புதன், ஜூன் 07, 2023

தமிழ்நாட்டுக் கல்விக் கொள்கையின் எதிர்காலம்?

 

தமிழ்நாட்டுக் கல்விக் கொள்கையின் எதிர்காலம்?

 

மு.சிவகுருநாதன்


 

           பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருந்த தமிழ்நாட்டின் கல்விக்கொள்கைக் குழுவில் முழுவீச்சில் செயல்பட்ட கல்வியாளர் லெ.ஜவகர்நேசன் இக்குழுவிலிருந்து வெளியேறியிருக்கிறார். அரசின் குழுக்களின் நிலை இதுதான் என்றாலும் கல்வி சார்ந்து இயங்குவோருக்கு இது பெரிய அதிர்ச்சியாக உள்ளது. கல்வி பற்றிய அக்கறையின்மையால் இப்பிரச்சினை ஒரு சிறிய வட்டத்தைத் தவிர வேறெங்கும் பெரிய சலனத்தை ஏற்படுத்தவில்லை. தொடர்ந்த மறுப்பறிக்கைகளுடன் இப்பிரச்சினை கைவிடப்பட்டுள்ளது.

              பொதுவாக கல்விக்குழு என்பது முன்னாள், இந்நாள் கல்வி அலுவலர்கள், துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் கொண்டதாக அமைக்கப்படும். எடுத்துக்காட்டாக, சமச்சீர்க் கல்வியை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவில் ச.முத்துக்குமரன் முன்னாள் துணைவேந்தர், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் டி.கிருஸ்துதாஸ், ஏற்காடு மான்ட்போர்டு பள்ளி சகோ.ஜார்ஜ், புதுக்கோட்டை நிஜாம் ஓரியண்டல் பள்ளித் தலைமையாசிரியர் எம்.எஸ்.காஜாமுகைதீன், கோவை சர்வ ஜன மேல்நிலைப் பள்ளியின் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் எஸ்.எஸ்.இராஜகோபாலன் ஆகியோர் இடம் பெற்றனர். தொடக்கக் கல்வி, மெட்ரிக் பள்ளி, அரசுத்தேர்வுகள், பள்ளிக்கல்வி இயக்குநர் போன்றோர் அலுவல் வழி உறுப்பினர் மற்றும் செயலராக இருந்தனர் இ.கோமதிநாயகம், சுவாமிநாதன் மற்றும் இக்குழுவின் உறுப்பினர்களைக் கொண்ட பாடக்குழுவும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்கள் தலைமையில் தொடக்கக் கல்வி, பள்ளிக்கல்வித் துணைக்குழுக்களும் அமைக்கப்பட்டன.

         சென்ற அ...தி.மு.. அரசு ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஆராய தொடக்கக் கல்வி, உயர்கல்வி என இரு குழுக்களை அமைத்தது. இவற்றிலும் முன்னாள், இந்நாள் துணை வேந்தர்கள், கல்வி அலுவலர்கள், ... அதிகாரிகள், சாகித்ய அகாதெமி மொழிபெயர்ப்பு விருதுபெற்ற ஓர் ஆசிரியர் போன்றோர் நியமிக்கப்பட்டனர். இக்குழுவின் நிலை என்னவானது என்று இதுவரையில் தெரியவில்லை. கல்வி சார்ந்த பணிகளில் ஈடுபடுவோர் அனைவரும் கல்வியாளர்கள் என்ற பொதுப்புத்தி உள்ளது. எனவே ஓய்வுபெற்றவர்கள் இதில் நிறைந்துவிடுவர். விசாரணை ஆணையத்தில்தான் ஓய்வுபெற்ற நீதிபதியைத்தான் நியமிப்பார்கள். மோடியின் அரசைப்போலவே ஊடகங்கள்  மு..ஸ்டாலின் அரசை எதிர்கொண்டன.

       இதுபோன்ற குழுக்களில் ஓரிருவர் கல்வியாளராகவோ அல்லது செயல்படும் நபராகவோ இருப்பர். அவர்களின் உதவியுடன் குழு செயல்படும். கல்விப்பணியுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் கல்வியாளர்களாக இருப்பதில்லை. மைசூரூ ஜே.எஸ்.எஸ். அறிவியல், தொழில்நுட்ப பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேரா.லெ. ஜவகர்நேசன் இக்குழுவின் கல்வியாளர் முகமாக அறியப்பட்டவர். தேசியக் கல்விக்கொள்கை 2020க்கான விரிவான எதிர்வினையை சுமார் 600 பக்க நூலின்வழி வெளிப்படுத்தியவர். (கல்வியைத் தேடிவெளியீடு:பாரதி புத்தகாலயம், மொழியாக்கம்: கமலாலயன்) தேசியவாதக் கல்விமுறையை மறுத்து சமூக உந்துவிசைக் கல்வியைப் பரிந்துரைப்பவர்.  தேசிய உயர்கல்வித் தகுதிக் கட்டமைப்ப்பை ஏதேச்சதிகார தேசியவாதத்தின் குறியீடாக  விமர்சிக்கும் சிறிய நூலொன்றையும்  எழுதியுள்ளார்


 

         தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையை உருவாக்கும் குழுவே சரியான முறையில் அமைக்கப்படவில்லை. தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் இதன் தலைவராக நியமிக்கப்படார். கல்வியாளர்களைவிட பிரபலங்களுக்கே (Celebrities) இக்குழுவில் முக்கியத்துவம் தரப்பட்டது. திட்டக்குழு உறுப்பினர்களையும் இதில் நுழைத்தனர். முன்னாள் நீதிபதி, பிரபலங்கள், தனியார் பள்ளி நிர்வாகி, தொண்டு நிறுவன அலுவலர் போன்றோர் எப்படிப்பட்ட கல்விக் கொள்கையை உருவாக்க முடியும் என்பதை யாரும் உணரவில்லை.  கல்வியில் ஆர்வமோ, நிபுணத்துவமோ இல்லாதவர்கள் அதிகமடங்கிய குழு எப்படி நமக்கான கல்விக்கொள்கையை உருவாக்கும் என்பது கேள்விக்குறியாக இருந்தது. இது குறித்த கவலையைபேசும் புதியசக்திஜூன் 2022  இதழில் இடம்பெற்ற எனது கட்டுரை வெளிப்படுத்தியது. புதிய அரசு என்ன செய்தாலும் ஆதரிக்கும் பெருங்கடலில் இத்தகைய பார்வைகள் கரைந்துபோனது. இவர்கள் அமைத்த பிரபலங்களின் குழுக்கள் அதிகம். அதில் கல்விக்குழுவும் ஒன்றாகிப்போனது.

       சமச்சீர்க் கல்விக்குழுவின் நோக்கம், அதிகார வரம்பு அனைத்தும் குறுகியது. ஆனால் கல்விக்கொள்கை பரந்த, விரிவான பார்வையுடையதாக இருக்க வேண்டும். குழுவும் அதற்கேற்ப பரந்த அளவில் அமைந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் இதைப் பெரிதாகக் கண்டுகொண்டிருந்தால், இதை தொடக்கத்திலேயே சரிசெய்திருக்க முடியும். அதன் பலனை தமிழ்நாடு தொடர்ந்து அனுபவிக்கப் போகிறது.  

        ஒன்றிய அரசுஇஸ்ரோபிரபலங்களையும் நேரடி மற்றும் மறைமுக ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களைக் கொண்டு தேசிய கல்விக்கொள்கை 2020 ஐ உருவாக்கியது. அதைப்போலவே இங்கும் தொடங்கியது அபத்தம். தேசியக் கல்விக்கொள்கை: பின்னணி மர்மங்கள் எனும் நூல் இந்த பாசிச அரசியலை அம்பலப்படுத்தியது. தமிழகக் கல்விக் கொள்கை உருவாக்கத்திலும் அத்தகைய நிலை ஏற்பட்டதை  அவலமாகவே காணவேண்டியுள்ளது.  

            கல்விக்குழு ஏற்கனவே இருக்கும் அனைத்து வளங்களையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் டாக்டர்  ராதாகிருஷ்ணனின் பல்கலைக்கழகக் கல்விக்குழு (1948-49), லெட்சுமணசாமி முதலியார் இடைநிலைக் கல்விக்குழு (1952-53), டாக்டர் கோத்தாரி கல்விக்குழு (1964-66), முதல் தேசிய கல்விக்கொள்கை 1968, புதிய கல்விக்கொள்கை 1986, செயல்திட்ட அறிக்கை 1992, 1973, 1975, 1988, 2000, 2005 ஆகிய ஆண்டுகளின் தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு, சுமையற்ற கற்றல் 1993, தமிழ்நாட்டில் தேசிய கல்விக்கொள்கை 1986 ஐ மறுஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ராமமூர்த்தி அறிக்கை 1990, .முத்துகுமரன் தலைமையிலான சமச்சீர்க்கல்வி அறிக்கை 2007 ஆகிய பல்வேறு அறிக்கைகளும் ஆய்வு செய்யப்பட வேண்டும். மாறாக  டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் அறிக்கை 2016, கஸ்தூரிரங்கன் குழு அறிக்கை 2019 போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான தேசியக் கல்விக்கொள்கை 2020இன் கூறுகளை மட்டும் உள்நுழைக்கும் சதி நடப்பதை ஜவகர்நேசன் பொதுவெளிக்குக் கொண்டுவந்துள்ளார்.  சி.பி.எஸ்.. பாடங்களைக் கொண்டு தமிழ்நாட்டுப் பாடநூல் எழுதுவதைப்போல கல்விக்கொள்கையை எழுத வேண்டிய அவசியமில்லை. அதற்கு ஒரு குழுவும் இரண்டாண்டு காலமும் தேவையில்லை. 

         மாநிலக் கல்விக்குழுவின் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் ஒன்றிய அரசின் முந்தைய நடவடிக்கைகளுக்கு நிகரானவை. அவர்கள் ஆசிரியர்களுக்காக வட்டார வள மைய, குறுவள மையக் கூட்டங்களை கருத்துக் கேட்புக் கூட்டங்களாக மாற்றிக் கணக்கு காட்டினர். இவர்களோ இக்கூட்டங்களை மிகவும் மந்தனமாக, தணிக்கையுடன் ஒப்புக்கு நடத்தினர். திருவாரூரில் நடந்த கருத்துக் கேட்புக் கூட்டம் பற்றி யாருக்கும் தகவல் இல்லை. மறுநாள் நாளிதழ் செய்தி மூலமே இதை அறிய முடிந்தது. பள்ளிகளுக்கு மின்னஞ்சல் கூட அனுப்பப்படவில்லை. இக்கூட்டத்தை நிலைய வித்வான்களைக் கொண்டு பெயருக்கு நடத்தி முடித்தனர்.  இதைத் தெரிந்துகொண்ட விளம்பர ஆசிரியர்கள் பள்ளிக் குழந்தைகளை சீருடையில் அழைத்துவந்து சுயவிளம்பரம் தேடிக்கொண்ட கதையும் நடந்தது. நாகப்பட்டினத்தில் முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் சொல்ல வேண்டிய கருத்துகளை  முன்கூட்டியே தணிக்கை செய்ததாக அதில் கலந்துகொண்ட நண்பர் தெரிவித்தார்.

       இக்குழுவில் பல்வேறு துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டதாக சொல்கிறார்கள். எத்தனைக் குழுக்கள் அமைக்கப்பட்டன? அதில் யாரெல்லாம் இடம்பெற்றனர்? அவர்கள் செய்த பணிகள் என்ன? என்பதெல்லாம் யாருக்கும் தெரியாத ரகசியம். இது தொடர்பாக 13 துணைக்குழுக்கள் அமைப்பட்டதாகவும் கடந்த மூன்று மாதங்களாக நேரடி மற்றும் இணைய வழியில் உரையாடி, பரிந்துரைகளை ஒருங்கிணைப்பாளர் ஜவகர்நேசனிடம் அளித்து அவை கல்விக்கொள்கை குழுவிடம் அளிக்கப்பட்டன. பணி நிறைவடைந்ததால் இக்குழுக்கள் கலைக்கப்பட்டன என்று ஒரு குழுவில் இடம்பெற்ற எழுத்தாளர் விழியன் முகநூல் பதிவொன்றில் (10 மே, 2023) குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜவகர்நேசன் தயாரித்த ‘Problem Statement’ மிக முக்கியமான கல்வி ஆவணம் என்றும் பள்ளிக்கல்விக் குழுவிற்கு எழுத்தாளர் சாலை செல்வம் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டதாக  அக்குறிப்பு தெரிவிக்கிறது.

         இடதுசாரிகள் குறிப்பாக சி.பி.எம். கட்சியின் பங்கு பற்றியும் விவாதிக்க வேண்டியுள்ளது. தேசியக் கல்விக்கொள்கை 2016 உருவாக்கத்தின்போதே அதைக் கடுமையாக எதிர்த்துப் பரப்புரையை முன்னெடுத்தவர்கள் இவர்கள். ஆனால் பிற்காலத்தில் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கேற்ப தங்களைத் தகவமைத்துக் கொண்டது வியப்பளிக்கிறது. கடந்த அ...தி.மு.. ஆட்சியில் பள்ளிக்கல்வி ஆணையர் பதவி ஏற்படுத்தப்பட்டது. இது தேசியக் கல்விக் கொள்கையின் ஓரம்சம். தி.மு.. அரசு பதவியேற்றபிறகு பள்ளிக்கல்வி இயக்குநர் பதவி கலைக்கப்பட்டு ஆணையரின் முழுக் கட்டுப்பாட்டில் பள்ளிக்கல்வித்துறை வந்தது. நந்தகுமார் ஆணையராக நியமிக்கப்பட்டார். தேசியக் கல்விக்கொள்கை எதிர்ப்பு அவர் மிகவும் நல்லவர் என்கிற பேச்சுகளில் கரைந்துபோனது. ‘இல்லம் தேடிக் கல்வித் திட்டம் தொடங்கப்பட்டபோது அதன் கூறுகளைக் காணாமல் அதன் பங்கேற்பாளர்களாக மாறிப்போயினர்.  

               கல்வியில் தன்னார்வலர்கள் பங்கேற்பை  தேசியக் கல்விக்கொள்கை பல இடங்களில் வலியுறுத்துகிறது. இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் இது உறுதிப்படுத்தப்பட்டது. சி.பி.எம். மற்றும் அதைச்சார்ந்த அமைப்புகள் இதை இன்னொரு அறிவொளி இயக்கமாகக் கற்பிதம் செய்துகொண்டன. அறிவொளி இயக்கம் வேறு, இல்லம் தேடிக் கல்வி வேறு  என்பதை உணராமல் பள்ளிக்கல்வியை முறைசாராக் கல்வியாக மாற்றும் தேசியக் கல்விக்கொள்கையின் சூழ்ச்சிக்குப் பலியாயினர். கொள்கை பற்றிய கவலைகளை மறந்து இதில் ஈடுபடத் தொடங்கினார். இதற்கான பரப்புரைகளுடன் கல்வி அவலத்திற்கு துணைபோகும் நிலையும் தொடர்ந்தன. தங்களுக்கும் தங்கள் அமைப்பினருக்கும் பொறுப்பு, பதவி கிடைக்கிறது என்கிற சுயநலம் சார்ந்த எடுக்கப்பட்ட இம்முடிவுகளால் கல்வியும் சமூகமும் பாதிப்படைவதை இவர்கள் துளியும் உணரவில்லை. ஒரு கட்டத்தில் இவர்கள் அரசின் தூதுவர்களாக மாறினர்.

         கல்வியாளர் ஜவகர்நேசன், உலகளவில் 113 வல்லுநர்கள் கொண்ட 13 துணைக்குழுக்கள் அமைத்து 22 கல்வி நிறுவனங்களில் மாதிரி  ஆய்வுகள் செய்து, அத்துடன் தனது ஆய்வுகள், துணைக்குழுக்களின் பரிந்துரைகளைத் தொகுத்து இடைக்கால அறிக்கை தயாரித்து குழுத் தலைமையிடம் அளித்தேன், என்கிறார். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின் அழுத்தம் தொடர்பாக  குழுத்தலைவரிடம் பலமுறை புகாரளித்தும் அவர் புறக்கணித்ததாகவும் சொல்லியுள்ளார்.

            ஜவகர்நேசன் குற்றச்சாட்டுகளை மறுத்து குழுவின் தலைவர் நீதிபதி முருகேசன் அறிக்கை வெளியிட்டார்.  அதில் உயர்நிலைக்குழு சுதந்திரமாகவும் ஜனநாயக முறையிலும் செயல்படுவதாக சொன்ன அவர் குற்றச்சாட்டுகளை மின்னஞ்சல் மூலம் அனுப்பிருப்பது  அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.  இப்புகார்களை மறுத்த ஜவகர்நேசன் குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்ட முடிவுகளுக்கும் செயல்திட்டங்களுக்கும் எதிராக குழுவின் தலைவர் செயல்பட்டதை ஒவ்வொரு கூட்டத்திலும்  எதிர்த்தேன். தமிழக மக்களுக்கு நியாயமான கல்விக்கொள்கை கிடைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றும் கூறியுள்ளார். 

        அருணா ரத்னம், ஆர்.சீனிவாசன், ஜெயஶ்ரீ தாமோதரன் ஆகிய மூன்று உறுப்பினர்கள் கையொப்பமிட்ட மறுப்பு அறிக்கை ஒன்று வெளியானது. டி.எம்.கிருஷ்ணா, எஸ்.ராமகிருஷ்ணன், துளசிராமன், சுல்தான் அகமது இஸ்மாயில், ச.மாடசாமி ஆகிய ஐவர் மின்னஞ்சல்  மூலம் இந்த அறிக்கைக்கு  ஒப்புதல் தந்துள்ளனர். இந்திய செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், கணித அறிவியல் கழகத்தின் முன்னாள் பேராசிரியர் இராமானுஜம்,  நாகப்பட்டினம் கீச்சாங்குப்பம் ஊராட்சி ஓன்றிய நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் ஆர்.பாலு ஆகியோர் தங்கள் கருத்தை இதுவரை தெரிவிக்கவில்லை. இப்பிரச்சினை தமிழ்நாட்டு அரசை மட்டுமல்லாமல் பலரையும் சேர்த்து அம்பலப்படுத்தியுள்ளது.

        இந்த மூவரின் அறிக்கை தலைவரின் அறிக்கையைப் போல ஜவகர்நேசன் மீதே குற்றம் சுமத்துகிறது. அவர் ஒருவர் மட்டுமே கல்விக்கொள்கைக்கு எதிரானவர் என்பது போன்று சித்தரிக்கப்படுகிறது. இதுவரை அவர் செய்த பணிகள் இவர்களுக்குத் தெரியாததல்ல. இருப்பினும் அவர்கள் இவ்வாறு பேசுவது அவர்களது உள்நோக்கத்தையும் ஜவகர்நேசனின் குற்றச்சாட்டையும் உறுதிப்படுத்துவதாக இருக்கிறது. இந்த அறிக்கையில் "தமிழ்நாட்டின் எதிர்கால நலனையும் தற்போதைய நிஜங்களையும் தேவையான மாற்றங்களையும் முன்னிறுத்தியதாகவே இருக்கும் என தமிழக மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

      ஆணையர் பணியிடம், இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், தகைசால் பள்ளிகள், மாதிரிப் பள்ளிகள், நான் முதல்வன் திட்டம், கல்வியில் தன்னார்வலர்கள் பங்களிப்பு, நம் பள்ளி பவுண்டேஷன், அகஸ்தியா இண்டர்நேஷனல் பவுண்டேஷன் போன்ற வலதுசாரி அமைப்புகளின் பங்கேற்பு, கலவைக் கற்றல் முறை, கார்பரேட்களிடம் திறன் வளர்ப்பு, அண்ணா பல்கலைக்கழகக் கலை திட்டத்தில், மதிப்பெண் புள்ளிகளை, ஒரு குறிப்பிட்ட பகுதியை கார்பரேட்கள் நடத்தி வழங்க 58 கோடி நிதி ஒதுக்கீடு போன்ற பலவற்றைத் தற்போதைய நிஜங்களாகப் பட்டியலிடமுடியும்.  தமிழ்நாடு அரசு  நேரடியாகவும் மறைமுகமாகவும் வேறுபெயர்களில் செயல்படுத்தும் தேசியக் கல்விக் கொள்கை 2020இன் கூறுகளை கண்டும் காணாமல் செயல்படுவது   கல்விக்குழுவிற்கு பெருமை சேர்க்காது. மூவர் எழுதிக்கொடுத்தாதாகச் சொல்லப்படும் (உண்மையில் ஒருவர்தான் எழுதியிருக்க முடியும்!) இவ்வறிக்கைக்கு 5 பேர் ஒப்புதலளித்துள்ளனர். இதைப்போல யாரோ எழுதிக்கொடுக்கும் கல்விக் கொள்கைக்கும் இவ்வாறு ஒப்புதல் அளிக்கலாம்.

           சி.பி.எம். மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில், கல்விக்குழுவில் ஏற்பட்ட முரண்பாடுகளை சரிசெய்து, இப்பணியை செழுமைப்படுத்திட குழுவை மறுசீரமைப்பது குறித்தும் ஆலோசிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். பிற கட்சிகள் பெரியதாக எதிர்வினை புரியாத நிலையில் இது வரவேற்கத்தக்கது எனினும் காலம் கடந்த முயற்சியாகவே உள்ளது. குழு அமைக்கப்பட்டபோதே இத்தகைய அழுத்தங்கள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஒன்றிய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் மவுனம் காக்கும் நிலை போன்று மாநிலத்திலும் உருவாவது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல. இவ்வாறு தமிழ்நாட்டுக் கல்வியின் நிலை கேள்விக்குரியதாக மாற்றப்பட்டுள்ளது.    

நன்றி: புதிய விடியல் (மாதமிருமுறை இதழ்) ஜூன் 1-15, 2023    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக