அவைதீக மரபுகளை அறிமுகம் செய்வதில் குளறுபடிகள்!
அல்லது
மூலாதார நூல்கள்
எனும் மாயாவாதம்!
(தொடரும் அபத்தங்களும், குளறுபடிகளும்…)
(2019 - 2020 ஆம்
கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 66)
மு.சிவகுருநாதன்
புதிய பாடநூல்களில் ஒருசில நல்ல
கூறுகளும் உண்டு. முதல்முறையாக அவைதீகத் தத்துவங்களை அறிமுகம் செய்யும்
முயற்சியும் அதிலொன்று. பெரும்பாலான ஆசிரியர்களுக்கு ‘அவைதீகம்’ பற்றிய
புரிதலில்லை. “இது என்ன புதுசா இருக்கே”, என்று கேட்கின்றனர். பாடநூல்களும் போதிய புரிதலை வழங்கத் தவறிவிட்டன.
9, 10 வகுப்புகளில்கூட இதே நிலைதான். புரிதலற்ற, தெளிவற்ற எழுத்துகளின் வழியே
இவற்றை அறிமுகம் செய்வதால் வெறும் சொற்பயன்பாட்டுப் பெருமையோடு நின்றுகொள்ள வேண்டிய
நிலையில் இருக்கிறோம்.
ஏழாம்
வகுப்பு மூன்றாம் பருவ சமூக அறிவியல் வரலாற்றுப் பகுதியில் அலகு - 3 'தமிழகத்தில் சமணம், பௌத்தம்,
ஆசீவகத் தத்துவங்கள்' எனும் பாடம் இருக்கிறது. அதனால் பெரிய
யுகப்புரட்சி நடந்துவிட்டதாக வெறுமனே மார்தட்டிக் கொள்வதில் பொருளில்லை.
அவைதீகம் என்றால் என்ன?
“அவைதீகச்
சமயப் பிரிவுகளான சமணம், பௌத்தம், ஆசீவகம் ஆகியவை
குறித்த சான்றுகளையும் இலக்கியங்களையும் அறிந்து
கொள்ளுதலும்”, ‘கற்றல் நோக்கங்களில்’ ஒன்று. (பக்.152)
அவைதீகம் பற்றிப் பாடத்தில் எங்கும் விளக்கமில்லை. பாடஇறுதியின்
‘கலைச்சொற்கள்’ பட்டியலில், “heterodox - பழமை சாராத, வழக்கத்திலுள்ள
மதக்கொள்கைக்கு மாறான - not conforming to orthodox beliefs, especially
religious ones, unorthodox” என்ற விளக்கம் சொல்லப்படுகிறது.
அடைப்புக்குறிக்குள் கூட ‘அவைதீகத்தைக் காணோம்!
பெரியாருக்கு கடவுள் மறுப்பாளர் என்று ஒற்றைப் பரிமாணப் பார்வை ஒன்று
உண்டல்லவா! அதைப்போலவே, “மகாவீரரும்
புத்தரும் தங்கள் அற போதனைகளை வேத மதத்தின் பலிகொடுக்கும் வழிபாட்டு முறைகளுக்கு எதிராக வைத்தனர்”, (பக்.152) என்ற
உயிர்ப்பலியிடுதல் எதிர்ப்பு என்கிற ஒற்றைப்புள்ளியில் அடையாளம் காணுவதல்ல அவைதீக
மரபு.
கடவுள் (இறை) மறுப்பு, வருண (சாதி) மறுப்பு, வேத
(மறை) மறுப்பு, வேள்வி (சடங்கு) மறுப்பு ஆகியவற்றை உள்ளடக்கமாகக் கொண்டது
அவைதீகம். இதை எடுத்துக்காட்டாமல், “அவைதீக
மதங்களுக்கும் வேதமதத்திற்கும் உள்ள பொதுவான அம்சங்களையும் வேறுபாடுகளையும் அலசி ஆராய்க”, என்று ‘உயர் சிந்தனை வினா’
கேட்பதும் பொருளற்றது (பக்.165). இங்கும் ‘வைதீகம்’ என்ற பெயரில்லை.
“பிகநிதயா எனப்படும் பழமையான பௌத்த சமய நூல் கி.மு. ஆறாம் நூற்றாண்டில், இந்தியாவில் வெவ்வேறு வகைப்பட்ட 62 தத்துவ, சமயப்பள்ளிகள்
செழிப்புற்று இருந்ததாகக் கூறுகின்றது”, (பக்.152) இங்கு ஒன்றைப்
புரிந்துகொள்ள வேண்டும். வைதீகத் தத்துவங்களைப் போல அனைத்தும் சமய நிறுவனமாக
மாற்றப்படவில்லை. சமணம், பவுத்தம் கூட மகாவீரர், புத்தர் காலத்திற்குப் பின்பு சமய
நிறுவனமயமாக்கலுக்கு ஆட்பட்டது. இதில் பார்ப்பனீய வேத மதத்தின் சூழ்ச்சிகளும்
உண்டு. மகாயான பவுத்தம் சம்ஸ்கிருதத்தையும் உயர்த்திப் பிடித்தது. மேலும் பவுத்த
மரபு 62 ஐ சொல்கிறது என்றால் சமண மரபு 363 ஐ சுட்டுகிறது.
மூலாதார நூல்களின் தரம்!
பாடநூல்களின் இறுதியில் மேற்கோள் அல்லது பார்வை நூல்கள்
பட்டியலிடுகின்றன. 'References’ என
ஆங்கிலத்திலும் 'மூலாதார நூல்கள்' என்று தமிழிலும் குறிக்கப்படுகின்றன. (மூலம்
+ ஆதாரம் + நூல்கள் = மூலாதார நூல்கள்)
சமண ஆகமங்களான சூத்திரங்கள், அங்கங்கள், உப அங்கங்கள் ஆகியன
சமணத்திற்கும் வினய, சுத்த, அபிதம்ம பீடகங்கள் எனப்படும் மூக்கூடைகள் போன்றவையும்
பவுத்த மூல நூல்களாகச் சொல்ல வேண்டியன. சிந்தாமணி, மணிமேகலை போன்றவற்றைக் கூட
சொல்லலாம். ஆனால் இவர்கள் சொல்வது பார்வை நூல்கள்தானே தவிர, மூல நூல்கள் அல்ல.
இப்பாடத்தில்
கொடுக்கப்பட்டுள்ள பார்வை / சான்று /
மேற்கோள் / ஆதார நூல்கள் பட்டியல் கீழேத்
தரப்படுகிறது.
"மூலாதார நூல்கள்
1. Glimpses of World Religions:
Buddhism, Jaico, 2004).
2. Henry Thomas, Dana Lee Thomas,
Living Biographies of Great Religious Leaders, Bharatiya Vidya Bhavan, 1996.
3. Abraham Early, Gem in the Lotus,
Penguin, 2002.
4. P.C. Alexander, Buddhism in
Kerala, Annamalai University, 1949.
5. Times of India, 21 July 2014.
6. The Hindu, 7 September
2014", (பக்.163)
இவற்றை வாசிக்கும்போது பேரதிர்ச்சியாக உள்ளது. இவற்றின் அடிப்படையில்தான் இப்பாடம் எழுதப்பட்டுள்ளதா?
தமிழ்நாட்டில் சமணம், பவுத்தம், ஆசீவகம் குறித்த நூல்கள் எதுவும் தமிழ்,
ஆங்கிலத்தில் இல்லையா என்று கேள்வி எழுவதும்
இயல்பானது.
P.C. Alexander
எழுதிய 'Buddhism in Kerala', என்னும் நூல்தான் தமிழகத்தில் பவுத்தம் தொடர்பான மூலாதார நூலாம்! (இவர் தமிழக முன்னாள் ஆளுநர் பி.சி. அலெக்சாண்டர் அல்ல; வரலாறு
மற்றும் பொருளியல் துறைப் பேராசிரியர்.)
உலக மதங்களைப் பற்றிய நூல்களும் கேரளாவில் பவுத்தம்,
போன்றவற்றையும் நாளிதழ்களின் கட்டுரைகளையும் மூலாதாரமாகக் காட்டுவதும் கொள்வதும்
அறிவுடைமையாகுமா?
'Gem in the Lotus' என்னும் நூலை எழுதிய Abraham Eraly ஐ Abraham Early
என்று மாற்றுபவர்கள் உண்மையில் அப்புத்தகத்தைப் பார்த்து அல்லது படித்து
எழுதியிருக்கக் கூடுமென எண்ணம் தோன்ற வாய்ப்பில்லை.
பெயரைத் திரிக்கலாமா?
'ஆசீவகத் தத்துவம்'
எனும் தலைப்பில் "ஆசீவகப் பிரிவின் தலைவர் கோசலா மன்காலி புத்தா ஆவார்", (பக்.162) பாடநூல் சொல்கிறது. ஆங்கில
வழியில், "The head of Ajivika sect
was Gosala Mankhaliputta", (page: 132)
மற்கலி கோசலர்
என்பது 'கோசலா மன்காலிபுத்தா' என்று ஏன் திரிகிறது? இப்பெயர் எந்த மூலாதார
நூலில் இடம் பெறுகிறது என்று தெரியவில்லை? இந்துத்துவம் இவர்களைக் 'காலி'களாகத்தான் கருதுகிறது. அதன்
வெளிப்பாடுதான் இதுவோ!
மற்கலி, மக்கலி, மன்கலி என்பதை
'காலி' எனத் திரிக்க வேண்டாம். மற்கலி
புத்திரர் என்பது மற்கலி புத்தர் எனத்
திரிந்ததாகவும் சொல்வர். மகாவீரர், மற்கலி, புத்தர் ஆகியோர் சமகாலத்தவர்கள்.
பொதுவாக வேற்று மொழிப்பெயர் உச்சரிப்பில் பிற பொருள்கள் தென்படுமாயின் அவற்றை
மாற்றி எழுதுவது தமிழில் மரபாக உள்ளது.
முதல் தீர்த்தங்கரர் ஆதி பகவன்
"கல்பசூத்ராவின்
ஜைனசரிதா எனும் சமண நூல் சமண தீர்த்தங்கரர்களின் வாழ்க்கை வரலாறுகளை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக சமண சமயத்தை நிறுவியவரும் முதல்
தீர்த்தங்கரருமான பார்சவநாதர், கடைசியும் 24 வது தீர்த்தங்கரருமான மகாவீரர்
ஆகியோரின் வரலாறுகள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்நூலின் ஆசிரியராகக்
கருதப்படும் பத்ரபாகு, சந்திரகுப்த மௌரியரோடு மைசூருக்குப்
புலம்பெயர்ந்து (ஏறத்தாழ கி.மு.296) பின் அங்கேயே குடியமர்ந்தார்". (பக்.154)
முதல் தீர்த்தங்கரர் பார்சவ
நாதராம்! இவர்களது மூலாதாரப் பட்டியலே எல்லாவற்றையும் வெட்ட
வெளிச்சமாக்குகிறதே! இது மட்டுமா, இன்னும் தோண்டத் தோண்ட மலைபோல் குவியக்
காணலாம்.
ஆதி பகவன், ஆதிநாதர், விருஷபர், விருஷப தேவர்
என்றெல்லாம் அழைக்கப்படுபவரே முதல் தீர்த்தங்கரர் ஆவார். இவரது குலச்சின்னம்
(totemic emblem) காளை என்பதால் ரிஷபர் எனப்படுகிறார். திருவாரூர் தீபங்குடி ஆலயம் இவருடையது.
பார்சுவநாதர் 23 வது தீர்த்தங்கரர்; மகாவீரர் 24 வது மற்றும் இறுதித்
தீர்த்தங்கரர் ஆவார். முகலாய அரசர்களில் கடைசி அரசர் ஔரங்கசீப் என்று
எழுதியவர்கள் தானே! பாடநூல்கள் உண்மைகளைப் பேசுவதெல்லாம் கானல் நீர்தான் போலும்! உரிய
ஆதாரங்களைக் காட்டினால் திருத்திவிடுகிறோம் என்று SCERT சொல்கிறதாம்! இவர்கள்
எழுதும் உண்மைகளுக்கு (!?) முதலில் ஆதாரங்களைக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
நேமிநாதர் சிலை 16½ அடி
'திருமலை' சமணப்
பள்ளி பற்றிய குறிப்பு இவ்வாறு செல்கிறது.
"திருமலை சமணக்
கோவில் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரின் அருகே
அமைந்துள்ள ஒரு குகை வளாகத்தில் அமைந்துள்ளன. கி.பி. 12 ஆம்
நூற்றாண்டைச் சேர்ந்த இவ்வளாகத்தில் மூன்று சமணக் குகைகளும், இரண்டு
சமணக் கோவில்களும், 22 வது தீர்த்தங்கரரான நேமிநாதருடைய 16 மீட்டர்
உயரமுடைய சிலையும் உள்ளன. நேமிநாதரின் இச்சிலையே தமிழ் நாட்டிலுள்ள
சமணச் சிலைகளில் மிகவும் உயரமானதாகக் கருதப்படுகின்றது". (பக்.157)
இங்காவது நேமிநாதர் 22
வது தீர்த்தங்கரர் என்று சொன்னதற்காக மகிழ்ச்சியடையலாம். இவருடைய திருமேனி 16
மீட்டர் உயரமாம்! மயிலை சீனி. வேங்கடசாமி 16½ அடி என்கிறார். (சமணமும்
தமிழும்) இதுவே உண்மை. ‘அடி’ ‘மீட்டரா’னது மூலாதார நூல்களின் திருப்பணிகள் போலும்!
'விக்கிபீடியா' 16
மீட்டர் என்கிறது. அதைக் 'காப்பி'யடிப்பவர்களுக்கு இந்த ‘மூலாதார
நூல்கள்’ என்கிற 'பில்டப்' தேவைதானா? 16 மீட்டர் என்றால் சுமார் 53
அடி. அச்சிலை உண்மையில் 16½ அடி உயரம் கொண்டது; எனவே சுமார் 5
மீட்டர்.
சமணப்பிரிவுகள் மூன்று
“கி.பி முதலாம் நூற்றாண்டில் சமணத்தில்
பெரும்பிளவு ஏற்பட்டு திகம்பரர், சுவேதாம்பரர் என
இருபெரும் பிரிவுகள் ஏற்கனவே தோற்றம் பெற்றிருந்தன. திகம்பரர் சுவேதாம்பரர் ஆகிய இரு பிரிவினருமே ஆகம சூத்திரங்களைத்
தங்களின் அடிப்படை நூல்களாக ஏற்றுக்கொண்டனர். ஆனால்
அவற்றின் உள்ளடக்கம், கொடுக்கப்படும்
விளக்கம் ஆகியவற்றில் வேறுபட்டனர்”. (பக்.153)
மூன்றாவதாக ஸ்தானகவாசிகள் எனும் பிரிவும் உண்டு. இவர்கள் உருவ வழிபாட்டை
மறுத்து சமண ஆகமங்களையே அருகக் கடவுளாகக் கருதி வழிபடுபவர்கள். (பார்க்க: சமணமும்
தமிழும் - மயிலை சீனி.வேங்கடசாமி)
இஸ்லாமைப்போல உருவ வழிப்பாட்டை எதிர்க்கும் பல மரபுகள் இந்தியாவில் உண்டு என்பதை
இதன் வழி உணரலாம்.
‘அர்த்த மாகதி’ எனும் பிராகிருதம்
“ஆகம சூத்திரங்கள் பல சமண சமயப்
புனித நூல்களைக் கொண்டுள்ளது. அவை அர்த்த-மகதி பிராகிருத மொழியில் எழுதப்பட்டுள்ளன”. (பக்.153)
“சரியான விடையைத் தேர்வு செய்க.
2. ஆகம சூத்திரங்கள் எம் மொழியில் எழுதப்பட்டன?
அ) அர்த்த-மகதி பிராகிருதம் ஆ) இந்தி இ) சமஸ்கிருதம் ஈ) பாலி” (பக்.164)
பாலி மொழி
மாகதி என்றும் பிராகிருதம் அர்த்த மாகதி என்றும் வழங்கப்பட்டது. இவைகள் தெய்வ மொழியாகச்
சொல்லப்பட்டாலும் சமஸ்கிருதம் போல மக்களிடமிருந்து விலகி நிற்கவில்லை. பாலி, பிராகிருதம்
போன்றவை அவைதீகத் தத்துவங்களைக் கொண்டு சேர்க்கும் மக்கள் மொழியாக இருந்தது. பிராகிருதம் என்றாலே அர்த்த மாகதிதான்; இரண்டையும் சொல்ல வேண்டியதில்லை. இவையும் வடமொழிகள்தான்;
சமஸ்கிருதம் மட்டுமல்ல.
“தமிழ்மொழியில் எழுதப்பட்ட காப்பிய
நூலான சீவகசிந்தாமணி ஆகும். இந்நூல்
சங்க இலக்கிய மரபில் திருத்தக்கத் தேவர்
என்பாரால் இயற்றப்பட்டது. இந்நூல் தன்
சொந்த முயற்சியால் மேநிலையை அடைந்த
சமயப்பற்றுடைய, இறுதியில் துறவுபூண்ட ஒரு
அரசனின் வாழ்க்கையை வர்ணிப்பதாகும்”.
(பக்.154)
அவைதீக மரபு போரை ஒதுக்கியது. அதாவது புறப்பகையைவிட அகப்பகையை வெல்வதே
முதன்மை என வலியுறுத்தியது. இதனை அதன் இலக்கியங்களில் உணரலாம்.
பல்வேறு மூடநம்பிக்கைகளைக் கொண்ட
வைதீகத் தத்துவங்களை மத நிறுவனங்களையும் தகர்த்தவை இந்த அவைதீகத் தத்துவங்கள்.
ஆனால் இங்கு நம்பப்படும் மூடநம்பிக்கைச்
செய்திகள் மிகுதியாக உள்ளது பாடநூலின் தரத்தை நமக்குக் காட்டுவதாக
இருக்கிறது. எடுத்துக்காட்டாக சில:
பஞ்சதந்திரத்தில் சமணத் தாக்கம்!
“பஞ்சதந்திரம் எனும் நூலில்
பெருமளவில் சமணத்தின் தாக்கம் இருப்பதாக
நம்பப்படுகிறது” (பக்.154) முதலில் இம்மாதிரியான நம்பிக்கைகளை ஏன் விதைக்க
வேண்டும்? இவற்றின் மூலம் எவை மேன்மையுறுகின்றன?
முறையான கல்விபெற விரும்பாத ஓர் அரசனது மூன்று முட்டாள் குழந்தைகளுக்கு
குறுக்குவழியில் கல்வி புகட்ட விஷ்ணுசர்மா எனும் பண்டிதரால் சில மாதங்களில்
கல்விபுகட்ட செய்யப்பட்ட ஏற்பாடே பஞ்சதந்திரக்கதைகளுக்கு காரணமாகச்
சொல்லப்படுகிறது. இந்த தந்திரங்கள், சூழ்ச்சிகள் அறங்களுக்கு எதிரானவை. இதில்
சமணப் பாதிப்பிற்கு இடமில்லை.
“தமிழில்
எழுதப்பட்ட மற்றொரு அறிவுசார் நூலான நாலடியார் சமணத்துறவி ஒருவரால் இயற்றப்பட்டதாகும்”. (பக்.154)
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில்
பெரும்பாலானவை களப்பிரர்கள் காலத்தில் இயற்றப்பட்டவை. இவற்றில் அவைதீகத்
தத்துவங்களின் தாக்கம் பெருமளவு உண்டு.
“திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் ஒரு சமணர் என நம்பப்படுகிறது”. (பக்.154)
இது உண்மைதானே! திருக்குறளில் மிகுந்திருக்க சமண, பவுத்த கருத்துகளை எடுத்துக்
காட்டுவதில் என்ன சிக்கல்? வைதீகக்
கருத்துகளுக்கு எதிரான கலகக்குரலாக இருப்பதானாலேயே இதனால் உலகப்பொதுமறையாக
முடிகிறது.
களப்பிரர்கள் சமணத்தை மட்டும் ஆதாரித்தவர்களா?
“களப்பிரர்கள் சமண சமயத்தின்
ஆதரவாளர்களாய் இருந்ததாக நம்பப்படுகிறது”. (பக்.154)
“அவர்கள் (சமணத்துறவிகள்)
இவ்விடத்தில் தனிமையில் தங்கள் வாழ்வைக் கழித்திருக்கலாம் என நம்பப்படுகிறது”. (பக்.155)
“தமிழகத்தில் பௌத்தமானது இலங்கையைச் சேர்ந்த சமயப் பரப்பாளர்களால் பரப்பப்பட்டதாக நம்பப்படுகிறது”. (பக்.160)
இந்த ‘நம்பப்படும்’ செய்திகளடிப்படையில் வினாக்களும்
கேட்கப்படுகின்றன.
I. சரியான விடையைத் தேர்வு செய்க.
3. கீழ்க்கண்டவற்றுள் எது
களப்பிரர்களால் ஆதரிக்கப்பட்டது ?
அ) புத்தமதம் ஆ) சமணமதம் இ) ஆசீவகம் ஈ) இந்து மதம்”, (பக்.164)
ஒரு குறிப்பிட்ட சமயம் மட்டுமே களப்பிரர்களால் ஆதரிக்கப்பட்டதாக சொல்ல
இயலுமா? களப்பிரர்கள் பற்றிய விரிவான ஆய்வை மேற்கொண்ட மயிலை சீனி.வேங்கடசாமி சொல்வதைக் கவனிக்கலாம்.
“களப்பிரர் ஆட்சிக்காலத்தில் ஜைனமும் பௌத்தமும் மேன்மேலும் சிறப்புப்
பெற்றுப் பெருகி வளர்ந்தன. பொதுவாகக் களப்பிர அரசர்கள் ஜைன, பௌத்த மதங்களுக்குச்
சார்பாக இருந்தார்கள். களப்பிர அரசர் அச்சுதப் பரம்பரையினர் என்று கூறப்படுகிறபடியால்
அவர்கள் வைணவ சமயத்தார் என்று கருத வேண்டியிருக்கிறது. கூற்றுவ நாயனார் போன்ற
ஒன்றிரண்டு களப்பிர அரசர் சைவ சமயத்தவராக இருந்தனர் என்பதும் உண்மையே. ஆனால்
பொதுவாகக் களப்பிரர் ஆட்சிக்காலத்தில் ஜைன பௌத்த மதங்கள் சிறப்படைந்திருந்தன. இந்த
மதங்கள் சிறப்படைந்ததற்குக் காரணம் இந்த மதங்களின் பிரச்சாரம் என்று தோன்றுகிறது.
சைவ சமயம் சிறப்படையாமல் மங்கிக் கிடந்தது. வைதிக மதமும் மங்கியிருந்தது”,
(பக்.55, களப்பிரர் ஆட்சியில் தமிழகம் – மயிலை சீனி.வேங்கடசாமி, விடியல் வெளியீடு)
பெரும்பாலான பல்லவ அரசர்கள் சமணர்களா?
“பல்லவர்களின் ஆட்சிக் காலத்தில் சமண
சமயம் செழித்தோங்கியது. (…) பெரும்பாலான பல்லவ அரசர்கள் சமணர்களாவர். பல்லவ மன்னன்
மகேந்திரவர்மன் தொடக்கத்தில் சமணராக இருந்தவராவார்”. (பக்.155 & 156)
முதலாம் சிம்மவர்மன் (கி.பி.436-460), முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி.615-630) ஆகிய இருவர் மட்டுமே சமண
சமயத்தைப் பின்பற்றியவர்கள். சிலர் சமண ஆதரவாளர்களாக இருந்திருக்கலாம். சைவ, வைணவ
சமயத்தைப் பின்பற்றுபவர்கள் சமண ஆதரவாளர்களாக இருப்பதும் சமணராக இருப்பதும் வேறுவேறு.
அதிலும் மகேந்திரவர்மன் I திருப்பாதிரிப்புலியூரில் பள்ளிகள், பாழிகள் ஆகியவற்றை
இடித்து சைவ ஆலயமாக மாற்றிய வரலாறுண்டு.
சிம்ம விஷ்ணு (கி.பி.575-615),
இரண்டாம் நந்திவர்மன் (கி.பி.710-775),
தந்திவர்மன் (கி.பி.775-825) போன்றோர் வைணவர்களாக அறியப்பட்டோர். முதலாம்
மகேந்திரவர்மன் (கி.பி.615-630), முதலாம்
நரசிம்மவர்மன் (கி.பி.630-668), பரமேஸ்வரவர்மன் (கி.பி.670-685), ராஜசிம்மன்
(கி.பி.685-705), மூன்றாம் நந்திவர்மன் (கி.பி.825-850) போன்ற தீவிரச் சைவர்களாக
அடையாளம் காணப்பட்டோர். காஞ்சி வைகுண்டபெருமாள் கோயில், திருவதிகை சிவன்கோயில்
ஆகியவற்றைக் கட்டுவித்த இரண்டாம் பரமேஸ்வரவர்மன் (கி.பி.705-710) மநுநீதிப்படி
ஆண்டதாகப் புகழப்படுபவர். நிருபதுங்கவர்மன் (கி.பி.850-882), அபராஜிதவர்மன்
(கி.பி.882-890) ஆகியோரும் சைவ, வைணவத்தை ஏற்ற வைதீக அரசர்களே.
பெயர்களை எழுதும் முறை
சத்யா, அசௌர்யா,
பிரம்மச்சரியா, அபரிக்கிரகா, புத்தா, சமணா, ஆசீவகா, புத்தவம்சா, பீடகா, புத்தகோசா,
புத்தசரிதா என்றெல்லாம் நீட்டி ஒலிப்பதும் எழுதுவதும் தமிழ் மரபல்ல. மாறாக இவற்றை
முறையே சத்யம், அசௌர்யம், பிரம்மச்சரியம்,
அபரிக்கிரகம், புத்தம் அல்லது புத்தர், சமணம், ஆசீவகா, புத்தவம்சம், பீடகம்,
புத்தகோசர், புத்தசரிதம் என்று எழுதுவதே தமிழ் நடைமுறை.
இயக்கர்கள் - இயக்கிகள்
“கழுகுமலை குகைக்கோவிலில் தீர்த்தங்கரர்களின் உருவங்களைத்தவிர யக்சர்கள், யக்சிகள் (முறையே ஆண்,
பெண்
பணியாளர்கள்) ஆகியோரின் உருவச் சிலைகளும் இடம் பெற்றுள்ளன”. (பக்.157)
யக்சர்கள், யக்சிகள்
(யட்சி/யட்சினி) ஆகியவற்றை ஆண், பெண் பணியாளர்கள் என்று சொல்வது பொருத்தமுடையதல்ல. இயக்கர், இயக்கி
வழிபாடு பல சமயங்களிலும் தொடரும் ஒன்று.
தாய் வழிபாட்டு எச்சமாகவும் கணிக்கப்படுகிறது. சிலவற்றில் அழகும் காமமும்
நிறைந்தவர்களாகவும் சில சமயம் அரக்கிகளாக சித்தரிக்கப்பதுண்டு. மனிதனுக்கும்
கடவுளுக்கும் இடைப்பட்ட ஆற்றலுள்ளவர்களாகக் கற்பிதம் செய்யப்படுகிறது. யட்சர்களின்
தலைவராகக் குபேரனைக் குறிக்கிறது பவுத்தம்.; இவர் எட்டு தர்மபாலர்களில் ஒருவராகவும்
மதிக்கப்படுகிறார்.
சமண இயக்கிகள் 24 என்று சொல்வர். இவை
தீர்த்தங்கரர்களுக்கான காவல் தெய்வங்களாகும். முதல் தீர்த்தங்கரர் ஆதிநாதரின்
குலகுறிச்சின்னம் காளை; காவல் தேவதை சக்ரேஸ்வரி. 22 வது தீர்த்தங்கரர் நேமிநாதரின் குலகுறிச்சின்னம்
சங்கு. காவல் தேவதை அம்பை. இவர் அம்பிகை, அம்பா, குஷ்மாந்தினி என்றும்
அழைக்கப்படுவார். நெல்லை பகவதியம்மன் வழிபாடு இயக்கி அம்பை வழிபாடே என்கிறார்
ஆய்வாளர் தொ.ப. 23 வது தீர்த்தங்கரர் பார்சுவநாதரின் குலகுறிச்சின்னம் பாம்பு; காவல்
தேவதை பத்மாவதி; இவரது துணைவர் தாரநேந்திரர். 24 வது இறுதித் தீர்த்தங்கரர்
மகாவீரரின் குலகுறிச்சின்னம் சிங்கம்; காவல் தேவதை சித்தாயிகா.
மொழிபெயர்ப்பு அலங்கோலம்
“Buddha’s original name, Siddhartha Sakya- muni Gautama, if translated
into English, would mean Gautama who belongs to the Sakya tribe and who has reached the goal of perfection”. (Page: 129)
“புத்தரின் உண்மையான பெயர் சித்தார்த்த சாக்கிய முனி கௌதமர் என்பதாகும். ஆங்கிலத்தில்
மொழியாக்கம்
செய்தால் “கௌதமர் சாக்கிய இனக்குழுவைச் சேர்ந்தவர், மேலும் அவர் முழுநிறைவு எனும் இலக்கை எட்டியவர்” எனப் பொருள்படும்”. (பக்.158)
ஏன் ஆங்கிலத்தில் ‘மொழியாக்கம்’
செய்ய வேண்டும்? இங்கு தமிழில்தானே பொருள் கூறவேண்டும்? இவ்வளவு அபத்தமாக
எழுதுவதையும் மொழிபெயர்ப்பதையும் என்ன செய்வது?
புத்தர் ஏன் துறவு பூண்டார்?
“கௌதமர்
பழைய மதங்களின் குருமார்களிடமிருந்து தான் கற்றுக்கொள்வதற்கு ஏதுவுமில்லை எனத் தெரிந்து கொண்டார்.
துறவற
வாழ்க்கையை மேற்கொள்வதே வீடுபேறு எனப்படும் முக்தியை அடைவதற்கான ஒரேவழி என மதங்கள் அறிவித்தன.
ஆனால்
துறவுவாழ்க்கை மேற்கொண்ட பின்னரும் கௌதமரால் எங்கிருந்தும் உண்மைக்கான பொருளை உணரமுடியவில்லை.
ஒருநாள் இரவு அவர் ஒரு போதிமரத்தின் கீழ் அமர்ந்து தனது சந்தேகங்கள், தனிமை ஆகியவை பற்றி சிந்தனை வயப்பட்டிருந்த
வேளையில்
ஒரு பேரமைதி அவர் மீது நிலவியது. விளைவாக கௌதமர் எனும் துறவி புத்தர் எனும் ஞானியானார். (பக்.158&159)
சாக்கியர்களுக்கும் கோலியர்களுக்கும் ரோகிணி ஆற்றுநீரைப்
பகிர்ந்துகொள்வதில் ஏற்பட்ட சிக்கல், சாக்கிய சங்கம் போரை ஆதரித்தல், போரை மறுத்த
புத்தர் துறவறம் மேற்கொள்ளுதல் ஆகியவற்றை புறந்தள்ளி, வழமையான கதையாடல்களையே கொஞ்சம்
மாற்றி உரைக்கின்றனர்.
“புத்தர்
தனது போதனைகளை பிராகிருத மொழியில் பரப்புரை செய்தார். (…) அவை பாலி மொழியில் எழுதப்பட்டன”. (பக்.159) பிராகிருதம் ஒரு
மொழிக்குடும்பம் என்று சொல்லப்படுகிறது. அவற்றில் மாகதி, அர்த்த மாகதி, சூரசேனி
போன்ற மொழிப்பெயர்களும் வழங்கப்படுகின்றன. மாகதி எனப்படும் பாலி மொழியே புத்தரின்
மொழியாக இருந்ததாகக் கருதலாம்.
“தமிழகத்தில் பௌத்தமானது இலங்கையைச் சேர்ந்த சமயப் பரப்பாளர்களால் பரப்பப்பட்டதாக நம்பப்படுகிறது”. (பக்.160)
மவுரியப் பேரரசர் அசோகர் (கி.மு.269-232) காலத்தில்தான் தமிழகத்தைத் தாண்டி
இலங்கைக்குப் பவுத்தம் சென்றது. அவர்கள் மூலமே தமிழகத்திற்கு பவுத்தம்
பரப்பப்பட்டதாக நம்பிக்கைகளை வரலாறாக்க வேண்டாம்.
அவைதீகத் தத்துவங்களில் முரண் இல்லையா?
“இக்காலப் பகுதியில் தழைத்தோங்கிய பௌத்தமானது சமணம், ஆசீவகம் இந்து மதத்தின் பல்வேறு
பிரிவுகள் ஆகியவற்றுடன் நட்பமைதியுடன் கூடிச் செயல்பட்டுள்ளது. பக்தி இயக்க காலம் முதல் பக்தி இயக்கப் பெரியோர்கள் பௌத்தத்தை
எதிர்த்தனர். பௌத்தம் அரசர்கள் அளித்து வந்த ஆதரவை இழக்கத் தொடங்கியது”. (பக்.160)
அவைதீக சமயங்கள் வைதீகப் பிரிவுகளுடனும் தங்களுக்குள்ளாகவும் மோதிக்
கொண்டன. நட்பு முரண்களால் உயிர்ப்பலி இல்லாமல் இருந்திருக்கலாம்; நட்பமைதிக்கு
வாய்ப்பில்லை. பகைமுரண்களும் அரசதிகார ஆதரவின்மையும் இவைகளில் அழிவிற்கு
இட்டுசென்றது. பக்தி இயக்கம் அவைதீகத்தை அரசாதரவுடன் முற்றாக அழித்தொழித்தது. இதற்கு
எண்ணற்ற சான்றுகள் உள்ளன.
சோழநாட்டில் பவுத்தம்
“நாகப்பட்டினத்தில் கிடைத்துள்ள 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தரின் செப்புச் சிலைகளும் பின்வந்த காலங்களிலும் பௌத்தம் இருந்தமையை உறுதி செய்கின்றன. சேலம் மாவட்டம்
தியாகனூர்
கிராமத்தில் கிடைத்திருக்கும் புத்தரின் சிற்பங்கள் இக்கருத்திற்கு மேலும் வலுச் சேர்க்கின்றன. (பக்.160)
திருவாரூரில் திருநாட்டியட்டாங்குடி மட்டுமல்ல, கண்டரமாணிக்கம்,
கற்பகநாதர்குளம் (காடுவெட்டி), சீதக்கமங்கலம், இலையூர், உள்ளிக்கோட்டை,
கிள்ளியூர், திருநெல்லிக்காவல் - புதூர், மன்னார்குடி, வளையமாபுரம், விக்கிரமம்,
பட்டீஸ்வரம் போன்ற பல இடங்களில் கிடைத்துள்ள புத்தர் சிலைகள் இதனை உணர்த்தும்.
மேலும் தலையில்லாமல் கிடைத்த புத்தர் சிலைகள் சமயப்போரின் கடுமையை
எடுத்துக்காட்டும்.
போதிதர்மர் யார்?
“வஜ்ரபோதி எனும் பௌத்தத் துறவி தாந்ரீகச் சடங்குகளில் திறன் பெற்று விளங்கினார் என்றும், பல்லவ அரச
சபையை அலங்கரித்த அவர் பின்னர் சீனம் சென்று விட்டதாகவும் இரண்டாம் நரசிம்ம பல்லவன் காலத்து சான்றொன்று கூறுகிறது”. (பக்.161)
இங்கு குறிப்பிடப்படுபவர் போதிதர்மர்.
காஞ்சிப் பல்லவ அரசர்களில் ஒருவரின் மகன். கி.பி.520-525 வாக்கில் சீனா (காண்டன்)
சென்று தனது பவுத்தப்பிரிவான தியான மார்க்கத்தைப் (ஸென் - Zen) பரப்பினார். அக்கால
சீன அரசன் ஒருவருடன் இணக்கமாக இருந்து பின்னர் முரண்பட்டு சீனாவின் வடபகுதிக்குச்
சென்றதாக மயிலையார் குறிப்பிடுகிறார். இவரை வெறும் தாந்ரீகச் சடங்குகள் செய்பவராக
பாடநூல் அறிமுகம் செய்கிறது.
இஸ்லாமிய வெறுப்பரசியல்
“விகாரா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு ‘வாழ்விடம்’ அல்லது ‘இல்லம்’ என்று பொருள். தொடக்கத்தில் சுற்றியலைந்து திரியும் துறவிகள் இவற்றை மழைக்காலங்களின் போது தங்குமிடங்களாகப்
பயன்படுத்தினர்”.
‘விகாரா’ எப்போது சம்ஸ்கிருதச் சொல்லானது? இதை பாலி மொழிச்சொல் என்கிறார்
மயிலையார்.
“அரசர்கள் அளித்த ஆதரவினால் இஸ்லாமிய ஆட்சிக்கு முந்தைய இந்தியா, பல விகாரைகளைக் கொண்ட நாடாக விளங்கியது”. இப்படித்தான் பாடநூல்
வெறுப்பரசியலை விதைக்கிறது. நாளந்தா அழிப்பை மட்டும் கொண்டு இஸ்லாமிய அரசர்கள்
விகாரைகள் இல்லாத இந்தியாவாக்கினர் என்று வரலாறு எழுதுவதன் பின்னணி என்னவாக இருக்க
முடியும்? நாளந்தா அழிக்கப்பட்டதால் இஸ்லாமிய ஆட்சியில் விகாரைகள் அனைத்தும்
அழிக்கப்பட்டதாக வரலாறு எழுதுவது எங்ஙனம்?
நாகப்பட்டினம் சூடாமணி விகாரை பிரிட்டிஷார் அனுமதியோடு கிறித்தவப்
பாதிரிமார்களால் உடைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
அவைதீக சமயத்தினரில் ஆசீவகர்களை
வைணவம் போன்று இஸ்லாமும் ஏற்றுக் கொண்ட வரலாறு தமிழகமெங்கும் உண்டு. ஒரு
நிகழ்வை மட்டும் எடுத்து வெறுப்பரசியலை வளர்க்க வேண்டாம்.
ஆர்.எஸ்.எஸ். பற்றிய உண்மைகளுக்கு
எதிராக அவர்கள் நீதிமன்றம் சென்று அப்பகுதிகளை
நீக்குகின்றனர். பாடநூல்கள் முழுதும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் இழையோடும்
இந்துத்துவத்தையும் சிறுபான்மையினர் மற்றும் அவைதீக வெறுப்பரசியலுக்கு நாம்
நீதிமன்றம் செல்வதில்லை; செல்ல முடிவதில்லை. கடந்த ஆறாண்டாக இந்துத்துவம்,
பணமதிப்பிழப்பு, ஜம்மு காஷ்மீர், கருத்துரிமை, NRC, NPR, CAA என போராடுவதற்கே ஜனநாயக
இயக்கங்களின் ஆற்றல் முழுக்க செலவாகிறது.
இலக்கியம்
வரலாறாகுமா?
மகேந்திரவர்மன் I, “மத்தவிலாசப் பிரகசனம் (குடிகாரர்களின் மகிழ்ச்சி) உள்பட
சில நாடகங்களைச் சமஸ்கிருத மொழியில் எழுதியுள்ளார். இந்நாடகம் பௌத்தத்தை
இழிவுபடுத்தும் வகையில் உள்ளது”. (பக்.142, 6 சமூக அறிவியல், பருவம் III) என்று
முன்பு சொல்லிவிட்டு, “பௌத்தம் சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்த சமயமென மகேந்திரவர்மனின்
மத்தவிலாச பிரகாசனம்
எனும் நூல் எடுத்துரைக்கின்றது”. (பக்.161, 7 சமூக அறிவியல், பருவம் III என்று
இங்கு சொல்வதேன்?
அனைத்து மொழி இலக்கியத்தில் ‘அங்கதம்’ (Satire) உண்டு. அந்த வகையில்
சமஸ்கிருத அங்கத நாடகமான ‘மத்தவிலாசப் பிரகசனம்’ பவுத்தத்தை மட்டுமல்ல,
சைவத்தையும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்குகிறது. இத்தகைய நையாண்டியாகிய ‘பகடி’
ஒன்றை இழிவுபடுத்துவதல்ல; விமர்சனம் என்றுகூட எடுத்துக்கொள்ளலாம்.
முதலாம் மகேந்திர வர்மன் சமண சமயத்திலிருந்து திருநாவுக்கரசரால்
சைவத்திற்கு மாற்றப்பட்டவர். பவுத்தம் (பவுத்த பிக்கு நாகசேனன்), சைவப்பிரிவான
கபாலிகம் (சத்யசோமன், அவனது மனைவி தேவசோமா), மற்றொரு பிரிவான பாசுபதம் (பாசுபதன்)
ஆகியோர் இந்நாடகக் கதாபாத்திரங்கள். உண்மையில் இந்நாடகம் பவுத்தத்தைவிட இரு சைவப்
பிரிவுகளையும் கிண்டலுக்கு உள்ளாக்குகிறது. இந்நாடகத்தில் சமரசம் செய்யவந்த பவுத்த
பிக்கு தர்க்கத்தில் தோற்றுப் போகிறார், அவ்வளவுதான்! மகேந்திரவர்மன் I சமண
சமயத்தில் இருந்த காலத்தில் எழுதப்பட்ட நாடகமா மற்றும் இந்த இலக்கியப் படைப்பை
வரலாற்றாதாரமாகக் கொள்ளமுடியுமா என்பதும் ஆய்வுக்குரியது. இப்படியே போனால்
கல்கியைத் தாண்டி வரலாற்று அறிஞர்கள் யாரும் நமக்குத் தேவையில்லை!
சமணப்பள்ளியும் பவுத்த விகாரையும்
“நாளந்தா பௌத்த விகாரை இந்தியத் தொல்லியல்
துறையால்
காவிரிப்பூம்பட்டினத்தில் அகழ்வாய்வு செய்து ஒரு பௌத்த விகாரையும் ஒரு கோவிலும் கண்டறியப்பட்டது”. (பக்.161)
‘ஒரு பௌத்த விகாரையும் ஒரு கோவிலும்’ என்றால் அது சைவ அல்லது வைணவக் கோயிலா
என்ற கேள்வி எழுகிறது. பவுத்த கோயில் என்றால் அதை விகாரை என்று சொல்வதேப்
பொருத்தமாக இருக்க முடியும். அதைப்போல சமணக் கோவில் என்பதையும் சமணப் பள்ளி என்றே
சொல்லவேண்டும்.
பொதுக்கல்விக்கு பள்ளிகள் – விகாரைகளின் பங்களிப்பு
“கல்விப்புலத்தில் பௌத்த சங்கங்களும் விகாரைகளும் கல்விக்கான இல்லங்களாகத் தொண்டுசெய்தன. கல்வி
கற்பதற்காக உலகின்
பல பகுதிகளிலிருந்து மாணவர்கள் இங்கு வந்தனர். நாளந்தா, தட்சசீலம், விக்கிரமசீலா ஆகியன மிகச்சிறந்த கல்வி மையங்கள்
எனப் பெயர்பெற்றன. இவையனைத்தும் பௌத்த விகாரைகளாகும்”. (பக்.161)
“சமணர்கள் தங்கள் கோட்பாடுகளைப் பரப்புரை செய்ததோடு, வெகு மக்களிடையே
கல்வியைக்
கொண்டு செல்வதில் தாங்கள் ஆற்றல்மிக்கத் தொடர்புச் சாதனங்கள் என்பதையும் நிரூபணம் செய்தனர்”. (பக்.158)
பள்ளி, கல்லூரி இரண்டு சமணத்தின் கொடைகளே. வைதீக வேதங்களும் சுமிருதிகளும்
கல்வியை வருணமயமாக்கின. அவற்றை அனைவருக்கும் பொதுமையாக்கும் பணியை அவைதீக சமயங்கள்
செய்தன. சாதி (வருண) வேறுபாடுகளை மறுத்த அவர்களது கொள்கைகள் இதற்குக் காரணமாக
அமைந்தன. பெருந்திரளான அடித்தட்டு மக்களை ஈர்த்ததற்கு இதுவே முதன்மைக்
காரணமாகும்.
“கல்வி நிலையங்கள் அவற்றோடு இணைக்கப்பட்ட நூலகங்களைக் கொண்டிருந்தன. சமணத்தைப் போதித்தவர்களால் சமண மதத்தின் முக்கியக் கூறுகளை வலியுறுத்தி பற்பல நூல்கள்
எழுதப்பட்டன. பெண்களும் துறவறம் பூண அனுமதிக்கப்பட்டதானது பெண்களிடையே கல்வியைக் கொண்டுசெல்வதற்கு ஊக்கமளித்தது”, (பக்.158)
வைதீக மதங்களை துறவை ஏற்பதில்லை; பெண்களுக்கு
துறவறம், வேள்விகளில் பங்களிக்க அனுமதியில்லை. ஆனால் அவைதீகப் பிரிவுகள் ஓரளவு
பாலின சமத்துவம் பேணின. பவுத்தத் துறவிகளை பிக்கு, பிக்குணி என்று சொல்வார்கள்.
ஆனால் பாடநூல் பிட்சு, பிட்சுணி என்றுதான் உரைக்கும். சமணப் பெண் துறவிகளுக்கு
கவுந்தி (கௌந்தி) என்று பெயர். சிலப்பதிகாரத்தில் வரும் கவுந்தியடிகளை நாம்
அறிவோம்.
இங்கும் சம்ஸ்கிருதப் பெருமைதான் கொள்கையா?
“மிலிந்தபன்கா – அதாவது ‘மிலிந்தாவின் கேள்விகள்’ எனப் பொருள்.
கிரேக்க – பாக்டீரியன் அரசன் மிலிந்தா என்பவருக்கும் பௌத்த பிட்சுவான நாகசேனர்
என்பவருக்குமிடையே பௌத்தத்தின் சில அம்சங்கள் குறித்து நடைபெற்ற உரையாடலைக்
கொண்டுள்ளது. இதன் மூலம், சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது”, (பக்.159&160)
‘கிரேக்க – பாக்டீரியன் அரசன்’ எனக்
குறிப்பதேன்? அரசர் என்பதிலேதும் சிக்கலுண்டோ! நாகசேனர் மகாயானப் பவுத்தப்
பிரிவின் 18 அருகதர்களில் ஒருவராக மதிக்கப்படும் பாலி மொழியறிஞர். ‘மிலிந்தபன்கா’வை
இவர் பாலி மொழியில் எழுதினார். இவற்றுக்கும் சீன வடிவத்திற்கு உள்ள வேறுபாடுகளால் சமஸ்கிருதம்
உள்நுழைக்கப்படுவது இங்கு தேவையற்றது. பாலி, பிராகிருத செல்வாக்கை மறைக்கச்
செய்யும் தந்திரமே இது. மெனாண்டார் (Menander) என்பதே பாலி மொழியில் மிலிந்தர்
என்றாவதையும் கவனிக்கலாம்.
ஆசீவகர்களின் கொள்கைகள்
“ஆசீவகர்கள் வினைப்பயன் (கர்மா), மறுபிறவி, முன்தீர்மானம் ஆகிய கோட்பாடுகளில் நம்பிக்கைகொண்டிருந்தனர்”. (பக்.162)
ஒருமையியம், அண்டவியல், தற்செயல், அணு, ஊழ்,
சிதைவு போன்ற பல்வேறு கோட்பாடுகளைக் கொண்டது ஆசீவகம். இவர்களுக்கு ஆதியும் இல்லை;
அந்தமும் இல்லை. நன்மை தீமை என்ற பாகுபாடும் இல்லை. எல்லாம் தானே வருபவை, அதாவது
தற்செயல் என்கின்றனர். “தீதும் நன்றும் பிறர்தர வாரா”, என்பதைப்போல.
நல்லது செய்தால் சொர்க்கம் கிடைக்கும் என்ற வினைப்பயன் (கர்மா) கோட்பாட்டை
இவர்கள் ஏற்பதாகத் தெரியவில்லை. வினைப்பயன் அல்லது வினைக்கொள்கை எனும் ‘கர்மா’ விற்கும் ‘ஊழ்’
க்கும் தொடர்பில்லை.
ஒரு செயலைச் செய்யும் முன்பே அதை எப்படி
நிகழவேண்டும் என்பதை வரையறுக்கும் ஆற்றலை அல்லது சக்தியை ஊழ் என்று கணித்தனர். இதை வைதீக மதங்களின் ‘கர்மா’வுடன்
குழப்பிக்கொள்ளக்கூடாது. இந்த ஊழ்வினையை 6 வண்ணங்கள் 18 படிநிலைகளைக் கடந்து
இறுதிநிலை அடைபவர்கள் மேலும் எண்வகை பொருள்களையும் கடக்க வேண்டியதை
வலியுறுத்துகிறது ஆசீவகம். அய்யப்பன் கோயிலின் 18 படிகள் இதனைக் காட்டுவதாகச்
சொல்லப்படுகிறது. அய்யனார், சாஸ்தா வழிபாடு ஆசீகவக முறையே என்றும் கூறுகின்றனர்.
தமிழக அய்யனார் வழிபாடு ஆசீவகமே என்ற கூற்று முன்வைக்கப்படுகிறது. அய்யப்ப
புராணம் 19 ஆம் நூர்றாண்டைச் சேர்ந்தது. வைதீக இந்துமரபில் இத்தகைய தெய்வங்களுக்கு
இடமில்லை. கேரள அய்யப்பன் வழிபாட்டில் எழுப்பப்படும் சரண முழக்கங்கள், தீண்டாமையற்று அனைத்து ஆண்மக்களும் ஒன்றுகூடுதல், துறவறம் போன்று உடைமைகளைத்
தவிர்த்து இருமுடி கட்டும் சடங்கு, அங்கு உலவும் இஸ்லாமிய, கிருஸ்தவத் தொன்மக்கதைகள்
போன்றவற்றிலிருந்து சமண, பவுத்த, ஆசீவகத்திற்கும் இவற்றிற்கும் உள்ள உறவை எளிதில்
புறந்தள்ளிட இயலாது. பெண்களை ஒதுக்குதல் மற்றும் வைதீகம் விழுங்கிய வரலாற்றினூடாக
இவற்றையும் அவதானிக்க வேண்டிய தேவை இருக்கிறது.
“வரலாறு முழுவதிலும் ஆசீவகர்கள் அனைத்து இடங்களிலும் அடக்குமுறையைச் சந்திக்க நேர்ந்தது. பல்லவர், சோழர், ஹோய்சாளர் ஆகியோரது ஆட்சிக் காலங்களில் கிராம சமூகத்தினர்
ஆசீவகர்கள் மீது சிறப்பு வரிகளை விதித்தனர்”. (பக்.162)
வரிவிதிப்பு குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவுகிறது. இருப்பினும்
வைதீகர்களால் கடும் ஒடுக்குமுறைக்கு அவைதீகர்கள் உள்ளாயினர். ‘கிராம சமூகத்தினர்’
என்பது பிரம்மதேயம் போன்ற பார்ப்பன, சூத்திர உயர்த்தப்பட்ட சாதியாதிக்கத்தைக்
குறிக்கின்றது. ஒருபுறம் குடவோலைப் பெருமிதம்; மறுபுற உண்மைநிலை இவ்வாறாக இருக்கிறது.
இந்த ஆதிக்கம் என்றுமே அடித்தட்டு மக்களுக்கு எதிராகத்தான் இருந்து
வந்திருக்கிறது.
அவைதீகத் தாக்கம் மற்றும் பங்களிப்புகள்
அவைதீகத்தின் பலவேறு கூறுகளை வைதீகப் பிரிவுகள் கைக்கொண்டன. புலால்
மறுத்தல், மணம்புரியாமல் துறவறம், பலியிடுதல் எதிர்ப்பு என பலவற்றைக்
குறிப்பிடலாம். தீபாவலி போன்ற பண்டிகைகளும் கலாச்சார நடவடிக்கைகளும் கடன்
பெறப்பட்டன. ஆனால் பாடநூல் இவற்றைப் பேசாமல் ஏழாம் வகுப்புக் குழந்தைகளுக்குத்
தேவையற்ற செய்திகளைப் பேசுகிறது.
போரை வெறுத்தல், அகப்பகையை வெல்லுதல், ஒழுக்கத்தை வலியுறுத்துதல்,
சமத்துவச் சிந்தனை போன்றவை இலக்கியப் படைப்புகளில் முதன்மையாக்கப்பட்டன. அவைதீகத்
தாக்கங்களும் பங்களிப்புகளும் பாடநூல்கள் கண்டுகொள்ளாத இருண்ட பகுதியாக
கிடக்கிறது.
தொடக்கநிலையில்கூட பாடநூல்கள் தமிழில் எழுதப்படுவதில்லை. தமிழில்
ஆதாரநூல்கள் இல்லை என்ற பழம்பாட்டு பாடப்படுகிறது. அத்துடன் ஆங்கிலத்தில்
இருந்தாலே அது தரமான நூலாகக் கற்பிதம் செய்து கொள்ளப்படுகிறது. இப்பாடம் குறித்து
எண்ணற்ற நூல்கள் தமிழில் உண்டு. இவர்களது மேற்கோள் பட்டியலைக் காணும்போது என்
கைக்கு எட்டிய சில தமிழ் நூல்களைப் பட்டியலிடுவது இங்கு பொருத்தமுடையது என்று
கருதுகிறேன்.
தமிழில் சில நூல்களின் பட்டியல்:
- இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் – தேவி பிரசாத் சட்டோபாத்யாய (தமிழில்) கரிச்சான் குஞ்சு வெளியீடு: விடியல் பதிப்பகம், ஜூலை 2016
- இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம் – தேவி பிரசாத் சட்டோபாத்யாயா (தமிழில்) வெ.கிருஷ்ணமூர்த்தி பதிப்பாசிரியர்: எஸ்.பாலச்சந்திரன் வெளியீடு: படைப்பாளிகள் பதிப்பகம் விற்பனை உரிமை: பாரதி புத்தகாலயம் மூன்றாம் பதிப்பு: ஜூலை 2015
- இந்திய நாத்திகம் – தேவி பிரசாத் சட்டோபாத்யாயா (தமிழில்) சாமி, வெளியீடு: பாரதி புத்தகாலயம், டிசம்பர் 2013
- உலகாயதம்: பண்டைக்கால இந்தியப் பொருள் முதல்வாதம் பற்றிய ஆய்வு – தேவி பிரசாத் சட்டோபாத்யாயா (தமிழில்) எஸ்.தோதாத்ரி வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., ஜூன் 2010
- பௌத்தமும் தமிழும் – மயிலை சீனி. வேங்கடசாமி வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., நவம்பர் 2007
- சமணமும் தமிழும் – மயிலை சீனி. வேங்கடசாமி வெளியீடு: பூம்புகார் பதிப்பகம், பிப்ரவரி 2009
- களப்பிரர் ஆட்சியில் தமிழகம் – மயிலை சீனி. வேங்கடசாமி வெளியீடு: விடியல் பதிப்பகம், டிசம்பர் 2008
- புத்தரின் வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி வெளியீடு: எதிர், ஆகஸ்ட் 2012
- பகவான் புத்தர் – தர்னானந்த கோஸம்பி (தமிழில்) கா.ஶ்ரீ.ஶ்ரீ. வெளியீடு: புத்தா வெளியீட்டகம், டிசம்பர் 2006
- மணிமேகலையில் சமயமும் மெய்யியலும் – கட்டுரைத் தொகுப்பு பதிப்பாசிரியர்: இரா.சீனிவாசன் & க.காமராசன் வெளியீடு: தமிழ்நாடு பௌத்த சங்கம் & மெத்தா பதிப்பகம், டிசம்பர் 2015
- ஆசிவகமும் அய்யனார் வரலாறும் - பேரா. க. நெடுஞ்செழியன் பதிப்பாசிரியர்: முனைவர் இரா. சக்குபாய் வெளியீடு: மனிதம், ஆனி 2019
- எதிர்க்கடவுளின் சொந்த தேசம் (கேரள பிராமணிய காலனித்துவத்தின் சுருக்கமான வரலாறு) – ஏ.வி.சக்திதரன் (தமிழில்) சா தேவதாஸ், எதிர் வெளியீடு, ஜனவரி 2020
- புத்தரும் அவரது தம்மமும் – டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் வெளியீடு: கருத்து = பட்டறை, முதல்பதிப்பு: 2019
- இந்திய வரலாற்றில் பகவத் கீதை – பிரேம்நாத் பசாஸ் (தமிழில்) கே.சுப்ரமணியன் வெளியீடு: விடியல் பதிப்பகம், ஜூலை 2006
- பண்டைக்கால இந்தியா – ராம்சரண் சர்மா (ஆர்.எஸ். சர்மா) தமிழில்: ரா.ரங்கசாமி (மாஜினி) வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., அக்டோபர் 2017
- முற்கால இந்தியா தொடக்கக் காலத்திலிருந்து கி.பி.1300 வரை – ரொமிலா தாப்பர் (தமிழில்) அ.முதுகுன்றன் வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., ஜூலை 2016
- பண்டையக் கால இந்தியா – டி.என்.ஷா (தமிழில்) அசோகன் முத்துசாமி வெளியீடு: பாரதி புத்தகாலயம், டிசம்பர் 2011
- பண்டைய இந்தியா – டி.டி.கோசாம்பி (தமிழில்) ஆர்.எஸ்.நாராயணன் என்ற ஆர்.எஸ்.என். சத்யா வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., செப்டம்பர் 2008
- இந்திய வரலாறு ஓர் அறிமுகம் – டி.டி.கோசாம்பி (தமிழில்) சிங்கராயர் வெளியீடு: விடியல் பதிப்பகம், அக்டோபர் 2011
- பவுத்தத் தத்துவ இயல் – ராகுல் சாங்கிருத்யாயன் (தமிழில்) ஏ.ஜி.எத்திராஜூலு & ஆர்.பார்த்தசாரதி வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., செப்டம்பர் 2018
- இந்துத் தத்துவ இயல் – ராகுல் சாங்கிருத்யாயன் (தமிழில்) ஏ.ஜி.எத்திராஜூலு வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., செப்டம்பர் 2018
- விஞ்ஞான லோகாயத வாதம் – ராகுல் சாங்கிருத்யாயன் (தமிழில்) ஏ.ஜி.எத்திராஜூலு வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., செப்டம்பர் 2018
- புத்தம் சரணம் – அ.மார்க்ஸ் வெளியீடு: அடையாளம், 2018
- தீக நிகாயம் – பௌத்த மறைநூல், தமிழில்: மு.கு.ஜெகந்நாத ராஜா, வெளியீடு: தமிழினி, டிசம்பர் 1988
- பேரரசன் அசோகன்: மறக்கப்பட்ட மாமன்னனின் வரலாறு - சார்ல்ஸ் ஆலன் (தமிழில்) தருமி, எதிர் வெளியீடு, ஆகஸ்ட் 2014
- மாமன்னர் அசோகர் வரலாறும் அவரது சாசனங்களும் (பாலி இலக்கியங்கள் மற்றும் இலங்கை வரலாற்றின் அடிப்படையில்) – முனைவர் பிக்கு போதி பால வெளியீடு: மெத்தா பதிப்பகம், டிசம்பர் 2013
- கொங்குநாடும் சமணமும் – புலவர் செ.இராசு வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., ஜூலை 2016
- மதுரையில் சமணம் - முனைவர் சொ.சாந்தலிங்கம் வெளியீடு: கருத்து = பட்டறை, 2019
- பல்லவர் வரலாறு – மா.இராசமாணிக்கனார் வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ், ஆகஸ்ட் 2013
- அறியப்படாத தமிழகம் – தொ.பரமசிவன் வெளியீடு: காலச்சுவடு, டிசம்பர் 200
- பண்பாட்டு அசைவுகள் – தொ.பரமசிவன் வெளியீடு: காலச்சுவடு, நவம்பர் 2014
- தெய்வம் என்பதோர்… – தொ.பரமசிவன் வெளியீடு: காலச்சுவடு, டிசம்பர் 2016
- இதுவே சனநாயகம் – தொ.பரமசிவன் வெளியீடு: காலச்சுவடு, ஜனவரி 2019
- வரலாறும் வழக்காறும் – ஆ.சிவசுப்பிரமணியன் வெளியீடு: காலச்சுவடு ஆகஸ்ட் 2010
- தமிழகத்தில் அடிமை முறை – ஆ.சிவசுப்பிரமணியன் வெளியீடு: காலச்சுவடு, டிசம்பர் 2010
- அடித்தள மக்கள் வரலாறு – ஆ.சிவசுப்பிரமணியன் வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ், டிசம்பர் 2011
(அபத்தங்கள் தொடரும்…)