தென்னாப்பிரிக்காவில் காந்தியின் சத்தியாக்கிரகம்
(மகாத்மாவின் கதை தொடரின் எட்டாவது அத்தியாயம்.)
மு.சிவகுருநாதன்
தென்னாப்பிரிக்காவில் குடியேறிய டச்சுக் குடியேறிகளின் வம்சாவளியினர் போயர்கள் (ஆப்பிரிக்க நேர்கள்) என்றழைக்கப்பட்டனர். இவர்களது மொழி ஆப்பிரிக்கான்ஸ் ஆகும். 1886இல் டிரான்ஸ்வாலில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு சுரங்கத்தொழில் சார்ந்தோர் ஜோகனஸ்பெர்க் மற்றும் அதன் அருகே குடியேறினர். இவர்களை போயர்கள் யுட்லேண்டர்ஸ் (Utilanders—அயலவர்கள்) என்று அழைத்தனர். இவர்களுக்கிடையே உரிமைப்போர் ஏற்பட்டது. இந்தப் போயர் போர்கள் மூன்றாண்டுகள் (1899-1902) நீடித்தது. ஆங்கிலப்படைகளால் போயர்கள் தோற்கடிக்கப்பட்டு பிரிட்டோரியா கைப்பற்றப்பட்டது. போயர்கள் கொரில்லா போர்முறையை மேற்கொண்டதால் ஆங்கிலேயர்கள் வேளாண் பயிர்களை அழித்தனர்; குழந்தைகள் பெண்களை சிறையிலிட்டனர். பல்லாயிரக்கணக்கான போயர்கள் மாண்டனர். 1906இல் நேட்டாலில் ஜூலு கலகம் நடந்தது. இவைகளில் ஏற்பட்ட பாதிப்புகள் மாற்றுப் போராட்ட வழிமுறைகளைப் பற்றி காந்தியை யோசிக்கத் தூண்டின.
தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கென்று அச்சகம் ஒன்றைத் தொடங்கியவர் மதன்ஜித் வியவஹாரிக். அவர் காந்தி மற்றும் மன்சுக்லால் நாசர் ஆகியோரை கலந்தாலோசித்து டர்பனிலிருந்து இந்தியன் ஒபீனியன் (Indian Opinion) என்ற வார இதழை 1903 ஜூன் 4இல் தொடங்கினர். 1904 அக்டோபரில் இதழின் முழுப்பொறுப்பும் காந்தியிடம் வந்தது. 1961 வரை இதழ் தொடர்ந்து வெளியானது. தொடக்கத்தில் இதழ் பொருள் இழப்பைச் சந்தித்தது. இதற்காக 1904இல் உருவாக்கப்பட்டதே ஃபீனிக்ஸ் (Phoenix) பண்ணையாகும். இதன் கூட்டுவாழ்வு வழியே இதழின் செலவு ஈடுசெய்யப்பட்டது. ஆங்கிலம், தமிழ், இந்தி, குஜராத்தி ஆகிய மொழிகளில் வெளியான இதழ் பல்வேறு காரணங்களால் தமிழ், இந்திப் பதிப்புகள் மட்டும் நின்றுபோனது.
1893இல் தென்னாப்பிரிக்கா சென்ற காந்தி 1914 வரை 21 ஆண்டுகள் அங்கி வாழ்ந்தார். காந்தியின் இரண்டாவது மகன் மணிலால் காந்தியுடன் இந்தியா திரும்பினாலும் மீண்டும் தென்னாப்பிரிக்கா சென்றார். 1920லிருந்து அவர் மரணடையும் வரை (1892-1956) அதன் ஆசிரியர் பொறுப்பில் இருந்தார். அவரது இரு பெண் குழந்தைகள் சீதா காந்தி (1928), எலா காந்தி (1940) குடும்பத்தினரும் அடுத்தடுத்த தலைமுறையினரும் இன்றும் தென்னாப்பிரிக்கர்களாக வாழ்ந்து காந்திக்கும் அவரது கொள்கைகளுக்கும் பெருமை சேர்க்கின்றனர். சமூகச் செயல்பாட்டாளரான எலா காந்தி முன்னாள் தென்னாப்பிரிக்க நாடாளுமன்ற உறுப்பினர். 1987இல் மகன் அருண் காந்தி (1934-2023) அமெரிக்காவில் குடியேறி மிசிசிபி பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டார். அமெரிக்காவில் அகிம்சையைப் பரப்பினார்.
1906இல் ஜோகனஸ்பெர்க்கில் சத்தியாக்கிரகம் தொடங்கியது. சத்தியாகிரகத்திற்கு Passive Resistance என்ற பெயரைச் சூட்டியிருந்தனர். இந்த ஆங்கிலப் பெயர் காந்திக்கு மனத்தடையை ஏற்படுத்தியிருந்தது. இந்தியன் ஒபீனியன் இதழில் சரியான பெயரை அடையாளம் காண போட்டி அறிவிக்கப்பட்டது. காந்தியின் உறவினர் மகன் மகன்லால் காந்தி (1883-1928) ‘சதாகிரகம்’ என்ற பெயரை அளித்து பரிசு பெற்றார். இவர் காந்தியின் கொள்கைகளை உடனிருந்து பின்தொடர்ந்தவர். பின்னாளில் இவரை சபர்மதி ஆசிரமத்தின் இதயமும் ஆன்மாவும் என காந்தி வருணிக்கிறார். இப்பெயரை காந்தி சத்தியாக்கிரகம் என்று மாற்றியமைத்தார். இதில் வன்முறைக்கு இடமில்லை. இந்தியர்கள் எவ்விடத்திலும் வன்முறையைக் கைக்கொள்ளவில்லை.
மூன்று பவுன் தலைவரியை ரத்து செய்தல், இந்து, முஸ்லீம் மத முறைப்படி நடத்தப்பட்டத் திருமணங்களை அங்கீகரித்தல், கல்வி பெற்ற இந்தியரை அனுமதித்தல், ஆரஞ்சு ப்ரீ ஸ்டேட் பற்றிய வாக்குறுதியில் மாற்றம், இந்தியர்களைப் பாதிக்கும் சட்டங்களை அவர்களின் வாழ்வுரிமையைப் பாதிக்காத வகையில் அமலாக்குதல் போன்றவை சத்தியாக்கிரகத்தின் முதன்மைக் கோரிக்கைகளாக இருந்தன. வன்முறையைத் தவிர்த்த இந்த அறவழிப் போராட்டங்கள் உலகிற்கே முன்னோடியாக அமைந்தன.
கருப்புச் சட்டத்தை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. டிரான்வால் பிரிட்டனின் நேரடி ஆட்சிப்பகுதி என்பதால் இங்கிலாந்திற்கு தூதுக்குழு அனுப்ப முடிவானது. காந்தியும் எச்.ஓ.அலி என்பாரும் பிரதிநிதிகளாகத் தேர்வாயினர். 1906 அக்டோபர் 10 இல் தூதுக்குழு இங்கிலாந்து சென்று ஆறு வாரம் தங்கியிருந்து தலைவர்களை சந்தித்து முறையீடுகளை வழங்கியது.
1909இல் கில்டோனன் காஸில் என்ற கப்பலில் இங்கிலாந்திலிருந்து தென்னாப்பிரிக்கா திரும்பும் வழியில் ‘இந்திய சுயராஜ்யம்’ எனும் நூலை எழுதினார். 10 நாள்களில் காந்தியின் கையெழுத்தில் 271 பக்கத்தில் எழுதப்பட்ட இந்நூலின் 50 பக்கங்களை இடது கையினால் எழுதினார். இந்நூல் இந்தியன் ஒப்பீனியன் குஜராத்தி பதிப்பில் தொடராக வந்தது. இது நூலாக வெளியானபோது பம்பாயில் அதன் பிரதிகளைப் பறிமுதல் செய்தனர். இதற்கு எதிர்வினையாக இந்நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
தென்னாப்பிரிக்காவில் சத்தியாக்கிரகம் குழந்தையாக உள்ளது. வெறுப்பை விலக்கி அன்புநெறியையும் இந்நூல் வன்முறைக்குப் பதிலாக தன்னலத் தியாகத்தையும் மிருக சக்திக்கு எதிராக ஆன்ம சக்தியை அளிப்பதாகவும் காந்தி குறிப்பிடுகிறார். வன்முறையின் மீது நம்பிக்கை கொண்ட இந்தியர்களுக்கும் இதே நிலையிருக்கும் சில தென்னாப்பிரிக்கர்களுக்குமாக இந்நூல் எழுதப்பட்டது.
டிரான்ஸ்வாலின் தலைமையகமான பிரிட்டோரியாவில் இந்தியர்கள் திரளாகப் பங்கேற்ற பொதுக்கூட்டம் நடந்தது. 1907 ஜூலை 1இல் அனுமதிச்சீட்டு வழங்கும் அலுவலகங்கள் திறக்கப்பட்டன. அதன் வழியில் மறியல் செய்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியும் நடந்தது. சிலர் சுயநலத்தால் இரவுநேரங்களில் சீட்டு வாங்கினர். இருப்பினும் சத்தியாகிரகம் தொடர்ந்தது. 500 பேருக்குமேல் யாரும் அனுமதிச்சீட்டு பெறவில்லை என்பதால் யாரையாவது கைது செய்ய முடிவு செய்து வடஇந்தியர் ராமசுந்தரை முதல் கைதியாக்கினர். ஒரே நாளில் அவர் பிரபலமானார். ஒரு மாத சிறைத்தண்டனை பெற்ற அவருக்கு மரியாதையும் புகழ்மாலைகளும் கிடைத்தன. இருப்பினும் சிறைவாசம் அவரை வாட்டியதால் இயக்கத்தைவிட்டு அகன்றார்.
தொடர்ந்து சத்தியாக்கிரகத்தில் பலர் கைதாயினர். அவர்களின் தம்பி நாயுடு முதன்மையானவராக காந்தி குறிப்பிடுவார். அவர் தமிழகத்திலிருந்து மொரிசீயஸ் தீவுக்குக் குடிபெயர்ந்த பெற்றோரின் மகனாவார். பள்ளிப்படிப்பைப் பெறாத சாதாரண வியாபாரியாக இருந்தாலும் தமிழ், ஆங்கிலம் மற்றும் நீக்ரோக்கள் உள்ளூர் வட்டார மொழிகளில் பேசும் திறனுடையவராக இருந்தார். அவரது அவசரப்புத்தியும் முன்கோபமும் இல்லையென்றால் கச்சாலியாவிற்குப் பிறகு டிரான்ஸ்வால் இந்தியர்களிடையே சிறந்த தலைவராக உருவாகியிருக்கக்கூடும் என்ற வருத்தத்தையும் அவர் தென்னாப்பிரிக்க சத்தியாகிரகத்தின் முன்னணி வீரர் என்பதையும் காந்தி பதிவு செய்கிறார்.
பதிவு செய்யவிரும்பாத சத்தியாக்கிரகிகள் டிரான்ஸ்வாலை விட்டு வெளியேற காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. இக்காலக்கெடு 1908 ஜனவரி 10இல் நிறைவடைந்தது. அன்று காந்தி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் நேர்நின்று தண்டனையைப் பெற பணிக்கப்பட்டனர். மூன்று மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. பெருந்தொகை அபராதமும் கட்டவில்லையென்றால் மேலும் மூன்று மாத கால தண்டனையும் அறிவிக்கப்பட்டது. காந்தி உள்ளிட்டோரை ஜோகனஸ்பெர்க் சிறையில் அடைத்தனர். ராமசுந்தருக்கு அளித்த சலுகைகள் போன்று எதுவும் இவர்களுக்கு கிடைக்கவில்லை. மிகவும் அழுக்கான சிறையுடைகளை அணிய நேரிட்டது. சிறைவாசிகளை வெள்ளையர்கள், கருப்பர்கள் (நீக்ரோக்கள்) என தனித்தனியே பிரிவுகளில் வைத்திருந்தனர். இந்தியர்கள் கருப்பர் பிரிவில் அடைக்கப்பட்டனர். ஆறு மணிக்கு சிறைக்கதவு பூட்டப்பட்டது.
அடுத்தடுத்த நாட்கள் சத்தியாகிரகக் கைதிகள் அதிகம் வரத்தொடங்கினர். தெருவில் பொருள்கள் விற்கும் மனிதர்கள் அனுமதிச்சீட்டு வாங்காமல் பெருமளவில் கைதானார்கள். சிறையுணவு திருப்தியளிக்காததால் சமையல் செய்ய அனுமதி வாங்கினர். தம்பி நாயுடு சண்டையிட்டு கிடைக்க வேண்டிய பொருட்களைப் பெற்றார். கைதிகளில் எண்ணிக்கை அதிகமானதால் தாங்கள் இருக்கும் இடத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வது, கூட்டு உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டு சிறைவாசத்தை எதிர்கொண்டனர்.
1908 ஜனவரி 21 அன்று டிரான்ஸ்வால் லீடர் என்ற தினசரியின் ஆசிரியர் ஆல்பர்ட் கார்ட்ரைட் காந்தியை சிறையில் சந்தித்தார். காந்தியின் நண்பரும் இந்தியர்களின் நிலைப்பாட்டை ஆதரிப்பவருமான கார்ட்ரைட் மூலம் ஜெனரல் ஸ்மட்ஸ் சமரசம் பேச அனுப்பியிருந்தார். அந்த ஆசியச் (கருப்பு) சட்டத்தின்படி இல்லாமல் இந்தியர்கள் தாங்களாகவே பதிவு செய்துகொண்டால் சட்டம் விரைவில் ரத்தாகும். அந்தப் பதிவுகளை சட்டப்பூர்வமாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதே அமைதிப் பேச்சின் சாரமாக இருந்தது. ஒப்பந்தத்தின் தெளிவற்ற தன்மை குறித்து காந்திக்கு அய்யம் தோன்றியது. சிறைவாசிகளிடம் கலந்தாலோசித்து திருத்தம் செய்தால் ஒப்புக் கொள்ளலாம் என்கிற முடிவுக்கு வருகிறார்கள்.
ஜனவரி 30 அன்று ஜோகனஸ்பெர்க் சிறைக் காவல் கண்காணிப்பாளர் வெர்னன் ஜெனரல் ஸ்மட்ஸை சந்திக்க காந்தியை பிரிட்டோரியா அழைத்துச் சென்றார். ஒப்பந்த நகலில் காந்தி செய்ய திருத்த்த்தை ஒப்புக்கொண்ட ஸ்மட்ஸ் அந்த கணமே காந்தியை விடுதலை செய்வதாகவும் பிற கைதிகளை நாளை காலை விடுதலை செய்யவும் உத்தரவிடுவதாக அறிவித்தார். காந்தி அங்கிருந்து ஜோகனஸ்பெர்க் ரயில் பிடித்து தலைவர் யூசுப் மியான் வீட்டிற்குச் சென்றார். உடனடியாக மக்களை அழைத்து கூட்டம் நடத்தி விளக்கமளிக்க முடிவாயிற்று. சில மணிநேர கால அவகாசத்தில் நள்ளிரவு நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 1000 பேர் கலந்துகொண்டனர். காந்தியின் விளக்கத்தை ஒருசிலர் ஏற்கத் தயாராக இல்லை. பத்துவிரல் ரேகைகளை வைக்க காந்தி ஒப்புக்கொண்ட நிலையில் ஒரு சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அங்கிருந்து விடியற்காலை வீடு திரும்பிய காந்தி தூக்கமின்றி விடுதலையாகும் கைதிகளை வரவேற்கும் கூட்டத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. 1908 பிப்ரவரி 10 அன்று காலையில் பதிவுப்பத்திரங்களைப் பெறுவதற்கு காந்தி தயாரானார். பதிவாளர் அலுவலகத்தை அடையும் முன்பு மீர் ஆலம் காந்தியிடம், எங்கே போகிறீர்கள்? என்று வினவினார். அதற்குப் பதிலளிக்கும்போது மீர் ஆலம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காந்தியை மிகக் கடுமையாகத் தாக்கினர்; அடித்து உதைத்தனர். இதைத்தடுக்க முயன்ற யூசுப் மியான், தம்பி நாயுடு போன்றோரும் தாக்குதலுக்கு உள்ளாயினர். மீர் ஆலம் டிரான்ஸ்வாலின் தொழிலாளர்கள் பலரை கூலிக்கு அமர்த்தி வைக்கோல் அல்லது நார் மெத்தைகள் தைத்து வியாபாரம் செய்து வருபவர்.
காந்திக்கு நினைவு திரும்பியபோது ஜோசப் ஜே.டோக் அருகிலிருந்தார். டோக் பேப்டிஸ்ட் என்ற கிருஸ்தவப் பிரிவைச் சேர்ந்த பாதிரியார். 1907இல் காந்தியின் வாழ்க்கை மற்றும் தத்துவங்கள் பற்றிய முதல் நூலை ‘மோ.க. காந்தி – தென்னாப்பிரிக்காவில் ஓர் இந்திய தேசபக்தர்’ என்ற பெயரில் எழுதியவர். காந்திக்குப் பற்களிலும் விலாவிலும் கடுமையாக வலித்தது. அப்போதும் மீர் ஆலம் கைது என்றதும் அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். காந்தியின் உதட்டிலும் கன்னத்திலும் காயத்திற்கு தையல்கள் போடப்பட்டன. இந்நிலையிலும் முதலாவதாக பதிவு செய்ய விரும்பியபடி டோக் இல்லத்திலிலேயே அப்பதிவு நடைமுறைகளை நிறைவு செய்தார். டோக் குடும்பத்தின் அரவணைப்பில் 10 நாட்களுக்குப் பிறகு நடமாடும் அளவிற்கு உடல்தேறிய பிறகு அங்கிருந்து விடைபெற்றார்.
இதற்கிடையில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு அரசு வழக்கறிஞருக்குத் தந்தி கொடுத்தார். இதில் குற்றவாளிகளைத் தண்டிப்பது பற்றி காந்தியின் எண்ணங்களை இங்கு அமல் செய்யக்கூடாது. பொது இடத்தில் இச்சம்பவத்திற்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று ஜோகனஸ்பெர்க் ஐரோப்பியர்கள் கடிதமெழுதியதால் மீர் ஆலமும் அவரது கூட்டாளியும் கைது செய்யப்பட்டு மூன்று மாதக் கடுங்காவல் தண்டனைக்கு ஆட்பட்டனர்.
இந்தியர்களின் போராட்டத்திற்கு ஐரோப்பியர்கள் சிலரது ஆதரவும் கிடைத்தது. ஒப்பந்தத்தைப் பற்றிய தப்பெண்ணங்கள் எங்கும் பரவியிருந்தது. டிரான்ஸ்வால் இந்தியர்களிடம் இதுகுறித்த விளக்கமளிக்க முடிவானது. டர்பனில் பொதுக்கூட்டம் கூட்டப்பட்டது. இதில் காந்தி தாக்கப்படலாம் அல்லது தகுந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென நண்பர்கள் வலியுறுத்தினர். காந்தியின் குடும்பத்தினர் ஃபீனிக்ஸ் குடியிருப்பில் இருந்தனர். அக்கூட்டம் முடிவடையும் தருவாயில் ஒருவர் பெரிய தடியுடன் வந்து ரகளை செய்தார். அக்கூட்டத்திலிருந்து காந்தி காப்பாற்றப்பட்டு பார்ஸி ருஸ்தம்ஜியின் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மறுபுறம் ஜெனரல் ஸ்மட்ஸ் ஒப்புக்கொண்டபடி கருப்புச் சட்டத்தை நீக்காமலும் வேறு புதிய அம்சங்கள் கொண்ட மசோதாவைத் தயாரித்து தனது துரோகத்தை வெளிப்படுத்தினார். எனவே மீண்டும் போராட்டத்தைத் தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கருப்புச் சட்டத்தை ரத்து செய்யாவிட்டால் பத்திரங்களை எரிக்கப் போவதாக சத்தியாக்கிரகிகள் அறிவிக்க நேரிட்டது. இதை இறுதி எச்சரிக்கையாகக் கருதிய ஸ்மட்ஸ் புகுத்திய புது ஆசியா சட்டத்தை டிரான்ஸ்வால் சட்டமன்றத்தில் நிறைவேற்றினார்.
1908 ஆகஸ்ட் 16 மாலை 4 மணிக்கு ஜோகனஸ்பெர்க் ஹமீதியா மசூதி திடலில் ஆயிரக்கணக்கில் கூடினர். 2000க்கு மேற்பட்ட பத்திரங்கள் கொளுத்தப்படுவதற்காக முன்பே சேகரிக்கப்பட்டிருந்தன. அவற்றின் மீது எண்ணெய் ஊற்றி யூசுப் மியான் தீவைத்தார். பெரும் ஆரவாரத்துடன் இந்த் எரியூட்டல் போராட்டம் நடைபெற்றது. லண்டன் டெய்லி மெயில் பத்தரிக்கை நிருபர் 1773இல் நடந்த பாஸ்டன் தேநீர் விருந்துடன் ஒப்பிட்டு எழுதியிருந்தார். அடுத்து ஜெனரல் ஸ்மர்ட்ஸ் குடியேற்றக் கட்டுப்பாடு மசோதா 1907ஐ கொண்டுவந்தார். அதுவும் இந்தியர்களுக்குப் பாதகமாக அமைந்தது.
பார்சி மதத்தைச் சார்ந்த சோராப்ஜி, ருஸ்தம்ஜி, சேட் தாவூத் முகமது, சுரேந்திர மேத்தா, பிராக்ஜி கண்துபாய் தேசாய், ரத்தன்ஸி மூல்ஜி சோதா போன்ற பலர் சத்தியாக்கிரகப்போரில் முன்னணி வீரர்களாகப் பங்கேற்றனர். காந்தியின் குழந்தைகள், குடும்பத்தினர், உறவினர்கள் அனைவரும் இதில் பங்கெடுத்தனர். சிறையில் இந்தியர்களை துன்புறுத்துவதற்கான அனைத்து வழிமுறைகளையும் கையாண்டனர். அவர்களுக்கு கழிவகற்றும் பணியைத் தந்தனர். அவற்றை முகமலர்ச்சியுடன் எதிர்கொண்டனர். கற்களை உடைக்கச் சொன்னபோதும் அல்லா, ராமா என்று உச்சரித்துக் கொண்டு உடைத்தனர். குளங்கள் வெட்டுவது மண்வெட்டி கொண்டு கருங்கல் பூமியைக் கொத்துவது என பல பணிகளைச் செய்து கைகள் காய்த்துப் போயின. பணிகளின்போது சில மயக்கமுற்றனர். ஆனால் அவர்களிடம் தோல்வி, விரக்தி ஏற்படவில்லை. உணவு விஷயங்களில் ஏற்படும் சிறு சச்சரவுகள் தலைவர்களால் தீர்த்து வைக்கப்பட்டன. காந்தியை பிற இந்தியக் கைதிகளிடமிருந்து பிரிக்க வேண்டும் என்று பிரிட்டோரியாவில் ஆபத்தான கைதிகளுடன் சிறை வைத்தனர். அபராதம், சிறை, நாடு கடத்தல் என மூன்று தண்டனைகளை ஒருங்கே விதிக்கச் சட்டத்தில் இடமிருந்தது. இத்தகைய கொடுமைகள் இருந்தாலும் கைதிகள் மன உறுதியுடன் இருந்தனர்.
வெளியேற்றப்பட்டவர்கள் சென்னை சென்றபோது அவருக்கு உதவிகரமாக இருந்தவர் ஜி.ஏ.நடேசன் (1873-1949). வெளிநாட்டிலுள்ள இந்தியர்களின் துன்பங்களை ஆய்வின் மூலம் வெளிப்படுத்தியவர். சென்னையில் Indian Review ஆசிரியாகப் பணியாற்றினார். காந்தியின் தென்னாப்பிரிக்க உரைகள், போராட்ட வரலாறு ஆகியவற்றைத் தொகுத்து வெளியிட்டவர் இவர். அதிகம் படிக்காத பதினெட்டு வயது இளைஞர் நாகப்பன் நிமோனியா காய்ச்சலில் இறந்தார். தன்னுடைய தேசத்திற்காக நண்பனைத் தழுவதைப்போல அவர் மரணத்தைத் தழுவினார். நாடுகடத்தப்பட்ட நாராயணசாமி மரணமடைந்தார்.
1910 மே 30இல் காந்தியின் நண்பர் ஹெர்மன் ஹெலன்பேக் தந்த 1100 ஏக்கர் இடத்தில் டால்ஸ்டாய் பண்ணை செயல்படத் தொடங்கியது. தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகப் போராளிகளின் குடும்பங்களுக்கு உதவிசெய்ய இதன் நிதி பயன்பட்டது. பண்ணையில் வீடுகள் கட்டி அங்கி சத்தியாக்கிரகிகளைக் குடியமர்த்தினர். இங்கு நிறைய கைத்தொழில்களைப் பழக்கி குடும்பத்திற்கு வருமானம் ஈட்டவும் தொடர்ந்து போராடவும் வேண்டிய வசதிகள் செய்யப்பட்டன. நடந்து செல்வதன் மூலம் செலவுகள் குறைக்கப்பட்டன. குழந்தைகளுக்கான பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. பெரும் செல்வத்தில் பிறந்து துயரமறியாத ஹெலன்பேக் பண்ணை வாழ்வின் எளிமையோடு இணைந்திருந்தார். அந்த எளிய வாழ்விலும் மகிழ்ச்சியடைந்தார்.
1913 மார்ச் 14 அன்று நீதிபதி சீயர்லே அளித்த தீர்ப்பு கிறிஸ்தவச் சடங்குப்படியும் பதிவு செய்யப்படாத திருமணங்கள் செல்லாது என்றது. இதன்மூலம் இந்து, முஸ்லீம், ஜொராஸ்டரிய (பார்சி) திருமணங்கள் அனைத்தும் செல்லாது என்றானது இதனால் பெண்களின் உரிமைகள் கேள்விக்குள்ளானது. தென்னாப்பிரிக்க இந்தியர்களிடம் பெரும் கிளர்ச்சி உண்டானது. கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் இருந்த தாய்மார்கள் என டால்ஸ்டாய் பண்ணையிலிருந்த பெண்கள் போராட்டக் களத்திற்கு கிளம்பினர். இவர்களில் ஒருவரைத் தவிர பிறரனைவரும் தமிழ்ப்பெண்கள்.
ஃபீனிக்ஸில் இருந்தவர்களில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், இந்தியன் ஓப்பீனியன் நடத்துவதற்காக சிலர் ஆகியோரைத் தவிர பிறரும் சிறைக்கு அனுப்புவதாக முடிவானது. மாரிட்ஸ்பர்க் சிறையில் பெண்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆட்பட்டனர். மட்டமான உணவும் துணி துவைக்கும் வேலையும் அவர்களுக்குத் தரப்பட்டன. எலும்புக்கூடாகி விடுதலையான பெண்களும் உண்டு. 16 வயதான தில்லையாடி வள்ளியம்மை சிறையில் காய்ச்சலுடன் விடுதலையாகி சில தினங்களில் 1914 பிப்ரவரி 22 அன்று இறந்தார். சிறை சென்றதற்காக வருந்தவில்லை என்றும் நாட்டுக்காக உயிரையும் கொடுக்கத் தயார் என்று மனவுறுதியுடன் போராட்டத்தில் நின்றவர் வள்ளியம்மை. தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகத்தில் வள்ளியம்மைக்கு என்றும் நீங்கா இடம் உண்டு என்று காந்தி குறிப்பிடுகிறார். 1915 மே 1இல் கஸ்தூரிபாவுடன் தில்லையாடி வந்த காந்தி வள்ளியம்மையின் பூர்வீக மண்ணில் அஞ்சலி செலுத்தினார்.
காந்தியின் அழைப்பை ஏற்று கோகலே 1912 அக்டோபர் 22இல் கேப்டவுன் வந்தார். உடல்நலிவுற்ற நிலையிலும் தென்னாப்பிரிக்க இந்தியர்களின் நலன் குறித்து பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்டார். 1913 நவம்பர் 6இல் மாபெரும் சத்தியாக்கிரகப்படை டிரான்ஸ்வாலில் நுழைந்தது. மீண்டும் காந்தியும் பிறரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அமைக்கப்பட்ட ஆணையம் மூன்று பவுன் தலைவரி நீக்கம், இந்தியத் திருமண அங்கீகாரம் போன்றவற்றிற்குப் பரிந்துரை செய்தது. இவ்வாறு எட்டு ஆண்டுகள் நீண்ட சத்தியாக்கிரகம் 1914இல் கொண்டுவரப்பட்ட இந்தியர்கள் நிவாரணச் சட்டத்தால் முடிவுக்கு வந்தது.
கோபாலகிருஷ்ண கோகலேவை சந்திக்க லண்டன் வழியே இந்தியா திரும்ப காந்தி முடிவு செய்தார். முதல் உலகப்போர் தொடங்கியபடியால் காந்தியின் பயணத்திட்டம் தாமதமானது. ஃபீனிக்ஸிருந்து கிளம்பியவர்கள் முன்பே தாய்நாட்டை அடைந்தனர். கோகலேயின் ஏற்பாட்டில் காந்திக்கு பம்பாயில் 1915 ஜனவரி 9இல் இறங்கிய காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. திறந்த வாகனத்தில் காந்தி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். உடல்நலமில்லாத நிலையிலும் கோகலே அங்கு வந்திருந்தார். இந்த நாளை வெளிநாடு வாழ் இந்தியர் தினமாக கொண்டாடி வருகிறோம். காந்தியின் பணிகளை நாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ள கோகலே விரும்பினார். இந்தியாவின் நிலையைக் காணவும் இந்திய விடுதலைக்கான வழிகளைத் தேடவும் காந்திக்கு வாய்ப்பு கிடைத்தது.
(தொடரும்…)
நன்றி: பொம்மி – சிறுவர் மாத இதழ் ஆகஸ்ட் 2023
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக