வெள்ளி, ஜூன் 09, 2023

இன்னும் எவ்வளவு காலம் ஏமாறுவது?

 

இன்னும் எவ்வளவு காலம் ஏமாறுவது?

மு.சிவகுருநாதன்


 

         தேசியக் கல்விக் கொள்கை 2020ஐ ஏற்கவில்லை எனவும் அதை அமல்படுத்த மாட்டோம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டிற்கென தனியாக கல்விக் கொள்கையை உருவாக்க ஓர் உயர்மட்டக் குழு ஒன்றையும் அமைத்துள்ளது. தமிழக முதல்வர், உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சர்கள் நமது கல்விக் கொள்கையின் படியே நாம் செயல்படுவோம் என்று அடிக்கடி கூறி வருகின்றனர்.

         ஆனால் அரசின் பல கல்வித் திட்டங்கள் அரசின் தேசியக் கல்விக்கொள்கை 2020 இன் அம்சங்களாக இருப்பதை பலர் சுட்டிக்காட்டி வருகின்றனர். இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், தகைசால் பள்ளிகள், மாதிரிப் பள்ளிகள், நான் முதல்வன் திட்டம், கல்வியில் தன்னார்வலர்கள் பங்களிப்பு, நம் பள்ளி பவுண்டேஷன், அகஸ்தியா இண்டர்நேஷனல் பவுண்டேஷன் போன்ற வலதுசாரி அமைப்புகளின் பங்கேற்பு, கலவைக் கற்றல் முறை, கார்பரேட்களிடம் திறன் வளர்ப்பு, அண்ணா பல்கலைக்கழகக் கலை திட்டத்தில், மதிப்பெண் புள்ளிகளை, ஒரு குறிப்பிட்ட பகுதியை கார்பரேட்கள் நடத்தி வழங்க 58 கோடி நிதி ஒதுக்கீடு, முதுகலை ஆசிரியர்களுக்கு 9-12 வகுப்புகள் எனப் பலவற்றைச் சுட்டிக் காட்ட முடியும். ஆணையர் பணியிடம் மட்டுமே திரும்பப் பெறப்பட்டுள்ளது.

        கோடை வெயிலின் தாக்கம்  காரணமாக பள்ளித் திறப்பு ஜூன் 01க்குப் பதிலாக ஜூன் 12 என மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் ஜூன்10 சனியன்று 1-10 வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான CRC, உயர்தொடக்க மற்றும் 9, 10 வகுப்புகளுக்கான BRC என்ற பயிற்சிகள் CPD  (Continuous Professional Development)  என்ற பெயர் மாற்றத்துடன்  தேசியக் கல்விக்கொள்கை 2020 இன் அடிப்படையில் இப்பயிற்சி அமையவிருக்கிறது.

       தேசியக் கல்விக்கொள்கை 2020  மறுக்கும் தமிழ்நாட்டில் மறைமுகமாக இக்கொள்கை திணிக்கப்படுகிறது. மாநில அரசு இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டும், அவ்வப்போது மாநிலக் கல்விக்கொள்கை அமலாகும் என்றெல்லாம் சொல்லியும் வருகின்றனர்.  10+2 முறையில் 5+3+3+4 முறையை மறைமுகமாக அமலாவதை எவ்வளவு காலம்தான் இவ்வாறு வேடிக்கைப் பார்க்கப் போகிறோம்?

       ஆசிரிய இயக்கங்கள் இவ்வாறு ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கை 2020  அமலாவதை எதிர்த்துக் கேள்வி கேட்கும் நிலையில் இல்லை. மாறாக பள்ளி திறந்தவுடன் வேறு ஒரு நாளில் பயிற்சியை நடத்துங்கள் என கெஞ்சும் நிலையில் அவர்கள் உள்ளனர்.

      கல்வியில் மாநில உரிமையை ஒன்றிய அரசிடம் விட்டுவிட்டு வெற்று முழக்கங்கள் எழுப்பவதில் எவ்விதப் பயனுமில்லை. இன்னும் எவ்வளவு காலம் ஏமாற்றுவது, ஏமாறுவது என அனைவரும் விரைவில் ஒரு முடிவுக்கு வருவது நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக