புதன், ஜூலை 10, 2024

மகாத்மாவின் கொள்கை வாரிசுகள்

 

மகாத்மாவின் கொள்கை வாரிசுகள்

(மகாத்மாவின் கதை தொடரின் பதினெட்டாவது அத்தியாயம்.)

மு.சிவகுருநாதன்


 

             காந்தியைப் போன்ற ரத்தமும் சதையும் கொண்ட ஒரு மனிதர் இந்தப் பூமியில் வாழ்ந்தார் என்பதை வருங்காலத் தலைமுறையினர் நம்பமாட்டார்கள், என்று அறிவிலறிஞர் ஐன்ஸ்டீன் கூறினார். காந்தியக் கொள்கைகள் யாரலும் கடைப்பிடிக்க முடியாத அளவிற்கு மிகக் கடுமையானவை என்ற கருத்தும் பலரால் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் வாழ்ந்த காலத்திலும் இன்றும் அவரது கொள்கைகளைப் பின்பற்றும் பலர் இங்கு வாழ்ந்துள்ளனர். சமணத்தின் அடிப்படைக் கொள்கையான அகிம்சை, புலால் மறுப்பை தன் வாழ்வில் கடைபிடித்த காந்தி பிறரிடம் அந்த உணவுமுறையைத் திணிக்காமல் அகிம்சை வழியை மட்டும் கடைபிடிக்க வலியுறுத்தினார். உண்மையில் வன்முறை எளிதான ஆயுதம்; அனைவராலும் எளிதில் கைக்கொள்ள இயலும். மாறாக அகிம்சை எளிய ஆனால் கடினமான ஆயுதமாகும். இதனைக் கையாளவும் உரிய பயிற்சிகள் அவசியம். அதைத்தான் அவர் வாழ்நாள் பணியாக மேற்கொண்டார். காந்தியம் என்கிற ஒன்றை தமக்குப் பின்னால் யாரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று காந்தி விரும்பியதில்லை.

        1916 பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகத்தில் காந்தி ஆற்றிய உரையால் கவரப்பட்ட மகாராஷ்டிரா சித்பவன் பார்ப்பனரான வினோபா பாவே அப்போது அகமதாபாத்தில் இருந்த கோச்ரப் ஆசிரமத்தில் காந்தியைச் சந்தித்து தன்னை இணைத்துக் கொண்டார். ஆசிரமத்தின் கடினப்பணிகள் அனைத்திலும் தன்னை ஈடுபடுத்தினார். தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளையும் அறிந்திருந்தார். அடுத்து அவரது தம்பி பால கோபாவும் அவருடன் இணைந்தார். ஆசிரமப் பணிகளுள் ஒன்றான மலமள்ளும் பணியை இவர்கள் ஏற்றபோது பார்ப்பனர்களை எப்படி இந்த வேலையில் ஈடுபடுத்துவது என ஆசிரமத்தில் சலசலப்பு எழுந்தது. காந்தியின் கொள்கை வீரர்களாய் இவர்கள் அப்பணியைத் தொடர்ந்தனர்.

      செப்டம்பர் 11, 1895இல் பிறந்த இவர் காந்தியுடன் விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டார். காந்தியின் ஆன்மீக வாரிசாகவும் அறியப்படுகிறார். 1951இல் நிலமற்ற ஏழை விவசாயக் கூலிகளுக்குக் கொடையாக நிலமளிக்கும் பூமிதான இயக்கத்தைத் தொடங்கினார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபயணம் சென்று சுமார் 3 லட்சம் ஏக்கர் நிலங்களை பெருநிலக்கிழார்களிடமிருந்து கொடையாகப் பெற்று அவற்றை நிலமற்ற ஏழைத் தொழிலாளர்களுக்குப் பிரித்து வழங்கினார்.

       தமிழறிஞர் மு.அருணாசலம் நூற்றாண்டு வரிசையில் தமிழ் இலக்கிய வரலாற்றைச் சிறப்பாக எழுதியவர். காந்தியின் ஆதாரக்கல்வி மற்றும் கிராம நிர்மாணத் திட்டங்களால் ஈர்க்கப்பட்ட இவர் 1946இல் வார்தா சேவாகிராமத்தில் பயிற்சியில் இணைந்தார். அங்கு வினோபா பாவே, ஜே.சி.குமரப்பா, ஜே.பி.கிருபளானி போன்ற காந்தியவாதிகளுடன் நெருக்கமானார். பின்னர் தமது சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் என்ற ஊரில் காந்தி வித்யாலயம்என்ற கல்வி நிறுவனத்தைத் தொடங்கினார். அவர் தனது அனுபவங்களை எழுதும்போது, வினோபா பாவே மாணவர்களுக்கு வடமொழி கற்பித்தல்தாம் பிற மொழி கற்றல்ஆராய்தல், கிராம ஏழை மக்களிடம் துப்புரவு மற்றும் சுகாதாரத்திற்கான பழக்கங்களை ஏற்படுத்துதல், நூல் நூற்றல்பள்ளிக் குழந்தைகளுக்கு பயன்படக்கூடிய ஆராய்ச்சிகள் செய்தல் போன்ற பணிகளை ஈடுபட்டதை விவரிக்கிறார். தெருவோரங்களில் மக்கள் கழித்திருந்த மலத்தை மண்வெட்டி கொண்டு மூடும் பணியைச் செய்து அதன்மீது சாம்பலைத் தூவித் துப்புரவுப் பணியாற்றியதையும்  மண்வெட்டியை யாரிடமும் அளிக்காமல் வினோபா பாவே தொடர்ந்து இயங்கியதையும் நெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்துகிறார்.

       1976 நெருக்கடிநிலையைக் கண்டித்து அறிக்கை விடுத்தார். நவம்பர் 11, 1982இல் மரணமடைந்த இவருக்கு 1983இல் பாரத ரத்னா விருதளிக்கப்பட்டது. இவரது பூமிதான இயக்கத்தில் பங்கேற்று உழுபவனுக்கு நிலத்தைச் சொந்தமாக்கப் பணிசெய்தவர்கள் ஜெகந்நாதன் - கிருஷ்ணம்மாள் தம்பதி. கலப்புத் திருமணம் செய்துகொண்ட இத்தம்பதி வெண்மணிப் படுகொலைகளுக்குப் பிறகு கீழத்தஞ்சை மாவட்டத்திற்கு வந்து அம்மக்களின் நிலவுரிமைக்கு வழி செய்தது.

          கிருஷ்ணம்மாள் திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் ஒடுக்கப்பட்ட பிரிவில் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரரின் மகளாகப் பிறந்தவர். டி.வி.எஸ். நிறுவனர்  டி.வி.சுந்தரம் மகள் சௌந்தரம்மாளின் உதவியுடன் பட்டப்படிப்பை முடித்தார். இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும்போது ஆயிரம் மாணவர்கள் மத்தியில் 35 மாணவிகள் மட்டுமே கல்வி பயின்றனர். 1946இல் காந்தி மதுரை வந்தபோது அவரைக் கவனித்துக் கொள்ளும் குழுவில் இருந்தார். அதன் பிறகே காந்தியின் கொள்கைகள் இவருக்குப் பிடித்துப் போயின.

      பி.எட். முடித்த பிறகு புத்தகங்களை எல்லாம் குப்பையில் போட்டுவிட்டு, காசி சென்று வினோபாவின்  பூமிதான இயக்க நடைபயணத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இவருக்கு முன்னதாக மராட்டியத்திலிருந்து நிர்மலா தேஷ்பாண்டே, குஜராத்திலிருந்து மீராபட் , கேரளத்திலிருந்து ராஜம்மா போன்றோர் அவருடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தனர். நிர்மலா தேஷ்பாண்டே அப்சல்குருவிற்காக கருணை மனு அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

         இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள ஒரு சிற்றூரில் பிறந்த ஜெகந்நாதன் மதுரை அமெரிக்கன் கல்லூரிப்படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு காந்தியின் ஆசிரமத்தில் சேர விரும்பினார். ஆனால் படிப்பைத் தொடர வேண்டி, இவரது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. காந்தியத்தின்  மீதிருந்த தீவிரப்பற்றால்  திருப்பத்தூரில் இருந்த கிருஸ்தவ ஆசிரமத்தில் தன்னை இணைத்துக்கொண்டு மக்கள் சேவையாற்றினார். பின்னர் பெங்களூருவின் சேரிப்பகுதி மக்களுக்காகத் தொண்டாற்றினார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று 15 மாதங்கள் சிறைத்தண்டனை பெற்றார். காந்தியத்தைக் கடைப்பிடிக்கும் சர்வோதயத் தொண்டரானார்


 

         சுதந்திர இந்தியாவில் அதுவும் தாழ்த்தப்பட்ட பெண்ணோடுதான் திருமணம் என்று கொள்கைப்பிடிப்போடு இருந்தார். எனவே 1950இல் 37 வயதில்  அவருக்கும் 24 வயது கிருஷ்ணம்மாளுக்கும் திருமணம் நடந்தது. பெண்வீட்டாருக்கு திருமணத்தில் விருப்பமில்லை. அவர்கள் திருமணத்திற்கு வரவில்லை. எப்பொதும் மொட்டைத் தலையுடன் முழங்காலுக்கு மேல் வேட்டியுடன்  காட்சியளிக்கும் அந்த காந்தியவாதியிடம், வெள்ளைச் சேலைதான் கட்டுவேன், பூ, பொட்டு வைக்கமாட்டேன் என்கிற நிபந்தனைகளுடன் கிருஷ்ணம்மாள் மணம் செய்துகொண்டார்.

             வினோபா பாவே, ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்றோருடன் பணிசெய்த இவர்கள் வெண்மணிப் படுகொலைக்குபின் கீழத்தஞ்சைப் பகுதியில் பணி செய்தனர். இவர்கள் தொடங்கிய லாப்டி அமைப்பின் (Land for the Tillers’ Freedom) மூலம், 1980களில் பண்ணையார்களிடமிருந்து 5,000 ஏக்கர் நிலத்தைக்  குறைந்த விலைக்கு வாங்கி தலா ஒரு ஏக்கர் என 5,000 குடும்பங்களுக்கு அளித்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்தின் நீண்ட கடற்கரைப்பகுதியில் இறால் பண்ணைகளின் சூழல் சீர்கேட்டைத் தடுக்கப் போராட்டம் நடத்தினர்.  இவர்களது மகன் கம்போடியாவிலும் மகள் செங்கற்பட்டிலும் மருத்துவர்களாக பணியாற்றுகின்றனர். 2013இல் ஜெகந்நாதன் மறைந்தநிலையில் கிருஷ்ணம்மாளின் பணிகள் தொடர்கின்றன. பத்ம பூஷன் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளர்.  இவர்களது வாழ்க்கை மற்றும் பணிகள் குறித்து  That Fired Soul  என்ற குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

        1892 ஜனவரி 4இல் தன் தஞ்சாவூரில் பிறந்த ஜே.சி.குமரப்பா ஜே.சி.குமரப்பா காந்தியத்திற்குப் பொருளாதாரம் வடிவம் தந்தவர். ஆடிட்டரான இவர் காந்தியடிகளால் ஈர்க்கப்பட்டு ஆடம்பர உடைகளைத் துறந்து இணைந்து பணிசெய்தவர். அறம் சார் பொருளாதாரக் கொள்கைகள் இவரை காந்தியிடம் கொண்டு சேர்த்தது. காந்தியால் தோற்றுவிக்கப்பட்ட குஜராத் வித்யா பீடத்தில் பொருளாதாரப் பேராசிரியராக இருந்தார். ‘யங் இந்தியாவின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.  நேரந்தவறாமை மற்றும் கணக்குகள் பராமரிப்பதில் காந்தியை விடவும் துல்லியமாகச் செயல்பட்டவர். உறவினரோ, காந்தியோ யாராக இருந்தாலும் அனுமதிபெற்று குறித்த நேரத்தில் சந்திக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். எனவே கலோனல் சாப்என்று அன்புடன் அழைக்கப்பட்டார். வடநாட்டவர் பயன்படுத்தும் பைஜாமா எட்டு முழ வேட்டியில் தயாரிப்பதாகும். இதைவிடச் சிக்கனமாக 4 முழ வேட்டியில் தோத்தி ஜாமாவை உருவாக்கி அந்த உடையிலேயே இறுதிவரை வாழ்ந்தார்.  

        விவசாயத்தில் எந்திரங்களின் பயன்பாட்டை எதிர்ப்பது தொடர்பான கேள்விக்கு, டிராக்டர் சாணி போடுமா? என்று எதிர்வினா எழுப்பியவர்.  இதே பெயரிலான கட்டுரைத் தொகுப்பும், நிலைத்த பொருளாதாரம்  (வெளியீடு: தன்னறம்) குறித்த இவரது நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. புல்லுருவிப் பொருளாதாரம், கொள்ளைப் பொருளாதாரம், துணிவும் முயற்சியும் கொண்ட பொருளாதாரம், இணைந்து வாழும் பொருளாதாரம், சேவைப் பொருளாதாரம் ஆகியவற்றை உரிய எடுத்துக்காட்டுகளுடன் விளக்குவார். விடுதலைக்கு முன் காங்கிரசால் அமைக்கப்பட்ட திட்டக்குழு மற்றும் கல்விக்குழுவில் இடம்பெற்றார்.

       விடுதலைக்குப் பின்னர் திட்டக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். நேருவின் பொருளாதாரக் கொள்கைகளையும் செயல்பாடுகளையும் காந்தியப் பார்வையால் எதிர்கொண்டார். மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டியில் காந்தி நிகேதன் ஆசிரமம் தொடங்கி, தனது இறுதிக்காலத்தில் காந்தியப் பணி செய்தார். கிருஸ்தவராக வாழ்ந்த குமரப்பா தனது இறப்புக்குபின் உடலை எரியூட்டி, சாம்பலை ரோஜாச்செடிகளுக்கு உரமாக்க வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தினார். 1960 ஜனவரி 30 காந்தி படுகொலையான நாளில் இயற்கையில் கலந்தார்.

          ரோசாப்பூ துரை என்று மதுரைப் பகுதி மக்களால் அன்புடன் அழைக்கப்படும் ஜார்ஜ் ஜோசப் (1887-1938) கேரளத்தில் பிறந்து மதுரையில் வாழ்ந்த வழக்கறிஞர் ஆவார். 1910களில் குற்றப் பரம்பரைச் சட்டத்திலிருந்து மதுரை மக்கள் விழிப்புணர்வு பெறவும் பிறன்மலைக் கள்ளர், மறவர் மக்களுக்காக வழக்காடி வெற்றியும் பெற்று அவர்களின் நன்மதிப்பைப் பெற்றவராக விளங்கினார். இந்த வழக்குகளில் பெற்ற அனுபவம் நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடத் தூண்டியது எனலாம்.

     1918இல் 12.5% ஊதிய உயர்வு, வேலைநேரம் 12 மணியிலிருந்து 10ஆகக் குறிப்பு ஆகிய கோரிக்கைகளுக்காக மதுரை மில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தலைமைப் பொறுப்பு இவருக்கு வந்தது. இவர் காங்கிரஸ் தலைவர் டாக்டர் பி.வரதராஜூலு அவர்களைப் பரிந்துரைத்தார். அவர் தலைமையில் போராட்டங்களை ஒருங்கிணைத்தார்.  பி.வரதராஜூலு கைது செய்யப்பட்டார்.  இந்தத் தேசக்துரோக வழக்கில் ராஜாஜி வாதாடினார். ஜோசப் உள்ளிட்ட வழக்கறிஞர் குழாம் துணைநின்று வழக்கில் விடுதலை கிடைத்தது. ஆலை நிர்வாகம் 25% ஊதிய உயர்விற்கு ஒப்புதல் அளித்தது.

        1920இல் தியோசாபிகல் சங்கத்தைச் சேர்ந்த அருண்டேல்-ருக்மணிதேவி   மதமறுப்புத் திருமணத்தைப்   பலர் கண்டித்த நிலையில் ஜார்ஜ் ஜோசப் ஆதரித்து எழுதினார். இவரது முற்போக்கு என்ணங்களுக்குச் சான்றாக அமைந்த நிகழ்வாகும். இவர் தன் பெண் குழந்தைக்கு மாயா என்று பவுத்தப் பெயரை இட்டார். ஜோசப்சூசன்னா தம்பதியினர் மோதிலால் நேரு குடும்பத்துடன்  நட்பில் இருந்தனர். மோதிலால் நடத்திய The Independent இதழில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதில் எழுதிய கட்டுரைக்காக பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்பு கேட்க மறுத்து 18 மாதங்கள் நைனிடால் சிறையிலிருந்தார்.  அப்போது ஜவகர்லால் நேருவும் இவருடன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

      1919இல் மதுரையில் காந்தியைச் சந்தித்து அவரது அழைப்பை ஏற்று வழக்கறிஞர் தொழிலைவிட்டுயங் இந்தியாஆசிரியப் பொறுப்பில் சிலகாலம் செயல்பட்டார். முதலிரண்டு குழந்தைகளை விடுதியுடன் இணைந்த பள்ளியில்  சேர்த்துவிட்டு மூன்று வயது பெண்குழந்தை மாயாவுடன் ஜார்ஜ் ஜோசப் தம்பதி அகமதாபாத் சபர்பதி ஆசிரமத்திற்கு குடிபெயர்ந்தது. ஆடம்பர வாழ்க்கை முறை, உடைகள் போன்றவற்றைத் துறந்து கதராடை, தொப்பியுடன் எளிய ஆசிரம வாழ்க்கைக்கு மாறினார்.

        இவர் தமது கொள்கைகளில் உறுதியாகவும் அவற்றை துணிச்சலும் வெளிப்படுத்தும் பாங்கும் பெற்றிருந்தார். வைக்கம் போராட்டத்தில் கேசவமேனன் கைதானதும் ஜார்ஜ் ஜோசப் தலைமைப் பொறுப்பேற்றார். கிருஸ்தவரான ஜோசப் வைக்கம் சத்தியாகிரகத்தில் ஈடுபடுவதை காந்தி விரும்பவில்லை. காந்தியின் கடிதம் கிடைக்கும் முன்பே போராட்டம் தொடங்கிவிட்டது. காங்கிரசிலிருந்து வேறு தலைவரைக் கேட்டு தந்தியடித்தும் பலனில்லை. ஜார்ஜ் ஜோசப் நேரடியாக ராஜாஜியைத் தலைமையேற்க அழைத்தபோது உடல்நிலையைக் காரணம் காட்டி மறுத்துவிட்டார். ஜார்ஜ் ஜோசப் கைதாகி சிறை சென்றார். அதன்பின்னர் தந்தை பெரியார் தலைமையில் நடந்த வைக்கம் போராட்டம் வெற்றிபெற்றது.

         1925இல் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒதுங்கி மீண்டும் மதுரையில் வழக்கறிஞர் தொழில் செய்தார். சைமன் குழு எதிர்ப்பில் பங்கேற்றார். சிரியன் கிருஸ்தவரான இவர் ரோமன் கத்தோலிக்கராக மாறினார். 1936 காங்கிரஸ் சார்பில் சென்னை மாகாணச் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு நீதிக்கட்சித் தலைவர் ஏ.டி.பன்னீர்செல்வத்திடம் தோல்வியடைந்தார். 1938 மார்ச் 5இல் சிறுநீரகப் பாதிப்பால் மதுரையில் காலமானார்.

       சர்தார் வேதரெத்தினம் பிள்ளை (1897-1961) ராஜாஜி தலைமையில் 30 ஏப்ரல், 1930இல் நடந்த வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு 6 மாத சிறைத்தண்டனை பெற்றவர். உப்பு யாத்திரையில் இவரது பங்கைப் பாராட்டி சர்தார் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இவர் 14 ஆண்டுகள் சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் 1946இல் கஸ்தூரிபா காந்தி கன்னியா குருகுலம் என்ற கிராமப் பெண்கள் மேம்பாட்டு நிறுவனத்தைத் தொடங்கினார். பெண் குழந்தைகளுக்கு கல்வி அளித்தல் ஆதரவற்றோருக்கு உதவுதல் போன்ற பணிகளில் இந்நிறுவனம் ஈடுபடுகிறது.

          மணிப்பூரின் இரும்பு மங்கை என்றழைக்கப்படும் இரோன் சானு ஷர்மிளா (1972) வடகிழக்கு மாநிலங்களில் அமலில் உள்ள சிறப்பு ஆயுதப்படைச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி 2000 நவம்பர் 2இல் உண்ணாநிலை தொடங்கினார். அரசு இவரைக் கைது செய்து கட்டாயமாக நாசி வழியாக திரவ உணவைச் செலுத்தினர். இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி  தற்கொலை முயற்சிக்கு ஓராண்டுதான் சிறைத்தண்டனை என்பதால் ஆண்டு முடிவில் விடுதலை செய்யப்பட்டு ஷர்மிளா மீண்டும் சிறையிலடைக்கப்பட்டு வந்தார். இது உலகின் நீண்ட போராட்டமாக மாறியது. உண்ணாநிலை ஆகஸ்ட் 9, 2016இல் முடிவுக்கு வந்தது. 2017 தேர்தலில் மணிப்பூர் முதல்வர் இபோபி சிங்கை எதிர்த்துப் போட்டியிட்டு 90 வாக்குகள் மட்டும் பெற்றார். ஆகஸ்ட் 17, 2017இல் தனது 45வது   பிரிட்டன் நண்பரை மணந்து தற்போது கொடைக்கானலில் வசிக்கிறார். 

      பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தைச் சேர்ந்த மலாலா யூசுப்சாய் (1997) தாலிபன்கள் தடையை மீறி பள்ளிக்குச் சென்றார். பெண்கல்விக்கு எதிராக பள்ளிகளை தாலிபன்கள் குண்டுவைத்து தகர்த்தனர். 12 வயதில் பிபிசி உருது வலைப்பூ வழியாககுல்மகாய்என்ற புனைப்பெயரில் தாலிபன்களின் அடக்குமுறை குறித்து எழுதி வந்தார். இது உலகெங்கும் பிரபலமானாலும் அடையாளம் தெரியாததால் தப்பித்தார்.  தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பங்கேற்று அடையாளம் தெரிந்தவுடன்  9 அக்டோபர், 2012இல் தாலிபான்களின் கொலை முயற்சியிலிருந்து தப்பினார்.

         மலாலாவின் தலையிலும் தோள்பட்டையிலும் குண்டடிபட்ட நிலையில் இது உலகம் முழுவதும் கவனம் ஈர்க்கப்பட நிகழ்வாக அமைந்தது. 2013 ஜூலை 12இல் மலாலா தனது 16ஆவது பிறந்தநாளில் குழந்தைகளின் கல்வி பற்றிய வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த நாளை ஐ.நா.சபை மலாலா நாள்என அறிவித்தது. 2014 அமைதிக்கான நோபல் பரிசை இந்திய குழந்தை உரிமைச் செயல்பாட்டாளர் கைலாஷ் சத்யார்த்தியும் மலாலா யூசுப்சாயும் பகிர்ந்து கொண்டனர். .நா.சபையின்நான் மலாலாதிட்டத்தின் கீழ் 2015க்குள் உலகமெங்கும் பல்வேறு காரணங்களால் கல்வியைத் தொடர முடியாமற்போன 61 மில்லியன் குழந்தைகளுக்கான கல்வியளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. 2021இல் திருமணத்திற்குப் பிறகு மலாலா பிரிட்டனில் வசிக்கிறார்.

         தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கு மொழிவாரி தனி மாநிலம் அமைய வேண்டும் என வலியுறுத்தி பொட்டி ஶ்ரீராமுலு (1901-1952) சென்னையிலிருந்த தனது வீட்டில் 19 அக்டோபர் 195இல் உண்ணாவிரதம் தொடங்கினார். இக்கோரிக்கை ஏற்கப்படாத நிலையில் 15 டிசம்பர் 1952 உண்ணாநிலையின் 58வது நாள் மரணமடைந்தார். இவரது மறைவுக்குப்பின் மொழிவாரி மாநிலக் கோரிக்கை ஏற்கப்பட்டு அக்டோபர் 1, 1953இல் தெலுங்கு மக்களுக்காக ஆந்திர மாநிலம் உருவானது.

        மலையாள மொழிப் படைப்பாளியான வைக்கம் முகமது பஷீர் (1908-1994) சுதந்திரப் போராட்ட வீரரான இவர் நாடோடி வாழ்க்கையைத் தெரிவு செய்தார். சிறுகதைகளும் நாவல்களும் எழுதினார். இவரது பாத்திமாவின் ஆடு, பால்ய கால சகி, மதில்கள் போன்றவை தமிழில் கிடைக்கின்றன. தனது நாடோடி வாழ்வில் பல பாத்திரங்களை விரும்பி ஏற்றார். அந்த அனுபவங்களை எழுத்தில் வடித்தார்.  காந்தியவாதியாகவும் மார்க்சியத்தில் ஈடுபாடு கொண்டுருந்த பஷீர் பின்னர் சூஃபி மரபை ஏற்றார். காங்கிரஸ் கட்சியில் நாம் காந்தியர்களை தேட வேண்டியதில்லை. மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரியக் கருத்தியல் தெளிவு கொண்ட பலர் பலவகைகளில் அறம் சார் வாழ்விலிருப்பதை  அவதானிக்கலாம். 

             மராட்டிய வழக்கறிஞரான பாபா ஆம்தே (1914-2008) விடுதலைப் போராட்ட வீர்ர்களுக்காக வாதாடியவர். காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு ஆசிரமத்தில் தங்கி காந்தியவாதியாக மாறினார். தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதை முதன்மைப் பணியாகக் கொண்டார். தான் ஒரு தலைவனாக இருப்பதைவிட ஒரு பிரச்சினையைத் தீர்க்கக் கூடிய  பொறியியலாளனாக இருக்கவே விரும்புகிறேன் என்றார். கடவுள் மறுப்புக் கொள்கையில் உறுதியாக நின்றார்.

           உத்தர்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காந்தியவாதியான சுந்தர்லால் பகுகுணா (1927-2021) விடுதலைப் போரில் பங்கேற்றவர். தீவிர அரசியலிருந்து விலகியநிலையில், வினோபா பாவே, ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோரின்  வலியுறுத்தலின்பேரில் கிராம நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டார். பெண்கள் அமைப்பின் மூலம் மதுவிலக்கிற்கான போராட்டம் நடத்தினார்.  சாதி, தீண்டாமைக்கெதிரான பரப்புரையில் ஈடுபட்டார்.

        பாரம்பரிய விதைகளைப் பாதுகாக்கவும் பசுமைப்புரட்சி எனும் பேரில் அளவுக்கதிமாக வேதியுரங்களைப் பயன்படுத்துவதையும்  எதிர்த்தார். 1970களில் இமயமலையில் காடுகள் அழிக்கப்பட்டதால் வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டன. 1974 மார்ச் 24இல் ரேனி எனும் ஊரில் ஆண்கள் இழப்பீடு பெற வெளியூர் சென்றிருந்த நேரத்தில் மரம் வெட்ட வந்தவர்களை அவ்வூர் பெண்கள் கட்டியணைத்துப் போராடித் தடுத்தனர். இதுவே சிப்கோ இயக்கமாகப் புகழ்பெற்றது. 1981-82இல் காஷ்மீர் முதல் கோஹிமா வரை 4870 கி.மீ. இமயமலைக் கிராமங்களில் நடைபயணம் சென்று, அதன்மூலம் பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்து 15 ஆண்டுகள் மரம் வெட்டத் தடை உத்தரவைக் கோரிப் பெற்றார். 

         கங்கையின் துணை நதியாகிய பகீரதி ஆற்றில் தெஹ்ரி அணை கட்டப்படுவதை எதிர்த்து 1995இல் 45 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் சூழலியல் சீர்கேடுகளை ஆராய குழு அமைத்தார். அக்குழுவின் அறிக்கையை வெளியிடவும் தெஹ்ரி அணை கட்டுவதை நிறுத்தவும் கோரி 1997இல் காந்தி நினைவிடத்தில் 74 நாட்கள் உண்ணா நோன்பிருந்தார். உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். அரசு அணை கட்டுவதை நிறுத்தவில்லை. 2004 அணை கட்டி முடிக்கப்பட்டபின் இவரது சில்யாரா ஆசிரமம் அணையில் மூழ்கியது. அதன்பின் உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைநகரான டேராடூனில் வசித்து வந்த பகுகுணா கொரானாத் தொற்றால் 2021 மே 21இல் காலமானார்.

          குஜராத் மாநில நர்மதை ஆற்றின் குறுக்கே சர்தார் சரோவர் அணை கட்டுவதை எதிர்த்த மேதா பட்கர் (1954) என்கிற சூழலியல் போராளி நர்மதா பச்சாவோ அந்தோலன் என்ற அமைப்பின் மூலம் செயல்படுகிறார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து வடகிழக்கு மும்பைத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பின்னர் அடுத்த ஆண்டே கட்சியிலிருந்து விலகினார். மற்றொரு இந்தியச் சூழலியர் வந்தனா சிவா (1952) சூழலைக் காக்கவும் உலகமயமாக்கலுக்கு எதிராகவும் தொடர்ந்து எழுத்துகள், களச் செயல்பாடு வழியே இயங்கி வருகிறார்.

            கூடங்குளம் அணு உலைக்கெதிரான நீண்ட மக்கள் போராட்டத்தை அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கம் முன்னெடுத்தது. இதன் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் காந்தியக் கொள்கைகளில் ஈடுபாடு உடையவர். காந்திய வழியிலேயே இப்போராட்டங்களை முன்னெடுத்தார். விவசாயப் பிரச்சினைகள், சூழல் சீர்கேடுகள் போன்ற மக்கள் திரள் போராட்டங்கள் அரசை எதிர்த்து நடத்த வேண்டியுள்ளது. அரசோ ஆயுதங்கள், ராணுவம், காவல்துறை  என மிருகபலம் பொருந்தியதாக இருக்கும் நிலையில் வன்முறையற்ற அகிம்சை வழியைத் தெரிவு செய்வதைவிட நமக்கு இன்றைய தருணத்தில் வேறு வழியில்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

        ஜெபி என அழைக்கப்படும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் (1902-1979) தனது 18வது  வயதில்  ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டார். மார்க்சியத்தின் மீதும் பகுத்தறிவுக் கொள்கைகள் மீதும் ஈடுபாடு கொண்டார். காந்தியுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த பிரிஜ் கிஷோர் பிரசாத் என்ற வழக்கறிஞரின் மகள் பிரபாவதியைத் திருமணம் செய்துகொண்டார். 1922இல் ஜெயப்பிரகாஷ் மேல்படிப்பிற்கு வெளிநாடு செல்ல முடிவெடுத்தபோது அவருடன் செல்லமறுத்து காந்தியின் சபர்மதி ஆசிரமம் சென்றுவிட்டார். அறிவியல் படிக்க கலிபோர்னியா சென்ற ஜெயப்பிரகாஷ் தனக்குப் பிடித்த சமூகவியல் துறையைத் தேர்வு செய்தார். கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் ஏங்கல்ஸ், லெனின், டிராஸ்கி, ரோசா லக்ஸம்பர்க் போன்ற நூல்களைப் படித்தார். மார்க்சின் மூலதனம் அவரது இடதுசாரி விருப்பத்தைத் தூண்டியது.

       நாடு திரும்பியபின் பிரபாவதியின் ஆசிரமத் துறவு வாழ்க்கை முடிவை ஏற்று இல்லற வாழ்விலிருந்து ஒதுங்கிக் கொண்டார். கம்யூனிசக் கொள்கையில் ஈடுபாடு கொண்டாலும் கம்யூனிஸ்ட்களும் காங்கிரசும் எதிரிகள் அல்ல என்று எண்ணத்தைக் கொண்டிருந்தார்.   எம்.எம்.ராயைப் படித்த ஜெயப்பிரகாஷ், பொது நீரோட்டத்தில் இணையாமல் கம்யூனிஸ்ட்கள் ஒதுங்கியிருப்பதைச் சாடினார்.  காங்கிரசுடன் இணைந்து கம்யூனிஸ்ட்கள் விடுதலைப்போரில் பங்கேற்கவேண்டும் என்றும் விரும்பினார்.

       சட்டமறுப்பு இயக்கத்தின் பின்னணியில் அவர் கைது செய்யப்பட்டு நாசிக் சிறையில் அடைக்கப்பட்டார்.  அவருடன் சிறையிலிருந்த  ராம்மனோகர் லோகியா, மினு மசானி, அசோக் மேத்தா, அச்சுத பட்வர்த்தன், யூசுப் தேசாய் போன்றவர்களுடன் உரையாடி காங்கிரஸ் சோசலிசக் கட்சியைத் தோற்றுவித்தார். கட்சிக்குள் இவர்கள் தனிக்குழுவாகச் செயல்பட்டனர்.

        1939 இரண்டாம் உலகப் போரைப் பயன்படுத்தி பிரிட்டிஷ் அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டுமென்று ஜெயப்பிரகாஷ் விரும்பினார். போருக்கு ஆயத்தமாகும் ஆங்கிலேயப் படைக்கு இந்தியா உதவவில்லை என்றால் அவர்கள் தானாக வெளியேறுவார்கள் என்று நினைத்தார். காந்தியுடன் முரண்பட்ட ஜெயப்பிரகாஷ் கைதானார். இதற்கிடையில் காந்திஜி-நேதாஜி மோதல் முற்றி நேதாஜி காங்கிரசை விட்டு விலகினார். 9 மாத சிறைவாசத்திற்குப் பிறகு இவர்களிடையே இணக்கம் ஏற்படுத்த முயன்றுத் தோற்றார்.

      வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று ஹசாரிபாக் சிறையில் ஐந்து தோழர்களுடன் சுவற்றில் துளையிட்டுத் தப்பினார். நேபாளம் சென்று ஆசாத் தாஸ்தாஎன்ற விடுதலைப்படையைத் திரட்ட முயன்றார். ரயிலில் பஞ்சாப் செல்லும்போது மீண்டும் கைதாகி லாகூர் சிறையில் பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளானார். 16 மாதங்களுக்குப் பிறகு 1945இல் ஆக்ரா சிறைக்கு மாற்றப்பட்டார். விடுதலைபோரின் இறுதிக்கட்டத்தில் காந்தியின் நிபந்தனையின் பேரில் ஜெயப்பிரகாஷ் நாராயணனும் ராம் மனோகர் லோகியாவும் விடுதலையாயினர்.

        காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த சோசலிஸ்ட்கள் பிரஜா சோசலிஸ்ட் கட்சியைத் தொடங்கினர். ஜவகர்லால் நேருவின் தொழில்மயக் கொள்கைகளை இவரால் ஏற்க இயலவில்லை. 1954இல் வினோபா பாவே தொடங்கிய சர்வோதய மற்றும் பூமிதான இயக்கத்திற்கும் ஆதரவளிப்பதாக அறிவித்தார். ஹசாரிபாகில் ஆசிரமம் ஒன்றை நிறுவி கிராமங்களை முன்னேற்றுவதை நோக்கம் என்ற திட்டத்தை வெளியிட்டார். கருத்தியல் முரண்பாடுகளால் 1957இல் சோசலிஸ்ட் கட்சியிலிருந்து விலகினார். தீவிர அரசியலிருந்து ஒதுங்கியிருந்தார்.

        1970இல் பீகாரில் தார்க்குண்டேயுடன் இணைந்து ஊழலுக்கு எதிராகவும் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கவும் முழுப் புரட்சி இயக்கத்தைத் தொடங்கினார். 1974இல் மாணவர் இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றிக் காட்டினார். 1976 நெருக்கடி நிலைக் காலத்தில் சிறை சென்றார். காங்கிரசுக்கு எதிரான சக்திகளை ஒன்றிணைத்து ஜனதா கட்சியை உருவாக்கி  1977 தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைய வழிவகுத்தார். மொரார்ஜி தேசாய் பிரதமரானார். ஒருபோதும் பதவியை விரும்பாத மக்கள் புரட்சி மூலம் ஜனநாயகத்தை மீட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன் 1979 அக்டோபர் 8இல் காலமானார். காந்தியமும் மார்க்சியமும் கலந்த ஆளுமைகளாக வ..சிதம்பரம் பிள்ளை, சிங்காரவேலர், ஜீவானந்தம், பி.எஸ்.சீனிவாசராவ், நல்லசிவம், சங்கரய்யா, நல்லக்கண்ணு என்ற நீண்ட கண்ணியை சுட்டலாம்.

           நெல்சன் மண்டேலா, ஆங் சாங் சூகி, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் போன்றவர்களையும் நாம் காந்தியர்கள் பட்டியலில் இணைக்கிறோம். இவர்களது போராட்டங்களுக்கு காந்தியச் சிந்தனைகள் உந்துசக்தியாக அமைந்திருக்கின்றன.  நெல்சன் மண்டேலா (1918-2013) தென்னாப்பிரிக்க நிறவெறி அரசை எதிர்த்து வன்முறையற்ற  அறப்போராட்டங்களில் ஈடுபட்டார். 1961இல்  அறப்போரைக் கைவிட்டு கொரில்லா போர் முறைக்குத் திரும்பினார். 27 ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டார். 1990இல் தென்னாப்பிரிக்கக் குடியரசு மலந்தது. அதன் முதல் அதிபராகத் தேர்வானார்.

        மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக அறவழியில் போராடி வரும் ஆங் சாங் சூகி 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். 1990 தேர்தலில் பெரும்பான்மை வாக்குகள் பெற்றாலும் புதிய சட்டத்தின்படி வெளிநாட்டவரைத் திருமணம் செய்ததால் அவரைத் தகுதியிழப்பு செய்தனர். 1991இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். 2021இல் மீண்டும் அங்கு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி இவரை கைது செய்தது. ரோஹிங்கா முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்களை தடுக்க முயலவில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும் இவரது ஜனநாயகத்திற்கான போராட்டங்களைக் குறைத்து மதிப்பிட இயலாது.

        மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் (1929-1968) அமெரிக்காவில் கருப்பர்கள் சம உரிமைபெற போராடிய ஆப்ரோ-அமெரிக்கப் பாதிரியார் ஆவார். காந்தியின் அறப்போர் முறைகளால் ஈர்க்கப்பட்ட மார்ட்டின் லூதர் கிங் 1959இல் அமெரிக்க நண்பர்கள் குழுவுடன் இந்தியச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அறப்போராட்டம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைத்துள்ள வலிமையான ஆயுதமாகும். கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டத்தின் உண்மைப் பொருளைத் தருவதாகும் என அகமகிழ்ந்துரைத்தார். இவரது அறப் போராட்டங்களின் விளைவாக  அமெரிக்க அரசு 1965இல் கருப்பினத்தவருக்கு வாக்குரிமை அளித்தும் கருப்பர், வெள்ளையர் இருவருமே சமம் என்பதை மனித உரிமைச்சட்டம் மூலம் நிறுவியது. 1968 ஏப்ரல் 4இல் சொற்பொழிவிற்காக ஒரு விடுதியில் தங்கியிருந்தபோது, மார்ட்டின் லூதர் கிங் தந்து 39வது வயதில் வெள்ளைத் தீவிரவாதி ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

            இன்றைய நவீன உலகில் காந்தியவாதிகள் கதராடை உடுத்தியும் காந்தியைப் போன்று அரையாடையிலும் இருக்க வேண்டிய அவசியமில்லை. இந்தப் புற அடையாளங்கள் மட்டும் காந்தியத்தைப் பிரதிபளிப்பதாக அமையாது. இந்தமாதிரி வேடமிடும் பலர் நம்மில் வாழ்கிறார்கள். சித்தர்கள் மரபில் பித்தர்கள், எத்தர்கள் பலர் நுழைந்ததைப் போன்று காந்திய மரபிலும் போலிகள் பலவுண்டு. உண்மை, அன்பு, எளிமை, அகிம்சை, சகிப்புத்தன்மை, நல்லிணக்கம், அறம் சார் வாழ்வு, மது உள்ளிட்ட போதை விலக்கம், தனிமனித ஒழுக்கம் போன்றவை காந்தியத்தின் சில கூறுகளாகும். இவற்றை முடிந்தளவிற்கு நம் வாழ்வில் பின்பற்ற முயல்வதே மகாத்மா காந்திக்கு நாம் செய்யும் கைம்மாறாகவும் அஞ்சலியாகவும்  இருக்க முடியும்.

(முற்றும்.)

(இக்கட்டுரை ‘பொம்மி’ ஜுன் & ஜூலை 2024 இதழ்களில் இரு பகுதியாக வெளியானது. இத்துடன் ‘மகாத்மாவின் கதை’ தொடர்  நிறைவுற்றது. விரைவில் ‘பேசும் புதிய சக்தி’ நூலாக வெளியிடுகிறது.)

நன்றி: பொம்மி சிறார் மாத இதழ் ஜுன் & ஜூலை 2024

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக