திங்கள், மே 29, 2023

அறிவார்ந்த சிந்தனைகளுக்கான இதழ்

 

அறிவார்ந்த சிந்தனைகளுக்கான இதழ்

(புதுமலர் - சிற்றிதழ் அறிமுகம்)

மு.சிவகுருநாதன்


 

முதல் இதழ்:


 

          தோழர் கண.குறிஞ்சி 'இடது' என்ற மார்க்சியச் சிற்றேட்டை நடத்தி வந்தார். அது தனது முதற்சுற்றை முடித்துக்கொண்டது.  அதன் நீட்சியாகவும் இரண்டாம் சுற்றாகப் 'புதுமலர்' என்ற பெயரில் சமூக, அரசியல், கலை, இலக்கியக் காலாண்டிதழைத் தொடங்கியிருக்கிறார். பிரகடனங்கள் எவற்றையும் உரத்து முழங்கப் போவதில்லை, என்கிற அறிவிப்புடன் இதழ் வெளிவந்துள்ளது. ஆனால் இதழ் கருத்தியல் சார்ந்து இயங்கும் என்பதற்கு இதில் இடம்பெறும் படைப்புகளே சாட்சியாக உள்ளது. 'புதுமலர்' முதல் (ஜனவரி - மார்ச் 2023) இதழ் வள்ளலார் -200 ஆவணச் சிறப்பிதழாக வெளிவந்தது. 

           புத்தருக்குப் பிறகு யாரும் சங்கம் அமைக்காத நிலையில் தனது கோட்பாடுகளைப் பரப்புவதற்கு சங்கம் (சமரச சுத்த சன்மார்க்க சங்கம்) அமைத்த வள்ளலாரின் பெருமையையும் உலகப் பற்றை துறந்த பின்பும் தமிழ் மொழி மீது பற்று கொண்டிருந்ததையும்  தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவராகவும் பழ.நெடுமாறன் கட்டுரை இனம் காண்கிறது.

         இந்தியத் துணைக் கண்டத்தில் வேதங்கள், வேதமரபுகள், வருணாசிரம், மூடநம்பிக்கைகள் போன்றவற்றை அழித்தொழித்து சமத்துவ, அறிவார்ந்த சமூகத்தை படைக்க வேண்டும் என்று முதன்முதலில் போதித்தவர் புத்தர். அவரது மறைவிற்குப் பின் பார்ப்பனர்கள் சங்கத்தில் நுழைந்து திரிபுகளை உண்டாக்கினர். வள்ளலாரின் வேதமறுப்புச் சிந்தனைகளுக்கும் இதே நிலை ஏற்பட்டதை வள்ளலார் வழிவந்தோர் முறியடித்துள்ளனர். அவர்களுக்கு உதவுவதே வேதமறுப்புச் சிந்தனை (அவைதீகம்) கொண்ட அனைவரின் கடமை என கொளத்தூர் மணியின் கட்டுரை தெரிவிக்கிறது.

         வள்ளலார் குறித்த பல்வேறு தரப்புகளை ஒத்துறழ்ந்து ஆய்வு செய்யும் தோழர் பொதிகைச் சித்தரின் கட்டுரை (வடலூரும் ஈரோடும்) உண்மையில் தமிழ்த் தேசியத்தின் ஊற்றுக்கண் வள்ளலார் என்பதையும் பிறவற்றையும், உண்மைகளை நோக்கினால்தான், “ஆரியத்தை அதன் தங்குதளம் யாவினும் நின்றெதிர்க்கும் செல்நெறியில் வடலூரும் ஈரோடும் சங்கமிக்கும்  பெறுமதிகளும்; அவற்றிற்கு எதிரான அழிமதிகளும் எத்தகையன என்பதன் துல்லியம் பிடிபடும், என எடுத்துக் காட்டுகிறது.

           வள்ளலாரின் கருத்துகள் ஏதோ 200 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என எளிதில் கடந்து செல்ல முடியாது. இன்றைய ஆரிய, மத, சாதிப் பாசிசக் கருத்துகளை எதிர்க்கும் பொருத்தப்பாடு அதில் இருக்கிறது. அவரது கருத்துகளைக் கொண்டாவும் அவரைத் தெய்வமாக வழிபடாமல் அவரது லட்சியக்கனவுகளை நனவாக்கப் பாடுபட வேண்டும் என்று தோழர் கண.குறிஞ்சியின் கட்டுரை கேட்டுக் கொள்கிறது.

        விவேகானந்தரால் நிறுவப்பட்ட இராமகிருஷ்ண மடம் (1897), சங்கர மடம் போன்றவற்றிற்கு கிடைத்த அரசாதரவும் ஆர்.எஸ்.எஸ்., பா... போன்ற இந்துத்துவப் பரிவாரங்களின் பேராதரவும் வள்ளலாரின் சிந்தனைகள், சபை, சங்கம், போன்றவற்றிற்கு இல்லை.  வள்ளலார் பெயரில் உண்டி கொடுப்பது மட்டும் போதாது. சாதி, சமயம், வேதம், சமஸ்கிருத அதிகாரம், மூடக்கருத்துகள் போன்றவைகளற்ற மெய்யறிவு (சத்ய ஞானம்), சமன்மை நன்னெறி (சமரச சன்மார்க்கம்) உணர்வை ஊட்டவும் பரப்பவும் வேண்டும் என பொழிலன் தனது கட்டுரையில் வேண்டுகோள் விடுக்கிறார்.

         வள்ளலாரின் ஆறு திருமுறைகளில் முதல் ஐந்திற்கும் கிடைக்கும் முக்கியத்துவம் ஆறாம் திருமுறைக்குத் தரப்படுவதில்லை. பலர் பண உதவி செய்தபோதும் ஆறாம் திருமுறையை அச்சிடாமல் தவிர்த்தனர். வள்ளலாரின் இறுதிக்காலத்தில் வேறு ஒருவரால் அது வெளியிடப்படுகிறது. அருட்பா x மருட்பா மோதல் குறித்த உண்மைக்கு மாறான தகவல்களை சுருக்கமாகப் பட்டியலிடும் விடுதலை இராசேந்திரனின் கட்டுரை, புலால், மது அருந்தாத எந்தச் சாதியும் நேரடியாக ஒளி வடிவக் கடவுளை வணங்கலாம், என்ற சமத்துவத்தை உருவாக்கி அர்ச்சகர் எனும் இடைத்தரகர்களை ஒழித்து வாழ்ந்து காட்டிய வள்ளலார் ஒரு புரட்சித் துறவி! பார்ப்பன எதிர்ப்பு மரபின் வரலாற்றுத் தொடர்ச்சி! என்றும் சொல்கிறது.

     தத்துவத்தை செயித்து தயவை நடத்துவதற்கு யுத்தக் குறி காவி

வெற்றியான பிறகு அடைவது தயவு. ஆதலால் வெற்றிக்கொடி வெள்ளை

        தமிழ் மரபில் சந்நியாசம் கிடையாது. அது ஆரிய மரபு. துறவு மட்டும் தமிழ் மரபில் உண்டு. தமிழ்த் துறவிகள் பலரும்  வெள்ளாடைத் தரித்தவர்களே. புறச் சமயத் தாக்கத்தால் காவி புகுந்தது, எனவெள்ளை வேட்டி மரபும் காவி வேட்டி மரபும், என்ற ரெங்கையா முருகனின் கட்டுரை வள்ளலாரின் உடையரசியலை வெளிப்படுத்துகிறது.

         சைவத்திற்குள் தங்களுக்கான இடத்தைத் தேடத் தொடங்கிய  இடைநிலைச் சாதியினர் இராமலிங்கரைத் துணைக் கொண்டர் என்பதையும் பாடல்களை மட்டும் தொகுத்து வெளியிட ஆர்வம் காட்டிய இவர்கள் அவரது கொள்கைகள், நிறுவனங்களை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. முதல் ஐந்து திருமுறைகளை வெளியிட உண்ணா நோன்பிருந்து வள்ளலாரிடம் அனுமதி வாங்கிய இறுக்கம் இரத்தின முதலியார் ஆறாம் திருமுறையை வெளியிடவில்லை என்கிறதிருஅருட்பா பதிப்பு அரசியலைமுனைவர் வி.தேவேந்திரனின் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.

       சைவக் கொள்கையான அன்புநெறி, வள்ளலாரிடம் கருணையாகவும் இரக்கமாகவும் வெளிப்பட்டுள்ளது. ஆனால் அன்பு என்பதனை நேரடியாகக் கருணை, இரக்கம் என்று உணரமுடியவில்லை. திருவள்ளுவரை  64வது நாயன்மாராக திருவள்ளுவ நாயனார் உலா வருதல் போல வள்ளலாரின் முதல் ஐந்து திருமுறைகளை மட்டும் பரப்பி, ஆறாம் திருமுறையை முடக்கி சைவ மரபுச் சிமிழுக்குள் அடைக்க முயன்ற அரசியலை முனைவர் கு.கலைவாணன், முனைவர் சிவகுமார் ஆகியோரின் கட்டுரை அம்பலப்படுத்துகிறது. வள்ளலாரின் படைப்புகள் பின்னிணைப்பாக வழங்கப்பட்டுள்ளது.

          எஸ்.வி.ஆரின்அந்நியமாதல்’ (க்ரியா வெளியீடு), டாக்டர் சு.நரேந்திரனின்தமிழ் பயிற்றுமொழிகனவும் நனவும்’ (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு) போன்ற நூலறிமுகக் குறிப்புகளும் செ.நடேசன், .நெடுஞ்செழியன், பா.செயப்பிரகாசம் போன்ற ளுமைகளுக்கான அஞ்சலிக் குறிப்புகளும் நூலில் இடம் பெற்றுள்ளன. ‘இடதுஇறுதி இதழான வ..சி. சிறப்பிதழ் குறித்த கி.வீரமணி, சாவித்திரி கண்ணன், ரெங்கையா முருகன், பழ.நெடுமாறன் ஆகியோரின் வாசகப் பதிவுகளும் உள்ளன. 

இரண்டாவது இதழ்:


 

          இரண்டாவது இதழ் (ஏப்ரல்ஜூன் 2023) மொழி மற்றும் கல்விச் சிறப்பிதழாக மலர்ந்துள்ளது. மொழி உரிமைப் போராளி ஜோகா சிங் (பஞ்சாப்) நேர்காணல் இவ்விதழில் வெளியாகியுள்ளது. CLEAR என்னும் மொழி நிகர்மை பரப்பியக்கம் (Campaign for Language Equality And Rights) என்ற அமைப்பின் வழியே மொழி உரிமைகளுக்காகப் போராடி வரும் இவரது இயக்கத்தில் ஆழி. செந்தில்நாதன், கண.குறிஞ்சி, மணி. மணிவண்ணன் போன்றோர் இணைந்து செய்லபடுகின்றனர். இவரதுமொழிச் சிக்கல்கள் குறித்த சர்வதேசக் கருத்துக்கள்எனும் ஆங்கில நூல் தோழர் கண.குறிஞ்சியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு 2013, 2015, 2017, 2021 ஆகிய ஆன்டுகளில் நான்கு பதிப்புகளைக் கண்டு 3000 பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது.

           கல்வியாளர் பேரா.பா.கல்யாணி தனது நேர்காணலிலும் பேச்சிலும் அடிக்கடி சொல்லும் பெயர் ஜோகா சிங் ஆகும். தோழர் கண.குறிஞ்சி மொழிபெயர்ப்பில் வெளியான மொழிச்சிக்கல் குறித்த சர்வதேச கருத்துக்கள் என்ற நூலை இன்னும் எளிமையாக்கி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

            பேரா.பா.கல்யாணி தனது நேர்காணல் ஒன்றில், “தாய்மொழிக்கல்வி இயக்கம் என்பது தமிழ் உணர்வாளர்களின் கோரிக்கை மட்டுமல்ல; அடித்தட்டு மக்களின் கல்வியில் அக்கறையுடையவர்கள் அனைவரும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியதாகும். அதுவே ஜனநாயகமாகவும் அறிவியல்பூர்வமாகவும் இருக்க முடியும். தோழர் கண குறிஞ்சி மொழிபெயர்த்த (2013) ஜோகா சிங் என்பவரின் பயிற்றுமொழி குறித்த ஆய்வுக்கட்டுரை முக்கியமானது. எல்லா மொழியிலும் கல்வியை அளிக்க இயலும் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தும் நூல் இது.  இந்நூலின் கருத்துகளைக் கொஞ்சம் எளிமைப்படுத்தி மாநிலம் முழுதும் எடுத்துச் செல்ல வேண்டும்”, (பேசும் புதியசக்தி, மாத இதழ் ஜூலை 2022) என்று குறிப்பிடுகிறார்.

            ஜோகா சிங் நேர்காணலில், மொழி மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராடிய தமிழ்நாட்டு மக்களின் புகழ்மிக்க முயற்சிகளை பாராட்டுவதோடு, தமிழ்  மொழியின் எதிர்காலத்திற்குத் தேவையான போராட்டமாக அது இருக்கவில்லை என்கிற விமர்சனத்தையும் பதிவு செய்கிறார். கல்வியில் பயிற்றுமொழி தாய்மொழியின் அழிவிற்கு காரணமாக அமைகிறது. இந்தி உள்ளிட்ட பிற இந்திய மொழிகளிலும் இதே நிலைதான். ஆங்கில ஆதிக்கத்தை  எதிர்த்து எந்தவொரு தீவிர இயக்கத்தையும் காண முடியவில்லை  என்ற வருத்தத்தையும் பதிவு செய்கிறார்.

       இந்தியாவில் மொழி வல்லாதிக்கத்தின் வேர் மிகப் பழங்காலத்திலேயே தொடங்கிவிட்டது. சமஸ்கிருதத்தைச் சுற்றி பொய்யான கதை உற்பத்தி செய்யப்பட்டு மக்கள் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளனர்.  மூன்று வயதுக் குழந்தை மூன்று மொழிகளைப் படிக்க வேண்டும் என்ற அறிவுக்குப் பொருத்தமில்லாத தேசியக் கல்விக் கொள்கை 2020 இல் தனியார் மயம், ஆங்கில ஆதிக்கம் போன்றவற்றை நிலைநிறுத்தும் ஓட்டைகள் உள்ளன. தாய்மொழிகளுக்கு ஆதரவான உறுதியான அழுத்தங்கள் இதில் இல்லை, என்றும் குறிப்பிடுகிறார். அவரது வாழ்வு, பணிகள், இந்திய மொழிச் சிக்கல்கள், கிளியர் இயக்கம் குறித்த விரிவாக நேர்காணலாக இது அமைந்துள்ளது.

        செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் தமிழிலும் வந்துவிட்ட நிலையில் தொழில்நுட்பங்கள் சார்ந்தும் மொழிக் கொள்கைகள், உரிமைகள் சார்ந்தும் செயல்பட வேண்டிய தேவை ஆழி.செந்தில்நாதனின் கட்டுரை விளக்குகிறது. மிகப்பெரிய தமிழ்த் தரவுக் களஞ்சியங்களையும், செயற்கை நுண்ணறிவு சார்ந்த மொழி ஆய்வுகளையும் அரசு திட்டமிட்டு பெரிய நிறுவனங்கள், பல்கலைக் கழகங்களுடன் இணைந்து இத்தகைய ஆய்வுகளில் ஈடுபட வேண்டும். உருவாகும் தரவுகளும் மென்பொருள்களும் சமூக உடைமையாக்கப்பட வேண்டும். அவை நமது சொந்த சர்வரில் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கவும், தரவுகளின் தனியுரிமை பேணவும் வேண்டும். செயற்கை நுண்ணறிவு நுட்பங்கள் அதிக ஆற்றலை உறிஞ்சுவதால் வருங்காலத்தில் பசுமை செயற்கை நுட்பத்தையும் உருவாக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறார்.

          இலக்கியவாதி ஜெயமோகனின் அறமற்ற அரசியலை விமர்சிக்கும் கட்டுரை ஒன்றை சுப.உதயகுமாரன் எழுதியிருக்கிறார். “அரம்போலும் கூர்மையர்”, “அறிவார்ந்த படைப்பாளர்”, என்றெல்லாம் அவர் ஜெயமோகனை மதிப்பீடுகிறார். இது மிகைப்படுத்தப்பட்ட பிம்பம், அவ்வளவுதான்! சுந்தர ராமசாமி, ‘காலச்சுவடு’ கண்ணன், ஜெயமோகன், சமஸ் போன்றவர்கள் இவ்வாறு ஏதோ ஒருவகையில் ஊதிப்பெருக்க வைக்கப்படுகின்றனர். “வெளுத்ததெல்லாம் பாலாக”, பலர் மயங்கிப் போய்விடுகின்றனர். ஜெயமோகன், “பாசிசக் கட்சிகளோடு, இயக்கங்களோடு, வீணர்களோடு கரம் கோர்த்துக் களமாடுபவரல்ல” என்றும் கணிக்கிறார். இந்துத்துவமும் ஆர்.எஸ்.எஸ்.ம் வெளிப்படையாக என்று களமாடியிருக்கிறது? தாங்கள் நட்த்திய காந்தியின் படுகொலையை ஒத்துக் கொண்டார்களா? பவுத்தத்தை உள்நுழைந்து அழித்தனர். “அவர்களையெல்லாம் நீக்கமற ஆட்கொண்டு, அவர்களின் மாண்பை, மனிதத்தன்மையை அழித்தொழிக்கும் தீநுண்மி”, என்ற பின்பகுதி மிகச்சரியானது.  

       செப்பேடு, கல்வெட்டு, அகழ்வாய்வு, முத்திரை, மோதிரம் நாணயம் ஆகிய சங்கச் சான்றுகளின் வழி “தொல்லியல் நோக்கில் தமிழ்ச் சங்கம்: இருப்பும் சிறப்பும்”, கட்டுரையில் புலவர் செ.ராசு விளக்குகிறார். பழங்கால வேளாண் சமூகத்தில் கால்நடைகளைக் கணக்கிடப் படலை எண்களைப் பயன்படுத்தினர். அதாவது ஐந்து ஐந்தாக கோடிட்டு எண்ணும் முறையே படலை எண்கள் ஆகும். படலை என்பது வேலி; ஈழத்தில் வடலி.  இது குறித்த தகவல்களை ஆ.கிருஷ்ணன் கட்டுரை தெரியப்படுத்துகிறது.

        சமஸ்கிருத நூல்களில் பிறமொழித் தாக்கம், தமிழ் மற்றும் உலகமொழிகளுடன் சமஸ்கிருதம்  கொண்டுருந்த உறவு, தமிழின் தொன்மை, இயற்கை, தமிழுக்கும் சமஸ்கிருத்த்திற்குமான  வேற்றுமைகள் போன்றவற்றை கணியன் பாலாவின் கட்டுரை எடுத்துக்காட்டுகிறது.  சமஸ்கிருதம் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு 2005. கட்டுரையில் 2015 என்று தவறாக உள்ளது.   

       ‘திரை இசையில் தமிழிசை’ எனும் நிழல் ப.திருநாவுக்கரசு எழுதிய நூலுக்கு தோழர் பேரா.சே.கோச்சடை அழகான மதிப்புரை ஒன்றை எழுதியுள்ளார். நடிகை, புகைப்படக் கலைஞர், புரட்சியாளருமான டினா மொடாட்டியின் வாழ்வு, கலை, புரட்சியை யமுனா ராஜேந்திரனின் கட்டுரை பேசுகிறது.

     ஜி.யூ.போப் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பிற்கு எழுதிய முன்னுரையை தோழர் கண.குறிஞ்சி மொழியாக்கம் செய்துள்ளார். “யாரிடம் சென்று வாழ்வும் பணியாற்றவும் போகிறார்களோ அம்மக்களின் மனதை நல்லமுறையில் புரிந்துகொள்ள இது உதவும்” என்று போப் எழுதிருப்பதை அறம் சார்ந்து புரிந்துகொள்ளலாம்.

        அறிவார்ந்த, கருத்தியல் சார்ந்த விவாதங்களையும் எழுத்துகளையும் சிற்றிதழ் சார்ந்த வெளிகளில் மட்டுமே நிகழக்கூடிய ஒன்றாக இருந்து வந்திருக்கிறது.  அந்தவகையில் புதுமலரின் வருகையால் தமிழ் அறிவுலகப் பார்வைகள்  இன்னும்  அகலிக்கும் என நம்பலாம்.  இம்மாதிரியான இதழ்களின் வருகை இன்றுள்ள ‘அரசியலற்ற தன்மை’ எனும் கருத்தியல் முடக்கத்தையும் போக்க உதவும்.

வெளியீடு:

புதுமலர் பதிப்பகம்

தனி இதழ்: ரூ.100

ஆண்டுக் கட்டணம்: ரூ. 400

ஆசிரியர்: கண.குறிஞ்சி

தொடர்பு முகவரி:

6, முதல் வீதி, சக்தி நகர் மேற்கு,

திண்டல் - அஞ்சல்,

ரோடு – 638012.

அலைபேசி: 9443307681

மின்னஞ்சல்: gana.kurinji@gmail.com

செவ்வாய், மே 23, 2023

கலைந்து போகுமா கல்விக் கனவு?

                                                கலைந்து போகுமா கல்விக் கனவு?

மு.சிவகுருநாதன்


 

             பாஜக தலைமையிலான மத்திய அரசு உருவாக்கிய தேசியக் கல்விக் கொள்கையை (2020), தார்மிகரீதியாக எதிர்த்துவந்த ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். அதனால்தான், புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக, மாநில அளவிலேயே ஒரு கல்விக் கொள்கை உருவாக்கப்படுகிறது எனும் செய்தி பெரும் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருந்தது. ஆனால், மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கக் குழுவில் ஏற்பட்டிருக்கும் சலனம், இது தொடர்பான நம்பிக்கைகளைச் சிதறடித்துவிடுமோ எனும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திமுக அரசின் முயற்சி:

        1976இல் 42வது அரசியல் சட்டத் திருத்தம் மூலம் கல்வி மாநிலப் பட்டியலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. பொதுப்பட்டியலில் இருந்தாலும் கல்விக்கொள்கை முடிவுகள் எடுப்பதில் மாநிலங்களில் பங்கு நிராகரிக்கப்பட்டே வந்துள்ளது. கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாடு தவிர்த்த பிற மாநிலங்களில் கண்டுகொள்ளப்படவில்லை.

        வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதே கல்வியில் வலதுசாரித் தன்மைக் கொண்டுவரும் முயற்சிகள் தொடங்கிவிட்டன. மோடி பிரதமரான முதல் ஐந்தாண்டுகளில் இதற்கான தயாரிப்புகள் தீவிரமடையத் தொடங்கின.  அவர் மீண்டும் பிரதமரான பின்னர்  இப்பணிகள் வேகம் பெற்று,  தேசியக் கல்விக் கொள்கை 2020 வெளியிடப்பட்டது. புதிய கல்விக்கொள்கையின் அரசியல் பின்னணி, அதன் அடிப்படைகள், அவற்றின் பாதிப்புகள் போன்றவற்றி விளக்கி தமிழில் பலநூல்கள் எழுதப்பட்டன; விரிவான பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டன.

       இப்படியான சூழலில் தமிழ்நாட்டில் புதிதாகப் பொறுப்பேற்ற தி.மு.. அரசு,  தமிழ்நாட்டின் கல்விக்கொள்கை உருவாக்கக் குழு ஒன்றை அமைத்தது. இது உடனடியாக எட்டமுடியாத ஒன்றாக இருப்பினும் தமிழ்நாட்டின் பெரிய கல்விக் கனவாக இருந்தது. கருத்தியல் சார்ந்த மாற்றாக இது அமையும் என்றெல்லாம் பேசப்பட்டது.  லெ.ஜவகர்நேசன், .மாடசாமி, அருணா ரத்னம், ஆர்.ராமானுஜம் போன்றவர்கள் இக்குழுவில் இடம்பெற்றது மிகுந்த நம்பிக்கையளித்தது.

கவலைக்குரிய விஷயம்:

        இந்நிலையில், இக்குழுவின் உறுப்பினரும்  ஒருங்கிணைப்பாளருமான முன்னாள் துணைவேந்தர் லெ.ஜவகர்நேசன் விலகுவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியைத் தருகிறது. ஜனநாயகமற்ற முறையில் தலைமை செயல்படுவதாகவும் த. உதயச்சந்திரன் போன்ற மூத்த ஐ..எஸ். அதிகாரிகளின் அழுத்தங்களினால் கல்விக்குழு தடுமாறுவதாகவும் இது குறித்து முதல்வருக்கு கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான வாதப் பிரதிவாதங்களும் நிகழ்கின்றன.  இக்குழுவின் பணிகள் வெளிப்படையாகவும் அறிவியல்பூர்வமான ஆய்வுகள் மற்றும் தரவுகள் அடிப்படியில் அமையவேண்டும் என்றும்மெதிர்பார்ப்பு இருந்த நிலையில் பொதுவெளியில் இவ்வாறு குற்றச்சாட்டு எழுந்தது கவலைக்குரியது.  

        பேரா.லெ.ஜவகர் நேசன் ஒரு சிறந்த கல்வியாளர். இந்தியா மற்றும் அயல்நாடுகளின் கல்விப்புல அனுபவம் உடையவர். கல்வி, ஒடுக்குமுறை, சமூகம் சார்ந்த ஆய்வு  நூல்களையும் எழுதிவருபவர். ‘கல்வியைத்தேடி…’, ‘எதேச்சதிகார தேசியவாதத்தின் குறியீடு’, போன்றவை  இவரது கல்வி நூல்களாகும்.  குறிப்பாக, ‘கல்வியைத்தேடிஎன்ற நூல் தேசியக் கல்விக்கொள்கையை விரிவாக ஆய்வுக்கு உள்படுத்தியுள்ள நூலாகும். ‘இஸ்ரோவிஞ்ஞானிகள்தான் கல்விக் கொள்கையை உருவாக்க முடியும் என்பதற்கு மாறாக சமூக நீதி, சமத்துவம், ஜனநாயகம் சார்ந்த கருத்தியல்கள் வழியே மாநில கல்விக் கொள்கை உருவாவதற்கு உயரிய பங்களிப்பு தருபவராக அறியப்பட்டவர்.

சர்ச்சைகள்:

       மாநில அரசின் கல்விசார்ந்த பல்வேறு செயல்பாடுகளில் மத்திய கல்விக்கொள்கையின் அம்சங்கள் இடம்பெற்றதை பல கல்வியாளர்கள் சுட்டிகொண்டே இருந்தனர். மேலும், வலதுசாரிகளை உள்நுழைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. கல்வித் தொலைக்காட்சிக்கு ஆர்.எஸ்.எஸ். சார்புடைய ஒருவர் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கடும் எதிர்ப்பால் அவர்  திரும்பப் பெறப்பட்டார். இந்நிலையில், மாநிலக் கல்வி உருவாக்கக் குழு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.

        இந்தக் குழுவுக்கு கல்வியாளர் ஒருவர் தலைவராக நியமிக்காமல், டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசனை நியமித்தது ஆரம்பத்திலேயே சர்ச்சையானது.  இது சட்ட ஆணையமோ, விசாரணை ஆணையமோ அல்ல. மாநிலக் கல்விக்கொள்கையை உருவாக்கும் குழுவுக்கு ஏன் முன்னாள் நீதிபதியைத் தேர்ந்தெடுத்தனர் என்பது தெரியவில்லை. மாநில திட்டக்குழு உறுபினர்களையும் இதில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் வேலைப்பளுவில் இக்குழுவில் எவ்வாறு பங்களிக்க முடியும் பங்களிக்க முடியும் என்பது இன்னொரு கேள்வி.

      எழுத்தாளர் எஸ்.ராமருஷ்ணன், இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் போன்ற பிரபலங்களும் இக்குழுவில் உண்டு.  கல்விக்கு இவர்களால் ஏதேனும் பங்களிக்க முடியும் என்றபோதிலும் கொள்கை உருவாக்கத்தின் இவர்களது பங்கு கேள்விக்குரியதுதான். பெயருக்கு ஒரு குழுவை அமைத்து வைத்துக் கொண்டு, அதிகார வர்க்கம் நினைப்பவற்றை கொள்கையாக வடிவமைக்க இவ்வாறு செய்தார்களா என்றும்  சந்தேகங்கள் எழுந்தன. இப்போது எழும் குற்றச்சாட்டுகள் அந்தச்  சந்தேகங்களுக்கு வலுசேர்க்கின்றன.

வெளிச்சத்து வந்த விவகாரங்கள்:  

        துணைக்குழுக்கள் அமைக்கவே பல மாதங்கள் ஆனதைக் கல்வியாளர்கள் சுட்டிக்காட்டி வந்தனர். 11 மாதங்களாக கல்விக்குழு எந்தச் செயல்பாடுகளுமின்றி முடங்கியிருந்தாக ஜவகர்நேசன் தற்போது குற்றம்சாட்டுகிறார். தேசியக் கல்விக் கொள்கையின் அம்சங்கள் இக்கொள்கையில் இடம்பெற வேண்டும் என ஆட்சிப்பணி அதிகாரிகள் வலியுறுத்தியதாகவும் தனது கருத்துகள் ஏற்கப்படவில்லை எனவும், தான் ஒருமையில் அழைக்கப்பட்டதாகவும் மிரட்டப்பட்டதாகவும்  ஜவகர்நேசன் கூறுகிறார்.

      பொதுவாகவே, பாடநூல் உருவாக்கத்தின்போது சி.பி.எஸ்.. பாடத்திட்டத்தை அடியொற்றியே பாடங்கள் உருவாக்கப்படும். அதனுடன் வரலாறு - கலைப்பாடங்களில் சிலவற்றைச் சேர்த்துப் பாடநூல்களைத் தயாரிப்பதுதான் வழக்கம்.  இன்றைக்கு, நீட் தேர்வை மையமாகக் கொண்ட அறிவியல் பாடநூல்களால் அதிகப் பாடச்சுமை ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசு நிர்ணயிக்கும் கற்றல் விளைவுகள் (Learning Outcomes), NAS போன்ற அடைவுத்தேர்வுகள்  ஆகியவற்றை முன்நிபந்தனைகளாகக் கொள்வதால்   பாடநூல்கள்   தரமின்றி வெறும் சுமையாக அமைகின்றன. இதே  நிலை மாநிலக் கல்விக்கொள்கை உருவாக்கத்திலும் நடைபெறுவது தற்போது வெட்டவெளிச்சம் ஆகியிருக்கிறது.  மத்திய அரசு தேசியக் கல்விக்கொள்கையை  உள்வாங்கி மாநிலக் கல்விக்கொள்கையை உருவாக்க வேண்டிய அவசியம் என்ன என்பது முக்கியான கேள்வி. அதற்குப்பதிலாக அக்கொள்கையை அப்படியே செயல்படுத்திவிட்டுப் போகலாமே?  

அரசு செய்ய வேண்டியவை:

       இதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கைகளை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வதில் தவறில்லை. அந்த வகையில் டாக்டர்  ராதாகிருஷ்ணனின் பல்கலைக்கழகக் கல்விக்குழு (1948-49), லெட்சுமணசாமி இடைநிலைக் கல்விக்குழு (1952-53), டாக்டர் கோத்தாரி கல்விக்குழு (1964-66), 1968 முதல் தேசிய கல்விக்கொள்கை, 1986 புதிய கல்விக்கொள்கை, 1992 செயல்திட்ட அறிக்கை, 1973, 1975, 1988, 2000, 2005 ஆகிய ஆண்டுகளின் தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு, சுமையற்ற கற்றல் (1993) ஆகிய பல்வேறு அறிக்கைகளும் ஆய்வு செய்யப்படவேண்டும். மாறாக டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் அறிக்கை (2016), கஸ்தூரிரங்கன் குழு அறிக்கை (2019)  போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான தேசியக் கல்விக்கொள்கை  2020இன் கூறுகளை மட்டும் உள்நுழைப்பதாக சந்தேகம் இருந்தது.  ஜவகர்நேசன் அதைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்துள்ளார்.  

       சமூக நீதி, சமத்துவம், ஜனநாயகம், மதச்சார்பின்மை போன்ற கருத்தியல் சார்ந்து திராவிட மாடல்அரசாக தன்னை அடையாளம் காட்ட விரும்பும் தி.மு.. அரசு,  இவ்விஷயத்தில்  உடனடிக் கவனம் செலுத்த வேண்டும். மாநில உரிமை சார்ந்த அரசாக அப்போதுதான் அதன் அடையாளம் நிலைபெறும்!   

 

நன்றி: இந்து தமிழ் திசை, மே19, 2023