வரலாற்றினூடாகத் தொன்மப் பயணம்
மு.சிவகுருநாதன்
இது ஒரு வரலாற்று நூல் அல்ல. கதவு என்கிற புள்ளியை மையமாகக் கொண்டு ஆதிமனிதனில் தொடங்கி வரலாறு மற்றும் தொன்மங்களின் ஊடாக பயணிக்கும் நூல். நூலாசிரியர் ஒரு பயண ஆர்வலர் என்றும் பரந்த வாசிப்பனுபவம் கொண்டவர் என்று பதிப்புரை சொல்வதற்கேற்ப வரலாற்றினூடாகப் பயணிப்பதற்கு வாசிப்பு பேருதவியாக இருப்பதை இந்நூல் உணர்த்தி நிற்கிறது. இருப்பினும் வழமையான வரலாற்று அணுகுமுறையின் போதாமையும் வெளிப்படுகிறது. கதவுகளைப் பொருண்மையாக எடுத்துக்கொண்டு அதன் முன்னும் பின்னுமாக வரலாறு, தொன்மம் இரண்டும் இணைந்த சொல்லாடல்கள் மூலம் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. சூழலியல், கலை விமர்சனங்களும் ஆங்காங்கே விரவியுள்ளன. வரலாற்றுப் பார்வையையும் சார்பையும் உள்ளே நுழைக்காமலிருந்தால் ஒரு சிறந்த நூல் உருவாகியிருக்கும் என்பதில் அய்யமில்லை.
சில வரலாற்றுப் பார்வைகள் வெறுப்பை விதைப்பவை. அவற்றை விமர்சன நோக்கின்றி அணுகுவது இன்றைய சமூக, அரசியல் சூழலில் வெறுப்பரசியலை மேலும் கூர்மையாக்க உதவும். இத்தகைய பாணி எழுத்துகள் (எ.கா.: வந்தார்கள் வென்றார்கள் – மதன்) வரலாற்றெழுதியலை ஒரு சார்பாக திரிப்பதற்கும் சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கவும் உதவி செய்கின்றன.
அக்காலப் போர் என்றாலே கொலை, கொள்ளையிடல் என்றுதான் பொருள் கொள்ள முடியும். இதில் நல்ல போர், கெட்ட போர் இருக்க முடியுமா? போரைத் தவிர்த்தலை அசோகர் பவுத்தம் மூலமே கண்டடைந்தார். இஸ்லாமிய மன்னர்களின் போர்களை வெறி, கொள்ளை என்றும் இந்து மன்னர்களின் போர்களை பேரரசு விரிவாக்கம் என்றும் சொல்வது வரலாற்றிற்கு ஊறு விளைவிக்கும். அப்படையெடுப்புகளின் நோக்கம், அதற்கு முன்பு இங்கிருந்த சூழல், நாட்டில் செல்வ வளங்கள் அனைத்தும் கோயில்களின் குவிக்கப்பட்டிருந்த தன்மை போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். “ஆட்சியாளர் செல்வத்தைக் குவித்து வைத்து கொள்வது ஒரு பழங்கால மரபு. எவ்வாறாயினும் செல்வம் இப்படிப் புழக்கத்திற்குப் பயன்படாமல் கிடந்ததால் சிலசமயம் அந்நியத் தாக்குதலைக் கண் சிமிட்டி அழைத்தது”, என்கிறார் வரலாற்றாசிரியர் சதிஷ் சந்திரா (மத்திய கால இந்திய வரலாறு) கூறுவதையும் அவதானிக்கலாம்.
“கொடூரப் புத்தியும், வஞ்சினமும் கொண்ட மாலிக்காபூர்”, (பக்.102) “மாலிக்காபூர் அடுத்தடுத்து போர்கள் நடத்தி வெற்றிகளைக் குவித்தான். இவன் கால் பட்ட இடமெல்லாம் குருதி வெள்ளம் பாய்ந்தது. இந்துக்களை ஒட்டும் மொத்தமாக அழிக்க வேண்டும் என்ற வெறி அவனுள்ளே தாண்டவமாடியது”, (பக்.107)
“தன்னுடைய ஆட்சிக் காலத்தில் தமது எல்லையை மேலும் விரிவுபடுத்தி வடக்கே கங்கைக் கரை வரையும், தெற்கே இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஶ்ரீவிஜயம் வரை சென்று வெற்றி கொண்டதன் காரணமாக, ‘கங்கை கொண்ட சோழன்’ என்ற பட்டப் பெயர் பெற்றான்”, (பக். 146)
மேற்கண்ட இரு சொல்லாடல்களின் இடைவெளியை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். பிற்காலச் சோழர்களின் அயல்நாட்டு மற்றும் அண்டை நாட்டுப் படையெடுப்புகள் பற்றி பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. எனவே எந்தப் போரும் எதன் பொருட்டும் கொண்டாடப்படக் கூடியதல்ல.
முதலாம் ராஜராஜன் மதுரையை அழித்தான்; கொல்லத்தை வெற்றிகொண்டான். தன்னுடைய தூதன் அவமதிக்கப்பட்டதற்காக 18 காடுகளைக் கடந்து சென்று உதகை அழித்ததை ஒட்டக்கூத்தர் எழுதுகிறார்.
சோழ இளவரசன் முதலாம் ராஜேந்திரன் வேங்கி, கங்கை மண்டலங்களுக்கு மகா தண்ட நாயகனாக அமர்த்தபட்டு ‘பஞ்சவன் மாராயன்’ என்கிற பட்டமளிக்கப்பட்டது. கொங்கணம், துளுவம் ஆகிய நாடுகளை வென்றதோடு சேரரை அவர்களது மலை நாட்டிலிருந்து விரட்டியடித்தான்.
ஈழப்போரில் ஈழமண்டலம் முழுவதும் இவர்களது ஆளுகைக்கு வந்தது. ஈழத்தின் தலைநகராக இருந்த அனுராதபுரம் முற்றிலும் அழித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. பொலனருவ சோழர்களின் புதிய தலை நகரானது. இதற்கு ‘ஜனநாதமங்கலம்’ எனப் பெயரிட்டான்.
போரில் புத்த மத விகாரைகள் அழிக்கப்பட்டன. செல்வங்கள் கொள்ளையிடப்பட்டன. பொலனருவ -வில் சிவன் கோயில் கட்டப்பட்டது. சிங்களத்துக் கிராமங்கள் தஞ்சைப் பெரியகோயிலுக்கு தானமாக வழங்கப்பட்டன.
முதலாம் ராஜேந்திரன் ஈழமன்னனை வெற்றிகண்டு அவனது நாடு, முடி, பட்டத்தரசி, மகள், செல்வம், தேர்கள், இந்திரனின் தூய மாலை, அவனிடத்தில் விட்டுச் செல்லப்பட்ட பாண்டியனின் முடி ஆகியவற்றைக் கைப்பற்றினான் எனக் கரந்தைச் செப்பேடுகள் குறிப்பிடுகிறது. இதைப்பற்றி மகாவம்சம் கூறுவதாவதை கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி சோழர்கள் நூலில் எடுத்துக் காட்டுகிறார்.
“அரசன் ஐந்தாம் மகிந்தனின் 36–ம் ஆட்சி ஆண்டில், மகேசியையும் அவனுக்கு மரபு வழியாகக் கிடைத்த அரிய அணிகலன்களையும், பதக்கங்களையும், அரசர்க்குரிய ஆபரணங்கள், விலை மிக்க வைர அணிகலன்களையும் கடவுளால் வழங்கப்பட்டதும் உடைக்க முடியாதுமான வாளையும், கிழிந்த துணி ஒன்றின் சிதைந்த பகுதியையும் சோழர்கள் கைப்பற்றினர். ஆனால் அரசன் அஞ்சி காட்டுக்குள் ஓடிவிட்டான். உடன்பாடு செய்துகொள்ளுவதாகச்ச் சொல்லி அவனை அவர்கள் உயிருடன் பிடித்துக்கொண்டார்கள். சோழப்படையினர் தாங்கள் பிடித்த அரசனையும் தங்கள் கைக்குச் சிக்கிய கருவூலங்களையும் உடனே சோழ மன்னனுக்கு அனுப்பி வைத்தனர். பாதுகாப்பாக பல இடங்களில் இலங்கை முழுவதும் வைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்ன அறைகளை உடைத்து அவற்றில் இருந்த பொன்னாலான உருவங்களை அவர்கள் எடுத்துச் சென்றனர். அவர்கள் கண் பட்ட இடங்களில் எல்லாம், பவுத்த சமயத்து மடங்களை அழித்து, இரத்தத்தை உறிஞ்சும் அரக்கர்கள் போல, இலங்கையின் செல்வங்கள் அனைத்தையும் கொள்ளையடித்தனர்.”
அன்றைய அரசுகள் மதம் சார்ந்த அரசாகவே இருந்தன. எனவே படையெடுப்புகளில் பிற சமயங்களைப் பின்பற்றியோர் எதிரியாகக் கட்டமைக்கப்பட்டனர். சைவ, வைணவ மோதல்கள், இவையிரண்டும் பிற அவைதீக சமயங்களான சமணம், பவுத்தம், ஆசீவகம் போன்றவற்றை அழித்தொழித்த வரலாறுகள் அனைத்தும் அரச ஆதரவினால் நடந்தவை.
“இவர்களது (சோழர்கள்) சிற்பங்கள் அனைத்தும் சமயம் சார்ந்த கருத்துக்களை மட்டும் பரப்புவதாக இருக்கவில்லை. மாறாக, ஒரு தனிக் கருப்பொருளைக் கொண்டிருந்தன. குறிப்பாக இவர்கள் பெற்ற வெற்றியை, தெய்வங்கள் அரக்கர்களை அழித்ததோடு ஒப்பிட்டு அவ்வெற்றியை பறைசாற்றும் விதமாகவே அவை அமைந்திருந்தன.
உதாரணமாக, தஞ்சை பெரிய கோவிலில் கருவறைச் சுவரில் உள்ள முப்புரம் எரித்த சிவனது (திரிபுரந்தக மூர்த்தி) சிலை பல கோணத்தில் செதுக்கப்பட்டுள்ளது. இவை ராஜராஜன், பகை வென்று அரசினை விரிவாக்கம் செய்ததோடு பல சிறப்புப் பெயர்களைக் கொண்டதையும், திரிபுரங்களை எரித்த சிவனோடு தன்னை ஒப்பிட்டு, தான் பெற்ற வெற்றியைக் குறிப்பிடுவதாக அமைந்துள்ளன”, (பக்.144&145)
இவை சமயம் சார்ந்த கருத்துகள் இல்லையா? இந்தப் புராணங்கள் யாரால் சொல்லப்படுகின்றன? முதலாம் ராஜராஜன் உள்ளிட்ட சோழ மன்னர்கள் தங்களை கடவுளாகவே கற்பனை செய்து கொண்டனர். எனவே தங்களது பெயரிலே கோயில்களை கட்டுவித்தனர்.
“தமிழகத்தின் இருண்ட காலமாக இருந்த களப்பிரர்கள் காலத்தில் தமிழும், தமிழரும் அதிகம் கொல்லப் பட்டனர். அவர்களிடமிருந்து தென்னகத்தைப் பல்லவர்கள் மீட்டு, தாம் வீரத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பதை நிருபித்தனர்.” (135)
களப்பிரர் காலம் இருண்ட காலம் என்றும் அவர்கள் தமிழுக்கு எதிரானவர்கள் என்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டும் அவதூறுகளும் தொடர்ந்து சிலரால் முன்வைக்கப்படுகிறது. இங்கு தமிழர்களைக் கொன்றார்கள் என்ற புதுக்கதையும் சொல்லப்படுகிறது. களப்பிரர் காலத்தில் இயற்றப்பட்ட தமிழ் நூல்களையும் தமிழ் மொழி அடைந்த வளர்ச்சி நிலைகளைப் பட்டியலிட இங்கு இடமில்லை. தமிழ் யாருடைய காலத்தில் இருக்குமிடம் தெரியாமல் போனது என்பது வெளிப்படை. சமணர்கள் கழுவேற்றம், பவுத்தர்களை கொலை செய்தல் போல் இது எப்போது எங்கு நடந்தது என்று விளக்கியிருக்கலாம். பல்லவர்கள் தமிழரல்லர் என்பதே வரலாற்றில் ஏற்கப்பட்ட உண்மை. இதில் நம்மவர் X அந்நியர் என்று வரலாறு எழுதுவதும் வெறுப்பரசியலை விதைப்பதும் கண்டிக்கப்பட வேண்டியதாகும்.
“தொடக்கத்தில் சமண சமயத்தைத் தழுவியிருந்த பல்லவர்கள் பின்னர், சைவ சமயத்தின் பால் கவரப்பட்டு சைவ சமயத்தில் சேர்ந்தனர்”, (பக்.133)
பல்லவ அரசர்கள் பலர் வைணவர்களாகவும் இருந்தன. சமண, பவுத்த சமயங்கள் பரந்த அளவில் வளர்ச்சியடைய இவர்கள் பங்களித்தனர். வணிக உறவுகளுக்காக நாகப்பட்டினத்தில் சூடாமணி விகாரை அமைத்தது போன்ற பிற்காலச் சோழர்களின் பணிகளைவிட இது மேம்பட்டதாகும்.
“கல்வியை வளர்ப்பதற்காக பள்ளிகள் பலவற்றை நிறுவினர். இப்பள்ளிகள் ‘கடிகைகள்’ என்ற பெயரால் அழைக்கப்பட்டன. தமிழ்மொழியும் வடமொழியும், கலந்தே போதிக்கப்பட்டன. கல்விமுறையும் சமயம் சார்ந்ததாகவே இருந்தது”, (பக்.133) வைதீகக் கல்விமுறை வருண (சாதி) அடிப்படையிலானது. பவுத்தம், சமணம் போன்ற அவைதீக சமயங்களே கல்வியைப் பொதுமைப் படுத்தின. இங்கு ஒரு மதம் சார்ந்த கல்வி அளிக்கப்படவில்லை. அனைத்து சமயத் தத்துவங்களும் போதிக்கப்பட்டன. தமிழ், சமஸ்கிருதம் மட்டுமல்லாது பாலி, பிராகிருதம் போன்ற இதர வடமொழிகளும் கற்றலில் இடம்பெற்றன.
“இப்போது நாம் பயன்படுத்தும் நாட்காட்டியினை வடிவமைத்ததும் சீஸர்தான்.” (பக்.23) சீசர் வடிவமைத்த காலண்டர் திருத்தம் செய்யப்பட்டு, பதிமூன்றாம் கிரிகோரியால கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் தொடங்கி வைக்கப்பட்டதே இப்போதைய கிரிகோரியன் நாள்காட்டியாகும்.
“இப்படி நுட்ப அறிவுடன், கலாச்சாரம் மிளிர, கலைகளை வளரச் செய்து, கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கும் கோயில்கள் பல கட்டி, தமிழனின் புகழைத் தரணியறியச் செய்தவர்கள் சோழர்கள்தாம் என்றால் அது மிகையில்லை.” (பக்.149)
தமிழர்களின் பெருமைகளுக்கு ஒரு குழுவை மட்டும் உரிமையாக்கி வெறும் சோழப்பெருமை பேசுவது வரலாறாகாது. தமிழ், தமிழர்களின் பெருமையும் சிறப்பும் சங்க கால மூவேந்தர்கள், களப்பிரர்கள், முத்தரையர்கள், பல்லவர்கள், பிற்காலச் சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள் மற்றும் குறுநில அரசுகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் போன்ற பலரது ஒட்டுமொத்த உழைப்பால் விளைந்தது.
“சோழர்கள் சிற்பங்களுக்கு அளித்த முக்கியத்துவத்தை ஏனோ ஓவியங்களுக்கு வழங்கவில்லை போலும்”. (பக்.150) தஞ்சைப் பெரிய கோயிலில் உள்புறத்தில் சிதைக்கப்பட்ட சோழர்கால ஓவியங்களின் மீள் கண்டுபிடிப்பு இக்கலை நுணுக்கச் சிறப்புகளை நமக்கு வெளிப்படுத்துகிறது.
இந்நூலைப் படிக்கும்போது “கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் தொன்மம்”, என்பதுடன் “கொஞ்சம் வரலாறு, நிறைய தொன்மம் , நிறைய வன்மம்”, என்று இணைத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. தொன்மத்தை எழுதுவதாவது பரவாயில்லை. வரலாற்றின் தவறான அணுகுமுறைகள் வாயிலாக வெறுப்பரசியலை விதைப்பது மோசமானதாகும்.
நூல் விவரங்கள்:
கதவுகளில் கலந்த கலாச்சாரம்
(கொஞ்சம் வரலாறு கொஞ்சம் தொன்மம்)
கே.பத்மலெக்ஷ்மி
முதல் பதிப்பு: டிசம்பர் 2021
பக்கங்கள்: 176 விலை: ரூ.180
வெளியீடு எண்: 05
பேசும் புதிய சக்தி,
29 H, ANR, காம்ப்ளக்ஸ்,
தெற்கு வீதி,
திருவாரூர் – 610001.
அலைபேசி: 9489773671
மின்னஞ்சல்: pudiyasakthitvr@gmail.com