திங்கள், ஆகஸ்ட் 05, 2024

அரசு எந்திரத்தில் ஊடுருவும் காவிப் பாசிசம்

 

அரசு எந்திரத்தில் ஊடுருவும் காவிப் பாசிசம்

 

மு.சிவகுருநாதன்

          


           ஒன்றிய அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேரவும் இணைந்து பணியாற்றவும் 1966 முதல் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. 30.11.1966, 25.07.1970, 28.10.1980 ஆகிய நாள்களில் போடப்பட்ட உத்தரவுகளை 09.07.2024 அன்று ரத்து செய்து ஒன்றிய அரசு அலுவலகங்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதுவரையில் முறைமுகமாக நடைபெற்றுவந்த காவிமயப் பணி இனி மிகவும் வெளிப்படையாக நடைபெறும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருப்பது கிட்டத்தட்ட அரசுப்பணியில் சேர அடிப்படைத் தகுதியாகவும் கூட மாறக்கூடும். இதன் விளைவுகள் பாரதூரமானவை. இந்த பாசிச நோக்கம் நாட்டை அழிவுப்பாதையை நோக்கிச் செலுத்தும்.

       1925 செப்டம்பர் 25 ஒரு விஜயதசமி நாளில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் உருவானது. இதற்கு முன்னாலும் இந்து மதத்திற்கென இந்து மகா சபை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இருந்தன. முதல் உலகப்போருக்குப் பின் இத்தாலி மற்றும் ஜெர்மனியில் மேலெழுந்த பாசிச, நாசிசக் கொள்கைகளைப் பின்பற்றி  அதற்கிணையாக மக்களை ராணுவமயப்படுத்தும் நோக்கில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.  இவர்கள் இந்துக்களின் நலன்களைப் பாதுகாப்பதாகக் கூறிக் கொண்டாலும் அதற்கு பின்னால்  பாசிச, மத,  வெறுப்பரசியலை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்துள்ளனர்.

       இவர்கள் நீண்ட காலம் காங்கிரசுக்குள் இருந்து செயல்பட்டது, அன்றைய காங்கிரசில் இருந்த ஆதரவு சக்திகள் போன்றவை இவைகளுக்கு உதவிகரமாக அமைந்தன.  1948 ஜனவரி 30இல் அரங்கேற்றிய காந்தியின் படுகொலை இவர்களை அம்பலப்படுத்தியது. இதன்பிறகு விழித்துக் கொண்ட நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் தடை செய்தது. நாடு பெற்ற சுதந்திரத்தைச் சீர்குலைக்கும் இந்த சட்டவிரோத அமைப்பு அரசுக்கு அச்சுறுத்தலாக இருப்பதை வெளிப்படுத்திய ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளராக இருந்த அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் அமைப்பைத் தடைசெய்து உத்தரவிட்டார். இந்தத் தடை 18 மாதங்கள் மட்டுமே நீடித்தது.

         1966இல் தில்லியில் பசுவதைக்கு எதிரான நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் என்கிற போர்வையில்  நிகழ்த்திய வன்முறை, பெருந்தலைவர் காமராஜர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதன் பின்னணியில் அரசு ஊழியர்கள் இவ்வமைப்பில் இணைந்து செயல்படுவதும் கூட்டங்களில் பங்கேற்பதும் தடை செய்யப்பட்டது.  நெருக்கடி நிலை (1975-77), பாபர் மசூதி இடிப்பு (1992) ஆகிய நேரங்களிலும் இவ்வமைப்பு தடை செய்யப்பட்டிருந்தது.

     இந்திய அரசியலைப்பை ஏற்கிறோம். தேசியக்கொடியை மதிக்கிறோம் என்றெல்லாம் உறுதிமொழி அளித்தாலும் இந்த அமைப்பின் தலைமையிடமான நாக்பூரில் இன்றுவரை இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டதில்லை. இந்தியாவின் சமகாலத்தில் தோற்றுவிக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அண்ணல் அம்பேத்கரின் பஹிஷ்கரித் ஹிதகரிணி சபா, தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் போன்றவை சமத்துவம், ஜனநாயகம், சமூக நீதி போன்ற புதிய வெளிச்சத்தில் பயணிக்க  ஆர்.எஸ்.எஸ். மட்டும் எதிர்த்திசையில் போலிப் பெருமிதங்கள், பாசிச,  மதவெறி, இஸ்லாம் உள்ளிட்ட பிற மத எதிர்ப்பு என்கிற வகையில் இன்றுவரை பயணிக்கிறது.

         ஆளும் பா.ஜ.க.வை பின்னணியிலிருந்து இயக்குவது இந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பாகும். இவர்களுக்கிடையில் முரண்பாடுகள் இருப்பதாகக் காட்டிக் கொள்வது மக்களை ஏமாற்றும் ஒருவகையான தந்திரமாகும். இதோடு கூட 'சங் பரிவார்' எனப்படும் ஆயிரக்கணக்கான அமைப்புகளை இணைத்து அதன்மூலம் பா.ஜ.க. ஆட்சியதிகாரத்திற்கு வரவும் அவர்களது ஆட்சியில் தொடரவும் வழி சமைத்துத் தருவது இவர்களது முதன்மைப்பணியாகும்.

        இந்தியர்களை இந்துத் தன்னிலைகளாகக் கட்டமைத்து மூளைச் சலவை செய்ய பன்னெடுங்காலமாக பல்வேறு அமைப்புகளும் நிறுவனங்களும் செயலாற்றி வருகின்றன. அந்தவகையில் 1923இல் கோரக்பூரில் தொடங்கப்பட்ட கீதா பிரஸ் முதன்மையானதாகும். பத்தரிக்கையாளர் அக்‌ஷய முகுல் எழுதிய 'இந்து இந்தியா - கீதா பிரஸ் அச்சும் மதமும்' என்ற நூலில் மிக விரிவாகக் காணலாம். (தமிழில்: விடியல் பதிப்பகம்)

     இந்துப் புராணங்களை பல்வேறு இந்திய மொழிகளில் மலிவுப்பதிப்பாக கோடிக்கணக்கில் அச்சடித்து விநியோகித்திருப்பது இதன் சாதனையாகும். சாமான்ய மக்களை இவ்வாறு இலக்கு நோக்கி அணி திரளவைத்து இந்துத்துவவாதிகளின் பணிகளை எளிமையாக்கிய இந்நிறுவனத்திற்கு 2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேச காந்தி விருது வழங்கப்பட்டது.

      மகாத்மா காந்தியின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு 1995இல் ஆண்டுதோறும் இவ்விருது வழங்க முடிவெடுக்கப்பட்டது. பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி மற்றும் இரு அறிஞர்கள் அடங்கிய குழு இவ்விருதுக்கு உரியவரைத் தேர்ந்தெடுக்கும். இந்தியத் தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுத்த விதம் நமக்குத் தெரியுந்தானே! 

 


         இதன் மூலம் மோடி தங்களது கருத்தியல் கூட்டாளிகளுக்கு காந்தி பெயரிலான அமைதி விருதளித்து மகிழ்ந்தார். கீதா பிரஸ் மகாத்மா காந்தியின் கொள்கைகள், நோக்கங்களுக்கு எதிராகச் செயல்படும் நிறுவனமாகும். இது சாவர்க்கர், கோட்சே போன்றோருக்கு அளிப்பதற்கு நிகரானது என்று பலரால் விமர்சிக்கப்பட்டது.

       மகாத்மா காந்தி தன்னை இந்துவாகவும் வைணவராகவும் அடையாளம் கண்டார். பகவத்கீதையை விதந்தோதினார். அதன்மூலம் இந்தியர்களிடம் ஒன்றிணைப்பு ஏற்படுத்த விரும்பினார். இவர்கள் பகவத்கீதை உள்ளிட்ட எதையும் பிளவுண்டாக்கும் வெறுப்பரசியல் உத்தியாகவே அணுகினர். காந்தியும் இந்துத்துவமும் வேறுபடும் புள்ளிகளாக இதை இனங்காண வேண்டியுள்ளது.   

    இந்துத்துவத்தின் செயல்பாடுகளுள் ஊடுருவுதல் முதன்மையான ஒன்று. வரலாற்றுக் காலந்தொட்டு இத்தகைய ஊடுருவல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பவுத்தம் இந்து மதத்தால் ஊடுருவி அழிக்கப்பட்ட வரலாற்றை நாமறிவோம்.

      ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற அரசு நிர்வாகத்திற்குள் ஊடுருவும் நடைமுறையை இவர்கள் பல காலமாகக் கடைப்பிடிக்கிறார்கள். கல்வி, கலாச்சாரம், ராணுவம் என எதிலும் இவர்களது ஊடுருவல் தாக்கங்கள் நிறைந்ததாக உள்ளன. அதிகாரம் இருக்கும் போதும் இல்லாத போதும் இது தொடர்கிறது. ஆட்சியதிகாரம் இவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு, வசதிகளை உருவாக்கித் தருகிறது.

     குடிமைப் பணித்தேர்வுகளில் முறைகேடுகள் செய்து அரசு எந்திரத்தை ஏறத்தாழ முழுமையாக கைப்பற்றி இருக்கும் தன்மையை அவர்கள்  இயங்கும் விதத்தை வைத்து அறிய முடிகிறது. இவர்களைக் கொண்டே தமிழ்நாடு, கேரளா  போன்ற காவியதிகாரம் செல்லுபடியாகாத மாநிலங்களில் மறைமுகமாக குறுக்குவழியில் அதிகாரம் செலுத்தமுடிகிறது.

     புதியகல்விக் கொள்கை 2020 உருவாக்கதின்போது காவியாதிக்கம் முழுமையாக வெளிப்பட்டது. NCERT, CBSE போன்ற அமைப்புகளில் காவித்தாக்கம் துலக்கமாகத் தெரிகிறது.  இதன் மூலம் வரலாற்றைத் திரித்தல், மறைத்தல், இந்துத்துவ வரலாற்றையும் புராணங்களையும் பொது வரலாறாகவும் அறிவியலாகவும் உருமாற்றுதல் என்ற செயல்திட்டங்கள் விரைவாக நடைமுறைக்கு வருகின்றன. தேசியத் தேர்வு முகமை (NTA),  அரசுப் பணியாளர் தேர்வாணையம்  (UPSC) போன்றவை இவர்களது மறைமுகச் செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பிரிவுகளாக இயங்குகின்றன.

     ராணுவம், காவல்துறை போன்றவற்றில் வலதுசாரிகளின் நுழைவு பேரழிவை உண்டாக்கும். இவர்களது பாசிசக் கொள்கைகள், அதிபர் ஆட்சிமுறை நோக்கிய நகர்வுகள், கூட்டாட்சி முறைக்கு எதிரான செயல்பாடுகள் அனைத்தும் இந்திய ஜனநாயகத்திற்குக் கேடு விளைவிக்கக் கூடியவை. இவர்களது கொள்கைகளுள் ஒன்று மக்களை அதாவது இந்துக்களை ராணுவமயப்படுத்துவது. இதற்கு ஒருவகையில் உதவிசெய்வது அக்னிவீர் திட்டமாகும். ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை ராணுவத்தில் நுழைத்து பயிற்சியளித்துப் பின்னர் இவர்களது பாசிச வேலைத் திட்டங்களுக்குப் பயன்படுத்தும் நோக்கமிருப்பதை  இதில் ஆண்களின்உணரலாம்.

      ஒரே சமயத்தில் உருவான இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளில் ஒப்பீட்டளவில்  இன்னமும் பாகிஸ்தான் ஆட்சிமுறை, நிலைத்தன்மை, வளர்ச்சி போன்ற எவற்றிலும் பின்தங்கியிருக்கும் காரணம் வெளிப்படையானது. அத்தகைய நிலை இந்தியாவிற்கு ஏற்பட அதன் முன்னேற்றங்களை பின்னோக்கிச் செலுத்தும் வேலைகளில் வலதுசாரிகள் ஈடுபடுகின்றனர்.

       மதவெறியும் வெறுப்பரசியலும் மனித குலத்திற்கு மட்டுமல்ல; வளர்ச்சிக்கும் எதிரானது. கார்ப்பரேட்டுகள் அதிகாரத்துடனுடான இணக்கம் காரணமாக வெறுப்பரசியலைக் கண்டும் காணாமல் இருக்கலாம். இது அவர்களுக்கும் கேடு என்பதை காலம் உணர்த்தும்.

     அடல்பிகாரி வாஜ்பாய் காலத்தில் கூட நீக்கப்படாத இந்தத் தடை மோடியின் பெரும்பான்மையில்லாத அரசு இந்த மோசமான முடிவை அறிவித்துள்ளது. சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் போன்றவர்களின் தயவில் ஆட்சியை நடத்தும் மோடி இத்தகைய முடிவை எடுத்திருப்பது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அவர்களது இடத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. அமைச்சரவையில் எதிர்பார்த்த துறைகள், சபாநாயகர் பதவி என எதுவும் கிடைக்காத நிலையில் பா.ஜ.க.வின் மேலாதிக்கம் வலுக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளை அவர்கள் அனுமதித்தால் மக்களால் மீண்டும் நிராகரிக்கப்படுவார்கள்.

           உச்சநீதிமன்றத்தை நாடி இதற்கு தடை வாங்குவது ஒன்றே தீர்வு. காவி நிலைப்பாட்டுடன் பெருமளவு ஒத்துப்போகும் நிலையில் உரிய நீதி கிடைக்கும் என்றும் சொல்வதற்கில்லை.

      99 இடங்களைப் பெற்று எதிர்க்கட்சி வரிசையிலிருக்கும் காங்கிரசும் இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கும் வரும் ஐந்தாண்டுகளும் பெரும் போராட்டமாக அமையும். பெரும் மக்கள் இயக்கம் நடத்தி ஜனநாயகத்திற்கு எதிரான பாசிச சக்திகளை முறியடிக்க வேண்டும். இதற்கான செயல்திட்டங்களை வகுக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் போராடுவது ஒருமுறை; மக்கள் மன்றத்திலும் அணிதிரட்ட வேண்டிய கட்டாயத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் இருக்கின்றன.    

 

நன்றி: பேசும் புதிய சக்தி - ஆகஸ்ட் 2024 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக