திங்கள், ஜனவரி 15, 2024

வாசிப்பின் அரசியல்

 

வாசிப்பின் அரசியல்

மு.சிவகுருநாதன்

 


             தமிழில் புத்தகம் படிப்போரை விட எழுதுபவர்கள் அதிகமாகி விட்டார்கள் என்று வேடிக்கையாக சொல்வதுண்டு. உண்மையில் காத்திரமான நூல்களின் வருகையும் அதை வாசிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. ஆழமாக நூல்களை வாசிக்கும் பலர் எழுதுவதில்லை; சிலர் உரையாற்றுகின்றனர். எனவே நூல் விமர்சனம் எழுத எழுத தேவையான ஆட்கள் இல்லாத நிலைதான் நீடிக்கிறது.  

          எனது வாசிப்பின் தொடக்கம் ஐராவதம் மகாதேவன் ஆசிரியர் பொறுப்பில் இருந்ததினமணிவழியாக அமைந்தது. வாசிப்பின் எல்லைகளைக் காட்டியதில் சிறுபத்தரிகைகளின் பங்கு பெரிது. 1990களில்நிறப்பிரிகையின் அறிமுகம் வாசிப்பின் அரசியலை அறிமுகப்படுத்தி அதன் திசைவழியையும் உணர்த்தியது.

          பெரியாரியம், அம்பேத்கரியம், மார்க்சியம், தலித்தியம், பெண்ணியம், சூழலியம் சார்ந்த வாசிப்புகளைத் தேட இச்சூழல் ஆர்வத்தைக் கொடுத்தது. வாசித்த நூல்களில் சிலவற்றை ஏதேனும் ஒரு தருணங்களில் கட்டுரைகளாக எழுதி வெளியிடப்பட்டவை இங்கு நூலாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைத் திறனாய்வு என்றெல்லாம் சொல்ல விரும்பவில்லை. படைப்பு குறித்த வாசகப் பார்வையாக எடுத்துக்கொள்ளலாம்.

              நூல்களை நுணுக்கமாக வாசித்து அதுகுறித்து ஆழமாகவும் விரிவாகவும் எழுதக்கூடியவர் ஆய்வறிஞர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள். அவரது நூல் விமர்சனக் கட்டுரைகளை விரிவான ஆய்வாகவும் நூற்களைப் படிக்கத் தூண்டுபவையாகவும் அமைபவை. இந்த வகையில்உங்கள் நூலகம்இதழில் வெளியான கட்டுரைகள் புத்தகத்தின் பெருநிலம், தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி போன்ற சில நூல்களை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்  வெளியிட்டுள்ளது.

          தோழர் ராமாநுஜம் அவர்களின் தீண்டாமை குறித்த ஆய்வுகளுக்கு இத்துறையில் நிபுணத்துவம் உடைய பலர் காத்திரமான எதிர்வினைகளை அளித்திருக்க முடியும். ஆனால் அது நடக்கவில்லை. இந்நூல்கள் குறித்து பலரும் மவுனம் சாதிக்கும் நிலையில் நீண்ட காலத்திற்கு பிறகு எனது பதிவு வெளியானது. இப்பதிவிற்கு மார்க்சிய அறிஞர் எஸ்.வி.ஆர். உடன் பின்னூட்டமிட்டிருந்தார். அதை அப்படியே கீழே தருகிறேன்.

       மிக விரிவான, ஆழமான மதிப்புரை. ஆனந்த் தெல்தும்டே சிறைபுகாமல் இருந்திருந்தால் கோபால் குருவுக்கு பதில் சொல்லியிருப்பார். தலித் அறிஞரான கோபால் குரு, அம்பேத்கரிய சிந்தனைக்கு மாற்றான கருத்துகளுடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது வருத்தம் தருகிறது. ராமாநுஜத்தின் நூல்கள் நாக்பூரிலிருந்து வெளியிடப்பட்டிருக்க வேண்டியவை. பார்ப்பனியம் பல முகங்களைக் கொண்டதாகும். இதைப் பெரியார் அறிவாளிகளின் மொழியில் அல்லாது சாமானியர்கள் மொழியில் அறிவாழத்தோடு சொல்கிறார்: ராஜாஜி பஞ்சமர்வீட்டில் சாப்பிடுவார்; சங்கராச்சாரி பஞ்சமனைக் கண்டதற்குக் குளிப்பார்; சிலர் நிழல் பட்டதற்குக் குளிப்பர்; சிலர் பஞ்சமஆணையோ, பெண்ணையோ திருமணம் செய்துகொண்டு பார்ப்பனராகவே இருப்பார்கள். பலித்தவரைஎன்பதுதான் பார்ப்பனியமும் இந்து மதமுமாகும்”. இது, சுந்தர் சருக்கை, ராமசந்திர குகா, ராமாநுஜம் போன்றோருக்கும் பொருந்தும் உண்மை.

- எஸ்.வி.ராஜதுரை, ஜூன்15, 2021

         இத்தொகுப்பில் சோலை சுந்தரபெருமாள், தேன்மொழி, சிவகுமார் முத்தய்யா ஆகியோரின் நாவல் குறித்தான விமர்சனக் கட்டுரைகள் இடம்பெறுகின்றன. இவர்கள் மூவரும் திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் செய்தி. அடித்தட்டு மக்களின் வாழ்வியலைப் பேசும் இவற்றிலுள்ள முரண்களில் கவனம் குவிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் விமர்சனமாக இவை அமைகின்றன.

        பிற்காலச் சோழப் பெருமித வரலாற்றெழுதியலை மடைமாற்றிய நூல்கள், இந்துத்துவம் கட்டமைக்கும் வரலாற்றிற்கு மாற்று வரலாற்றை உருவாக்குதல், இஸ்லாமை மாற்றாகக் கொண்டாடிய சுயமரியாதை இயக்கம், அவைதீக மரபுகளை அணுகும் பார்வைகள், கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் மொழிபெயர்ப்பு நூல் போன்றவற்றைப் பற்றி இந்நூலில் உள்ள கட்டுரைகள் பேசுகின்றன. 

          தீண்டாமை, சாதியம், சூழலியம், உலகமயம் போன்றவை இன்றைய சூழலின் பேசுபொருளாக இருப்பவை. இவை குறித்த ஆய்வுகளும் விவாதங்களும் இன்னும் அகலிக்க வேண்டிய தேவை இருக்கிறது. இவற்றில்  தமிழ்ச்சூழலில் அவ்வளவாகக் கண்டுகொள்ளப்படாத நூல்கள் பலவுண்டு. பெரிய எழுத்தாளர்கள் அல்லது காட்சி / அச்சு ஊடக வெளிச்சம் படாத எழுத்துகள் நிறைய இருக்கின்றன. அவற்றை வாசிக்கும் வாசகர்கள் முடிந்தவரையில் அறிமுகம் செய்வது இலக்கியச் சூழலைச் செழுமைப்படுத்தும்.

            வாசிப்பதில் இருக்கும் சுகம் எழுதுவதில் இருப்பதில்லை. இவற்றில் பெரும்பாலான கட்டுரைகள்பேசும் புதியசக்திமாத இதழில் வெளியானவை. என்னையும் எழுதத் தூண்டி கட்டுரைகளை முழுமையாக வெளியிடுகின்றபேசும் புதியசக்திமுதன்மை ஆசிரியர் ஜெ.ஜெயகாந்தன் அவர்களுக்கும் இத்தொகுப்பை வெளியிடும் நீண்ட கால நண்பர் நன்னூல்பதிப்பகத்தின் மணலி அப்துல்காதர் அவர்களுக்கும் நூலையும் அட்டையையும் அழகுற வடிவமைத்த சு.கதிரவன் அவர்களுக்கும் இந்நூலை வாசிக்கும் உங்களுக்கும் எனது உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(‘விளிம்புநிலை மக்களின் வாழ்வும் கலையும்’ நூலின் முன்னுரை.)

 

நூல் விவரங்கள்:

விளிம்புநிலை மக்களின் வாழ்வும் கலையும் (கட்டுரைகள்)

மு.சிவகுருநாதன்

 முதல் பதிப்பு: டிசம்பர் 2023

பக்கங்கள்:  190

விலை: ₹ 200

வெளியீடு:

 நன்னூல் பதிப்பகம்,

மணலி - 610203,

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு.

அலைபேசி: 9943624956

மின்னஞ்சல்:    nanoolpathippagam@gmail.com

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக