வியாழன், ஜூன் 01, 2023

பண்டைய வரலாற்றுக்கான ஆய்விதழ்

 

பண்டைய வரலாற்றுக்கான ஆய்விதழ்

(சாசனம் 1-6 : இருமொழி ஆய்விதழ் அறிமுகம்)

மு.சிவகுருநாதன்

 

           உண்மையான ஆய்விதழ்கள் தற்போது அதிகம் வெளிவருவதில்லை. வேறு சில நோக்கங்களுக்காக இந்த இதழ்கள் வெளியிடப்படுகின்றன. தமிழக அரசின் தொல்லியல் துறை வெளியிட்டகல்வெட்டுஎனும் ஆய்விதழும் தற்போது வெளிவரவில்லை என்று தெரிகிறது.

         இந்த நிலையில் சாசனம்ஆய்விதழ் 2019லிருந்து தமது பயணத்தைத் தொடங்கியிருக்கிறது. ஆண்டுக்கு இருமுறை மற்றும் இருமொழி இதழானசாசனம்’ இதுவரை ஆறு இதழ்கள் வெளிவந்துள்ளது. 2020க்கான இரு இதழ்களும் ஒரே தொகுப்பாக வெளியானது. நூல் முழுதும் வண்ணப்படங்களுடன் அழகான தாள் மற்றும் வடிவமைப்பில் இதழ் வெளிவருவது மகிழ்ச்சியளிக்கிறது. விலை ரூ. 500, சற்று அதிகம்தான்; வேறு வழியில்லை.  ஆய்வாளர்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய இதழாக ‘சாசனம்’ உள்ளது.

      கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றியல் ஆய்வு மையம் இந்த ஆய்விதழை வெளியிடுகிறது. ஆசிரியர் சுகவன முருகன் (புது எழுத்து மனோன்மணி). டாக்டர் ஆர்.பூங்குன்றன், டாக்டர் எஸ்.ராஜவேலு, டாக்டர் வி.கே.சண்முகம், திரு வீரராகவன், திரு .பி.தேவேந்திர பூபதி, திரு எஸ்.பரந்தாமன் ஆகியோர் ஆலோசகர்களாக உள்ளனர்.

 

சாசனம் - முதல் இதழ்: ஜூலைடிசம்பர் 2019


 

 

         சாசனம் முதல் இதழில் தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன்  அவர்கள் நினைவுக்கான இரு பதிவுகள் உள்ளன. அவருடைய ஆய்வுகள். பண்பு நலன்கள், கொடைத்தன்மை போன்றவற்றை எம்.வி.பாஸ்கரின் கட்டுரை விவரிக்கிறது (பண்டைத் தமிழின் எழுத்ததிகாரம்). ‘இதயத்திலிருந்து நேராக…’ என்ற அவரது நேர்காணல் ஒன்றும் இடம்பெறுகிறது. (நேர்கண்டவர்: லலிதாராம் ராமச்சந்திரன்) “நான் அதுவரையில் செய்தித்துறையில் இருந்ததே இல்லை. ஒரு செய்தித்தாள் அலுவலகம் எப்படி இருக்கும் என்றுகூடத் தெரியாது. செய்தித்தாள் எழுத்துக்குத் தேவையான தமிழறிவும் என்னிடம் கிடையாது. எனக்கே ஆச்சரியம் உண்டாகும் வகையில் என் பணி சிறப்பாக அமைந்தது”,  என்று சொல்வதன் வழி அவரது அரிய பண்புகள் உணரத்தக்கதாக உள்ளது.

       “சேர அரசு என்னவாயிற்று?”, என்று கேள்விக்கான விடையை செந்தீ நடராசனின் கட்டுரை ஆராய்கிறது. கெட்டி முதலியார் செப்பேடு, போத்தாபுரம் கல்வெட்டு, திருவண்ணாமலைக் குறியீடும் தானக் கல்வெட்டுகளும், கொங்கு வட்டெழுத்துக் கல்வெட்டுகள், தஞ்சை மராட்டியர் – முதலாம் துளஜா காசு பற்றிய கட்டுரைகளும் உள்ளன.  

        Iron Age and Early Historic settlement pattern in Tamil Nadu with special reference to Amaravathi River Valley  (V.P.Yathees Kumar), Archaeology of Tamiraparani River Valley (M.Prasanna), Neolithic Grooves found at Keezanur,  Javadi hills of  Tamil Nadu (R.Ramesh), Megalithic Culture in Krishnagiri Region (S.Paranthaman) போன்ற பல ஆங்கிலக் கட்டுரைகளும் இவ்விதழில் உண்டு.

 

சாசனம் - இரண்டாவது மற்றும் மூன்றாவது இதழ்: ஜனவரிடிசம்பர் 2020


 

        இவ்விதழில் கீழடியும் – கார்பன் நானோ குழாய்களும் என்ற பேரா.ஜோசப் பிரபாகரின் கட்டுரை காலக்கணிப்பில் நானோ குழாய்களின் பங்கை விரிவாக விளக்குகிறது. தூண்டொளிர் காலக்கணிப்பு (Luminescence Dating) குறித்த முனைவர் பா.மொர்தெகாய் கட்டுரை, இதன் பின்னிருக்கும் இயற்பியல் தத்துவங்களை  விவரிக்கிறது.

       தமிழ்நாட்டின் செம்பியன் கண்டியூரில் கிடைக்கப்பெற்ற கற்கோடரியில் பொறிக்கப்பட்ட அச்சுகள் சிந்து அச்சுகள் என்பதில் தனக்கு சந்தேகம் இருப்பதை அஸ்கோ பர்போலாவின் கட்டுரை (மொ-அரவிந்த்.எம்) உறுதி செய்கிறது. பி.பி.லால் அவர்கள் இதை ஹரப்பா எழுத்துகள் என்று கூறினாலும் அவற்றிற்கு போதிய ஆதாரம் இல்லை, என்று மறுக்கிறார். ஆனால் இது போன்ற அச்சுகள் கோடரிகளில் பொறிக்கப்படுவது வியப்பும் ஈர்ப்பும் தருவதாக உள்ளதையும் குறிப்பிடுகிறார்.

         வலசை, கொடுமணல் அகழ்வாய்வு குறித்த கட்டுரைகளும் இருக்கின்றன. கல்வெட்டுகள், நடுகல், பாறை ஓவியங்கள் குறித்த பல்வேறு ஆக்கங்கள் உள்ளன. டோனி ஜோசப்பின் ‘ஆதி இந்தியர்கள்’ நூலுக்கான மதிப்புரை ஒன்றும் உள்ளது. வரலாற்றில் மருங்கூர், மூன்றாம் இராசராச சோழனின் பட்டத்தரசி, சு.இராசவேலுவின் வரலாற்றில் கிண்ணிமங்கலம்’, தொன்மைச் சிறப்புமிக்க குலதீபமங்கலம், ரோம் பட்டணத்து மோதிரக்கல் போன்ற கட்டுரைகளும் காணக் கிடைக்கின்றன.

       Keeladi Excavations (K.Amarnath Ramakrishna), Recent findings in  South Indian coins Marungapuri  Palayam (RVR Sai Sravan), Metallurgical Studies on Copper and  Iron Artefacts – Adichanallur (B.Sasisekaran & B.Raghunatha Rao), A Red Ochre Rarity (Sugavana Murugan), Sadatullakhan Mosque (Gopalakrishna) போன்ற கட்டுரைகள் ஆங்கிலத்தில் உள்ளன.

 

சாசனம் - நான்காவது இதழ்: 2021 


 

 

       இந்த இதழில் கா.ராஜன், .சுப்பராயலு, ஐராவதம் மகாதேவன், .காமராசன், பரமு புஸ்பரத்தினம், கௌரி லக்சுமிகாந்தன், என்.கே.எஸ்.திருச்செல்வம் போன்றோரது ஆக்கங்கள் உள்ளன.

          தமிழியின் காலம்: அண்மைக்கால கரியமில காலக்கணிப்புகள் முக்கியமான கட்டுரையாகும்.  இக்கட்டுரை வெளிப்படுத்தும் செய்திகள்:

·         அறிவியல்ரீதியாக அனைத்துக் கரியமில காலக்கணிப்புகளும் கி.மு. ஆறாம் நூற்றாண்டிற்கும் கி.மு.இரண்டாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தைச் சார்ந்ததாகும்.

·         கிடைக்கப்பெற்றுள்ள 35 கரியமில காலக்கணிப்பில் 27 காலக்கணிப்புகள் அசோகர் காலத்திற்கு முற்பட்டவையாகும். காலத்தால் முந்திய காலக்கணிப்பு கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்ததாகும்.

·         இக்காரணத்தால் சங்ககாலம் எனும் தொடக்க வரலாற்று காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் அல்லது முன்பாகவே தமிழகத்தில் தோன்றிவிட்டது எனலாம். கி.மு. ஆறாம் நூற்றான்டில் தமிழகம் முழுவதும் தமிழி வரிவடிவம் பரவிவிட்டது என்பதை அண்மைக்கால காலக்கணிப்புகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன.

·         உருவப்பொறிப்புள்ள சாதவாகனர்கள் காசுகள்என்ற ஐராவதம் மகாதேவனின் கட்டுரை தெலுங்கு   மன்னர்களான சாதவாகவனர்கள் வெளியிட்ட நாணயத்தில் பிராகிருதம், தமிழ் பிராமி எழுத்துருக்கள் காணப்படுவதால், சாதவாகனர்கள் காலத்தில் தமிழும் பிராகிருதமும் அரச மொழிகளாக இருந்தன என்றும் வணிக நோக்கிலும் இவ்வாறுஅச்சிட்டிருக்கலாம் என்றும் முடிவுக்கு வருகிறார்.

       தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புகளும் ஆட்பெயர்களும்என்ற   தலைப்பிலான .சுப்பராயலு கட்டுரையில் பிராகிருத மொழிச்சிக்கலிருந்து விடுபட்டு இலக்கிய எழுத தமிழ் பிராமி எழுத்துமுறை உகந்த கருவியாக பயன்பட்டது என்கிறார். இலங்கையில் பிராமி கல்வெட்டுகள் (என்.கே.எஸ்.திருச்செல்வம்), இலங்கைப் பிராமி கல்வெட்டுகள் வெளிப்படுத்தும் சமயநிலை (கௌரி லக்சுமிகாந்தன்), இலங்கையில் தமிழ் அரச மரபின் தோற்றத்தை அடையாளப்படுத்திக் காட்டும் பிராமி சாசனங்கள் (பரமு புஸ்பரத்தினம்) போன்ற கட்டுரை பல புதிய பார்வைகளைத் தருகின்றன.

        அம்மன்கோயில்பட்டி தமிழ் பிராமி கல்வெட்டு குறித்த மீள்வாசிப்பை .காமராசன் கட்டுரை நிகழ்த்துகிறது. சங்ககால நெடுநிலை நடுகற்களை வி..யதீஸ்குமார் காட்டுரை ஆராய்கிறது. உருவப்பொறிப்புள்ள சாதவாகனர்கள் காசுகள் என் ஐராவதம் மகாதேவன் கட்டுரை தமிழாக்கம் (அரவிந்த் எம்) செய்யப்பட்டுள்ளது. இத்தொடர்பில் Portrait Coins of  Satavahanas (R V R Sai Sravan)  என்ற் ஆங்கிலக் கட்டுரையும் உண்டு. மீ.மருதுபாண்டியனின் நாயக்கர் கால இலக்கியங்கள் மற்றும் சிற்பங்கள் காட்டும் அணிகலன்களும் ஆடைகளும்”, என்ற கட்டுரை விரிவான கட்டுரை ஒன்றும் உள்ளது. பெரிய தடாகம் ட்கலப்பொறிப்பில் (.இரவி) உள்ள எழுத்துகளைப் படிப்பதில் அறிஞர்களிடையே காணும் வேறுபாடுகளைச் சுட்டிக் காட்டுகிற்து. 

        The Orgin of the Tamil Script (Gift Siromoney),  The Invention of the Brahmi Script (Gift Siromoney and Michael Lockwood),  Paleographical  Study of  Kushana Inscriptions (Ravishankar),  Measuring Pearal: Text, Practice and Tradition of Pearal Measuring (M.V.Prakash), Preserving Tamil Scripts: The Way towards their Digitization, Archival and  Outreach (Vinodh Rajan), The Rediscovery of Brahmi (Rangarathnam Gopu) போன்ற ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளும் இதழுக்கு அணிசேர்க்கின்றன.   

 

சாசனம் - ஐந்தாவது இதழ்: 2022


 

 

            இவ்விதழில் மறைந்த ஐராவதம் மகாதேவனின்சங்ககாலக் கல்வெட்டுகளும் என் நினைவுகளும்என்ற கட்டுரை மறுபிரசுரம் (கல்வெட்டு – இதழ்) செய்யப்பட்டுள்ளது. கரூருக்கு அருகில் பாறைக் கல்வெட்டில், “கோ ஆதன் செல்லிரும் பொறை மகன்”, என்று படித்தவுடன் நோட்டுப் புத்தகத்தை தலைக்குமேல் வைத்துக் கொண்டு ஆனந்தக் கூத்தாடிய அனுபவத்தை அக்கட்டுரை விவரிக்கிறது. புதிய கற்காலக் கல்லாயுதங்கள், பழங்குடி மக்களின் நீத்தார் கல்லெடுக்கும் சடங்கு வழிபாடு குறித்து குமரவேல் ராமசாமியின் கட்டுரை பேசுகிறது.

       செஞ்சி நெகனூர்பட்டி சமணப்பள்ளி பற்றிய தமிழிக் கல்வெட்டு (மங்கை ராகவன், வீரராகவன்) பெண் சமணத் துறவிகள் (கவுந்தி) செய்வித்த சமணர் படுக்கை என்பதை அறிவிப்பதையும் இதன் அருகில் வெடாலில் பெண்களுக்கான சமணப்பள்ளி இருந்ததையும் தெரிவிக்கிறது. மறுகால்தலை, யானைமலை தமிழிக் கல்வெட்டுகளை வே.சிவரஞ்சனியின் கட்டுரை மீளாய்வு செய்கிறது. தமிழ் பிராமி பொறிப்புள்ள சங்ககாலக் காசுகள் பற்றிய குறிப்பொன்றை சுகவனமுருகன் எழுதியுள்ளார்.

       தமிழ் இலக்கியங்களில் ஐந்திசைப்பண்கள் குறித்து தமிழிசையறிஞர் நா.மம்மது உலகில் முதலில் தோன்றியவை ஐந்து சுரப்பண்களே. இவை 2000 ஆண்டுகளுக்கு முன்பே இலக்கியங்களில் பதிவானது வியப்பு, என்கிறார். தொல்வரலாறும் மார்க்சியமும் என்ற வி.கார்டன் சைல்ட் கட்டுரை .காமராசனால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

         திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் (ஆற்றூர்) வட்டெழுத்துக் கல்வெட்டுகள் பற்றிய சி.மாணிக்கராஜ் கட்டுரை, பாண்டிய நாட்டு வீரர்களின் நடுகல்கள் குறித்த ..சரவண மணியன் கட்டுரை, செங்கற்பட்டு மாவட்டம் மதுராந்தகம் இரும்பேடு கி.பி.6-7 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுடன் கூடிய சிற்பங்கள் (இரா.ரமேஷ், ..நாகராஜன், மோ.பிரசன்னா) பற்றிய கட்டுரை போன்றவையும் உள்ளன. 

        Early Iron Age settlements in  Lower Palar region: An appraisal from recent Archaeological  Excavations (S.Rama Krishna Pisipaty), Settlement Archaeology – A study  (S.Vetriselvi), Rock Paintings and Excavation at Varanalakunda, Krishnagiri District, Tamilnadu (Ramesh Periyasamy), Every Basadi Its Own Story -  New Evidence from Excavation at  Arethipura, Karnataka (T.Arunraj,  R.N.Kumaran,  P.Aravazhi), Pictographs, Petroglyphs Palani Hills (R.N.Kumaran, M.Saranya, P.Murugan), Literacy of  Ancient Tamils (S.Rajavelu), On The Etymology the Word ‘Tamil’ (Murugan chevvel), Coinage of Andhra dynasties with special mention of Maharathis of Karnataka (RVR Sai Sravan) போன்ற பல விரிவான ஆங்கிலக் கட்டுரைகளும் இவ்விதழில் உள்ளன.

       

சாசனம் - ஆறாவது இதழ்: 2022


 

 

          இந்த இதழில் கிண்ணிமங்கலம் கல்வெட்டுகள் குறித்த கேள்விகளை சொ.சாந்தலிங்கம் எழுப்புகிறார். கிண்ணிமங்கலம் ஏகநாதர் மடம் சுமார் 200 ஆண்டு பழமையானது. இது ஒரு சாதாரண மடமே தவிர காந்தளூர்ச் சாலைக்கு இணையானது அல்ல. இங்கு கிடைத்துள்ள கல்வெட்டுகள், ஓலை ஆவணங்கள் யாவும் அண்மைக்காலத்தில் உருவாக்கப்பட்டவை, என்ற முடிவுக்கு வருகிறார்.  (இதழ் 2 & 3 இல் சு.இராசவேலுவின் வரலாற்றில் கிண்ணிமங்கலம் என்ற கட்டுரை வெளியானது.)

         தமிழ்நாட்டின் அகழ்வாய்வுகளில் கிடைக்கும் பானையோடு பிராமி பொறிப்புகளில் குவீரன்/குவிரன்/குவிரஅன் என்ற பெயர் குறித்த ஆய்வு எஸ்.ராமச்சந்திரன் கட்டுரையில் கிடைக்கிறது.  சங்க இலக்கியங்களிலோ, தமிழ் பிராமி கல்வெட்டுகளிலோ குபேரன்குவேரன் வழக்கும் இடம்பெறவில்லை. குவேரன் என்கிற பிராகிருத வடிவமே சமஸ்கிருதத்தில் குபேரன் எனச்செம்மைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும், என்கிறார்.

        சோழ அரசில் நிலவுடைமையாளர்கள், விவசாயிகள், அடிமைகள்என்ற  .சுப்பராயலு கட்டுரையை இரா.சிசுபாலன் மொழிபெயர்த்துள்ளார். “மக்கள்தொகையில் குறிப்பாக விவசாயத் தொழிலாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் அடிமைகளைப் போலவே வாழ்ந்து வந்ததை இலக்கியத்திலிருந்து தெளிவாக அறிய முடிகிறது. மனிதர்களில் மிகவும் அருவருப்பான சொத்து வடிவமாக விளங்கிய அவர்களின் விருப்பத்தைப் பொருட்படுத்தாமல் பிறரால் வாங்கி, விற்கப்பட்டு வந்ததன் மூலம் அவர்கள் அடையாளம் காணப்படவில்லை என்பதைக் காட்டும் கல்வெட்டுகள் உள்ளதை”, சுட்டுகிறது. “அடிமைகளே சமுதாயத்தின் கீழ்மட்டத்திலிருந்தனர். ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ள கல்வெட்டுகளைக் கொண்டு அவர்களது எண்ணிக்கையைத் துல்லியமாக மதிப்பிட இயலவில்லை. ஆயினும் சமகாலத்திய பிற தரவுகளைக் கொண்டு நோக்குகையில், விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு இணையாக அவர்கள் இருந்திருக்க வாய்ப்பு உண்டு”, என்பதை கட்டுரை எடுத்துக் காட்டுகிறது.

         தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான தொல்மாந்தர் ஓவியங்களைக் கொண்டிருக்கும் கரிக்கையூர் பற்றிய புள்ளிவிவரங்களை யாக்கை வமைவின் கட்டுரை பேசுகிறது. ஏறக்குறைய 200க்கு மேலான இடங்களில் பாறை ஓவியங்கள் இருந்தும் அவற்றில் ஒரு விழுக்காடுகூட முறையாக காலக்கணிப்பு செய்யப்படவில்லை என்கி செய்தி அதிர்ச்சியளிக்கக் கூடியது.

          கரிக்கையூர் ஓவியத் தொகுப்பில் இனக்குழு பூசல் தொடர்பான காட்சிகள் பலவிதமானப் புரிதல்களை தருகின்றன. இங்கு தொடர்ச்சியாக குதிரைப்படைக் குழு ஒன்று தரைப்படைக் குழுவைத் தாக்குவது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. குதிரை ஏறக்குறைய இரும்பு காலத்திற்கு பின்புதான் தமிழகத்திற்குள் வந்தது என்பது அறிஞர்களின் நிலைப்பாடு. இங்கும் குதிரையின் மீது வரும் வீரர் குழு கையில் இரும்பிலான போர்க் கருவிகளைக் கொண்டிருக்கிறது. போலவே அக்குழு நீண்ட தூரத்திலிருந்து வந்தது போன்று தெரிகின்றது”, என்ற கருத்து இக்கட்டுரையில் சொல்லப்படுகிறது.

        காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் வடக்குப்பட்டு அகழ்வாய்வு (2022) குறித்த விரிவான கட்டுரை வண்ணப்படங்களுடன் உள்ளது. இக்கட்டுரை மு.காளிமுத்து, இரா.ரமேஷ், சா.வெற்றிச்செல்வி ஆகியோரால் எழுதப்பட்டது. இடைப்பழங்கால மக்கள் கற்கருவிகளால் வேட்டையாடி வாழ்ந்ததும், சூதுபள மணிகள் மூலம் வடமேற்கு இந்தியாவிற்கும் தென்னிந்தியாவிற்கும் உள்ள வாணிபத் தொடர்பும், ரௌலட்டட், ஆம்பொரா போன்ற ரோமானிய பானை ஓடுகள் மூலம் ரோம் நாட்டிற்கும் தமிழகததிற்கும்   இருந்த வாணிபத் தொடர்பும் உறுதியாவதை இக்கட்டுரை விளக்குகிறது.

          திருவண்ணாமலை மாவட்டம் தொண்டமானூர் கிராமத்தில் கிடைக்கப்பெற்ற மூன்று பாறைக்கீரல்கள் (நாகர்கல் பொடவு. வௌவ்வாள் பொடவு, அய்யர் பொடவு) பற்றிய குறிப்பை .பாலமுருகன், சி.பழனிச்சாமி, சிற்றிங்கூர் ராஜா ஆகியோர் தொகுத்தளிக்கின்றனர்.  ஐகுந்தம் வணிகக்குழு கல்வெட்டு, நத்தமலை பெரிய மதகு கல்வெட்டுகள், தீர்த்தமலை கம்மாளர் செப்பேடு குறித்த கட்டுரைகளும் உள்ளன.

       தமிழகத்தில் புதிய கற்கால கல்தேய்ப்பு பாறை ஓவியங்கள், இறாதீஸ்வரர் கோயில் சிற்பங்கள், உலோகச் சிலைகள் செய்யும் முறைகள் பற்றிய வண்ணப்படங்கள் இதழுக்கு மேலும் அழக்கூட்டுகின்றன. தொல்பொருள் ஆய்வாளர் பி.பி.லால். பேரா.சீ.வாசுதேவன். பேரா..நெடுஞ்செழியன், பேரா.எஸ்.என்.ராஜகுரு ஆகியோருக்கான நினைவஞ்சலிக் குறிப்புகளும் உள்ளன. “வரலாறு பண்பாடு அறிவியல்டி.டி.கோசாம்பியின் வாழ்க்கையும் ஆய்வுகளும்”, என்ற நூல் நூல் குறித்த அருண் நெடுஞ்செழியனின் மதிப்புரை வெளியாகியுள்ளது.

        Memorial Stones of Sindh, Pakistan: Typology and  Iconography, The Chola Naval Expedition to  Southeast Asia, The Megalithic Nilgiris: An Overview, Relics Dasabala (Buddha), Devimori, Gujarat போன்ற ஆங்கிலக் கட்டுரைகளும் வ்விதழில் இருக்கின்றன.

 

இதழ் விவரங்கள்:

 

சாசனம் – (ஆண்டுக்கு இருமுறைஇருமொழி ஆய்விதழ் - தமிழ், ஆங்கிலம்),

தனி இதழ்: ரூ.500

கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றியல் ஆய்வு மையம்,

கே..பி. கல்யாண மண்டபம்,

ஓசூர் – 635109,

கிருஷ்ணகிரிமாவட்டம்.

அலைபேசி: 9842647101

மின்னஞ்சல்: kdhrckgi@gmail.com      editorsasanam@gmail.com      

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக