைத் தவிர்த்திருக்கலாம். ‘ரெட்டி’ என்னும் சாதிப் பின்னொட்டை நீக்கியவர்கள், ‘டாக்டர் முத்துலெட்சுமி’ என்று குறிப்பதில் சிக்கலிருக்க வாய்ப்பில்லை. வினா ஒன்றில் மட்டும் மருத்துவர் முத்துலெட்சுமி என்றுள்ளது. 

    “அறிஞர் அண்ணல், ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், காரல் மார்க்ஸ்”, (பக்.14) என்று இருவருக்கு அடைமொழியும் இருவர் பெயரை வெறுமனே எழுதுவது போன்ற தன்மைகள் பாடநூலில் இருக்கக் கூடாது.
   பண்டித ரமாபாய், “தடைகளை மீறி கல்வி கற்றுப் பண்டிதராகியவர். பெண்களின் உயர்வுக்குத் துணை நின்றார்”, (பக்.05) என்று சொல்லப்படுகிறது. இவர் சமஸ்கிருதப் பண்டிதர் என்பதும் மராட்டிய பிராமணக் குடும்பத்தில் பிறந்து குழந்தை விதவையாகி, வங்காளி ஒருவரை மறுமணம் செய்து, அவர் காலராவில் இறந்த பிறகு இங்கிலாந்து சென்று கிறித்தவ மதத்தைத்  தழுவி, குழந்தை விதவைகள், விதவைகள், ஆதரவற்ற பெண்கள் ஆகியோரது நலனுக்காக இயங்கியவர் என்பது கூடுதல் செய்தி.  

   தமிழகம் தவிர்த்த பிற இந்தியத் தலைவர்களின் பெயர்களில் சாதிப்பெயரை நீக்கி எழுதுவது சாத்தியமற்ற ஒன்று. ‘ரெட்டி’, ‘புலே’ என்கிற பின்னொட்டுகள் சாதியைக் குறிப்பன. காந்தி, மோடி, முகர்ஜி, புரோகித் ஆகியன எல்லாம் சாதியடையாளங்களே! தமிழகத்தில் இந்தப் புரட்சியை முன்னெடுத்தது தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம். 1929 செங்கற்பட்டு சுயமரியாதை மாநாட்டில் எடுக்கப்பட்ட இம்முடிவு ‘குடியரசு’ இதழில் சாதிப்பெயர் நீக்கப்பட்டு இயக்கமாக முன்னெடுக்கப்பட்டது. இருப்பினும் அவரது  எதிராளிகள் சாதிப்பெயர்க் குறிப்பிட்டே எழுதிவந்தனர். அதையே பாடநூலும் பின்பற்றுவது சரியல்ல. ஒருவரது பெயரை அவர் எப்படிப் பயன்படுத்தினாரோ கூடியவரையில் அப்படியேப் பயன்படுத்துவது அவசியம். இது பெரியார் பெயருக்கு மட்டுமின்றி அனைத்திற்கும் பொருந்தும். கிரந்த எதிர்ப்பாளர்கள் இது குறித்து சிந்திப்பது நலம். 

   2011 இல் வெளியான பத்தாம் வகுப்பு சமச்சீர் கல்வி சமூக அறிவியல் பாடநூல் பெரியாரை ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்றே குறிப்பிட்டது. எனது ‘தி இந்து’ கட்டுரைக்குப் (பிப். 05, 2015) பிறகு 2016 இல்தான் சாதிப்பெயர் நீக்கப்பட்டது. தமிழகத்தில் 5 ஆண்டுகள் இதை யாரும் கண்டுகொள்ளவில்லை. இன்னும் ஆசிரியர்கள் பழைய வினாத்தாளைக் கொண்டும், பழைய பாடநூலைக் கொண்டும் அவ்வாறே வினாக்கள் எழுதி வருகிறார்கள். பள்ளித் தேர்வுக்காகத் தயாரிக்கப்படும்ம் கட்டகங்களிலும் இதுதான் நிலை.  இதன் தாக்கமே அண்மையில் குரூப் 02 தேர்வில் கேட்கப்பட்ட வினாவிற்கான விடைகளில் பெரியார் பெயர் சாதியுடன், தவறாகவும் இடம்பெற்றது. 

   Kasturiba Gandhi, Savitriba Phule  என்ற பெயர்களை கஸ்தூரிபா காந்தி, சாவித்திரிபா புலே என்று எழுதுவதே முறை. Ba வை ‘பாய்’ ஆக்க  வேண்டியதில்லை. Phule (புலே) என்பதையும் ‘பூலே’ என நீட்டி எழுதவேண்டாம். பீகார் முன்னாள் முதல்வர் லாவை (Laloo / Lalu) ‘லல்லு’ என்று எழுதுவதைப்போல நாம்   பல பெயரை தேவையின்றி நீட்டி முழக்குகிறோம். குறிப்பாக இங்கையின் சிங்களப் பெயர்களான மகிந்த, ஜெயவர்த்தன, பிரேமதாச, ராஜபக்ச, விக்ரமசிங்க, ஜெயசூர்ய, சிறீசேன போன்ற பெயர்களின் இறுதி எழுத்தை நெடிலாக நீட்டிப் பேசியும் எழுதியும் வருகிறோம். இதற்குப் பாடநூல்களும் விதிவிலக்கல்ல. 

         “பூவாது காய்க்கும் மரம் உள”, (பக்.11) என்ற சிறுபஞ்சமூலப் பாடல் உள்ளது. “பூக்காமலே காய்க்கும் மரங்கள், விதைக்காமலே முளைக்கும் விதைகள் எவையெனக் கேட்டறிந்து வகுப்பறையில் கூறுக”, (பக்.12, கற்பவை கற்றபின்) என்ற செயல்பாடு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தாவர வகைப்பாட்டில் பூக்காதத் தாவரங்கள் அல்லது விதைகள் இன்றி இனப்பெருக்கம் செய்யும் தாவரங்கள் பட்டியலிடப்படுமா? இவை மாணவர்கள் உயிரியலில் படித்திருக்கக் கூடுமல்லவா? ஆனால் அத்திமரம், ஆலமரம், அரச மரம் என்பதாகச் சொல்லும் நிலைதான் உள்ளது. இவற்றில் பூக்கள் பெரிதாக நம் கண்ணுக்குத் தெரிவதில்லையே தவிர, இவை பூக்காத மரங்கள் இல்லை. இவைகள் பூக்கும் தாவர வகைப்பாட்டில் அடங்குபவை. மனிதன் தனக்குத் தேவைப்படுவற்றையே விதைக்கிறான். மாறாக இயற்கையான முறைகளில் விதைகள் விதைக்கப்பட்டு எண்ணற்ற தாவர இனங்கள் பெருகிக் கொண்டுதான் உள்ளன. ஒரு செய்யுளின் உவமையைக் கொண்டு இவ்வாறு சிந்திப்பது அபத்தம். 

  “தமிழ்த்தாயின் ஆணிவேர் துளிர்த்த இடம் மதுரை”, (பக்.36, கற்பவை கற்றபின்) என்று சொல்லப்படுகிறது. அது என்ன ஆணிவேர்? பக்க, கிளை வேர்கள் துளிர்த்த இடங்கள் எவை? ஆணிவேர் துளிர்க்குமா? துளிர்ப்பது ஆணிவேரா அல்லது தண்டா? ஆணிவேர் மட்டுந்தானா? சல்லி வேர்களும் உண்டா? இவ்வாறு மிகைப்படுத்தல்களால் ஆகப்போவது ஒன்றுமில்லை. இதுகூட ஒருவகையில் மொழியை இழிவுபடுத்தும் முயற்சியே! இவை மொழியை உயர்த்த அல்ல; தாழ்த்தவே செய்யும். பிற இடங்களுக்கும் தமிழ் மொழிக்கும் தொடர்பே இல்லையா?

    இடைச்சொல் – உரிச்சொல், ஆகுபெயர், புணர்ச்சி ஆகிய இலக்கணப்பகுதிகள் உள்ளன. கற்கண்டு என்று பெயரிட்டதாலே இலக்கணம் இனித்திடுமா என்ன? இவற்றைத் தனியே சொல்லாமல் பாடங்களுடன் இணைத்துக் கற்பிக்க முனைவது ஓரளவு நலம் பயக்கும்.

   “கற்சிற்பங்கள் அமைக்கும் கலை சோழர் காலத்தில் விரைவாக வளர்ச்சி பெற்றது”, (ப.61) என்று சொல்லுமிடத்தில் வெறுமனே சோழர் என்று குறிப்பதேன்? அவர்கள் பிற்காலச் சோழர்கள் அல்லவா!

ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் தெற்கில் சோழப் பேரரசு’, ‘விஜயநகர் மற்றும் தென்னிந்தியா – சோழர்களுக்குப் பின்னர்’ என்ற தலைப்புகள் மூலம் தென்னிந்தியா முழுவதையும் பிற்காலச் சோழர்கள் ஆட்சி செய்தார்கள் எனும்  புனைவு உற்பத்தி செய்யப்படுகிறது.
பிற்காலச் சோழர்களுக்கு முன்னதாகவே பல்லவர்கள் ஆட்சியில் கற்றளிகள், குகைக் கோயில்கள், பாறைக் கோயில்கள், புடைப்புச் சிற்பங்கள் எனப் பலவற்றிலும் நன்கு தேர்ந்திருந்தனர். மகாபலிபுரம், காஞ்சிபுரம் கோயில்களே இதற்குச் சான்றாகும். 

     ஆறாம் வகுப்பில் ‘கல்விக்கண் திறந்தவர்’ என்னும் தலைப்பில் காமராசர் பற்றிய பாடம் உள்ளது. (‘கு.காமராஜ்’ என்றே தமிழில் கையெழுத்திடுவார்!) அதில் ‘தெரிந்து தெளிவோம்’ பகுதியில் “காமராசருக்குத் தமிழக அரசு செய்த சிறப்புகள்” என்னும் பட்டியல் ஒன்றுள்ளது. அதில்,

“நடுவண் அரசு 1976 இல் பாரத ரத்னா விருது வழங்கியது.
சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது”, (பக்.09)

   இவையிரண்டையும் தமிழக அரசு செய்திருக்க இயலாது! மாறாக பரிந்துரைக்கவே முடியும். இல்லாவிட்டால் தலைப்பையாவது மாற்றித் தொலைக்கலாம்! வேறு என்ன செய்வது? 

   “காமராசர் முதல் அமைச்சராகப் பதவியேற்ற நேரத்தில் ஏறக்குறைய ஆறாயிரம் தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. அவற்றை உடனடியாகத் திறக்க ஆணையிட்டார்”, (பக்.09) என்ற வரிகளை விளக்க வேண்டாமா? ஏன் மூடப்பட்டது என்று மாணவர்கள் வினா எழுப்பினால் ஆசிரியர் என்ன பதில் சொல்வார்? 

  “வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் போகித் திருநாள்”, (பக்.30) என்றும் “வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக்கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிப் பாண்டிகை இந்திர விழாவாகக் கொண்டாடப்பட்டது”, (பக். 30) என்றும் முரணாகச் சொல்லப்படுகிறது. பொதுவாக எரிப்பது, தீயை வழிபடுவது திராவிடர், தமிழர் வழக்கமல்ல. போகியின் தீயிடல் மூலம் தீபாவளி வெடிகளுக்கு நிகராக காற்றும் சூழலும் மாசுபடுகிறது என்பதைக் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டாமா? 

   மொழிபெயர்ப்பு குளறுபடிகளும் நிறைய உள்ளன. களர் நிலம் வேறு; உவர்நிலம் வேறு.      Saline soil ((களர் நிலம், பக்.29) என்றுள்ளது. Saline soil என்பதை உவர்மண் என்றுதானே மொழிபெயர்க்க வேண்டும்? மண்ணில் கார , அமிலத் தன்மை அதிகமாக நிலம் களர் நிலமாகும். நீரில் கரையக் கூடிய சோடியம் போன்ற உப்புகளின் அளவு அதிகமாக இருந்தால் அது உவர் நிலம் எனப்படும். 

     Escalator (மின்படிக்கட்டு, பக்.21, வகுப்பு 6) நகரும் படிக்கட்டு என பாடத்தினினுள் இருக்கிறது. கலைச் சொற்பட்டியலில் ‘மின்படிக்கட்டு’ ஆக மாறுகிறது. e mail – மின்னஞ்சல்,  e book – மின் நூல், e library – மின் நூலகம், e magazine – மின் இதழ்கள் (பக்.21) ஆகியவற்றின் பாதிப்பில் இவ்வாறு மாறுவதாகக் கருதலாம். மின்னூல், மின்னூலகம், மின்னிதழ் என்றும் சொல்லித் தருவது நல்லது.  ‘e magazine – மின் இதழ்கள்’ என்று பன்மை வேண்டாமே! 

    commodity – பண்டம் என்பதால் commodity exchange - பண்டமாற்று முறை (பக்.54) என்று மொழிபெயர்க்கலாமா? Barter system என்பதுதான் பண்டமாற்று முறை? 

   ஈ காமர்ஸ் – மின்னணு வணிகம், ஆன்லைன் ஷாப்பிங் – இணையத்தள வணிகம், டிஜிட்டல் – மின்னணு மயம் (பக்.60) என்று பட்டியலிடப்படுகிறது. இவற்றை மின் வணிகம், இணைய வணிகம், எண்ணியல் எனலாம். Digitalization என்பதே மின்னணுமயம். Digital ஐ எண்ணியல்; இதை எப்படி மின்னணுமயம் என்பது?

   இரதம் என்று எழுதுவதை விடுத்து தேர், தேர்க்கோயில் என்று எழுதுவதில் என்ன சிக்கல் இருக்க முடியும்?  ‘உரோம், உரோமாபுரி, உரோமப் பேரரசு’ (பக்,36, வணிக வாயில்) என்று எழுதுவது நகைப்பிற்கிடமாக உள்ளது. மாறாக ஜவகர்லால் நேரு, சீசர் என்று எழுத வாய்ப்பிருந்தும் ஜவஹர்லால் நேரு, சீஸர் என்று எழுதுவது ஏன்?

    மாமல்லபுரம் சிற்பக்கலை பற்றிய பாடம் ஒன்றுண்டு. ‘கடல் மல்லை’ எனும் பேரால் சங்ககாலத் தொண்டைமண்டலத் துறைமுகப்பட்டினமாக விளங்கிய நகர் இது. இதில் மகேந்திர வர்மன், நரசிம்ம வர்மன் (பக். 34 & 35) என்று சொல்லப்படுகிறது. இதே பெயரில் பிற்காலப் பல்லவ அரசர்கள் இருப்பதால் முதலாம் மகேந்திர வர்மன் (கி.பி. 600-630), முதலாம் நரசிம்ம வர்மன் (கி.பி. 630-668) என்று சொல்வது குழப்பத்தைத் தடுக்கும். 

    “ஐந்து இரதங்கள் உள்ளதால் இவ்விடத்திற்குப் பஞ்ச பாண்டவர் இரதம் என்று பெயர்”, (பக்.34) என்றும் ‘அர்ச்சுணன் தபசு’ அல்லது  ‘பகீரதன் தபசு’   பற்றியும் குறிப்பிடப்படுகிறது. தேர்க்கோயில்களின் எண்ணிக்கையைத் தவிர பண்டவர்களுக்கு இதற்கும் தொடர்பில்லை. மேலும் மகாபாரத, ராமாயணப் புராணக்கதைகளுக்கு இங்கு செதுக்கப்பட்ட சிறபங்களுக்கும் யாதொரு தொடர்புமில்லை என்பதை அறிஞர்கள் பலர் தெளிவுபடுத்தியுள்ளனர். 

   இது தொடர்பான சில செய்திகள் எனது ‘கல்விக் குழப்பங்கள்’ (பாரதி புத்தகாலய வெளியீடு)  நூலிலிருந்து கீழே தரப்படுகிறது.


    “பல்லவர் ஆட்சிக் காலத்திற்கு முன்பு மல்லை அல்லது கடல் மல்லை என வழங்கப்பட்ட மாமல்லபுரம் பல்லவர்களின் துறைமுக நகராக விளங்கியது. நரசிம்ம வர்ம பல்லவன் தனது சிறப்புப் பெயர்களில் ஒன்றான மாமல்லன் எனும் பெயரை இந்நகருக்குச் சூட்டினான். மாமல்லபுரம் பிற்காலத்தில் மகாபலிபுரம் எனத் திரிந்தது. மகாபலிச் சக்கரவர்த்திக்கும் இந்நகருக்கும் யாதொரு தொடர்புமில்லை. 


   இன்றும் சிற்ப நகராக விளங்கும் மாமல்லபுரத்தில் ‘அர்ச்சுணன் தபசு’ அல்லது ‘பகீரதன் தபசு’   என்கிற சிற்பம் புகழ்பெற்றது. இவ்வாறே அழைக்கப்படும் இவற்றின் படம்கூட பாடநூலின் அட்டைப்படத்தில் இடம்பெற்றதுண்டு. இச்சிற்பங்கள் விளக்கும் உண்மைக்கதையை மயிலை சீனி.வேங்கடசாமி தனது ஆய்வுகள் மூலம் வெளிப்படுத்துகிறார். 


   கி.பி. ஏழாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இச்சிற்பம் சுமார் 96 அடி நீளமும் 43 அடி உயரமும் உள்ள செங்குத்தான பாறையில் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளது. மகாபாரதம் வன பர்வத்தில் அர்ச்சுனன் தபசு செய்து சிவனிடம் பாசுபதாஸ்திரம் பெறும் கதை என ஒரு சாரார் நம்புகின்றனர். இதையே நமது பாடநூற்களும் வழி மொழிகின்றன. 


   ஒற்றைக்காலில் நின்று கைகளை உயர்த்தித் தவம் செய்வது அர்ச்சுனன் ஆகவும் நான்கு கைகளுடன் காணப்படும் தெய்வ உருவம் சிவன் ஆகவும் கற்பனை செய்யப்படுகிறது. தபசு செய்யும் அர்ச்சுனனிடம் சிவன் வேடன் உருவம் பூண்டும் பார்வதி வேட்டுவச்சி  உருவம் பூண்டும் சென்றதாக புராணம். ஆனால் இத்தகைய உருவங்கள் ஏன் காணப்படவில்லை? மாறாக இக்கதைக்குத் தொடர்பில்லாத நாககுமாரர்கள், தெய்வகணங்கள், யானைகள்,  கங்கை, கோயில், தலையில்லாத மூன்று உருவங்கள் ஏன் உள்ளன? என மயிலையார் வினா எழுப்புகிறார். இந்திய சிற்ப முறைகளுக்கு முரணாக சிவன், அர்ச்சுணன் போன்ற உருவங்களைவிட யானை போன்ற உருவங்கள் பெரிதாக இருப்பது இது அர்ச்சுணன் தபசை குறிப்பதல்ல என்பதற்கு காரணமாகக் கொள்ளலாம் என்றும் தெளிவுபடுத்துகிறார். 


    மற்றொரு நம்பிக்கையான பகீரதன் தபசு கதையில் விண்ணிலிருந்து கங்கை மிக விரைவாக பூமியில் இறங்கியபோது அதைத் தன் சடையில் தாங்கிக்கொண்டதாக இருக்கிறது. இங்கு சிவன் சடைமுடியுடன் காணப்படவில்லை. ஜடாமகுடத்திற்குப் பதிலாக கிரீடமகுடம் இருப்பதும் சூலம், மழு முதலிய ஆயுதங்கள் அன்றி கதாயுதம் சிவனுடையது அல்ல.   கங்காதர மூர்த்தியின் உருவங்கள் பல்லவர் காலத்தில் அழகாக செதுக்கப்பட்டதுண்டு. (எ.கா.) திருச்சி மலைக்கோயில்)  ஆனால் பகீரதன் தபசில் கங்காதரமூர்த்தி இல்லை. இக்கதையில் இல்லாத யானைகள், நாகர்கள், தேவர்கள், தலையற்ற உடல்கள், தலைவணங்கி அமர்ந்திருக்கும் முனிவர், கோயில் ஆகியன  இருப்பது பகீரதன் தபசு இல்லை என்பதை உறுதிப்படுத்துவதாக மயிலையார் குறிப்பிடுகிறார். 


    இரண்டாவது சமணத் தீர்த்தங்கரர் அஜிதநாதசுவாமி புராணத்தில் சொல்லப்படும் சகர சக்கரவர்த்தியின் (சகர சாகரர்) கதை இச்சிற்பத்தில் விவரிக்கப்படுவதை மயிலையார் விளக்குகிறார். இது ராமாயணத்தில் வரும் சகர சக்கரவர்த்தியின் கதையல்ல. அது வேறு, இது வேறு. 


   ஜீத சத்துரு எனும் அரசன் பாரத நாட்டை ஆண்டபோது அவருக்கு இரு ஆண்குழந்தைகள் பிறந்தனர். மூத்தவன் அஜிதன்; இளையவன் சகரன். மூத்த குழந்தையே சமண சமய இரண்டாவது தீர்த்தங்கரரான அஜிதநாதர் ஆவார். இளைய மகன் சகரன் தந்தைக்குப் பிறகு அரசுரிமை பெற்றான்.  சகர சக்கரவர்த்தி இந்திரனை நோக்கி தவம் செய்து நவ (ஒன்பது) நிதிகளைப் பெற்றார். இது வேறு யாருக்கும் அவ்வளவு எளிதில் கிடைத்ததில்லை. சகர சாகரருக்கு 60,000 குழந்தைகள். இவர்களது பொதுப்பெயர் சாகர குமாரர் என்பதாகும். 


   நைசர்ப்பம், பாண்டுகம், பிங்கலம், மகாபத்மம், காலம், மகாகாளம், மானவம், சங்கம், சர்வரத்தினம் ஆகியவை ஒன்பது வகையான நியதிகளாகும். சர்வரத்தினம் ஜீவரத்தினம், அஜீவரத்தினம் என்னும் ஏழு ஏழு உட்பிரிவைக் கொண்டது. அஜீவரத்தினத்தில் ஒன்று தண்டரத்தினம் ஆகும். 


   கயிலாய மலை முதலாவது தீர்த்தங்கரரான ரிஷப தீர்த்தங்கரர் வீடுபேறடைந்த இடம். விலை மதிக்கமுடியாத செல்வங்களைக் கொண்டு பரத சக்கரவர்த்தி கோயில் கட்டியிருந்தார். கயிலாய மலைக்கு யாத்திரை வந்த சாகர குமாரர்கள் பரத சக்கரவர்த்தி கட்டிய கோயிலைப் பாதுகாக்க, சுற்றி அகழி தோண்ட விரும்பினர். நவநிதிகளில் ஒன்றான தண்டரத்தினத்தின் உதவியால் அகழி தோண்டி, அதில் கங்கை நீரை இழுத்துவந்து பாய்ச்சினர். இதனால் பாதாளத்தில் இருந்த நாகர்கள் துன்புற்றனர். நாகராசன் சினமுற்று மதயானைபோல் வந்து தனது விஷக் கண்களால் நோக்க சகர குமாரர்கள் எரிந்து சாம்பலாயினர். 


   தன்மக்கள் மாண்டதையும் கங்கையின் வெள்ளப் பெருக்கால் நாடுகள் அழிவதையும் அறிந்த சகர சக்கரவ்ர்த்தி தன் பேரன் பகீர்தனை அழைத்து தண்டரத்தினத்தின் உதவியால் கங்கையை இழுத்துக் கடலில் விடச் சொன்னான். பகீரதன் கங்கை வெள்ளத்தை கடலில் கொண்டுபோய் விட்டான். இதுதான் ஜைன மதத்தில் சொல்லப்படும் அஜிதநாதர்  புராணக்கதையாகும். 


   இச்சிற்பத்தை மேல்பகுதி, கீழ்ப்பகுதி என இரண்டாகப் பிரிக்கலாம். மேல்பகுதி சகர சக்கரவர்த்தி இந்திரனை நோக்கி தவம் செய்து நவநிதிகளைப் பெற்றதும், கீழ்ப்பகுதி சாகர குமாரர்கள் கயிலாய மலைக்கு வந்து அகழி தோண்டியது, நாகர்கள் துன்பப்பட, நாகராசன் பார்வையில் சகர குமாரர்கள் இறந்துபட்டதையும் விவரிக்கிறது.


   நதி வெள்ளத்தைக் கட்டுப்படுத்தாவிடில் அழிவு ஏற்படும் என்பதும் கட்டுப்படுத்தினால் நன்மை உண்டாகும் என்பதையும் இச்சிற்பம் மற்றும் கதை வழியே நமக்கு உணர்த்துகிறார்கள். மகேந்திர வர்மன் மாமண்டூரில் ஏரியை வெட்டி அதற்கு சித்ரமேகத் தடாகம் என்று தன்னுடைய பெயரை வைத்தான். மகேந்திரவாடியில் மகேந்திரத் தடாகம் என்ற ஏரியும் தோண்டப்பட்டது. 


  மேலும் கொடிக்கால் மண்டபம் குகையில் இருந்த கொற்றவை சைவ சமயக் கலகத்தால் சேதமடைந்தது. ஐந்து ரதங்கள் என்று சொல்லப்படும் பாறைக்கோயில்களுக்கு சூட்டப்படும் பெயர்களான அர்ச்சுனன், தர்மராஜா, பீமன், சகாதேவன், கணேசன் ஆகியவற்றுக்கும் பெயர்களுக்கும் தொடர்பில்லை. 


   திரெளபதி ரதம்  துர்க்கை என்னும் கொற்றவைக்காக அமைக்கப்பட்ட கோயிலாகும். இப்பாறைக் கோயில்களை மாடக் கோயில்கள், சாதாரண கோயில்கள் என்று இருவகையாகப் பிரிப்பர். இவற்றை மீண்டும் திராவிடக் கோயில்கள், வேசரக் கோயில்கள் என்றும் பிரிக்கலாம். 


  அர்ச்சுனன் ரதம், தர்மராஜா ரதம், சகாதேவ ரதம் ஆகிய பாறைக்கோயில்கள் மாடக்கோயில் வகையைச் சேர்ந்தவை. பீம ரதம், கணேச ரதம் ஆகியவை வேசரம் என்ற பிரிவில் வருபவை. எஞ்சியவை அனைத்தும் திராவிடம் என்னும் பிரிவில் அடங்கும். (உம்) திரெளபதி ரதம். திராவிட கட்டிடக்கலைப் பிரிவைச் சார்ந்த இவற்றை இளங்கோயில் என்றும் கூறுவர். இதற்கு வடமொழியில் ஶ்ரீகரக்கோயில் என்று சொல்லப்படுகிறது”. 

 (மகேந்திர வர்மன், நரசிம்ம வர்மன், சமயங்கள் வளர்த்த தமிழ், சமணமும் தமிழும் போன்ற மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் நூற்களை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டது.) கல்விக் குழப்பங்கள் நூலிலிருந்து… 

                                   (இன்னும் வரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக