வெள்ளி, டிசம்பர் 21, 2018

பொதுத்தேர்வை மையப்படுத்தும் பாடங்கள்: குழந்தைகள் மீதான வன்முறை


பொதுத்தேர்வை மையப்படுத்தும் பாடங்கள்:  குழந்தைகள் மீதான வன்முறை

(இரண்டாம் பருவ புதிய பாடநூல்கள்: ஒரு பார்வை - பகுதி: 08) 
 
மு.சிவகுருநாதன்

 (ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் – வரலாறு  பாடப்பகுதியில் ஐரோப்பிய வரலாறு – பாடம் எண்: 1, 2 மற்றும் 4  பற்றிய கருத்துகள்.)




   ஒன்பதாம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தில் (இரண்டாம் பருவம்) செவ்வியல் உலகம், இடைக்காலம், நவீன யுகத்தின் தொடக்கம் ஆகிய மூன்று பாடங்களில் ஐரோப்பிய வரலாறு பேசப்படுகிறது.  இடையிடையே கிழக்காசிய வரலாறு (சீனா, ஜப்பான்) வந்தாலும் பெரும்பகுதி ஐரோப்பிய வரலாறே. உள்ளூர் வரலாறே (தமிழ்நாடு) சொல்லிக் கொடுக்காத நிலையில் ஒன்பதாம் வகுப்பிற்கு ஏன் மிகக் கடினமான ஐரோப்பிய வரலாறு என்று கேட்டால் யாரிடமிருந்தும் பதில் வராது. ஒரே காரணம் இவ்வகுப்பிற்கு அரசுப் பொதுத்தேர்வு இல்லை என்பதுதான்.  ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலை நோக்கும்போது நமக்கு இவ்வாறுதான் தோன்றுகிறது.  
                                                                                                                                                                                    அரசுப் பொதுத்தேர்வு உள்ள வகுப்பிற்கு எளிமையான பாடங்கள், இல்லாத வகுப்பிற்கு கடினப்பாடங்கள் என்பது எழுதப்படாத விதி. 7, 9, 11 ஆகியவகுப்புகளுக்கு இவ்விதி கடைபிடிக்கப்படுகிறது. 11 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு என்றாலும் அந்த அந்த மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படாதால் இந்நிலையே நீடிக்கும் அபாயம் உண்டு. 

  “அலெக்ஸாண்டரின் இறப்பிற்குப் பின்னர் பண்பாடு மிக விரைவாக வளர்ந்தது. வரலாற்று அறிஞர்கள் இதனை (கி.மு.(பொ.ஆ.மு.) 323) ஹெலனிஸ்டிக் நாகரிகம் என்று அழைக்கின்றனர்”, (பக்.04) இதற்கான காரணம் சொல்லப்படவில்லை; விளக்கப்படவுமில்லை. 


    கிரீஸ்: ஹெலனிக் உலகம் (பக்.02), ரோம்: ஹெலனிஸ்டிக் உலகம் (பக்.04) என்று சொல்வதன் பொருள் என்ன? ஹெலனிக் உலகில் கிரீஸ், ஹெலனிஸ்டிக் உலகில் ரோம் என்று சொல்வது ஓரளவு பொருத்தமுடையதாக இருக்கும். 

    ஆசியா மைனர் (அனடோலியா) எனப்படும் மேற்காசியாவிலுள்ள தற்போதைய துருக்கி நாட்டின் பகுதியில் உஸ்மான் பே (கி.பி.1299) என்பவரால் தொடங்கப்பட்ட அரசு, உஸ்மானியப் பேரரசாக கி.பி. 1453 இல் இரண்டாம் முகமது கான்ஸ்டாண்டிநோபிளை (இஸ்தான்புல்) கைப்பற்றிய பிறகு நடந்தது. இது ஓட்டமான் பேரரசு (Ottomon Empire) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. கிரந்த எழுத்து வெறுப்பால் இது உதுமானியப் (பக். 24) பேரரசாகிறது (உபயம்: விக்கிபீடியா). உதுமானியப் பேரரசு (பக். 24), உதுமானிய துருக்கியர்கள் என்றுதான் பாடம் எழுதப்படுகிறது. கிறித்தவம் என்று எழுதுவதுகூட குழப்பத்தை உண்டுபண்ணாது. உதுமானியா, ஓட்டோமான்  இரண்டும் ஒன்று எனப் புரிந்துகொள்வது கடினமே! 

    விஜயநகரப் பேரரசு என்றுதானே இவர்கள் எழுதுகிறார்கள்? மாவோ (Mao) வை மா –சே –துங் என்று பாடத்தில் படித்தபோது இவர் வேறு யாரோ என்ற எண்ணமே அன்று எங்களுக்கு ஏற்பட்டது. அதைப்போலவே இன்றும் பாடநூல்கள் இருக்கின்றன. 

    அரேபியாவின் சரசனிக் கட்டடக்கலை (பக்.22) குறிப்பிடப்படுகிறது. அதன் இந்தியத் தாக்கம், இந்தோ-சரசானிக் கட்டடக்கலை பற்றியும் குறிப்பிடுவது சரியாக இருக்கும். 

     “முன்னதாக, ‘வெல்லும்’ (Vellum) என அழைக்கப்பட்ட, விலங்குத் தோலின் மீது கையினால் எழுதப்பட்ட எழுத்துப்பிரதிகளே பயன்பாட்டில் இருந்தன”, (பக்.57) ஓலைச்சுவடிகளில் எழுத்தாணியால் எழுதியதைப்போல பதப்படுத்தப்பட்ட விலங்குத் தோலில் வெறும் கைகளால் எழுதப்பட்டதா? அல்லது வேறு கருவிகள் கொண்டு எழுதப்பட்டதா என்பதைச்  சொன்னாலென்ன? தொடக்கத்தில் எழுதும் மை கொண்டு எழுதப்பட்டதும், பிற்காலத்தில் இவற்றில் அச்சிட்டதும் நடந்தது.

    “வட்டார மொழியில் எழுதுவது என்பதன் அறிமுகமும், நடைமுறையும் தாந்தேயிலிருந்து தொடங்கியது. அது வட்டார மொழிகளின் வளர்ச்சியைச் செழுமைப்படுத்தியது. தேசிய அரசுகளின் எழுச்சிக்கு அறிவார்ந்த ஓர் அடித்தளத்தை வழங்கியது”, (பக்.61)

   மொழிபெயர்ப்புகள் பற்றியும் கண்டிப்பாகச் சொல்லவேண்டும். Vernacular languages – தேச மொழிகள் என்று மொழிபெயர்க்கப்படுகிறது. Slave revolts – அடிமைகளின் கிளர்ச்சிகள் என்று சொல்லப்படுகிறது. அடிமைகள் புரட்சி செய்ய தகுதியற்றவர்களா?  Oligarchy ஐ செல்வர்களின் குழு ஆட்சி என்று மொழி பெயர்க்கிறார்கள். 

    இத்தகைய பாடநூல் மொழிபெயர்ப்புகளுக்கு கண்டிப்பாக சாகித்ய அகதெமியின் சிறந்த மொழிபெயர்ப்பு விருது வழங்கலாம் என்று நான் பரிந்துரைக்கிறேன். 

உதாரணத்திற்கு சில மொழிபெயர்ப்புகள்: 

   “Similarly, though the exploration of the oceans had begun earlier, the European States were constrained to find an alternative route immediately because the Ottoman Turks were controlling the route”. (page: 51)

    “அதேபோல, பெருங்கடல்கள் மீதான ஆய்வுத் தேடல் முன்னதாகவே தொடங்கியிருந்த போதிலும்கூட, ஐரோப்பிய அரசுகள் மாற்றுப் பாதைகளைக்  கண்டறிவதில் பல தடைகள் இருந்தன. காரணம், அப்போது உதுமானியத் துருக்கியர்கள் வழியைக் கட்டுப்படுத்துகிறவர்களாகியிருந்தனர்”, (பக். 58)

   “பெருங்கடல்கள் மீதான ஆய்வுத் தேடல் முன்னதாகவே” தொடங்கியது என்றால் எப்போது? கி.பி. 1453 க்கு  முன்பு என்றால் ஓட்டோமான் துருக்கியர்கள் எப்படி கட்டுப்படுத்தியிருக்க முடியும்? ‘கட்டுப்படுத்துகிறவர்களாகியிருந்தனர்’ என்று மிக நீளமாகச் சொற்களைச் சேர்த்து  எழுதுவது ஏன்? 9 ஆம் வகுப்பு மாணவனின் வயதை பாடத்திட்டம் உருவாக்குவோர், பாடம் எழுதுவோர் கவனித்தில் கொள்ள வேண்டாமா?  இதுவே தமிழ் வழி வேண்டாம் ஆங்கில வழியிலேயே எளிமையாகப் படிக்கலாம் என்று மாணவர்களையும் பெற்றோர்களையும் துரத்துகிறது. கல்லூரிகளில் தமிழ் வழியில் தேர்வெழுதுவதைவிட ஆங்கில வழியில் எழுதுவதே நல்லது என்கிற முடிவுக்கு வருவதற்கும் மொழியாக்கம் ஒரு காரணமாகவும் இருக்கிறது. 

   “The printing press enabled the production of multiple copies of a manuscript and their spread all over Western Europe”, (page: 51)

    “ஒரு கையெழுத்துப் பிரதியின் பல மறுபிரதிகளின் உற்பத்தியை அச்சு இயந்திரம் சாத்தியமாக்கியது. மேலும், மேற்கு ஐரோப்பா முழுவதிலும் அவை பரவுவதற்கு வழிவகுத்தது”, (ப. 57)

   “அச்சு இயந்திரம் பலபிரதிகளின் உற்பத்தியை சாத்தியமாக்கியது”, என்று எளிமையாகச் சொன்னால் என்ன இடர் வந்துவிடப்போகிறது?

   “பதினான்காம் நூற்றாண்டின் மையப்பகுதி வாக்கில், அச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பினால் பல பிரதிகள் அச்சிடும் நிலை உருவானதுடன் அவை பரந்த அளவில் சுற்றுக்கும் விடப்பட்டன”, (பக்.65) 

   மொழிபெயர்ப்புக் குளறுபடிகள் ஒருபுறமும் மீண்டும் மீண்டும் சொல்வது ஒருபுறகும் என தமிழ் வழிப்பாடநூல்களின் பக்கங்களை அதிகமாக்குவதில் போய் முடிந்துள்ளது.                                               

   ஒரு தலைப்பின்கீழ் நான்கு ஒரு மதிப்பெண்கள் வினாக்கள் கேட்கும் முறை 9, 10 வகுப்புகளில் உண்டு. ஒன்பதாம் வகுப்புப்ப் பிதிய பாடநூலில் ‘மறுமலர்ச்சி’ என்னும் தலைப்பின் கீழ்,  

(அ) இத்தாலிய நகர அரசுகளில் முதன்முதலில் மறுமலர்ச்சி தோன்றுவதற்கான காரணங்களைக் கூறுக.

(ஆ) மனித நேயர்கள் சிலரையும், அவர்களது படைப்புகளையும் குறிப்பிடுக.

(இ) மறுமலர்ச்சி காலக் கலைக்கும் இடைக்காலக் கலைக்கும் உள்ள வேறுபாடுகளை வரிசைப்படுத்துக.

(ஈ) மனிதநேயம் பற்றி விளக்குக. (பக். 72) 

       ஒரு மதிப்பெண்கள் வினாக்களை கேட்காமல் 2 மற்றும் 5 மதிப்பெண் வினாக்களைக் கேட்பது சரியா? 

    உள்ளூர் வரலாறோ அல்லது உலக வரலாறோ மிகச்சுருக்கமாக ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு சொன்னால் போதாதா? ஏன் இவ்வாறு நீட்டி முழக்கித் திரும்பத் திரும்ப சொல்லவேண்டியதும் குழப்ப வேண்டியதும் அவசியமில்லைதான். 

   பள்ளி மாணவர்களுக்கான பாடநூல் மொழியை இன்னும் நாம் கண்டடையவில்லை. பெரியவர்களுக்கான மொழியை குழந்தைகளிடம் திணிப்பதும் வன்முறையல்லவா!  
 
    செவ்வியல் காலத்தில் இந்தியா, இதே காலகட்டத்தில் இந்தியா (இடைக்காலம்), இதே காலத்தில் ஐரோப்பாவில் (பிற்காலச் சோழர்கள், ஐரோப்பிய நவீன கால விடியலின்போது இந்தியா என்று ஒப்பிட்டுக்காட்டுவதை வரவேற்கலாம்.

        அடுத்தக் கட்டுரையுடன் இத்தொடர் நிறைவடையும்…

                     (இன்னும் வரும்…)

                                                             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக