காந்தியின் தென்னாப்பிரிக்கப் பயணம்
(மகாத்மாவின் கதை தொடரின் ஆறாவது அத்தியாயம்.)
மு.சிவகுருநாதன்
காந்திக்கு உலக அனுபவம் ஏற்பட்டுவிட்டபடியால் இங்கிலாந்து கிளம்பும் முன் ஏற்பட்ட பிரிவுத்துயர் தென்னாப்பிரிக்கா கிளம்பும்போது இல்லை. மனைவி மற்றும் குழந்தைகளைப் பிரியும் துயரம் மட்டும் இருந்தது. தாதா அப்துல்லா கம்பெனி மூலம் கப்பல் பயணச்சீட்டு ஏற்பாடானது. முதல் வகுப்புப் பயணச்சீட்டு கிடைக்கவில்லை. மூன்றாம் வகுப்புச்சீட்டும் முதல்வகுப்பு உணவும் ஏற்பாடு செய்யலாம் என்று கூறப்பட்டது. காந்திக்கு நம்பிக்கையில்லாமல் நேரடியாக கப்பல் கேப்டனைச் சந்தித்துப் பேசினார்.
மொசாம்பிக் கவர்னர் ஜெனரல் இக்கப்பலில் பயணம் செல்வதால் சீட்டுகள் இல்லாமல் போய்விட்டது என்று அவர் தெரிவிக்கிறார். எப்படியும் தன்னை உள்ளே நுழைத்துவிட முடியாதா? என்று காந்தி கேட்க, எனது அறையில் ஒரு இடம் இருக்கிறது. பொதுவாக அதை யாருக்கும் வழங்குவதில்லை. அதை உங்களுக்குத் தருகிறேன் என்றார். அந்தப் பயணச்சீட்டைப் பெற்றுக்கொண்டு 1893 ஏப்ரல் மாதம் கப்பலில் மும்பையிலிருந்து தென்னாப்பிரிக்கா கிளம்பினார்.
கப்பல் கேப்டனுடன் காந்தி நண்பரானார். சதுரங்கம் ஆடுவதில் அவருக்கு விருப்பம் அதிகம். அவருக்கு ஆட்டம் புதிதாக இருந்ததால் தன்னைவிட கற்றுக்குட்டியாக இருக்கும் காந்தியிடம் விளையாடி வெல்வதை விரும்பினார். காந்திக்கு விளையாட்டைக் கற்றுத்தரவும் முன்வந்தார். காந்திக்கு சதுரங்கம் பிடித்திருந்தாலும் அக்கப்பலுடன் அவ்விளையாட்டை மறந்தார்.
13 நாள்கள் பயணத்திற்குப் பிறகு கப்பல் லாமு (Lamu Port) துறைமுகத்தை அடைந்தது. அது இன்றைய கென்யா நாட்டில் உள்ளது. அத்துறைமுகத்தில் சில மணி நேரம் நின்றது. இந்தத் துறைமுகம் ஆபத்தானது; எனவே முன்கூட்டியே திரும்பிவிட வேண்டும் என்று கேப்டன் எச்சரித்திருந்தார். மூன்றாம் வகுப்புப் பயணிகள் கரையில் சமைத்துச் சாப்பிடவும் இறங்கினர். துறைமுக அலுவலகத்தில் இந்தியர்களும் ஆப்பிரிக்கர்களும் பணியாற்றினர். அவர்களிடம் காந்தி உரையாடியதால் நேரமாகிவிட்டது. படகில் ஏறி கப்பலில் ஏணி அருகே செல்ல முடியாமற்போகவே வேறொரு படகு மூலம் ஏணியை அடைய முயற்சி செய்யும்முன்பு ஏணி தூக்கப்பட்டு கப்பல் கிளம்பியது. இறுதியில் காந்தியை கயிறுகொண்டு தூக்கி கப்பலில் சேர்த்தனர். பிறர் கப்பலில் ஏற இயலவில்லை.
அதன்பிறகு கென்யா நாட்டின் மொம்பாஸா (Mombasa); அடுத்து தற்போதைய தான்சானியா நாட்டைச் சேர்ந்த ஜான்சிபார் (Zanzibar) துறைமுகம். இங்கு எட்டு நாள்கள் தங்க வேண்டியிருந்தது. எனவே காந்தி அறை ஒன்றை எடுத்துக்கொண்டார். கேரளா போன்று இயற்கை வளம் நிறைந்த அவ்வூரைச் சுற்றிப் பார்த்தார். அங்குள்ள பெரிய மரங்கள், பெரிய பழங்கள் காந்திக்கு வியப்பை ஏற்படுத்தின. அங்கு வேறு கப்பலில் பயணித்து மொசாம்பிக் (Mozambique) சென்று மே மாத இறுதியில் டர்பன் (Durban) துறைமுகத்தை அடைந்தார். தென்னாப்பிரிக்காவின் நேட்டால் (Natal) மாகாணத்திலுள்ளதால் இதை நேட்டால் துறைமுகம் என்றும் சொல்வதுண்டு.
காந்தியை வரவேற்க அப்துல்லா சேத் துறைமுகம் வந்திருந்தார். காந்தி வங்காளிகள் அணியும் தலைப்பாகையும் மேலங்கியும் அணிந்திருந்தார். காந்தியின் உடை, வாழ்க்கைமுறை, அவரது சகோதரர் அனுப்பியிருந்த காகிதங்களைப் பார்த்தபிறகு அப்துல்லா சேத்திற்கு குழப்பம் உண்டானது. காந்திக்கான செல்வீனங்கள் அதிகமாகுமே என்று கவலைப்பட்டார்.
நேட்டலுக்கு வந்த சில நாள்களில் காந்தியை டர்பன் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று வழக்கறிஞர்களிடம் அறிமுகம் செய்வித்து அவர்கள் அருகே அமரவைத்தார். நீதிபதி காந்தியை வெறித்துப் பார்த்த வண்ணமிருந்தார். கடைசியாக தலைப்பாகையை எடுக்குமாறு கூறினார். காந்தியோ அதை மறுத்து நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார். காந்திக்கு இங்கும் போராட்டம் காத்துக்கொண்டிருந்தது.
முஸ்லீம்கள் மட்டும் தலைப்பாகை வைத்துக் கொள்ளலாம், பிறர் தலைப்பாகையை எடுத்துவிடுவது வழக்கம் என அப்துல்லா சேத் காந்தியிடம் விளக்கினார். அங்கிருந்த இந்தியர்கள் பல குழுக்களாகப் பிரிந்து கிடந்ததை காந்தி உணர்ந்தார். தங்களை அரேபியர் என அழைத்துக்கொண்ட முஸ்லீம் வணிகர்கள், இந்து குமாஸ்தாக்கள், பார்சி குமாஸ்தாக்கள் (பாரசீகர்கள்) ஆகிய மூன்று பெரும் பிரிவுகள். இவர்களை விட பெரும் எண்ணிக்கையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள், சுயேட்சையான தொழிலாளர்களாக இருந்த தமிழர்கள், தெலுங்கர்கள் மற்றும் வடஇந்தியர்கள் ஆகியோர் இருந்தனர். ஐந்தாண்டு ஒப்பந்த அடிப்படையில் அழைத்துவரப்பட்ட இவர்கள் ‘கிரிமிதியர்’ என்றழைக்கப்பட்டனர். தொழிலாளர்களை ஆங்கிலேயர்கள் ‘கூலிகள்’ அல்லது ‘சாமிகள்’ என்று அழைப்பர். தமிழர்களின் பெயர்களின் விகுதியாக உள்ள சாமியை எஜமான் என்ற பொருளில் அல்லாமல் இழிவுபடுத்தும் சொல்லாகவே அவர்கள் பயன்படுத்தினர். காந்தியை ‘கூலி பாரிஸ்டர்’ என்றனர். வியாபாரிகளை ‘கூலி வியாபாரிகள்’ என்றும் அழைத்தனர்.
காந்தி இந்தியத் தலைப்பாகையைத் தவிர்த்து ஆங்கிலத் தொப்பிப் போட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தார். அப்துல்லா சேத்தோ, “தலைப்பாகை அணிந்தே தீருவோம் என்பவர்களை நீங்கள் கைவிடுகிறீர்கள். மேலும் இந்தியத் தலைப்பாகை உங்களுக்கு அழகாக உள்ளது. தொப்பி அணிந்தால் ஓட்டல் வேலைக்காரன் என நினைக்கக்கூடும்”, என்றார். இதில் தேசப்பற்று இருந்தபோதிலும் பெரும்பகுதி ஓட்டல் தொழிலாளர்களான கிருஸ்தவர்களை மனதில் கொண்டு அவ்வாறு கூறியது காந்திக்கு வருத்தத்தைத் தந்தது. தலைப்பாகை பற்றி உள்ளூர் இதழ்களில் காந்தி எழுதியதோடு, நீதிமன்றத்தில் தான் தலைப்பாகை அணிந்திருந்ததை நியாயப்படுத்தி எழுதினார். இதுகுறித்து விவாதங்கள் எழுந்தன.
டர்பனில் இருக்கும் இந்தியக் கிருஸ்தவர்களுடன் காந்திக்குத் தொடர்பு ஏற்பட்டது. பின்னாளில் நெருக்கமான பார்சி ருஸ்தம்ஜி, ஆதம்ஜி மியாகான் ஆகியோரையும் சந்தித்தார். அப்துல்லா சேத் பிரிட்டோரியா செல்கிறீர்களா? எனக் கேட்டபோது மறுத்து வழக்கு மன்றத்தில் பற்று – வரவு பற்றிய விசாரணையைக் கவனிக்கிறார். பிராமிசரி நோட்டு (பி-நோட்டு) என்பதை அறியாமல் குமாஸ்தாவிடம் கேட்டு அறிந்துகொள்கிறார். பின்னர் பிரிட்டோரியா போகத் தயாராகும் காந்தி அங்கு தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
தொடர்வண்டியில் முதல்வகுப்புப் பயணச்சீட்டும் இரவில் படுக்கையும் வேண்டுமெனில் 5 ஷில்லிங் கொடுப்பது வழக்கம். இதை அப்துல்லா வலியுறுத்தபோதிலும் காந்தி 5 ஷில்லிங் மிச்சப்படுத்த விரும்பினார். “இது இந்தியா அல்ல, எங்களுக்குப் போதிய செல்வத்தை ஆண்டவன் அளித்துள்ளான். உங்களுக்குத் தேவையான செலவுகளைச் செய்ய வீண் சிக்கனம் வேண்டாம்”, என்று அப்துல்லா எச்சரித்தார்.
1893 ஜூன் 07 காந்தி தொடர்வண்டியில் பிரிட்டோரியா பயணமானார். வண்டி இரவு 9 மணிக்கு நேட்டாலின் தலைநகர் பீட்டர்மாரிட்ஸ்பர்க் போய் சேர்ந்தது. அந்த நிலையத்தில் பயணிகளுக்குப் படுக்கை வழங்குவது வழக்கம். ஊழியர் காந்திக்குப் படுக்கை வேண்டுமா? எனக்கேட்டார். வேண்டாம் என்று சொன்னதும் அவர் அகன்றார். வேறொரு பயணி காந்தியை உற்றுநோக்கினார். கறுப்பர் முதல் வகுப்பில் பயணம் செல்வதா? சிறிதுநேரம் கழித்து அதிகாரி காந்தியை அழைத்து சாமான்கள் வண்டிக்குப் போகவேண்டும் என்றார். காந்தியோ என்னிடம் முதல் வகுப்புப் பயணச்சீட்டு இருக்கிறதே என்றார்.
அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை, நீ சாமான்கள் வண்டிக்குச் செல்ல வேண்டும் என்றார் அதிகாரத்தோடு. இந்த வண்டியில் பயணம் செய்ய டர்பனில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். நான் இதில்தான் பயணிப்பேன் என்றார் காந்தி. நீ வண்டியிலிருந்து இறங்கவில்லை என்றால் காவலரை அழைத்து உம்மை கீழேத் தள்ள வேண்டிவரும் என்று எச்சரித்தார். நீங்கள் காவலரை அழைக்கலாம், நான் இறங்க மறுக்கிறேன் என்றார் காந்தி மனவுறுதியுடன்.
காவலர் வந்து காந்தியின் கையைப் பிடித்து வெளியே தள்ளிவிட்டார். காந்தியின் பொருள்களையும் இறக்கிப் போட்டார். அவைகள் போட்ட இடத்திலேயே இருக்க, தனது கைப்பையுடன் பயணிகள் தங்குமிடத்தில் அமர்ந்தார். அப்போது கடுங்குளிர்காலம். ஊட்டி போன்ற உயரமான பகுதி மாரிட்ஸ்பர்க். எனவே குளிர் மிகக்கடுமையாக இருந்தது. காந்தியின் மேலங்கி பிற பொருள்களுடன் இருந்தது. அவற்றைக் கேட்டால் மீண்டும் அவமானம் அடைய வேண்டியிருக்கும் எனப் பயந்தார். எனவே குளிரில் நடுங்கியபடி சிந்திக்கலானார்.
தன்னுடைய உரிமைகளுக்காகப் போராடுவதா அல்லது இந்தியாவிற்கு திரும்புவதா? இல்லாவிட்டால் அவமானங்களைப் பொருள்படுத்தாமல் பிரிட்டோரியா சென்று வழக்கை முடித்துக்கொண்டு இந்தியா திரும்புவதா? என்ற கேள்விகள் காந்தியின் மனதில் எழுந்தன. கடமையை நிறைவேற்றாமல் இந்தியாவிற்கு ஓடுவது கோழைத்தனம். தனக்கு ஏற்பட்ட துயரம் லேசானது; நிறவெறி எனும் கொடிய நோயின் அறிகுறி. இந்த நோயை அடியோடி ஒழிக்க முயலவேண்டும்; அதற்குத் துன்பங்களை எதிர்கொண்டாக வேண்டும், என்கிற மனவுறுதியை காந்தி பெற்றார். அடுத்த வண்டியில் பிரிட்டோரியா கிளம்புவது என்று முடிவு செய்தார்.
பொழுது விடிந்ததும் ரயில்வே பொது மேலாளருக்கு விரிவான தந்தி அனுப்பினார். பொது மேலாளாரை நேரில் போய்ப் பார்த்தார். அவரோ ரயில்வே அதிகாரிகள் செய்தது சரியென்றார். காந்தி செல்லவேண்டிய இடத்திற்கு பத்திரமாக அனுப்பிவைக்க ஸ்டேசன் மாஸ்டருக்கு உத்திரவிட்டதாகவும் சொன்னார்.
அப்துல்லா சேத்திற்கும் தகவல் சொன்னார். அவர் அங்குள்ள வணிகர்களுக்குத் தந்திகொடுத்து காந்திக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அவர்கள் காந்தியைச் சந்தித்தனர். தான் பட்ட துன்பங்களைச் சொன்னபிறகு, இது மிகவும் சாதாரணமானதுதான் என காந்திக்கு ஆறுதல் சொன்னார்கள். தொடர்வண்டிகளின் முதலிரண்டு வகுப்புகளில் வெள்ளையர்களின் நிறவெறிக்கொடுமை இருக்கும் என்றனர். அவர்களது துயரக்கதைகளை கேட்பதிலேயே அன்றைய பொழுது கழிந்தது. மாலையில் வந்த வண்டியில் டர்பனில் வாங்க மறுத்த படுக்கைச் சீட்டை வாங்கினார். மறுநாள் காலை வண்டி சார்லஸ் டவுனுக்குச் சென்றது.
சார்லஸ் டவுன் – ஜோகன்னஸ்பர்க் இடையே அன்று ரயில்பாதை இல்லை. நான்கு சக்கர குதிரை வண்டியில்தான் (Coach -கோச் வண்டி) போகவேண்டும். அதற்கான சீட்டும் காந்தியிடம் இருந்தது. தோற்றத்தில் புதியவரான ஒரு கூலியை வெள்ளைக்காரப் பயணிகளுடன் உட்கார வைக்க விரும்பாமல், ஏஜென்ட் சீட்டு ரத்தாகிவிட்டது என்றார். கோச் வண்டியின் பொறுப்புகளைக் கவனிக்கும் வெள்ளையருக்கு ‘தலைவர்’ என்கிற பட்டம் உண்டு. வண்டியோட்டுபவரின் அருகில் இருக்கை உண்டு. அவற்றில் தலைவர் அமர்வது வழக்கம். அன்றோ அவர் உள்ளே அமர்ந்துகொண்டு தன்னுடைய இடத்தைக் காந்திக்குக் கொடுத்தார். இது மற்றொரு அவமதிப்பு. இதை மறுத்தால் மேலும் ஒருநாள் வீணாகும். எனவே காந்தி சினத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அவமானத்தைச் சகித்துக்கொண்டு வண்டியோட்டுபவருக்கு அருகில் அமர்ந்து பயணமானார்.
சுமார் மூன்று மணியளவில் வண்டி பார்டேகோப் என்ற இடத்தை அடைந்தது. இப்போது தலைவர் சுருட்டு புகைக்கவும் காற்றோட்டமான இடத்திற்காகவும் காந்தியை எழுப்பிப் படியில் அமரச் சொன்னார். காந்தி உள்ளே வேண்டுமானால் அமர்கிறேன். படியில் அமரமாட்டேன் என்று மறுக்க, கன்னங்களில் ஓங்கி அறைந்து காந்தியை கீழே தள்ளிவிட முயன்றார். வண்டியின் கம்பிகளை இறுகப் பற்றிய காந்தி கீழே விழாமல் தப்பித்தார். காந்தி அடிபடுவதை பயணிகள் வேடிக்கை பார்த்தனர். இரக்கம் கொண்ட சிலர் உள்ளே வந்து எங்களுடன் அமரட்டும் என்றனர். அதை அனுமதிக்க மறுத்த அவர் வேறொரு இடத்திலிருந்த ஆப்பிரிக்க வேலைக்காரர் இடத்தைப் பறித்துக்கொண்டார். உன்னை என்ன செய்கிறேன் பார், என்று கோபத்துடன் உறுமிக்கொண்டே வந்தார்.
இருட்டியதும் கோச் வண்டி ஸ்டாண்டர்ட்டன் வந்து சேர்ந்தது. இக்கிராமத்தில் விடியும்வரை ஓய்வெடுத்துப் பின் பயணத்தைத் தொடரவேண்டும். அங்கு சில இந்திய முகங்கள் தென்பட்டதும் காந்தி சற்று நிம்மதியடைந்தார். அந்த நண்பர்கள் தாதா அப்துல்லா சொல்லியபடி ஈஸா சேத்தின் ஹாஜிஸூமாரின் கடைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் தான் பட்ட துன்பங்களை காந்தி விவரிக்க, தங்களுக்கும் உண்டான அனுபவங்களைச் சொல்லி காந்தியை தேற்றினார்கள்.
கோச் வண்டியில் நடந்தவற்றை ஏஜென்ட்க்கு விவரமாக கடிதம் எழுதினார். மறுநாள் காலை புறப்படும்போது தன்னை வண்டியினுள் அமரவைக்க வேண்டுமென்றும் கேட்டார். ஏஜென்ட், வேறு ஆட்களைக் கொண்ட பெரிய வண்டி வருகிறது. அந்த ஆள் இருக்கமாட்டார். உங்களுக்கு வண்டியில் இடம் கிடைக்கும் என்றார். அந்த நபர் மீது வழக்குத் தொடரும் எண்ணம் காந்திக்கு இல்லை. இருப்பினும் நிறவெறிக்கு எதிராகப் போராட இந்நிகழ்வுகளை அவரைத் தூண்டின. மறுநாள் ஈஸா சேத்தின் ஆள் என்னை கோச் வண்டிக்கு அழைத்துச் சென்றார். வண்டியில் இடம் கிடைத்து அன்றிரவு ஜோகன்னஸ்பர்க் சென்றடைந்தார்.
ஜோகன்னஸ்பர்க் பெருநகரம். அங்குள்ள முகமது காஸீம் கம்ருதீன் கம்பெனி முகவரியும் காந்தியிடம் இருந்த்து. கம்பெனியிலிருந்து வந்த நபரை சந்திக்க முடியவில்லை. ஒட்டலில் தங்க முடிவுசெய்து, ஓர் ஓட்டலுக்குச் சென்று, மேலாளரிடம் அறை கேட்டதும் காந்தியை நன்றாக உற்றுப்பார்த்துவிட்டு அறை இல்லை என்று பதில் சொன்னார். முகமது காஸீம் கம்ருதீன் கம்பெனிக்குச் சென்று அப்துல்கனி சேத்தைச் சந்திக்கிறார். ஓட்டலில் நடந்த அனுபவத்தைக் கேட்டு சிரித்த அவர், ஓட்டலில் உங்களை அனுமதிப்பார்கள் என்று எப்படி எதிர்பார்த்தீர்கள்? என்று வினவினார். ஏன்? என்று காந்தி அப்பாவியாகக் கேட்டார். பணம் சம்பாதிப்பதற்காக நாங்கள் அவமானங்களை சகித்துக்கொள்கிறோம் என்றவர் தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் படும் இன்னல்களைப் பட்டியலிட்டார். அவர் மேலும், உங்களைப் போன்றவர்களுக்கு இது ஏற்ற நாடல்ல. பிரிட்டோரியாவிறகு மூன்றாம் வகுப்பில்தான் செல்லவேண்டும். நேட்டாலைவிட டிரான்ஸ்வாலின் நிலை மிக மோசமானது. இந்தியர்களுக்கு முதல், இரண்டாம் வகுப்புச் சீட்டுகளை கொடுப்பதே இல்லை என்றார். இந்தியர்களின் பொருளாதார நிலையும் இவ்வகுப்புகளில் பயணம் செய்யப் போதுமானதாக இல்லை.
ரயில்வே விதிகளைப் படித்துப் பார்க்கிறார். அதுவும் தெளிவில்லாமல் இருந்தது. முதல் வகுப்பில் போக விரும்புகிறேன். முடியாவிட்டால் கோச் வண்டியில் செல்கிறேன் என்றார் காந்தி உறுதியாக. 37 மைல் தூரம் கோச் வண்டியில் செல்வதால் ஏற்படும் காலதாமதம், பணச்செலவு ஆகியவற்றை அப்துல்கனி எடுத்துரைத்தார். ஸ்டேஷன் மாஸ்டருக்குக் கடிதம் மூலம் தனக்கு முதல் வகுப்புச் சீட்டு வேண்டுமெனவும் நேரமின்மையால் அதை நேரில் பெற்றுக்கொள்வதாகவும் எழுதினார். நாகரிகமான ஆங்கில உடையில் நேரில் சென்றால் முதல்வகுப்புப் பயணச்சீட்டு பெற்றுவிடலாம் என்பது காந்தியின் நம்பிக்கை.
ஸ்டேஷன் மாஸ்டரிடம் கடிதம் அனுப்பியதைச் சொல்லி முதல்வகுப்புப் பயணச்சீட்டு கேட்டார். நான் டிரான்ஸ்வால்காரன் இல்லை. ஹாலந்து நாட்டைச் சேர்ந்தவன். உங்கள் மீது எனக்கு அனுதாபம் உண்டு. உங்களுக்கு சீட்டுக் கொடுக்க விரும்புகிறேன். ஆனால் கார்டு மூன்றாம் வகுப்பிற்கு போக வலியுறுத்தினால் ரயில்வே மீது நீங்கள் வழக்குத் தொடரக்கூடாது என்றார் அவர். உறுதிமொழி கொடுத்து டிக்கெட் பெற்றார் காந்தி. முதல் வகுப்பில் கார்டு உங்களை விட்டுவைக்கமாட்டார். அப்படி வைத்தாலும் பயணிகள் விடமாட்டார்கள் என்று கூறி அப்துல்கனி காந்தியை வழியனுப்பினார்.
காந்தி முதல்வகுப்பில் ஏறி அமர்ந்தார். வண்டி கிளம்பியது. ஜெர்மிஸ்டன் என்னுமிடத்தில் கார்டு வந்தார். கறுப்பரான காந்தியைக் கண்டதும் சினங்கொண்டு, மூன்றாம் வகுப்பிற்கு போய்விடுமாறு சைகை செய்தார். காந்தி தன்னிடம் முதல்வகுப்புச் சீட்டு இருப்பதைக் காட்டினார். அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை, நீ மூன்றாம் வகுப்பிற்குப் போயாக வேண்டும், என்றார்.
அந்த வண்டியிலிருந்த ஆங்கிலேயர் ஒருவர் அவரை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள் என கார்டைக் கண்டித்தார். இவருடன் பயணம் செய்ய எனக்கு மறுப்பில்லை என்று சொல்லி, காந்தியிடம், நீங்கள் இதே இடத்தில் இருங்கள், என்றும் சொன்னார். ஒரு கூலியுடன் பயணம் செய்ய நீங்கள் விரும்பினால் எனக்கு என்ன கவலை?, எனக் கார்டு முணுமுணுத்துக் கொண்டே அகன்றார். இந்தப் பிரச்சினை அத்துடன் முடிந்தது. அன்றிரவு எட்டுமணிக்கு காந்தி பிரிட்டோரியா சென்றடைந்தார்.
(தொடரும்…)
நன்றி: பொம்மி – சிறுவர் மாத இதழ், ஜூன் 2023
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக