தனிமையின் உரையாடல்
நூல் விமர்சனம்: கொய்யாவின் வாசனை (மொ) பிரம்மராஜன்
மு.சிவகுருநாதன்
கொலம்பியா நாட்டைச் சேர்ந்த கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் (1927-2014) தமிழுக்கு நன்கு அறிமுகமானவர். எழுத்தாளராகவும் பத்தரிக்கையாளராகவும் இயங்கியவர். அவரது சில படைப்புகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. தமிழ்ச் சிறுபத்தரிக்கைச் சூழலில் வெகுவாக பேசப்பட்டவர். கல்குதிரை, புதுஎழுத்து போன்ற சிற்றிதழ்கள் இவருக்கு சிறப்பிதழ்களைக் கொண்டு வந்தன. இவரது மந்திர எதார்த்தவாதம் (Magical Realism) இங்கு பரந்த கவனிப்பைப் பெற்றது. பல தமிழ் எழுத்தாளர்கள் இதன் தாக்கத்திற்கு ஆட்பட்டனர். தமிழவன் போன்றோர் இதனடிப்படையில் தமிழ் நாவல்களை எழுதிப் பார்த்தனர். தமிழ்ச்சூழலில் 1982இல் நோபல் பரிசு பெற்ற ‘ஒரு நூற்றாண்டுத் தனிமை’ (One Hundred Years of Solitude) நாவலைத் தவிர்த்து பிற நாவல்களும் அவரது சுயசரிதையும் (Living to Tell the Tale – 2002) பேசப்படுவதில்லை என்பதை பின்னுரையில் பிரம்மராஜன் எடுத்துக்காட்டுகிறார். இருப்பினும் தமிழில் தொடர்ந்து வாசிக்கப்படும், பேசப்படும் நபராக மார்க்வெஸ் என்றும் இருப்பார் என்பதற்கு இந்நூலே சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இலைப்புயல் (Leaf Storm), தீவினைக் காலத்தில் (In Evil Hour), மூதந்தையின் அந்திமக்காலம் (Autumn of the Patriarch), கர்னலுக்கு யாரும் எழுதுவதில்லை (No One Writes to the Colonel), முன்கூறப்பட்ட சாவின் சரித்திரம் (Chronicle of a Death Foretold), பெரிய அம்மாவின் இறுதிச்சடங்கு - சிறுகதைகள் (Big Mama's Funeral) போன்றவை கேபோ என்று அன்புடன் அழைக்கப்பட்ட இவரது படைப்புகளில் சில. இவரது கடைசி நாவல் ‘Memories of My Melancholy Whores’ 2004இல் வெளியானது.
மார்க்வெஸின் நண்பரும் சக கொலம்பிய எழுத்தாளருமான பிலினியோ அபுலேயோ மென்டோசா உடனான உரையாடல்கள் ‘கொய்யாவின் வாசனை’யாக வெளியானது. இது ஒரே சமயத்திலோ ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியிலோ எடுக்கப்பட்டதல்ல. சுமார் 40 ஆண்டுகால உரையாடல் குறிப்புகளைக் குறிப்பெடுத்து 14 தலைப்புகளில் மார்க்வெஸ் ஒப்புதலுடன் இந்நூல் ஸ்பானிய மொழியில் (1982) வெளியானது. அடுத்த ஆண்டு (1983) ஆங்கில மொழிபெயர்ப்பு வந்தது.
கொய்யா மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் பகுதிளைப் பூர்வீகமாகக் கொண்ட தாவர வகையாகும். மார்க்வெஸ் எழுத்துகளில் கொய்யா வாசனை, வாழைப்பழ வாசனை, மஞ்சள் மலர்கள், மஞ்சள் ரோஜா போன்றவை தொடர்ந்து இடம்பெறும். இந்த உரையாடலிலும் கொய்யாவின் வாசனைக்கு இடமுண்டு. ‘தொழில்நுட்பம்’ என்கிற 3ஆம் அத்தியாயத்தில், இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல நாவலாசிரியர் கிரயாம் கிரீன் (1904-1991) வெப்பப் பிரதேசங்களின் புரிந்துகொள்வது தொடர்பான பிரச்சினைகளை கச்சிதமாகத் தீர்த்து வைத்ததாகச் சொல்கிறார். வேறுபட்ட, நிஜமான மற்றும் நுட்பமான விஷயங்களை ஒரு உள்ளார்ந்த கோர்வையான விதத்தில் இணைக்கும் முறைமையை வைத்து நீங்கள் வெப்பப் பிரதேசங்களின் ஒட்டுமொத்தப் புரியாப் புதிர்களை ஒரு அழுகிப்போன கொய்யாவின் வாசனைக்கு சுருக்கிவிடமுடியும், என்கிறார். எனவே நூலின் பெயர் ‘கொய்யாவின் வாசனை’யாகிவிட்டது.
126 பக்கங்களைக் கொண்ட சிறிய இந்நூலுக்கு 4 ஆண்டுகள் உழைப்பைத் தரவேண்டியிருந்ததாக மொழிபெயர்ப்பாளர் பிரம்மராஜன் குறிப்பிடுகிறார். இதில் மொழிபெயர்க்க எடுத்துக் கொள்ளும் நேரத்தைவிட இவ்வுரையாடலில் இடம்பெறும் ஆசிரியர்கள், செவ்வியல் நூல்கள் பற்றிய குறிப்புகளை எழுத அதிக நேரம் செலவிட வேண்டியிருந்ததை நினைவு கூர்கிறார். 14 அத்தியாயங்களும் 303 பக்கங்களும் கொண்ட இந்நூலை, மொழிபெயர்ப்பில் இடம்பெறும் சுமார் 100 பக்க விளக்கக் குறிப்புகள் குட்டிக் கலைக் களஞ்சியமாக்கியுள்ளது.
இந்த 14 அத்தியாயங்களில் 10 கேள்வி பதில் வடிவிலும் 4 கட்டுரை வடிவிலும் அமைந்தவை. மார்க்வெஸ் தன்னுடைய பூர்வீகம், குடும்பம், கல்வி, அவருடைய வாசிப்புகள், தாக்கங்கள், எழுத்துப்பணிகள், படைப்புகள் உருவான விதம், நீண்ட காலக் காத்திருப்புகள், தனிமை, அரசியல் நிலைப்பாடும் ஈடுபாடும், அரசியல் தலைவர்களுடனான நட்பு, பெண்கள், அவரது மனைவி மெர்ஸிடஸ், குழந்தைகள் என அனைத்தையும் இந்த உரையாடல்களில் பேசியிருக்கிறார்.
குழந்தைப் பருவத்தில் சுமார் எட்டு வயது வரை தாத்தா, ஆத்தா மற்றும் கரீபியக் கலாச்சாரப் பாதிப்பு அவரது நாவல்களில் பிரதிபளிக்கிறது. நீங்கள் சந்தித்த மிகவும் ஆர்வத்தைத் தூண்டும் நபர் யாரென்ற கேள்விக்கு என் மனைவி மெர்ஸிடஸ் என்று பதிலளிக்கிறார். மெய்யாக குழந்தைகள்தான் என் மிகப்பெரிய சாதனை என்றும் புத்தகங்கள் அல்ல என்பதையும் பதிவு செய்கிறார்.
பள்ளியில் சிக்கிக் கொண்ட கேப்ரியலுக்கு வாசிப்பதன் வழி இருளார்ந்த யாதார்த்தத்திலிருந்து தப்பிக்க வேண்டியிருந்தது. 17 வயதில் சக மாணவன் இரவல் கொடுத்த காஃப்காவின் ‘உருமாற்றம்’ (Metamorphosis) நாவலை வாசித்தார். “கிரிகோர் ஸாம்ஸா ஒரு மோசமான கனவிலிருந்து விழித்து எழுந்தபோது தான் பெரிய பூச்சியாக மாறியிருப்பதைக் கண்டார். புத்தகத்தை மூடிய கேப்ரியல் தன்னால் முடிந்தது இதுதான் என்றுணர்ந்த தருணத்தில் முதல் கதையை எழுதினார்.
‘குட்டி இளவரசன்’ எழுதிய பிரெஞ்ச் நாவலாசிரியர் அந்த்வான் தே சார்த் எக்சுபெரியின் யதார்த்தத்தை விநோதமாக அணுகும் விதம் பிடிக்கிறது என்கிறார். டால்ஸ்டாயினுடையது எதையும் நான் வைத்திருப்பதில்லை என்றாலும் இதுவரை எழுதப்பட்டதிலேயே ‘போரும் அமைதியும்’ சிறந்த நாவலென்கிறார். ஹெமிங்வே, கிரயாம் கிரீன் போன்றவர்கள் தனக்கு உத்தி ரீதியான தந்திரங்களைக் கற்றுக் கொடுத்ததை ஒப்புக்கொள்கிறார். எந்த ஒரு மொழியிலும் இருபதாம் நூற்றாண்டில் மிகச்சிறந்த கவிஞர்களுள் ஒருவராக நெரூதாவைக் கருதுகிறார். அரசியல் மற்றும் போர்க் கவிதைகளில் சிக்கிக் கொண்டாலும் கவிதைகள் முதல் தரமாய் இருந்தன. நெரூதா ஒருவகையான மைதாஸ் அரசன். அவர் தொட்டதெல்லாம் கவிதையாக மாறியது என வியப்பை வெளிப்படுத்துகிறார்.
கரீபியன் தனக்கு யதார்த்தத்தை மாறுபட்ட வழியில் பார்க்கக் கற்றுத் தந்திருக்கிறது. இதுவோர் தனித்துவமான உலகம். அதன் முதல் மந்திரப் படைப்பு ‘தி டயரி ஆஃப் கிறிஸ்டோஃபர் கொலம்பஸ்’. அந்தப் புத்தகம், விநோதத் தாவரங்கள், தொல்குடிகள் பற்றி பேசுகிறது. கரீபியனின் வரலாறு மந்திரங்கள் நிறைந்தது. கரீபியன் பிரதேசம் குறித்து பேசத்தொடங்கினால் என்னால் நிறுத்த இயலாது. மத்திய அமெரிக்காவும் கரீபியப் பிரதேசமும் இரண்டல்ல, ஒன்றுதான் என்று திடமாக நம்புகிறார்.
அவருடைய படைப்புகளில் தனிமை முதன்மையான பேசுபொருளாக இருக்கிறது. இலைப்புயல், தீவினைக் காலத்தில், கர்னலுக்கு யாரும் எழுதுவதில்லை, மூதந்தையின் அந்திமக்காலம், ஒரு நூறு ஆண்டுகளின் தனிமை போன்ற நாவல்கள் தனிமையைப் பேசுபவை. இவை ஒருவகையில் ‘தனிமைகளின் உரையாடலாக’ அமைகின்றன. படைப்புகளில் நேர்கோட்டுத்தன்மையிலான கதை சொல்லல் சலிப்புடன் இருப்பதையும் சுழல் வடிவமான, பரிசோதனை முயற்சிகள் ஆர்வமூட்டக்கூடியதாக உள்ளதை வெளிப்படுத்துகிறார். இவரது படைப்புகள் கொலம்பிய வாழ்க்கையின் யதார்த்தத்தைப் பிரதிபளிப்பதாக அமைகின்றன. அவரது படைப்புகளில் பெண்களுக்கு தனியிடம் உண்டு. பெண்கள், மஞ்சள், தனிமை போன்றவற்றை விரும்பும் மார்க்வெஸ் தங்கத்தை நிராகரித்து அதை மஞ்சள் நிறத்தை மலத்துடன் ஒப்பிடவும் செய்கிறார்.
ஃபிடல் கேஸ்ட்ரோவுடனான மிக நெருக்கமான அன்பு கலந்த நட்புடன் அவர் தீராப் பெருவேட்கை கொண்ட வாசகர் என்பதையும் கவனமிக்க, விடாமுயற்சியுள்ள வாசகராக இருப்பதால் புத்தகத்தில் தென்படும் முரண்களையும் தகவல் பிழைகளையும் எதிர்பாராத இடங்களில் கண்டுபிடிக்கும் ஆற்றலையும் சொல்லிச் செல்கிறார். அவர்களிருவரும் எல்லா விஷயங்களில் ஒத்துப் போனதில்லை என்பதையும் சொல்லியிருக்கிறார். பிறிதோரிடத்தில் நாட்டில் வறிய மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் அரசே தேவை என்றும் சொல்கிறார்.
‘இலைப்புயல்’ என்ற முதல் நாவலுக்கு 5 ஆண்டுகளும் ‘ஒரு நூறு ஆண்டுகளின் தனிமை’க்கு 15 ஆண்டுகளும் காத்திருக்க வேண்டிவந்தது. ‘மூதந்தையின் அந்திமக்காலம்’ ‘சர்வாதிகாரி’ நாவல் வகைமையைச் சேர்ந்தது. இந்நாவலை அவர் பார்வையில் முக்கியத்துவம் வாய்ந்த இலக்கியச் சாதனை என்று மதிப்பிடுகிறார். 17 ஆண்டுகள் இந்நாவலை பலமுறை மாற்றி எழுதியிருக்கிறார். தமிழ்ச்சூழலில் ‘ஒரு நூறு ஆண்டுகளின் தனிமை’ சிறப்பான ஒன்றாகக் கொண்டாடப்பட்டபோதிலும் அவரது கோணம் வேறுவிதமாக உள்ளதை அறியலாம். சல்மான் ருஷ்டியும் இந்நாவலை கடந்த 50 ஆண்டுகளில் உலக மொழிகளில் வெளியான மகத்தான படைப்பு எனப் புகழ்கிறார்.
புத்தகத்தின் பேசுபொருள் அதன் உத்தி, மொழி ஆகியவற்றைத் தீர்மானிக்கிறது. ‘ஒரு நூறு ஆண்டுகளின் தனிமை’ நாவலில் புராணிக, மந்திர யதார்த்தத்தை அறிமுகம் செய்ய ஒரு செழிப்பான மொழி தேவைப்பட்டது. அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு அடுத்தப் படைப்பை எழுத இன்னொரு மொழி தேவையாக இருந்தது என்கிறார்.
இதை வாசிக்கும் புதிய வாசகர்களுக்கு கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் பற்றிய முழுச்சித்திரம் கிடைக்கக்கூடும். அவரது பிற படைப்புகளை வாசிக்கத் தூண்டுகோலாகவும் அமையும். இந்த மொழியாக்கத்தைச் செய்த பிரம்மராஜனுக்கும் வெளியிட்ட ‘மணல்வீடு’ மு.ஹரிகிருஷ்ணனுக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவிக்க தமிழுலகம் கடமைப்பட்டுள்ளது.
நூல் விவரங்கள்:
கொய்யாவின் வாசனை: கார்சியா மார்க்வெஸ் - பிலினியோ அபுலேயோ மென்டோசா உரையாடல்
(மொழிபெயர்ப்பு) - பிரம்மராஜன்
விலை: ₹ 350 பக்கங்கள்: 303
முதல் பதிப்பு: ஜனவரி 2023
வெளியீடு:
மணல்வீடு, ஏர்வாடி,குட்டப்பட்டி - அஞ்சல், 636453,
மேட்டூர் - வட்டம், சேலம் - மாவட்டம்.
பேசி: 9894605371
மின்னஞ்சல்: manalveedu@gmail.com
இணையம்: www.manalveedu.org
நன்றி: பேசும் புதியசக்தி – மாத இதழ், ஜூன்2023
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக