திங்கள், ஜூன் 29, 2020

வரலாறுகள் வெறும் பெருமிதங்களுக்கும், கொண்டாடவும் மட்டுமல்ல!


வரலாறுகள் வெறும் பெருமிதங்களுக்கும், கொண்டாடவும் மட்டுமல்ல!


மு.சிவகுருநாதன் 


(கல்ஹணரின் ‘ராஜதரங்கிணி’யை முன்வைத்து சில குறிப்புகள்.)


     பழைய வரலாற்று நூல்களில் கல்ஹணரின் ‘ராஜதரங்கிணி’யைப் பற்றிய பெருமிதமும் கொண்டாட்டமும் மிகுந்துள்ளது. சமூக ஊடகங்களில் ஆய்வுகள் என்ற பெயரில் இந்த புகழ்பாடல்கள் நிகழ்த்தப்படுகின்றன. இந்நூல் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதும் எழுதியவர் காஷ்மீரி பிராமணர் (பண்டிட்) என்பதும் இத்தகைய புகழ்ச்சியின் அடிநாதமாக உள்ளது. 

     காஷ்மீர் பிராமணரான ஜவகர்லால் நேருவின் உறவினர் ஆர்.எஸ். பண்டிட் இதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததும் (1934) அதற்கு நேரு முன்னுரையுடன் பின்னாளில் சாகித்ய அகாதெமி வெளியிட்டதும் விதந்தோதப்படுகிறது. ஜவகர்லால் நேரு எங்கும் இந்தக் காஷ்மீர்  பிராமண அடையாளத்தைச் சுமந்து திரிந்ததில்லை. வரலாற்று நூலிலுள்ள சில அம்சங்கள் அவரைக் கவர்ந்தது அவ்வளவே! இதில் சாதி, மத அபிமானம் துளியுமில்லை. ஆனால் இன்றைய சமூக ஊடகங்களில் தீவிரமாக இயங்கும் பார்ப்பன சமூகத்தினர் இத்தகைய சாதி, மத அரசியலை முன்னெடுக்கின்றனர். 

  
  கல்ஹணரின் ராஜதரங்கிணி நூலுக்கு பல ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளது. இந்தியர்களின் மொழிபெயர்ப்பில் ஜே.சி. தத் மொழிபெயர்ப்பு முக்கியமான ஒன்று.  ‘Kings of Kashmira, Being A Translation of the Sanskrit a Work Rajataranggini of Kahlana Pandita by Jogesh Chunder Dutt (J.C.Dutt)  என்ற இந்த மொழிபெயர்ப்பின் முதல் தொகுதி 1879 ஆம் ஆண்டிலும் இரண்டாவது தொகுதி 1887 ஆம் ஆண்டிலும் வெளியாகியுள்ளது.

    ஆங்கில மொழிபெயர்ப்பில் Sir Marc Aurel Stein (M. A. STEIN)   KALHANA'S RAJATARANGINI  A CHRONICLE OF THE KINGS OF KASMlR TRANSLATED, WITH AN INTRODUCTION, CQMMENTARY, & APPENDICES BY M. A. STEIN. இது மூன்று தொகுதிகளாகக் கிடைக்கிறது.

   கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்நூல் காஷ்மீர் வரலாற்றை காலக்கிரமமாக தொகுக்கிறது. ஆனால் இதில் சொல்லப்படுவது அனைத்தும் முழு உண்மையும் வரலாறுகளும் அல்ல; புராணக்கதைகளும் மிகைப்படுத்தல்களும் நிறைய உள்ளன. எனவேதான் அவர்கள் இத்தகைய புனைவுகளுக்கு முதன்மையளித்து வரலாற்றின் கதைகளை உற்பத்தி செய்வதில் முனைப்பாக உள்ளனர். (எ.கா.)  Stories from RAJATARANGINI - Tales of Kashmir  By Devika Rengachari)


    கல்ஹணரை, இந்தியாவின் மாபெரும் வரலாற்று வரைவாளர் என்றும் அறிவியல் சார்ந்த வரலாற்றியலை முதன்முதலில் பின்பற்றத் தொடங்கியர், என்றெல்லாம் மிகைப்படுத்துவது வரலாற்று ஆய்வாகாது. இதிலுள்ள விவரங்களை பிற வரலாற்று ஆதாரங்களுடன் ஒப்புநோக்கி ஆய்வுக்குட்படுத்துவதே வரலாற்றெழுதியதையும் வரலாற்று ஆய்வுகளையும் செழுமையாக்கும்.  

      தமிழ், பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம் என பலமொழிகளில் நூல்கள் பல வரலாற்று ஆதாரமாக உள்ளன. பவுத்தம் சார்ந்த பிரதிகள் பல (மகாவம்சம், தீபவம்சம்) வரலாற்று ஆய்வுகளுக்குப் பெரிதும் உதவுகின்றன. பாணரது ஹர்ஷ சரிதம், பில்ஹணரின் விக்ரமாங்க தேவ சரிதம் ஆகியவற்றைப் போலவே, பவுத்த நூல்களிலிருந்து கல்ஹணரது வரலாற்று அறிவு விரிவுபெற்றது என்கிறார் வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர்.   

   “எழுத்துப் பொறிப்புகளில் பயன்படுத்தப்பட்ட வடிவ மாதிரியின் விரிவாக்க செய்திகளுக்கு இணையானவை காஷ்மீர் வரலாற்றைக் கூறும் ராசதரங்கிணி போன்ற வரலாற்றுக் குறிப்புகளில் இருந்தன. (…)

   இராசதரங்கிணி உண்மையில் விதி விலக்கானது. ஏனெனில் கல்கணர் பழைமையைப் பற்றிய நம்பத் தகுந்த சான்றுகளை பல்வகை ஆதாரங்களிலிருந்து தேடினார். அதனால் அவருடைய சொல்லாடல்கள் நிகழ்வுகளால் நிரப்பப்பட்டிருந்தன. அவற்றினுடைய விளக்கங்கள் வரலாற்று ரீதியாக நுண்ணறிவுத் திறன்கொண்டவை. அது சந்தேகமின்றி ஒரு வழக்கத்திற்கு மாறான நூல்தான். அது வம்சாவளி மரபில் வேர் கொண்டிருந்த போதிலும் கூட அவருடைய அசாதாரணமான வரலாற்று அறிவு புத்தமத எழுத்துக்களின் வழக்கத்திலிருந்து வளர்ச்சி பெற்றிருக்கலாம்”. (பக்.832, முற்கால இந்தியா: தொடக்கக் காலத்திலிருந்து கி.பி.1300 வரை – ரொமிலா தாப்பர், தமிழில்: அ.முதுகுன்றன், என்.சி.பி.ஹச். வெளியீடு)    

      ராஜதரங்கிணியின் நல்ல தரவுகளைக் கொண்டே வரலாற்று ஆசிரியர்கள் அதன் முக்கியத்துவத்தை கொண்டே மதிப்பிடுகின்றனர்; மாறாக அதன் புனைவுகளையும் புராணக் கதைகளையும் கொண்டல்ல. இதை ஆய்வாளர்கள் பலரின் கருத்துகளிலிருந்து உணரமுடியும். 


  “ஆரம்பக்கால வரலாற்று நூலுக்கு மிகச்சிறந்த உதாரணமாக ராஜதரங்கினி அல்லது ‘மன்னர்களின் நீரோடை’ திகழ்கிறது. இது பன்னிரண்டாம் நூற்றாண்டில் கல்ஹணரால் ஆக்கப்பட்டதாகும். காஷ்மீர் மன்னர்களின் வாழ்க்கை வரலாறுகளை இது வரிசையாக, கோவையாகத் தருகிறது. நம் காலத்தில் புரிந்துகொண்டிருக்கும் ரீதியில் வரலாற்றின் பல்வேறு அம்சங்களைத் தன்னகத்தே கொண்ட முதல் நூலாக இது கருதப்படுகிறது”. (பக்.35, பண்டைக்கால இந்தியா – ஆர்.எஸ். சர்மா, தமிழில்: ரா.ரங்கசாமி (மாஜினி) என்.சி.பி.ஹச். வெளியீடு)

   “அவரது (அனந்தர்: கி.பி.1028-1063) மகனான கலசர் (1063-1089) கொடுமையின் உரு; அவர் தம் தீக்குணங்களைக் கண்டு பெறாத அவர் பெற்றோர்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்தனர். அவரது மகனான ஹர்ஷர் (1089-1101) காஷ்மீர் வரலாறு முன்பின் கண்டிராத பேய்க்குணம் படைத்தவர். அவரிடம் ஆட்சித் திறமை போன்ற சில நற்குணங்கள் இருப்பினும், மிகப்பல தீக்குணங்கள் காணப்பட்டன. அவர் முற்றிலும் வெறுக்கத்தக்கவர் என்று ராஜதரங்கிணியை இயற்றிய கல்ஹணரால் வருணிக்கப்படுகிறார். அவ்வாசிரியரது தந்தை ஹர்ஷரின் அமைச்சர்களில் ஒருவர். காமப்பேய் பிடித்தலைந்த ஹர்ஷரிடம் வெறுக்கத்தக்க பண்புகள் பல இருந்தமையால் அவரைக் ‘காஷ்மீரத்து நீரோ’ என்பர். அவருக்குப்பின் மன்னரானவர் ஜயசிம்மர் (1128-1155) ஹர்ஷர் இறந்ததற்கும் ஜயசிம்மர் மன்னரானதற்கும் இடைப்பட்ட காலத்தில் அந்நாட்டில் பஞ்சமும் குழப்பமும் மிகுந்தன”. (பக்.196&197, இந்திய வரலாறு – டாக்டர் ந. சுப்ரமணியன், என்.சி.பி.ஹச். வெளியீடு)

   இந்த ஹர்ஷர் கி.பி. 606-647 இல் ஆண்ட இந்திய அரசரல்ல; இந்த ஹர்ஷர் கி.பி. 1089-1101 காலகட்டத்தில்  காஷ்மீரை  ஆண்ட மன்னர். இருவரையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. இவருடைய காலத்தில் ஆயுதப் புரசியில் ஈடுபட்ட தாமராப் பிரபுக்களுக்கு எதிராக போர் செய்ய வேண்டி வந்ததால் பெருமளவு உலோகத் தேவை ஏற்பட்டது. எனவே சில சிலைகளுக்கு மட்டும் விதிவிலக்குகள் அளிக்கப்பட்டு பிற அனைத்து உலோகச்சிலைகளும் பெயர்த்தெடுக்கப்பட்டு உருக்கி ராணுவத்திற்குப் பயன்பட்டது. 

    சிலை, கோயில், பவுத்த மடங்கள் உடைப்புகளை இஸ்லாமியர்கள் மீது மட்டும் சுமத்துவதை இந்நிகழ்வு அம்பலப்படுத்துகிறது. கஜினி முகமதுவின் சோமநாதபுரம் படையெடுப்பிற்குப் (கி.பி.1026) பின்னாலுள்ள விரிவான அரசியலை அறிய ரொமிலா தாப்பரின் (‘சோமநாதர்: வரலாற்றின் பல குரல்கள்’ – தமிழில்: கமலாலயன், என்.சி.பி.ஹச். வெளியீடு) நூலைக் காண்க. 

     ஒருபுறம் சுதேசி என்று ஏமாற்றிக்கொண்டு, பொதுத்துறை நிறுவனப் பங்குகளைத் தனியாருக்கு விற்பதற்காக ‘பங்கு விலக்கல் துறை’ ஒன்றை உருவாக்கி அதற்கு அமைச்சர் ஒருவரை வாஜ்பேயி அரசில் நியமித்தார்களே, நினைவிருக்கிறதா? அத்துறையின் முதலாவது  அமைச்சர் அருண்ஷோரி. 

     இந்து அரசாகப் பிரகடனப்படுத்திக் கொண்ட இவர் இந்து, பவுத்த சிலைகளை உடைக்க ‘சிலை பெயர்க்கும் அமைச்சர்’ (devotpatana nayaka) நியமித்த வியப்பிற்குரிய வரலாற்றுச் செய்தி கல்ஹணரால் நமக்குக் கிடைக்கிறது. இந்து அரசர், காஷ்மீர்ப் பிராமணர் எனப் பாகுபாடு காட்டாது அனைவரது நல்ல, கெட்ட செயல்களையும் பதிவு செய்திருப்பது சிறப்பானது. ஆனால் இவரைக் கொண்டாடும் இன்றைய நபர்கள் அதிலுள்ள சில புனைவுகளையும் சாதி, மதச் சார்புடன் கொண்டாடுவது வெறுப்பரசியலுக்கே வழிவகுக்கும்; வரலாற்றை வளைக்கவும் திரிக்கவும் செய்யும். 

1091. In order to get hold of the statues of gods, too, when the treasures (of the temples) had been carried off, he appointed Udyayarija 'prefect for the overthrow of divine images ' (devotpatana nayaka). (page:352, M. A. STEIN)  

1091. Compare with the following account of Harsa' iconoclasm the reference made
vii. 1944 to the destruction of the silver image of Parihairokeiava. This, however, occurred only in the year preceding Harsa's death, and at a time when he must have been reduced to great financial striate by Uccala’s rebellion. (page:352&353, M. A. STEIN)  

   காஷ்மீர் அரசர் ஹர்ஷர், “தனது ஆட்சி எல்லைப்பரப்பில் இருந்த எல்லா உலோக விக்கிரகங்களையும் விதிவிலக்கு அளிக்கப்பட்ட நான்கைத் தவிர, முறைப்படியாக உருக்கிப் பிழம்பாக்கினார். ஒரு ‘சிலை பெயர்க்கும் அமைச்சர்’ (தேவோத்பாதன நாயகா) சிறப்புடன் நியமிக்கப்பட்டு, அவரது பொறுப்பில் இவ்வேலைகள் நடந்தேறின. இவ்விக்கிரகங்களை கட்டித் தெருக்களின் வழியே உலைக்களத்தை நோக்கி  இழுத்துச் சென்றனர். இவ்வாறு செல்வதற்கு முன்பாகத் தொழுநோய்ப் பிச்சைக்காரர்கள் ஒவ்வொரு விக்கிரகத்தின் மீதும் சிறுநீர், மலஜலம் முதலியன கழித்தனர். இவ்வாறு தெய்வங்கள் அவமதிப்புகளுக்குள்ளாயின. இதற்காக கடுகளவேனும் இறைமைத் தத்துவச் சார்பான சாக்குபோக்குகள் கூறப்படவில்லை”, (பக்.386, பண்டைய இந்தியா – டி.டி.கோசாம்பி தமிழில்: ஆர்.எஸ்.நாராயணன், என்.சி.பி.ஹச். வெளியீடு) டி.டி.கோசாம்பி குறிப்பிடுகிறார்.  
   
   பொதுவாக திட்டுவதற்கும், இழிவுபடுத்துவதற்கும் சாதி, மதங்களைப் பயன்படுத்துவதைப் போல கோயில் கொள்ளை, சிலை உடைப்பை இஸ்லாமியர் மீது சுமத்துவதும் ‘துருக்கன்’ என்பது வசைச் சொல்லாடாகவே பதியப்படுவதை   ஆய்வாளர் வெண்டி டோனிகர் எடுத்துக் காட்டுகிறார். 

   “1148 ஐச் சேர்ந்த காஷ்மீர் வரலாற்றாவணம் (ராஜதரங்கிணி) ஒன்றில், கோயில்களைக் கொள்ளையடித்த, கடவுள் சிலைகள் மீது கழிவுகளையும் மதுவையும் ஊற்றிய ஓர் இந்து அரசனை அது துருக்கன் என்றே குறிப்பிடுகிறது”. (பக்.539, இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு – வெண்டி டோனிகர், தமிழில்: க. பூரணச்சந்திரன், எதிர் வெளியீடு) 

    அடுத்து மஹிரகுலா என்னும் அரசன் பற்றி ராஜதரங்கிணியில் கல்ஹணர் சொல்லும் கதைகள் ஏராளம். அதன் ஆங்கில மூலத்திலிருந்து சில பகுதிகளைக் கீழே தருகிறேன். 

   He was succeeded by his son Mihirakula, who was as cruel as Death. Day and night were men murdered by his orders, even in places of his amusement; releuted not even towards boys  or women nor respected the aged; and his presence and that his army, were known by the assemblage of crows and vultures that feasted on the dead.

   Once he saw the breasts of his queen marked with footprints of a golden colour. This enraged him, and he called for explanation from the keeper of the zenana. The keeper replied that the queen wore a boddice made of Ceylon cloth, and that the Cingalease marked their clothes with golden foot-marks which denoted the footprints of their king. Whereupon he reached the Southern Sea and invaded Ceylon. He assuaged his anger by killing the King of the place, set up another, a cruel man on his throne, and returned to his kingdom, bringing with him from Ceylon a picture of the sun named Ushadeva. 

    On his  return he passed through Chola, Karnata, Nata, &c. The kings of these  places fled on his approach, and returned to their ravaged capitals after he had gone away. 

   When entering Kashmira, one hundred of his elephants were startled by the cries of one elephant which had fallen into a den, and the king ordered the hundred elephants to be killed. As the touch of the sinful pollutes the body, so the narration of his history pollutes speech”. (Page: 18&19, Kings of Kashmira, Being A Translation of the Sanskrit a Work Rajataranggini of Kahlana Pandita by Jogesh Chunder Dutt (J.C.Dutt).

    One day when he was descending in to the river Chandrakulya, on his way stood a heavy block stone which could not be moved. Now, he dreamt a dream afterwards, that the gods spoke unto him, and said, that a Yuksha. (a spirit) resided in it, and that it could not be moved but by a chaste woman. He then put his dream to proof, and many a citizen’s wife tried to move that stone in vein, till Chandravati, wife of a potter, accomplished the feat.

  The king was enraged to find so many women unchaste; he ordered to be killed together with their husbands, son and brothers, three kotis in all ! This action is lauded by some, but such massacre should be condemned. That the people did not rebel against their king and kill him, was because the gods defended him”. (page:19&20, J.C.Dutt).   

“As the touch of the sinful pollutes the body, so the narration of his history pollutes speech”, என்று சொல்லிக் கொண்டாலும் அவரே விடுவதாக இல்லை. எல்லாக் கொடுமைகளையும் ஒன்றுவிடாமல் பட்டியலிடுகிறார். 

  One day when he was descending in to the river Chandrakulya, on his way stood a heavy block stone which could not be moved. Now, he dreamt a dream afterwards, that the gods spoke unto him, and said, that a Yuksha. (a spirit) resided in it, and that it could not be moved but by a chaste woman. He then put his dream to proof, and many a citizen’s wife tried to move that stone in vein, till Chandravati, wife of a potter, accomplished the feat.

  The king was enraged to find so many women unchaste; he ordered to be killed together with their husbands, son and brothers, three kotis in all ! This action is lauded by some, but such massacre should be condemned. That the people did not rebel against their king and kill him, was because the gods defended him”. (page:19&20, J.C.Dutt).   
   
    மஹிரகுலன் என்ற அரசன் பற்றி யுவாங் சுவாங்கின் குறிப்புகளில் பினவரும் செய்திகள் கிடைக்கின்றன.

   “சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் மஹிரகுலா எனும் மன்னன் அதனைத் தலைநகராகக் கொண்டு (சாகலா) இந்தியர்களை ஆட்சிபுரிந்து வந்தார். அஞ்சா நெஞ்சினராய்த் துணிச்சல் மிக்க அவர் மிகுந்த திறம் படைத்தவர். அண்டை நாடுகளெல்லாம் அவருடைய ஆளுகைக்குட்பட்டவை. தனது ஓய்வு நேரத்தில் பௌத்த சமயம் பற்றிய ஆய்வில் ஈடுபட விரும்பிய மன்னர், பௌத்த சமய நெறிகளில் தலைசிறந்த தகைமையும் தேர்ச்சியும் கொண்ட துறவியார் ஒருவரை தனக்கு ஆசானாக அனுப்பி வைக்கும்படி அந்நாட்டு பௌத்த சமய நிறுவனத்தினருக்கு ஆணையிட்டார்.
  
    மன்னருடைய ஆணையை நிறைவேற்றுவது சமய நிறுவனத்தில் மிகுந்த கடினமாக இருந்தது. கற்பிப்பதில் அவ்வளவாகப் பற்றார்வம் இல்லாதவர் மன்னரிடம் கெட்ட பெயரைத் தேடிக்கொள்ள விரும்பவில்லை; கல்வி கேள்விகளில் சிறந்தும் அறிவாற்றலில் உயர்ந்தும் விளங்கியவர்கள் மன்னருடைய கெடுபிடியான தன்மையைக் கண்டு அஞ்சி ஒதுங்கினர். அந்தச் சமயத்தில் நீண்ட காலமாக துறவியாக இருந்த முதியவர் ஒருவர் மன்னருடைய மாளிகையில் பணியாளராகப் பணிபுரிந்தார். சமய விளக்கங்கள் தருவதில் தெளிவாகவும் கம்பீரமாகவும் திகழ்ந்த அவருக்கு நல்ல பேச்சுத்திறனும் இருந்தது. எனவே, மன்னருடைய அழைப்பிற்குப் பணியும் விதமாக அவரைத் தேர்ந்தெடுப்பதென்று சமயத்துறவியர் நிர்வாகக்குழு முடிவெடுத்தது.
  
    அத்தகையதொரு நடைமுறை மன்னரை அவமானமடையச் செய்தது. உடனே, தனது ஆட்சி எல்லைக்குள் இருந்த அத்தனை பௌத்த சமய நிறுவனங்களையும் அழித்தொழிக்கச் சொல்லி ஆணையிட்டார். அந்தக் காலகட்டத்தில் மகத நாட்டு மன்னராக இருந்த பாலாதித்யா நேர்மையாளராகவும் தயாள குணம் படைத்தவராகவும் பௌத்த சமயத்தில் பேரார்வம் கொண்டவராகவும் திகழ்ந்தார். பௌத்தர்களை அழித்தொழிக்கும் ஆணைக்கு எதிராக அவர் வெகுண்டெழுந்தார். பாலாதித்யாவை அடக்கி ஒடுக்குவதற்காக மஹிரகுலா அவருடைய நாட்டின்  மீது போர் தொடுத்தார்.

     பாலாதித்யா பின்வாங்கி பல கோடிக்கணக்கான தனது மக்களுடன் தீவு ஒன்றில் ஒளிந்து கொண்டார். அங்கே துரத்திச் சென்ற மஹிரகுலாவை சிறைப்படுத்தினார். பாலாதித்யாவின் தாயார் கேட்டுக் கொண்டதற்கிணங்க போர்க்கைதிகளெல்லாம் விடுவிக்கப்பட்டனர். மஹிரகுலாவின் தம்பி அரியணையைக் கைப்பற்றி காஷ்மீரத்தில் தஞ்சம் புகுந்தான். காஷ்மீர் மன்னரின் விருந்தோம்பலுக்கு அவன் இழைத்த நன்றிக்கடன் வஞ்சனை; மன்னரைக் கொன்று விட்டு தன்னை ஆட்சிப்பீடத்தில் அமர்த்திக் கொண்டான். பௌத்த சமயத்தை அழித்தொழிக்கும் தனது திட்டத்தை மீண்டும் துவக்கினான். ஆயிரத்து அறுநூறு மடாலயங்களையும் ஸ்தூபிகளையும் தரைமட்டமாக்கினான்; பௌத்த சமயத்தைத் தழுவியோர் ஒன்பது கோடி மக்களைக் கொன்று குவித்தான். திடீர் மரணத்தால் அவனுடைய வாழ்நாள் முற்றுப்பெற்றது”, (பக். 76&77, யுவாங் சுவாங் இந்தியப் பயணம் தொகுதி II, ஸி-யூ-கி - மொழிபெயர்ப்பு, தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன், புதுமைப்பித்தன் பதிப்பக வெளியீடு)  
    
    மஹிரகுலனின் காலம் கி.பி. 515 என்று கணிக்கப்படுகிறது. இவனைத் தோற்கடித்து விரட்டியது யசோ வர்மன் என்ற பாலாத்யன் என்ற குப்த மன்னன் என்று சொல்லப்படுகிறது. சைவத்தையும் பிராமணர்களையும் ஆதரித்த இவன் புத்த மத அழித்தொழிப்பில் பெரும்பங்கு வகித்தான் என்று சொல்லப்படுகிறது. மங்கோலிய ஹூண மன்னன் மஹிரகுலனைப் பற்றிய பல்வேறு கட்டுக்கதைகள் புனையப்படுகின்றன. இவற்றில் எது உண்மை, கற்பனை என்பதை அறிய விரிவாக ஆய்வு செய்ய வேண்டும்.

   அரசியின் மார்புக்கச்சையில் இடம்பெற்ற பாதத்தைப் பார்த்து, அது  இலங்கையிலிருந்து தருவிக்கப்பட்டது என்பதற்காக இலங்கையின் மீது படையெடுத்தான் என்கிறது ஒரு கதை. இதற்காக மட்டுமே அல்லது பவுத்த அழிப்பிற்காகவா இந்தப் படையெடுப்பு என்பதையும் எண்ணிப் பார்க்கலாம். மேலும் இவ்வளவு தூரம் சென்று இலங்கைக்குப் படையுடன் சென்றான் என்பது எவ்வளவு உண்மையாக இருக்க முடியும்? வழியில் எங்கு அவனுக்கு எதிர்ப்பே இல்லையா?

    1940 இல் பரமசிவ அய்யர் எழுதிய ‘Ramayana and Lanka’ என்ற நூல் இராமாயணக் கதை நிகழ்விடங்களை ஆய்வு செய்தது. அதன்படி ‘லங்கா’ என்பது இன்றைய இலங்கை அல்ல, விந்திய மலைகளுக்கு வடக்கே, ஆறுகளால் சூழப்பட்ட பகுதியே ‘லங்கா’ என்கிறது. அதைப்போல ஆற்றுத் தீவைத்தான் சிலோன் என்றார்களோ என்னவோ! பரமசிவ அய்யர் நூல் பற்றிய ‘சஞ்சாரம்’ முதல் இதழில் (மார்ச் 2008) வெளிவந்த அ.மார்க்ஸ் கட்டுரையைக் காண்க. (இராமன் கடந்த தொலைவு – அ.மார்க்ஸ், உயிர்மை வெளியீடு) யுவாங் சுவாங் சொன்ன பாலதித்யா ஒளிந்துகொண்ட தீவும் ‘லங்கா’ தானோ என்ற அய்யமும் எழுகிறது.

   திரும்பி வரும் வழியில் சோழ, கர்நாடக மன்னர்களை மிரட்டி ஓடச்செய்தான் என்றால் அப்போது அவனது காலத்தில் (கி.பி.515) தென்னகப்பகுதிகளை ஆண்ட மன்னர்கள் யார்? இப்படையெடுப்பு பற்றி வேறு ஏதேனும் வரலாற்று நூல்களில் குறிப்புகள் இடம்பெற்றுள்ளவா  என்பதும் தெரியவில்லை. இதுவும் கற்பனைக் கதையாக இருக்க வாய்ப்புள்ளது.  
  
    அணையை அடைத்த பாறாங்கல்லை அகற்ற ஒரு பத்தினி தொட வேண்டும் என்று அவனிடம் சொல்லப்பட்டதாம்! பத்தினிகள் என்று சொல்லிக் கொண்ட பெண்கள் தொட்டு ஒன்றும் நடக்கவில்லை. இறுதியில் ஒரு குயவரின் மனைவி தொட்டுக் கல் அகன்றதால் வெறுப்படைந்த அவன் லட்சக்கணக்கில் உயர்த்தப்பட்ட சாதிப் (பிராமணர்கள்) பெண்களையும் அவர்களது கணவன் மற்றும் குழந்தைகளையும் கொன்று குவித்தானாம்! காஷ்மீரைக் கைப்பற்றிய பிறகு யானைகளை ஒவ்வொன்றாக மலையிலிருந்து தள்ளிக் கொன்று ரசித்தான் என்றும் கதைக்கப்படுகிறது. இவற்றில் எது வரலாறு எது புனைவு என்று படிக்கும்போதே உணரலாம்.

   ஜெயபீடன் (கி.பி.750)  என்ற  அரசன் காலத்தில் திராவிட மந்திரவாதி ஏரி நீரை வற்றச் செய்த கதையும் வருகிறது. இக்கதையும் அணையை அடைத்த பாறாங்கல் கதையும் விளைச்சல் மற்றும் மேய்ச்சல் நாகரிக முரண்பாட்டைச் சுட்டுபவையாக இருக்கலாம். இவை வேதங்களிலிருந்து தொடரும் செய்திகள்தான். கல்ஹணர் தனது வாழ்கால வரலாற்றை ஓரளவு சரியாக பதிவு செய்தாலும் முற்கால வரலாற்றை வெறும் தொல்கதைகளாலும் புனைகதைகளாலும் நிரப்பிவிடுகிறார் என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும். வரலாற்றை வாசிப்போர் இவற்றை எளிமையாக விளங்கிக்கொள்ள இயலும். இவற்றைத் தாண்டி பெருமிதக் கொண்டாட்டங்களுக்கு வரலாற்றாய்வில் இடமில்லை என்பதை வலியுறுத்த வேண்டியது இன்றைய முதன்மைத் தேவையாகிறது.