திங்கள், மார்ச் 21, 2022

ஆட்சியாளர்களுக்கு உண்மையில் கல்வி மீது அக்கறையுண்டா?

 ஆட்சியாளர்களுக்கு உண்மையில் கல்வி மீது அக்கறையுண்டா?

 

மு.சிவகுருநாதன்

 


 

 

           நேற்று (20/03/2022) தமிழகத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 'பள்ளி மேலாண்மைக் குழுவை' வலுப்படுத்தும் முன்னோட்டக் கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது.

 

        குழந்தைகளின் கல்வியில் பெற்றோர்களின் பங்கு முதன்மையானதாகும். ஆனால் அது எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதில்தான் வேறுபாடுகள் உள்ளன.

 

        ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் தன்னார்வலர்களை 'அவுட் சோர்சிங்'காகவே அணுகுகிறது என்பதுதான் உண்மை.

 

          பதிலி ஆசிரியராகச் செயல்படுதல், ஒருங்கிணைந்த பள்ளி வளாகத்திற்குக் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துவருதல், மதிய உணவு தயாரித்து வழங்குதல், புரவலர்களின் எண்ணிக்கை அதிகரித்தல், ஒரு கட்டத்தில் அவர்களிடமே பள்ளி நிர்வாகத்தை ஒப்படைத்தல் என்பதாக அதன் திட்டங்கள் இருக்கின்றன.

 

        இல்லம் தேடி கல்வி, 10 ஆம் வகுப்பிற்கு தொழிற்கல்வித் தேர்வுகள் என்று எதற்கும் தமிழக அரசு மற்றும் கல்வித்துறையிடம் இது ஒன்றிய அரசின் கல்விக்கொள்கைக்காக இல்லை என்ற நிரந்தரப் பதில் கிடைக்கும். ஆனால் சற்று யோசித்தால் நம்முன் எழும் அச்சத்தின்  நியாயம் புரியும்.

 

         நமக்குப் பல்லாண்டுகளாக இந்த அய்யம் உண்டு. தமிழ்நாட்டில் அரசுத் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் கட்டிடங்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாடு மற்றும் பராமரிப்பிலும் அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளின் கட்டிடங்கள் தமிழக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டிலும் வருகின்றன.

 

            ஓப்பீட்டளவில் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள் அனைத்தும் மிகத்தரமாகவும் உரிய வசதிகளுடன் கட்டப்படும்போது அரசுப்பள்ளிகளின் கட்டுமானங்கள மிக மோசமான தரத்தில் பயன்படுத்த இயலாத நிலையில் கட்டப்படுவது ஏன்? இந்த நிதி எவ்வாறு, எங்கே கொள்ளை போகிறது?

 

          முன்பு பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள்; இன்று புரவலர்கள், பள்ளி மேலாண்மைக் குழுக்கள் என கல்விக்கு மட்டும் பிறரிடம் கையேந்துவது ஏன்? வேறு அரசு அலுவலகங்கள் கட்ட, வசதிகளைப் பெருக்க பொதுமக்களிடம் கையேந்துவது உண்டா? கல்விக் கூடங்களைப் பயன்படுத்துவது அடித்தட்டு மக்கள் என்கிற மனப்பான்மையா?

 

        அடித்தட்டு மக்களுக்கான கல்வி வழங்குவதை ஏன் அரசுகள் மூன்றாம், நான்காம் தரமாகச் செயல்படுகின்றன? இதன்மூலம் அனைவருக்கும் கல்வியை எப்படி உறுதி செய்ய முடியும்? இது வெறும் பேச்சு என்பதை ஒன்றிய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் காட்டுகின்றன.

 

        வெளியில் எவ்வளவுதான் பேசினாலும் நமது ஆட்சியாளர்களுக்கு மறைமுகத் திட்டங்கள் இருக்கவே செய்கின்றன. அனைவருக்கும் கல்வி என்று கூவினாலும் மது மற்றும் இதர போதைகளுடன் 18 வயது நிரம்பிய, ஏதாவது எதிர்பார்த்து வாக்களிக்கும் அறிவிலியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களிடம் மேலோங்கியுள்ளதை உணர முடிகிறது.

 

       அரசின் டாஸ்மாக் பள்ளி மாணவனை அடைவதில் எவ்விதத்தடையும் இல்லை. தடைசெய்யப்பட்ட அனைத்து போதைப் பொருள்களும் தடையின்றி மாணவர்களுக்குக் கிடைக்கின்றன.

 

        18 வயதிற்கு முன்னதாகவே இவற்றிற்குப் பழக்கி, 18 வயதில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்த்து, அப்பகுதியிலேயே அவர்கள் ஊதாரிகளாகத் திரிந்துகொண்டிருக்க வேண்டும் என்றே அரசுகள் எதிர்பார்ப்பதாகத் தோன்றுகிறது. தேர்தல் வரும் சமயங்களில் இவர்களைக் கவனித்துப் பயன்படுத்திக் கொள்வதற்கான ஏற்பாடாகவே இதை அவதானிக்க வேண்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக