வியாழன், ஜூன் 08, 2023

பாடநூல்களில் வெறுப்பு அரசியல்

 

பாடநூல்களில் வெறுப்பு அரசியல்

மு.சிவகுருநாதன்


 

         குழந்தைகளுக்கான பாடநூல்கள் மிகுந்த கவனத்துடனும் பொறுப்பு உணர்வுடனும் எழுதப்பட வேண்டியது அவசியம். தவறான செய்திகளும் கருத்துகளும் ஒருபுறமிருக்க, சனாதனத்துக்கு, இந்துத்துவத்துக்கு வலுச் சேர்க்கும் கருத்தோட்டங்கள் பள்ளிப் பாடநூல்களில் தூவப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கக் கூடியதாகும். பாடப் புத்தகங்களில் வெறுப்பு அரசிலைப் புகுத்தி குழந்தைகளின் மனத்தில் நஞ்சை விதைக்க அனுமதிக்கக் கூடாது. அப்படியான நச்சுக் கருத்துகளை இனங்கண்டு அகற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்.

          தமிழ்நாட்டுப் பாடநூல்களில் காணப்படும் இத்தகைய விஷயங்களிலிருந்து சிலவற்றை இங்கு தொகுத்தளிக்கிறேன்.

1) 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், "அண்டை நாட்டுறவைப் பொறுத்தவரையில் இந்தியா ஓர் உன்னத நிலையைக் கொண்டுள்ளது. இந்தியத் துணைக் கண்டத்தில் கடந்த 5000 ஆண்டுகளாக நிலவி வந்த ஒரே மாதிரியான பண்பாட்டின் ஒருபகுதியாக அண்டை நாடுகள் விளங்குகின்றன. சிந்துவெளி நாகரிக காலம் முதல் இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் பன்முகத்தன்மையையும் மிக ஆழமான நட்புறவையும் கொண்டிருந் தன.' (பக்கம் 295).

        இந்தியாவையும் அதைச் சுற்றியுள்ள நாடுகளையும் ஒன்றிணைத்து அகண்ட பாரதம் எனக் கனவு காண்பது சங் பரிவார்களின் வழக்கம். அதை வலியுறுத்தும் இப்படியான கருத்து எப்படித் தமிழ்நாட்டுப் பாடநூலில் நுழைந்தது?

        இதேபோல், 12ஆம் வகுப்பு வரலாறு நூல் உருவாக்கும் பக்கச்சார்பான கருத்துருவாக்கத்தைப் பாருங்கள். "1905இல் ஒரு சமயம் அரவிந்த கோஷிடம் ஒருவர் எவ்வாறு நாட்டுப் பற்று உடையவராக ஆவது எனக் கேட்டார். சுவரில் தொங்கிய இந்திய வரைபடத்தைச் சுட்டிக்காட்டிய அரவிந்தர், "நீ அந்த வரைபடத்தைப் பார்க்கிறாயா? அது ஓர் வரைபடமல்ல மாறாக பாரத மாதாவின் உருவப்படம். அதனுடைய நகரங்களும் மலைகளும் ஆறுகளும் காடுகளும் அவளுடைய உடலை உருவாக்கியுள்ளன. அவளுடைய குழந்தைகளே அவளுடைய பெரிதும் சிறியதுமான நரம்புகள். பாரதத்தை வாழ்கின்ற தாயாக நினைத்து கவனம் செலுத்தி ஒன்பது மடங்கு அதிக பக்தியுடன் அவளை வழிபடு' எனப் பதிலுரைத்தார்.' (பக்கம் 23) மேற்கண்ட வரிகள் பாடநூலில் இடம் பெறத் தகுதியானவையே அல்ல. நாட்டுப் பற்றுக்கு இவ்வாறு விளக்கமளிப்பதென்பது இந்துத்துவ மனப்பான்மையை மாணவர்களிடையே விதைக்கவே உதவும்.

(2) இதே 12ஆம் வகுப்பு வரலாறு புத்தகத்தில் நாட்டுப் பிரிவினை தொடர்பாக வரும் கருத்துகளும் பிரச்னைக்குரியவையாகவே உள்ளன. "ஆங்கிலேய ஆட்சியை ஆதரிக்காத இந்து மகாசபை, அதே நேரத்தில் தேசிய இயக்கத்திற்கும் தனது முழுமையான ஆதரவை நல்கவில்லை.' (பக்கம் 74)

   "முஸ்லிம் லீக்கின் செயல்பாடு மோசமாகவே அமைந்தது. மொத்த முஸ்லிம் வாக்குகளில் 4.8 விழுக்காடு வாக்குகளைப் பெறுவதில் மட்டுமே அது வெற்றி பெற்றது. காங்கிரஸ், மதச்சார்பற்ற மாபெரும் மக்கள் கட்சியாக எழுச்சி பெற்றது. ஆனால் அரசு அதற்கு இந்து அமைப்பு என்ற முத்திரையை இட்டது. முஸ்லிம் மக்களின் உண்மையான பிரதிநிதியாக முஸ்லிம் லீக்கை மட்டுமே முன்னிலைப்படுத்தியது. முஸ்லிம் லீக்கை காங்கிரசிற்குச் சமமான சக்தியாகவே நடத்தியது.' (பக்கம் 89). "பாகிஸ்தான் என்ற எண்ணவோட்டம் 1940இல் முஸ்லிம் லீக் மேடைகளிலிருந்து வெளிப்பட்டாலும் பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே கவிஞரும் அறிஞருமான முகமது இக்பாலால் சிந்திக்கப்பட்டதாகும்.' (பக்கம் 89)

      இந்து தேசியவாதிகள் டிசம்பர் 1938 வரை காங்கிரசில் இருந்துள்ளனர். காங்கிரசுக்குள் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள்  செயல்பட்டுள்ளபோது முஸ்லிம் லீக்கை மட்டுமே குறை சொல்வதில் அர்த்தமில்லை. மட்டுமின்றி, இந்துத்துவம் இங்கு நூற்றாண்டாக வேரூன்றியதை நாம் மறுக்கக்கூடாது. பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம், பஞ்சாப் இந்து சபை, இந்து மகா சபை, ஆர்.எஸ்.எஸ் போன்ற பல்வேறு அமைப்புகள் வாயிலாக இந்து தேசியவாதம் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. இவர்களின் பேச்சுகளும் எழுத்துகளும் இந்த நச்சுப் பரப்பலை முன்பிருந்தே செய்து வந்துள்ளன. 1938 வரை இந்த நாசகார சக்திகள் காங்கிரஸில் செயல்பட்டுள்ளனர். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டோரும் இதில் அடங்குவர்.


 

       முஸ்லிம்களின் இறுதிக்கட்ட நடவடிக்கைகளாக (1940இல்) நடந்தவை இதற்கான எதிர்வினை மட்டுமே. பலரது பேச்சுகளும் செயல்பாடுகளும் இஸ்லாமியர்களை அந்நியர்களாகவும், வெளியேற்றப்பட வேண்டியவர்களாகவும், இந்துப் பண்பாட்டில் கரைய வேண்டியவர்களாகவும் பார்த்துள்ளன. வரலாற்றில் முஸ்லிம் லீக்கிற்கு வேறு வாய்ப்புகளே வழங்கப்படவில்லை. எனவே, பிரிவினைக்கு அவர்கள் மட்டுமே காரணம் என்று சித்தரிப்பது மிகத் தவறு.

(3) 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் மூன்றாம் பருவத்தில் "காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை' என்றொரு பாடம் உண்டு. இப்பாடத்திலும் நமது பாடமெழுதிகள் சனாதனச் சொல்லாடல்களையும், இஸ்லாமிய வெறுப்பையும் எப்படியெல்லாம் உற்பத்தி செய்கின்றனர் என்பதைப் பின்வரும் பத்திகள் நிறுவுகின்றன.

 

    "பண்டைய இந்தியாவில், அதிலும் குறிப்பாக முந்தைய வேத காலத்தில் பெண்கள் சமமான உரிமைகளைப் பெற்று மதிக்கப்பட்டனர். ஆனால், தொடர்ச்சியான வெளிநாட்டுப் படையெடுப்புகளின் விளைவாக சமூகத்தில் அவர்களின் நிலை மோசமடைந்தது.' (பக்கம் 88, 89)

       "முஸ்லிம்களின் வருகைக்கு முன்னரே இந்தியாவில் ஒரு மேம்பட்ட கல்விமுறை நடைமுறையில் இருந்தது.' (பக்கம் 56)

     "இடைக்கால சமூகத்தில் பெண்களின் நிலை மேலும் மோசமடைந்தது. சதி, குழந்தைத் திருமணங்கள், பெண் சிசுக் கொலை, பர்தா முறை, அடிமைத்தனம் போன்ற பல சமூகத் தீமைகளால் அவர்கள் பாதிக்கப்பட்டனர்.' (பக்கம் 89)

     "முஸ்லிம் படையெடுப்பின் விளைவாக பர்தா முறை பிரபலமானது. இடைக்காலத்தில் விதவையின் நிலை பரிதாபமாக மாறியது.' (பக்கம் 89)

     பர்தா முறையையும் விதவைக் கொடுமை, பெண் சிசுக்கொலையையும் இணைக்க வேண்டிய அவசியமென்ன? முகத்தை மூடிக்கொள்ளும் வழக்கம் இஸ்லாமுக்கு மட்டுமே உரியதா? இதுபோக, முஸ்லிம் மன்னர்களின் வருகைக்குப் பிறகே சாதியம், பெண் ஒடுக்குமுறை முதலானவை இந்தியாவில் நிகழ்ந்ததாக பொய்யுரைக்கும் இந்துத்துவர்களின் பரப்புரையை மேற்குறிப்பிட்ட சில பத்திகள் வழிமொழிவதாக இல்லையா!

(4) 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் நூலில் இப்படி ஒரு வாசகம் உள்ளது: "1806இல் நடந்த வேலூர் கலகத்தை 1857இல் நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப் போரின் முன்னோடி என வி.டி. சாவர்க்கர் என்ற வரலாற்றாசிரியர் குறிப்பிடுகிறார்.' (பக்கம் 46)

      பாடப்புத்தகத்தில் இந்துத்துவக் கோட்பாட்டாளர் சாவர்க்கரின் கருத்துகளை மேற்கோள் காட்டுவது ஏற்புடையதல்ல. ஒரு வகுப்புவாதியை பெரிய வரலாற்றறிஞராகக் காட்டும் இந்தப் போக்கு மோசமானதும், கண்டிக்கத்தக்கதுமாகும்.

(5) "முகமது பின் துக்ளக் மிகவும் கற்றறிந்த மனிதர். ஆனாலும் அவர் குரூரம் நிறைந்தவராவார்.' (7ஆம் வகுப்பு சமூக அறிவியல் முதல் பருவம், பக்கம்147)

   "டெல்லியிலிருந்து தௌலதாபாத் செல்ல நாற்பது நாள்கள் நடந்தே செல்ல வேண்டும். பெரும்பாலான மக்கள் தௌலதாபாத் புறப்பட்டுச் சென்றனர். சிலர் ஒளிந்து கொண்டனர். அவர்கள் கண்டுபிடிக்கப்படுகையில் அவர்களில் ஒருவர் பார்வையற்றவராக இருந்த போதும் மற்றொருவர் பக்கவாத நோயாளியாக இருந்தபோதும் கொடூரமான தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

 

எட்டு அல்லது பத்து மைல் அளவு பரவியிருந்த அந்நகரைப் பற்றி ஒரு வரலாற்றறிஞர் "அனைத்தும் அழிக்கப்பட்டன. நகரத்தின் அரண்மனைகளில், கட்டடங்களில், புறநகர் பகுதிகளில் என எங்கும் ஒரு நாயோ, பூனையோ கூட விட்டுவைக்கப்படவில்லை எனும் அளவுக்கு முழுமையாகப் பாழானது.' எனக் குறிப்பிட்டுள்ளார்.' (பக்.148)

        ஆனால், உண்மையான வரலாறு எல்லாரையும் இடம்பெயரக் கட்டாயப்படுத்தவில்லை என்று சொல்கிறது. மேலும், இவ்விதம் தேவகிரியை இரண்டாவது தலைநகராக்குவதற்கான முயற்சி தோற்றுப் போனாலும் இந்தப் பெருந்தொகையோரின் இடப்பெயர்ச்சி எண்ணிக்கையளவில் நீண்டகால ஆதாயங்களைப் பெற்றுத் தந்தது. தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதன் மூலம் வட இந்தியா, தென்னிந்தியாவை ஒன்றுக்கொன்று நெருக்கமாகக் கொண்டு வர இது உதவியது. மதப் புனிதர்கள் உட்பட பலர், தௌலாதாபாத்திற்குச் சென்று அங்கு குடியமர்ந்தனர்.

      இவர்கள் துருக்கியர்கள் டெல்லியில் இருந்து தங்களோடு கொண்டு வந்த பண்பாடு, மதம், சமூகக் கருத்துகளைத் தக்காணத்தில் பரவுவதற்கு வழிவகைகளாயினர். இதன் பயனாக வட இந்தியாவிற்கும், தென் இந்தியாவிற்கும் இடையே பண்பாட்டு ஒன்றிப்பு என்பதைப் போலவே, தென் இந்தியாவிற்குள்ளேயே இத்தகைய ஒரு புதிய ஒன்றிப்பிற்கு வழி வகுத்தது. (பார்க்க: மத்திய கால இந்திய வரலாறு  சதிஷ் சந்திரா, பக்கம் 141)

(6) "(ஒளரங்கஜேப்) இந்துக்களின் மீது மீண்டும் ஜிசியா வரியை விதித்தார் என்றும், இந்துக்களை அரசுப் பணிகளில் அமர்த்துவதைத் தவிர்த்தார் என்றும் 7ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் இரண்டாம் பருவத்தில் இடம்பெறுகிறது.' (பக்கம் 135, 136)

     பாடநூல்களில் இப்படி எழுதும் நிலையில், ஒளரங்கஜேப் பற்றிய அண்மைக்கால ஆய்வுகள் வேறுபட்ட கருத்துகளைத் தெரிவிக்கின்றன.

        கலை, கட்டடக்கலைகளில் நாட்டமில்லாதவர் எனச் சொல்லப்படும் அவர் தேர்ந்த வீணை இசைக் கலைஞராக இருந்திருக்கிறார். பாடநூலில் எளிமை, சிக்கனம் என்பதாக அவரது வாழ்வும் அரசாட்சியும் இருந்ததைக்கூட குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டலாம். எல்லா வரலாற்று ஆய்வுகளையும் புறந்தள்ளிவிட்டு, சகிப்புத்தன்மை இல்லாத மதவெறியராக அவரைச் சித்திரிக்கும் போக்கு இது.

(7) 12ஆம் வகுப்பு அறவியலும் இந்தியப் பண்பாடும் புத்தகத்தில் எப்படி போலி அறிவியல் பெருமிதம், இந்துத்துவ சொல்லாடல்கள், இஸ்லாமிய வெறுப்பு அரசியல், ஒற்றை இந்துப் பண்பாட்டைக் கட்டமைத்தல் ஆகியன கட்டமைக்கப் படுகின்றன என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகளை இங்கு தொகுத்தளிக்கிறேன்.

 

       எந்த அளவுக்கு அவை சனாதனச் சார்புடையதாக இருக்கிறது என்று பாருங்கள். "இந்தியர்கள் அறுவை சிகிச்சைமுறையில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தனர். வயிற்றுப் புறத்தோலில் செய்யப்படும் அறுவை சிகிச்சை (Lab Parotomy). சிறுநீரகக் கற்களை அகற்றும் அறுவை சிகிச்சை (Lithicotomy), ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சை (Plastic Surgery) ஆகியவற்றில் இந்திய மருத்துவர்களின் பணிகள் பாராட்டுக்குரியவையாகும்.' (பக்கம் 242)

       "வேதங்களில் கூறப்பட்டுள்ள அரிய உண்மைகள் இன்றைய உலகில் அறிவியல் உண்மைகளோடு மிகவும் ஏற்புடையதாய் காணப்படுகின்றன. புவியின் வயது, விண்வெளியின் எல்லைகள், சூரியனின் உட்பகுதி, வானநூல் பற்றிய கருத்துகளை வேதங்கள் கூறியுள்ளன. இவை அனைத்தும் இன்றைய அறிவியல் உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும்.' (பக்கம் 53)

     "கிரேக்கர்கள், அரேபியர்கள், துருக்கியர்கள், ஐரோப்பியர்கள் இந்தியாவை ஆட்சி செய்தாலும், இந்தியப் பண்பாட்டிற்கு அடித்தளம் அமைத்தது வேதகாலப் பண்பாடாகும்.' (பக்கம் 54)

          இப்படி பாடநூல் நெடுக இந்துத்துவ சார்புக் கருத்துகள் விரவிக் கிடக்கின்றன. இது எதிர்காலத் தலைமுறையை உருவாக்க எவ்விதத்திலும் உதவப்போவதில்லை. நல்லமுறையில் மாணவர்களைப் பண்படுத்தாமல் இருப்பது மட்டுமின்றி, படுமோசமாக அவர்களை வார்த்தெடுக்கவே இப்படியான அபத்தக் கருத்துகள் உதவும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

 

நன்றி: சமரசம் - மாதமிருமுறை இதழ் (ஜூன் 01-15, 2023)

இணையம்:    https://samarasam.net/view-art.php?id=531

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக