திங்கள், டிசம்பர் 31, 2018

அறிவியல் சிந்தனைகள் இன்னும் மேம்பட வேண்டும்


அறிவியல்  சிந்தனைகள் இன்னும் மேம்பட வேண்டும்


(இரண்டாம் பருவ புதிய பாடநூல்கள்: ஒரு பார்வை - பகுதி: 09) 
 
மு.சிவகுருநாதன்

 (ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பு அறிவியல்  பாடப்பகுதிகள் பற்றிய கருத்துகள்.) 


 
   ஆறாம் வகுப்பு ‘மின்னியல்’ பாடத்தில் மின்னுற்பத்தி நிலையங்களில் நடைபெறும் ஆற்றல் மாற்றங்கள் பற்றிச் சுருக்கமாகச் சொல்லப்படுகிறது. அதில் “நீர்மின் நிலையங்களில் அணைக்கட்டிலிருந்து பாயும் நீரால் டர்பைன் சுழற்றப்பட்டு மின்சாரம் உருவாக்கப்படுகிறது”, (6, பக்.21&22)  என்றுள்ளது. இதற்கு அணையிலிருந்து நீர் வெளியேறும் படமும் கொடுக்கப்பட்டுள்ளது. 

   உண்மையில் அணையிலிருந்து குழாய்கள் வழியே வெளியேற்றப்படும் நீர் வழியே நீராழி (விசையாழி) சுழற்றப்படுகிறது. அணையிலிருந்து நீர் வெளியாகும்போது மின்சாரம் தயாரிக்கப்படுகிறது என்கிற கற்பிதத்தைப் பாடநூல்கள் உருவாக்கக்கூடாது. அணைக்கட்டிற்குப் பதிலாக நீர்மின் நிலையப் படம் இணைக்கப்படவேண்டும். டர்பைன் (Turbine) என்பதை விசையாழி அல்லது நீராழி என்று மொழிபெயர்க்கலாமே! 

 ‘உங்கள் விஞ்ஞானியை அறிந்து கொள்ளுங்கள்’ எனும் குறிப்புகளை வரவேற்கலாம். ஆனால்…?


மைக்கேல் ஃபாரடே (22, செப்டம்பர் 1791 – 25 ஆகஸ்ட் 1867) ஒரு பிரிட்டிஷ் விஞ்ஞானி ஆவார் (9, பக்.52). “ஹென்றி க்வைன் மோஸ்லே என்பவர் ஓர் ஆங்கில இயற்பியலாளர் ஆவார் (9, பக்.73), என்று பிரிட்டிஷ் விஞ்ஞானி,  ஆங்கில இயற்பியலாளர் என்றெல்லாம் எழுதுவது ஏன் என விளக்குங்கள்!


    தாமஸ் ஆல்வா எடிசன் (பிப்ரவரி 11, 1847 முதல் அக்டோபர் 18, 1931) ஓர் அமெரிக்க கண்டுபிடிப்பாளர். (6, பக். 29, மேலும் அறிந்து கொள்வோம்) அமெரிக்க கண்டுபிடிப்பாளர் - அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. (குழந்தைக் கவிஞர் - குழந்தை கவிஞர்  என்பதற்கு வேறுபாடு உண்டல்லவா!)

   இரத்த ஓட்ட மண்டலம் (6, பக்.82) ரத்தச் சுழற்சி மண்டலாவது எப்போது? அனைத்து வகுப்புகளிலும் இதே நிலைதான். Blood Circulatory  System என்பது எப்படி இரத்த ஓட்டமாகும் என்பதை யாராவது விளக்கினால் நல்லது! 

  “வெயில் காலங்களில் அதிக வெப்ப ஆற்றல் இரயில் தண்டவாளங்களை விரிவடையச் செய்கின்றது. எனவேதான் இரயில்பாதைகளில் சிறிய இடைவெளி விடப்பட்டிருக்கும் நீங்கள் இதனைப் பார்த்திருப்பீர்கள்” (9, பக்.02) சொல்லிப் பழைய படத்தையும் வெளியிடுகிறார்கள்.

     வெப்பம் விரிவடைதலுக்கு ரயில் தண்டவாள இடைவெளி (பக்.13, ஆறாம் வகுப்பு மற்றும் பக்.02, ஒன்பதாம் வகுப்பு) சுட்டப்படுகிறது. இப்போது தண்டவாளங்கள் அவ்வாறு இடைவெளி விட்டு அமைக்கப்படுவதில்லை. அவை துண்டுகளின்றி ‘வெல்டிங்’ முறையில் இணைக்கப்படுவதை மாணவர்களே பார்த்திருக்க வாய்ப்பு உண்டு. பாடநூல்கள் எப்போது நடைமுறை மாற்றங்களைக் கவனத்தில் கொள்ளும் என்பது புரியாத புதிர்!

    எக்ஸெரிச்சியா (6, பக்.67) என்று அழுத்த வேண்டுமா என்ன? பல இடங்களில் வல்லினம் மிகுவதேயில்லை. கேட்டால் இது தமிழ்ப்பாடமா, அறிவியல்தானே என்று கேட்கக்கூடும். மொழி தவிர்த்த பிற பாடங்களில் பிழைகளைக் கவனிக்க வேண்டியதில்லை என்பது இங்குப் பொதுப்போக்காகியுள்ளது.

   மொழியாக்கங்கள் பற்றி நிறையச் சொல்லலாம். தாவரத் திசு விளக்கப்படம் தமிழிலும் விலங்குத் திசுக்கள் முற்றிலும் ஆங்கிலத்தில் உள்ளது (9, பக்.158). இது தமிழ் வழிப்பாடநூல் என்பதை யாராவது சொல்ல வேண்டும். 

Catalyst – கிரியா ஊக்கி (வினையை வேகப்படுத்தும் தனிமம்) (9, பக்.198).
வினையூக்கி என்ற சொல் இருக்கின்றதே! ‘கிரியா’ தமிழ்ச்சொல்லா? சேர்மங்கள் வினையூக்கியாக செயல்படாதா என்ன? 

Electrolyte - மின்பகு திரவம் (9, பக்.199). மின்பகுளி என்ற சொல் வெகுகாலத்திற்கு முன்பே பயன்பாட்டில் உள்ளதே! மின்பகுளி – மின்சாரம் பாயும் திரவம் (9, பக்.38) என்று ஓரிடத்தில் விளக்கமும் அளிக்கப்படுகிறது.
Equator - பூமத்திய  ரேகை (9, பக்.199). நிலநடுக்கோடு என்னவாயிற்று? இன்னும் எவ்வளவு காலம் ‘ரேகை’யைப் பயன்படுத்துவீர்கள்? 

Phloem – புளுயம் (பட்டையம்) (9, பக்.199). ஃபுளோயம் புளுயம் ஆவதேன்? பட்டையம் தகுந்த சொல்லாக்கமா? இவை மரப்பட்டையில் மட்டுமே காணப்படுமா?

TV Remote – டிவி தொலையுணர்வி (9, பக்.29) என்று மொழிபெயர்ப்பதைப் பாராட்ட சொற்களே கிடைக்கவில்லை! அது என்ன ‘டிவி தொலையுணர்வி’? ‘Remote Sensing’  என்பதை எப்படி மொழிபெயர்ப்பீர்கள்? 

MRI – காந்த ஒத்ததிர்வு தோற்றுருவாக்கல் (9, பக்.61).  Magnetic Resonance Imaging என்பதற்கு பொருத்தமான மொழியாக்கமா இது? 

டியூராலுமின் (வலிவலுமினியம்) (9, பக்.80). வலு அலுமினியம் ‘வலிவலுமினியம்’ ஆன பின்னணி எதுவோ? ‘விமான உடம்பு பாகங்கள்’ என்பது நகைப்பிற்கிடமாக இல்லையா?

துரு ஏறா எஃகு, எஃகிரும்பு    (9, பக்.80) துரு இல்லா எஃகு (அ) துரு பிடிக்காத எஃகு என்ற பயன்பாட்டை இவ்வாறு மாற்றக்காரணம் என்ன?  எல்லா இடங்களிலும் பிரித்துப் பிரித்து எழுதுபவர்கள் ‘எஃகு இரும்பை மட்டும் சேர்த்து எழுதுவதேன்?  
                               
IUPAC (International Union of Pure and Applied Chemistry) இது சுவிட்சர்லாந்தில் உள்ள ஜூரிச் எனும் இடத்தில் பதியப்பட்டுள்ளது (9, பக்.74). பதிவு செய்யப்பட்டதா அல்லது தொடங்கப்பட்டதா? 


இரத்தம், இரசியா, இரயில், இராட்சத வாயுக்கோள், இராஜதிராவகம் என்று மொழிக்கு முதலில் வராத ‘ரகரத்தை’க் கண்டுகொள்பவர்கள் டானிக், லாக்டிக், டார்டாரிக் ஆகிய பல சொற்களைக் காண மறுப்பது ஏன்?

கந்தக அமிலம் (சல்பூயூரிக் அமிலம்) (9, பக்.112). இந்த ஓரிடம் தவிர்த்து பிற இடங்களில் ஆங்கிலச் சொல்லில் தருவது என்றால் அனைத்து வேதிப்பொருளுக்கும் இதை ஏன் கடைபிடிப்பதில்லை? 

“கார்பானிக் அமிலம் காற்று அடைக்கப்பட்ட பானங்களில் பயன்படுகிறது”, (9, பக்.112). காற்று அடைக்கப்பட்ட பானங்கள் எவை? கார்பன் டை ஆக்சைடு அடைக்கப்பட்ட பானங்களை காற்று அடைக்கப்பட்ட பானங்கள் என்று சொல்வது சரியா? குளிர்பானங்களில் கார்பன் டை ஆக்சைடு சேர்க்கப்படும்போது தானே கார்பானிக் அமிலம் கிடைக்கிறது? இவற்றைத் திறக்கும்போதுதானே கார்பன் டை ஆக்சைடு வெளியேறுகிறது? 

    உப்பைப் பற்றி இரு இடங்களில் இவ்வாறு பேசப்படுகிறது. அவற்றைக் கீழே தருகிறேன்; படித்து இன்புறுக.

   “உன் சமையலறையில் நீ பயன்படுத்தும் உணவுச் சேர்க்கைப் பொருள் எது? நிச்சயமாக அந்தப் பொருள் ‘சாதாரண உப்பு’ ஆகும்”, (9, பக்.92).
  “உப்பு என்றால் வறுவல்களில் சேர்க்கப்படும் ஒரு வெண்மையான சேர்மம் உங்கள் நினைவிற்கு வரலாம். ஆனால் இது ஒரு வகை சாதாரண வகை உப்பாகும். கடல்நீரில் பலவகையான உப்புகள் கரைந்துள்ளன. அவற்றிலிருந்து சோடியம் குளோரைடு பிரித்தெடுக்கப்படுகிறது”, (9, பக்.119).                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                Digital (டிஜிட்டல்) (6, பக்.98), Ethernet (ஈதர்நெட், ஈதர் வலை இணைப்புக்கம்பி) (6, பக்.99) போன்ற சொற்கள் ஏன் மொழிபெயர்க்கப்படாமல் விடப்படுகிறது?

   “தாவரங்கள் வளிமண்டலக் காற்றுடன் நிகழ்த்தும் வாயுப்பரிமாற்றம் அவற்றின் இலைகளிலுள்ள ஸ்மொட்டா என்ற மிகச்சிறிய இலைத்துளைகள் மூலம் நடைபெறுகிறது”, (6, பக்.55) Stomata என்பது இலைத்துளைகளின் ஆங்கிலப்பெயர்.  Stomata என்ற இலைத்துளைகள் என்று இருமொழிகளை சேர்த்து எழுதத் தொடங்கினால் முடிவே இருக்காது. 

    ஜிங்க் சல்பேட், காப்பர் என்று பயன்படுத்துவது மாணவர்கள் குறியீடுகள், மூலக்கூறு வாய்பாடுகள் எழுதுவதற்கு எளிமையாக்க இருக்கலாம். ஆனால் இரும்பு சல்பேட் (பக்.120) என்று எழுதும்போது இவற்றையும் துத்தநாக சல்பேட், தாமிரம் என்று எழுதுவதுதானே முறை? செம்பு (பக்.80) என்று குறிப்பிடப்படுகிறது. செம்புதான் தாமிரம் என்பதைக் குறிப்பது நல்லது. இங்கு செம்பு என்ற தாமிரம் என்று சொல்வதில் தவறில்லை. காப்பர் என்ற தாமிரம் என்று சொல்ல முடியாதல்லவா!  இப்படி ஆங்கிலச்சொல்லையும் தமிழ்ச் சொல்லையும் இணைத்துச் சொன்னால் சொற்றொடர்கள் நீண்டுகொண்டே போகும். 

   மூலக்கூறு வாய்பாடுகளில் தனிமங்களின் முதலெழுத்தை பெரிய எழுத்தில் (capital letters) எழுத வேண்டும் என்ற நியதி பின்பற்றப்படவில்லை. ஒன்பதாம் வகுப்பில் சரியாக எழுதியிருக்கிறார்கள். ஆறாம் வகுப்புதானே என்று நினைத்திவிட்டார்கள் போலும்!

 “மந்த வாயுக்கள் வேதிப்பண்புகளின்படி எதனுடனும் வினைபுரிவதில்லை”, (9, பக்.82) என்று சொல்லப்படுகிறது. இவை எளிதில் வினைபுரிவதில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். வினையே புரிவதில்லை என்று சொல்வது சரியா?   
                                                                                                                                                                                                                                                                                               
(இவை மேலோட்டமான பார்வையே. அறிவியல் படித்தவர்கள் பாடநூலை ஆழ்ந்து வாசிக்கும்போது நிறைய பிழைகளும் குழப்பங்களும் காணக்கிடைக்கும். அத்தகைய வாய்ப்பு இங்கு அரிதாகவே உள்ளதை இன்றைய கல்வியின் கேடுகளில் ஒன்றாகவே அவதானிக்க முடியும்.)

                                           (நிறைவடைந்தது.) 

(ஜனவரி 2019 லிருந்து மூன்றாம் பருவப் பாடநூல் விமர்சனங்கள் தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக