ஓசோன் கற்பனைகள்
மு.சிவகுருநாதன்
ஏதேனும் ஒன்று சிறப்பு எனில் அதை எல்லாவற்றிலும் இட்டு நிரப்பி, ‘எல்லாம் வல்ல ஒன்றாக’ மாற்றும் போக்கு இங்கு காணப்படுகிறது. வேம்பின் மருத்துவக் குணத்திற்காக அதன் குச்சியை பல்துலக்கும் பிரஷ் ஆகப் பயன்படுத்தச் சொல்லித் தவறான பழமொழியை எடுத்துக்காட்டுவது உண்டு. வேம்பின் சாறு வாயில் படுவதைத் தவிர வேறு ஒன்றும் பலனில்லை. இதன் கடினத்தன்மை பற்கள் மற்றும் ஈறுகளைப் பாதிக்கும். (ஆலும் வேலும் பல்லுக்குறுதி; வேல் – கருவேல மரம், வேம்பு அல்ல.) இதைப்போலவே துளசியின் மருத்துவக்குணம் ஓசோன் வாயுவை உற்பத்தி செய்வதல்ல. இங்கு பகுத்தறிவு, அறிவியல் எல்லாம் மறந்து மீண்டும் ஒருவித மூடநம்பிக்கைகளுக்கு ஆட்படுவதைப் பார்க்கிறோம். அரசியல், சமூகம் என அனைத்திலும் இவ்வியாதி நிறைந்துள்ளது. இத்தகைய புனைவுகள் சமூக ஊடகங்களில் மீண்டும் மீண்டும் வலம் வருகின்றன. இவை படிப்படியாக தமிழக அரசு தயாரிக்கும் பாடநூல்களில் கூட நுழைந்துவிடுகின்றன.
ஆண்டுதோறும் செப்டம்பர் 16 உலக ஓசோன் நாளாகக் கொண்டாடப்படுகிறது. அண்மையில் இதைக் கடந்தபோது சமூக ஊடகங்களில் சில செய்திகள் கண்ணில் பட்டிருக்கக்கூடும். எடுத்துக்காட்டாக சில:
- துளசிச் செடி இரவிலும் ஆக்சிஜனை வெளியிடும். 20 மணி நேரம் ஆக்சிஜனையும் 4 மணி நேரம் ஓசோனையும் வெளியிடும்.
- பெண்கள் கோலமிடுவது, துளசி மாடத்தைச் சுற்றுவது; ஆண்கள் அந்நேரத்தில் நடைப் பயிற்சி மேற்கொள்வது போன்றவற்றால் அதிகாலை நேரங்களில் பெருமளவு கிடைக்கும் ஓசோனை சுவாசிக்க முடியும்.
- அரச மரமும் மூங்கில் மரமும் 24 மணிநேரமும் கரியமில வாயுவை (கார்பன் டை ஆக்சைடு) எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளிவிடும்.
- வேம்பு மற்றும் புங்கை மரங்கள் அதிகளவு ஆக்சிஜனை வெளியிடும்.
மேற்கண்ட கருத்துகள் எதுவும் அறிவியல்பூர்வமானது அல்ல. எனினும் அறிவியல் என்கிற பெயரில் இவை தொடர்ந்துப் பரப்பப்பட்டு வருகின்றன.
“மூன்று ஆக்ஸிஜன் அணுக்களால் (O3) ஆன மூலக்கூறுகளைக் கொண்ட ஓசோன் ஒரு நச்சு வாயுவாகும். இது வளிமண்டலத்தில் மிக அரிதாகக் காணப்படும் வாயுவாகும். வளிமண்டலத்தின் ஒவ்வொரு பத்து மில்லியன் மூலக்கூறுகளில் ஓசோன் மூன்று மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது. ஓசோன் படலம் உண்மையில் ஓர் வளிமண்டல அடுக்கு அல்ல. இது படுகையடுக்கில் (Stratosphere) 19 முதல் 30 கி.மீ. வரை பரவிக் காணப்படுகிறது”, என்று ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூல் (2018) சொன்னது. அடுத்த ஆண்டே (2019) இவ்வரிகள் இடம்பெற்ற மாசுறுதல் (Pollution) தலைப்பின் கீழுள்ள சில பக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன. இது தவறான செய்தி என்பதால் நீக்கப்பட்டது என்றுகூட பலர் நினைக்கலாம். ஆனால் இதுதான் உண்மை. உண்மைகள் பல நேரங்களில் நிலைநாட்டப்படுவதில்லை; மாறாக கற்பனைகளும் நம்பிக்கைகளும் கோலோச்சுகின்றன.
இத்தகைய தவறான நம்பிக்கைகளின் அடிப்படையில் தரங்கம்பாடி கடற்கரைக்கு ஓசோன் கடற்கரை என்று சொல்லி, அறிவியலுக்குப் புறம்பாக, தரங்கம்பாடி நூற்றாண்டு லயன்ஸ் சங்கத்தின் சார்பில் “Ozone Rich Beach – அதிகமாக வீசும் ஓசோன் காற்று”, என்னும் வாசகங்களுடன் அறிவிப்புப் பலகையும் வைத்திருக்கின்றனர். அறிவியல் தவறான புரிதலுடன் கையாளப்படுவதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
+2 அறவியலும் இந்தியப் பண்பாடும் நூலில் ‘இந்தியப் பண்பாடும் சுற்றுச்சூழலும்’ என்ற தலைப்பில் ஒரு பாடம் உள்ளது. அதில் அரசமரம், “பகலிலும் இரவிலும் மனிதனுக்குத் தேவையான பிராணவாயுவை வெளியிடுவதால், இம்மரம், ‘மரங்களின் அரசன்‘என்றும் அழைக்கப்படுகிறது”. (பக்.228) தொற்றுநோயாகப் பரவும் இத்தகைய அபத்தங்களை எளிதில் தடுக்க முடியும் என்று தோன்றவில்லை.
காற்று ஒரு கலவை என்றும், அதில் நைட்ரஜன் (78%), ஆக்சிஜன் (21%), பிற வாயுக்கள் (1%) என்றும் பாடநூல்களில் படித்திருப்போம். இந்த ஒரு விழுக்காட்டில் அதிகளவு (0.93%) இருப்பது ஆர்கான் மட்டுமே. எஞ்சியவை மிகக்குறைவான அளவிலேயே கலந்துள்ளன. 0.04% – கார்பன் டை ஆக்சைடு, 0.0018% – நியான், 0.0005% – ஹீலியம், 0.00006% – ஓசோன், 0.00005% – ஹைட்ரஜன் என்கிற அளவில்தான் இருக்கின்றன. நீராவியின் அளவு (0-0.4%) மாறுபடும் ஒன்றாக உள்ளது.
வளிமண்டலத்தில் நாம் வசிக்கும் கீழடுக்கில் (Troposphere) துருவங்களில் 8 கி.மீ. உயரத்திலும் நிலநடுக்கோட்டுப்பகுதிகளில் 18 கி.மீ. உயரத்திலும் பரவியுள்ளது. இதற்கு அடுத்துள்ள படுகையடுக்கு அல்லது மீள் அடுக்கில் (Stratosphere) தான் ஓசோன் நிரம்பியுள்ளது.
கீழடுக்கில் ஒருவேளை ஓசோன் வாயு இருந்தால் அதை சுவாசிக்கும் நாம் பாதிப்படைவோம். நமக்கு புற்றுநோய் மற்றும் சுவாசக் கோளாறுகளும் ஏற்படலாம். கார்பன் டை ஆக்சைடு போன்ற பசுமைக்குடில் வாயுகளைப் போல ஓசோனும் இங்கு அதிகரிப்பது மாசாகும்.
கார், பைக் எஞ்சின்களில் வடிவமைப்பில் ஓசோன் வாயு அதிகளவில் உற்பத்தியாகாமல் இருக்க கவனம் செலுத்தப்படுகிறது. பல்வேறு வழிகளில் கீழடுக்கில் சிறிதளவு உற்பத்தியாகும் ஓசோன் வாயுவும் சுமார் 20-50 கி.மீ. உயரத்திற்குச் செல்லவும் முடியாது. அதைப்போல அங்குள்ள ஓசோன் கீழிறங்கி வரவும் இயலாது. மூன்று ஆக்சிஜன் அணுக்களைக் கொண்ட ஓசோன் ஆக்சிஜனைவிட குறைவான நிலைப்புத்தன்மை உடையது. இவை எளிதில் ஈரணு ஆக்சிஜனாக மாற்றமடையும். புற ஊதாக்கதிர்களை உறிஞ்சுவதில் இரண்டணு ஆக்சிஜனும் மூன்றணு ஓசோனும் இணைந்து பங்காற்றுகின்றன.
20 முதல் 50 கிமீ உயரத்தில் மீள் அடுக்கில் ஓசோன் இருப்பது மட்டுமே பூமிக்கும் நமக்கும் நன்மையாகும். மாறாக கீழடுக்கில் ஓசோன் உற்பத்தியானால் அது ஒரு நச்சு வாயு; அது உயிரினங்களுக்குப் பெருந்தீமையாகும். எந்தத் தாவரமும் ஓசோனை வெளியிடுவதில்லை. இவர்கள் சொல்வதைப்போல துளசிச்செடி விடியற்காலைப் பொழுதில் ஓசோனை வெளியிடுமானால் அது பார்த்தீனியத்தைப் போன்று நச்சுச்செடியாகும். அச்செடி வளர்ப்பதைத் தடை செய்ய வேண்டியிருக்கும்!
ஓசோன் வாயுப் படலம் இந்த புவிப்பந்தைப் புறஊதாக் கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கிறது என்பது உண்மைதான். அதனால் அந்த வாயுவை நாம் சுவாசிக்க வேண்டும் என்பதில்லை. அதன் பயன்பாடு வேறு. பாம்பின் நஞ்சு ஒரு புரதம், மருந்து தயாரிக்க உதவும் பொருளும் கூட. அது நமது ரத்தத்தில் கலந்தால் நமக்கு நஞ்சாகிறதல்லவா! அதைப்போலவே ஓசோன் வாயுவும், சுவாசிக்க ஏற்றதல்ல. ஆக்சிஜனைத் தவிர பிற எந்த வாயுவும் உயிரினங்கள் சுவாசிப்பதற்கானது அல்ல.
ஒரு தாவரம் 24 மணி நேரமும் ஆக்சிஜனை எப்படி வெளியிட இயலும்? அறிவியல் அடிப்படையற்ற தவறான புரிதலும் இதற்குக் காரணமாகிறது. நாம் ஆக்சிஜனை எடுத்துக்கொள்கிறோம்; தாவரங்கள் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக் கொள்கின்றன என்று எளிமையாகச் சொல்லித்தருவது சரியல்ல. இதில் தாவரங்கள் சுவாசிப்பதற்கு ஆக்சிஜன் தேவையில்லை என்பதாகவும் பொருள் கொள்ளப்படுவதும் நடக்கிறது. இக்குழப்பங்கள் உண்டாகப் பள்ளிப் பாடநூல்களுக்கும் பெரும்பங்கு உண்டு.
எட்டாம் வகுப்பு அறிவியல் பாடநூலில் ‘புவி வெப்பமயமாதல்’ என்ற தலைப்பில் கீழ்க்கண்ட வரிகள் காணப்படுகின்றன.
“நாம் வளிமண்டலத்தில் இருக்கும் ஆக்ஸிஜனை சுவாசித்து கார்பன் டை ஆக்சைடை கழிவுப் பொருளாக வெளியிடுகிறோம். அதேவேளை மரங்கள் கார்பன் டை ஆக்சைடை உள்ளே இழுத்துக்கொண்டு ஒளிச்சேர்க்கையின் போது ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கின்றன”. (பக்.274, திருத்திய பதிப்பு:2021) இங்கு சுவாசித்தலும் ஒளிச்சேர்க்கையும் இணைக்கப்படுகின்றன. திருத்தத்திலும் தெளிவு இல்லை. இவ்வரிகள் முந்தைய பதிப்பில் (2019) கீழக்கண்டவாறு இருந்தன.
“வளிமண்டலத்தில் இருக்கும் ஆக்ஸிஜனை நாம் உள்ளிழுத்து கார்பன் டை ஆக்சைடை கழிவுகளாக வெளியிடுகிறோம். இதையொட்டி மரங்கள் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி நமக்கு ஆக்ஸிஜனை வழங்குகின்றன”. (பக்.110)
ஆறாம் வகுப்பு முதல் பருவ ஆங்கிலப் பாடத்தின் இரண்டாவது அலகில் “When the Trees Walked” என்ற Ruskin Bond எழுதிய பாடம் உள்ளது. அப்பாட எழுத்துப் பயிற்சி ஒன்றில் “take in carbon dioxide and give out oxygen”, என்று குறிப்பிடப்படுகிறது (பக்.123). இங்கு ஒளிச்சேர்க்கை (photosynthesis), சுவாசித்தல் (respiration) பற்றி எதுவுமில்லை. இம்மாதிரியான தகவல்களும் பாடங்களும் ஆசிரியர்களையும் மாணவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தி விடுகின்றன.
நான்காம் வகுப்பு அறிவியல் மூன்றாம் பருவத்தில் ‘நாம் சுவாசிக்கும் காற்று’ (அலகு 3) என்ற பாடம் உள்ளது. இத்தலைப்பே சிக்கலாக உள்ளது. ‘நாம்’ என்பது தாவரங்கள், விலங்குகள் போன்றவற்றை உள்ளடக்காதுதானே! ‘உயிரினங்கள் சுவாசிக்கும் காற்று’ அல்லது வெறுமனே ‘காற்று’ என்றுகூட தலைப்பு இருக்கலாம்.
இப்பாடப் பயிற்சிகளில் ‘முயல்வோம்’ என்ற தலைப்பில், ‘பின்வருவனவற்றை வகைப்படுத்துக’, என்று ‘ஆக்ஸிஜனைக் கொடுப்பவை / கார்பன் டை ஆக்சைடை வழங்குபவை’ எனப் பிரிக்கச் சொல்கிறது.
“நாய், பூனை, தென்னை மரம், குரங்கு, கத்திரிக்காய் செடி, பப்பாளி செடி” ஆகியன பட்டியலில் உள்ளன. இந்த ஆறில் உள்ள ‘நாய், பூனை, குரங்கு’ ஆகிய மூன்று விலங்குகளை ‘கார்பன் டை ஆக்சைடை வழங்குபவை’ என்றும் ‘தென்னை மரம், கத்திரிக்காய் செடி, பப்பாளிச் செடி’ ஆகிய மூன்று தாவரங்களையும் ‘ஆக்ஸிஜனைக் கொடுப்பவை’ என்றும் வகைப்படுத்துமாறு பாடநூல் சொல்கிறது.
‘நாய், பூனை, குரங்கு’ போன்ற விலங்குகளும் என்றும் ‘தென்னை மரம், கத்திரிக்காய் செடி, பப்பாளிச் செடி’ போன்ற தாவரங்களும் கார்பன் டை ஆக்சைடை வழங்குபவைதானே! சுவாசத்தின்போது ஆக்சிஜன் எடுத்துக்கொள்ளப்பட்டால் கார்பன் டை ஆக்சைடு வெளியிட்டுத்தானே ஆகவேண்டும்? ‘கார்பன் டை ஆக்சைடை வழங்குபவை’ பட்டியலில் ஆறும் இடம் பெறவேண்டுமல்லவா! ஆனால் பாடநூல் இதைக் கணக்கில் கொள்ளவில்லை.
இவற்றைப் படிக்கும் குழந்தைகள் கட்டாயம் குழம்பித்தான் போவார்கள். விலங்குகள் ஆக்சிஜனை சுவாசிக்கும்; தாவரங்கள் கார்பன் டை ஆக்சைடை சுவாசிக்கும் என்கிற எளிய சமன்பாட்டிற்கு வந்துவிடுவார்கள். பெரும்பாலும் இதுதான் நடக்கிறது. உயிரினங்கள் அனைத்தும் ஆக்சிஜனை மட்டுமே சுவாசிக்கின்றன. தாவரங்கள் மற்றொரு பணியாக, உணவு தயாரிக்கப் (ஒளிச்சேர்க்கை) கார்பன் டை ஆக்சைடைப் பயன்படுத்துகின்றன என்கிற உண்மையை தெளிவாகக் குழந்தைகளிடம் உணர்த்தப் பாடநூல்களும் தவறிவிட்டன.
சுவாசிக்கும் போது மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள் என அனைத்து உயிரினங்களும் ஆக்சிஜனை மட்டுமே எடுத்துக்கொள்கின்றன. அப்போது கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகின்றன. சுவாசித்தலில் கழிவாக வெளியான கார்பன் டை ஆக்சைடு மட்டுமல்லாது வளிமண்டலத்தில் உருவாகும் கார்பன் டை ஆக்சைடையும் சேர்த்து தாவரங்கள் ஒளிச்சேர்க்கை எனப்படும் உணவு (ஸ்டார்ச்) தயாரித்தலில் பயன்படுத்துகின்றன. அப்போதுதான் ஒட்டுமொத்த உயிரினங்களுக்கும் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜன் கிடைக்கின்றது. இதனால் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரிக்காமல் கட்டுப்படுத்தப்படுகிறது. காடழிப்பு மற்றும் அதிகளவிலான எரிபொருள் பயன்பாட்டால் காலநிலை மாற்ற விளைவுகளை நாம் எதிர்கொள்கிறோம்.
தாவரங்கள் ஒளிச்சேர்க்கையில் ஈடுபட சூரிய ஒளி, பச்சையம், நீர், கார்பன் டை ஆக்சைடு ஆகியன தேவைப்படுகிறது. தாவரங்கள் எதுவும் பகலில் மட்டுமே ஒளிச்சேர்க்கையில் ஈடுபட முடியும். ஒரு தாவரம் அதிகளவு ஆக்சிஜனை வெளியிடுகிறது என்றால் அத்தாவரம் அதிக உணவைத் தயாரிக்கிறது என்று பொருள். இது பச்சையம் போன்ற இதர காரணிகளையும் உள்ளடக்கியது. தாவங்கள் பகலில் மட்டுமே ஆக்சிஜனை வெளியிடும். அதைப்போல இரவிலும் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக்கொள்ளவும் வழியில்லை. 24 மணி நேரமும் ஆக்சிஜனை வெளியிடுவதெல்லாம் அதீதக் கற்பனையன்றி வேறில்லை.
நம்பிக்கைகள் மனிதர்களுடன் இணைந்துப் பிறந்தவை. பகுத்தறிவும் அறிவியலும் இவற்றின் மெய்ப்பொருள் காண நமக்கு உதவுகின்றன. இத்தகைய நம்பிக்கைகள் மீது அறிவியல் முலாம் பூசி ஏமாற்றும் சூழ்ச்சி இதில் அடங்கியிருக்கிறது. இதன் பின்னால் சாதி, மத, இன வெறுப்பை வளர்க்கும் மறைமுகத் திட்டங்கள் இருப்பதையும் நாம் உணர்ந்து கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.
நன்றி: பொம்மி – சிறுவர் மாத இதழ், டிசம்பர் 2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக