திங்கள், மே 08, 2023

+2 தேர்வு முடிவுகள்: ஒரு பார்வை

 

+2 தேர்வு முடிவுகள்: ஒரு பார்வை

மு.சிவகுருநாதன்

 

            இன்று (08/05/2023) தமிழ்நாடு பள்ளிக் கல்வி வாரியத்தின் +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.  தேர்ச்சி விழுக்காடு அதிகரித்துள்ளது. தேர்வு எழுதியோர்களின் எண்ணிக்கை மட்டுமே தேர்ச்சி விழுக்காட்டில் வரும். தேர்விற்கு வருகை தராத சுமார் 50,000 மாணவர்களை சேர்த்தால் விழுக்காடு குறையலாம்.

         சென்ற ஆண்டைவிட அதிகம் என்பது பெருமையை விட அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற அளவில் இருப்பதுதான் உண்மையான பெருமையாகும். அதற்கு தேர்வு முறைகள், வினாத்தாள் போன்றவை இன்னும் எளிமையாக அமையலாம். மாணவர்களை பெயிலாக்குவதே பொதுத்தேர்வுகளின் கொள்கையாக இருக்க வேண்டியதில்லை. எளிமையான தேர்வுகள், அனைவரும் தேர்ச்சி, அனைவருக்கும் ஏற்ற படிப்பைத் தேர்வு செய்யும் விதமாக தேர்வு முறைகளும் மதிப்பீடுகளும் அமைய வேண்டும். தேர்ச்சி பெறாதவர்கள் திறமையில்லாதவர்கள் என்று பொருள் கொள்ளும் பொதுப்புத்தியும் மாற வேண்டும்.

        கடந்த பல ஆண்டுகளாக மாநிலத் தரவரிசை, முதல் மதிப்பெண்கள் போன்றவை இல்லாமல் தேர்வு முடிவுகள் வெளியாகி வருகிறது. இது பாராட்ட வேண்டிய அம்சம். சுயநிதிப்பள்ளிகள் முதலிடத்திலும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இரண்டாம் இடத்திலும் அரசுப்பள்ளிகள் மூன்றாம் இடத்திலும் இருப்பதாக வரிசைப்படுத்துவதும் தவறு. இவற்றில் பயிலும் மாணவர்களின் சமூக, பொருளாதாரப் பின்புலங்கள் அரசுக்கும் பள்ளிக்கல்வித்துறைக்கும் தெரியாத ஒன்றல்ல. சுயநிதிப்பள்ளிகளுக்கு விளம்பரம் தேடுவதும் அவற்றை மட்டும் வளர்க்க முயல்வதும் நல்லதல்ல.

      ஒட்டுமொத்தத் தேர்ச்சியில் பெண்களின் விழுக்காடு அதிகம் என்பது தொடரும் உண்மை. எனவே ஆண்கள் பள்ளி, இருபாலர் பள்ளிகளில்  தேர்ச்சிக் குறைவு பெண்கள் பள்ளியில் தேர்ச்சி அதிகம் என்கிற புள்ளிவிவரங்கள் எதற்காக மீண்டும் மீண்டும் காட்டப்படுகிறது?

       +1,+2 வகுப்புகளில் செய்முறைத்தேர்வு உள்ள  இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், வில்ங்கியல், கணினி அறிவியல் போன்ற பாடங்களில் 70 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடக்கிறது. இதில் 15 மதிப்பெண்கள் (22%) பெற்றவர் தேர்ச்சி பெறுகிறார். செய்முறைத்தேர்வுகளுக்கு 30 மதிப்பெண்கள் கிடைக்கிறது.  செய்முறைத்தேர்வு அல்லாத தமிழ், ஆங்கிலம், கணிதவியல், வரலாறு, பொருளியல், வணிகவியல், கணக்குப் பதிவியல், வணிகக்கணிதம், புவியியல், அரசியல் அறிவியல், அறவியலும் இந்தியப் பண்பாடும் போன்ற பிற பாடங்களில் நடக்கும் 90 மதிப்பெண்கள் தேர்விற்கு 25 மதிப்பெண்கள் (28%) பெறுபவர் தேர்ச்சியடைகிறார்.  10 மதிப்பெண்கள் அகமதிப்பீடு முழுமையாக வழங்கப்படுகிறது.

        மேலும் மாவட்ட வாரியான தர அட்டவணை வெளியிடுவதும் நிறுத்தப்படவேண்டும். ராணிப்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகியன கடைசி இடங்களில் இருப்பதாகத் தரவரிசைப்படுத்தி பட்டியலிடுவதும் நிறுத்தப்பட வேண்டும். எல்லா மாவட்டங்களும் சமச்சீரான வளர்ச்சி பெற்றுள்ளனவா? இம்மாதிரியான மாவட்டங்களின் உயர் அலுவலர்களுக்கு  இதன்மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டு அது அனைத்து நிலைகளிலும் கடத்தப்படுகிறது. இறுதியில் மாணவர்கள் பாதிப்படைகின்றனர்.

        தேர்வு முடிவுகளை மட்டும் வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த கல்விநிலையை அளவிடுவது அபத்தம். 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இவ்விதம் அமையும் என்று சொல்ல இயலாது. இங்கு அகமதிப்பீடு கிடையாது. எனவே அறிவியல் தவிர்த்த பிற பாடங்களில் 35 மதிப்பெண்கள் எடுக்கவேண்டும். இது பலரால் முடிவதில்லை. எனவே தேர்ச்சி விழுக்காடு குறைகிறது. இந்த இரண்டு முடிவுகளையும் ஒப்பிடுவதும் தவறு. துறையும் அலுவலர்களும் அதைத்தான் செய்கின்றனர்.

       10 ஆம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் 75 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடக்கிறது. இதில் 20 மதிப்பெண்கள் (27%)  எடுக்க வேண்டும். இதை +1, +2 ஐ போல 70+30 = 100 எனவும் தேர்ச்சி மதிப்பெண்கள் 15 எனவும் கொள்ளலாம். மேலும் தமிழ், ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல் ஆகிய இதர பாடங்களுக்கு அகமதிப்பீடு மதிப்பெண்கள் 10 ஐ வழங்க வேண்டும்.

      தேர்ச்சி பெறாதவர்களும் இந்த சமூகத்தில் வாழத்தகுதியானவர்களே; வாழ வேண்டியவர்களே. அவர்களை மன உளைச்சலில் தள்ளுவது நாட்டிற்கு கேடாக முடியும். எளிமையான தேர்வுகள் மூலம் அனைவரையும் பள்ளி இறுதி வகுப்புகளில் தேர்ச்சியடைய வைக்குமாறு தேர்வு முறைகளும் வினாத்தாளும் அமைய வேண்டும்.

      இத்தேர்வுகளை போட்டித்தேர்வுகள் போல கடுமையாக்குவது தடுக்கப்பட வேண்டும். நிறையபேர் 100க்கு100 எடுக்கக்கூடாது, அனைவரும்  பாஸாகக் கூடாது என்கிற ரீதியில் தேர்வும் வினாத்தாளும் அமையாமல் தடுக்க வேண்டும்.  கல்வியில் சீர்திருத்தங்கள் மலரவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக