வாஸ்கோடகாமா - கயல்நிலா – கடல்
மு.சிவகுருநாதன்
முதல் வகுப்பு படிக்கும் எங்கள் இளைய மகள் கயல்நிலா இதுவரையில் கடலை நேரில் பார்த்ததில்லை. அதற்கான வாய்ப்புகள் அமையவில்லை. கொரோனாப் பெருந்தொற்று பயணங்களை முற்றாக அபகரித்துக் கொண்டது.
முதல் மகள் கவிநிலாவுக்கு வேளாங்கண்ணி, தரங்கம்பாடி என இருமுறை கடற்கரைக்கு சென்று வந்த அனுபவம் உண்டு. மேலும் கல்லணை, தஞ்சாவூர் பெரியகோவில், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம், சிதம்பரம் போன்ற இடங்களுக்கும் சென்றுள்ளார். ஆனால் கயலுக்கு அத்தகைய வாய்ப்பு கிடைக்கவில்லை.
எனவே கடலுக்கும் கடற்கரைக்கும் உடனடியாகச் சென்றாக வேண்டும் என்று சில நாள்களுக்கு முன்பாக கயல்நிலா மிகக்கடுமையாக உத்திரவிட்டாள். நானும் சரியென்றேன். என்னுடைய தேர்வு காரைக்கால், தரங்கம்பாடி அல்லது மனோரா என்று இருந்தது. ஆனால் குழந்தைகள் எங்கு சென்றாலும் காரில் வர இயலாது; பேருந்து அல்லது தொடர்வண்டியில் மட்டுமே வருவோம் என்று அடம்பிடித்தனர்.
வேறு வழியின்றி எனது தெரிவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, வேளாங்கண்ணி செல்வது என்று முடிவு செய்தோம். தொடர்வண்டியில் சென்று பேருந்தில் திரும்புவது என்று முடிவானது.
கவிநிலா 4 முறை தொடர்வண்டியில் பயணித்திருந்தாலும் கயல்நிலா ஒருமுறை மட்டுமே திருச்சி வரை பயணித்துள்ளார். எனவே இன்று (22/03/2022) செவ்வாய்க் கிழமை என்பதால் கோவாவிலிருந்து வரும் வாஸ்கோடகாமா - வேளாங்கண்ணி விரைவு வண்டிக்காகத் திருவாரூர் தொடர்வண்டி நிலையத்தை அடைந்தோம்.
வாஸ்கோடகாமா எக்ஸ்பிரஸ்க்கு டிக்கெட் கேட்டபோது அதற்கு ரிசர்வேஷன் செய்ய வேண்டும் என்றார் டிக்கெட் கொடுப்பவர்! இனி திரும்பவும் புதிய பேருந்து நிலையம் செல்ல வேண்டுமா என்று அதிர்ந்தேன். அங்கு சென்றால்தான் உட்கார இடம் கிடைக்கும். வாஸ்கோடகாமாவில் அன்ரிசர்வ்டு உண்டா என்று அருகிலிருப்பவரைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார். வண்டி நாகப்பட்டினம் வரைதான் செல்லும் வேளாங்கண்ணி போக இன்னும் அனுமதியளிக்கவில்லைல் என்றும் சொல்லி, முதலாவது பிளாட்பாமிலிருக்கும் ரயில் சென்றபிறகு வந்து டிக்கெட் பெற்றுக் கொள்ளச் சொன்னார்.
அந்த ரயில் சென்ற பிறகு, காத்திருந்து நாகப்பட்டினம் டிக்கெட் வாங்கும்போது உள்ளிருந்த உயர் அதிகாரி ஒருவரிடம் வாஸ்கோடகாமா எக்ஸ்பிரஸா, சூப்பர் பாஸ்ட்டா என்று கேட்டு உறுதி செய்துகொண்டு டிக்கெட் தந்தார். வாரத்தில் ஒருநாள் மட்டும் வந்துசெல்லும் இந்தத் தொடர்வண்டி குறித்து ரயில்வே ஊழியர்களே சரியாக அறிந்திருக்கவில்லை என்பது சற்று வியப்பாக உள்ளது.
வாஸ்கோடகாமா கி.பி.1498 மே 20 இல் வந்திறங்கியது கோழிக்கோடு - அரபிக்கடல்; இன்று நாங்கள் வாஸ்கோடகாமா தொடர்வண்டியில் சென்று பார்த்தது வேளாங்கண்ணி - வங்கக்கடல்.
நாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் வேன், ஆட்டோக்களிடமிருந்து ஒருவழியாகத் தப்பித்து நாகை பழைய நிலையத்தில் திருத்துறைப்பூண்டி பேருந்தில் ஏறி வேளாங்கண்ணி சென்றோம்.
நல்ல உச்சி வெயில்; இன்று வெயிலின் தாக்கம் சற்று குறைவு என்றுதான் சொல்லவேண்டும். கடந்த இரு நாள்களாக மியான்மாரை நெருங்கும் புயலான 'அசனி'யால் கடும் அனலடித்தது. தேவாலயத்தில் தமிழில் திருப்பலி நடந்துகொண்டிருந்தது. இயேசுவின் மன்னிக்கும் பண்பை மிக விளக்கமாக விவரித்துக் கொண்டிருந்தார்.
இன்று கூட்டம் அதிகமில்லை, மிதமானக் கூட்டம். ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களில் கடும் கூட்டம் இருக்கும். அதனால்தான் கூட்டம் இல்லாத கடற்கரைகளைத் தேடிக்கொண்டிருந்தோம். எனவேதான் விடுமுறை அல்லாத இன்று மகளுக்குக் கடலைக் காட்டிவிடுவது என்று ஒருவழியாக வந்துவிட்டோம்.
கடலைக் கண்டதும் கயலுக்கு அளவில்லா மகிழ்ச்சி, கூடவே கவியும். இருவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். வெயில், களைப்பு ஒன்றும் அவர்களைப் பாதிக்கவில்லை. ஒரு மணி நேர மகிழ்வைக் கொண்டாடிவிட்டு வீடு திரும்பினோம்.
கடலையும் கயலையும் கண்டபிறகு கவிஞர் பிரம்மராஜன் மகளுக்காக எழுதிய 'கடல்' பற்றிய கவிதைகள்தான் நினைவுக்கு வந்தது. அவற்றில் 17 கவிதைகள் 'நவீன விருட்சம்' வெளியீடாக சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னதாக அவ்விதழுடன் வந்ததாக நினைவு. அவற்றைத் தேடினேன்; கிடைக்கவில்லை.
இணையவெளியிலிருந்து எடுத்த சில 'கடல்' கவிதைகளுடன் இப்பதிவை நிறைவு செய்கிறேன்.
கடலும் மகளும்
பிரம்மராஜன்
(மகள் தன்யாவுக்கு)
உன் நினைவகலப் பார்க்க
மீண்டும் முகத்துடன் பொருத்திக்கொள்கிறேன்.
உன் வயதுச் சிறுமி யாரோ வலியில் விளித்த குரல்
உனதாய்க் கேட்க
பதைக்கும் மனம்.
உன் முகம் நோக்க முயன்றும் முயன்றும்-
இப்பொழுது
என்ன விளையாட்டு விளையாடிக்கொண்டிருப்பாய்?
உன் மனதில் கீர்த்தனைகள்
மிச்சப் பதியன்கள்
மழலைத்து முணுமுணுப்பாயோ?
புதிய உன் ஊஞ்சலில் பசியும் மறந்து பறப்பாயோ?
உன்மத்தமும் கள்வெறியும் என் நெஞ்சில்
நோகத் தொடங்கிவிட்டது பால் கட்டிய மார்பாக.
சொல் பொறுக்காத செல்வம் நீ.
உனக்கேயான ஷாந்திநிகேதனைச் சிருஷ்டித்து
திருத்தி, மாற்றி, திருப்திப்படுகிறேன்.
பீர்க்கங்கொடி என வளர்கிறாய்.
பொறுப்பற்ற தகப்பன்-
பட்டயம் மட்டும் எனக்கு நிலைக்கிறது.
எனக்குப் புரிந்துபட்ட கடலினை
உனக்கு அறிமுகப்படுத்தவில்லை.
பதைப்பும்
திசையற்ற கோபமும்
பயணத்தின் பாதுகாப்பின்மையும்
என்னைச் சீரழித்த காலத்தில்
நான் காட்டிய தங்க மணல் கடலும்
கடல் காக்கைகளும்
உன் பிராயத்தினால் மறந்துவிட்டிருக்கும்.
இரு கைகளிளும் உன்னை அள்ளி எடுத்த நாள் நகர்ந்து
இன்று என் மன இணையாக
காலோரம் அலைகள் விளையாட
முடிவே இல்லாத பீச்சில்
முடியும் வரை
உன் பிஞ்சுக் கை பற்றி
அவ்வளவு அழகாயில்லாத
இந்தக் கரையிலும்
கடல் கற்போம்.
கடலின் அனுமதி
அனுஷ்டானம் அதற்கில்லை
எச்சில் கீழ்மேல் உன்னதம் விலக்கு
உருப்படி செருப்பின் தீட்டு
வகுத்த கோடு மீறப்படினும்
பற்றி எழாது தண்டனைத் தீ
காலடிகளின் அழுத்தமே பிரதானம்
ஏன்கால் யார் அணிகிறார்
பாகுபடுத்தியதில்லை
பாதங்கள் கழுவும் சாதியுமற்று சமயம் துறந்து
தோணியும் எரிந்த தீக்குச்சியும்
துரப்பணக் கப்பலின் அமானுஷ்யமும்
மிதவைகள்தான்
தராசு முள்ளின் மையத் துல்லியமாய்
பூக்கொண்டும் போகலாம்
திக்கெட்டிலும் திறந்தே வைக்கலாம்
பூட்டலாம்
திறவுகோல் மறந்த உலோபிக்குத் திறன்பிக்கவில்லை
கடலின் கதவு
உருண்டைப் பாறைமீது பாசி படிந்த கோட்டை
அந்தரத்திலிருந்து கடலில் விழுந்த வண்ணமாய்
நிறுத்துங்கள் ரெனே மகரித்
உரைநடை எழுதத் தெரியாதவனும்
பெயர்ந்த மொழி சரளிக்காதவனும்
விதேசி பாஷையில் லகு கிடையாது இவனுக்கு
இருப்பினும்
இக்கடையோரும்
தென்னாடு உடைய சிவனும்
கால்வைக்க அனுமதியும்
கரையில் நுரை விரித்து
கடலின் காருண்யம்
என்னை நானே தொலைத்துக்கொண்டு
தேடவேண்டிய முகாந்திரம் இருந்தும்
புரட்டிப் புரட்டிக் கொண்டுவந்து சேர்க்கிறது
என்ன வேண்டும்
என்பது எனக்கே தெரியாமல் அலைக்கழிய
இந்த சமுத்திரத்தின் குவளை விளிம்பிலிருந்து
புவி ஈர்ப்பு உதறிய தக்கையாய் மிதந்து வரும்
சமயம்
தற்கொலை செய்துகொள்ள வந்த
அயற்கடல் திமிங்கிலத்தைப் புரட்டும் அலைகள்
சரம் பட்டாசுகளை உயர்த்தி வீசி வெடித்து
பறைக் கொட்டுகள் சுதேசிச் சாராய முருக்கத்துடன்
என் மரிப்பினை
நாடகித்து நிம்மதித்தவர் மரண பீதி பெற
அவதரித்தலின்
அத்தியாவசியம்
திறக்கப்படும்
ஏழு கதவுகள்
எல்லைகளை ஏளனிக்கும் புயற்பருந்து
அலை நீராடிய எருமைகள் திரும்பும் நேரம்
நீ பெண்ணாகத்தான்
என்றும் விரித்த படுக்கையில்
என் அருகாமையில்
மிக.
கடலும் கடவுளும் பெண்
பெயர்ப்பு மொழியில் உதிர்க்க முடியா உப்புத் தாவரத்தை
எழுதுவதாகிறது அலை உடைந்த கடல்
எழுதப்படாதிருப்பவை
பூமியின் சிகரங்கள் தோற்கும் தன் வயிற்று மலைகள்
உஷ்ண நீரோட்டப் பெருஞ்சாலைகள்
தாவரமா ஜந்துவா
சொல்வதற்கியலாது
ஒடிந்தால் குருதி வெண்மை ஒழுகும் பவளப் பாறைகள்
மின்சார ஈல்களின் பாம்புச் சவுக்குச் சொடுக்கு
மனக் கணக்கின் சமன் கனவுகளைத் தவறாக்கும்
தீவுகள் உறுத்தும் நிஜம்
திருடிவந்து தெப்பம் கட்டி
வளர்க்கும் மானுடரின் செயற்கை முத்துகள்
தைத்தவுடன் விஷத்தின் சாவு நொடி நொடியாய்
துடித்து உயரும்
நங்கூரப் படிமத் திருக்கை மீனின் முள்
நீ அறியாததையா எழுதிவிடமுடியுமா
நேற்றின் நிழல்களை
இன்றின் இசைவுகளை
சர்வ நில்லாமை மிக்க அம்மையே
பாலித்தருள் தெரிந்தும் தெரியாமலும்
கதிரியக்கக் கப்பல்களின் மூன்று சமாதிகள்
உன் கருவறைக்குள் செலுத்தி நாளாகிறது
கருப்பை அழற்சி கடவுளுக்கு இல்லை
ஒலியின்றி எழுத முடியும்
கத்தலின்றி பாட முடியும்
பரிசுகளைக் கைம்மாறு ஆக்காது
தொடர்ந்து தத்தம் செய்யும்
முத்தக் கடவுள்
கடல் வீடு - ஓர் அறிக்கை
கடல் ஒரு வீடாகுமெனக் கற்றதில்லை கனவிலும்
குடியிருப்போ கல்கூடோ இன்றி
எட்டடிக் குச்சுக்குள்
இருந்ததாயிருக்கும் பழக்கம் காரணம்.
பெயர் தெரியாக் கொடிகள் வரியோடிப் போர்த்திய
மணல் முற்றம்
சோடியங்களில் இருந்து சொட்டும்
செங்கல் நிறப் பனித்திரை
உம் துவாலை பற்பசை மாற்று உள்ளாடை
தலைவாரும் காற்று
நிமிஷத்திற்கு இருமுறை கலைக்கும் திருத்தும்
காலைக்கடன் மாலை உடன் எங்கெங்கிலும் விரும்பியவாறு.
நிதமும் புத்திய அறைகள்
நுரையீரல் பலூன் நிறைந்து விரியும் தூய பிராணன்.
கூரை தலைதான் அன்றேல் விரித்த குடை
கூரையற்றது குட்டிச்சுவர் என்பவர்
முகத்து மீசை வழிகிறது கூழாக.
நிலவின் நித்திரைக் காலத்தும் உச்சத்து முத்திரையிலும்
கால் கொண்ட அறைகள் நகர்ந்துவிடும் பின்னுக்கு.
அலைகள் அன்பளித்த தெளிவு
செங்கற்கள் கல்லாது.
மீன்கள் உம் பசிக்கு
மீதமும் உண்டு கடல்பாசி.
காலி செய்ய அச்சுறுத்தல் இல்லை
கார்மழைதான் எச்சுறுத்தும்
அறிக்கை என்பதையும்
அறியாது அலைகிறது கடல்.
அறிந்த மொழிகளை எண்ணிக் கணக்கு வைத்திருப்பதில்லை அது.
வண்ணப் புகைப்படத்துக் கடல்
இந்தப் புகைப்படத்தில் எழுதியிருப்பது
எனது கடல் அல்லவென்று சொல்வதியலாது எனினும்
சிவந்த நீர் அலைகள் இவை நீலம் மறந்தவை
என்பது தவிர யாதான கடல்போல் தான் தோன்றுகிறது
தரைக்குத் தூண்டிலிடும் அடர்த்தி மிகும் தென்னை ஓலைகள்
அறுந்த சூரியன் நனைந்து கொலையுண்டாயிருக்கும் அலைகள்
குற்றுத் தாவரங்கள் அழிபட்ட மொட்டைக் கரை
இதுவல்ல எனது
மாக்கடலின் வலது விலாவில் ஏதோ ஒன்றில்
அது இருப்பது நின் சுயம்போல் நிச்சயம்
இலையுதிர்கால கைச்சாலையின் சருகுகள் பெருக்கி
தூய்மை என்று அறிவிப்பு தரும் துன்பத்தை உவக்காதபோது
இது எப்படிக் கடல் வீடாகும்
எருமைகள் கோடிட்டுச் சென்ற மூத்திரத் தடம்
அலைகட்குத் தெரியாமல் அழித்து நிரவப்பட்டிருக்க
அபரிமித நேரத்தில்
இது மானுஷ்யம் கழன்ற தொட்டில்
காகிதத்தை அசைபோடும் தார்த்தாரி மாடுகள்
பவுண்டில் அடைக்கப்பட்ட பிறகு பதிப்புற்ற
செயற்கைக் காட்சியில்
படுத்த இடத்து மணல் மடிப்பும்
நேராகி நிற்கிறது
மனிதர் குரலைப் பாவனை செய்யும்
பறவையோ பூச்சியோ
இதில் சுற்றம் பெறவில்லை
பச்சை ஒட்டுப் பாலித்தீன் போர்த்திய குப்பத்துக் குடிசையின்
இம்மியும் பதிவாகாத கச்சிதத்தில்
குவிமையக்காரனின் தொழில் நேர்த்தி இழிவாகிறது
கட்டுமர ஒடிசல்
கயிற்றுத் துண்டுகள்
ஓட்டை நைலான் வலைகள்
தோணி நிற்றலின் கோணம்
எதுவும் அது போலல்ல
சர்க்கரை ஒவ்வாத நாவில் டன் கற்கண்டு
இது என் கடலும் கரையும்
ஆகாது
தகாத கீதமானாலும்
என் கோணல் மணல் கடற்கரையைத்
தந்து விடல் தகும்.
கடலின் விச்ராந்தி
முற்றிலும் முழுமை இத்துணைக் காலம் மறதியுற்று
சிக்காது
அலைகள் செய்யும் எச்சரிப்பு
கண்ணீரின் உப்பு
உதடுகள் வாங்கி நாவின் சுவை மொட்டுகள் பெற
இளகிழ்ந்துவிடும் சுயநல அரக்கனின் மனசும்
இனிக்கும் கனிமை காதுமடல் கூற
கள் ஒரு லஹரியாகக் குமிழும் உமிழ்நீரும் தெரிவிக்கவும்
புதுச் சாரலுக்கு சிலிர்ப்பூத்த புற்களாய்
தேகத்து மயிர்க்கால்கள்
எங்கே இருந்து வரப்போகிறதாம்
நீயின் இசைவிழைவும்
நானின் ஈதலில் தடங்கலும்
ஆன பெரும் பேறு அப்படி
வானத்து அலைக்கு மேல் சிமெண்ட் நிற மேகம்
அசுரன் வாய்ச் சிரிப்பு
விரிசல் உறும் மின்னல் சிமிட்டல்
இந்தத் தூறலில்கூட
உனக்குள் விதையுற்று முளைத்துக் கிளைத்துவிடுமா
சிறகு பறக்கும் மரம்
நின் விச்ராந்தியே என் குரல் பெறும் ஓய்வு
கடல் மலை விளிம்பிலிருந்து
ஏகிப் பறக்கும் பெயரற்ற பறவையின் ஏகாந்தமாய்
முடிவற்ற ஆழத்தில் முற்றற்று வந்து இறங்கும் மிதப்பாய்
என் உயிர் தேம்பித் தேறும்
விச்ராந்தியாய்
தூரத்து இடியின் பின்னணியில்
நீளும் சாலையாய்
இனியும் ஓர் உச்சம் இருக்குமே இனிக்கும்
கடலின் மனநிலை மாற்றங்கள்
என்ன எழுத சொல்லி அழ
விக்கித்து விம்ம?
கடலின் தாட்சண்யமற்ற
கோரஸ் குரல்களில் என் பாடல்
கள்ளக் குரலாகி உப்புச் சிரிக்கிறது.
ஸ்ருதிதானா எனதென்ற ஐயம் எழும்.
ஒருமுறை மடியில் மற்றெல்லா அசேதனங்களுடன்
என்னையும் சிறை வைத்திருந்து
உறக்க ஓய்வுச் சாகரத்தில் கால் நனைகையில்
கரை மடித்து இடுப்பில் செருகச்
சரிந்து
புகை சீறிப் பதறவைக்கும்
வாகன அடர் சாலையில் நான் கிடக்க
எங்கே என நிதானங்கொள்ளுமுன் இல்லையில்லை
இப்போதிருந்து ஆட்டம் புதிதென்று
பிள்ளை விளையாட்டாய் அடம் கொண்டு
தன் தடத்தில் ஈர்த்து
விண்மீன்கள் பார்க்க மடிதர
சுருதி சேர கானம் ஊர
மடி உறுத்துவது பற்றி உணர்வற்றுப் போய்
ஆகாயத் திறப்பின் ஊடே சஞ்சரித்த
பிரக்ஞை திரும்புகையில் மட்டும்
புரண்டு முதுகாற்றும்
குழந்தையாய் எனை அமர்த்தி, கிடத்தி, நிறுத்தி,
கலைதலையைச் சீராக்கி
உறுத்தும் மணல் துகள்களை நாவால் துடைத்து
பசியறிந்து அனுப்பிவைக்கும்
பெப்சி உறிஞ்ச.
மீண்டும் கண்ணிமைப் பொழுதில்
அதன் பின்க் நிற மார்பில் பால் தேங்கி கனத்திருக்க
இதழ் குவித்து திரும்பி வரக் கேட்கும்.
அம்மணம் நிர்வாணம் பற்றிய சொல் ஆய்வில்
குன்றி மணி வித்தியாசம் பாராட்டும்.
எல்லா நானும் அளந்தும்
அமிழத் தெரியாதபோழ்து
நீந்துதல் கற்றல் பற்றாது
கதவு மூடிக்கொள்ள
கால் கொண்ட வழியில் என் கூடடைவேன்
இல்லை கார் கொண்டு.
கடல் என்றும்போல்
தன் வழியில் நின்று விடும்.
நன்றி: கவிஞர் பிரம்மராஜன்