பாசிஸ்ட்கள் கைகளில் கல்வி
மு.சிவகுருநாதன்
தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) ஒன்றிய அளவில் பள்ளிகளுக்கான கலைத்திட்டம், பாடத்திட்டம் போன்றவற்றை வடிவமைத்து, 1-12 வகுப்புகளுக்கான பாடநூல்களையும் தயாரித்து வெளியிடுகிறது. ஒன்றிய அரசின் கல்வித்துறையின் கீழ் இவ்வமைப்பு செயல்படுகிறது. இந்தப் பாடநூல்களையே மத்தியக் கல்வி வாரியம் (CBSE), கேந்திரிய வித்யாலயா (KV), நவோதயா (NV) போன்ற பள்ளிகள் பயன்படுத்துகின்றன.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) மாநில வாரியத்திற்கான பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களைத் தயாரிக்கிறது. இவை பெரும்பாலும் NCERT பாடநூல்களை அடியொற்றியே தயாரிக்கப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்த விரும்பாத தனியார் சுயநிதிப்பள்ளிகள் தனியார் பாடநூல்களை நம்பி இயங்குகின்றன. இந்த மெட்ரிக் பள்ளிகளைப் போன்ற பல பள்ளிகள் குறிப்பாக பொதுத்தேர்வு இல்லாத வகுப்புகளில் தனியார் பாடநூல்களைப் பயன்படுத்துவதைப்போல இங்கும் நடக்கிறது.
6-8 ஆம் வகுப்புகளுக்கான பாடநூல்கள் NCERT பாடநூல்கள் 2006-2008 காலத்திலும் 9-12 ஆம் வகுப்புகளுக்கான பாடநூல்கள் 2006-2007 கால கட்டத்திலும், அதாவது முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தயாரிக்கப்பட்டவை. எனவே இவைகள் தரமான பாடநூல்கள் என்பதில் அய்யமில்லை. 15 ஆண்டுகளாக ஒரே பாடநூலைப் பின்பற்றுவது நல்லதல்ல. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது பாடநூல்களை மாற்றுவது கல்விக்கும் சமூகத்திற்கும் நல்லது.
ஒப்பீட்டளவில் புதிதாக தயாரிக்கப்பட்ட தமிழ்நாட்டுப் பாடநூல்கள் தரமானவை என்பதோடு, தமிழ்நாட்டுற்கு உரிய பொருண்மைகளுடன் தயாரிக்கப்பட்டவை. இவற்றில் களைய வேண்டிய சில பிரச்சினைகளும் உண்டு. குழந்தைகளுக்கான எளிய மொழிநடையில் நூல்கள் அமையவில்லை என்பது ஒரு சிக்கல். ஆங்கிலத்தில் எழுதப்படும் இவை ‘google translate’ போல் எந்தரத்தனமாக மொழியாக்குவதால் வந்த வினை இது. ‘நீட்’ போன்ற போட்டித் தேர்வுகள் NCERT பாடநூல்களை மையமாகக் கொண்டுள்ளதால் அவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கிறது.
தேசியக் கல்விக் கொள்கையை உருவாக்க 2016லிருந்து முனைப்பு காட்டிய இவர்கள் பாடநூல்களைக் கண்டுகொள்ளவில்லை. அதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. தங்களது இந்துத்துவக் கோட்பாடுகளுக்கு ஏற்ப கல்வியை மாற்றியமைக்க அடிப்படைக் கட்டுமானங்களை ஏற்படுத்துவதில் குறியாக இருந்து அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். வரும் கல்வியாண்டில் (2024-2025) புதிய பாடநூல்கள் வெளியாகும் என்று சொல்கிறார்கள். இவை அனைத்து பிராந்திய மொழிகளிலும் வெளியாகும் என்றும் இதன் மூலம் “ஒரே நாடு, ஒரே பாடத்திட்டம்” என்கிற பாசிச நஞ்சைப் பரப்பும் திட்டத்தை செயல்படுத்த முனைகின்றனர். இவை தேசியக் கல்விக் கொள்கை 2020 இன்படி அமையும் என்பதால் பாடநூல்களில் சிரமப்பட்டு இவர்களது கொள்கைகளை நுழைக்கத் தேவையில்லை. அதற்கான அடிப்படை நுட்பமாக போடப்பட்டுவிட்டது. கல்விக் கொள்கையின் கூறுகள் ஒன்றிய அரசின் அனைத்துக் கல்வித் திட்டங்களிலும் இருக்கின்றது. எனவேதான் அவர்களது கல்விக்கொள்கை வேண்டாம் என்று சொன்னாலும் அதனடிப்படையில் நடக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை (CPD – Continuous Professional Development) அனுமதித்து மாநில அரசும் கல்வித்துறையும் வேடிக்கைப் பார்க்கின்றன.
உதாரணமாக மாவட்டத்திற்கு ஒன்று என்ற எண்ணிக்கையில் தொடங்கப்பட்ட நவோதயா பள்ளிகளை நாம் நிராகரித்து இருமொழிக் கொள்கையைப் பின்பற்றி வருகிறோம். இருப்பினும் அனைவருக்கும் தொடக்கக் கல்வித் திட்டம் (SSA), அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (RMSA), ஒருங்கிணைந்த கல்வி (சமக்ர சிக்க்ஷா) போன்ற ஒன்றிய அரசின் கல்வித் திட்டங்கள் பிற மாநிலங்களைவிட அப்படியே செயல்படுத்துவது இங்குதான். இதைப்போன்ற ஒரு திட்டமாகவே பி.எம்.ஶ்ரீ பள்ளிகள், தேசியக் கல்விக் கொள்கை 2020 இன்படி நாடெங்கும் 14,500 பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன. இவை அனைத்து வசதிகளும் கொண்ட மாதிரிப் பள்ளி வளாகமாக இருக்கும். இதன்படி மாவட்டத்திற்கு சுமார் 20 பள்ளிகள் எனக்கொண்டால் சுமார் 760 பள்ளிகளை மாநில அரசு ஏற்க மறுக்குமா? அரசுப்பள்ளிகளை நடத்தப் பொதுமக்கள், பெருநிறுவனங்களிடம் கையேந்தும் மாநில அரசு இந்த வாய்ப்பை நழுவவிடுமா? மாநில அரசின் 25 தகைசால் பள்ளிகள் இதை ஈடுகட்டும் என்று சொல்ல முடியுமா?
புதிய பாடநூல்களை உருவாக்குவதற்கு முன்னதாக வந்த கொரோனாவை அவர்கள் நல்வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டனர். பாடச்சுமைக் குறைப்பு என்கிற போர்வையில் தங்களது பாசிச, இந்துத்துவக் கருத்தியலுக்கு இணக்கமில்லாத பகுதிகளை நீக்கும் பணியைத் தொடங்கினார். தமிழக அரசின் பாடநூல்களிலும் கொரோனா காலப் பாடக்குறைப்புச் செய்யப்பட்டது. இரு கல்வியாண்டுகள் முடிந்ததும் (2020-2022) அவை திரும்பப் பெறப்பட்டன. ஆனால் பாசிஸ்ட்கள் வெறுப்பினால் நீக்கப்பட்டப் பகுதிகளை மீண்டும் சேர்க்க விரும்பவில்லை. அதை வரும் கல்வியாண்டிலும் புதிய பாடநூல் தயாரிக்கப்படும் வரை தொடர நினைக்கின்றனர்.
நீக்கத்திற்கு இவர்கள் சொல்லும் காரணம் விசித்திரமானது. கோவிட்-19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டும், தேசிய கல்விக் கொள்கை 2020 பாடச் சுமையைக் குறைப்பதையும் வலியுறுத்துவதன் அடிப்படையில் பாடநூல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டதாக கூறுகின்றனர்.
கடினப் பகுதிகள், ஒரே வகுப்பில் வேறு இடத்தில் அதே மாதிரியான பாடங்கள் இருப்பது, ஒரே உள்ளடக்கம் கொண்ட பாடங்கள் பல வகுப்புகளில் இடம்பெறுவது, ஆசிரியர்களின் தேவையின்றி குழந்தைகளின் சுய கற்றல் முறையில் இருப்பது, இன்றைய சூழலில் பொருந்தாத பாடங்களாக இருப்பது என்று நீக்கத்திற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. கடினப்பகுதிகள், மென்பகுதிகள் இரண்டும் நீக்கப்படுவது இதிலுள்ள முரண். மாணவர்கள் நலன் கருதி கடினப்பகுதிகளை நீக்குவதைப்போல குழந்தைகள் தாமே கற்கும் எளிய பகுதிகளையும் நீக்க வேண்டிய தேவையில்லையே! இது பாடச்சுமைக் குறைப்பும் அல்ல. பாசிச வெறுப்பரசியல், இந்துத்துவச் செயல்பாட்டிற்கு ஏற்ப பாடநூல்களை உருவாக்கும் முன்னேற்பாடு என்பதே உண்மையாகும்.
இவர்கள் நீக்கியிருக்கும் பாடங்களைக் கவனிக்கும்போது இந்த சாக்குப்போக்குகள் எள்ளளவும் உண்மையில்லை என்பது விளங்கும். அறிவியல், வரலாறு, சமூக அறிவியல் சார்ந்த பகுதிகளே பெருமளவு நீக்கப்பட்டுள்ளன. பாசிஸ்ட்களுக்கு இவை என்றும் ஆகாது என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஜனநாயகம், இந்தியாவின் பன்மைத்தன்மை, மதச்சார்பின்மை, சமத்துவம் போன்றவை பாடநூலில் எங்கும் இருந்துவிடக்கூடாது என்கிற பதற்றம் இந்த நீக்கத்தில் புலப்படுகிறது.
ஒரு தலைப்பு அல்லது கருத்து வேறிடத்தில் இருக்கிறது என்கிற காரணம் அபத்தமானது. அறிவியல் கருத்துகள் வகுப்புவாரியாக விரிவடையும் வண்ணம் பாடநூல்கள் எழுதப்படுகின்றன. தனிம வரிசை அட்டவணை (Periodic Classification of Elements) 11 ஆம் வகுப்பில் விரிவாக இருக்கிறது என்பதற்காக கீழ் வகுப்புகளில் அவை குறித்த அறிமுகம் இருக்கக்கூடாது என்பது அபத்தமான வாதம். அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள் (Atoms and Molecules), செயற்கை இழைகள் மற்றும் பிளாஸ்டிக் (Synthetic Fibres and Plastics), பொருட்கள்: உலோகங்கள் மற்றும் அலோகம் (Materials: Metals and Non-Metals), செல் - கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் (Cell — Structure and Functions), விண்மீன்கள் மற்றும் சூரிய குடும்பம் (Stars and the Solar System) போன்ற அறிமுகங்கள் கூடாது என்கின்றனர். இவைகளுக்குப் பதிலாக ராகு-கேது பஞ்சாங்கம் பாடத்தில் வைக்கப்படுமோ?
மரபு மற்றும் பரிணாமம் (Heredity and Evolution) என்ற பாடத்தில் ‘பரிணாமம்’ பாடப்பகுதியை முழுமையாக அந்த அத்தியாயத்தின் பெயரை மரபு (Heredity) மாற்றியுள்ளனர். அறிவியல் – அறவியல் சிந்தனைகள் மீது அவ்வளவு வெறுப்பு!
மனித வள மேம்பாடு என்பதற்கு இவர்களது ‘பாசிச அகராதி’யில் இடமில்லை. மனிதவள மேம்பாட்டுத்துறையை கல்வித்துறையாக மாற்றினர். மனித வள மேம்பாடு (Human Development), மனித வள மேலாண்மை (Human Resource Management) போன்ற பாடங்களுக்கு இடமில்லை. ஒற்றைக் கலாச்சாரவாதிகளுக்கு பிராந்திய கலாச்சாரங்களை உருவாக்குதல் (The Making of Regional Cultures), கலாச்சாரங்களின் மோதல் (Confrontation of Cultures) போன்ற பாடங்கள் கசப்பைத் தானே தரும்!
ஜனநாயகத்தின் மீதும் சமத்துவத்தின் மீது நம்பிக்கையற்ற இவர்களுக்கு ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை (Democracy and Diversity), பாலினம், மதம் மற்றும் சாதி (Gender, Religion and Caste), ஜனநாயகத்திற்கான சவால்கள் (Challenges to Democracy) (10 சமூக அறிவியல்) பாடங்களையும் நீக்கியுள்ளனர். உண்மையில் ஜனநாயகத்திற்கு சவாலாக உள்ளவர்கள் வலதுசாரிகளே. அறிவியலில் கூட பன்மைத் தன்மைக்கு இடமில்லை. 9 ஆம் வகுப்பு அறிவியல் பாடத்தில் வாழும் உயிரினங்களில் பன்முகத்தன்மை (Diversity in Living Organisms) என்ற பாடம் நீக்கம்.
அமெரிக்க – இஸ்ரேல் உறவுகளையும் சியோனிச அரசியலை விரும்பி ஏற்கும் இவர்கள் பனிப்போர் சகாப்தம் (The Cold War Era), உலக அரசியலில் அமெரிக்க மேலாதிக்கம் (US Hegemony in World Politics) போன்ற பாடங்களை இவ்வளவு காலம் விட்டு வைத்திருந்த்து அவர்களது அறியாமையைக் காட்டுகிறது! குஜராத் கலவரங்களுக்குக் காரணமானவர்கள், இந்திய அரசியலில் சமீபத்திய முன்னேற்றங்கள் - “குஜராத் கலவரங்கள்” (Recent Developments in Indian Politics - “Gujarat Riots”) என்ற பாடத்தை நீக்கிவிட்டனர். பக்தி இயக்கம் (Devotional Paths to the Divine) பற்றிப் பேசக்கூட இவர்களது பாசிச உணர்வு இடம் தரவில்லை.
பிற சமயங்கள் மீதும் சக மனிதர்கள் மீதும் வெறுப்பரசியலை உமிழும் இவர்கள் இஸ்லாம் தொடர்பான எந்தப் பாடங்களை விட்டுவைக்க விரும்பவில்லை. இதுவே இவர்கள் எழுதும் புதிய பாடநூல்கள் எவ்வாறு இருக்கும் என்கிற சித்திரத்தை நமக்குத் தருபவை. காலத்தின் தொடக்கத்திலிருந்து (From the Beginning of Time), மத்திய இஸ்லாமிய நிலங்கள் (The Central Islamic Lands), காலனித்துவ நகரங்கள்; நகரமயமாக்கல், திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை Colonial Cities; (Urbanisation, Planning and Architecture), அரசர்கள் மற்றும் காலவரிசை, முகலாய நீதிமன்றங்கள் (பதினாறாம்-பதினேழாம் நூற்றாண்டுகள்) (Kings and Chronicles - the Mughal Courts - Sixteen-Seventeenth Centuries), பிரிவினையப் புரிந்துகொள்ளுதல்; (அரசியல், நினைவுகள், அனுபவங்கள்) (Understanding Partition -Politics, Memories, Experiences), தில்லி சுல்தான்கள் (The Delhi Sultans), முகலாயப் பேரரசு (The Mughal Empire), ஆட்சியாளர்கள் மற்றும் கட்டிடங்கள் (Rulers and Buildings), நகரங்கள், வர்த்தகர்கள் மற்றும் கைவினைஞர்கள் (Towns, Traders and Craftspersons) போன்ற பாடங்களை பல வகுப்புகளில் வெட்டிவிட்டனர்.
இந்தியப் பொருளாதாரத்தை சரக்கு மற்றும் சேவை வரி, பணமதிப்பிழப்பு, பெருமுதலாளிகளுக்கு நாட்டின் வளத்தை தாரைவார்த்தல் மூலம் சீரழித்தவர்கள் பொருளாதாரம் குறித்து பேசினாலே அச்சமடைகிறார்கள். இந்தியா - மக்கள் மற்றும் பொருளாதார இடம்பெயர்வு: வகைகள், காரணங்கள் மற்றும் விளைவுகள் (India: People and Economy Migration:Types, Causes and Consequences), தொழில் புரட்சி (The Industrial Revolution) (11 வரலாறு), இயற்கை வளங்களின் நிலையான மேலாண்மை (Sustainable Management of Natural Resources), வேளாண்மை (Agriculture), தேசிய பொருளாதாரத்தில் விவசாயத்தின் பங்களிப்பு, வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி, விவசாயத்தில் உலகமயமாக்கலின் தாக்கம் (Contribution of agriculture to the national economy, employment and output, Impact of globalisation on agriculture) ஆகியவை நீக்கப்பட்டியலில் உண்டு.
இவர்களுடைய வெறுப்பரசியல் மாற்றுக் கருத்துடையவர்கள் அனைவர் மீதும் பாய்கிறது. அரசியல் கட்சிகள் (Political Parties) என்றால் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைக் கூறவேண்டுமே! பிரபலமான போராட்டங்கள் மற்றும் இயக்கங்கள் (Popular Struggles and Movements) பாடத்தில் இவர்களது ஒரே சுதந்திரப் போராட்ட வீரர் சாவர்க்கர், ஆர்.எஸ்.எஸ். பற்றி மட்டுமே குறிப்பிட இயலுமா! எனவே கட்!
நாடாளுமன்றத்தை சங் பரிவார் பஜனை மடமாக மாற்றியவர்கள், நமக்கு ஏன் நாடாளுமன்றம் தேவை? (Why Do We Need Parliament) (8 சமூக அறிவியல்) என்ற சிந்தனை இருக்க வாய்ப்பில்லை. சூழலைக் கெடுக்கும் கார்ப்பரேட்களுக்கு சேவகம் செய்ய, நமது சூழல் (Our Environment), இயற்கைத் தாவரங்கள் மற்றும் வனவிலங்குகள் (Natural Vegetation and Wildlife) (7 சமூக அறிவியல்), காற்று மற்றும் நீர் மாசுபாடு (Pollution of Air and Water) போன்ற பாடங்களும் நீக்கத்தில் அடங்கிவிடுகிறது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் தயாரிக்கப்பட்ட இப்பாடங்கள் இவர்களுக்குப் பொருத்தமில்லாதாக ஆகிவிட்டன. புதிய பாடநூல்களை எப்போதே வெளியிட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் செய்யவில்லை. தேசியக் கல்விக்கொள்கை உருவாக்கத்தில் கவனம் செலுத்திய அவர்கள் வரும் கல்வியாண்டில் (2024-2025) முழுமையான இந்துத்துவப் பாடநூல்களை வெளியிடவிருக்கிறார்கள். அவற்றில் இந்திய வரலாறு முழுமையாக திரிக்கப்படும். வேதங்கள், வேதமரபு, சமஸ்கிருதம், பிளாஸ்டிக் சர்ஜரி, புஷ்பக விமானம், ராமர் பாலம், மோடி அலைகள் எல்லாம் உயர்த்திப் பிடிக்கப்படும். ஜனநாயகம் என்ற பெயரில் ‘செங்கோல் வரலாறு’ எழுதப்படும். மநு நீதியும் அர்த்தசாஸ்திரமும் இந்திய அரசியல் சாசனத்திற்கு மாற்றாக வைக்கப்படும். இவற்றை நாம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம் என்பதே நம்முன் நிற்கும் சவாலாகும்.
நன்றி: புதிய விடியல் - மாதமிருமுறை இதழ் ஜூன் 15-30, 2023
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக