வெள்ளி, அக்டோபர் 15, 2021

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதேயில்லை!

 

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதேயில்லை!

 

மு.சிவகுருநாதன்


 

 

      ஆசிரிய இயக்கங்களின் கோரிக்கைகளை கருணையுடன் பரிசீலித்து 16/10/2021 சனியன்று விடுமுறை அளித்து தமிழக பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ஆயுதபூசை, தீபாவளி விடுமுறைகளுக்காக மனுபோடும் நிலையில் ஆசிரிய இயக்கங்கள் இருப்பது மிகவும் பரிதாபகரமானது.

 

     எத்தனை சனிக்கிழமை பள்ளி நடத்தினாலும் பொதுமுடக்க இழப்பை ஈடு செய்ய இயலாது. எனவே தற்போது பள்ளிக்கு வருகின்ற 9, 10, +1 மற்றும் +2 மாணவர்களுக்கு வார விடுமுறை இரண்டு நாள்கள் அளிப்பதால் ஒன்றும் குடிமூழ்கிவிடாது. மாறாக குழந்தைகள் கற்றல் செயல்பாட்டில் ஆர்வமாக ஈடுபட இது வழிவகுக்கும்.

 

    சனிக்கிழமை வேலை நாள் என்பதையும் தாண்டி அன்று ஆன்லைன் தேர்வும் நடக்கிறது. அன்று வருகைப் பதிவு குறைவாக உள்ளது. அடுத்த வாரத்தில் அந்தத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

 

    ஆசிரியர்களுக்கு விடுமுறை வேண்டுமா, வேண்டாமா என்பதெல்லாம் விவாதத்திற்குரியது. ஆனால் குழந்தைகளுக்கு விடுமுறை அவசியம். இப்போது பள்ளிக்கு வரும் மாணவர்களை அதிக நேரமும் சனிக்கிழமைகளும் அடைத்து வைத்து கல்வியை, அறிவைத் திணித்துவிட இயலாது.

 

     காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் இல்லையென்று பள்ளிக் கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். குழந்தைகளிடம் தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டாம் என்ற நல்ல நோக்கம் இதில் இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆனால் மாணவர்களுக்கு வழக்கமான சனி விடுமுறை கூடாது என்பது அநீதியானது மட்டுமல்ல; வன்முறையும் கூட.

     இவ்வாண்டின் தொடக்கத்தில் ஜனவரி 19 முதல் ஏப்ரல் முடிய இன்றுபோல் அன்றும் 9,10,+1 மற்றும் +2 வகுப்புகளுக்கு மட்டும் பள்ளி நடைபெற்றது. ஒவ்வொரு சனியும் பள்ளி. ஏப்ரல் இறுதியில் மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரத்தேவையில்லை என்றார் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. பின்னர் தொற்றுப் பரவல் அதிகமாகி பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

 

    மக்களாட்சியின் பயனாக ஆட்சிகள் மாறுகின்றன. ஆனால் காட்சிகள் மாறுவதேயில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக