கல்விப்புலம் காணாத பாடங்கள்!
மு.சிவகுருநாதன்
பகுதி: ஒன்று
“உலகின் ஆபத்தான விலங்கு மனிதன்”, என்று குழந்தைகளிடம் நேரடியாகச் சொன்னால் சரிவருமா? எனவே முகம் பார்க்கும் கன்ணாடியை வழியே அதன் மூடியைக் கவனமாகத் திறந்து பார்க்கச் சொல்லி புதிர் போடுவதன் மூலமாக உண்மைநிலை இயல்பாக உணர்த்தப்படுகிறது. இதைப் படிக்கும் குழந்தைகள் கூடுதல் ஆர்வம் தொற்றிக் கொள்ள நூலில் எளிதாக நுழைந்துவிடுகிறார்கள். புவியில் கடைசியாக தோன்றிய மனிதன் கோடிக்கணக்கான ஆண்டுகளாக இப்புவியில் வாழ்ந்துவரும் உயிரினங்களின் அழிவுக்குக் காரணமாக உள்ளான் என்பதை அவர்கள் தெளிவாக உணர்கிறார்கள்.
ஐந்தறிவு (ஆறறிவு), ஐந்திணை, ஐம்பூதம் ஆகியவற்றை என புவிக்கோள இருப்புகளைக் குழந்தைகளுக்கு ஏற்றபடி சூழலியல் புரிதலோடு விளக்கி எழுதப்பட்ட பாடங்களே ‘பசுமைப் பள்ளி’யாக உருவாகியுள்ளன. இவற்றை சிறார்களுக்கான கதைகள் என்றோ, மொத்தத்தில் ஒரு சிறார் நாவல் என்றோ கூடக் கருதலாம். கல்விப்புலத்தில் கலைத்திட்டம், பாடத்திட்டம், பாடநூல், வகுப்பறை, ஆசிரியர், கல்விமுறை என அனைத்தாலும் புறக்கணிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, தவறவிடப்பட்ட பாடங்களை ‘பசுமைப் பள்ளி’ தன்னுள் கொண்டிருப்பதால், அது முதன்மைமிக்க ஒன்றாகிறது.
தாவரங்கள் -மரம் – ஓரறிவு (உடம்பு)
ஊர்வன - மண்புழு – ஈரறிவு (உடம்பு, நாக்கு)
பூச்சிகள் – கறையான் – மூன்றறிவு (உடம்பு, நாக்கு, மூக்கு)
பறவைகள் – தேனீ – நான்கறிவு (உடம்பு, நாக்கு, மூக்கு, கண்கள்)
பாலூட்டிகள் – ஓங்கில் – ஐந்தறிவு (உடம்பு, நாக்கு, மூக்கு, கண்கள், காது)
மனிதர்கள் – ஆறாம் அறிவு (ஐம்புலனுடன் பகுத்தறிவும்)
“அறம் செய விரும்பு”, என்று மட்டும் படித்த குழந்தைகளுக்கு “மரம் செய விரும்பு’ முற்றிலும் புதுமைதான்! இதைப் படிக்கும் குழந்தைகள் இனி யாரையும் ‘மரமண்டை’ என்று திட்டமாட்டார்கள்! மரம், களிமண், காட்டுமிராண்டி போன்ற வசைச் சொற்கள் உருவான விதம் பற்றிக்கூட இந்நூல் ஆராயத் தூண்டுகிறது. மனிதன் தன் குற்றங்களை மறைப்பதற்கும் பிறரைப் பலியாக்கவும் தாவரங்கள், விலங்குகள், தொல்குடிகள் ஆகியவற்றின் மீதான வசைச் சொற்களை உருவாக்கியிருக்க வேண்டும். குழந்தைகளுக்கான மொழிநடை நூலில் இருக்கிறது. குழந்தைகள் இவற்றை நேரடியாகப் படித்து அறிந்திட முடியும். இதை யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. பாடநூல்கள் இவ்வாறு எளிமையாகவும் கருத்தூன்றியும் அமைந்துவிட்டால் ஆசிரியர்களின் பணி மிகவும் எளிமையாகிவிடும். ஆனால் பாடநூல்கள் பெரும்பாலும் சொல்லிக் கொடுக்கக்கூட லாயக்கற்றவையாக இருக்கின்றன. அதைப் பிறகு பார்ப்போம்.
“மண்புழு உழவனின் நண்பன்’ என்பது கல்வியில் தொடரும் பாலபாடம். அவைகள் மனிதனுக்கு உதவிசெய்வதற்காகவே பிறந்தவை, உலகமே மனிதனுக்குத்தான் என்பது போன்ற எண்ணங்களை விதைக்க இது போதுமானதாக இருக்கிறது. பொறியாளர், சுரங்கப் பொறியாளர், வேதி வல்லுநர் போன்ற புதிய முகங்களை குழந்தைகள் சரியாக அடையாளம் காணும் வாய்ப்பை, அதாவது பாடநூல்கள் தவறவிட்ட வாய்ப்பை இந்நூல் வழங்குகிறது.
கறையான், குளவி, தேனீ, குருவிகள் போன்றவை ஒருவகையில் கலைஞர்கள்தானே! இவைகள் கட்டும் புற்று, கூடு, தேனடை ஆகியன கலையம்சமும் நிபுணத்துவமும் கொண்டவையாக இருக்கின்றன. காற்றின் திசையையும் பருவமழையையும் முன்னறிவிக்கும் காகம், தூக்கணாங்குருவி போன்றவற்றைவிட மனிதனின் ஆறறிவு மேம்பட்டதா? தமக்குத் தொடர்பில்லாத மனிதனைக் காப்பாற்றும் ஓங்கிலை (டால்பின்) ஐந்தறிவு என்று சொல்தல் தகுமா? காடுகளில் வாழும் இயற்கை மனிதர்களான பழங்குடிகளை ‘காட்டுமிராண்டிகள்’ என்று சொல்லும் தகுதி ‘நாட்டுமிராண்டிகளுக்கு’ உண்டா? என்று குழந்தைகளிடம் சிந்தனை உசுப்பலை விதைக்கிறது இந்நூல்.
அறிவு என்பது உலகை ஆள்வதோ, ஆதிக்கம் செலுத்துவதோ, இயற்கையை வெல்வதோ அல்ல. மாறாக இயற்கையுடன் கைகுலுக்கி வாழ்வதே அறிவு என்று குழந்தைகளுக்கு உணர்த்தப்படுகிறது. அறிவு ஆற்றலெனும் அதிகாரமாக இருக்க இயலாது; அது ஒரு தோழமை உணர்வு. இந்தப்புரிதல் பழங்குடிகளிடம் இயல்பாக இருக்கிறது; எனவே நாமும் பழங்குடிகளாக மாறவேண்டிய தேவையிருக்கிறது.
ஆறறிவுகளை அறிந்த பின்னர் ஐந்திணைகள் அணிவகுக்கின்றன. நமது முன்னோர்களின் ஐந்திணை அறிவு எங்கே போயிற்று? அவற்றை நம்மிடமிருந்து பறித்தது யார்? “மலைகள் தூள்களாகின்றன. காடுகளைக் காணவில்லை. வயல்களுக்கு வாழ்வில்லை. கடல் கதறுகிறது. பாலையும் பாழாகிறது”, என்று ஆட்காட்டிக் குருவி வழியே சொல்லப்படுகிறது.
· கிரானைட் மலை
· பலகைக் காடு
· மனை வயல்
· கழிவுக் கடல்
· தாது மணல்
போன்ற தலைப்புகளே ஐந்திணைகளின் சீரழிவை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
“மலையும் மலை சார்ந்த இடமும்” இருந்த குறிஞ்சி “கிரானைட்டும் கிரானைட் எடுக்கும் இடமுமாக” மாறியதை குறிஞ்சி மலரும்,
“காடும் காடு சார்ந்த இடமான” முல்லை “பலகையும் பலகை எடுக்கும் இடமாகிப்போன” அவலத்தை மருதமலரும்,
“வயலும் வயல் சார்ந்த இடம்” என முன்பு சொல்லப்பட்ட மருத நிலம், “மனையும் மனை சார்ந்த இடமாகத்” திரிந்த நிலையை மருதப்பூவும்,
“கடலும் கடல் சார்ந்த இடமான” நெயதல் “கழிவும் கழிவைக் கொட்டும் இடமாகிப் போனதை” நெய்தல் மலரும்,
“மணலும் மணல் சார்ந்த இடமான” தேரிக்காடு இன்று தாதுக்களும் தாதுக்கள் பிரிக்கும் இடமாக மாறியதை பாலைப்பூவும்,
குழந்தைகளுக்கு மிக அழகிய எளிய நடையில் புரிய வைக்கின்றனர். இதன் வழியே ஐவகை நிலங்களின் நிலையும் இன்றைய சீரழிவும் ஒருசேர விளக்கம் பெறுகின்றன.
அடுத்து ஐம்பூதங்கள். பூதம் என்பது அழகான தமிழ்ச்சொல் அல்லவா! அது எப்படி குழந்தைகளையும் மனிதர்களையும் மிரட்டும் ஒன்றாக மாறிப்போனது? நிலம், தீ, நீர், காற்று, வானம் ஆகிய இந்த ஐம்பூதங்களை அழிக்கும் பேரூயிராக, ‘பெரும் பூதமாக’ மனிதன் ஏன் மாறினான்? ஐம்பூதங்களை
· மூச்சுக் காற்று (காகம்)
· உயிர் நிலம் (புடையான்/இருதலை மணியன்)
· வெப்பம் தணிப்போம் (சூரியன்)
· நன்னீர் நன்று (சேல் கெண்டை)
· வானம் காப்போம் (முகில்)
ஆகிய தலைப்புகளில் குழந்தைகள் பாடம் கற்கிறார்கள்.
கொரோனாப் பெருதொற்று சிலகாலம் மாணவர்களை பள்ளியை விட்டு விரட்டியது. இந்நிலையில் இணைய வகுப்புகள் வளர்ந்தன. நிறைய பன்னாட்டுக் கம்பெனிகள் (பைஜூ, வேதாந்தா) கொசுக்களைப்போல பல்கிப் பெருகின. இதன் குறியீடாக கொசு வருவதாக நினைக்கிறேன். காடழிப்பையும் பேருயிர் அழிவையும் கொசு மூலம் எடுத்துக்காட்டுவது அழகு.
பசுமைப்பள்ளியின் ஆசிரியர்கள்: புதிர்ப்பெட்டி, மரம், மண்புழு, கறையான், தேனீ, ஓங்கில், மாம்பழ வண்டு (ஆறறிவு உயிர்கள்), ஆட்காட்டி (ஐந்திணை அறிமுகம்), ஐந்திணை மலர்கள் (குறிஞ்சி, முல்லை, மருதல் - பூமருது, நெய்தல், பாலை மலர்கள்), ஐம்பூத அறிமுகம் (வௌவால்), காகம், புடையான்/இருதலை மணியன, சூரியன், சேல் கெண்டை, முகில், கொசு (இணைய ஆசிரியர்)
ஆசிரியர்களுக்கு உயிர் இருக்க வேண்டுமா என்ன? உயிருள்ளவையும் உயிரற்றவையும் சேர்ந்ததுதானே இந்தப் புவிக்கோளம்! எனவே சூழலைப் பயிற்றுவிக்க இவர்களே உண்மையான ஆசிரியர்கள். குழந்தைகளுக்குப் பாடங்கள் எழுத மட்டுமல்ல; சூழலியலைப் போதிக்கவும் ஆசிரியர்களும் பேராசிரியர்களும் தகுதியற்றவர்கள்!
மறை நீரைப்போலவே மரத்தாது (செல்லுலோஸ்) போன்ற புதிய சொல்லாக்கங்களையும் அறிமுகம் செய்கிறார். இனிய, எளிய மொழிநடை இதன் சிறப்பு. யாவரும் இந்நூலில் எளிதாக நுழைந்துவிடலாம். ஆனால் இதன் தாக்கம் என்றும் நீடித்து நிற்கும். பாடநூல்கள் இத்தன்மைகளுக்கு எதிராக இருக்கின்றன. எனவே பெரும்பாலான குழந்தைகளுக்கு கல்வி வெறுப்பாகவும் கசப்பாகவும் மாறிவிடுகிறது.
நக்கீரன் முன்னுரையில் கூறியபடி, வகுப்பறைக்கு வெளியே கற்க வேண்டிய பாடங்களை உயிரினங்களே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதுபோல் அமைந்த ‘பசுமைப் பள்ளி’ வாரத்திற்கு அரை நாளாவது குழந்தைகளுக்கு வாய்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? பசுமைப் பள்ளியில் வானமே கூரை, திசைகளே சுவர்கள், இயற்கையே பாடநூல். தாவரங்களும் உயிரினங்களும் இயற்கையுமே இதன் ஆசிரியர்கள். இப்பள்ளியில் குழந்தைகள் மட்டுமல்ல, முன்பு குழந்தைகளாக இருந்த பெரியவர்களும் கற்கலாம் என்று அழைக்கிறது இந்நூல். மொத்தத்தில் நமது வகுப்பறைகள் தவறவிட்ட, கல்விப்புலம் காணாத பாடங்களைப் ‘பசுமைப் பள்ளி’ நமக்குத் தருகிறது.
பகுதி: இரண்டு
ஏன் பாடநூல்களும் வகுப்பறைகளும் (கல்விப்புலம்) இவற்றைத் தவறவிடுகின்றன? என்ற கேள்வியை நாம் கேட்டாக வேண்டும். புதிய பாடநூல்களுக்கான பாடத்திட்டப் பணிமனை நான்காண்டுகளுக்கு முன்பு நடந்தது. அப்போது அறிவியல் பாடத்தில் சூழலியல் பகுதிகளைச் சேர்க்க அறிவியல் ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இது புவியியல் பகுதியில் சேர்க்க வேண்டியது; அறிவியலில் அல்ல என்பது அவர்களது வாதம். அதன்படியே பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு புதிய பாடநூல்கள் தயாரிக்கப்பட்டன. அறிவியல் பாடத்தில் உயிரியல் பகுதியில் கூட சூழலியல் பார்வைக்கான இடமில்லை. மரபணு மாற்றம், மரபணுப் பொறியியலின் நன்மைகள் பக்கமெங்கும் நிறைந்துள்ளன. சூழலியல் வாழ்வோடு இணைந்துப் பயிலவேண்டியது; குறிப்பிட்ட பாடத்துடன் முடிந்துபோகும் ஒன்றல்ல என்பதை கல்விப்புலம் உணர எவ்வளவு காலம் ஆகும் என்பது தெரியவில்லை.
6 முதல் 10 ஆம் வகுப்பு முடிய இயற்பியலுடன் கணினி அறிவியல் பாடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. சமூக அறிவியலுடன் வணிகவியல் பாடங்களை இணைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. குடிமையியல் என்ற பெயரை அரசியல் அறிவியல் என்று மாற்ற இயலாது என்று தெரிவிக்கப்பட்டது. இப்போது பொருளியல் படித்தவர்கள் பணி கேட்கிறார்கள்; இனி அரசியல் அறிவியல் பட்டம் படித்தவர்களும் பட்டதாரி ஆசிரியர் வேலை கேட்பார்கள் என்பது பதிலாகச் சொல்லப்பட்டது. பொறியியல் படித்தவர்கள் பட்டதாரி ஆசிரியராகும்போது அரசியல் அறிவியலுக்கு மட்டும் இடமில்லாமல் போவதேன்? இதுதான் கல்விப்புலச் சூழல்.
மறைநீர் போன்ற சூழலியல் கருத்துகள் இன்று பாடநூலில் இடம்பெற்றுள்ளன. ஆனால் இவை சூழலியல் புரிதலுடன் எழுதப்பட்டவை அல்ல; வெறும் நகலெடுப்புகளாக இவை இருக்கின்றன. மேலும் உலகமயம், வணிகமயத்திற்கு ஆதரவான கருத்துருவாக்கத்திற்கு துணைசெய்ய இவை பயன்படுத்தப்படுகின்றன. (எ.கா.) வேளாண்மையில் நீர்ப் பயன்பாட்டைக் குறைத்தல், மாற்றுப்பயிர் சாகுபடி. குழந்தைகளுக்கான மொழி பாடநூல்களில் அறவே இல்லை. ஆறாம் வகுப்புப் பாடம்கூட ஆங்கிலத்தில் எழுதப்பட்டுப் பின் தமிழில் பெயர்க்கப்படுகிறது. இதற்கு ‘Google Translate’ பயன்படுவதுதான் விந்தை!
பொருளியலிலும்கூட பகுதியில் ‘மறைநீர்’ (Virtual Water) அறிமுகமாகிறது. மகிழ்ச்சியாக இருக்கிறதா? கொஞ்சம் பொறுங்கள்! ‘தமிழகத்தின் வேளாண்மை’ (பக்.327) என்ற இப்பாடத்தில் வேளாண்பயிர்கள் உற்பத்தியின் மறைநீர் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகிறது. தோல், பின்னலாடை, கார் தொழிற்சாலைகளைப் பற்றிய பேச்சே இல்லை!
நெல், கோதுமை போன்ற உணவுப்பயிர்களைச் சாகுபடி செய்ய அதிகளவு நீர் தேவைப்படுகிறது. எனவே சொட்டு நீர்ப்பாசனம் போன்ற நவீன முறைகளைப் பின்பற்றவும் நெல்லுக்குப் பதிலாக மாற்றுப் பயிர்களைப் பரிந்துரைக்கவுமான ஏற்பாடாகவே இருக்கிறது. நெல்லுக்கு எப்படி நுண்ணீர்ப் பாசனத் தொழிநுட்பம் சாத்தியமாகும்? எனவே வேறு பயிரை உற்பத்தி செய்யுங்கள், என்பதே இதன் பொருள். அன்று அவுரி; இன்று எண்ணைய் பனை என நீண்ட பட்டியலே இருக்கிறது.
பசும்பொன் முத்துராமலிங்கர் காமராஜருக்கு ஆட்டுக்குட்டி வரிகட்டி தேர்தலில் போட்டியிட வைத்த கதைகள் (7 தமிழ்) மட்டுமல்ல; சிட்டுக்குருவிகளுக்குப் பாரதியார் அரிசி வைத்த கதையும் (6 தமிழ்) குழந்தைகள் படிக்கக் கிடைக்கின்றன. இதன்மூலம் பாடமெழுதிகளின் சூழலியல் அறிவை உணரமுடியும்.
“உயிர்களிடத்தில் அன்பு வேணும்”, என்ற கருத்தை குழந்தைகளிடம் பதியவைக்கப் பாடநூலுக்குக் கிடைத்தது மநுநீதிச்சோழன் கதை (5 தமிழ்) மட்டுமே! இங்கே நீதிமன்றங்களும் மநுநீதி வாயிலாகவே அறிமுகம் ஆகின்றன. இவை மநுநீதியை சமூகக் கடமைகள் (8 சமூக அறிவியல்) என வரையறுக்கின்றன.
பாடநூல் உருவாக்கத்தில் ஒரு படிநிலை வரிசை (Hierarchy) கடைபிடிக்கப்படும். இடைநிலை ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை (1-5 வகுப்புகள்) பட்டதாரி ஆசிரியர்களும் பட்டதாரி ஆசிரியர்கள் பாடம் நடத்தும் வகுப்புகளுக்கு (6-10 வகுப்புகள்) முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நடத்தும் வகுப்புகளுக்கு (+1 & +2) கல்லூரி மற்றும் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் பாடங்களை எழுதுவார்கள். விதிவிலக்காக சிலர் கறிவேப்பிலையாகப் பயன்படுத்தப்படுவர். அவர்களது சொற்களும் எழுத்துகளும் அம்பலம் ஏறாது. ஆனால் பாடம் எழுத ஆசிரியர்களும் பேராசிரியர்களும் பொருத்தமானவர்கள் அல்ல என்பதே எனது முடிவு. இதற்காக யாரும் வருத்தப்படத் தேவையில்லை. வகுப்பறை அதிகாரத்துடன் பாடநூல் அதிகாரத்தையும் அவர்கள் சுமக்க வேண்டாம் என்று கருதுகிறேன்.
எல்லாவற்றையும் மேலாய்வு செய்ய பேராசிரியப் பெருமக்களும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன (SCERT) அதிகாரிகளும் இருப்பார்கள். இவர்களது தணிக்கை மற்றும் திருத்தங்கள் திரைப்படத் தணிக்கையைவிட மோசமானது. மொகலாயர்களின் கடைசி அரசர் ஔரங்கசீப் என்று பாடநூலில் சொல்லிவிட்டு, தவறு இருந்தால் உரிய ஆதாரங்களைக் கொடுங்கள் என்பார்கள். இவற்றை எழுதுவதற்கு எது ஆதாரமாக இருந்தது என்று அவர்கள் என்றும் சொன்னதில்லை! பாடநூல்களில் மேற்கோள் நூல்கள் என்று பெரும்பட்டியல் நம்மை மிரட்டும். பாடத்திற்கு அவற்றிற்கும் துளியும் தொடர்பிருக்காது. (எ.கா.) வரலாறு – ரொமிலா தாப்பர், அஸ்கோ பர்போலா, பர்ட்டன் ஸ்டெயின், இர்பான் ஹபீப், நொபொரு கரஷிமா, க.ராஜன், சண்பகலெட்சுமி, ஏ.எல்.பாஷம்
பாடநூல் குழுவில் இருக்கும் பேரா. க.அ.மணிக்குமார் வேலூர் புரட்சியை (1806) இந்திய வரலாறு கண்டுகொள்ளவில்லை என்று ‘இந்து தமிழ் திசை’யில் நடுப்பக்கக் கட்டுரை எழுதுவார். அவர் எழுதிய பாடநூலிலும் (8, 10 வரலாறு) ‘வேலூர் கலகம்’ என்றுதான் இருக்கும்!
வளர்ப்பு மீன்களில் தூண்டப்பட்ட இனப்பெருக்கம் (ஹைபோஃபைசேஷன் – Hypophysation), கோழி வளர்ப்பு, மரபணுப் பொறியியல் ஆகிய அறிவியலில் உச்சமாகப் போற்றுவதை மட்டும் இலக்காக கொண்டு பாடநூல்கள் (+1 விலங்கியல், வணிக விலங்கியலின் போக்குகள்) இயங்குகின்றன. இதன் உண்மையான மறுபக்கத்தைக் காணத் தவறுகின்றன. அந்த இடத்தை ‘பசுமைப் பள்ளி’ போன்ற நூல்கள்தான் நிரப்புகின்றன.
சூழலியல் போராளி நம்மாழ்வாரை பாடநூல் அறிமுகம் செய்கின்றது என்று சிலருக்குப் பெருமையாக இருக்கிறது. கூடவே பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதனும் ஒரே பக்கத்தில்தான் அறிமுகம் செய்யப்படுகிறார். கோ.நம்மாழ்வார் என்று குறிக்கும் பாடநூல் மா.சா.சுவாமிநாதன் என்றும் மான்கொம்பு சாம்பசிவம் சுவாமிநாதன் என்றும் விரித்தெழுதி அறிமுகப்படுத்துகின்றனர். அவர் எங்காவது இவ்வாறு எழுதியிருக்கிறாரா? நமக்கு ‘மான்கொம்பு’ என்றதும் மணலூர் மணியம்மாவைக் குத்திக் கொன்றப் படுகொலைதான் நினைவிற்கு வருகிறது.
9 ஆம் வகுப்பு அறிவியலில், “கரிமப் பொருள்களை செரிமானம் செய்தபின் இவை நைட்ரஜன் சத்து நிறைந்த புழுவிலக்கிய மண் (Vermicasting) எனப்படும் கழிவை வெளியேற்றுகின்றன”, (பக்.309) என்று மண்புழுவைப் பற்றிச் சொல்லிக் கொடுக்கிறார்கள். Vermi compost ஐத்தான் இவ்வாறு சொல்கிறார்கள். நாங்கூழ் மண்தான் இங்கு ‘புழுவிலக்கிய மண்’ ஆகிறது. +1 விலங்கியலில் நாங்கூழ் கட்டிகள் (castings) மண்புழு கழிவு (vermi cast) என்கிறார்கள்.
“மண்புழு உழவர்களின் சிறந்த நண்பன். மண்புழுக்கள் ஓரு ஆண்டில் ஒரு மெட்ரிக் டன் அளவு மண்ணை மேலும் கீழும் இடமாற்றம் செய்கிறது. இது 100 லிட்டர் புதைபடிவ எரிபொருளுக்குச் சமம்”. (பக்.257, +1 விலங்கியல்) காந்தியவாதி ஜே.சி.குமரப்பா டிராக்டர் சாணி போடுமா? என்று கேட்டார். டிராக்டரால் உழுவதும் மண்புழு மண்ணைத் துளையிடுவதும் இவர்களுக்கு ஒன்றாகவே தெரிகிறது. மேற்பகுதி மண்ணைக் கிளறி, அடிப்பகுதி மண்ணை அழுத்திவிடுவதுதான் டிராக்டரின் பணி.
“அணுக்கரு உலையானது அதிக அளவில் மின் உற்பத்திக்குப் பயன்படுகிறது”, “இந்திய மின் உற்பத்தியில் அணு சக்தியானது ஐந்தாவது வளமாக உள்ளது”, (பக்.84, 10 அறிவியல்) என்றெல்லாம் அணு உலைப் பெருமைகள் உண்மைகளை மறைக்கப் பயன்படுகின்றன.
சர்ப்பகந்தி (ரவுல்பியா செர்பன்டினா) என்ற மூலிகைத் தாவரத்தை ‘சிவன் அவல் பொறி’ (9 அறிவியல்) என்றே அறிமுகம் செய்கின்றனர். இதைப்போல அறிவியலில் மதவாதத்தை தேவையின்றி நுழைக்கும் கொடுமையும் பல இடங்களில் நடக்கிறது. ஆனால் சூழலியல் புரிதலின்றி வெறுமனே அறிவியல் பெருமை பாடுவது தொடர்கிறது.
வெளிமானை (Black buck) ‘ப்ளாக் பக்’ மற்றும் கருப்பு பக் என்றே பாடநூல் சொல்கிறது. இரலை என்பது ஆண் மானையும் கலை என்பது பெண் மானையும் குறிக்கும். கருமான், புல்வாய், திருகுமான், முருகுமான் என்றெல்லாம் அழைக்கப்படும் இவ்விலங்கு ஆந்திரா, பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களின் விலங்களாகவும் உள்ளது. நமது மாநில மலரான செங்காந்தளைக் கூட ‘மலபார் லில்லி’ என்றே பாடநூல் அறிமுகம் செய்கிறது. நீலகிரி வரையாட்டையும் தர்/தரர் என்றெல்லாம் சொல்லி அழகு பார்க்கிறது பாடநூல்!
அடித்தட்டு மக்கள், தொழிலாளர் உரிமைகள், மதவாத எதிர்ப்பு போன்ற சில அம்சங்களாவது நாம் இடதுசாரிகளைக் குறிப்பாக மார்க்சியர்களை நேர்மறையாக அணுக வேண்டியுள்ளது. சூழலியல் என்று வந்துவிட்டால் ஆர்.எஸ்.எஸ். காரர்களைப் போல இவர்களிடம் சண்டையிட்டே ஆகவேண்டும். பாடநூல் உருவாக்கத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமுஎகச போன்ற பல்வேறு இடதுசாரி அமைப்புகளின் பங்களிப்புகள் அதிகம். எனவே (கூடங்குளம்) அணு உலை, தேனி நியூட்ரினோ ஆய்வகம், செயற்கைகோள்கள், ஏவூர்திகள், இஸ்ரோ, அப்துல்கலாம் பெருமைகள் பாடநூலின் நிறைகின்றன. சூழலியல் கருத்துகள் ஆங்காங்கு, அதுவும் சரியற்ற முறையில், விகிதத்தில் தூவப்படுகின்றன.
ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை (2020) இவர்களுடன் சேர்ந்துதான் அனைவரும் மிகக்கடுமையாக எதிர்த்தோம். இன்று ‘இல்லம் தேடிக் கல்வி’ போன்ற அதன் நகலைக் கொண்டாடும் நிலைக்கு வந்துள்ளனர். இவர்களும் தன்னார்வலர்கள், என்.ஜி.ஓ.க்களின் பிரதிநிதிகளாக மாறியுள்ளது வரலாற்றுச் சோகம். மார்க்சியத்தைப் புரிந்துகொள்ள இயலவில்லை என்பது அந்தக் காலம்; மார்க்சியர்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதே இந்தக் காலம்!
பகுதி: மூன்று
இன்று தமிழக அரசு பல்வேறு குழுக்கள் அமைத்து பல அறிவிஜீவிகளுக்கு இடமளிப்பதைப்போல, 2018 இல் புதிய பாடநூல் தயாரிப்பிற்காக பல்வேறு குழுக்கள் அப்போதைய பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் த.உதயச்சந்திரனால் அமைக்கப்பட்டன. இதில் பிரபஞ்சன், தியோடர் பாஸ்கரன், டிராஸ்கி மருது, வ.கீதா, ச.தமிழ்ச்செல்வன், த.வி.வெங்கடேஸ்வரன், ஏ.எஸ்.பத்மாவதி, அப்பணசாமி, இரா.எட்வின், ஷாஜஹான், போன்ற பல இலக்கிய ஆளுமைகளும் இ.சுந்தரமூர்த்தி, சி.சுப்பிரமணியம், ச.மாடசாமி, கி.நாச்சிமுத்து, வீ.அரசு, பா.மதிவாணன், க.அ.மணிக்குமார், ஆ.இரா.வேங்கடாசலபதி போன்ற பல ஆய்வாளர்களும் இடம் பெற்றனர்.
இந்தக் காலகட்டத்தில் நண்பர்களுடன் செயலாளர் த.உதயச்சந்திரனை நேரில் சந்தித்து பாடத்திட்ட பணிமனை நடந்த அபத்தங்களை எடுத்துக்காட்டி கவனிக்க வேண்டிய அம்சங்களை எடுத்துக் கூறினோம். எழுத்துப்பூர்வமான கடிதமும் வழங்கினோம். சூழலியல் சார்ந்த பாடங்களை நக்கீரன், கோவை சதாசிவம் போன்றோரைக் கொண்டு எழுத வேண்டும் என்று கோரிக்கையும் வைத்தோம். நல்லவேளையாக அக்கோரிக்கை ஏற்கப்படவில்லை! இத்தகைய எழுத்துகளை பாடநூல் தயாரிக்கும் அதிகாரிகள் விரும்புவதோ, ஏற்பதோ இல்லை.
எனது அனுபவம் ஒன்று: ஆறாம் வகுப்பு முதல் பருவ சமூக அறிவியல் வரலாற்றுப் பகுதியில் வரலாறு தொடர்பான ஓர் அறிமுகப்பாடம் (வரலாறு என்றால் என்ன?). அப்பாடத்திற்குச் செயல்பாடுகள் தயாரிக்கச் சொன்னார்கள். நானும் 10 செயல்பாடுகளை எழுதி அனுப்பினேன். அவற்றில் ஒன்று: “நானும் ஒரு வரலாற்று ஆசிரியன்”
தாத்தா, பாட்டி அண்டை வீட்டுப் பெரியவர்கள், ஆசிரியர்கள் ஆகியோருடன் உரையாடி இல்லம், தெரு, ஊர் / நகர், பள்ளி நிகழ்வுகளைக் கேட்டுக் குறிப்பெடு. பள்ளி பற்றிய விவரங்களைச் சேகரி. குறிப்பெடுத்த, சேகரித்த செய்திகளைக் கொண்டு உன் குடும்பம், தெரு, ஊர் / நகர், பள்ளி வரலாற்றை எழுதிப்பார்.
பள்ளிகளில் விவரப் பலகை இருக்கும். அதைப் பார்த்து கூட பள்ளியைப் பற்றி 10 வரிகள் எழுதமுடியும். ஆனால் பாடத்தில் இது எவ்வாறு இடம் பெற்றது தெரியுமா? “நானும் ஒரு வரலாற்று ஆசிரியர்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக. இதுதான் தமிழகப் பாடநூலின் பொதுக்குணம். 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பொருளியல் பகுதியில் ‘பணம் மற்றும் கடன்’ என்றொரு பாடம். இப்பாடத்தின் செயல்பாடு, “நீ வெளிநாட்டிற்குச் சென்று கட்டிடக்கலை வல்லுநருக்கான மேற்படிப்பைப் பயில கல்விக் கடன் பெறும் வகையில் வங்கி மேலாளருக்கு விண்ணப்பம் ஒன்று வரைக”. (பக்.324)
ஒருவேளை நக்கீரனின் ‘பசுமைப் பள்ளி’ நூலின் பாடங்கள் பாடநூல் மேலாய்வுக் குழுவிற்கு அனுப்பப்பட்டால் என்ன நடந்திருக்கும்? ஒரு கற்பனை:
· மண்புழு என்ன பொறியாளரா? உழவனின் நண்பன் என மாற்றுங்கள்.
· நாட்டுமிராண்டிகள் என்று சொல்வது தவறு. நாட்டு மனிதர்கள் என்று மாற்றி எழுதவும்.
· ஐந்திணைப் பாடங்கள் அரசின் கொள்கைகளை எதிர்க்கின்றன. கம்யூனிசக் கொள்கைகளையும் நக்சல் சிந்தனைகளையும் பாடநூலில் இணைக்க முடியாது.
· மனிதன் பற்றிய எதிர்மறையான சிந்தனைகளைக் குழந்தைகளிடம் விதைக்கிறது.
· மனிதனின் ஆறாவது அறிவான பகுத்தறிவை விமர்சிப்பது தவறானது.
· இந்தப் பாடங்கள் குழந்தைகளுக்கும் பாடநூலுக்கும் ஏற்றதல்ல.
என்றெல்லாம் பரிந்துரை செய்யப்படும். மொத்தத்தில் இந்நூல் கல்விப்புல அதிகாரிகளால் நிராகரிக்கப்படும்.
(நக்கீரனின் ‘பசுமைப் பள்ளி’ நூல் குறித்த அறிமுகம்.)
நூல் குறிப்புகள்:
பசுமைப் பள்ளி – நக்கீரன்
பக். 72, விலை: ரூ.100
முதல் பதிப்பு: டிசம்பர் 2021
வெளியீடு:
காடோடி பதிப்பகம்
6, விகேஎன். நகர், நன்னிலம் – 610105,
திருவாரூர் – மாவட்டம்.
அலைபேசி: 8072730977
(ஏப்ரல் 02, 2022 திருவாரூரில் ‘தனிச்சொல்’ அமைப்பு ஏற்பாடு செய்த விமர்சன அரங்கிற்காக தயாரிக்கப்பட்ட கட்டுரையின் முழு வடிவம். இதன் பகுதி: ஒன்றின் சுருங்கிய வடிவம் ‘பேசும் புதிய சக்தி’ மே 2022 மாத இதழின் நூல் அறிமுகம் பகுதியில் வெளியானது.)
நன்றி: ஜமாலன், க.ஜவகர், நக்கீரன், ஜெ.ஜெயகாந்தன், எஸ்.செந்தில்குமார் மற்றும் பேசும் புதிய சக்தி இதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக