வெள்ளி, ஜூன் 09, 2023

கதைக் கட்டுரைகளும் கட்டுரைக் கதைகளும்

 

கதைக் கட்டுரைகளும் கட்டுரைக் கதைகளும்

(நூல் விமர்சனம்: அஞ்ஞை நீ ஏங்கி அழல் – பூமணி)

மு.சிவகுருநாதன்


 

                பா.ஜெயப்பிரகாசத்தின்தெக்கத்தி ஆத்மாக்கள்குறித்த புது வாசனைஎனும் கட்டுரையில், “இயல்பான அனுபவங்கள் அமுங்கி கருத்துச் சவாரியில் படைப்பு நிலை நீர்த்துப் போய் கட்டுரைத் தன்மை மேலொங்கியிருக்கும் கதைகளைக் கட்டுரைக் கதைகள் என்று சொல்லலாம். உணர்வுகள் கோர்க்கப்பட்ட, கதையம்சங்கள் நிறைந்த கட்டுரைகளை கதைக் கட்டுரைகள் என்று சொல்லலாமல்லவா. அப்படியானால் இவை கதைக் கட்டுரைகளே”, என்கிறார் பூமணி. இது இந்நூலிலுள்ள சிலவற்றிற்கும் பொருந்தும். பல்வேறு சமயங்களில் எழுதப்பட்ட 11 கட்டுரைகளும் ஒரு நேர்காணலும் (கிட்டத்தில்) இந்நூலில் உள்ளன. அல்புனைவான இவை பூமணியின் எழுத்துகளில் புனைவாகவும் தோற்றம் கொள்கின்றன.  

          இந்நூலின் தலைப்பு சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் பாடல் வரியாகும். இத்தலைப்புக் கட்டுரையில் இளங்கோவடிகள் (சிலப்பதிகாரம்), மாமூலனார், கயமனார், கிரா (கிடைகுறுநாவல்) என்ற இலக்கியத் தொடர்ச்சியின் வழியே அஞ்ஞைக்கு (அம்மா) விளக்கமளிக்கிறார். பழந்தமிழகத்தில் அம்மாவை அஞ்ஞை, ஆத்தா என்று அழைக்கும் வழக்கமிருந்தது. பின்னாளில் இவை தனிச் சாதிப்பிரிவுகளாக ஆயின என்கிறார்.

       கோமல் சுவாமிநாதன் நினைவாக எழுதியதோப்புகோமலை கொக்காக உருவகிக்கிறது. அவர் உருவாக்கியசுபமங்களாஇங்கு தோப்பாகிறது. பொருளாதாரம் என்னும் தண்ணீர் வசதி இருந்ததால் அதை வளர்ப்பதற்கு கஷ்டமிருக்கவில்லை. கானாங்கோழிதான் பூமணி. நட்பு வளர்ந்தது. தோப்பில் கோழிக்கும் இடம் கிடைத்தது. கொக்கு இறந்தவுடன் அது வளர்த்த தோப்பையும் (சுபம்ங்களா) எரிக்கப் போகிறார்களாம்! கோழி அழுதுகொண்டே காட்டைவிட்டு வெளியேறுகிறது.

      சுபமங்களாஇதழுக்குத் தோள்கொடுத்த இளையபாரதியின் கவிதைகளை வேர்களைத் தேடும் விரல்களில்சிலாகிக்கிறார். சந்திக்கும் போதெல்லாம் கதை கொடு என முரண்டு பிடித்து, சுணங்கும் நேரத்தில் எருமை வாலை முறுக்கி எழுதவைத்து, எழுதியதை உரிமையுடன் பறித்துக்கொண்டு போகும் இளையபாரதியின் கதையுடன் கோமலுக்கு இப்படியொரு துணையில்லையென்றால் இதழ் தொய்வின்றி வந்திருக்குமா என்பது சந்தேகமே, என்ற கருத்தையும் பதிவு செய்கிறார்.

         மானாவாரி கரிசல் சீமையான விருதுநகர் தீப்பெட்டி,  சாத்தூர் வெள்ளரி, சேவு போன்றவற்றினூடாக பேனா முள் (நிப்பு) தொழிலைப்பற்றிஎழுத்துவிவரணையாகப் பேசுகிறது. “பேனா முள்ளில் நிறுவன முத்திரையிடும் சிற்பியின் மூக்குக் கண்ணாடி எவ்வளவோ கனத்துவிட்டது; ஆனால் மடி மட்டும் கனக்கவே இல்லைஎன்கிற அவலத்தையும்நாடெங்கும் பேனா முள்கள் தேய்கின்றன. ஆனால் அவற்றைச் செய்யும் வாத்தியார்களுக்கோ விரல்கள் தேய்கின்றன”, என்ற கள உண்மையைப் பதிவு செய்கிறார்.

     இந்த ஆலைகளில் பணிபுரிந்த சிறுவர்கள் வேறு ஆலைகளுக்குப் போய்விட்டார்கள். அங்கேயும் இந்த பிஞ்சு விரல்கள் தேய்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்தத் தேய்மானத்தில்தான் வருமானம்”, என்ற உண்மை சுடுகிறது. குழந்தைத் தொழிலாளர்களின் துயரம் கொடுமையானது. பட்டாசு, தீப்பெட்டி, சாயப்பட்டறை, நெசவு, பீடி, கல்லுடைப்பு, உணவு விடுதி என குழந்தை உழைப்புக் களங்கள் ஏராளம். எழுத்தாளன் இதைக் காணாமலிருக்க முடியாது. அதை கருவேலம் பூக்களின்திரை அனுபவங்கள் (திக்குத் தெரியாத காட்டில்) வழி கூடுதல் பக்கங்களாக நம்மை நிறைக்கிறது.

      ஏழெட்டு வயசுவரை தொட்டிலில் படுத்துறங்கும், மேலூர் வேதப் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதும் பால்குடி மறக்காமல், எந்நேரமும் அம்மாவைத் தொந்தரவு செய்து வலிக்க வலிக்க பால் குடிக்கும் குழந்தைப் பருவம் தொடங்கி   அம்மா ரத்தவாந்தி எடுத்து மரணிக்கும் வரை ஏலேய்; நினைவோடையாக விரிகிறது.

       எழுத்துவில் சி.சு.செல்லப்பா வெளியிட்ட முதல் கதையானஅறுப்பு’, கரிசல் எழுத்தின்முன்னத்திஏர் கி.ரா, நாவல் பற்றி பெரிய அறிவெல்லாம் இல்லாமல் எழுதியபிறகுநாவல் என பூமணியின் அனுபவங்கள் அவரது கரிசல்மொழியில் துலக்கம் பெறுகின்றன.

     அறிவா அது எங்க விக்கிது”, எனக் கேட்கும் ரெட்டைமாட்டு வண்டியில் உப்பு விற்கும் சிறுபாணாற்றுப்படை நத்தத்தனார், ஆழ்வார் குடும்பத்துப் பொண்ணா இருந்துக்கிட்டு ஆயர் குடும்பப் பொண்ணுக விடியக்காலம் தயிர் கடையிறதப் பத்தி அனுபவிச்சு எழுதியிருக்கீகளே அது எப்பயம்மா”, என்ற கேள்வியை எதிர்கொள்ளும் ஆண்டாள், “ஓய் நீர் உருப்படமாட்டீர். ஒமக்கு மண்ட வீங்கிப்போச்சு. மனசாக்கும் வீங்கணும். ஏதேது தேன் வந்து பாயுது காதினிலேன்னு பாடுனா காதுக்குள்ள கட்டெறும்பப் புடிச்சு விட்டாலும் விடுவீர்”, என எடக்கு மடக்குக் கேள்வியால் வெகுண்டோடும் பாரதி எனநோவுவில் பிராமணியம், திராவிடவியம், பெண்ணியம், அமைப்பியம், மரபியம், தலித்தியம் எல்லாம் வெற்றுத் தவளைச் கூச்சலாகிப் போகிறது. “அறிவு பெருத்தவன் நோவு பெருத்தவன்”, எனப் பைபிள் துணைகொண்டுஅறிவு கொஞ்சம் கூட இல்லை”, என இசங்கள் பேசும் இலக்கிய விமர்சகர்களிடம் (ஈயம் பித்தளைக்குப் பேரிச்சம்பழம்)  அழுத்தந்திருத்தமாகச் சொல்லிக் கொள்கிறார்.

        அவரது நேர்காணலும் (கிட்டத்தில்) இதைத்தான் பேசிக்கொண்டே இருக்கிறது. புதிய இசங்கள், தலித்தியம் போன்றவற்றை கிண்டல் செய்யும் போக்கு பூமணியிடம் நிறைவாக உள்ளது. இவரது முன்னோடிப் பட்டியலில் உள்ள சுந்தர ராமசாமியும் இடதுசாரிகளும்கூட தலித்திய ஒவ்வாமையால் கடும் நெருக்கடிக்கு உள்ளாயினர். தமிழில் தலித் அல்லது ஒடுக்கப்பட்டோர் இலக்கியம் இவ்வாறு பல்முனை தாக்குதல்களுக்குப் பின்னர் இன்று புறக்கணிக்க முடியாத சக்தியாக வளர்ந்துள்ளது. 1980களின் நிலை இன்றில்லை. சூழல் வெகுவாக மாறியுள்ளது. அக்காலகட்டத்தில் இதன் தேவையை மறுத்துவிட முடியாது. படைப்பாளி எழுதுவதும் விமர்சகன் அவற்றை இசங்களின் வழி அணுகுவதும் இயல்பானதே. இதில் படைப்பாளி பதற்றமடைய அவசியமில்லைதான்.

        இன்று இசங்கள் பேசுபொருளாக இல்லாவிட்டாலும் படைப்பினுள் அதன் தாக்கம் இருப்பதை அவதானிக்க முடிகிறது. கரிசலை எழுதும் பூமணியால் வண்டலை எழுத முடியுமா? ஆனாலும் எப்போதும்போல கரிசல் மொழியால் நம்மைக் கொள்ளை கொள்கிறார் பூமணி. அவரையும் அழகான நூலுருவாக்கத்திற்குமணல்வீடுமு.ஹரிகிருஷ்ணனையும் பாராட்டியாக வேண்டும்.

 

நூல் விவரங்கள்:

அஞ்ஞை நீ ஏங்கி அழல் (கட்டுரைகள்) - பூமணி

விலை: ₹ 150  பக்கங்கள்: 127

முதல் பதிப்பு: ஜனவரி 2023

வெளியீடு:

மணல்வீடு, ஏர்வாடி,குட்டப்பட்டி - அஞ்சல், 636453,

மேட்டூர் - வட்டம், சேலம் - மாவட்டம்.

பேசி: 9894605371

மின்னஞ்சல்: manalveedu@gmail.com

இணையம்: www.manalveedu.org

 

நன்றி: பேசும் புதியசக்தி மாத இதழ், ஜூன் 2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக