ஓரணியில் திரண்டால்தான்
வெற்றி!
(நூலறிமுகம்… தொடர்: 049)
மு.சிவகுருநாதன்
(முனைவர் மு.இனியவன் எழுதி, அறிவாயுதம் பதிப்பக முதல் வெளியீடான, ‘ பீமா கோரேகான் – பேஷ்வாக்களை
வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு’
என்ற நூல் குறித்த பதிவு.)
01.01.1818 அன்று மகாராஷ்டிர மாநிலம் பூனா நகரிலுள்ள
பீமா ஆற்றின் அருகே 20,000 வீரர்களைக் கொண்ட பார்ப்பன பேஷ்வாக்களின் படையை மகர்களை
முதன்மையாகக் கொண்ட கிழக்கிந்திய கம்பெனியின் 500 பேர் கொண்ட படை வெற்றி கொண்ட
நிகழ்வு ஆண்டுதோறும் கொண்டாடுவது மகர்களின் வழக்கம். இந்த மகர்களின் நாடே
‘மாகாராஷ்டிரம்’ என்று விளக்குகிறார் நூலாசிரியர்.
பீமாகோரேகான் நிகழ்வுகளையும் மக்களையும்
ஒருங்கிணைக்கவும் ‘எள்கர் பரிஷத்’ அமைப்பு உருவானது. 2018 இல் இந்தப் புரட்சிகரக்
கொண்டாட்ட நிகழ்வில் மதவாத சக்திகளால் திட்டமிடப்பட்ட வன்முறைகள் அரங்கேற்றபட்டன.
இதில் ராகுல் பதங்கலே என்ற தலித் இளைஞர் கொல்லப்பட்டார்.
இந்த வன்முறைகளை அடுத்து மத்திய, மாநில பாசிச
அரசுகள் ‘அர்பன் நக்சல்கள்’ (Urban Naxals) என்ற
புதிய சொல்லாடல்களுடன் தங்களது வேட்டையைத் தொடங்கின. தலித் உரிமை எழுத்தாளர் சுதிர் தவாலே, மனித
உரிமைச் செயல்பாட்டாளர், வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங், பழங்குடியினர் உரிமைச்
செயல்பாட்டாளர் மகேஷ் ரவுட், பல்கலைக் கழகப் பேராசிரியர், எழுத்தாளர் திருமதி சோமா
சென், வழக்கறிஞர் ரோனா வில்சன், எழுத்தாளர், கவிஞர் வரவரராவ், மனித உரிமைச்
செயல்பாட்டாளர்கள் வெர்னான் கான்சேல், அருண் பெரைரா, தொழிற்சங்க செயல்பாட்டாளர்
சுதா பரத்வாஜ், பத்தரிக்கையாளர், குடியுரிமைச் செயல்பாட்டாளர் கௌதம் நவ்லாகா
(Gautam Navlakha) (நூலில் Navlakha - நவ்கானா என்றே குறிப்பிடப்படுகிறது.),
எழுத்தாளர், மனித உரிமைச் செயல்பாட்டாளர் ஆனந்த் டெல்தும்டே ஆகியோர் மீது
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில்
வழக்குத் தொடர்ந்து பிணையின்றி நீண்ட காலமாக சிறைவைத்துள்ளது.
இவர்களது வீடுகள் சோதனையிடப்பட்டன.
குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் அச்சுறுத்தப்பட்டனர். அம்பேத்கரின்
பேரர் பிரகாஷ் அம்பேத்கரையும் எப்படியாவது வழக்கில் சிக்க வைக்க முனைந்தனர். அவரது
மைத்துனர் ஆனந்த் டெல்தும்டேவை ‘ஆனந்த்’ என்று குறிப்பிடப்படும் நபர் எனச் சொல்லி
வழக்கில் இணைத்தது.
இவர்களது கைதையும் காவல்துறையின்
அத்துமீறல்களையும் செய்தி ஊடகங்களின் வரம்பு மீறிய தன்மையையும் மிகக் கடுமையாகச்
சாடினார் உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட். இந்த முறையற்ற கைது நடவடிக்கைகளை
உலகமெங்கும் இருக்கின்ற ஜனநாயக, குடியுரிமைப் போராளிகள் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
எழுத்தாளரும் வரலாற்று அறிஞருமான ரொமிலா
தாப்பர், பொருளாதார நிபுணர்கள் பிரபாத் பட்நாயக், தேவகி ஜெயின், சமூகவியல்
பேராசிரியர் சதீஷ் தேஷ்பாண்டே, மனித உரிமை வழக்கறிஞர் மஜா தர்வாலே ஆகியோரடங்கிய
குழுவினர் முறைகேடான இந்தக் கைதுகளை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை
அமைக்க உச்சநீதிமன்றத்திடம் கோரியபோது, மூவர் அடங்கிய அமர்வு இக்கோரிக்கையை
நிராகரித்தது. அரசின் பழிவாங்கலை நீதிமன்றமும் கண்டுகொள்ளாமல் வேடிக்கைப்
பார்க்கும் அவலநிலை நீதித்துறை மீதான நம்பிக்கைகளையும் இன்று தகர்த்திருக்கிறது.
கௌதம் நவ்லாகா, ஆனந்த் டெல்தும்டே ஆகியோரது
பிணையை ரத்து செய்த நீதிமன்றம் ஏப்ரல் அம்பேத்கர் பிறந்த நாளான்று மீண்டும்
சிறைக்கு அனுப்பியுள்ளது. கோவை தீண்டாமைச் சுவர் குற்றவாளிக்கு பிணை வழங்கியதை
நியாயப்படுத்திய நீதிமன்றம் இவர்களது பிணையை ரத்து செய்திருப்பது
குறிப்பிடத்தகுந்தது.
இந்நிலையில் இந்நூலாசிரியர் முனைவர்
மு.இனியன், ஆதவன், பொறியாளர் செந்தில், சி.வெண்மணி, இரா. ஆறுச்சாமி போன்ற
திராவிடத் தமிழர் கட்சித் தோழர்கள் 2019 இல்
பீமாகோரேகான் சென்று, அந்நிகழ்வைக் கண்டு, சூழலை மட்டும் வெளிப்படுத்தும் பயண
நூலாக மட்டும் அமையாமல் அதன் வரலாறு, தலித் எழுச்சியில் அதன் பங்கு, இன்றைய
அரசியல் கள நிலவரங்கள் என அனைத்தையும் விரிவாக இந்நூல் ஆய்வுக்கு எடுத்துக்
கொள்கிறது. முன்னுரை, இரு அணிந்துரைகள், 11 கட்டுரைகள், பின்னிணைப்பாக அம்பேத்கர்
நூல் தொகுப்பிலிருந்து (தொகுதி 37) ‘மாபெரும் போராட்டம்’ என்ற 1927 ஆம் ஆண்டு
கோரேகான் நினைவுக் கட்டுரையும் சில படங்களும் இந்நூலில் இடம் பெறுகின்றன.
பேஷ்வாக்களின் ஆட்சியில் மகர்கள் மீது
கடைபிடிக்கப்பட்ட தீண்டாமை குறித்து அண்ணல் அம்பேத்கர் இவ்வாறு கூறுகிறார்.
“மராட்டிய நாட்டில் பேஷ்வாக்களின் ஆட்சியில்,
இந்துக்கள் தெருவில் வரும்போது, தீண்டப்படாதவர் அத்தெருவில் நடமாடக் கூட அனுமதிக்கப் பட்டதில்லை; ஏனென்றால்
அவர்களது நிழல் பட்டால் கூட இந்துக்களுக்குத் தீட்டு ஆகிவிடுமாம். இந்து ஒருவர்
தவறாகக் கூடத் தம்மைத் தொட்டுத் தீட்டு ஏற்படுத்திக் கொள்ளவும் நேரக்
கூடாதென்பதற்காகத் தீண்டப்படாத மக்கள் தமது மணிக்கட்டிலோ, கழுத்திலோ கருப்புச் சரடு
அணிந்து தம்மை அடையாளம் காட்டிக் கொள்ள வேண்டும்.
பேஷ்வா
தலைநகரான புனாவின் தெருக்களில் தீண்டப்படாதவர்கள் வரும்போது தங்கள் இடுப்பில் ஒரு
துடைப்பத்தைக் கட்டிக் கொண்டே வரவேண்டும்; தங்கள் காலடி பட்ட மண்ணைப் பெருக்கி
அப்புறப்படுத்திக் கொண்டே செல்ல வேண்டும்; ஏனெனில் அம்மண் மீது நடக்க நேரிட்டால்
கூட இந்துக்களுக்குத் தீட்டு ஏற்பட்டு விடுமாம், மேலும் புனாவில் எங்கு சென்றாலும்
தமது கழுத்தில் ஒரு மண்பாண்டத்தைக் கட்டிக் கொண்டுதான் செல்ல வேண்டும். எச்சில்
துப்புவதெனில் அதில்தான் துப்ப வேண்டும். தெருவில் துப்பினால் அதன் மீது கால்பட
நேரும் இந்துக்கள் தீட்டுக்குள்ளாவராம்”. (பக்.155)
இத்தகைய கொடுமைகளைச் செய்த பேஷ்வாக்களையும்
சாதி இந்துக்களையும் பழிதீர்க்க கிடைத்ததுதான் கிழக்கிந்திய கம்பெனிக்கு ஆதரவாகப்
போரிட்டு, பீமா கோரேகான் வெற்றிக்குப் பின் ஆட்டம் கண்ட பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் ஜூன் 03,
1818 கம்பெனியிடம் சரணடைந்தார். இந்தப் போர் வெற்றிக்கு பேஷ்வாக்களின் மீதிருந்த ஆதிக்க
வெறுப்புணர்வு தலித்களுக்கு மட்டுமல்லாது ஆங்கிலேயர்களுக்கு வெற்றித்
தேடித்தந்தது.
சிவாஜி சூத்திரர் என்பதால் பட்டம் சூட மறுத்தல்,
வேறு வழியின்றி அவருக்கு மீண்டும் பட்டம் சூட்டுதல், சிவாஜிக்கு பிந்தைய
பேஷ்வாக்களின் பார்ப்பனீய ஆட்சியின் ஒடுக்குமுறைகள் ஆகியன நூலில் விரிவாக
எடுத்துக் கூறப்படுகின்றன. தோல்வியை ஏற்க மறுக்கும் இந்துத்துவத்தால், தலித்களின்
அணிசேர்க்கையும் தங்களது முந்தைய தோல்வியை நினைவூட்டுவதையும் பொறுக்க இயலவில்லை.
எனவே ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவாரங்கள் வன்முறைகளைத் திட்டமிட்டு உருவாக்கின.
மையத்திலும் மாநிலத்திலும் ஆட்சியதிகாரத்திலுள்ள இந்துத்துவ சக்திகள் இந்த
வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டன.
கோரேகானுக்கு இப்படியொரு அடையாளமிருப்பதை அவர்கள் முற்றிலும்
விரும்பவில்லை.
இந்த நினைவுத்தூணில் காணப்படும் 22
மகர்களின் பட்டியலும் மொகலாயர்களால் கொல்லப்பட்ட மராட்டிய மன்னர் சாம்பாஜியின்
உடலை மீட்டு இறுதிச்சடங்குகள் செய்த
கோபால் கோவிந்த் கெயிக்வாட் (மகர்) என்பதையும் பார்ப்பனீயத்தால் உள்வாங்க இயலவில்லை. கோபால் கோவிந்த் கெயிக்வாட் நினைவிடத்
தீண்டாமையையும் நாம் இவ்வாறே அணுக வேண்டியுள்ளது.
“உங்களது பார்வையில், செயலில் சாதித் தீண்டாமை
இருக்கும் வரை, சக மனிதனை சாதியின் பெயரால் நீங்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும்
வரையில், பாலின சமத்துவம் இல்லாத, வர்க்க முரண்பாடுகள் நிறைந்த நாட்டில்,
ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களது வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டுள்ள புரட்சியாளர்
அம்பேத்கர், தந்தை பெரியாரின் வழியில் மார்க்சியப் பாதையில் விடுதலைக்கான
அறைகூவலாக ஆயிரம் ஆயிரம் பீமா கோரேகான் போரைச் சந்தித்து முழுமுனைப்போடு சாதியத்தை
வீழ்த்தும் காலம் வெகுதொலைவில் இல்லை”, (பக்.134) என்ற நம்பிக்கையோடு நூல்
முடிகிறது. பார்ப்பனிய கருத்தியலையும் சாதியத்தையும் வீழ்த்தி, சமவுரிமைச்
சமுதாயம் அமைய ஒடுக்கப்பட்ட மக்கள், முற்போக்குவாதிகள், சமதர்மவாதிகளின்
ஒன்றுகூடல் முன்மொழியப்படுகிறது. நல்ல யோசனைதான். ஆனால் இந்தச் சக்திகளனைத்தும்
சிதறிக் கிடக்கின்றனவே! ஒரே கொள்கைகளுக்காக எவ்வளவு அமைப்புகள்! எத்தனைத்
தலைவர்கள்!! கருப்பு, நீலம், சிவப்பு ஆகிய மூன்றையும் ஒன்றிணைத்து, போராட்டக்
களமும் தளமும் விரிவடையாத வரையில் நமக்கான விடுதலை சாத்தியமில்லை என்பதை அனைவரும்
உணர்வது எந்நாளோ?
“அண்மைக்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களிடையே தங்களுடைய தொன்மைக்காலப் பெருமிதங்களை
மீட்டுருவாக்கம் செய்யவேண்டும் என்ற சிந்தனை மேலோங்கியிருக்கிறது. அக்காலத்தில் கடவுளராக,
அரசர்களாக, போர்ப் படைத் தளபதிகளாக, அதிகாரமிக்க ஆட்சியாளர்களாக இருந்த வரலாறுகளை நினைவு
கூறுவதன் மூலம் மக்களை கிளர்ந்தெழச் செய்துவிடமுடியும் என்று கருதுகிறார்கள். இந்நூல்
எழுதப்படுவதற்கும் அது ஒரு காரணமாக இருக்கக்கூடும்”. (…)
“கொண்டாடப்பட வேண்டிய பெருமிதங்கள் எவை? ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களிடையே
இருந்த – இருக்கும் சமத்துவமிக்க பண்பாடே நாம் போற்றத்தக்கவையாக இருக்க முடியும்; ஆட்சிகளும்
அதிகாரங்களும் அல்ல. இந்த மண் சமத்துவ மண்ணாகப் பரிணமித்ததற்கு – பவுத்தம் ஆயிரம் ஆண்டுகளுக்கு
மேல் செழித்தோங்கியதற்கு (ஆட்சி அதிகாரத்தில் அல்ல.) பவுத்தர்களாகிய நாம் தான் காரணமாக
இருந்தோம்”, என்று அணிந்துரையில் ‘தலித் முரசு’ புனிதப் பாண்டியன் குறிப்பிடுகிறார்.
வெறும் பெருமிதக் கொண்டாட்டங்கள் விடுதலைக்கான
வழிகளை அடைப்பதோடு ஒருவிதத்தில் அதன் சாத்தியப்பாட்டையும் மறுக்கவும் செய்கின்றன. எனவே
பெருமிதத்தில் கரைதல் குறித்த எச்சரிக்கை உணர்வும் அவசியம். மக்களைத் திரட்டுவதற்கு
ஓர் அடையாளமாக, அதுவும் எச்சரிக்கையுடனும் பயன் படுத்தப்பட வேண்டும்.
சரியாகச்
சொல்லித் தரப்படாத வரலாற்றின் சில பக்கங்களை எடுத்துக் காட்டியிருப்பதும், அதன் அரசியலை
உரிய முறையில் அணுகியிருப்பதும் இந்நூலின் சிறப்பாகும்.
நூல் விவரங்கள்:
பீமா கோரேகான் – பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு
முனைவர் மு.இனியவன்
வெளியீடு:
அறிவாயுதம் பதிப்பகம்
முதல் பதிப்பு: ஜூலை 2019
பக்கங்கள்:
162
விலை: ₹ 120
தொடர்பு முகவரி:
அறிவாயுதம் பதிப்பகம்,
கதவு எண் 1, சாஸ்திரி வீதி எண்
4,
கல்லூரிப்புதூர்,
கோயமுத்தூர் – 641041.
அலைபேசி:
9487412854, 9384299877, 9865852212
மின்னஞ்சல்: arivayuthamcbe@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக