நவதாராளவாதம் எனும் பொருளாதார அடிமைமுறை
மு.சிவகுருநாதன்
பேரா.அ.மார்க்ஸ் அவர்கள் தமிழ்ச்சூழலில் நன்கறியப்பட்ட மார்க்சிய அறிஞர். இலக்கியம், அரசியல், மார்க்சியம், தலித்தியம், பெரியாரியம், அம்பேத்கரியம், காந்தியம், பின்நவீனத்துவம், அடித்தள ஆய்வுகள், பவுத்தம், இஸ்லாம், மனித உரிமைகள், கல்வி எனப் பல்வேறு களங்களில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வருபவர்.
இவரின் நவதாராளவாதம் (Neoliberalization) குறித்த அறிமுகநூல் ஒன்றை எழுத்து பிரசுரம் (ஜீரோ டிகிரி பப்ளிஷிங்) வெளியிட்டுள்ளது. நவதாராளவாதததைக் கடுமையாக விமர்சிக்கும் இடதுசாரிச் சிந்தனையாளர்களின் ஆங்கிலக் கட்டுரையை அப்படியே மொழிபெயர்க்காமல் இந்திய, தமிழ்ச்சூழலுக்கேற்ற எடுத்துக்காட்டுகள், கூடுதல் செய்திகளுடன் எழுதியிருக்கிறார். இந்நூலில் இடம்பெற்றுள்ள 12 கட்டுரைகள், முன்னுரை ஆகியன நவதாராளவாதம் பற்றிய புரிதலை மட்டுமல்லாது நாம் எதிர்கொண்டுவரும் ஆபத்துகளையும் ஒருசேர விளக்குகிறது. இவற்றில் வால் ஸ்ட்ரீட் போராட்டம், இந்துத்துவமும் நவதாராளவாதமும் போன்ற கட்டுரைகளும் இருக்கின்றன. ராப் லார்சன், நதன் ஆர் ராபின்சன், ருட்கார் ப்ரெக்மான், எலிசபத் ஆண்டர்சன், ஜோஜப் ஸ்டிக்லிட்ஸ், சோமஸ் ஹா, கேபி கண்ணன், ஜி.ரவீந்திரன் போன்றோரின் கட்டுரைகள் இந்த ‘சுதந்திரமான’ மொழிபெயர்ப்பில் இடம்பெறுகின்றன. கட்டுரைகளில் சொல்லப்படும் அடிப்படைக் கருத்துகள் அவர்களுடையவை என்பதை முன்னுரையில் சொல்லி விடுகிறார்.
பொதுவாக பொருளியல் சார்ந்த எழுத்துகள் படிப்போரிடத்தில் பெருமளவு ஈர்ப்பை ஏற்படுத்துவதில்லை. சலிப்பூட்டக்கூடிய பாடமாகவே கல்விப்புலத்திலும் அணுகப்படுகிறது. அந்தச் சலிப்பை இந்த சுதந்திரமான மொழிபெயர்ப்பும் அ.மா.வின் இடையீடுகளும் போக்குகின்றன என்றே சொல்ல வேண்டும். நேரடி மொழிபெயர்ப்பாக இருந்தால் பரந்த வாசகப் பரப்பிற்குள் செல்ல முடியாமல் போக வாய்ப்புண்டு.
மார்க்சியம், மாவோயிசம், பொதுவுடைமை இயக்கங்களின் நடைமுறைகள், தோல்விகள், ஆகியவற்றை விமர்சிக்கும் ‘மார்க்சியத்தின் பெயரால்…’ என்ற நூல் ஒன்றை அ.மார்க்ஸ் எழுதியிருந்தார் (1994, விடியல் பதிப்பகம்). கொரோனாப் பெருந்தொற்றுக் காலத்தில் கடந்த 40 ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தைக் கொட்டிச் சீராட்டி வளர்க்கப்பட்ட முதலாளிய நவதாராளவாதம் ஆட்டம் கண்டுள்ளது. இதற்கு மாற்றாக என்றும் விளங்கக்கூடிய மார்க்சிய, சோசலிசக் கட்டுமானங்களை வளர்த்தெடுக்க வேண்டிய அவசியத்தைத் தற்போது பலரும் உணர்ந்துள்ளனர்.
அன்று சோசலிச அரசுகளின் வீழ்ச்சியில் பெற்ற படிப்பினைகளிலிருந்து மார்க்சியத்தை மேலும் வளர்த்தெடுக்க வேண்டியிருந்து. இன்று நவதாராளமயச் சீரழிவிலிருந்து உலகைக் காப்பாற்ற மார்க்சியப் பாதையின் உதவியை நாட வேண்டியுள்ளது. மொத்தத்தில் மார்க்சியத்தின் பாதையை மேலும் செழுமைப்படுத்துவது ஒன்றே இந்த இரண்டு நூல்களின் நோக்கமாக உள்ளது.
இன்னும் கூட தாராளமய ரசிகர் கூட்டம் ஒன்று இருக்கிறது. பொருளியல் ஆலோசகர்கள் அறிஞர்களாக உருமாறி முதலாளியத்திற்குச் சேவகம் செய்கின்றனர். முற்றிலும் இவற்றை மட்டுமே பார்த்து வளர்ந்து புதிய தலைமுறை வேறு உருவாகியுள்ளது. கட்டுப்பாடற்ற சந்தைகள்தான் எல்லாருக்குமான பொருளாதார வளத்தை அளிப்பதற்கான உறுதியான வழி என்கிற நவதாராளவாதத்தின் அடிப்படை நம்பிக்கை கேள்விக்குள்ளாகி உள்ளதையும் ஜனநாயகத்தின் வேர்களை கடந்த 40 ஆண்டுகளில் நவதாராளவாதம் அறுத்துள்ளதையும் இந்நூல் பதிவு செய்கிறது. ஜனநாயகத்தை மீண்டும் மலரவைக்க நீண்ட போராட்டங்கள் தேவைப்படுகின்றன.
சுதந்திரச் சந்தைகள் தோற்றுப்போனதை 2008 உலகப் பொருளாதார நெருக்கடி உணர்த்தியது. இதை நாம் உணராமலிருந்தாலும் காலநிலை மாற்றத்தால் உருவாகும் நெருக்கடிகள் நம்மை விழிப்படைய வைக்கும். நவதாராளவாதிகள் இந்த எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளவில்லையென்றால் அழிவு உறுதி. அறிவொளிக்காலச் சிந்தனைகளை இன்னும் விறுபடுத்துவதும் சுதந்திரம், அறிவின் ஆற்றல், ஜனநாயக மதிப்பீடுகள் ஆகியவற்றிற்கு நாம் நம்மை மீண்டும் அர்ப்பணித்துக்கொள்வதும்தான் நம் உலகையும் நம் காலப் பண்பாட்டையும் காப்பாற்றுவதற்கான ஒரே வழி என்ற திசைகாட்டல் இந்நூலில் உள்ளது.
கொரோனாப் பெருந்தொற்றுகூட நம்மை விழிப்படையச் செய்திருக்கிறது. பெருந்திரள் மக்கள் தொகுதிக்கு சரியான மருத்து நலம் அளிக்கும் திறன் இல்லை என்பதும் சோசலிசக் கட்டுமானங்கள் எஞ்சியுள்ள நாடுகள்தான் இத்தகைய அவசரநிலையைச் சாமாளிக்கும் திறன் பெற்றவையாக உள்ளதையும் நாம் கண்டு வருகிறோம். இன்று கொரோனாவை எதிர்கொள்ள ஸ்பெயின் தனது நாட்டிலுள்ள தனியார் மருத்துவமனைகளை அரசுடைமையாக்கியுள்ளதைச் சுட்டிக்காட்டி உலக வளங்களைச் சமமாகப் பகிர்ந்தளிக்க பொதுக்கட்டுப்பாடான சமத்துவ அமைப்பின் தேவையை மற்றொரு கட்டுரை வலியுறுத்துகிறது.
தனியார் நிறுவனங்களின் பணித்தளங்கள் என்பவை குட்டி முதலாளிய தனியார் அரசாக உருவெடுத்துள்ளதை எலிசபத் ஆண்டர்சன் நேர்காணலைத் தழுவிய கட்டுரை விளக்குகிறது. அரசு மட்டும் நம்மை ஆளவில்லை. முதலாளிகள் அல்லது தொழில் முகமைகள் என தொழிலாளர்கள் மீது ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் செலுத்துகின்றன. இது வெறும் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டல் மட்டுமல்ல; அவர்களது கண்ணியம், தனித் தன்மை போன்றவையும் பறிபோகின்றன. பணிக்களம் இப்படித் தனியார் அரசாக இல்லாமல் தொழிலாளிகளால் ஆளப்படும் பொது அரசாக அமைந்து, அவர்களது நலமும் குரலும் மதிக்கப்பட வேண்டும் என்கிற ஆவலை வெளிப்படுத்துகிறது.
முழுதும் மக்கள் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் வழியே கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பங்கள், மருந்துகள், தடுப்பூசிகள் முதலியவற்றைக் கொண்டு லாபம் குவிப்பவை தனியார் நிறுவனங்கள். இந்நிலை மாறவேண்டும். “வரலாற்றை மாற்றுவது ஒன்றும் எளிதான காரியமல்ல; ஆனால் அது சாத்தியமானதே”, என்ற ஹெலன் லூயிஸ் எழுதிய ‘Difficult Women’ நூலின் கருத்துகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.
பெரும்பான்மை மக்கள் சுயநலமிக்கவர் என்பதே நவதாராளவாதத்திற்கு ஆதரவான வறட்டுத் தத்துவம். அவர்களின் தலையாயக் கொள்கை தனியார்மயத்தின் விளைவாகத் தோன்றும் சமத்துவமின்மை, பொதுப்புலத்தின் சிதைவு எல்லாமே மானுட வெறுப்பிலிருந்தே கிளைக்கின்றன. ஆனால் ஒருவருக்கொருவர் உதவி செய்வது வாழும் கூட்டு வாழ்க்கையே மானுடத்தின் அடிப்படை நெறி. நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவாவதே அரசு. மானுட ஒற்றுமை, கூட்டு வாழ்க்கை ஆகிவற்றின் அடிப்படையில் உருவாவதே வரி வசூல் அமைப்பு மற்றும் பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்வதற்கான முதலீடுகள் என்பதை ‘முதலாளித்துவ தாராளவாதத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்’ என்ற கட்டுரை எடுத்துக்காட்டுகிறது. கார்பொரேட்கள் மற்றும் பெருமுதலாளிகளுக்கு எதிரான வலிமையான அரசு (Big Government) என்ற கருத்தாக்கத்தை ருட்கர் ப்ரெக்மான் வலியுறுத்துவதை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியத்தையும் அவ்வரசு மக்களுக்கு எதிரானதாக மாறாதிருக்க வேண்டும். வலிமையற்ற அரசு என்கிற மாற்றுக் கருத்தாக்கத்தை ‘அனார்க்கிஸ்ட் சிந்தனையாளர்கள்’ முன்வைப்பதையும் இதனுடன் பொருத்திப் பார்ப்பது அவசியம் என்பதையும் அ.மார்க்ஸ் எடுத்துக்காட்டுகிறார்.
உண்மையான் சுதந்திரம் முதலாளியத்தில்தான் சாத்தியம். சந்தை அந்த உத்தரவாதத்தை அளிக்கிறது என்பன போன்ற இன்றைய முதலாளியக் கருத்துகள் எவ்வளவு அபத்தம் என்பதை ‘மார்க்சியமும் சுதந்திரம் எனும் கருத்தாக்கமும்’ என்று கட்டுரை விரிவாக அலசுகிறது. “என்னுடைய பிரச்சினையில் தலையிடாமையோ அல்லது நான் தொந்தரவு செய்யப்படாமையோ சுதந்திரமல்ல. அவை எதிர்மறைச் (-ve) சுதந்திரம். நான் விரும்பும் எதையும் எந்தத் தடையும் இல்லாமல் செய்வதற்கான உரிமையும் வாய்ப்பும் இருப்பது என்பதே உண்மையான (+ve) சுதந்திரம்”, என்பதையும் இக்கட்டுரை விளக்குகிறது.
முதலாளித்துவம் தொழிலாளர்களுக்கும் சரி நுகர்வோருக்கும் சரி என்றுமே சுதந்திரத்தை அளிக்காது. ஏதேச்சதிகாரமான பணிச்சூழலையும் அம்பானி, அதானி போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய கொடூரமான கார்பொரேட் கோடீஸ்வரர்களை மட்டும் அது உருவாக்கும் என்பதை நேரில் கண்டுணர்வதையும் சுட்டுகிறது.
மூலதனம் என்பது இப்போது சமூகத்தின் சிறு கும்பலிடம் பெரிய அளவில் சேர்ந்துள்ளது. அமெரிக்காவில் 10 பெரும் பணக்காரக் குடும்பங்கள் அந்நாட்டின் மொத்தச் சொத்தில் 70% ஐ குவித்துள்ளன. 1% குடும்பங்கள் 35% சொத்துகளை முடக்கியுள்ளதை தாமஸ் பிக்கெட்டியின் ஆய்வுகள் மூலம் வெளிப்படுவது குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவிற்கும் பொருந்தக்கூடிய பெரு உண்மையாகும்.
“சுதந்திரம் குறித்த மொழியை வலதுசாரிகளிடம் இடதுசாரிகள் விட்டுவிட முடியாது. விட்டுவிடவும் கூடாது. முதலாளித்துவத்தின் மீதான விமர்சனம் முக்கியம். ஆனால் அதுவே போதுமானதும் அல்ல. சோசலிசத்தின் ஊடாக மாற்றங்களை உருவாக்கும் சாத்தியத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். “உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள்”, எனும் மார்க்ஸ் எங்கெல்சின் முழக்கம் அவர்களின் காலத்தைக் காட்டிலும் இப்போது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதை நாம் கவனிக்கத் தவறக் கூடாது என்று இக்கட்டுரை முடிகிறது.
சீனா பற்றி வெளியுலகில் உற்பத்தி செய்யப்படும் கற்பிதத்தை உடைக்கிறது ஒரு கட்டுரை. சீனாவிலுள்ள பெரும்பான்மைத் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் ஆங்காங்குள்ள அரசு அமைப்புக்குச் (local governments) சொந்தமாக இருப்பதும் உள்ளூர் அரசமைப்புகளே நிர்வாக அமைப்புகளை ஏற்படுத்தி அவற்றைக் கட்டுப்படுத்துவதும் சுட்டப்படுகிறது. தொழிலகங்களுக்குத் தேவையான நிலத்தை இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ ஒதுக்கப்படுகின்றன. அவை உள்ளூர் அரசுக்கு வேலைவாய்ப்புகளை ஒதுக்குவதன் வழி உள்ளூர் ஊழியர்கள் பணி வாய்ப்பைப் பெறுகின்றனர். வரி மற்றும் பங்குத் தொகைகளையும் (dividend) அரசுகள் பெறுகின்றன. சீனா போன்ற ஜனநாயகமற்ற அமைப்புகளை சோசலிசம் என ஏற்பதில் தயக்கம் இருந்தபோதிலும் இன்னும் அங்கு 1,50,000 தொழில் முனைவுகள் அரசுக்குச் சொந்தமாக இருப்பது ‘உற்பத்திச் சாதனங்கள்’ (means of production) பொதுவாக இருப்பதற்கானச் சான்றாகிறது.
இந்தியப் பொருளாதார வளர்ச்சி வீகிதம் எதிர்மறையில் (-) உள்ளது. இதற்கான காரணங்களாக கொரோனாவை மட்டும் சொல்லி தப்பித்துவிட இயலாது. இதற்கு முன்னதாகவே சரக்கு மற்றும் சேவைவரி, பணமதிப்பிழப்பு போன்றவை பொருளாதாரத்தை வெகுவாக சீர்குலைத்தன. இந்த நிலைக்கு நவதாராளவாதக் கொள்கைகள், வெறுப்பரசியல் ஆகியவற்றின் பங்கும் முதன்மையானதாகும்.
ஒரு தொழிலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் ‘இது நமது நிறுவனம்’ என்ற நன் நம்பிக்கை கொண்டிருந்தால் அவர்களின் தொழில்திறன் 56% அதிகரிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. மதவெறுப்பைத் தூண்டிவிடல், சிறுபான்மை மக்களை ஓரங்கட்டுதல் ஆகியவற்றின் ஊடாக மக்களிடையே பிளவை உருவாக்கும் அரசியல் கடந்த ஏழாண்டுகளாக உச்சத்தில் இருப்பது, இந்திய மக்கள் அந்நியப்படுவதற்கும் நம்பிக்கை இழப்பதற்கும் காரணமாகியுள்ளது. இதுவும் பொருளாதாரம் வீழ்ச்சியடைய முக்கியக் காரணம் என்று ஒரு கட்டுரை பேசுகிறது.
கொரோனாப் பெருந்தொற்று, பொதுமுடக்கம் ஆகியவை காரணமாக இந்தியாவிலும் தமிழகத்திலும் வேலையிழப்புகள் உச்சம் தொட்டன. 122 மில்லியன் ஊழியர்கள் வேலையிழக்க நேரிட்டது. இதில் 75% ஊழியர்கள் சிறு வணிகர்கள் மற்றும் கூலி உழைப்பாளிகள். இதில் கல்வித்தகுதியில் குறைவான அதிகம் பேர் பாதிக்கப்பட்டனர். நவதாராளவாத அணுகுமுறைக்கு இதெல்லாம் பிரச்சினைகளே அல்ல. “சந்தை எப்படிப் பார்த்துக் கொள்ளும்” என்பதை நாம் உணரத் தொடங்கியுள்ளதை அ.மா. குறிப்பிடத் தவறவில்லை.
சோசலிசம் என்றால் எல்லோரும் நினைப்பதுபோல திட்டமிட்டப் பொருளாதாரம் அல்லது பொருளாதாரத்தை அரசு கட்டுப்படுத்துவது என்பதல்ல. சோசலிசம் என்பதற்குப் பதிலாக ‘பொருளாதாரத்தின் மீதான தொழிலாளர் கட்டுப்பாடு’ என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். சரியாக வடிவம், மக்கள் பங்கேற்பு என்பதற்கும் அப்பால் ‘சோசலிச அறம்’ ஒன்றை உருவாக்க வேண்டும் என்கிறார். இந்த அறநிலையில் இன, சாதி, மத வேறுபாடுகள், மரணதண்டனை, UAPA போன்ற கொடுஞ்சட்டங்கள், கொள்ளையடித்தல், சுரண்டல்கள், மக்களின் அந்தரங்களைத் துருவுதல், சுற்றுச்சூழலை நாசமாக்குதல், பொதுச்சொத்துகள் அபகரிப்பு போன்ற நிலைப்பாடுகளுக்கு இடமில்லை.
முதலாளியத்தின் தோல்விகளை வெளிச்சம் போட்டுக் காட்டி அவர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றியது வால் ஸ்ட்ரீட் அமர்வு. வழக்கமான வடிவங்களைப் பின்பற்றாமல் புதிய சிந்தனைகளை ஏற்படுத்தியதும் அதன் வழியே முதலாளியத்தை அம்பலப்படுத்தியதும் உடனடியான பெரிய வெற்றிகள் ஏதும் இல்லாதபோதும் கொண்டாட வேண்டிய ஒன்றாக அமைந்தது எடுத்துக்காட்டப்படுகிறது.
சுதேசி முழக்கங்களைக் களைந்துவிட்டு இந்துத்துவம் நவதாராளவாதத்திற்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளது. மத்தியதர வர்க்கம் வீங்கிப் பெருத்துள்ள (15%) நிலையில், வறுமை ஒழிப்பு, இட ஒதுக்கீடு, தொழிற்சங்க உரிமைகள் எதிலும் ஆர்வம் காட்டாத இவர்கள் பாசிச சக்திகளை ‘மாற்று’ என்று கருதி ஏற்கும் மனநிலை இருப்பதும் இந்துத்துவம் ஆட்சியதிகாரத்திற்கு வரக் காரணமாகிறது. பொருளாதரம், மதச்சார்பின்மை, ஜனநாயகம் மூன்றிலும் ஏற்பட்டுள்ள வலது திருப்பம் குறித்த கவலையும் எச்சரிக்கையும் வெளிப்படுத்தபடுகிறது.
கார்பொரேட் ஊழியம் வெகு சிலருக்குப் பொருளாதாரத் தன்னிறைவையும் மேம்பட்ட சமூக நிலையையும் தந்திருக்கலாம். ஆனால் அற மதிப்பீடுகள் பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளன. நமது உளவியலில் பெருத்த மாற்றங்களை உண்டு பண்ணியிருக்கின்றன. ஆக, இன்றைய நமது பொருளாதார அமைப்பு நமக்குள் இருக்கும் மோசமான பண்புகளை வெளிக்கொணர்வதாக உள்ளதை மதிப்பிடுகிறது.
கார்பொரேட்களின் ஊழல்கள், அடாவடிகள், முறைகேடுகள் எண்ணிடங்காதவை. அரசுத்துறைகளின் நிர்வாகம் ஊழலில் திளைப்பதாகச் சொல்லும் கார்பொரேட் ரசிகர்கள் இதுகுறித்து வாய்திறக்க மாட்டார்கள். தனியார் மய உலகில் அறமதிப்பீடுகளுக்கு இடமில்லை. அதற்குப் பதிலாக புதிய கார்பொரேட் கலாச்சார உத்திகள் முன்நிறுத்தப்படுகின்றன. நிறுவன ஊழியர்களின் தனிநபர் சுதந்திரம், உரிமைகள் பறிபோவதையும் இந்நூல் கட்டுரைகள் அம்பலப்படுத்துகின்றன.
தனியார்மய ஆதரவாளரும் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநருமான ரகுராம் ராஜன் பணமதிப்பிழப்பு, சரியாக அமல்படுத்தப்படாத சரக்கு மற்றும் சேவை வரி போன்ற ஒன்றிய அரசின் தவறான நடவடிக்கைகள் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகத்தைக் குறைத்து விட்டதாகக் குற்றஞ்சாட்டுகிறார். பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கக் கூடாது. பொதுவாகக் கட்டுப்பாடுகள் இல்லாமல் பொதுத்துறைகளைத் தனியாரிடம் ஒப்படைத்தால் அவை பொதுமக்களிடமிருந்தே பணத்தைப் பிழிந்தெடுக்கும். அனைத்தையும் தனியார் மயமாக்குவதற்குப் பதிலாக நிர்வாகத்தை மேம்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவம், கல்வி ஆகியவற்றில் உரிய கவனம் செலுத்தவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இடதுசாரிகள் அல்லாத பலர் இதே மாதிரியான கருத்துகளைச் சொல்லியிருப்பதும் முக்கியமானதாகும். நவதாராளவாதம்தான் சர்வரோக நிவாரணி; இதற்கு மாற்றெல்லாம் உலகில் கிடையாது என்று இறுமாந்திருந்தவர்கள் சற்றுக் கலக்கமடைந்துள்ளனர். இந்த நேரத்தில் மாற்றுகளின் மீது கவனம் குவிப்பதும் அவற்றை மேம்படுத்த முனைவதும் இன்றியமையாத பணி என்பதை சூழல் நமக்கு உணர்த்தி நிற்கிறது.
தலித்கள் உலகமயத்தை பல தளங்களில் எதிர்க்க வேண்டியிருப்பினும் அதன்மூலம் தீண்டாமை உள்ளிட்ட மனித உரிமை சார்ந்த பிரச்சினைகளை உலக அரங்கிற்குக் கொண்டு செல்லுதல், தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கோருதல் போன்ற அமசங்கள் அன்று கவனம் குவிக்கப்பட்டன. (பார்க்க: உலகமயம் எதிர்ப்பு அரசியல் தலித்கள் – அ.மார்க்ஸ், அடையாளம் வெளியீடு, ஏப்ரல் 2002)
இன்று இடஒதுக்கீடு போன்ற சமூகநீதி, அறச்செயல்பாடுகளை பொதுத்துறையுடன் சேர்த்து, ஒன்றிய அரசே ஒழித்துக்கட்டி வருகிறது. தனியார் துறையில் இடஒதுக்கீடு கேட்கும் குரல்கள் மெலிந்து வருகின்றன. இந்நிலையில் ஒடுக்கப்பட்ட தலித் மக்கள், சிறுபான்மையினர் மத்தியில் நவதாராளவாதம் விளைவித்த தாக்கத்தையும் ஒரு கட்டுரையாக இணைத்திருந்தால் இந்நூல் முழுமையடைந்திருக்கும் என்று தோன்றுகிறது.
(நவதாராளவாதம் – அ.மார்க்ஸ், எழுத்து பிரசுரம் - ஜீரோ டிகிரி பப்ளிஷிங், 55/7, ஆர் பிளாக், 6 வது அவென்யூ, அண்ணாநகர், சென்னை – 600040, அலைபேசி: 98400 65000 விலை: ரூ.240)
நன்றி: பேசும் புதிய சக்தி - அக்டோபர் 2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக