வியாழன், ஜூன் 22, 2023

விளிம்புநிலை மக்களின் வாழ்வும் கலையும்

 

விளிம்புநிலை மக்களின் வாழ்வும் கலையும்

(சிவகுமார் முத்தய்யாவின் குரவைநாவல் விமர்சனம்)

மு.சிவகுருநாதன்


 

         குரவைக் கூத்து பழங்காலத்திருந்து தொடரும் ஒரு கலை வடிவம். துணங்கை, தழூஉ  என்றெல்லாம் வகைப்படுத்தியுள்ளனர். குடக்கூத்து எனப்படும் கரகாட்டமும் கூத்தின் ஒரு வகைதான். காலப்போக்கில் அக்கால மக்களின் அன்றாட நிகழ்வாக இருந்த கலைகளில் சில மேனிலையாக்கம் பெறவும் சில அடித்தட்டு மக்களின் தலையில் சுமையாகவும் திணிக்கவும் வழிவகுக்கப்பட்டது. கிராமியக் கலை  நிகழ்ச்சி, கரகாட்டம் என்றெல்லாம் அழைக்கப்பட்டாலும் குறவன் குறத்தி ஆட்டத்தை மையப்படுத்தியே இக்கலை அறிமுகம் பெற்றது. கரகாட்டத்தில் தொடங்கும் இந்நிகழ்வு குறவன், குறத்தி ஆட்டத்துடன் நிறைவு பெறும்.

         தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ஜனவரி 11, 20203 பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்ய அடையாளம் காணப்பட்ட 100 கலைகளின் பட்டியலிருந்து குறவன் - குறத்தி  ஆட்டம் என்ற பிரிவை நீக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. கரகாட்டம் உள்ளிட்ட எந்தக் கலை நிகழ்ச்சியிலும் குறவன் - குறத்தி  ஆட்டம் இடம்பெறக்கூடாது என்றும் இந்த அரசாணை வலியுறுத்துகிறது.

        சதிராட்டம்பரதநாட்டியமாகமேனிலையாக்கம் பெற்றதைப்போல வாய்ப்பு இந்தக் கூத்துகளுக்குக் கிடைக்கவில்லை. இக்கலையுடனும் கூடவே தோல் கருவிகளான பறை (தப்பு), தவில் (மேளம்) போன்றவையும் அடித்தட்டு, விளிம்பு நிலை மக்களின் அடையாளமாகத் தேங்கிப் போயின. மங்கல காரியங்களுக்குப் பயன்படும் மேளம் இங்கு நையாண்டி மேளமானகதையையும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். நிலப்பிரபுத்துவம் தனது வசதிக்கேற்ப இவற்றைத் தக்கவைத்துக் கொண்டது. இதில் ஈடுபட்ட குடும்பங்கள் தலைமுறை தலைமுறைகளாக இந்த அவலச் சூழலில் சிக்கி மீண்டுவர இயலாமல் தவித்தனர். அவர்கள் மீது பல்வேறு வகையான சுரண்டல்கள் மேற்கொள்ளப்பட்டன. அதில் முதன்மையானது பாலியல் சுரண்டல்.

           திருவாரூர் அருகிலுள்ள தண்டலை என்னும் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் முத்தய்யா ஏற்கனவே நான்கு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு குறுநாவல் தொகுப்புகள், ஒரு கட்டுரைத் தொகுப்பு உள்ளிட்ட 7 நூல்களை எழுதியவர். ‘குரவைஅவர் எழுதிய முதலாவது நாவல். இந்நாவலை யாவரும் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. குரவைநாவல் காவிரி மற்றும் அதன் கிளையாறுகளின் நீண்ட வெளிகளில் அதாவது தஞ்சாவூர்திருவாரூர்நாகப்பட்டினம்நாகூர்முத்துப்பேட்டைகோடியக்கரை எனப் பரந்த பரப்பில் இக்கலையில் ஈடுபடும் பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்வின் கதைகளைச் சுருக்கமாக எழுதிச்செல்கிறது. குடி, காதல், காமம், தொடங்கி கலை வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பேசுகிறது.  பறை, தவில், நாதஸ்வரம் இசை குறித்தும் விளக்குகிறது. கரகாட்டம் பற்றிய குறிப்புகள் பெரிதாக இல்லை எனத் தோன்றுகிறது.

           அடித்தட்டு விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப்பாடுகளே அவர்களது கலைக்குமானதாக  உள்ளது.  அவர்களது வாழ்வைப்போல அவர்களது கலைகளும் விளிம்பிற்குள் தள்ளப்பட்டுள்ளன. கலையைக் கற்ற அவர்கள் வாழ்க்கையைக் கற்கவில்லை. கலை சொல்லிக் கொடுத்த  வாத்தியார்களும் வாழ்வைச் சொல்லிக் கொடுத்ததில்லை. ஏனெனில் அவர்களும் இவ்வாறுதான் வாழ்ந்தார்கள் (பக்.10).

         நாவலில் வரும் ஆண்களைவிட பெண்கள் உறுதியானவர்களாகவும் தெளிவான பார்வையுடையவர்களாகவும் உள்ளனர். இந்தப் புதைச் சூழலில் சிக்கிக் கொண்டிருந்தாலும், பாலியல் உள்ளிட்ட அவர்களது விருப்பத் தேர்வை பெரும்பாலும் அவர்களே முடிவு செய்கின்றனர். ஆட வரும் எந்தப் பெண்ணுக்கும் ஆண்கள் மீதான பார்வையும் வன்மமும் எச்சரிக்கை உணர்வும் இயல்பிலேயே தொடர்கின்றன.

       காணிக்காரர் சிங்காரம் பறைசூலமங்கலம் கதிரேசன் பிள்ளை தவில் போட்டியில் சூழ்ச்சியாக, சிங்காரம் சாராயத்தில் நஞ்சு வைத்துக் கொல்லப்பட அவரது குடும்பம் நடுத்தெருவில் நிற்கிறது. சிங்காரத்தின் பெண் செவத்தகன்னி தானே காணியாச்சி பார்க்க பறையடித்துக் கொண்டு கிளம்புகிறாள். இறுதியில் அவள் பெண்கள் தப்பாட்டக் குழுவைத் தொடங்கி வாழ்விற்கும் கலைக்கும் நம்பிக்கையளிக்கிறாள்.

        நாவல்அவனில்தொடங்கிஅவளில்முடிவடைகிறது. சங்க இலக்கியத்தில் வரும் தலைவன் தலைவி போலக் கருதலாம். அவன் நாகூர்வாஞ்சூரில், “கால் பதிய மணலில் நடந்து கடலில் இறங்கினான். தீராத குளியலிம் மோகத்துடனும் மீளத் துயரத்துடனும் அலைகள் அவனை தழுவத் தொடங்கி” (பக்.18) தன்னை அழித்துக் கொள்கிறான். இதுவும் ஒரு விடுதலைதான். இருப்பினும் அவளின் விடுதலை தன்னம்பிக்கை ஊட்டுவதாகவும் புதிய உலகம் காண்பதாகவும் இருக்கிறது


 

       அவள்’, “அத்தனை தொடர்புகளையும் துண்டித்து விட்டு ஆட்டம், நயனம், தவில், குறவன், குறத்தி, பபூன், மைனர்கள், போக்கிரிகள், பொறுக்கிகள், பணம் போன்ற சொற்களைத் தவிர்க்க வேண்டும் என்ற உறுதியுடன் தனது நாற்பதாண்டு கால வாழ்வின் தீவிரத்துடன் அவனை நோக்கி கிளம்பியிருந்தாள்”.

     வெளியில் ஒருத்தி ஆட வந்துவிட்டால் தேவுடியா என்று முடிவு செய்துவிடுவார்கள். இந்த ஆம்பளைகள் சரியான அழுப்பைகள். பலபேர் பார்க்கையில் தங்கச்சி என்று சகோதர பாசத்துடன் பேசுவார்கள். கொஞ்சம் இருட்டும் தனிமையும் கிடைத்துவிட்டால்செத்த துணி தூக்குஎன்பார்கள். அதனாலாதான்டி பயப்படுறேன் ரேகா…” (பக்.30) என்ற பேபியின் புலம்பல் இந்த எச்சரிக்கை உணர்வை வெளிப்படுத்துகிறது. ஆட்டக் கலைஞர் வசந்தாவை அக்கா என்றழைக்கும் நாதஸ்வரம் சுந்தரமூர்த்தி போதையிலிருக்கும் அவளைப் புணர்வதன் ஆண் வக்கிரமும் நாவலில் பதிவாகிறது. (பக்.195)

       தற்கொலை முயற்சியிலிருந்து மீண்ட வசந்தாவை  மனைவி பாப்பாவிற்கு தெரியாமல் பார்த்துவரும் தவில் கலியமூர்த்தியிடம், “செய்தி கேள்விப்பட்டியா, காலையில போய் அவள பாத்துட்டு வருவோமா”, (பக்.197) என்று சொல்லும் பாப்பா. வசந்தாவின் வயதான கணவன் சண்முகசுந்தரம் தவறிவிட, “இவன் கையில் நகையைக் கொடுத்துஇத வெச்சி போயி காரியத்தைப் பாருநான் புள்ளைங்கள தூக்கிட்டு வர்றேன். அவளுக்குன்னு யாரு இருக்காநம்மள விட்டா…”, (பக்.139) என்று சொல்லும் பாப்பா. நாவலில் இம்மாதிரி மனிதம் துளிர்க்கும் இடங்களும் பெண்கள் பெரிய ஆளுமைகளாக மிளிரும் இடங்களும் உண்டு. பேபி, விஜயா, பாப்பா, கோடியக்கரை சித்ரா, செவத்தகன்னி, மேரி, நித்யா, ரேகா என பல ஆளுமைமிக்க விளிம்புநிலைப் பெண்களின் வாழ்வியல் இங்கு நாவலாக மலர்கிறது.   

       தஞ்சை மண்ணில் நெடிதுயர்ந்த கோபுரங்கள், பரந்து விரிந்துப் பாய்ந்தோடும் காவிரிஅதன் கிளையாறுகள், நெற்களஞ்சியத்தின் ஈரநெல் வாசனை, வெற்றிலைப் பாக்கு தாம்பூல வாசனை, பக்தி மணம் கமழும் சாஸ்திரிய சங்கீதம், பசும்பால் காபி கிளப்கள், பண்ணையார்கள், மைனர்கள் என காவிரிக்கரை கலாச்சாரத்தின் மறைக்கப்பட்ட பகுதியாக இந்த விளிம்புநிலை மக்களின் வாழ்வியல் அமைந்துள்ளது. ஒடுக்கப்பட்ட இவர்களின் வாழ்வைப்போல கலையும் நசுக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. 

      இப்போது பிரகதீஸ்வரர் கோயில் மட்டுமே நூற்றாண்டு கம்பீரத்துடன் எழுந்து நிற்கிறது”, (பக்.09) என்றுகூட இந்த நாவலில் ஒருவரி வருகிறது. இந்த ஆயிரமாண்டு கம்பீரத்தினுள் மறைக்கப்பட்ட / புதைக்கப்பட்ட வரலாறாக விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை உறைந்து போயுள்ளது. இவற்றை வெறும் தொல்லியல் ஆய்வுகளின் மூலம் மீட்டெடுக்க இயலாது; இம்மாதிரியான இலக்கிய ஆக்கங்கள் வழியே அவர்களது வாதைகளை புனைவுகளாக உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது. அந்த வகையில் இந்நாவல் குறிப்பிடத்தக்கப் பங்கை ஆற்றியுள்ளது என்று சொல்லலாம்.

       எழுத்தாளர் சுஜாதாகணையாழியின் கடைசிப் பக்கம் ஒன்றில் காவிரிக்கரைப் பயணத்தில் வெளிப்பட்ட ஈரநெல் வாசனை பற்றி எழுதிருப்பார். அந்த வாசனையுடன் கூடவே நண்டு, நத்தை, சேறு சகதி, கருவாட்டு வாசனையும் சேர்ந்ததுதான்  தஞ்சை மண். மாங்காய் வாசனை மிக்க முத்தங்கள், வியர்வையில் கசிந்துவரும் வெந்தய வாசனை (பக்.11), வெயிலில் சேறு காயும் வாசனை, அவன் மேல் வீசும் புளித்த வாடை (பக்.45),  மீன் வாசனையில் மணத்துக் கிடந்த தப்படிச்சான்  (பக்.230) என அனைத்து வாசனைகளையும் இந்நாவல் வெளிப்படுத்துகிறது. உள்ளும் புறமுமாக அடித்தட்டு மக்களின் கலைசார்ந்த வாழ்வை மட்டுமல்லாது, அவற்றின் சிடுக்குகளையும் நாவல் பேசுகிறது.

      உத்திக்காகவும் சோதனை முயற்சியாகவும் நாவலில் முன்னும் பின்னுமாக கதை நகர்கிறது. வாத்தியார் மயில்ராவணன் கொலை, அவரது மகன் சந்திரன் நண்பன் குமார் துப்பறிதல் என சஸ்பென்ஸ்க்கு கூட பஞ்சமில்லை. பாலியல் வல்லுறவிலிருந்து காப்பாற்றும் போராட்டத்தில் கொலையான  மயில்ராவணனுக்காக சாட்சி சொல்லும் பேபி, ரேகா, நிறுத்தப்பட்ட திருமணத்தை நடத்த உறுதியாக இருந்த நீலவேணி, மிளகாய் கொல்லையில் தவறி நடக்க முயலும் கார்மேகத்தை விரட்டியடிக்கும் செவத்தகன்னி என பல கதாபாத்திரங்கள் நாவலின் போக்கைத் தீர்மானிக்கிறார்கள். தப்படிச்சானே கதியென்று கிடக்கும் காதர். நாகூர் கருவாட்டுக் கடை, முத்துப்பேட்டையில் திருமணம் என்றாலும் மேரியுடன் ஆட்டத்திற்கு போகும் காதர், அவளின் பெண் குழந்தைகளை வாரிசாக ஏற்றுக் கொள்வதும் நாவலுக்கு மெருகூட்டுகிறது.

       விளமலில் தப்புக் கட்டி விற்கும் பொட்டுவிடம் சந்திரன் குமார் சூரியப்பறை வாங்கச் செல்கிறார்கள். பணத்தைப் பெற்று தப்புக்கட்டையை வெறுமனே அளிக்காமல், முறைப்படி பெரிய ஈட்டி மாணிக்கத்திற்குச் செய்யப்படும் சேவல் பலியிடும் சடங்கு நடத்தி அரை மணி நேரம் பறையசைத்த பிறகே பறையை அவர்களிடம் ஒப்படைக்கிறார். 

         மறுபுறம், முருகேசன் சித்ரா மீது கோபத்தால் நாதஸ்வரத்தை மண்டபச் சுவரில் அடித்து உடைத்துவிட, வேறு வழியின்றி மீண்டும்  நாதஸ்வரம் வாங்க திருவிடைமருதூர் நரசிங்கம்பேட்டை பூவலிங்க ஆசாரியிடம் செல்கிறான். அவன் தப்பாடிச்சான் மூலை கோஷ்டி என்பதையறிந்து, கொஞ்சம் ஆலாபனை வாசிக்கச் சொல்லிக் கேட்டு, இவனது இசை ஞானத்தை அறிந்து பாராட்டுவதோடு நில்லாமால், “ஆனாஉன் சாதிக்காரனுவோ மாதிரிகாசுக்கு ஆசைப்பட்டு சாவுக்கு மட்டும் போயிடாதே…”, என்று எச்சரித்து அனுப்புகிறார். சமூகம் கலை, வாழ்வு எல்லாவற்றையும் புனிதம் X தீட்டு, உயர்வு X தாழ்வு என்கிற முரணுக்கு அடைத்துவிடுகிறது. வாழ்வில் மட்டுமல்லாது கலைகளிலும் தீட்டாகி இந்த விளிம்புநிலை மக்கள் யாருக்காக கலையை வாழவைக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது.

         சாவு வீட்டில் தப்படித்துக் கொண்டே தரையில் கிடக்கும் ரூபாய் நோட்டை கண்களால் எடுக்க முடியாமல் அடிவாங்கும் பெருமாள், இந்த அவமானத்திற்காக மன்னிப்பு கேட்கும் கணேசலிங்க பண்டிதர் அவர்களுக்கு வேட்டி, துண்டு அளித்து சிவன், அஜபா நடனம் எனும் புராணக் கதைகளை அள்ளிவிட்டு இந்த விளிம்பு மக்களை ஆசுவாசப்படுத்தி சாதிய மேலாதிக்கத்தையும் வருண, நிலப்பிரபுத்துவ நிறுவனங்களின் பாதுகாவலராக  மாறுவதையும் நாவலில் காண்கிறோம். காலந்தோறும் இவ்வாறான நியாயப்படுத்தல்கள் மூலம் சாதியக் கட்டமைப்பு இருத்தி வைக்கப்படுகிறது. திருவாரூரில் யானையேறும் பெரும் பறையர் புராணக்கதை உலவுவதையும் இதனுடன் இணைத்துப் பார்க்கலாம்.

       இந்தக் கலை வடிவத்தில் கோமாளி (பபூன்) வேடம், அவனது அவனது உருவம், எள்ளல், நையாண்டி எல்லாம்  பிறரை மகிழ்வூட்டும் மூலதனமாக இருக்கிறது. ஆனால் அவனது தனிப்பட்ட வாழ்வு? அவனுக்கு பெண் கொடுக்கக் கூட யாரும் விரும்புவதில்லை. நித்யாவை மணம்புரிய பபூன் ஆல்பர்ட் படும் அவஸ்தைகள் நாவலில் பதிவு செய்யப்படுகிறது. இக்கலைஞர்களே விளிம்புநிலையினர் என்றாலும் அவர்களில் பெண்களும் பபூன்களும் கடைக்கோடி விளிம்புகள்.       

        இப்படியெல்லாம் நாவல் எழுத வேண்டுமா? என்று கேட்கும் புனிதவாதிகளுக்கு எழுத்தாளர்   ஜி.நாகராஜன் தனதுகுறத்தி முடுக்குநாவலைப் பற்றிச் சொன்னது சிறந்த பதிலாக அமையும்.

       நாட்டில் நடப்பதைச் சொல்லியிருக்கிறேன். இதில் உங்களுக்குப் பிடிக்காதது  இருந்தால்  இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது?” என்று வேண்டுமானால் கேளுங்கள்; - “இவையெல்லாம் ஏன் எழுத வேண்டும்?”, என்று கேட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்க்காதீர்கள். உண்மையைச் சொல்வதென்றால் முழுமையுந்தான் சொல்லியாகவேண்டும். நான் விரும்பும் அளவுக்குச் சொல்ல முடியவில்லையே என்பதுதான் என் வருத்தம்”, - ஜி.நாகராஜன் (‘குறத்தி முடுக்குநாவல் பற்றி…)

         நாட்டார் கலைகள், பண்பாடு என்றெல்லாம் புனிதப்படுத்துவதும் தேவையில்லாதது. இத்தகைய தேவையற்ற சுமைகளை விளிம்புநிலை மக்கள் தூக்கிச் சுமக்க வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு காலகட்டத்தில் இவற்றின் வடிவங்கள் மாற்றமெடுக்கின்றன. இவை சினிமா ஆடல்-பாடல் என வடிவம் எடுத்தாலும் பெண்கள் மீதான வன்முறை, பாலியல் சுரண்டல் என்ற அடிப்படைகள் என்றும் மாறப்போவதில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். கலை, பண்பாட்டைப் பேணிக்காக்க யாரையும் பலியிட வேண்டாம் என்ற எச்சரிக்கை தேவைப்படும் தருணமிது. நாவல் அதன் திசைவழியில் பயணிப்பதாகத் தோன்றுகிறது. முதல் முயற்சி என்பதால் இதனுள்ள குறைகளைப் பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை; யாரும் எழுதத் துணியாத அடித்தட்டு மக்களின் வாழ்வியலில் கலையம்சங்களையும் தேட வேண்டியதில்லை.   

நூல் விவரங்கள்:

குரவை    (நாவல்)   -  சிவகுமார் முத்தய்யா.

முதல் பதிப்பு:  டிசம்பர் 2022    பக்கங்கள்: 242  விலை: ரூ.290

வெளியீடு:    யாவரும் பப்ளிஷர்ஸ்,  24, கடை எண்: B,   S.G.P. காம்ப்ளக்ஸ்,

 தண்டேஸ்வரம் பேருந்து நிறுத்தம், பாரதியார் பூங்கா எதிரில்,

வேளச்சேரி முதன்மைச்சாலை, வேளச்சேரி,  சென்னை – 610042.

அலைபேசி: 9042461472  / 9841643380

மின்னஞ்சல்:   editor@yaavarum.com   இணையம்:   www.yaavarum.com

(இக்கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம் ‘இந்து தமிழ் திசை ஜூன் 17, 2023 ‘நூல்வெளி’ பகுதியில் வெளியானது.)

நன்றி: ‘இந்து தமிழ் திசை’ – ஜூன் 17, 2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக