வெள்ளி, ஜூலை 29, 2022

சிபிசிஐடி விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்!

 

சிபிசிஐடி விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்!

மு.சிவகுருநாதன்

      கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் பள்ளி மாணவியின்  மரண விசாரணையை சிபிசிஐடி நடத்தும்விதம் விமர்சனத்திற்குரியதாக உள்ளது. இதன்மூலம் நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கை பொய்த்துப் போயுள்ளது.

       நீதிமன்றக் காவலில் இருக்கும் குற்றஞ்சாட்டுக்கு உள்ளானவர்களை  காவலில் எடுத்து விசாரிப்பது இயல்பான வழக்கு நடைமுறையாகும். பொதுவாக காவல்துறை கேட்கும் நாள்களில் சில நாள்களைக் குறைத்து நீதிமன்றம் உத்தரவிடும்.

      இந்த வழக்கில் 72 மணி நேரம் அதாவது மூன்று நாள்கள் போலீஸ் விசாரணைக்குக் கேட்கப்பட்டது. நீதிமன்றம் 24 மணி நேரம் அதாவது ஒரு நாள் வழங்கியது.

       ஆனால் சிபிசிஐடி வெறும் 12 மணி நேரம் மட்டும் விசாரித்து உடனே அவர்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்து அதிர்ச்சி அளித்துள்ளனர்.

      இதற்கான காரணம் யாருக்கும் விளங்கவில்லை. அப்புறம் ஏன் 3 நாள் கேட்டார்கள் என்பது வியப்பாக உள்ளது. இது வெளிப்படையான நாடகமாக இருக்கிறது.

        இந்த வழக்கில் சிபிஐ விசாரணை கூட நேர்மையாக இருக்குமா என்கிற அய்யமே ஏற்படுகிறது. ஒன்றிய, மாநில அரசுகள் என இரண்டுமே குற்றஞ்சாட்டப்பட்டவர்களைப் பாதுகாக்கத் துடிக்கும் விந்தை வழக்காக இவ்வழக்கு உள்ளது.

       எனவே, உயர்நீதிமன்றம் இவ்வழக்கின் விசாரணையை கண்காணிக்க வேண்டும். இவ்வழக்கில் உரிய நீதி கிடைக்கவும் நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கை மக்களிடம் உறுதிப்படவும் இது மிகவும்  அவசியமாகும்.

செவ்வாய், ஜூலை 12, 2022

கிரிக்கெட் திடலான யுனெஸ்கோ மரபுச்சின்னம்!

 கிரிக்கெட்  திடலான யுனெஸ்கோ மரபுச்சின்னம்!

 

மு.சிவகுருநாதன்

 

         09/07/2022 சனியன்று கவிநிலா, கயல்நிலாவுடன் தஞ்சை சென்று வரலாம் என்று கிளம்பினோம். மதியம் 2:10 (14:10) காரைக்கால்-திருச்சிராப்பள்ளி பயணியர் தொடர்வண்டியில் (எண்:56711)  செல்லலாம் என்று நினைத்தோம். கொரோனாவால் நிறுத்தப்பட்ட அத்தொடர்வண்டி இன்னும் இயக்கப்படவே இல்லையாம்! பேருந்துகளின் நிலையும் அவ்வாறுதான் உள்ளது. இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டதாக நாம் நினைத்துக் கொண்டுள்ளோம். மணிக்கணக்கில் காத்திருந்தும் தஞ்சாவூர்-திருச்சி வழியில் செல்லும் பேருந்துகள் வரவில்லை.

          நேரமாகிவிட்டதால் தஞ்சை சென்று திரும்புவதில் காலதாமதம் ஏற்படும் என்பதால் கும்பகோணம் பேருந்தில் ஏறினோம். அது ஒரு தனியார் பேருந்து. மெதுவாக இயக்கும் மிதிவண்டிப் போட்டியைப் பார்த்திருப்போம். 40 கி.மீ. தூரத்தை 2 மணி நேரத்தில் கடக்கும் அளவிற்கு அவ்வளவு மெதுவாகப் பேருந்து ஊர்ந்து சென்றது.  இரவும் பேருந்திற்கு மணிக்கணக்கில் காத்திருந்து திரும்ப வேண்டியிருந்தது. போதுமான பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. இரவுநேரப் பேருந்துகள் பெருமளவு குறைக்கப்பட்டுவிட்டன. சென்னைக்கு மட்டுமே பேருந்துகள் அதிகம் இயக்கப்படுகின்றன. பெருநகரங்கள் வாழ்ந்தால் போதுமென்ற மனப்பான்மை மிகக் கொடியது.

        கும்பகோணத்திலிருந்து சிற்றுந்தில் ஏறி தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலை அடைந்தோம். கவி முன்பொருமுறை வந்திருக்கிறார். கயலுக்கு இது முதல் முறை. கோயில் வளாகம் கிரிக்கெட் விளையாடுமிடமாக மாறியுள்ளது. உரிய பராமரிப்பின்றி குப்பை மேடாக புல்தரைகள் உள்ளன. கிரிக்கெட் விளையாடுவதாலும் நீரின்றியும் அவைகள் மிக மோசமான நிலையில் உள்ளன. எங்கு நின்றாலும் கிரிக்கெட் பந்துகள் உரசிச் செல்கின்றன. கிட்டத்தட்ட ஐந்தாறு அணிகள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டுள்ளன.  

         காதலர்கள் என்றால் ஒதுக்குப்புறமாகச் சென்றுவிடலாம்! பிறர் பந்தடிபட்டு சாக வேண்டியதுதான். யுனெஸ்கோவால் மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இடமாகத் தெரியவில்லை. தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் ஆகிய மூன்று கோயில்களும் யுனெஸ்கோ மரபுப் பட்டியலில் பிற்காலச் ‘சோழர் பெருங்கோயில்கள்’ என்ற பெயரில் இடம் பெறுபவை. இவற்றை பழமை மாறாமல் பராமரித்துப் பாதுகாப்பது தொல்லியல் துறையின் பணி. அத்துறைக்கு சரஸ்வதி நதியை அகழ்வாய்வு செய்து கண்டுபிடிக்கும் பல்வேறு பணிகள் இருக்கின்றன!

        கீழடி அகழ்வாய்வில் இந்தியத் தொல்லியல் துறை மற்றும் ஒன்றிய அரசின் உண்மை முகம் வெளிப்பட்டதைக் கண்டோம். மாநில அரசும் இவர்களுக்கு ஒன்றும் சளைத்ததில்லை. கோயில்களில் குடமுழுக்கு மற்றும் அன்னதானங்கள் நடத்திவிட்டால் போதுமென்று நினைக்கும் கூட்டம்தான் இங்குள்ளது. 850 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு மரபுச் சின்னத்தை  இவ்வாறு சீர்கெட அனுமதிப்பது தகுமா? தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம் கோயிலின் தற்போதைய நிலைகள் தெரியவில்லை. கண்டிப்பாக கிரிக்கெட் திடலாக மாறியிருக்காது என்று நம்புவோம்.

       இலவசக் கழிப்பிட வசதி உள்ளது. உள்ளே சென்றால் ரூ. 5 கேட்கிறார்கள். கட்டணமில்லாக் கழிப்பிடத்தில் வசூல் செய்யப்படுகிறது. பேரூராட்சியாக இருந்த தாராசுரம் கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுவிட்டது. இங்கு அடிப்படை வசதிகளைக் கூட செய்யவும் பராமரிக்கவும் எந்த முயற்சியும் இல்லை.

            இக்கோயில் வாசலில் நந்தியருகே இசைப்படிக்கட்டுகள் என்று சொல்லக்கூடிய படிகள் இருக்கின்றன. இவற்றை மக்கள் சோதித்துப் பார்ப்பதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க கம்பிவலைத் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். அவற்றிலும் துளைகளை ஏற்பட்டு கற்கள் மற்றும் காசுகளை வீசி இசையை சோதிக்கும் நிலை இருப்பதைக் காணமுடிகிறது.

       ராஜராஜேஸ்வரம் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படும் இக்கோயில் கி.பி. 1143-1173 காலகட்டத்தில் ஆண்ட பிற்காலச் சோழ மன்னன் இரண்டாம் ராஜராஜனால் கட்டப்பட்டது. பிற்காலச் சோழ மரபில் மன்னர்கள் தங்களுக்காகவே இத்தகைய கோயில்களை நிர்மாணித்தனர். தஞ்சாவூர் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வரிசையில் இக்கோயிலும் இடம்பெறுகிறது. அவர்கள் தங்களை மன்னனாக மட்டுமல்லாது கடவுளாகவும் எண்ணிக்கொண்டவர்கள். அவர்களது செயல்பாடுகள் பலவும் இதை நோக்கியே அமைந்தன. இங்கு இறைவிக்கான (பெரிய நாயகி அல்லது தையல் நாயகி) கோயிலைத்  தனியே  அமைத்திருப்பதையும் காணமுடிகிறது.   இரண்டாம் ராஜராஜனுக்கு மகப்பேறு இல்லை. எனவே விக்கிரமச் சோழனது மகள் வயிற்றுப் பேரனான எதிரிலிப் பெருமான் என்பவரை வளர்த்து ராஜாதிராஜன் (இரண்டாம்) என்று கி.பி. 1163 இல் இளவரசுப் பட்டம் சூட்டுகிறார். இதற்குரிய தொடர்புகள் குறித்தும் ஆராய வரலாற்றில் இடமுண்டு.

       இவ்வூர் முன்பு ராஜராஜபுரம் என்றே வழங்கப்பட்டு வந்தது; பின்னர் தாராசுரம் என்று மருவியது. இங்கும் சோழ அரண்மனை இருந்திருக்க வேண்டும். பிற்காலச் சோழர்களின் வரலாற்று ஆசிரியர்களும் பிறரும் சோழப்பெருமைக்கு ஆட்பட்டவர்கள். இதனால் வரலாற்றெழுதியலுக்கு ஏற்பட்ட இழப்புகள் ஏராளம். அதுவும் தஞ்சைப் பெரிய கோயில் மற்றும் முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன் ஆகியோரின்  பெருமை பாடுவதே இதன் மையமாக இருக்கும்.  சாளுக்கிய-சோழ மரபை பாராட்டும் மரபு இவர்களிடம் இல்லை. இதற்குள்ளாக ஊடாடும் இனத்தூய்மை போன்றவற்றையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. “குலோத்துங்கன் உடலில் பெருமளவு ஓடியது சோழர்குலக் குருதிதான்”, என்று மரபணு ஆய்வு செய்யும் (!?) டாக்டர் கே.கே.பிள்ளை அவர்களின் வரிகள் இதனை மெய்ப்பிக்கும். (காண்க: பக். 290, தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, டாக்டர் கே.கே.பிள்ளை)

     “இந்தக் கோயில் கட்டியபோது ஆட்சி செய்த இரண்டாம் ராஜராஜன் பெயரால் கல்வெட்டுக்களில் இராஜராஜேஸ்வரம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், மூன்றாம் குலோத்துங்கச் சோழனும் இந்தக் கோயிலில் புதிதாக பல திருப்பணிகளைச் செய்திருக்கிறான்”, (பக்.949, சோழர்கள் – தொகுதி 02, பேரா.நீலகண்ட சாஸ்திரி) என்று மிக எளிதாகக் கடந்து விடுகிறார் சாஸ்திரி.

      இது கிட்டத்தட்ட பிற்காலச் சோழர்களின் இறுதிக் காலகட்டமாகும். இரண்டாம் ராஜராஜனுக்குப் (கி.பி. 1146 – கி.பி. 1163) பின்னர் இரண்டாம் ராஜாதிராஜ சோழன் (கி.பி. 1163 – கி.பி. 1178), மூன்றாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1178 – கி.பி. 1218), மூன்றாம் ராஜராஜ சோழன் (கி.பி. 1216 – கி.பி. 1256), மூன்றாம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1246 – கி.பி. 1279) போன்றோரின் ஆட்சி நடைபெற்றாலும் பிற்காலச் சோழர்களின் ஆதிக்கமும் அதிகார பலமும் நலிவடைகிறது.

      இவரது காலத்தில் போர் பற்றிய குறிப்புகள் இல்லை, எனவே நாடே அமைதியாக இருந்தனர், மக்கள் நலமுடன் வாழ்ந்தனர் என்று வரலாறு எழுதுகின்றனர். அதிகமாக இவர்கள் நம்புவது மெ(பொ)ய் கீர்த்திகளைத்தான்!  இத்தகைய வரலாற்றெழுதியல்கள் எங்கும் நிறைந்துள்ளன. தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம், திருவாரூர் கோயில்களைப் பற்றி தலையணை அளவுகளில் நூல் எழுதியுள்ளார் குடவாயில் பாலசுப்பிரமணியன். இவைகளும் சோழப்பெருமிதங்களின் விளைச்சலாகவே இருக்கின்றன. அத்துடன் தல புராணங்களை வரலாறாக எழுதும் தன்மையும் மிகுந்துள்ளது.  

      எனவே அறிவுப்பூர்வமான வரலாற்றாய்வுகளுக்கு பர்ட்டன் ஸ்டெய்ன், நொபொரு கரஷிமா போன்றோர்களின் ஆய்வுகளையே நாட வேண்டியிருக்கிறது.  

 









 

வெள்ளி, ஜூலை 08, 2022

மாணவர்களுக்கு விகிதாச்சாரப் பகிர்வின் மூலம் இடஒதுக்கீடு வேண்டும்.

 மாணவர்களுக்கு விகிதாச்சாரப் பகிர்வின் மூலம் இடஒதுக்கீடு வேண்டும்.

 

 

பேரா. பிரபா கல்விமணி @ பா.கல்யாணி

 

(கல்வியாளர், மனித உரிமைப் போராளி, செயல்பாட்டாளர், பேராசிரியர் பிரபா கல்விமணியுடன் ஒரு  நேர்காணல்.)

நேர்காணல்: மு.சிவகுருநாதன்

 


 

           ‘திண்டிவனத்து வக்கீல்’ என்று மக்கள் அன்புடன் அழைக்கும் பேரா.பா.கல்யாணி எனும் பிரபா.கல்விமணி உண்மையில் வழக்கறிஞர் அல்ல;  விழுப்புரம், திண்டிவனம் அரசுக்கல்லூரிகளில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றிவர்.  திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டம் சௌந்தரபாண்டியபுரத்தில் பிறந்த இவர் தற்போது வசிப்பது திண்டிவனம். திருமணம் செய்துகொள்ளாமல் பழங்குடியினர், ஒடுக்கப்பட்டோரின் குரலாகவும்  மனித உரிமைப்பணிகளிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருப்பவர். 

 

         புரட்சிப் பண்பாட்டு இயக்கம் (புபஇ), மக்கள் கல்வி இயக்கம் (மகஇ) போன்ற இயக்கங்களிலும் செயல்பட்டவர். உண்மையறியும் குழுக்களிலும் மனித உரிமைப்பணிகளிலும் ஈடுபடவும் அடித்தட்டு மக்களுக்கு உழைக்கவும் அரசுப்பணி தடைக்கல் அல்ல என்பதை நிருபித்தவர். மக்கள் கல்வி இயக்கத்தின் மூலம் தனிப்பயிற்சி மையங்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தவர். வெகுமக்களைத் திரட்டிப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர். அதன் பொருட்டு இவர் திண்டிவனம் அரசுக்கல்லூரியிலிருந்து மாற்றப்பட்டபோது அப்பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு போராடியதால் நகரே முடங்கிப்போனது. உடன் இவரது பணி மாறுதல் ஆணை விலக்கிக் கொள்ளப்பட்டது. இதைவிட இவரது பணிகளுக்கான வேறு அங்கீகாரம் இருக்க முடியாது.

 

        தன்னை முன்னிலைப்படுத்தாமலும் அறிவுஜீவியாக ஒதுங்கிப்போகாமலும் உள்ளூர் நற்பணி மன்றங்கள், இயக்கங்கள்  போன்றவற்றை ஒருங்கிணைத்து வெகுமக்கள் இயக்கங்களைக் கட்டியமைப்பதிலும் அவர்களை ஒன்றுதிரட்டிப் போராடுவதில் இவருக்கு  இணையில்லை. கல்லூரி ஆசிரியர் சங்கத்திலும் சிறப்பாகச் செயல்பட்டவர்.

 

        1993இல் அத்தியூர் விஜயா வழக்கில் நீதிக்காகப் போராடினார். அதன் தொடர்ச்சியாக 1996இல்  பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தை நிறுவி அவர்களின் மேம்பாட்டிற்காகவும் உரிமைகளுக்காகவும் அயராது உழைத்து வருகிறார். இதற்காகவே பேராசிரியர் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். 

 

        2000இல் திண்டிவனம் ரோசனையில் தாய்தமிழ்ப்பள்ளியைத்  தொடங்கி இலவச தமிழ்வழிக் கல்வியை மதிய உணவு, சீருடைகளுடன் வழங்கி வருபவர். அரசின் உதவிகள் இல்லாத நிலையில் நன்கொடைகள் மூலம் இதைச்  சாத்தியப்படுத்தியிருக்கிறார். அரசுப்பள்ளி மாணவர்களுக்காகவும் அவர்களது கல்வி உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பவர். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீட்டை வலியுறுத்துபவர். இவரது கனவு 7.5% ஒதுக்கீடு என அரசுப்பள்ளி மாணவர்களுக்கு  பகுதியளவு நிறைவேறியுள்ளது.  அடித்தட்டுக் குழந்தைகள் உயர்கல்வியை எட்டவும்   திரைக் கலைஞர் சூர்யாவின் ‘அகரம் அறக்கட்டளை’ வழியாக உதவிகளைப் பெறவும்  இவரது பெரும்பணிகள்  உதவியிருக்கிறது. 

 

        அதிர்ந்து பேசாமல் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒடுக்கப்பட்டோர் நலன், மனித உரிமைகள் போன்ற குவிமையத்தில் 75 வயதைக் கடந்தும் இளைஞரைப்போலத் துடிப்பாக இயங்கி வருகிறார். இவரது பணிகள் என்றும் தொடரும் வகையில் அடிப்படைகளை ஏற்படுத்தியுள்ளார். அருட்தந்தை அ.ரபேல்ராஜ், புனித அன்னாள் சபை சகோதரி லூசினா போன்றோருடன் இணைந்து பழங்குடியினருக்கான பணிகளைச் செய்துகொண்டு வருகிறார். 

 

          சந்தன வீரப்பன்  கன்னட நடிகர் ராஜ்குமாரைக் கடத்தியபோது அரசின் தூதுவராக பழ.நெடுமாறன், புதுவை கோ.சுகுமாரன் ஆகியோருடன் வனப்பகுதிக்குச் சென்று ராஜ்குமாரை மீட்டு வந்தவர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பெயரை தமிழில் மாற்றியமைக்கும் இயக்கத்தை முன்னெடுத்தபோது பா.கல்யாணி எனும் தனது பெயரை பிரபா கல்விமணி என்று மாற்றிக்கொண்டார்.

 

        பேராசிரியர் பணியில் இருந்தபோதும் விருப்ப ஓய்வு பெற்றபிறகும் கல்யாணி மீது பல்வேறு பொய் வழக்குகள் போடப்பட்டன. இவற்றில் வன்கொடுமைச் சட்ட வழக்குகளும் அடக்கம். பல்வேறு வழக்குகளில் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் இன்னும் சில வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. வழக்கறிஞர் கே.சந்துரு, பொ.இரத்தினம் போன்ற பல நண்பர்கள் வழக்குகளிலிருந்து தம்மை விடுவிக்க செய்த பணிகளை நன்றியுடன்  நினைவுகூர்கிறார்.

 

      தடா, பொடா போன்ற அடக்குமுறைச் சட்டங்கள், மரண தண்டனைக்கு எதிரான இயக்கம் போன்றவற்றில் இவரின் பங்களிப்புக் குறிப்பிடத் தகுந்தது. பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் சார்பில் பல மாநாடுகளை நடத்தி அவர்களது வாழ்வுரிமைக் கோரிக்கைகளைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்த பணி அளப்பரியது. 1999 இல் கோரிக்கை மாநாடு, 2005 இல் நிலவுரிமை மாநாடு, 2009 இல் வாழ்வுரிமை மாநாடு, 2019 இல் பழங்குடியினர் மாநாடு என்று பல மாநாடுகளைக் கூட்டி இருளர் மக்களின் வாழ்வுரிமையை நிலைநாட்டியவர். 2019 இல் கூட்டப்பட்ட மாநாட்டில் சாதிச்சான்று,  வீட்டுமனைப் பட்டா போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 10,000 பேர் திரண்டது குறிப்பிடத்தக்கது.

 

       செயல்வழிக் கற்றல் குறித்த மூன்று குறுநூல்கள், நீட் தேர்வு பற்றிய நூல், இருளருனா இளக்காரமா… என்னும் இருளர் தொடர்பான வழக்குகள், இருளர் மீது தொடரும் வன்கொடுமைகள் (தொகுப்பு) என பல்வேறு சிறுவெளியீடுகளை வெளியிட்டுள்ளார். மேலும் இவரால் வெளியிடப்பட்ட நூற்றுக்கணக்கான அறிக்கைகள், துண்டுப்பிரசுரங்கள், வழக்கு ஆவணங்கள் போன்றவற்றைத் தொகுத்தால் அவை சமூகவியல் ஆவணமாக மட்டுமின்றி வருங்காலத்தில் மனித உரிமைச் செயல்பாட்டளர்களுக்கான பாடமாக அமையும் என்பதில் அய்யமில்லை.

 

        ‘இந்து தமிழ்’ நாளிதழ் வழங்கிய ‘தமிழ்திரு’ விருதை 2017 இல் பெற்றார். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி  இவருக்கு  சமூக சேவைக்கான விருதளித்துப் பாராட்டியது. ஆனந்தவிகடன் இதழ் 2021 டாப் 10 மனிதர் விருதை இந்தப் போராட்ட நாயகனுக்கு அளித்துள்ளது. இக்குறிப்பை எழுதிக் கொண்டிருக்கும்போது தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்புகளின் சார்பில் வழங்கப்படும் முகுந்தன் சி. மேனன் விருது 2021 கல்வியாணிக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அம்பேத்கர் சுடர் விருது (2007), சிதம்பரம் நந்தனார் ஆய்வு மையம் வழங்கிய சமத்துவப்போராளி விருது (2012), தமிழ் எழுச்சிக் கழகத்தின் நடராசன் தாளமுத்து விருது (2015), தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் பழனிபாபா விருது (2015), மதுரை சோக்கோ அறக்கட்டளையின் நீதிபதி கிருஷ்ணய்யர் நூற்றாண்டு விருது (2015), வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை வழங்கிய தாய் தமிழ்ப்பள்ளி மூலம் தமிழ் மொழிக்கான முன்னோடி விருது (2016) உள்ளிட்ட பல்வேறு அங்கீகாரங்களை இவர் பெற்றுள்ளார். பழங்குடி இருளர்களும் ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்களும் இந்தப் பேராசிரியரை தங்கள் குடும்பத்தில் ஒருவராக மதிப்பதே அவருக்கான உண்மையான விருதாகவும் பாராட்டாகவும் இருக்கிறது. பழங்குடி மக்களின் குரலாக தமிழகத்து ஸ்டேன் சாமியாக பேரா.கல்யாணி திகழ்கிறார்.  

 

       'ஜெய்பீம்' படத்திற்குப் பிறகு இவரது பணிகள் உலகின் கவனத்திற்கு வந்துள்ளன.  பேராசிரியராக இல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களோடு மக்களாக அவர்களுள் ஒருவராக வாழும் பிரபா கல்விமணி அவர்களுடனான உரையாடலிருந்து...

 

 "மனித உரிமைப்பணிகளைக் கடமையாக ஏற்றுச் செயல்படும்போது, அது நமது வாழ்வின் பகுதியாக மாறிவிடுகிறது." - பா.கல்யாணி 


 

 

01.புரட்சிப் பண்பாட்டு இயக்கம் (புபஇ), மக்கள் கல்வி இயக்கம் (மகஇ) போன்ற அமைப்புகள் வழியாக பல்வேறு பணிகளைச் செய்துள்ளீர்கள். பழங்குடி இருளர்களுக்காக சங்கம் அமைக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? தங்களது பரவலான பணிகளை வட்டார அளவில் சுருக்கிக்கொண்டதாகக் கருதலாமா?

 

        பு.ப.இ. ஒரு அரசியல் பின்புலத்தோடு நடத்தப்பட்ட இயக்கம். அந்தப் பின்னணியிலிருந்து விலகியபோது அதுவரையிலும் உடன் பணியாற்றியவர்களின் கூட்டு முயற்சியின் விளைவே ம.க.இ. இதற்கான அறிக்கை பேரா.அ.மார்க்ஸ் அவர்களால் முன்மொழியப்பட்டு அதன்மீது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தோழர்களின் கருத்துகளைப் பெற்று, நோக்கங்களும் கோரிக்கைகளும் இறுதி செய்யப்பட்டுத் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம்தான் ம.க.இ. இதன் சார்பில் பல வெளியீடுகள் கொண்டு வரப்பட்டன.

1.       பெண்கல்வி – விஜி

2.       பள்ளிக்கூடங்களில் பயிற்றுமொழி தமிழா-ஆங்கிலமா? – பா.கல்யாணி

3.       மண்டல் குழு அறிக்கையும் இட ஒதுக்கீட்டின் அவசியமும் – அ.மார்க்ஸ், ரவிக்குமார்

4.       வரலாறும் மதவாதமும் – சே.கோச்சடை

5.       இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள் – அ.மார்க்ஸ்

        எழுத்தறிவின்மையை ஒழித்தலில் தொடங்கி பரந்துபட்ட மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கானப் போராட்டங்களை ஆதரித்தல் வரையுள்ள நோக்கங்களை உள்ளடக்கிச் செயல்பட்டு வந்தோம்.

       இச்சூழலில்தான் அத்தியூர் விஜயா (1993) வன்கொடுமையைத் தொடர்ந்து, அவர்களின் நெருங்கிய உறவினர்கள் பலரின் வழக்குகள் தொடர்பாக செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 1993லிருந்து 1996 வரை 10க்கும் மேற்பட்ட சம்பவங்களைத் தொகுக்கும்போது, பழங்குடி இருளர்களுக்கென்று ஒரு மனித உரிமை அமைப்பின் தேவை உணரப்பட்டது. கட்சிகளின் பின்னணியின்றி ‘நுண்ணரசியல்’ அமைப்புகள் செயலாக்கம் பெறமுடியும் என்பது பற்றி பேரா.அ.மார்க்ஸ் விளக்கமாக விவரித்தார். ரவிக்குமார், சே.கோச்சடை, த.பழமலய், சி.துரைக்கண்ணு, நெடுவாக்கோட்டை உ.ராஜேந்திரன் போன்ற  ம.க.இ. செயற்பாட்டாளர்களின் ஊக்குவிப்பும் ஒத்துழைப்பும் உடனிருந்தது. இதன் விளைவாக 1996 இறுதியில் சகோதரி லூசினாவுடன் இணைந்து பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் (ப.இ.பா.ச.) தொடங்கினோம்.

·         எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் 1989 ஐ சரியாக அமல்படுத்தப்பட வேண்டும்.

·         இருளர் பழங்குடியினருக்கு சாதிச்சான்று உடனடியாக வழங்க வேண்டும்.

·         அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா, தொகுப்பு வீடுகள் வழங்கப்பட வேண்டும்.

·         திண்டிவனத்தில் ஒரு உண்டு உறைவிடப்பள்ளி வேண்டும்.

·         பழங்குடியினருக்கென்று தனி இயக்குநரகம் அமைக்க வேண்டும்,

                                போன்ற கோரிக்கைகள்  முன்வைக்கப்பட்டன.

   புனித அன்னாள் சபை, அருட்தந்தை அ.ரபேல்ராஜ் மூலம் கிளாரெட் சபை ஒத்துழைப்பு இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக விளிம்புநிலை மக்களான பழங்குடி இருளர்களின் பங்கேற்பு சிறப்பாக இருந்தது. அப்போது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக இருந்த கிருஸ்துதாஸ் காந்தி, ப.சிவகாமி போன்றோரின் ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனைகள், வழக்கறிஞர்களான கே.சந்துரு, பொ.இரத்தினம், சத்தியச்சந்திரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு புதுச்சேரி கோ.சுகுமாரன் போன்றோர்களின் வழிகாட்டுதல்கள், ஹென்றி டிபேன் தலைமையிலான மக்கள் கண்காணிப்பகம் போன்ற மனித உரிமை அமைப்புகளின் ஆதரவு என பலரது  கூட்டுமுயற்சியின் விளைவே ப.இ.பா.ச.

        இச்சங்கத்தின் செயல்பாடுகள் அப்போதைய ஒன்றுபட்ட தென்னார்க்காடு (விழுப்புரம், கடலூர்) மாவட்டத்தோடு சுருங்கிப் போய்விட்டது உண்மைதான். ஒரு அரசியல் கட்சியின் பின்புலமின்றி மாநில அளவில் செயல்படுவது சாத்தியமற்றுப் போனதாகக் கருதுகிறேன்.

      2007 இல் பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளைத் தொடங்கப்பட்டது. இதன் தலைவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் சி.ஜெயபாலன்; செயலாளர் ஆசிரியர் பொன்.மாரி; பொருளாளர் விழுப்புரம் பி.வி.ரமேஷ்.

     மேலும் தாய்தமிழ்ப்பள்ளிப் பணிகளில் அதிகக் கவனம் செலுத்தியதன் விளைவாக மக்கள் கல்வி இயக்கப் பணிகளை மாநில அளவில் செயல்படுத்த இயலவில்லை. அதனை ஒரு தோல்வியாகக்  கருதுகிறேன். நிறுவனமயமாதலில் சிக்கியதால், மாநில அளவிலானச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதாகக் கருதலாம். எனினும் இதனை நியாயப்படுத்த முடியாது.

    

02.  வெகுஜன அமைப்புகளைக் கட்டி  மக்களுக்காகச் செயல்படுவதில் தருமபுரி பாலனுக்கு அடுத்து தாங்கள் சிறப்பாக பணி புரிவதாக தோழர் எல்ஜிஎஸ் என்ற இல.கோவிந்தசாமி ஒருமுறை குறிப்பிட்டார்.  வழக்குகள், துண்டறிக்கைகள், உண்மையறியும் குழு அறிக்கைகள் எழுதுவதிலும் செயல்படுவதிலும் தன்முனைப்பற்ற ஒரு போராளியாகச் செயல்படுகிறீர்கள். இத்தகைய பயிற்சியும் அனுபவமும் எப்படிக் கிடைத்தது?

 

         தருமபுரி பாலன் அவர்களோடு எனது பணியை ஓப்பிட முடியாது. அது ஒரு புரட்சிகரமான அரசியல் பணி. உண்மையறியும்  குழு அறிக்கைகள் எழுதுவதில் எனக்கென்று முக்கியப்பங்கு எதுவும் கிடையாது. எனக்குத் தெரிந்து பேரா.அ.மார்க்ஸ், ரவிக்குமார், கோ.சுகுமாரன் ஆகியோர் நன்கு அறிக்கைகள் எழுதக்கூடியவர்கள்.

       துண்டறிக்கை எழுதுவதில் அதிகக் கவனம் எடுத்துக்கொள்வேன். பொதுமக்கள் மனநிலையிலிருந்து அவர்களுக்கு பிரச்சினையின் உண்மைத்தன்மையை விளக்க வேண்டும் என்ற அக்கறையோடு தயாரிக்க முற்படுவேன். அறிக்கை தயாரிக்கும் முன்பும் பின்பும் உடன் பங்கேற்பாளர்களின் ஆலோசனைகளையும் பங்கேற்பையும் உறுதி செய்வேன். பலரிடமும் கலந்து கருத்துகளைக் கேட்பதால் துண்டறிக்கைத் தயாரிப்பில் ஓரளவு மனநிறைவு அடைவேன். அதற்கு பல நேரங்களில்   ஒரு வாரம் கூட எடுத்துக் கொள்வேன். மேலும் துண்டறிக்கை தயாரிக்கும்போது “தெரிந்ததிலிருந்து  தெரியாததை”, என்ற பேரா.த.பழமலய் அவர்களின் கருத்தைக் கவனத்தில் கொள்வேன்.

 

03.தங்களின் 30 ஆண்டுகளுக்கு மேலான மக்கள் பணி ‘ஜெய்பீம்’ படம் மூலம் பரவலான கவனிப்பையும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. ‘ஜெய்பீம்’ படம் அதில் உருவாக்கப்படும் சர்ச்சைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அரசு மற்றும் பொதுமக்கள் கவனத்தைப் பெற இத்தகைய வழிமுறைகள்தான் உதவுமா?

 

        ஜெய்பீம் படம் வெளியானதும் தமிழக அளவிலும் இந்திய அளவிலும் உலக அளவிலும் பெரும் அங்கீகாரத்தைப் பெற்றது. அதற்கு முதன்மையான காரணமாக நான் கருதுவது, “விளிம்பு நிலை மக்களுக்கு எதிரான காவல் துறையின் அத்துமீறல்களை” மிகவும் எதார்த்தமாகவும், நல்ல படைப்பாகவும் வெளிப்படுத்தியதுதான்.

       சர்ச்சைக்குரிய காலண்டரை நீக்கிவிட்ட பின்பும் 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் போடுவோம் என்றதும், கொலை மிரட்டல் விடுத்ததும், இந்தப் படத்தினால் வன்னியர்களுக்கும் இருளர்களுக்கும் இடையில் கலவரம் வெடிக்கும் என்று அறிக்கை விட்டதும் தேவையற்றதாகக் கருதுகிறேன். கலவரம் உருவாக வேண்டுமானால் இரண்டு தரப்பிலும் மோதுவதற்கு ஒப்பீட்டு அளவில் கணிசமானோர் திரள வேண்டும்.

     மிகமிக சிறுபான்மையினராக உள்ள இருளர்கள் எவர் மீதும் மோதி கலவரம் உருவாக்கும் சூழல் தமிழகத்தில் எங்குமே கிடையாது என்பது ஒரு வெட்டவெளிச்சமான உண்மையாகும்.

      இந்தத் தருணத்தில் மேனாள் துணைவேந்தரும், கல்வியாளரும் மனித உரிமையில் அக்கறை உள்ளவருமான முனைவர் வசந்திதேவி அவர்களின் அறிக்கையில் அனைத்துக் கட்சி, இயக்கம் மற்றும் அதிக எண்ணிக்கையில் மனித உரிமை ஆர்வலர்கள், ஜெய்பீம் படத்தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டது என்பது மிகவும் பாராட்டத்தக்கது ஆகும்.

      எந்தவொரு செயல்பாட்டிலும் ஊடகத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. வெகுமக்களின் ஆதரவைத் திரட்டுவதில் ஊடகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஊடகத்தில் முதன்மையான ஊடகமான திரைப்படம் அரசு மற்றும் பொதுமக்கள் கவனத்தைப் பெற நிச்சயமாக உதவுகிறது. ஆனால், அதுவரை காத்திராமல் நாம் நம்மால் இயன்ற வழிகளில் எல்லாம் வெகுமக்களின் கவனத்தைப் பெறுவதற்கு துண்டறிக்கைகள், சுவரொட்டிகள், ஆர்ப்பாட்டம், மாநாடு, வெளியீடுகள் மூலம் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். 


 

 

04.வழக்கறிஞர் பொ.இரத்தினம் தொகுத்து, விடியல் பதிப்பகம் வெளியிட்ட ‘சென்னகரம்பட்டி கொலை வழக்கு’ நூலைப் போல   இருளர்கள் வழக்குகள் தொடர்பான ஆவணங்களைத் தொகுத்து வெளியிடும் திட்டம் இருக்கிறதா?  த.செ.ஞானவேலின் ‘ஜெய்பீம்’ திரைப்படம்  ஜோதி நரசிம்மனின் ‘அத்தியூர் விஜயா’ நாவல் ஆகியவை மூலம் இந்த உண்மை நிகழ்வுகள் புனைவுகளாகப் பரவலானக் கவனம் பெறுவது மட்டும்  போதுமானதா?

 

        2009இல் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட வழக்குகளைத் தொகுத்து ‘இருளருனா… இளக்காரமா?’ என்ற நூலை வெளியிட்டுள்ளோம். பழங்குடிப் பெண்கள்” பற்றி சகோதரி லூசினா எழுதிய ‘பழங்குடியினர் பாதையில்…’ என்ற நூலும், பழங்குடியினர் இலக்கியம் தொடர்பாக எழுத்தாளர் விழி.ப.இதயவேந்தன், இரா.முருகப்பன் எழுதியுள்ள நூல்களும் வெளிவந்துள்ளன. இவற்றோடு, இதுவரை எடுத்த வழக்குகளும், அவற்றின் விளைவுகள் குறித்தும்  தொகுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எண்ணுகிறேன்

      குறிப்பாக எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் அமலாக்கம் மற்றும் அதன் பின்விளைவுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேற்படி சட்டம், சங்கத்தின் அன்றாடச் செயல்பாடுகளுக்கு மிகவும் உதவியாக இருந்து வருகிறது. அரசு அதிகாரிகளை மட்டும் குறைசொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் அதன் சரியான அமலாக்கத்திற்கு சங்கம், கட்சி மற்றும் சனநாயகச் சக்திகள் மேற்கொள்ளவேண்டிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்தும் நாம் விவாதிக்க வேண்டும்.

 

05.வாக்ரிகள் (நரிக்குறவர்கள்) பற்றிப் பல்வேறு ஆய்வுகள் வெளிவந்துள்ள நிலையில் இருளர் பழங்குடியினர் குறித்த ஆய்வுகள் அதிகம் இல்லைதானே! மனித உரிமைப் பணிகளின் ஊடாக இவற்றின் தேவை குறித்து என்ன கருதுகிறீர்கள்?

 

       நரிக்குறவர்கள் மற்றும் இருளர்கள் பற்றி எவ்வளவு ஆய்வுகள் வெளிவந்துள்ளன என்பது பற்றி எனக்கு முழுமையாகத் தெரியாது. அவர்களின் வாழ்நிலை குறித்தும் தேவையான பொருளாதார சீர்திருத்தங்கள், அரசின் நலத்திட்ட உதவிகள் எந்த அளவுக்கு சென்றடைந்துள்ளது குறித்தும், உடனடி மற்றும் நீண்ட நாள் தேவை குறித்தும் பல ஆய்வுகள் தேவை. ஜெய்பீம் திரைப்படம் இதுபோன்ற ஆய்வுகளை மேற்கொள்ளத் தூண்டுவதாக அமையும் என நம்புகிறேன்.

 

06.இருளர் பழங்குடியினர்   நலனுக்கும் உரிமைகளுக்காகவும் போராடி வருவதுடன் நடிகர் சூர்யாவின் ‘அகரம்’ அறக்கட்டளை மூலம் அடித்தட்டுக் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு இணைந்து செயல்படுவதை எவ்வாறு உணர்கிறீர்கள்? 

 

       நடிகர் சூர்யா அவர்களின், ‘அகரம்’ கல்வி அறக்கட்டளை 2010 இல் தொடங்கப்பட்ட சமயத்தில் அதற்கு முன்பு சில ஆண்டுகளாக ‘வாழை’ என்ற அமைப்பில் இளைஞர்களோடு சேர்ந்து பணியாற்றிய அனுபவம் இருந்தது. அதில் ஞானவேல், ஜெயஸ்ரீ போன்றோர்களும் இருந்தனர். அதே போன்று ஆசிரியை சுடரொளி, வசந்தி போன்றோரின்  ‘குழந்தைகளைக் கொண்டாடுவோம்’  என்ற அமைப்புடன் தொடர்பு இருந்தது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக புதுக்கோட்டை ஆசிரியர் கு.தருமலிங்கம் அவர்களை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு அ.மார்க்ஸ், சே.கோச்சடை, ரவிக்குமார் போன்றோருடன் இணைந்து 1990லிருந்து இயங்கிவந்த மக்கள் கல்வி இயக்கச் செயல்பாடுகள் தொடர்பான செயல்பாட்டு அனுபவங்கள் இருந்தன.

      மேலும் விழுப்புரம், திண்டிவனம் அரசுக் கல்லூரிகளில் பணியாற்றிய அனுபவமும் இருந்தது. இந்த நிலையில்தான் அகரம் கல்வி அறக்கட்டளையின் ‘விதை’த் திட்டம் பற்றி ஞானவேல் அறிமுகம் செய்தார்கள். +2 வரை பயின்று தொடர்ந்து பயில்வதற்கு வாய்ப்பு வசதி இல்லாத மாணவர்களுக்கு உதவுவது என்ற நோக்கத்துடன் விதைத்திட்டம் உருவானது. இதில் மாணவர்களை எவ்வாறு தேர்வு செய்வது என்பது பற்றி விவாதித்து முடிவு செய்தோம். அந்தத் தேர்வுக் குழுவில் நான் ஒரு உறுப்பினராக இருந்தேன். நானும் ஏழ்மை நிலையிலிருந்து பயின்று வந்தவன் என்ற அடிப்படையிலும் அடித்தட்டு மக்களின் கல்வி மேம்பாட்டில் நாம் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் ‘அகரம்’ செயல்பாட்டில் ஆர்வமுடன் பங்கேற்றேன். மேலும், நடிகர் சூர்யா குடும்பத்தினரின் சுயநலமற்ற கல்விப்பணி நமக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது. மேலும் ‘அகரம்’ விதைத் திட்டத்திற்கு பணியாற்ற முன்வந்த தன்னார்வலர்களின் பங்கு மகத்தானது. இந்தக் குழுவில் பணியாற்றுவது என்பது நமக்கு ஒரு புதிய அனுபவமாகவும் உற்சாகம் அளிப்பதாகவும் இருந்தது.

        தேர்வுக் குழுவில் மட்டும் என்னுடைய பங்கு இருந்தது. மற்றபடி தொடர்ந்து அகரம் அறக்கட்டளை செயல்பாடுகள் அனைத்தும் தன்னார்வலர்களால் முன் எடுக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டதே ஆகும்.

07.பழங்குடி மக்களுக்கான ஒதுக்கீட்டைப் பெற சாதிச்சான்று, வீட்டுமனைப் பட்டா, குடியிருப்புகள் ஆகியவற்றைத் தவிர வேறு எத்தகைய முன்னெடுப்புகள் எடுக்கப்பட வேண்டும்? தற்போது என்னென்ன பணிகளை மேற்கொண்டுள்ளீர்கள்? அவர்களின் பொருளாதாரத் தற்சார்பிற்கான திட்டங்கள் என்ன?

 

         மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான புனித அன்னாள் சபையைச் சார்ந்த சகோதரி லூசினா அவர்கள் விழுப்புரத்தில் மெழுகுவர்த்தி தயாரிக்கும் குடிசைத் தொழிலைத் தொடங்கினார்கள். செஞ்சிப்பகுதியில் வழக்கறிஞர் ஆல்பர்ட் வேளாங்கன்னி பெண்களுக்கு தையல் பயிற்சி அளித்து உதவினார்கள். அருட்தந்தை அ.ரபேல்ராஜ் அவர்கள் விக்கிரவாண்டி வட்டம் மங்களபுரத்தில்   தொழிற்கூடம் ஒன்றைத்  தொடங்கியுள்ளார்கள்.

            சிறுதொழில் உற்பத்தியில் ஆர்வம் உள்ளவர்களை கண்டறிந்து ஊக்கப்படுத்தும் பொருட்டு ஒரு தனிக்குழுவை உருவாக்கியுள்ளோம். அரசு சார்பில் அளிக்கப்படும் பயிற்சிகள் உதவிகள் தொடர்பாக நமக்கு கூடுதல் ஆலோசனைகளும் அனுபவமும் தேவைப்படுகிறது.

08.செயல் வழிக்கற்றல், நீட் தேர்வு குறித்த குறுநூல்களை வெளியிட்டீர்கள். நீட்டிற்கும் முன்பும் பின்பும் அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவப்படிப்புகளில் மிகக்குறைந்த பங்கைப் பெறுவதைப் பலமுறைச் சுட்டியுள்ளீர்கள். தற்போதைய அரசு அளித்திருக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீடு போதுமானதா? தற்போதைய நிலையில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டால் அது அரசுப்பள்ளி மாணவர்களுக்குப் பலனளிக்குமா?

 

      கடந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்டு வெளிவந்த நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவின் அறிக்கை தமிழகத்தில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் இட ஒதுக்கீட்டு வரலாற்றில் மிகவும் முக்கியமான அறிக்கை ஆகும்.

       இந்த அறிக்கைதான் முதன்முதலில் பள்ளிக் கல்வியில் மாணவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களுக்கும், பெற்றோர்களின் பொருளாதார நிலைக்கும் உள்ள தொடர்பை வெளிக்கொண்டுவந்துள்ளது. அதன்படி, மாத வருவாய் ரூ 4000க்கும் குறைவான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளிலும், மாதவருவாய் 4000 முதல் ரூ 5000 வரை உள்ளோர் அரசு உதவி பெறும் பள்ளியிலும், ரூ 10,000 வரை வருவாய் உள்ள பெற்றோர்கள் சுயநிதி மற்றும் பதின்மப் பள்ளிகளிலும், ரூ 20,000 வரை வருவாய் உள்ளோர் சி.பி.எஸ்.சி. பள்ளிகளிலும் அதற்கும் அதிக வருவாய் உள்ளோர் ஐ.சி.எஸ்.இ. பள்ளிகளிலும் தங்களின் பிள்ளைகளை பயிற்றுவிக்கிறார்கள்.

      அ.தி.மு.க அரசு கலையரசன் குழு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் 7.5% இடஒதுக்கீடு வழங்கியது. ஆனால், தி.மு.க அரசு அதே 7.5% ஒதுக்கீட்டினை அனைத்து தொழிற்கல்விக்கும் விரிவுபடுத்தியுள்ளது.

         நீதிபதி கலையரசன் குழு பரிந்துரை என்பது 10% விழுக்காட்டிற்கும் குறையாமல் ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பதுதான், அதாவது 10% மேல் 20%, 30% என்று கூட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கலாம். ஆனால், கடந்த ஆட்சியில் வழங்கியது 7.5% மட்டுமே ஆகும்.

         இப்போதைய ஆட்சியும் 7.5% ஐ அதிகரிக்கவில்லை. ஆனால் அதை பிற தொழில் கல்விக்கும் விரிவு படுத்தியுள்ளது. இதனை வரவேற்கும் அதே சமயத்தில் 40% ஆக உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% தான் என்ற விமர்சனம் உள்ளது.

       இரண்டு ஆட்சியிலும் கல்வி வணிகர்களின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளதையே இது விளக்குகிறது.

        மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சி நிறுவனர் மறைந்த ஆனைமுத்து அவர்களின் விகிதாச்சாரப் பகிர்வு முறையை கணக்கில் கொண்டு, வர்க்க – விகிதாச்சார சார்பு முறையை நாம் கோரலாம்.

அதாவது +2 பொதுத்தேர்வில் பள்ளிகள் அடிப்படையில் விகிதாச்சார பகிர்வு அளிக்கலாம்.

அதன்படி

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு    - 40 %

அ.உ. பெறும் பள்ளி மாணவர்கள்             – 24.15 %

பதின்மப் பள்ளி மாணவர்களுக்கு           - 30.66 %

ஆங்கிலோ இந்தியன் மற்றும்

ஓரியண்டல் பள்ளி மாணவர்களுக்கு - 0.52 %

சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களுக்கு        - 4.67 %

மொத்தம்                                                           - 100 %

 

       இதில் ஒவ்வொரு பிரிவிலும் தமிழக அரசின் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றவேண்டும். மேலும் உயர்கல்வி சேர்க்கைக்கு  +1 மதிப்பெண்களின் மொத்தத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்வதோடு சம்பந்தப்பட்ட இரண்டு பொதுத்தேர்வுகளிலும் பள்ளிகளில் பயின்று தேர்வு எழுதும் முதல் முயற்சியை (First Attempt) மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

 

        அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்கல்வி நிறுவனங்களில் பழங்குடியினருக்கென்று 1% வழங்கப்படுகின்றது. ஆனால், நடைமுறையில் 20, 40 மாணவர்கள் உள்ள வகுப்புகளுக்கு 1% என்பது 0.2 மற்றும் 0.4 என்று வருவதால் அவ்வகுப்புகளில் பழங்குடியினருக்கு இடம் வழங்கப்படுவதில்லை.

 

        பழங்குடியினருக்கு முன்னுரிமை அளித்து பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பிற்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சம் ஒரு இடம் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். மேலும் பழங்குடியினர் கல்வி நலனுக்கு தனி இயக்குநரகம் ஏற்படுத்தவேண்டும்.

 

09.தனிப்பயிற்சி ஒழிப்பு, தமிழ் வழிக்கல்வி ஆகியவற்றிற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறீர்கள். சுயநிதிப்பள்ளிகள் கோலோச்சும் காலத்தில் திண்டிவனம் ரோசனையில் தமிழ் வழிப்பள்ளி ஒன்றை நிறுவி நடத்துகிறீர்கள். இன்று கல்வி ‘கோச்சிங்’ வடிவத்தையும்  தனியார் மயத்தையும் நோக்கியும் நகர்கிறது. கல்வியில் அரசின் பங்கு  நழுவுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

     கல்வியில் அரசின் பங்கும், பொறுப்பும் தொடர்ந்து குறைந்துகொண்டே போகிறது. 1986 இல் அப்போதைய ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட புதிய கல்விக் கொள்கையில் இத்தகைய போக்கை ஊக்குவிக்கும் அம்சங்கள் உள்ளதென்பதை பேரா.அ.மார்க்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் நலிந்த பிரிவினரின் கல்வி அதிகம் பாதிக்கப்படுகிறது.  இத்தகைய போக்கினை எதிர்க்கும் கல்வியாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் போதிய அளவில் இல்லை. இருப்பினும் ஆங்காங்கே சில ஆசிரியர்கள், சில இயக்கங்கள் எடுக்கும் முயற்சிகள் நம்பிக்கை அளிப்பதாக இருக்கின்றன. குறிப்பாக இடதுசாரி இயக்கங்களின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன. 

   

 

10.அரசுப்பள்ளிகளின் நிலை இன்னும் மேம்பட எத்தகைய முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்? ஒன்றிய அரசின் திட்டங்களை ‘இல்லம் தேடிக் கல்வி’ என்கிற பெயர் மாற்றத்துடன் செயல்படுத்துவது மட்டும் போதுமானதா? கொரோனா பொதுமுடக்கக் காலத்திலேயே இம்மாதிரியான முயற்சிகளை எடுத்தீர்கள்? பள்ளிகள் திறந்த நிலையில் இதன் தாக்கம் என்னவாக இருக்கும்?

    அரசுப்பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை குறைந்துகொண்டே போவதற்கு நான் முக்கியக் காரணமாகக் கருதுவது, பயிற்றுமொழி. தாய்மொழியில் பயில்வதைக் கேவலமாகக் கருதும் மனப்போக்கு பரவலாக உள்ளது. இதற்குப் பயிற்றுமொழி தொடர்பாக விரிவான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும். அடுத்து பள்ளிகளில் உள்கட்டுமானம். அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நூற்றுக்கணக்கான பள்ளிக் கட்டிடங்களை இடிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.  பெற்றோர்கள் மேற்பார்வையில் கழிப்பிட வசதிகளுடன் பள்ளிகளின் உள்கட்டுமானம் மேம்படுத்தப்படவேண்டும். அரசுப்பள்ளி மாணவர்களின்  எண்ணிக்கைக்கு ஏற்ப, மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து மேற்படிப்புகளுக்கும் விகிதாச்சார அடிப்படையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படவேண்டும்.

 

       ஒன்றிய அரசின் செயல்பாடுகளில் அவர்களது மறைமுகச் செயல்திட்டங்கள் (Hidden Agenda) இருக்கவே செய்கிறது. அவற்றில்  நாம் மிகக்கவனமாக இருக்க வேண்டியுள்ளது. ‘இல்லம் தேடிக் கல்வி’த் இத்திட்டம் எந்த அளவுக்குப் பயனுள்ளதாக உள்ளது என்பதை நடைமுறைகள்தான் தீர்மானிக்கும். இத்திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து ஆசிரியர்களாகிய நீங்கள்தான் சொல்லவேண்டும்.    

 

         கொரோனா காலத்தில் இத்தகைய  முயற்சிகள் மேற்கொள்வதற்கு எழுத்தாளர் உமாநாத் (விழியன்) காரணமாக இருந்தார். அதற்கு அவருக்கு நன்றி சொல்லவேண்டும். அவர் பத்தரிக்கைகளில் எழுதிய ‘நுண்வகுப்பறை முறை’யை திண்டிவனம் ரோசனையில் உள்ள தாய்த்தமிழ் நடுநிலைப்பள்ளியில் அமல்படுத்தினோம். ஆசிரியர்கள், பெற்றோர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் மேற்கொண்ட கூட்டு முயற்சிகளின் காரணமாக 13 மையங்களில் காலை, மாலை இருவேளைகளில் ஒரு நேரத்தில் 10 மாணவர்களுக்கு மிகாமல் வகுப்புகளை நடத்தினோம். கொரோனாவுக்கு எதிரான அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. முற்பகல் இரண்டு மணி நேரம் பயிலும் மாணவர்கள் மதிய உணவுக்குப்பின் வீட்டிற்குச் சென்று விடுவார்கள். மதிய உணவு உண்டபின் மீதி மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும். ஒவ்வொரு மையத்திற்கும் 12 மணி அளவில் பள்ளியில் சமைக்கப்பட்ட சத்தான உணவு எடுத்துச்செல்லப்பட்டது. ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களின் கருத்துகள் கேட்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் விளைவாக 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கூடுதலாகச் சேர்ந்துள்ளனர். மேற்கண்ட நுண்வகுப்பறை நிமித்தம் எங்கள் பள்ளியில் கொரோனா பாதிப்பால் எற்பட்ட கற்றல் இழப்பு ஓரளவு குறைக்கப்பட்டது எனக் கூறலாம். 

 

11.பழங்குடியினர், ஆதி திராவிடர், சீர்மரபினர் நலப்பள்ளிகளின் செயல்பாடுகள் இவற்றின் மூலம் அடித்தட்டுக் குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதில் என்ன தடை உள்ளது?  இப்பள்ளிகளின் சீரழிவிற்கு யார் பொறுப்பு? எல்லா இடங்களிலும் தங்களைப்  போன்ற சமூக ஆர்வலர்கள் தனியே பள்ளிகள் நடத்துவதுதான் தீர்வா?

 

      முதலில் இவைகளுக்கு அரசு ஒதுக்கும் நிதி போதுமானதாக இல்லை. கல்வி வணிகமயமாகி வருவதோடு அரசியல் கட்சிப் பிரமுகர்களே கல்வி வணிகர்களாக மாறி வருவதால், இடதுசாரி இயக்கங்களைத் தவிர்த்து பிறர் எவரும் இப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. நம்மைப் போன்றோரும் இப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு எவ்வளவு அக்கறையோடு செயல்படுகிறோம் என்று சுயவிமர்சனத்தோடு இப்பிரச்சினையை அணுக வேண்டும். பெரும்பாலோர் மத்தியதர வர்க்கம் அதற்கும் மேற்பட்டோர் கல்வி நலனையே மையமாக வைத்துச் செயல்படுகின்றனர். உள்கட்டுமானத்தில் தொடங்கி போதிய ஆசிரியர்கள், அலுவலர்கள் பற்றாக்குறை எனப் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

 

      தனியே பள்ளி நடத்துவது என்பது தீர்வல்ல. பலநேரங்களில் இவ்வாறு பள்ளி தொடங்கியது எந்த அளவுக்குச் சரியானது என்ற சுயவிமர்சனம் எழுவது உண்டு. அடித்தட்டு மக்களின் கல்வியில் அக்கறையுள்ள கல்வியாளர்கள், ஆசிரியர்கள், இடதுசாரி இயக்கங்கள், தலித் மற்றும்  இஸ்லாமிய இயக்கங்கள் ஒன்றிணைந்து செயல்பட முயற்சிப்பது இன்று காலத்தின் கட்டாயமாகி உள்ளது.

 

12. தமிழக பள்ளிக்கல்வியில் ஆணையர் பணியிடம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இது எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும்? கல்வித்துறைக்கு  எம்மாதிரியான சீர்திருத்தங்கள்  தேவைப்படுகிறது?

         ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கல்வி, பண்பாடு சார்ந்த துறைகளில் நியமிப்பது சரியல்ல. நமது மாநிலத்தைப் பற்றி அறியாத பிறர் இப்பணிக்கு வருவது இங்குள்ள சூழல்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ள இயலாமற்போகும். பள்ளிக்கல்வி, உயர்கல்வி, பொதுப்பணித்துறை என எவற்றிலும்  ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்தான் துறைச் செயலாளாராக  இருப்பார்கள். எனவே இயக்குநர் போன்ற பொறுப்புகளில் அத்துறைகளில் நிபுணத்துவம் உடையவர்கள் இருக்கும்போதுதான் மேலும் சிறப்பாக செயல்படமுடியும். கல்வித்துறையில் ஆசிரியர் பணி அனுபவம் இல்லாத ஒருவர் இயக்குநர் இடத்திற்கு வருவது நல்லதல்ல. இதைப்போன்று ஒவ்வொரு துறையிலும் இயக்குநர் பதவிக்கு நேரடியாக, கீழிருந்து துறை அனுபவம் இல்லாத ஒருவர் ஆணையர் பெயரிலோ அல்லது வேறு பெயரிலோ வருவது ஏற்புடையதல்ல. இவ்வாறு பணியமர்த்துவது என்பது நாம் ஒரு ‘போலீஸ் ராஜ்யத்தை’ நோக்கிச் செல்கிறோமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.  குறிப்பாக பள்ளிக்கல்வி, உயர்கல்வி என அனைத்திலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே பணியமர்த்தப்பட வேண்டும். ஏனென்றால் கல்வி என்பது அந்தந்த மாநில மக்களின் பண்பாடு மற்றும் மண்ணோடு தொடர்புடையது. எனவே அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுவது அவசியம்.  

 

         கல்வியில் பயிற்றுமொழிப் பிரச்சினையை முதன்மையாகக் கருதுகிறேன். தமிழில் பொறியியல் கல்வி கொண்டுவந்தது பெரிய பாவச்செயல் போல இங்கு ஒரு தவறானப் பிரச்சாரம் செய்யப்படுகிறது.   தொடக்கக்கல்வி மட்டுமல்ல உயர்கல்வியும் அவரவர் தாய்மொழியில் கிடைக்கும் நிலை உருவாக வேண்டும். இந்திய மற்றும் தமிழக அளவில் நிறைய கண்டுபிடிப்புகள் வராமலிருப்பதற்கு தாய்மொழிக்கல்விப் புறக்கணிக்கப்பட்டதும் ஒரு காரணமாகும்.

         கலையரசன் குழு அறிக்கை குறித்து ஆசிரிய சமூகங்கள் எவ்விதக் கருத்தும் சொல்லவில்லை. இதை அவர்கள் நலன் நோக்கிலிருந்து மாறுபட்டு சமூக நோக்கில் அணுக முற்படவில்லை. கல்லூரி ஆசிரியர் சங்க அனுபவங்களிலிருந்தே இதை உணர்ந்துள்ளோம்.  

       ஆங்கிலத்தை மறைமுகத் திணிப்பதுதான் புதிய கல்விக்கொள்கை. தொடக்க நிலை முடிந்தால் எட்டாம் வகுப்பு வரையில் தாய்மொழிக்கல்வி இருக்கலாம் என்றனர் அதன்பிறகு ஆங்கிலமே பயிற்றுமொழி என்பதை சொல்லாமல் சொல்கிறார்கள். இந்தித்திணிப்பு என்று சொல்கிறவர்கள்கூட இந்த ஆங்கிலத் திணிப்பைக் கண்டுகொள்வதில்லை. இதுவும் கல்வி வணிகத்திற்கே வழிவகுக்கும். ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்பதே சரி. தாய்மொழியை விடுத்து அதைப் பயிற்றுமொழியாகக் கொள்வது தவறானது. உயர்கல்வியில் இந்தி உள்ளிட்ட எந்த மாநில  மொழிகளும் இல்லாத நிலை மோசமானதாகும். எனவேதான் நாங்கள் தாய்மொழிவழிக் கல்வியைத் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். மாநில மொழிகளில் உயர்கல்வி படிப்புகள் அறிமுகம் செய்யப்படுவதை வரவேற்கிறோம். பொறியியலைத் தொடர்ந்து சில வேளாண் படிப்புகள் தமிழில் உள்ளன. இதற்குத் தமிழக அரசுகளைப் பாராட்ட வேண்டும். இங்கு கல்லூரிகளில் ஆங்கில வழி என்றாலும் தமிழில் தேர்வு எழுதக்கூடிய நிலை  இருப்பதைப் பார்க்கலாம்.

         நான் கல்லூரியில் இயற்பியல் பாடம் நடத்தும்போது தமிழ் வழி மாணவர்களை ஆங்கில வழிப் பாடநூல்களைப் படிக்கச் சொல்லுவேன். கலைச்சொற்களைத் தெரிந்துகொண்டால் எம்.எஸ்.சி. படிக்கும்போது வசதியாக இருக்கும். அதைப்போல ஆங்கில வழி மாணவர்களை தமிழ் நூல்களையும் படிக்கச் சொல்லுவேன். பாடத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள இது உதவியாக இருந்தது.

        தாய்மொழிக்கல்வி இயக்கம் என்பது தமிழ் உணர்வாளர்களின் கோரிக்கை மட்டுமல்ல; அடித்தட்டு மக்களின் கல்வியில் அக்கறையுடையவர்கள் அனைவரும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியதாகும். அதுவே ஜனநாயகமாகவும் அறிவியல்பூர்வமாகவும் இருக்க முடியும். தோழர் கண குறிஞ்சி மொழிபெயர்த்த (2013) ஜோகி என்பவரின் பயிற்றுமொழி குறித்த ஆய்வுக்கட்டுரை முக்கியமானது. எல்லா மொழியிலும் கல்வியை அளிக்க இயலும் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தும் நூல் இது.  இந்நூலின் கருத்துகளைக் கொஞ்சம் எளிமைப்படுத்தி மாநிலம் முழுதும் எடுத்துச் செல்ல வேண்டும்.

          நேற்று ஒரு தாசில்தாரைப் பார்த்தேன். 1200 பேருக்கு பட்டா கொடுக்குறதுக்கு ரெடியா இடங்களை எல்லாம் தேர்வு பண்ணி வச்சுருங்காங்க. ஒரு அரசு நினைத்தால், முடிவு செய்தால் எதையும் செய்யமுடியும் என்பதற்கு இது நல்ல உதாரணமாக உள்ளது.  தமிழக முதல்வருக்கும் தலைமைச் செயலாளர் இறையன்புவிற்கு குறிப்பாக நன்றிகளைச் சொல்ல வேண்டும்.  இருளர் பழங்குடியினர் போன்றவர்களுக்கு ஒரே இடத்தில் வீட்டுமனைகள் வழங்கப்பட்டால் அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும். காவல்துறையின் பொய்வழக்குகள் பெருமளவு குறையும். இன்றும் சங்கம் செல்வாக்கு இல்லாத இடங்களில்தான் பொய்வழக்குகள் போடப்படுகின்றன.   நாம் எவ்வளவுதான் எழுதினாலும், போராடினாலும் அதைவிட  ‘ஜெய்பீம்’ போன்ற கலைப்படைப்பின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

     13. அரசுக் கல்லூரிப் பேராசிரியர் பணியிலும் அதற்குப்பின்னரும் சமூகப்பணிகளினால் பல்வேறு பொய்வழக்குகளையும் அடக்குமுறைகளையும் எதிர்கொண்டுள்ளீர்கள். அதைப்பற்றிச் சொல்லுங்கள்?

      கல்லூரிப்பணியில் என்மீது தொடுக்கப்பட்ட வழக்குகளிலிருந்து மீண்டுவர அப்போது வழக்கறிஞராக பணியாற்றிய நீதிபதி சந்துரு  அவர்கள் பேருதவி புரிந்தார்.

     என்மீது பல்வேறு பொய் வழக்குகள் போடப்பட்டன. அவற்றில் சிலவற்றை இங்கு நினைவு கூர்கிறேன். 1992 இல் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பொன்னூர் கிராமத்தில் தலித்கள் உரிமைப்போராட்டத்தையொட்டி இரு சமூகங்களுக்கிடையே பகைமையை உருவாக்கியதாக குற்றஞ்சாட்டி வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர். ஆனால் இன்றுவரை குற்றப்பத்தரிக்கை தாக்கல் செய்யவில்லை.

     1993 இல் விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாக திண்டிவனத்தில் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். வழக்கு 17 ஆண்டுகள் நடந்து 2010 இல் குற்றமற்றவன் என விடுதலை செய்யப்பட்டேன்.

   1998 இல் முன்னெச்சரிக்கை கைது என்ற பெயரில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களையும் தலித்களையும் கைது செய்ததைக் கண்டித்து பத்தரிக்கையாளர் சந்திப்பு நடத்தியதற்காக 9 பேருடன் விழுப்புரத்தில் கைதாகி கடலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டேன். வழக்கு விசாரணையில் நீதிபதி 9 பேரையும் விடுவித்தார்.

     நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்ட பிள்ளையார் சிலையை அகற்ற கோரியதற்காக வழக்கறிஞர் சங்கத் தலைவர் மீதான கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு (2000) கடலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர். இவ்வழக்கின் தீர்ப்பில் பணி ஓய்வுக்குப் பின்னும் மதச்சார்பற்ற கொள்கைகளை பேணும் விதத்தில் செயல்பட்டதற்கு நீதிபதி தனது தீர்ப்பில் பாராட்டு தெரிவித்திருந்தார்.

    2002 இல் திண்டிவனம் அருகே பட்டணம் கிராமத்தில் பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்த இருளர் இனப்பெண் தாக்கப்பட்டது தொடர்பான கட்டப்பஞ்சாய்த்திற்கு உடன்படாததால் ஆளுங்கட்சி பிரமுகரின் தூண்டுதல் பேரில் இருளர் ஒருவரை சாதிப்பெயர் சொல்லித் திட்டியதாக திண்டிவனம் ரோசனை காவல்நிலையத்தில் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை வழக்குப் பதியப்பட்டது. இதனைக் கண்டித்து விழுப்புரத்தில் நடைபெற்ற மாபெரும் பேரணி மற்றும் மாநாட்டையடுத்து வழக்கை காவல்துறை திரும்பப்பெற்றது.

     2010 இல் சென்னை உயர்நீதிமன்றத்தின் அனுமதி பெற்று ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கடலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக, இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டேன். இதுவரை குற்றப்பத்தரிக்கை தாக்கலாகவில்லை.

    2011 இல் திருக்கோவிலூர் போலீசார் தி.கே.மண்டபத்தில் குடியிருக்கும் இருளர்கள் மீது பொய்வழக்கு போட்டது அடித்துச் சித்திரவதை செய்ததுடன், நான்கு இருளர் இனப்பெண்களை வன்புணர்ச்சி செய்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்ட என்மீது இருளர் சங்கத் தலைவரை அவமானமாகத் திட்டியதாக திருக்கோவிலூர் காவல்நிலையத்தில்  எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை வழக்குப் போடப்பட்டு, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

      13.05.2019 அன்று வானூர் வட்டம் பொம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி இருளரான மோகனும் (45), அவரது மகள் சுபாஷினியும் (15) கிருஷ்ணமூர்த்தி கவுண்டர் மகன் பெரியண்ணன் என்பவரால் தாக்கப்பட்டனர். புகாரளிக்க மயிலம் காவல்நிலையம் சென்ற மோகன் எஸ்.ஐ. விவேகானந்தானால் சித்திரவதை செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட மோகனுக்குப் புகார் எழுத உதவிய என்மீதும் எழுத்தாளரும் பத்தரிக்கையாளருமான இரா.முருகப்பன் மீதும் பொய்வழக்கு போட்டு கைது செய்தனர். ஆனால் இருளர்கள் மீது தாக்குதல் நடத்திய பெரியண்ணன் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதற்காக தொடர்ந்து போராடுகிறோம். அரசு எந்திரம் மற்றும் காவல்துறையின் மனப்பான்மையில் மாற்றம் ஏற்படவே இல்லை என்பதை எடுத்துக்காட்டவே இங்கு இவற்றைக் குறிப்பிடுகிறேன். அதற்காக நீண்ட சட்டப் போராட்டங்களையும் மக்கள் இயக்கத்தையும் முன்னெடுக்க வேண்டிய தேவையிருக்கிறது.    

 

14.  40 ஆண்டுகளுக்கு மேலான விளிம்புநிலை மக்களுக்கான பணிகள் உங்களுக்கு நிறைவளிக்கிறதா? இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? உங்கள் மீதே வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது? இதனால் சலிப்பு ஏற்பட்டதுண்டா?

 

        நிச்சயமாக ஓரளவு  நிறைவு அளிக்கிறது. ஆனால், நாம் செய்யவேண்டிய பணிகள் நிறைய நம் முன் உள்ளதாக உணர்கின்றேன். அதற்கு தங்களைப் போன்ற பலரின் ஒத்துழைப்பின்றி செய்யமுடியாது. அதே சமயத்தில் குறிப்பிட்ட அரசியல் கட்சியின் பின்புலம் இன்றி எவ்வாறு விரிவுபடுத்தமுடியும் என்ற கேள்வியும் எழுகிறது. விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்தில் அக்கறையுள்ள பலரிடமும் கலந்தாலோசித்தால் நம்முடைய அடுத்தகட்ட பணியைத் திட்டமிடலாம். நம்மீது போலீசார் பொய் வழக்குப் போடுவதால் சலிப்பு ஏற்படுவதில்லை. இவற்றையெல்லாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். அவ்வாறு வழக்குப் போடுவதென்பது மனித உரிமைப் பணி என்பது அடிப்படையில் காவல் துறைக்கு எதிராகத்தான் போய் நிற்கும். காவல் துறையினர் சரியாக செயல்பட்டால் மனித உரிமை ஆர்வலர்களுக்கான தேவை குறையும் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறினாலும் காவல் துறையினரில் ஆளுங்கட்சி சார்பு மற்றும் ஆதிக்கச் சக்திகளின் சார்பு மாறுவதில்லை. இந்தப் புரிதலுடன் செயல்படும்போது நமக்கு சலிப்பு ஏற்படுவதில்லை. மேலும் இதுபோன்ற பணிகளை, நமது கடமையாக ஏற்றுச் செயல்படும்போது, அது நமது வாழ்வின் பகுதியாக மாறிவிடுகிறது.

 

       என் மீதான மற்றும் இருளர்கள் மீதான வழக்குகளைத் திறம்பட நடத்தி நீதியை நிலைநாட்ட அந்நாளைய வழக்கறிஞர் நீதிபதி கே.சந்துரு, வழக்கறிஞர் பொ.இரத்தினம் போன்றோரின் பங்கு முக்கியமானது. இவர்களைப் போன்று பல்வேறு தோழர்களின் பங்களிப்பின்றி எங்களது செயல்பாடுகள் முழுமையடைவது  சாத்தியமில்லை. இருளர்கள் மீதான வன்கொடுமைகளை வெளிக்கொண்டு வந்த பத்தரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்களின் பங்கும் குறிப்பிடத் தகுந்தது.

 

(இந்நேர்காணலின் சுருக்கப்பட்ட வடிவம் ‘பேசும் புதியசக்தி’ ஜூலை 2022 இதழில் வெளியானது.)

 

நன்றி: பேசும் புதியசக்தி - ஜூலை 2022