செவ்வாய், நவம்பர் 13, 2018

வலங்கை – இடங்கை: ஆளும் – ஆளப்படும் சாதிப்பிரிவுகள்


வலங்கை – இடங்கை: ஆளும் – ஆளப்படும் சாதிப்பிரிவுகள்


(இரண்டாம் பருவ புதிய பாடநூல்கள்: ஒரு பார்வை - பகுதி: 06) 


  மு.சிவகுருநாதன்


 (ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் – வரலாறு  பாடப்பகுதியில் – பாடம்: 03 -  ‘இடைக்கால இந்திய அரசும் சமூகமும் – சோழர்கள் முதல் மொகலாயர்கள் வரை’ என்ற பாடத்தில் ‘சாதிகள், வலங்கை – இடங்கைப் பிரிவுகள்’ பாடப்பகுதி பற்றிய கருத்துகள்.)



“சாதி என்பது இந்தியச் சமூகத்தின் மிகவும் தனித்தன்மை வாய்ந்த (மிகவும் விவாதிக்கப்பட்ட) அம்சமாகும்”. (பக்.42)

     சாதிமுறையை ‘தனித்தன்மை வாய்ந்த அம்சம்’ என்று பெருமைப்படுத்துவது ஏன்? இதன் தொனி அப்படித்தானே உள்ளது! சாதி பெருமைப்படக் கூடிய ஒன்றா? இதன் பொருள் ‘மிகவும் விவாதிக்கப்பட்ட’ என்பதா? பொதுவாக பொருளைத்தானே அடைப்புக்குறிக்குள் எழுதுவது வழக்கம். 

“தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில்சார்ந்த சாதிகள் குறித்து நம்மிடம் விரிவான செய்திகள் உள்ளன”, (பக்.42)

“வலங்கை, இடங்கை சாதிகள் குறித்து நம்மிடம் விரிவான செய்திகள் உள்ளன”, (பக்.43) 

     என்றும் பெருமைப் படுவது ஏன்? அந்த விரிவான செய்திகளிலிருந்து பாடநூல் என்ன முடிவுக்கு வருகிறது அல்லது எத்தகைய கருத்துகளை மாணவர்களிடம் திணிக்கிறது? 

“முதலாவதாக சமய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு சமூகப்பிரிவுகள். ‘வர்ணம்’ என குறிப்பிடப்படுவது. நான்கு வர்ண முறைக்கு வெளியே பெருவாரியான மக்கள் இருந்தனர். இப்படியான வர்ணமுறைக்கு வெளியிருப்போரின் எண்ணிக்கை இடைக்காலத்தில் பெருமளவில் பெருகியது”, (பக்.42)

      இந்து சமய நூல்கள் என்று சொல்வதைக்கூட பாடநூல்கள் விரும்பவில்லை. வர்ணம், சாதி, தீண்டாமை போன்ற தனித்தன்மை வாய்ந்த அம்சங்களைக் (!?) வேறு எந்த மதமும் கொண்டிருந்ததா என்ன? 

“சாதிமுறை முக்கியமாக இந்துக்களின் மூச்சுக் காற்று என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்துக்கள் அந்த மூச்சுக்காற்றால் சுற்றிலும் உள்ள காற்று முழுவதையும் கெடுத்துவிட்டார்கள். அதன்மூலம் சீக்கியர், முஸ்லீம், கிறிஸ்தவர் உள்ளிட்ட அனைவரும் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்”, (பக். 118 & 119, டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: 01) என்று அம்பேத்கர் சாதி பற்றிய ஆய்வில் குறிப்பிடுவது இங்கு சிந்திக்கத்தக்கது. 

   வர்ணமுறைக்கு வெளியே பெருந்திரள் மக்களைத் தள்ளியது யார்? நால் வர்ணத்திற்கு வெளியே இருப்பவர்களை 'அவர்ணர்கள்' (பஞ்சமர்கள்) என்று வெளியேற்றியது எது? இவர்களின் மக்கள்தொகை இடைக்காலத்தில்  பெருக யார் காரணம்? பவுத்த, சமண மதத்தினர் இவ்வாறு ‘அவர்ணர்களாக’ ஆக்கப்பட்டதை ஏன் மறைக்க வேண்டும்? விரிவான ஆய்வுகள், செய்திகள் என்றெல்லாம் பீடிகை போட்டு சாதி காப்பாற்றும் வேலையை பாடநூல்கள் செய்வது மோசமானது. 

    “நடைமுறையில் சாதி என்பது சிக்கலான, முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத, பொருளாதார மற்றும் சமூகப் பரிமாணங்களும் இணைந்த அம்சமாகவே இருந்துள்ளது. பல்வேறு சாதிகள், செங்குத்துப் படிநிலைகளில் பல்வேறு தரவரிசைகளில் வைக்கப்பட வேண்டும் என்கிற அவசியமில்லை. ஒரு குறிப்பிட்ட பணி அல்லது தொழிலைச் செய்பவர்கள் தங்களைத் தனித்தன்மை வாய்ந்த அல்லது வேறுபாடுகளைக் கொண்ட ஒரு கிளைச் சாதியின் பகுதியாகவே கருதுகிறார்கள்”, (பக்.42)

    “பெரும்பாலான நகரங்களில் ஒரு குறிப்பிட்ட தொழிலைச் செய்யும் அனைவரும் பெரும்பாலும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளில்தான் வாழ்கின்றனர்”, (பக்.42)

   இவர்களுக்குக் குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்தது யார்? அவை “உள்ளூர் வளங்களையும் சமூக உறவுகளையும் கட்டுப்படுத்திய மரபு சார்ந்த உள்ளூர் அமைப்புகளா?” இவைகள் ஏன் வலுவிழந்தன? சாதியைப் போலவே இந்த அமைப்பும் புரிந்துகொள்ள முடியாத ஒன்றா?  

“தங்கள் சாதியின் தகுதியை மேம்படுத்திக் கொள்வதே பெரும்பாலான சாதிக் குழுக்களின்  முக்கியப்பணியாக இருந்தது. பதினான்காம் நூற்றாண்டுக்குப் பின்னர் இப்போக்கு தெளிவாகத் தெரிந்தது. இக்காலப் பகுதியில் உள்ளூர் வளங்களையும் சமூக உறவுகளையும் கட்டுப்படுத்திய மரபு சார்ந்த உள்ளூர் அமைப்புகள் வலுவிழந்தன. சாதிக் குழுக்கள் உள்ளூர் ஆட்சியாளர்களிடம் மனுக்கள் கொடுத்து உயர்நிலையைக் குறிக்கும் அடையாளங்களாக காலணி அணிதல், குடை வைத்துக் கொள்ளுதல், இறுதிச் சடங்கின்போது சில அலங்காரங்களைச் செய்துகொள்ளுதல் போன்றவற்றிற்கு தங்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமெனக் கோரிக்கை வைத்தனர். ஒவ்வொரு சாதிக்குழுவும் தங்கள் சாதியின் தோற்றத்தை மெய்ப்பிக்கப் புராணங்கள் சார்ந்த கற்பனை கலந்த வம்சாவளியை உருவாக்கினர். சமூகப்படி நிலைகளில் உயர்ந்த மதிப்புடைய இடம் வழங்கப்பட வேண்டுமென்ற தங்கள் கோரிக்கையை நியாயப்படுத்த இதைப் பயன்படுத்தினர்”, (பக்.42 & 43)

   நால் வர்ணங்கள் புராணக் கற்பனையால் தானே உற்பத்தி செய்யப்பட்டது! இவற்றையும் வலங்கை, இடங்கை புராணக்கதைகளும் யாரால் உருவாக்கப்பட்டது? இதில் ஆதிக்க, ஆளும் சாதிகளுக்கு பங்கே இல்லையா? சாதி சார்ந்த புராணங்கள் உற்பத்தியில் பிராமண சமூகத்தின் பங்குதான் என்ன? 

      ஒரு சாதி தன்னுடைய தகுதியை ஏன் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்? இந்தத் தகுதிகளை நிர்ணயம் செய்தது யார்? வழுவிழந்த உள்ளூர் வளங்களையும் சமூக உறவுகளையும் கட்டுப்படுத்திய மரபு சார்ந்த உள்ளூர் அமைப்புகள் எவை? ‘காலணி அணிதல்’ போன்றவை உயர்நிலை எனில் அவற்றைத் தடுத்தது எது? ஏன்? வர்ணத்திற்கு வெளியே இருந்த பெருந்திரள் மக்கள் தங்களைத் தாங்களே இவ்வாறு தாழ்த்திக் கொண்டனரா? இவர்கள் உற்பத்தி செய்த கற்பனைப் புராணங்கள் என்றால் வர்ணத்தைக் கட்டமைத்த புராணங்கள் எத்தகையவை? எனப் பல கேள்விகள் எழுவது இயல்பானது. இவற்றைப் பாடநூல் எவ்விதம் எதிர்கொள்கிறது? இவற்றிக் கற்பிக்கும் ஆசிரியர் எத்தகைய விளக்கமளிப்பார்? 

“பல சாதிக்குழுக்கள் வலங்கை, இடங்கை என பெரும்பிரிவுகளாகப் பிரிந்தன. சாதிப்படிநிலைகளில் வெவ்வேறு இடங்களை வகித்து வந்த சாதிகளில் வணிகர்கள், நிலவுடைமையாளர்கள், தொழில் செய்யும் சாதிகள் எனத் தொடங்கி விவசாயத் தொழிலாளர்கள் வரை பல சாதிகளும் இவ்விரு பிரிவுகளில் அங்கம் வகித்தன”, (பக்.43)

     “பல்வேறு சாதிகள், செங்குத்துப் படிநிலைகளில் பல்வேறு தரவரிசைகளில் வைக்கப்பட வேண்டும் என்கிற அவசியமில்லை” (பக்.42) என்று முன்பு எழுதியவர்கள் இங்கும் பிறகும் சாதிப்படிநிலை பற்றிப் பேசுவது எப்படி? இப்படிநிலை யாரால், எதற்காகக் கட்டமைக்கப்பட்டது? 

“அடிப்படையில் இவ்விரு பிரிவுகளுக்கிடையே நடந்த மோதல்கள் பெருமளவில் வன்முறை சார்ந்ததாய் இருந்தன. இம்மோதல்கள் பொதுவாக உயர்ந்த சடங்கு ஆச்சாரங்களின் மேல் இரு பிரிவினருமே உரிமை கோரியதால் ஏற்பட்டவை ஆகும். சாதிப்படிநிலைகளில் உயரிய இடத்தை அடைவதன் மூலம் சமூக மரியாதையை உயர்த்திக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் வெளிப்பாடே இம்மோதல்கள் ஆகும்”,  (பக்.43)

      ‘உயர்ந்த சடங்கு ஆச்சாரங்கள்’ எப்படி ஒரு பிரிவினருக்கு மட்டும் முற்றுரிமையாக்கப்பட்டது?  இழிவுபடுத்தப்பட்ட பிரிவினர்களின் போராட்டங்கள் (இடங்கை, வலங்கை, ஆலய நுழைவு, பொதுப்பாதை மற்றும் பொதுக்குளம், கிணறு போன்றவற்றைப் பயன்படுத்துதல், செருப்பு அணிதல், பொதுவான ஆடைகள் அணிதல்,  தோள்சீலைப் போராட்டம் உள்ளிட்டவைகள்) வெறும் சமூக மரியாதையை உயர்த்திக்கொள்ள மேற்கொள்ளப்பட்டவையா? இவைகளுக்கு எதிரான ஆதிக்கசாதியினரின் எதிர்வினைகள் தற்காப்பு நடவடிக்கையா? வன்முறை சார்ந்த மோதல்களில் ஈடுபட்டவர்கள் யார்? இடங்கை சாதிகளா அல்லது வலங்கை சாதிகளா? இதன் மூலம் அவர்களுக்கு சமூக மரியாதை கிடைத்ததா?  

     ஆய்வறிஞர் பொ.வேல்சாமி ‘கவிதாசரண்’ இதழில் எழுதிய கட்டுரை ஒன்றிலிருந்து சில பகுதிகள் கீழே தரப்படுகிறது. இக்கட்டுரை ‘கோவில்-நிலம்-சாதி’ (காலச்சுவடு வெளியீடு) என்னும் தொகுப்பில் உள்ளது. 

“இடங்கை,  வலங்கைப்  பிரச்சினைகளைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளிலும் கல்வெட்டுச் செய்திகளிலும் சொல்லப் பட்ட சில செய்திகள் கவனிக்கத்தக்கவையாக உள்ளன.

1. இந்தச் செய்திகளில் பெரும்பாலானவை ஏதாவதொரு கோவிலை மையமாகக் கொண்டே குறிப்பிடப் பட்டிருக்கும்.

2. அரசனுடைய அதிகாரிகள், படைவீரர்கள் பற்றிய குறிப்புகளாக இருக்கும்.

3. பெரும்பாலும் இடங்கைப் பிரிவினர் பாதிக்கப்பட்ட தாகச் செய்திகள் இருக்கும்.

4. இவர்களைத் துன்புறுத்துபவர்களாகப் பார்ப்பனர், வெள்ளாளர் போன்றவர்களைப் பற்றி மிகுதியாகவும் மற்ற உயர்சாதி நிலவுடைமையாளர்களைப் பற்றி ஓரளவும் குறிப்புகள் கிடைக்கின்றன.

5. சில கல்வெட்டுகளில் இடங்கை வலங்கை ஆகிய இரு பிரிவினரும் இணைந்து பார்ப்பன, வெள்ளாள நிலவுடைமையாளர்களையும் அரசாங்க அதிகாரிகளையும் எதிர்த்ததாக இருக்கும்.

6. பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காலக் கல்வெட்டுகளில் செருப்புப் போடுதல், குடை பிடித்தல், மாடி வீடு கட்டிக்கொள்ளுதல், கல்யாண ஊர்வலங்கள் இன்னின்ன பகுதிகளில் செல்லலாம் என அனுமதி கூறுதல் போன்ற சமூக மதிப்புகளைக் கோருவதாக இருக்கும்.

    இத்தகைய செய்திகளினூடே வலங்கைப் பிரிவில் பறையர் சாதியார் இடம்பெற்றிருப்பதும் இடங்கைப் பிரிவில் கைவினைத் தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், பள்ளர் சாதியார் இடம்பெற்றிருப்பதும் ஆய்வாளர்களைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது. ஒடுக்கப்பட்ட மக்களாகிய பறையர் சாதியார் ஆளுகின்ற சாதிகளுடன் எவ்வாறு இணைந்திருக்க முடியும் என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் தவித்தனர்.

    கோவில்-நிலம்-சாதி கட்டுரைத் தொடரை நான் எழுதிவரும்போது கோவில் நிர்வாக ஆளும் குழுக்களில் கடைநிலை ஊழியர்களாகப் பறையர் சாதியார் குறிக்கப் படுவதைக் கண்டேன். உள்ளூர் நிர்வாக அமைப்பில் தலையாரி போன்ற கடைநிலை அரசு ஊழியர்கள் பெரும் பாலும் பறையர் சாதியினரே. கோவில் நிர்வாகத்திலிருந்து ஊதியம் பெறுபவர்கள் இவர்கள். ஆனால் பள்ளர் சாதியார் உட்பட இடங்கைச் சாதிகளைச் சார்ந்தஅனைவரும் கோவிலுக்கு மகன்மை, வரி போன்றவற்றைச் செலுத்துபவர் கள்தான். சுருக்கமாகக் கூறினால் ‘வலங்கை’  என்பது கோவில் சார்ந்த நிலவுடைமை ‘ஆளும் சாதிகள்’. ‘இடங்கை’ என்பது அந்தக் கோவிலின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் குடிமக்கள். அதாவது ‘ஆளப்படும் சாதிகள்’. வலது என்பது அதிகாரம் சார்ந்தது”,
(பக். 114 & 115, கோவில்-நிலம்-சாதி, பொ.வேல்சாமி)
“தமிழக வரலாற்றில் நிகழ்ந்த இடங்கை - வலங்கைப் போராட்டங்கள் ஒரே மாதிரியாக இல்லை. சோழர், பாண்டியர் காலத்தில் அதாவது கிட்டத்தட்ட பதினைந்தாம் நூற்றாண்டு வரை இடங்கைக் குழுவிலுள்ள சாதிகள் பார்ப்பனர், சூத்திர உயர்சாதி, பறையர் சாதி என்ற கோவில் வழி ஆளுகை செலுத்தும் வலங்கைப் பிரிவினரை எதிர்த்தும், சில காலங்களில் உயர்சாதி வலங்கைப் பிரிவினருடன் இணைந்திருந்த அரசு அதிகாரிகளை எதிர்த்தும் நிகழ்ந்துள்ளன. இஸ்லாமியர்களைத் தமிழ்நாட்டிற்குள் பாண்டியர்கள் அழைத்து வந்ததனால் அடுத்துவந்த காலங்களில் தமிழ்மக்கள் மீதான தங்கள் ஆதிக்கத்தையும் சாதிய மேன்மையையும் இழக்கும் தருவாயில் இருந்த இவர்கள், விஜயநகர இந்து சாம்ராஜ்ய அரசர்களுடன் இணைந்து அதனை மீட்டெடுத்தனர். இதனால் பின்வந்த காலங்களில் தமிழ்நாட்டு வலங்கை உயர்சாதியினர் தங்கள் ஆதிக்கத்தை, நிலவுடைமையை விஜயநகர இந்து-தெலுங்கு ஆதிக்க சக்திகளுடன் பகிர்ந்து கொண்டனர். இந்த வரலாற்று நிகழ்வுக்குப் பிறகான வலங்கை இடங்கைப் போராட்டங்களில் தெலுங்கு பேசும் கைவினைச் சாதியினர் தமிழ்நாட்டு இடங்கைப் பிரிவினருடன் இணைந்து கொண்டது கவனிக்கத்தக்கது. சுருக்கமாகச் சொன்னால் தெலுங்கு பேசும் ஆதிக்க சாதிகள் தமிழ்நாட்டு வலங்கைப் பிரிவினருடனும் தெலுங்கு பேசுகின்ற ஆளப்படும் சாதிகள் தமிழ்நாட்டு இடங்கைச் சாதியினருடனும் தங்களை இணைத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கால கட்டங்களில் தமிழ்நாட்டு நிலவுடைமையில் சிறிது மாற்றம் ஏற்படுகிறது. தமிழ், தெலுங்கு உயர்சாதியினரிடையே தனியார் நிலவுடைமையாளர்களும் உருவாகின்றனர். இத்தகையவர்களுடைய கொடுமைகளை எதிர்த்து இடங்கைப் பகுதியினர் போராடுவதும் விஜய நகர நாயக்கர் மன்னர்கள் அதனைத் தீர்த்து வைப்பதையும் கல்வெட்டுகளும் பட்டயங்களும் குறிப்பிடுகின்றன”, (பக்.117 & 118, மேலே குறிப்பிட்ட நூல்)

   வலங்கை-இடங்கைப் போராட்டங்கள் குறித்தத் தெளிவை ஏற்படுத்த மேற்கண்ட பகுதிகள் உதவும். இந்துமதம், வேதங்கள், வர்ணாஸ்ரம், பிராமணத்துவம், புராணங்கள் ஆகியன குறித்து எவ்வித உண்மைகளையும் வெளிப்படுத்திவிடக்கூடாது என்று உறுதியெடுத்தவர்கள்  எழுதிய பாடநூலாக இது இருக்கிறது. உண்மைகளையும் அறத்தையும் தேடி நாம் நீண்டு பயணிக்க வேண்டியுள்ளது.  



                    (இன்னும் வரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக