திங்கள், ஜனவரி 15, 2024

வாசிப்பின் அரசியல்

 

வாசிப்பின் அரசியல்

மு.சிவகுருநாதன்

 


             தமிழில் புத்தகம் படிப்போரை விட எழுதுபவர்கள் அதிகமாகி விட்டார்கள் என்று வேடிக்கையாக சொல்வதுண்டு. உண்மையில் காத்திரமான நூல்களின் வருகையும் அதை வாசிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. ஆழமாக நூல்களை வாசிக்கும் பலர் எழுதுவதில்லை; சிலர் உரையாற்றுகின்றனர். எனவே நூல் விமர்சனம் எழுத எழுத தேவையான ஆட்கள் இல்லாத நிலைதான் நீடிக்கிறது.  

          எனது வாசிப்பின் தொடக்கம் ஐராவதம் மகாதேவன் ஆசிரியர் பொறுப்பில் இருந்ததினமணிவழியாக அமைந்தது. வாசிப்பின் எல்லைகளைக் காட்டியதில் சிறுபத்தரிகைகளின் பங்கு பெரிது. 1990களில்நிறப்பிரிகையின் அறிமுகம் வாசிப்பின் அரசியலை அறிமுகப்படுத்தி அதன் திசைவழியையும் உணர்த்தியது.

          பெரியாரியம், அம்பேத்கரியம், மார்க்சியம், தலித்தியம், பெண்ணியம், சூழலியம் சார்ந்த வாசிப்புகளைத் தேட இச்சூழல் ஆர்வத்தைக் கொடுத்தது. வாசித்த நூல்களில் சிலவற்றை ஏதேனும் ஒரு தருணங்களில் கட்டுரைகளாக எழுதி வெளியிடப்பட்டவை இங்கு நூலாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைத் திறனாய்வு என்றெல்லாம் சொல்ல விரும்பவில்லை. படைப்பு குறித்த வாசகப் பார்வையாக எடுத்துக்கொள்ளலாம்.

              நூல்களை நுணுக்கமாக வாசித்து அதுகுறித்து ஆழமாகவும் விரிவாகவும் எழுதக்கூடியவர் ஆய்வறிஞர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள். அவரது நூல் விமர்சனக் கட்டுரைகளை விரிவான ஆய்வாகவும் நூற்களைப் படிக்கத் தூண்டுபவையாகவும் அமைபவை. இந்த வகையில்உங்கள் நூலகம்இதழில் வெளியான கட்டுரைகள் புத்தகத்தின் பெருநிலம், தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி போன்ற சில நூல்களை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்  வெளியிட்டுள்ளது.

          தோழர் ராமாநுஜம் அவர்களின் தீண்டாமை குறித்த ஆய்வுகளுக்கு இத்துறையில் நிபுணத்துவம் உடைய பலர் காத்திரமான எதிர்வினைகளை அளித்திருக்க முடியும். ஆனால் அது நடக்கவில்லை. இந்நூல்கள் குறித்து பலரும் மவுனம் சாதிக்கும் நிலையில் நீண்ட காலத்திற்கு பிறகு எனது பதிவு வெளியானது. இப்பதிவிற்கு மார்க்சிய அறிஞர் எஸ்.வி.ஆர். உடன் பின்னூட்டமிட்டிருந்தார். அதை அப்படியே கீழே தருகிறேன்.

       மிக விரிவான, ஆழமான மதிப்புரை. ஆனந்த் தெல்தும்டே சிறைபுகாமல் இருந்திருந்தால் கோபால் குருவுக்கு பதில் சொல்லியிருப்பார். தலித் அறிஞரான கோபால் குரு, அம்பேத்கரிய சிந்தனைக்கு மாற்றான கருத்துகளுடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது வருத்தம் தருகிறது. ராமாநுஜத்தின் நூல்கள் நாக்பூரிலிருந்து வெளியிடப்பட்டிருக்க வேண்டியவை. பார்ப்பனியம் பல முகங்களைக் கொண்டதாகும். இதைப் பெரியார் அறிவாளிகளின் மொழியில் அல்லாது சாமானியர்கள் மொழியில் அறிவாழத்தோடு சொல்கிறார்: ராஜாஜி பஞ்சமர்வீட்டில் சாப்பிடுவார்; சங்கராச்சாரி பஞ்சமனைக் கண்டதற்குக் குளிப்பார்; சிலர் நிழல் பட்டதற்குக் குளிப்பர்; சிலர் பஞ்சமஆணையோ, பெண்ணையோ திருமணம் செய்துகொண்டு பார்ப்பனராகவே இருப்பார்கள். பலித்தவரைஎன்பதுதான் பார்ப்பனியமும் இந்து மதமுமாகும்”. இது, சுந்தர் சருக்கை, ராமசந்திர குகா, ராமாநுஜம் போன்றோருக்கும் பொருந்தும் உண்மை.

- எஸ்.வி.ராஜதுரை, ஜூன்15, 2021

         இத்தொகுப்பில் சோலை சுந்தரபெருமாள், தேன்மொழி, சிவகுமார் முத்தய்யா ஆகியோரின் நாவல் குறித்தான விமர்சனக் கட்டுரைகள் இடம்பெறுகின்றன. இவர்கள் மூவரும் திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் செய்தி. அடித்தட்டு மக்களின் வாழ்வியலைப் பேசும் இவற்றிலுள்ள முரண்களில் கவனம் குவிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் விமர்சனமாக இவை அமைகின்றன.

        பிற்காலச் சோழப் பெருமித வரலாற்றெழுதியலை மடைமாற்றிய நூல்கள், இந்துத்துவம் கட்டமைக்கும் வரலாற்றிற்கு மாற்று வரலாற்றை உருவாக்குதல், இஸ்லாமை மாற்றாகக் கொண்டாடிய சுயமரியாதை இயக்கம், அவைதீக மரபுகளை அணுகும் பார்வைகள், கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் மொழிபெயர்ப்பு நூல் போன்றவற்றைப் பற்றி இந்நூலில் உள்ள கட்டுரைகள் பேசுகின்றன. 

          தீண்டாமை, சாதியம், சூழலியம், உலகமயம் போன்றவை இன்றைய சூழலின் பேசுபொருளாக இருப்பவை. இவை குறித்த ஆய்வுகளும் விவாதங்களும் இன்னும் அகலிக்க வேண்டிய தேவை இருக்கிறது. இவற்றில்  தமிழ்ச்சூழலில் அவ்வளவாகக் கண்டுகொள்ளப்படாத நூல்கள் பலவுண்டு. பெரிய எழுத்தாளர்கள் அல்லது காட்சி / அச்சு ஊடக வெளிச்சம் படாத எழுத்துகள் நிறைய இருக்கின்றன. அவற்றை வாசிக்கும் வாசகர்கள் முடிந்தவரையில் அறிமுகம் செய்வது இலக்கியச் சூழலைச் செழுமைப்படுத்தும்.

            வாசிப்பதில் இருக்கும் சுகம் எழுதுவதில் இருப்பதில்லை. இவற்றில் பெரும்பாலான கட்டுரைகள்பேசும் புதியசக்திமாத இதழில் வெளியானவை. என்னையும் எழுதத் தூண்டி கட்டுரைகளை முழுமையாக வெளியிடுகின்றபேசும் புதியசக்திமுதன்மை ஆசிரியர் ஜெ.ஜெயகாந்தன் அவர்களுக்கும் இத்தொகுப்பை வெளியிடும் நீண்ட கால நண்பர் நன்னூல்பதிப்பகத்தின் மணலி அப்துல்காதர் அவர்களுக்கும் நூலையும் அட்டையையும் அழகுற வடிவமைத்த சு.கதிரவன் அவர்களுக்கும் இந்நூலை வாசிக்கும் உங்களுக்கும் எனது உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(‘விளிம்புநிலை மக்களின் வாழ்வும் கலையும்’ நூலின் முன்னுரை.)

 

நூல் விவரங்கள்:

விளிம்புநிலை மக்களின் வாழ்வும் கலையும் (கட்டுரைகள்)

மு.சிவகுருநாதன்

 முதல் பதிப்பு: டிசம்பர் 2023

பக்கங்கள்:  190

விலை: ₹ 200

வெளியீடு:

 நன்னூல் பதிப்பகம்,

மணலி - 610203,

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு.

அலைபேசி: 9943624956

மின்னஞ்சல்:    nanoolpathippagam@gmail.com

 

புதன், ஜனவரி 10, 2024

காந்தியின் நிர்மாணத் திட்டங்களும் எதிர்ப்பும்

 

காந்தியின் நிர்மாணத் திட்டங்களும் எதிர்ப்பும் 

 

(மகாத்மாவின் கதை தொடரின் பதிமூன்றாவது அத்தியாயம்.)

 

மு.சிவகுருநாதன்


 

 

               காந்தி அரசியல் பணிகளுடன் சமூகப்பணிகளையும் இணைத்தே செயல்படுத்தினார். அரசியல் விடுதலையுடன் சமூக, பொருளாதார விடுதலையும் பெற வேண்டும் என்பதில் பெருநம்பிக்கை கொண்டிருந்தார். நிர்மாணத் திட்டங்கள் என்று பெயரில் பல்வேறு காலகட்டங்களில் இவற்றை முன்னெடுத்துச் சென்றார். கதர் பரப்புரை, மதுவிலக்கு, வார்தா (ஆதார) கல்வித் திட்டம், தீண்டாமை ஒழிப்பு, முதியோர் கல்வி, நலக்கல்வி, கிராம சுகாதாரம், கிராமத் தொழில்கள், பொருளாதார சமத்துவம், பெண்கள், விவாசாயிகள், தொழிலாளர்கள் முன்னேற்றம், தேசியமொழியாக இந்துஸ்தானி போன்றவற்றிற்கு  நிர்மாணத்திட்டங்களில் இடம் கிடைத்தது.

        மதுவிலக்கு 1920களிலிருந்து காங்கிரஸ் செயல்திட்டத்தில் இடம்பெற்ற ஒன்று. இதில் காங்கிரசார் போதிய கவனம் செலுத்தவில்லை என்ற வருத்தம் காந்திக்கு இருந்தது. மருத்துவத்துறையில் உள்ளவர்கள் இந்தத் தீமையைப் போக்க பெரிதும் பங்களிக்கலாம். இவற்றை விரைவுபடுத்துவதில் பெண்கள் மற்றும் மாணவர்களின் பங்கு முக்கியமானது என்றும் காந்தி மதிப்பிட்டார். 

        அப்போது காங்கிரசில் இருந்த தந்தை பெரியார் 1921இல் சேலத்தில் கள்ளுக்கடை மறியலை முன்நின்று நடத்தினார். தனது தென்னந்தோப்பிலுள்ள கள் இறக்கப் பயன்பட்ட 500 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார். போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற பின்னர் அவரது இணையர் நாகம்மாளும்  சகோதரி கண்ணம்மாளும் மறியலைத் தொடர்ந்தனர். அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றில் மறியலை நிறுத்துமாறு கேட்டபோது, அது என் கைகளில் இல்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு பெண்களின் (நாகம்மாள், கண்ணம்மாள்) கைகளில் உள்ளது என்று காந்தி பதிலளித்தார்.

         தந்தை பெரியார் காங்கிரசின் இருந்த கால கட்டத்தில் (1919-1924) கதர்ப் பரப்புரை, மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு போன்றவற்றில் முன்னணி வீரராக களத்தில் செயல்பட்டார். ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்களை முன்னேற்ற வகுப்புவாரி இடஒதுக்கீட்டைக் கோரினார். காந்தியும் காங்கிரசும் அதற்குத் தயாராக இல்லாதபோது 1925இல் சுயமரியாதை இயக்கம் கண்டார். இம்மாதிரியான கருத்தியல் கொண்ட தலைவர்கள் அன்று காங்கிரசில் இல்லை. காங்கிரசின் பல்வேறு செயல்பாடுகள் உள்ளும் புறமுமான வேறுபாடுகளைத் தன்னகத்தே கொண்டிருந்தன. காங்கிரஸ் கட்சியின் நிதியுதவியில் செயல்பட்ட வ.வே.சு.அய்யரின் ஆசிரமத்தில் சாதிப்பாகுபாடு காட்டப்பட்டது. அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்களின் சாதி பற்றிய பார்வையும் அணுகுமுறையும் காந்தியின் பார்வையிலிருந்து வேறுபட்டதாக இருந்தது. காந்தி உயர்த்தப்பட்ட வர்க்கத்தினரிடம் சாதி, தீண்டாமை குறித்து மென்மையான மொழியில் பேசவேண்டியிருந்தது. மாறாக அம்பேத்கரும் பெரியாரும் அடித்தட்டு மக்களிடம் உண்மைகளை எளிமையாக உணர்த்தினர்.

         கதரை ஆதரித்துப் பரப்புரை செய்வது, சுதந்திரக் கப்பலை கடற்காற்றுக்கு எதிராக செலுத்தி மூழ்கடிக்கும் செயல் என்றும் தேசத்தை இருண்ட காலத்திற்கு அழைத்துச் செல்லும் முயற்சி எனவும் விமர்சிக்கப்பட்டது. சுதேசி மனப்பான்மையை வளர்க்கவும் இந்தியாவிற்குத் தேவையானதை இந்தியாவிலேயே அதுவும் கிராமங்களில் கிடைக்கும் உழைப்பு மற்றும் திறமையைக் கொண்டு தற்சார்பு அடைவதை கதர் உணர்த்துகிறது என்றும் காந்தி பதிலளித்தார்.

         இந்து மதத்தையும் அதன் சனாதன தர்மத்தையும் காந்தி முழுமையாக ஏற்றார். அவர் தன்னை ஒரு சனாதனி என்று வெளிப்படையாக அறிவித்தார். வர்ணத்தின் அடிப்படை தொழிலைக் குறிக்கிறது என்று நால் வர்ணத்தை ஏற்ற காந்தி சாதியை சமூகத் தீமையாக இனம் கண்டார். தீண்டாமைக்கு மத சம்மந்தம் கிடையாது. அது சாத்தானின் சூழ்ச்சி. அது இந்து மதத்தின்  பாகமில்லை. ஒருவேளை தீண்டாமை இந்து சமயத்தின் ஒருபகுதி என்றால் நான் இந்துவாக இருக்க முடியாது என்று அறுதியிட்டார்.  இந்து மதம், சனாதன, வர்ண தர்மம் குறித்து காந்தி அளிக்கும் விளக்கங்கள் ஆழமானப் புரிதலின்றி சற்று மேம்போக்காக அமைந்திருந்தன. அம்பேத்கர், பெரியார் போன்றோர் இதைச் சற்றுக் கடுமையாகவே எதிர்கொண்டனர்.

          தீண்டாமை விலக்கு என்பதன் பொருள் ஐந்தாவது சாதியை ஒழித்தல் என்கிறார். நான்கு வர்ணங்களும் ஆதாரமானவை; இயற்கையானவை. இவற்றை அழிக்க முயன்றால் நான் எதிர்ப்பேன் என்றும் சூளுரைத்தார். இது தீங்கிழைக்கும் ஏற்பாடு என்பதை காந்தி ஒத்துக் கொள்ளவில்லை. அது உற்பத்தியான காலத்தில் ஒரு நல்ல வழக்கமாக தேசிய நன்மைக்கு உதவி செய்தது. உடன் உண்ணலும் உடன் விவாகம் செய்வதும் தேசிய முன்னேற்றத்திற்கு அவசியம் என்பது மேலைநாட்டிலிருந்து வந்த தப்பெண்ணமாகும் என்றும் கருதினார். அவ்வாறு மணம் செய்தாலும் வர்ண அமைப்புக்கு கேடு ஏற்படாது என்றார். வர்ண அமைப்பு பிறப்புடன் தொடர்புடையது. அதனைப் பின்தொடர்வது இந்துக்களின் கடமை என்றார்.  

         ஐந்தாவது வர்ணமாக கூறப்பட்ட பஞ்சமர்கள் தீண்டத்தகாதவர்  ஆயினர். ஆலயங்களில் நுழைய நாலாம் வர்ணத்தார் சூத்திரர்களுக்கும் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டதே உண்மைநிலையாகும். ஆனால் காந்தியின் பார்வைக் கோணம் வேறாக இருந்தது. உண்மையான தேசிய சட்டசபை என் கைவசம் இருப்பின், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு தனியாக நல்ல கிணறுகளையும் அவர்கள் குழந்தைகள் கல்வி பயில நல்ல பள்ளிக்கூடங்களையும் கட்டி இந்துக்களின் அகங்காரத்தையும் குறும்பையும் அடக்குவேன். அந்த நாள் வரும் வரையில் காத்திருக்க வேண்டுமென்றார். இருப்பினும் அதுவரையில் என்னால் முடிந்த பணிகளை பஞ்சம சகோதரர்களுக்காக செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பொதுவான கிணறு என சமத்துவம் வழங்க வேண்டும் என எதிர்க்குரல் எழுந்ததில் வியப்பில்லை. 

        தலித்களின் முன்னேற்றத்திற்கு மூன்று வழிகள் உண்டு. அவசரப்பட்டு தற்போதைய முதலாளியாகிய ஆங்கில அரசின் உதவியை நாடலாம். அப்படிக் கிடைக்கும் உதவி பொறிக்கும் சட்டியை விட்டு தீயில் விழுவதைப் போன்றது. அவர்கள் இந்து மதத்தை வீடு இஸ்லாம் அல்லது கிருஸ்தவ மதத்தை தழுவலாம். உலக நன்மைக்காக மதம் மாறுவதை ஆதரிக்கலாம். தனிப்பட்ட வாழ்க்கைத் துயரங்கள் இதற்குச் சரியான காரணமாக அமையாது. மூன்றாவது வழி ஒத்துழையாமை அம்சங்களைக் கைக்கொண்டு பிறர் உதவியின்றி தமது காரியத்தை தாமே செய்துகொள்ளுதல் என்பதையே காந்தி ஆதரித்தார். தேச விடுதலைக்கு மட்டும் முதன்மையளித்து பிறவற்றை படிப்படியாக சரிசெய்து கொள்வது என்கிற நிலைப்பாடும் இதிலிருந்தது.

           பிராமணர்கள் மீது குற்றம் சுமத்துவதை காந்தி விரும்பவில்லை. வேறு எவரைவிடவும் கோகலே, ரானடே, திலகர் போன்ற பிராமண வகுப்பில் பிறந்த தலைவர்களை தன்னலமற்ற சேவைக்கு உதாரணமாக எடுத்துக் காட்டுகிறார். இவர்களைப் போன்றும் தம்மைப் போன்றும் எல்லோரும் அறவுணர்வுடன் செயல்படுவார்கள் என்று காந்தி நம்பினார். ஆனால் உயர்த்தப்பட்ட வர்க்கத்திருந்த பெரும்பாலானோர் அவ்வாறு இல்லை என்பதை காலம் அவருக்கு உணர்த்தியது.

        ஒவ்வொரு சாதி இந்துக் குடும்பமும் தாழ்த்தப்பட்ட ஆணையோ அல்லது பெண்ணையோ தனது குடும்பத்திற்குள் அழைத்துக் கொள்ள வேண்டும். வசதி உடையவர்கள் அவர்களை மேற்படிப்பிற்கு அனுப்ப முன்வரவேண்டும் என்றெல்லாம் காந்தி சொன்னார். வர்ணத்தை எவ்வளவுதான் கட்டிக் காத்தாலும் சாதி இந்துக்கள் காந்தியுடன் உடன்படப் போவதில்லை என்கிற கசப்பான உண்மையை  அவர் பின்னாளில் எதிர்கொள்ள நேரிட்டது.

          காங்கிரசின் ஆலய நுழைவுப் போராட்டங்கள் உள்ளார்ந்த உணர்வுடன் அன்றி எதோ பெயரளவிலும் சில இடங்களில் மோசடியாக குறுக்குவழியிலும் நடந்தது தலித்கள் மத்தியில் அவநம்பிக்கை உண்டாகக் காரணமாயிற்று. 1930இல் நாசிக் அருகே கலாராம் என்னுமிடத்தில் அம்பேத்கர் மேற்கண்ட ஆலய நுழைவுப் போராட்டம், தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கம் மேற்கொண்ட போராட்டங்களைப்போல காங்கிரசால் செய்ய முடியாமற்போனது அதிலுள்ள ஆதிக்க சக்திகளின் நிலைப்பாட்டை எடுத்துக் காட்டியது.

        1935இல் அம்பேத்கர் தன்னுடைய பெருந்திரள் மதமாற்ற அறிவிப்பை வெளியிட்டார். அவரது இந்து மதம் குறித்த விமர்சனத்தை இந்துக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். மாறாக அவரை இந்துவாக இருக்க வேண்டி யாரும் கட்டாயப்படுத்த வேண்டாம் என்றார். அவரை மதமாற வேண்டாம் என்று வலியுறுத்துவதற்குப் பதிலாக தீண்டாமை ஒழிப்பை தீவிரமாக்க வேண்டும் என்றார். பிற மதங்கள் இதைத் தங்களைச் சாதகமாக மாற்றி மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி விடுவார்கள் என்கிற அச்சமும் காந்திக்கு இருந்தது.

          அடுத்த பிறப்பில் தலித் அல்லது பங்கியாக (தூய்மைப் பணியாளர்) பிறக்க வேண்டும் என்ற பேராவல் காந்திக்கு இருந்தது. இன்றுள்ள நீரைப் பயன்படுத்தும் நவீனக் கழிப்பறைகள் பயன்பாட்டில் இல்லாத நிலையில் மலத்தை கைகளால் அள்ளி அகற்ற வேண்டியிருந்து. அப்பணிகளில் காந்தி செய்ததோடு தனது குடும்பத்தினர், ஆசிரமவாசிகள், தொண்டர்கள் என அனைவரையும் அப்பணிகளில் ஈடுபடத் தூண்டினார். கிராமம் மற்றும் நகரங்களில் தெருவோர மனிதக்கழிவுகளை அகற்றும் பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட இவர்கள் அதுகுறித்த  பரப்புரைகளிலும் ஈடுபட்டனர்.

        அரிசன சேவை என்பது தீண்டாமைக் களங்கத்தை நீக்குவதாகும். தலித்கள் தங்களைத் தாமே தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். சாதி இந்துக்களிடம் காணப்படும் தீய பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும். குழந்தைத் திருமணங்களை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். சாதியொழிப்பின் வழிகளை ஆராய்ந்து வெளிப்படுத்திய அம்பேத்கர், வேறு வழிகளில் பயணித்த காந்தியும், காங்கிரசும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு செய்தது என்ன? எனக் கேள்வி எழுப்பினார். இந்து மதத்திலிருந்து தன்னை முற்றிலும்  விடுவித்துக் கொள்ள இயலாத காந்தி, தன் இறுதிக் காலத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பூசாரிகளால் நடத்தப்படும் திருமணம், மணமக்களில் ஆணோ, பெண்ணோ தாழ்த்தப்பட்டவராக இருக்கும் நிகழ்வுகளில் மட்டும் தான் கலந்துகொள்ள விரும்புவதாகவும் பிற மண நிகழ்ச்சிகளுக்கு தன்னை யாரும் அழைக்க வேண்டாம் என்று அறிவுறுத்துவதையும் விளங்கிக் கொண்டால் அவரது மனமாற்றத்தை உணரலாம்.   அவர் தன்னை சனாதனி என்று வெளிப்படையாக அறிவித்துக் கொண்டாலும் வ.வே.சு. அய்யர், சாவர்க்கர், கோல்வால்கர் போன்ற சனாதனிகளிடமிருந்து வேறுபடுத்தி அணுக வேண்டிய தேவை உள்ளதை ஏற்கத்தான் வேண்டும். எதை வைத்து இந்திய மக்களை ஒன்றுபடுத்திவிடலாம் என்று காந்தி நினைத்தாரோ அதுவே அவரது உயிரையும் பறிக்கக் காரணமாக அமைந்ததையும் மறுக்க இயலாது. 

           பிரிக்க முடியாத உள்ளங்களை இணைவதை வகுப்பு ஒற்றுமை குறிக்கிறது. இதை அடைய ஒவ்வொரு காங்கிரசாரும் தமது சமயம் எதுவாக இருப்பினும் தம்மை ஒரு இந்து, இஸ்லாமியர், சொராஸ்ட்ரியர் (பார்சி), யூதர் என்று பாவித்துக் கொள்ள வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் ஒவ்வொரு இந்துவும் தம்மை இந்து அல்லாதவராக உணர வேண்டும். பிற மதத்தினரிடம் நட்பையும் அன்பையும் வளர்க்க வேண்டும். தனது  சமயத்திற்கு அளிக்கும் மரியாதையை பிற சமயங்களுக்கும் வழங்க வேண்டும், என்றெல்லாம் காந்தி விரும்பினார்.

           சட்டமன்றங்கள் மூலமே அதிகாரம் கிடைக்கிறது என்று நாம் தவறாகப் புரிந்து கொண்டுள்ளோம். உண்மையில் அதிகாரம் மக்களிடமே உள்ளது. நமது இந்தியாவில் ஒரு செயற்கைத்தனமான இணக்கமின்மையை அதாவது தனித் தொகுதிகளை உண்டாக்கி நாடாளுமன்ற முறையை அமல் செய்வதாக பாசாங்கு செய்கிறோம். இத்தகைய செயற்கைத்தனங்களால் உயிர்த்துடிப்பான ஒற்றுமை மலருமா? என்று வினாவை எழுப்புகிறார். தனித்தொகுதி மக்களைக் கூறு போட்டுவிடும், மக்கள் இணக்கமாக ஒருவர் மற்றவரை ஏற்கும் நிலை வரவேண்டும், அதற்கு நம்மையும் சமூகத்தையும் தயார் செய்ய வேண்டும் என்று நினைத்தார். ஆனால் வெகுவாக பிளவுண்ட இந்திய சமூகத்தை எளிதில் ஒட்டகூடிய பசை அவருக்கு இறுதிவரை கிடைக்கவில்லை. தேசிய மொழி (இந்துஸ்தானி) ஒன்றை முன்னிறுத்தினார்; இன்று அந்த இடத்தையும் இந்தி கைப்பற்றிவிட்டது.

       தமிழ்நாட்டு சனாதனிகள் காந்தியின் தமிழக வருகையின்போது தங்களது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 1934 பிப்ரவரி 16இல் இரண்டாவது அரிசன யாத்திரைக்காக காந்தி சிதம்பரம் வந்தபோது சிதம்பரம் கோயிலின் நான்கு வாயில்களும் அடைக்கப்பட்டன. “காந்தியே நீர் போம்”, என்ற துண்டறிக்கை விநியோகிக்கப்பட்டது. ஶ்ரீரங்கத்திலும்வராதே காந்தி! ஓடிப்போ காந்தி!! பேசாதே காந்தி!!!”, என்ற தலைப்பில் துண்டறிக்கை வெளியானது. எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக திருவல்லிக்கேணியைச் சேர்ந்த மா.நீலகண்ட சித்தாந்தியார் என்பவர்தீண்டாதார் ஆலயப் பிரவேச நிக்ரஹம்  (தடை) என்னும் 67 பக்க நூலை வெளியிட்டார். மிகக் கொடிய வசைமொழிகளைப் பயன்படுத்தி இந்நூல் எழுதப்பட்டிருந்தது. மதுரையில் நடந்த தமிழ் சனாதனிகள் மாநாட்டின் தலைவராக இருந்த பூரி சங்கராச்சாரியார், “காந்தி சனாதனியுமல்ல, வர்ணாஸ்ரம தர்மத்தைக் கடைப்பிடிப்பவருமல்ல. வேதங்களிலோ, ஆலயங்களிலோ அவருக்கு நம்பிக்கை இல்லை”, என்றார். இந்து சனாதனம் காந்தியை இவ்வாறாகத்தான் எதிர்கொண்டது.

       அகிம்சை, சத்தியாகிரகம், சர்வோதயம் என்ற காந்திய மும்மைக் கோட்பாடுகளும் சமண, பௌத்தக் கோட்பாடுகள். இந்து சமயத்தில் இவற்றிற்கு இடமில்லை. எளிமை, உழைப்பு, கூட்டு வாழ்வு என்பவற்றிற்கு வர்ணமுறையில் இடமில்லை. விடுதலை, போராட்டம், பணிவு மறுப்பு என்பவற்றிற்கு பக்தி முறையில் இடமில்லை. ஆனாலும் காந்தியம் இவற்றைக் கொண்டே இயங்க முயல்கிறது.

       சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், என்பதற்கு இந்தியப் பொது நம்பிக்கையில் இடமில்லை. ஆனால் மார்க்சியமும் பெரியாரியமும் அம்பேத்கரியமும் காந்தியமும் இவற்றைத்தான் வாழ்வு நெறியாக முன்வைக்கின்றன; வெவ்வேறு வழிகளில், வெவ்வேறு விளக்கங்களுடன். இவற்றில் முதல் மூன்றும் விஞ்ஞான வாதத்தையும் நவீனத் தன்மையையும் வெளிப்படையாகக் கொண்டவை. காந்தியம் இதில் வேறுபடுகிறது. ஆனால் முரண்படவில்லை”, என்று காந்தியத்தின்  (பிரேம்- காந்தியைக் கடந்த காந்தியம் - காலச்சுவடு) பின்நவீனத்துவ வாசிப்பு அடையாளம் காணுவதை இவ்விடத்தில் நினைவு கூரலாம். 

           இந்தியாவின் மெக்காலே கல்வித்திட்டத்தின் ஆங்கிலக் கல்வி அடிமைகளை உருவாக்குகிறது என்று காந்தி மிகக்கடுமையாகச் சாடினார். மனிதன் வெறும் அறிவுப் பிழம்போ அல்லது விலங்குகளைப் போன்ற தசைநார்ப் பிண்டமோ அல்ல. கைகள், கால்கள், கண்கள், காதுகள், மூக்கு முதலிய உடல் உறுப்புகளுக்கு சரியான தேர்ச்சியும் பயிற்சியும் அளிப்பதன் வாயிலாக அறிவுக்கு உண்மையான பயிற்சி தர இயலும் என்று கருதினார். ஒரு குழந்தையின் உடல் உறுப்புகளைப் புத்திசாலித்தனமான விதத்தில் பயன்படுத்துவது அக்குழந்தையின் அறிவு எளிதாகவும் விரைவாகவும் வளர்ச்சியடைய சிறந்த வழியாகும். புத்தியும் உடலும் சேர்ந்து வளர்ச்சி பெற வேண்டும். அதே சமயத்தில் உள்ளத்திலும் விழிப்பு ஏற்படவேண்டும். அறிவு மட்டும் வளர்வது அரைகுறையாகவே இருக்கும் என்று தீர்க்கமாக நம்பினார்.

        1937இல் ஆண்டு காந்தி கல்வி குறித்த தமது சிந்தனைகள், தென்னாப்பிரிக்க அனுபவங்கள்  ஆகியவற்றை முன்வைத்துஅரிசன்வார இதழில் கட்டுரை ஒன்றை எழுதினார்.  இந்தியாவில் தோல்வியடைந்து வரும் கல்வி முறை குறித்தும் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் கல்வி முறையை விரிவுபடுத்துவதற்கு பின்பற்றக்கூடிய திட்டங்களைப் பற்றியும் தனது கண்ணோட்டங்களை அக்கட்டுரையில்  விவரித்தார்.

          மெக்காலே கல்வி நமது மரபுக்கும் பண்பாட்டிற்கும் முரணாக உள்ளது. குழந்தைகளை சமூகத்திலிருந்தும் உடல் உழைப்பிலிருந்தும் அந்நியப் படுத்துகிறது. கற்றவர்களை தனி இனமாக மாற்றி விட்டது. அரசு மற்றும் தனியாருக்குப் பணியாளராகும் பயிற்சியை மட்டும் தருகிறது. சமூக உணர்வின்றி சுயநல தனிமனித உணர்வைப் புகுத்திவிட்டது. தொடக்கக் கல்வியின் முன்னேற்றம் சுருங்கிவிட்டது. இது வாழ்க்கைக்குப் பயன்படாத கல்வித்திட்டம். பொதுமக்கள் முன்னேற்றம் குறித்த அக்கறையில்லை. அவரவர் தேவையை உணராமல் திணிக்கப்படும் எந்திரக்கல்வி. கல்வியும் தேர்வுகளும் குழந்தைகளுக்கு பெரும் சுமையாக மாறிவிட்டன, ஆகிய குற்றச்சாட்டுகள்  காந்தியால் முன்வைக்கப்பட்டன.

         காந்தி தனது புதிய கல்விமுறைக்கு சர்வோதயக் கல்வி என்று பெயரிட்டார். இக்கல்வியின் நோக்கம் கிராம சுயராஜ்யத்தை நிறுவதாகும். தனி மனிதர்களை சமூக மனிதர்களாக மாற்றும் இக்கல்வி முறையைவாழ்க்கைக்கான கல்வி; வாழ்க்கை மூலம் கல்வி; வாழ்க்கை முழுதும் கல்வி”, என்று எளிமையாக வரையறுத்தார். தாய்மொழி வழியாக தொழில் அடிப்படையிலான ஆதாரக் கல்வியாக இது அமையும் என்று காந்தி விரும்பினார்.

           நாடு முழுவதும் குழந்தைகளுக்கு 7 ஆண்டுகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி, தாய்மொழி வழிக்கல்வி, கைத்தொழில் மற்றும் ஆக்கப்பணிகள் மூலம் கல்வி, சமூக சேவை உணர்வோடு கிராம சபைகள் நடத்தும் பள்ளிகள், ரொட்டி சுடுதல் - கழிப்பறைத் தூய்மை செய்தல் போன்ற குடிமைப் பயிற்சியுடன் கல்வி, வாய்மை, மதச்சார்பின்மை, பொதுவாழ்வு, சமூகப் பங்கேற்பு, தூய்மைப் பணி போன்ற அம்சங்கள் வழி சுயக்கட்டுபாடும் அர்ப்பணிப்பும் உடைய இந்தியக் குடிமக்களை உருவாக்க முடியும் என்று காந்தி நினைத்தார். இக்கல்வியானது படிப்பு மற்றும் தேர்வுக்காக இல்லாமல், கைத்தொழில் அல்லது உற்பத்தி வேலைகளை மையமாகக் கொண்டது. எனவே இதன்மூலம் உடல் சூழல், சமூக சூழல் மற்றும் கைவினைப் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டன.

          1935 இந்திய அரசியல் சட்டப்படி மாகாணத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. 1937இல் நடந்த இத்தேர்தலில்  இந்திய தேசிய காங்கிரஸ் (INC) இலவச மற்றும் கட்டாயக் கல்வியை தேர்தல் அறிக்கைகளில் முன்னிறுத்தியது. ஏழு மாகாணங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. காந்தியின் கல்வித் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல காங்கிரஸ் முடிவு செய்தது. 1937 அக்டோபர் 22 மற்றும் 23இல் வார்தாவில் காந்தி பங்கேற்ற அகில இந்திய தேசியக் கல்வி மாநாடு நடந்தது. கல்வியாளரும், பிற்காலத்தில் இந்தியக் குடியரசுத் தலைவருமான ஜாகீர் உசைன் தலைமையில் கல்விக்குழு ஒன்று அமைக்கப்பட்டு, விரிவான தேசிய அடிப்படைக் கல்வித் திட்டத்தை மார்ச் 1938இல் இந்தக் குழு சமர்ப்பித்தது. இது வார்தா திட்டம் என்றும் ஆதாரக் கல்வித் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. காந்தியின் ஆதாரக்கல்வித் திட்டத்தின் அம்சங்கள் பரிசீலிக்கப்பட்டு சில மாற்றங்களுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

      6 முதல் 14 வயது வரையிலான அனைவருக்கும் 8 ஆண்டுகள் இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்கப்படும். இது பாலினம், கலாச்சாரம் அல்லது மதம் ஆகியவற்றைச் சாராமல் இருக்கும். கல்வி கற்பதற்கு தாய்மொழி பயிற்று மொழியாக ஆக்கப்பட்டது. குழந்தை தனது சொந்த வேகத்தில், பாடத்தை முடிக்க எந்த கட்டாயமும் இல்லாமல், தேர்வுகள் பற்றிய பயமும் இல்லாமல் கல்வி கற்க அனுமதிக்கப்பட்டது. பாடத்திட்டத்தின் நெகிழ்வுத்தன்மை மற்றும் குழந்தை செயல்படுவதற்கான சுதந்திரச் சூழல் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகும்.

        வட்டாரக் கைவினை அல்லது உற்பத்தி வேலைகளுடன் கல்வி கொடுக்கப்பட வேண்டும். உள்ளூர் கைவினைப்பொருளுடன் கல்வியை ஒருங்கிணைப்பதே இதன் நோக்கம். அது வேலை மையக் கல்வியாக இருந்தது. கைவினைத் திறன்களை ஊக்குவிப்பதன் மூலம் கூட்டுச் செயல்பாடு, உழைப்பின் கண்ணியம் போன்றவற்றில் கவனம் குவிக்கப்பட்டது.

        இந்தியாவின் நகரங்கள் மற்றும் கிராமங்களில் சுயசார்பு கல்வியை உருவாக்குவது, வர்க்கமற்ற சமூகத்தைக் கட்டுவது, தாய்மொழியில் கல்வி, மதச்சார்ப்பற்ற கல்வி, கல்வியின் ஊடாக பணம் சம்பாதிப்பது,  வேலையில்லாத் திண்டாட்டம் குறைதல், படித்த மற்றும் படிக்காத வகுப்பினருக்கு இடையிலான வேறுபாடுகள் அழிதல் போன்றவை நேர்மறையான அம்சமாக அணுகப்பட்டன.

        குழந்தைகள் ஒரே நேரத்தில் படித்து வேலையும் செய்வதால் ஏற்படும் எதிர்மறையான உளவியல் விளைவுகள், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் போதிய அளவில் இல்லாத நிலை, பள்ளிப் பாடங்களுக்கும் கைவினைப் பொருட்களுக்கும் இடையே தொடர்பின்மை, பள்ளியை சிறுதொழிற்கூடமாக மாற்றிய சூழல், தொழில்மயமாக்கல் காலத்தின் தேவைக்கு ஈடுகொடுக்க முடியாமை போன்ற பல்வேறு குறைகள் இக்கல்விமுறையில் இருந்தன. உயர்கல்வி தனியாரிடம் இருக்க வேண்டும் என்பதும் பொருத்தமானதாக இல்லை. 1939இல் இரண்டாம் உலகப் போர் தொடங்கியதும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்திய தேசிய காங்கிரஸ் அமைச்சரவை பதவி விலகியது. இதன் வழியே ஆதாரக்கல்வி முடிவுக்கு வந்தது.

         இதை மீட்டெடுக்கும் முயற்சியாக காந்தி மாதிரிப் பள்ளிகளை வார்தா, செகாவோன் ஆகிய இடங்களில் தொடங்கினார். 1942 காந்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சிறை சென்றபிறகு இவை மூடப்பட்டன. ஆண்டுதொறும் ஆதாரக் கல்வி மாநாடு ஒப்புக்கு நடத்தப்பட்டது. 1945இல் காந்தி சேவாகிராமில் மூன்றாவது ஆதாரக் கல்வி மாநாட்டைக் கூட்டியபோது வினோபா, சித்த பூஷன் போன்ற ஒருசில காந்தியர்கள் மட்டுமே அதில் பங்கேற்றனர்.

          சுயமரியாதை இயக்கமும் பெரியாரும் தொழிற்கல்வியை ஏற்கவில்லை. அண்ணல் அம்பேத்கர் தலித் மக்களின் விடுதலைக்கு உதவாது என்றார். அன்று இந்தியாவின் நவீன முகமாக அறியப்பட்ட ஜவகர்லால் நேரு, முகமது அலி ஜின்னா ஆகியோர் இம்முறைக்கு ஆதரவாக இல்லை. கிராமங்களில் உள்ள சாதியம், தீண்டாமை போன்றவை கல்வியிலும் எதிரொளிக்கும். ஆங்கிலத்தை மறுப்பது நமது முன்னேற்றத்தை பின்னோக்கிச்ச் செலுத்திவிடும் என இவர்கள் எண்ணினர். மதச்சார்பற்ற கல்வி என்பதால் இந்துத்துவவாதிகளும் இவற்றில் ஆர்வம் காட்டவில்லை. மொத்தத்தில் ஆதாரக் கல்வித் திட்டம் தோல்வியில் முடிந்தது.

         காந்தி தனது நிர்மாணத் திட்டங்களைப் பற்றிச் சொல்லும் போது, “இது ஒரு பைத்தியக்காரனுடையதைப் போல இருக்கலாம். காங்கிரஸ்காரர்களுக்கு இதில் பிடித்தம் இல்லையென்றால் நான் ஒதுக்கப்பட வேண்டியவனே. என்னைப் பொருத்தவரையில் இத்திட்டங்கள் இல்லாமல் சட்ட மறுப்பைக் கையாள்வது முடக்குவாதக் கையால் ஒரு கரண்டியைத் தூக்க முயல்வதாகும்”, என்கிறார். இதன்வழி  அன்றைய (1945) சூழலில் அவரது எண்ணவோட்டம் வெளிப்படுத்துவதாகக் கருதலாம்.

(தொடரும்…)

நன்றி: பொம்மிசிறுவர் மாத இதழ் - ஜனவரி 2024