வெள்ளி, ஜனவரி 05, 2024

கற்றல் விளைவுகள்: தொடரும் திணிப்புகள்

கற்றல் விளைவுகள்: தொடரும் திணிப்புகள்

 

மு.சிவகுருநாதன்

         

           இன்று பள்ளிக்கல்வியில் வேறு எதைக்காட்டிலும் இன்று கற்றல் விளைவுகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. பயிற்சியில் எல்லாம் கற்றல் விளைவுகள் பற்றியே கதைக்கிறார்கள். இதற்கு நீண்ட விளக்கமெல்லாம் அளிக்கப்படுகிறது. மேலிருந்து கீழ்வரை கல்வித்துறையை மேற்பார்வையிடும் அலுவலர்கள் கற்றல் விளைவு பற்றியே வினா எழுப்புகின்றனர்.  வேறு எதுவும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, கற்றல் விளைவுகள் இருந்தால் போதும் என்றாகிவிட்டது.

       கற்றல் நோக்கங்கள், விளைவுகள் எல்லாம் மாணவர்களுக்கு அளிக்கப்படும் பாடநூலை ஒட்டியே அமைபவை. நோக்கங்கள் தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) வெளியிட்ட பாடத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்றால் விளைவுகள் தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) பாடநூற்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இவற்றிற்கிடையில் பெருமளவில் தொடர்பு இல்லை. இல்லாவிட்டால் என்ன நாங்கள் சொல்கிறோம்; செய்யுங்கள் என்பதே கல்வித் துறையின் உத்தரவாக உள்ளது. ஒன்றியக் கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம் என்று சொல்லியே அதை எல்லா வழிகளிலும் அமல்படுத்த முனைப்பு காட்டப்படுகிறது. இதில் பொருத்தம், பொருத்தமின்மை குறித்தெல்லாம் யாரும் கவலை கொள்வதில்லை.

        சொந்தமாகப் பாடநூலைத் தயாரிக்கும் வல்லமை பெற்ற மாநில அரசு ஏன் அப்பாடத்திற்கு கற்றல் விளைவுகளை உருவாக்கக் கூடாது? முற்றிலும் பொருத்தமில்லாத கற்றல் விளைவுகளை அப்படியே எடுத்துக்கொண்டு HOT, MOT, LOT     (HOT – Higher Order Thinking, MOT – Middle Order Thinking, LOT - Low Order Thinking) என்று பாவனைகள் செய்யும் அவலத்தில் தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறை இருக்கிறது. நீட் தேர்வு வேண்டாம் என்று போராடுவது ஒருபுறம். NAS, PISA போன்ற தேர்வுகளுக்கான நமது தயாரிப்புகளில் பாடநூல்களையே புறக்கணிக்கும் அவலமும் நடக்கிறது. தொடக்க வகுப்புகளில் (1-5) எண்ணும் எழுத்தும் என்று சொல்லி பாடநூல்களை ஓரங்கட்டி அதற்கான கையேடுகள் தயாரித்தாயிற்று. இனி பாடநூல்களுக்கு அங்கு வேலையில்லை.

      6-10 வகுப்புகளில் கற்றல் திறன்களை மட்டும் கற்பித்தால் போதும் என்கிற நிலை வந்துவிட்டது. எனவே பாடநூல் ஓரங்கட்டப்படுகிறது. சமூக அறிவியல் போன்ற பாடங்களில் நமது பாடத்திற்கு ஒவ்வாத பல்வேறு இந்துத்துவா செயல்திட்டங்களை நிறைவேற்றும் நிலைக்கு தமிழக ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

        NCERT பாடநூற்கள் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டவை. இவற்றில் கொரோனாப் பெருந்தொற்றைக் காரணமாகக் காட்டி பல்வேறு பாடங்கள் நீக்கப்பட்டன. ஆனால் கற்றல் விளைவுகளில் எவ்விட மாற்றமும் இல்லை. (நீக்கம் பற்றிபாசிஸ்ட்களின் கைகளில் கல்விஎன்ற  முதல் கட்டுரையில் காண்க.) SCERT பாடநூல்கள் 2018 மற்றும் அதன் பின்பு தயாரானவை.

       இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன் போன்ற திட்டங்களே தமிழகப் பள்ளிக்கல்வியின் உச்சமாகப் போற்றப்படுகின்றன. இவற்றின் மூலம் கல்வி சீரழிக்கப்படுவதையும் ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கை சந்தடியின்றி நுழைவதையும் வெறுமனே வேடிக்கைப் பார்க்கும் பார்வையாளர்களாக மட்டுமே ஆசிரியர்கள் உள்ளனர்.

      நம்முடைய (SCERT) சமூக அறிவியல் பாடத்தை NCERT Social Studies என்று சொல்கிறது. ஆறாம் வகுப்பிலிருந்து 601, 701, 801, ...  1001 என்று கற்றல் விளைவு எண்ணிடப்படுகிறது. இதை SST 601,  SST 701, SST 801, … SST 1001 என்றுதான் பெயரிடவேண்டும்.  SS (Social Science) என்று மறந்தும் சொல்லிவிடக்கூடாது என்று மிரட்டுகின்றனர். இது என்ன வேதித் தனிமங்கள் அல்லது சேர்மங்களின் குறியீடா? இப்படித்தான் எழுதவேண்டும், மாற்றக்கூடாது என்பதற்கு. கல்வி மடமைக்கும் அடிப்படைவாதத்திற்கும் இதுவோர் எடுத்துக்காட்டாக இருக்கிறது. 

          நமது பாடநூலில்  உள்ள பாடங்களில் அவற்றோடு துளியும் பொருத்தமில்லாத கற்றல் விளைவுகளை இணைத்து இதை மட்டும் கண்டிப்பாகச் சொல்லிக் கொடுங்கள் என்று கட்டளையிடுகின்றனர். ஒவ்வொரு பயிற்சியிலும் இதுவே பேசுபொருளாக அமைகிறது. முரண்பட்ட பொருத்தமில்லாத கற்றல் விளைவுகளுக்கு சமூக அறிவியல் பாடத்திலிருந்து சில எடுத்துக் காட்டுகளைக் காண்போம்.

        10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு பிரிவில் 3வது பாடம்  இரண்டாம் உலகப்போர்’. இதன் கற்றல் விளைவு: SST 1011- உருவகப்படங்களை ஒப்பிடுதல். உதாரணமாக பாரத மாதா படத்தை ஜெர்மானியப் படத்துடன் ஒப்பிடுதல். இதைப் பற்றியும்பாரத மாதாபடம் குறித்து நமது பாடநூல் எதுவும் பேசுவதில்லை. இந்நிலையில் விரைவில் ஆசிரியர்களையும் மாணவர்களையும்பாரத மாதா கி ஜேமுழக்கம் எழுப்பச் சொல்ல வேண்டியதுதான் பாக்கி. இன்னொரு கற்றல் திறனும் (SST 1038)  ஐரோப்பாவிற்கு வெளியே உள்ள நாடுகளில் தேசியவாத சின்னங்கள் எவ்வாறு ஐரோப்பிய சின்னங்களிலிருந்து வேறுபடுகின்றன என்பதை நூல்கள் மற்றும் காட்சிகள் மூலம் பகுப்பாய்வு செய்தல், என்று தேசியவாதப் பரப்புரையில் ஈடுபடுகிறது.

      அதே வகுப்பில் 5வது பாடம்,  “19 ஆம் நூற்றாண்டில் சமூக. சமய சீர்திருத்த இயக்கங்கள்”. இதில் கலாச்சாரத்தின் மீதான வர்த்தகத்தின் தாக்கத்தைப் பகுப்பாய்வு செய்தல் (SST 1042) என்ற திறனைத் திணிக்கின்றனர். இப்பாடத்தில் மேலும் கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தேசியவாத உணர்வுகளை  கலை, இலக்கியம், பாடல்கள் மற்றும் கதைகள் மூலம் எவ்வாறு வளர்க்கிறார்கள் என்பதை வரையறுத்தல் மற்றும் கணித்தல் (SST 1051) திறனும் உள்ளது. இப்பாடம் தலைப்புக்குப் பொருத்தமில்லாத வகையில் சமயச் சீர்திருத்தங்களையே பேசினாலும் மகாத்மா ஜோதிபா புலே, வள்ளலார், ஶ்ரீநாராயணகுரு, அய்யன் காளி, அயோத்திதாசர் போன்றோரை அறிமுகம் செய்கிறது. இந்த கற்றல் விளைவுகளுக்கே முதன்மை என்றால் இவர்களைச் சொல்லித் தர வேண்டியதில்லை என்றாகிறது. இரு உலகப்போர்களுக்கிடையே உலகம்  (பாடம்:2) பாடத்திலும், ஐரோப்பிய தேசியவாதத்தை  காலனித்துவ எதிர்ப்பு தேசியவாதத்துடன் ஒப்பிடுதல். உதாரணமாக இந்தியா, தென் அமெரிக்கா, கென்யா, இந்தோ-சீனா போன்ற நாடுகள் (SST 1012) என்று தேசியவாதத்தையே பிடித்துத் தொங்குவது ஏன்? இவர்கள் சொல்லும் இந்திய தேசியவாதம் என்பது அப்பட்டமான இந்து தேசியவாதமே!

        ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்க கால கிளர்ச்சிகள், என்ற பாடம் 6இல், கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தேசியவாத உணர்வுகளை  கலை, இலக்கியம், பாடல்கள் மற்றும் கதைகள் மூலம் எவ்வாறு வளர்க்கிறார்கள் என்பதை வரையறுத்தல் மற்றும் கணித்தல் (SST 1051), காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும், என்ற ஏழாம் பாடத்திலும், தேசியவாத, காலனித்துவ, கீழ்திசை நாடுகளின் மரபு, மக்களாட்சி, சத்தியாக்கிரகம் மற்றும் சுதந்திரம் போன்ற சொற்களையும் கருத்துகளையும் வரையறுத்தல் (SST 1074) என்று இப்படியே கம்பு சுற்றுகிறார்கள்!

       தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம், தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் ஆகிய 09 & 10  பாடங்கள் NCERT பாடநூல்கள் திட்டமிட்டு மறைக்கும் தமிழ்நாட்டின் வரலாற்றைப் பேசுபவை. இதிலும், அரசியல் கலந்துரையாடல்களில் பயன்படுத்தப்படும் சொற்கள் அவற்றின் பொருள் போன்றவற்றை விளக்குதல். (உதாரணமாக காந்தியவாதி, கம்யூனிசவாதி, மதச்சார்பின்மையாளர், பெண்ணியவாதி, சாதியவாதி, வகுப்புவாதி) - SST 1018, பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் மற்றும் வளர்ச்சிக்கு இடையிலான காரண-காரியத் தொடர்பினை விளக்குதல். (எ.கா.) இந்தியாவில் தேசியவாதத்தின் வளர்ச்சியில் அச்சுத் தொழில்நுட்பத்தின் தாக்கத்தினை ஆராய்தல். (SST 1021)  என்பது போன்ற கற்றல் திறன்களை நுழைத்து பாடக் கருத்துகளையும் நோக்கங்களையும் சிதைக்கின்றனர். தமிழ்நாடு அரசும் கல்வித்துறையும் இத்தகைய அநீதிகளுக்குத் துணை போகிறது.

         கற்றல் விளைவு / திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வுகள் online, offline இரண்டிலும் நடத்தப்படுகின்றன. Higher Order Thinking  (HOT) என்று மிரட்டி கேட்கும் வினாக்கள் அறிவீனத்தையும் அபத்தத்தையும் ஒருசேர வெளிப்படுத்துவதாக அமைகின்றன. இவற்றில் கேட்கப்படும் வினாக்களின் அலங்கோலங்களுக்கு சில எடுத்துக்காட்டுகள்.

1.கடினமானவன் மற்றும் பளபளப்பாகவும் இருக்கும் தன்மையுடைய ஓர் உலோகம் நான்யார்?

(அ) தங்கம்  (ஆ) வெள்ளி  (இ) மாங்கனீசு  (ஈ) தாமிரம் 

2.ஒரு மாநிலத்தின் ஆளுநர் கீழக்கண்ட எவற்றை தன் பணியாக கருதி செயலாற்றுவார்?

 (i) மாநிலத்தின் அரசு பல்கலைக் கழக துணைவேந்தராக.

(ii) நிர்வாகத்தின் உண்மைத் தலைவராக.

(iii) சட்ட முன்வரைவுக் குழுவுக்கு ஒப்புதல் வழங்குபவராக.

(iv)  அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஒதுக்குபவராக.

(அ) (i)  மற்றும் (ii)  (ஆ)  (i) மற்றும் (iii)   (இ) (ii) மற்றும் (iv)    (ஈ) (ii) மற்றும்  (iii)  (ஏழாம் வகுப்பு சமூக அறிவியல்)

        ஆங்கிலேயர்கள் தங்களது  நாட்டிற்கு சென்ற  பிறகு இந்தியாவில் முஸ்லீம் ஆட்சியை நிறுவ  வேண்டுமென எண்ணி முஸ்லீம் தலைவர்கள்  மற்றும் அறிஞர்கள் புரட்சியில் கலந்துகொண்டனர்”, என்ற வெறுப்பரசியல்  கருத்து 8 ஆம் வகுப்பு சமூக அறிவியலில் இடம்பெற்றுப் பின்னர் நீக்கப்பட்டதை நாம் அறிவோம். இதைப் போன்ற  சாதி, மதம், இனம், மொழி, தொழில் சார்ந்த வெறுப்பரசியலை பாட்நூல்களிலும் வினாக்களிலும் வெளிப்படுத்துவதை இங்கு காணலாம். NAS தேர்வில் கேட்கப்பட்ட சில வினாக்கள் பின்வருமாறு:

1. சட்டமறுப்பு இயக்கத்தில் வணிகப்பிரிவினர் ஏன் பங்கேற்றனர்?

(அ)     அவர்கள் நாட்டை விடுதலையடையச் செய்ய விரும்பினர்.

(ஆ)     அவர்கள் வெளிநாட்டுப் பொருட்களின் இறக்குமதிக்கு எதிராகப் பாதுகாப்புப் பெற விரும்பினர்.

(இ)      அவர்கள் அரசியல் செயல்பாடுகளில் பங்கேற்க விரும்பினர்.

(ஈ)       அவர்கள் தனிப்பட்ட தொழிலாளர்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்ற விரும்பினர்.

6. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய தேசிய இயக்கங்களை முன்நின்று நடத்தியது

(அ) நகர்ப்புறத் தொழிலாளர் வர்க்கம்   (ஆ) தொழிலாளர் சங்கங்கள்

(இ) நிலமற்ற விவசாயிகள்  (ஈ)           படித்த நகர்ப்புற ஆண்கள்

        கற்றல் திறன்கள் அது, இது என்று சொல்லி குழந்தைகளிடம் வெறுப்பரசியலை விதைக்க வேண்டாம் என்பதே நமது கோரிக்கையாக இருக்கிறது. பன்மைத் தன்மையை வளர்ப்பதற்குப் பதிலாக குறுகிய வெறுப்பை விதைப்பது நிறுத்தப்பட வேண்டும். பாடநூலுக்கேற்ப திறன்கள் வடிவமைக்கப்பட வேண்டும். அடையாள, மத வெறி அரசியலை குழந்தைகளிடம் திணிக்கக் கூடாது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக