கல்வியில் சமத்துவத்தைத் தேடி…
மு.சிவகுருநாதன்
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் 2023 ஆகஸ்ட் 9 அன்று +2 மாணவர் சின்னதுரையும் அவரது தங்கையும் சகமாணவர்கள் சாதிய வன்மத்தால் மிகக் கொடூரமாக அரிவாளால் வெட்டினர். இதற்கு முன்பும் பள்ளிகளில் சாதிய வன்மம் கொண்ட பல நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. அப்போதே செயல்பட்டிருருக்க வேண்டிய அரசு நிர்வாகம் காலதாமதமாக விழித்துக் கொண்டு சில நடவடிக்கைகளில் இறங்கியது. அவற்றில் ஒன்று பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினை இல்லாத சூழலை உருவாக்க அரசுக்கு ஆலோசனை வழங்க முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒருநபர் குழு ஒன்றை அமைத்தது. இக்குழுவிடம் பெரும்பான்மையான அரசியல் கட்சிகள், ஆசிரிய இயக்கங்கள் போன்றவை தங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்க விரும்பவில்லை. இது ஏமாற்றத்திற்குரியது மட்டுமல்ல, கள்ள மௌனத்தையும் கடந்துபோகும் தன்மையையும் இங்குள்ள சாதிய இறுக்கத்தை வெளிப்படுத்துவதாகவே பார்க்க வேண்டும். நீதிபதி கே.சந்துரு இதற்கென மதிப்பூதியம் எதுவும் பெறாமல் சமூகக் கடமையாக எண்ணி நீண்ட உழைப்பிற்குப்பின் விரிவான ஆய்வறிக்கை தயாரித்துள்ளார்.
நீதிபதி கே.சந்துரு 610 பக்கங்கள் கொண்ட சமூகவியல் ஆவணமான இந்த ஆய்வறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் மே 29, 20224 இல் அளித்தார். 14 தலைப்புகளில் விரிவான சான்றுகளுடன் ஆய்வு செய்த அறிக்கையில் இறுதியில் 15வது தலைப்பில் தனது பரிந்துரைகளை முன்வைத்துள்ளார். இப்பரிந்துரையில் சில அம்சங்கள் வெளியானவுடன் சங் பரிவார் கும்பல்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தத் தொடங்கின. அரசும் கல்வித்துறையும் எதுவும் பேசாமல் இவற்றைக் கிடப்பில் போடும் முயற்சியில் இறங்கிவிட்டன. இப்பரிந்துரைகளில் ஒரு சிலவற்றையாவது அமல்படுத்தும் எண்ணமோ, விருப்புறுதியோ அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. முழு அறிக்கையைப் படிக்காமல் பரிந்துரைகளை மட்டும் விமர்சிக்கும் நிலையில், முழு அறிக்கை ஆங்கிலத்தில் நூலாக வெளியானது. (பக்.680, விலை: ரூ.750, வெளியீடு: போதிவனம், சென்னை) பரிந்துரைகள் மட்டும் துண்டறிக்கையாகவும் வெளியிடப்பட்டுள்ளது. இப்பரிந்துரைகளை உடன் அமல்படுத்தவும் உள்ளாட்சி அமைப்புகள் கட்டுப்பாட்டில் தொடக்கக் கல்வி, ஒன்றிய அளவிலான சத்துணவு சமையற்கூடம் ஆகியவற்றை மறுபரிசீலனை செய்யவும் திண்டிவனத்தில் வி.சி.க., மக்கள் கல்வி இயக்கம், பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் ஏற்பாட்டில் செப்டம்பர் 01, 2024 நடந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரசுப்பள்ளிகளின் பெயர்களில் உள்ள சாதி முன், பின்னொட்டுகளை நீக்குவது, அதாவது கள்ளர் சீரமைப்பு (மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை), ஆதி திராவிடர் பள்ளிகள் (ஆதி திராவிடர் நலத்துறை), பழங்குடியினர் பள்ளிகள் (பழங்குடியினர் நலத்துறை) ஆகியவற்றின் பெயர்களையும் அரசுப்பள்ளிகளுக்கு நிதியுதவி வழங்கியதால் வைக்கப்பட்டிருக்கும் பெயர்களில் உள்ள சாதிப்பெயரையும் நீக்க வேண்டும் என்று முதலாவது பரிந்துரையாக உள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பெயர்களை இரவோடு இரவாக அகற்றியதைப் போல இவற்றையும் செய்துவிடலாம். ஊர், தெருப் பெயர்களில் இருக்கும் சாதியையும் நீக்கலாம். ஆனால் அரசுக்கு உண்மையான அக்கறை இருக்கிறதா? பிறதுறைகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் மேற்கண்ட பள்ளிகளைப் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்ற பரிந்துரையும் அடுத்து உள்ளது. இதுகுறித்து சாதிக் கட்சிகள் போராட்டங்கள் நடத்தியவுடன் அரசுக்கு இத்தகைய எண்ணமில்லை என்று உடன் மறுப்பு வெளியிடுகின்றனர்.
ஆசிரியர்களுக்குக் காலமுறை கட்டாய இடமாறுதல், கல்வி அலுவலர்கள் அப்பகுதியின் ஆதிக்க சாதியினராக நியமிக்கக் கூடாது என்பதும் பரிந்துரையில் இடம்பெறுகிறது. பிற அரசு ஊழியர்களைப் போல ஒரு பணியிடத்தில் மூன்றாண்டுகள் மட்டும் இருக்க வழிசெய்யலாம். கல்வி அலுவலர்களை சொந்த மாவட்டத்தில் பணியமர்த்துவதில்லை என்கிற பழைய விதிகள்கூட தற்போது நடைமுறையில் இல்லாத நிலையில் ஆசிரியர்களுக்கு மட்டும் எப்படிச் செயல்படுத்துவார்கள் என்கிற அய்யம் எழுவது இயல்பு.
மாணவர் வருகைப் பதிவேட்டில் சாதிப்பெயரை எழுதாமல் அவற்றை மந்தனமாகப் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஒரு ஆற்றுப்படுத்துநர்களை (Counsellors) நியமித்தல், 500க்கு மேல் மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் இருபால் நல அலுவலர்களை (SWO) பணியமர்த்துதல், மாணவர்கள் கருத்துகளைத் தெரிவிக்கப் புகார்ப் பெட்டி அமைத்தல், மேனிலை வகுப்புச் சேர்க்கையில் இடஒதுக்கீட்டை முழுமையாக அமல் செய்தல், கல்வி அல்லாத நோக்கங்களுக்காகப் பள்ளியைப் பயன்படுத்துவதைத் தடை செய்தல், சாதி வன்முறை அதிகம் நிகழும் பகுதிகளில் சிறப்பு உளவுப் பிரிவுகளை அமைப்பது, சாதி ஒழிப்பிற்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் பள்ளியைத் தாண்டி சமூக அளவில் உரிய நடவடிக்கைகள் எடுத்தல் போன்ற பரிந்துரைகள் எளிதாக நடைமுறைபடுத்தக் கூடியவை. ‘மாணவர் மனசு’ புகார்ப்பெட்டி நடைமுறையில் உள்ளது.
நான்கு வகையான பாடத்திட்டங்களை ஒருங்கிணைத்து சமச்சீர் கல்விமுறை 2010இல் அமலானது. பாடத்திட்டங்கள் ஒன்றானதால் மெட்ரிகுலேஷன் (பதின்ம) என்ற பெயருக்கு அவசியமில்லாமல் போனது. இருப்பினும் இன்றுவரை அப்பெயர் நீக்கப்படவில்லை. மேலும் தனியார் சுயநிதிப்பள்ளிகளில் தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தில் இடம்பெறாத இந்தியைக் கற்பிக்க பிற பாடங்களுக்கான நேரம் களவாடப்படுவதையும் அரசும் துறையும் கண்டுகொள்வதில்லை. தனியார் சுயநிதிப்பள்ளியின் ஏகபோகத்திற்கு ஆதரவாக அவர்களுக்கென்று தனி மாவட்டக் கல்வி அலுலர்களை நியமிக்கும் போக்கும் உள்ளது. சாமன்யர்கள் வீட்டுக் குழந்தைகள் நுழைமுடியாத பள்ளிகளுக்கு ‘Public School’ என்று பெயர் வைக்கும் நகைமுரணும் உண்டு. ICSE அல்லாமல் CBSE பாடத்திட்டத்தைப் பின்பற்றும் தனியார் சுயநிதிப்பள்ளிகளும் தங்களை விளம்பரத்திற்காக International School என்று அழைத்துக் கொள்வது வேடிக்கை.
அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், சுயநிதிப் பள்ளிகள் என்கிற பாகுபாடுகள் இருபுறமிருக்க அரசுப்பள்ளிகளிலேயே தகைசால் பள்ளிகள், மாதிரிப்பள்ளிகள், சாதாரண பள்ளிகள் என்கிற பாகுபாடு உருவாக்கப்படுகிறது. இதில் சமத்துவம், சமூகநீதி எங்கேயிருக்கிறது? பல ஆண்டுகளுக்கு முன்பு மாவட்டத்திற்கு ஒரு மாதிரிப் பள்ளி என நகரத்தில் இருக்கும் பள்ளி தெரிவு செய்யப்பட்டது. இப்பள்ளிகள் சிறப்புக்கவனம் ஏதுமின்றி இன்று சாதாரணப் பள்ளிகளாகிவிட்டன. மாவட்டந்தோறும் புதிய மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. இவற்றில் 9, 10, +1, +2 வகுப்புகள் மட்டுமே இயங்குகின்றன. சில இடங்களில் +1, +2 வகுப்புகள் மட்டுமே உள்ளன. தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் பயிலும் உண்டு, உறைவிடப் பள்ளியாக இவை செயல்படுகின்றன. சில பத்தாண்டுகளுக்கு முன்பு ‘கோழிப் பண்ணைப் பள்ளிகள்’ என்றழைக்கப்பட்ட தனியார் சுயநிதிப்பள்ளிகள் இவ்வாறுதான் ஆரம்பிக்கப்பட்டன. மாதிரிப்பள்ளிகளில் கணிதவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல் பிரிவே இல்லை. அதாவது ‘நீட் கோச்சிங்’ பள்ளிகள் என்று இவற்றைச் சொல்லலாம். மாவட்டத்திலுள்ள வேறுபள்ளி ஆசிரியர்கள் இங்கு மாற்றுப்பணியில் பணி செய்கின்றனர். அவர்களது பணியிடத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தகையப் பாகுபாடுகளை அரசு திட்டமிட்டு உருவாக்குகிறது.
இது ஒருபுறமிருக்க புதுதில்லியின் அரவிந்த் கெஜ்ரிவால் மாடலைக் கொண்டுக் கட்டமைக்கப்பட்டதுதான் தகைசால் பள்ளிகள் (School of Excellence) ஆகும். இது ஒருவகையில் பி.எம்.ஶ்ரீ பள்ளிகளின் நகலாகும். ஒரே வேறுபாடு இங்கு இந்தி இல்லை என்பது மட்டுந்தான். இப்போது தமிழ்நாடெங்கும் 28 தகைசால் பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் மகாவிஷ்ணு என்பவர் மூடப்பரப்புரையில் ஈடுபட்ட சென்னை அசோக் நகர் பெண்கள் மேனிலைப்பள்ளி ஆகும். இங்கு இதற்கெல்லாம் கூடுதல் நிதியும் வசதிகளும் செய்யப்படுகின்றன. எனவே அரசே சமத்துவத்திற்கு எதிராக செயல்படுகிறது. கல்வித்துறையும் நிர்வாகமும் அரசின் நிதியில் இக்கூட்டத்தை ஏற்பாடு செய்துவிட்டு, சிக்கல் ஏற்பட்டவுடன் பள்ளி மேலாண்மைக் குழுவை கைகாட்டிவிட்டுத் தப்ப நினைக்கிறார்கள். தமிழ்நாட்டுக் கல்வித்துறையில் காவி ஊடுருவலை அப்பட்டமாக வெளிப்படுத்தும் நிகழ்வு இதுவாகும். தன்னார்வலர்கள் என்ற போர்வையில் காவி ஆட்களை உள்நுழைக்கும் வேலை ஒன்றிய அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசும் ஈடுபடுவது அதிர்ச்சியளிக்கக்கூடியதாகும்.
ஆசிரியர் பட்டயப் பயிற்சி (D.T. Ed.) கல்வியியல் (B.Ed.) பாட்த்திட்டங்கள் மாற்றப்பட்டு சமூக நீதி, சமத்துவம், சமயச்சார்பின்மை ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டிருக்க வேண்டும் என்கிற பரிந்துரை அவசியமானது. ஆனால் இங்கு பள்ளிப் பாடத்திட்டங்களும் பல்வேறு குளறுபடிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றைத் திருத்தும் ஒழுங்கு செய்யும் எண்ணம் அரசுக்கோ, கல்வித்துறைக்கோ இருப்பதாகத் தெரியவில்லை. மனுநீதி, வேதக்கல்வி, குருகுலங்கள் போன்றவற்றை புகழ்ந்துரைக்கும் பாடங்கள் தமிழக அரசின் பாடத்திட்டத்தில் உண்டு. இவற்றையும் களையெடுக்க வேண்டும். சமத்துவம் பெறுதல், சமத்துவம் என்கிற தலைப்புகளில் 6 மற்றும் 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் குடிமையியல் பகுதியில் பாடங்கள் உள்ளன. இவற்றைப் படித்தோ அல்லது அதனைப் புரிந்துகொண்டோ சமத்துவத்தை அடைய இயலாது என்பதே உண்மை. ஏனெனில் பாடங்கள் அந்தளவிற்கு மொண்ணையாக உள்ளன.
மாணவர்கள் கண்ணியமான உடை, சிகை அலங்காரம், பள்ளியில் அலைபேசிப் பயன்பாடு போன்றவற்றை ஆசிரியர்களால் நடைமுறையில் ஒன்றும் செய்யமுடிவதில்லை. சட்டங்களும் விதிமுறைகளும் ஒன்றும் செய்துவிட இயலாது. ரேஷன் அரிசி, மது போன்றவற்றை சிறிதளவு எடுத்துச் சென்றாலே வாகனத்தைப் பறிமுதல் செய்துவிட முடியும். பல லட்சம் மதிப்புள்ள் பைக்குகளில் பொதுச்சாலைகளில் ‘மரண சாகசம்’ மேற்கொள்ளும் வாகனங்களைப் பறிமுதல் செய்ய சட்டத்தில் இடமுண்டா? குழந்தைத் தொழிலாளர் சட்டம் எந்த அளவிற்கு நடைமுறையில் உள்ளது? 18 வயது நிறைவெய்திய கல்லூரி மாணவர்கள் பேருந்து, ரயில்களில் செய்யும் விபரீத விளையாட்டுகளைச் சட்டத்தால் தடுக்க முடிவதில்லை. இதற்கு பெற்றோர்கள் ஒத்துழைப்பும் பங்கும் அவசியம். ஆசிரியர்களின் சில அதீத நடவடிக்கைகள் தண்டனைக்குரிய குற்றமாக மாறிவிடுகின்றன. 1-8 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் விலையில்லாச் சீருடை வழங்கப்படுகிறது. பிற வகுப்பு மாணவர்கள் சீருடையில் வந்தாலும் அவற்றை அளவு, உயரம் போன்ற இன்னபிற அம்சங்களை ஆசிரியர்களால் கட்டுப்படுத்த முடியாது. இந்நிலையில் கயிறு, பொட்டு, திலகம், மோதிரங்கள், கைப்பட்டைகள், மிதிவண்டிகள் போன்றவற்றில் சாதியைப் பிரதிபளிக்கும் குறிப்பிட்ட வண்ணங்களில் வருவதைத் தடுக்க வேண்டும் என்ற பரிந்துரை பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை வெறுமனே உத்தரவு போட்டுவிட்டு அகன்றுவிடும். ஆசிரியர்கள்தான் பெரும்பாலும் பாதிக்கப்படுவார்கள். ஆசிரியர்கள், அலுவலர்களும் இத்தகைய நடவடிக்கைகளிலும் சாதிய அமைப்புகளிலும் ஈடுபடுவது தடுக்கப்பட வேண்டும்.
நமது நாட்டின் அரசிலமைப்பும் கல்வியும் மதச்சார்ப்பற்றவை. அந்த அமைப்பின் கீழ் இயங்கும் பெரும்பாலானோர் மதம் சார்ந்த அடையாளத்துடன் இயங்குகின்றனர். குடியரசுத் தலைவர், பிரதமர், நீதிபதிகள் போன்ற உச்ச பதவிகளில் இருப்போரும் மதத்தைக் கைவிடுவதில்லை. மதச்சார்ப்பற்ற அரசின் தலைவரான பிரதமர் ராமர் கோயில் திறப்பு விழாவை அரசு விழாவாக நடத்தினார். அதற்கு முன்னதாக இந்து புனித யாத்திரைகள் மேற்கொண்டு நாடகமாடினார். பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் வீட்டுக்கழைத்து விநாயகர் பூசையில் ஈடுபடுத்துகிறா தலைமை நீதிபதி சந்திரசூட். வலதுசாரி பா.ஜ.க. அரசின் கீழ் மதச்சார்பின்மை என்பது கேள்விக்குரியதாகிவிட்டது. பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களும் சாதி, மதங்களுடன் அடையாளப்படுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை மிகுந்துவிட்டது.
ஒன்றிய அரசுதான் இப்படியென்றால் திராவிட மாடல், சமூக நீதி அரசும் திறப்பு, அடிக்கல் விழாக்களை இந்து சமய விழாக்களாகத்தான் நடத்துகிறது. அணையிலிருந்து நீர் திறப்பு, பூமி பூசை, திறப்பு விழா எல்லாம் மந்திரங்களுடன் வேத விற்பன்னர்கள் புடைசூழ நடக்கிறது! கல்வித்துறை உயர்நிலை அலுவலர்கள் தொடங்கி சாதாரண ஆசிரியர் ஈறாக அனைவரும் இந்தச் சமூகத்தின் விளைச்சல்தான். அவர்களும் சாதி, மதங்களை விடாமல் அதே உணர்வுடன்தான் நடமாடுகின்றனர். இவர்கள் பூசும் அரிதாரங்களை யார் அழிப்பது? பள்ளி காலையில் தொடங்குவதிலிருந்து (காலை வழிபாட்டுக் கூட்டமாம்!) ஓவ்வொரு நிகழ்வுகளிலும் மதத்தின் சாயல் படிந்திருக்கிறது. மதச்சார்பற்ற கல்வியில் மத நீக்கம் நடைபெறவே இல்லை.
நாட்டு நலப்பணித் திட்டத்தை 9ஆம் வகுப்பு வரை நீட்டித்தல், ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் சுதந்திரமாக இயங்கக்கூடிய ‘சமூகநீதி மாணவர் படை’யை உருவாக்குதல் போன்ற பரிந்துரைகளும் உள்ளன. படை என்றாலே நமக்குப் பயமாக இருக்கிறது! ‘சமூக சமத்துவ மாணவர் அணி’ என்றாவது பெயர் வைக்கலாம். பொதுவாக இந்த மாதிரி படைகள் எல்லாம் விழாவிற்கு வரும் விருந்தினர்களை அணிவகுப்பு மரியாதை செய்து அல்லது கைதட்டி வரவேற்கும், கடும்வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்கும் படைகளாகவே உள்ளன. அசோக் நகர் பள்ளியில் மூடன் மகாவிஷ்ணுவிற்கு நடக்கும் தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு மரியாதை இணையத்தில் காணக் கிடைக்கிறது. சாரணர் இயக்கம் உள்ளிட்ட இம்மாதிரியான அமைப்புகள் குழந்தைகளை ராணுவமயப்படுத்தும் பாசிச குணங்களைக் கொண்டவை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பள்ளிகளில் பல்வேறு உறுதிமொழியேற்கும் சடங்குகள் உண்டு. மாணவர் ஒவ்வொருவரும் நெஞ்சில் கைவைத்து உளப்பூர்வமாக உறுதிமொழியேற்பது என்கிற பழையமுறை நின்றுவிட்டது. ஹிட்லரைப் போன்று கையை முன்நீட்டி உறுதிமொழி எடுக்கும் நிலைக்கு பள்ளிகள் புதிய பரிணாமம் பெற்றுள்ளன. (உபயம்: நாம் தமிழர் கட்சி)
மாவட்டந்தோறும் புத்தகக் கண்காட்சிகள் பள்ளிக் கல்வித்துறையால் நடத்தப்படுகின்றன. அங்கு புத்தகங்களுக்குத் துளியும் தொடர்பில்லாத பட்டிமன்றப் பேச்சாளர்கள் எனும் ‘வாய் வியாபாரிகள்’ அழைக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கில் பணம் பெறுகிறார்கள். ஆண்டுக்கு மூன்றுமுறை அரசுப்பள்ளிகளில் நடக்கும் தமிழ்க்கூடல் நிகழ்விற்கு ரூ.9000 பணம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவற்றைப் பெற முன்னாள், இந்நாள் ஆசிரியர்களிடையே போட்டியே நடக்கிறது. இந்த ‘வாயாளிகள்’ மட்டுமல்லாது சங்கிகள், மூடப்பழக்கங்களை பரப்புவோர் நடமாடும் இடமாக அரசுப்பள்ளிகள் மாற்றப்பட்டுள்ளன. தேசிய கல்விக்கொள்கை 2020ஐ ஏற்க மறுப்பதாகச் சொல்லிக் கொண்டு தன்னார்வலர்களுக்கு பள்ளியை வாடகைக்கு விடுகிறார்கள். இத்தகைய நிறுவனங்கள் பெரும்பாலும் ஆர்.எஸ்.எஸ். சார்புடையவை. இவர்கள் அறிவியல், ஊக்கமூட்டுதல், தேர்வுக்கு ஆயத்தப்படுத்துதல், ஜெயித்துக் காட்டுதல் என்ற போர்வையில் மூட, மதப் பரப்புரைகளில் இறங்குகின்றனர். (எ.கா.) அகஸ்தியா இன்டர்நேஷனல் பவுண்டேஷன்
ஆசிரியர்களுக்கு நடக்கும் பணியிடைப் பயிற்சிகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. வெறுமனே பொழுதைக் கடத்துதல், Youtube வீடியோக்களைப் பார்த்தல் என்பதாக இவை அமைகின்றன. இப்பயிற்சிகளில் எவர் வேண்டுமானாலும் நுழைந்து தங்களது மூடக்கருத்துகளைப் பரப்ப அனுமதி வழங்கப்படுகிறது. சில சமயங்களில் ஆசிரியர்களும் கல்வி அலுவலர்களும் இவர்களின் முகவர்களாகவும் விளம்பரதாரர்களாகவும் செயல்படும் போக்கும் காணப்படுகிறது.
இந்தக் கல்வியாண்டின் தொடக்கத்தில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடக்கும் NMMS தேர்வு பற்றிய ஒரு நாள் பயிற்சி கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடந்தது. Heartfulness என்ற அமைப்பின் ஆட்கள் யோகா என்ற போர்வையில் அப்பயிற்சியை ஆக்ரமித்தனர். “மூளை சொல்வதைக் கேட்டு ஏமாந்தது போதும், இனி இதயம் சொல்வதைக் கேளுங்கள்”, என்று இவர்கள் மூடப்பரப்புரையின் அடிநாதம். கண்ணை மூடி தியானம், அது, இது என்று பிதற்றுகிறார்கள். அப்பகுதி அரசுப்பள்ளி ஒன்றின் அறிவியல் ஆசிரியர் இதன் பயிற்றுநராகவும் செயல்படுகிறார். அறிவியல் படித்தவர்களிடமே அறிவியல் மனப்பான்மை இல்லை. தொடர்ந்து இவர்கள் பள்ளிகள் தோறும் இம்மாதிரியான மூடக் கருத்துகளை விதைக்கின்றனர். பெரும்பாலான ஆசிரியர்கள் மத்தியில் இதற்கு பெரும் வரவேற்பிருக்கிறது. அரசுப்பள்ளிகளே இப்படியென்றால் தனியார் சுயநிதிப்பள்ளிகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. இங்கு ஆசிரியர் தினம், பெற்றோர் தினக் கொண்டாட்டம் என்கிற பெயரில் பாதபூசை செய்வது நடக்கிறது. மாதா, பிதா, குரு, தெய்வம் என யாருக்கும் பூசை செய்யும் இடமல்ல பள்ளிக்கூடங்கள். கல்வி ஒருபக்கம் கல்வி மாஃபியாக்கள் கைகளிலும் மறுபுறம் இன்று மூடர்களின் (காவிகளின்) கூடாரமாகவும் மாற்றப்பட்டுள்ளது.
அறநெறி வகுப்புகளை வாரந்தோறும் கட்டாயமாக்கி சமூக நீதி, சமத்துவம், பாகுபாடு காட்டாமை போன்ற கருத்துகளை உள்ளடங்கிய வழிகாட்டி உருவாக்கப்படவேண்டும் என்ற பரிந்துரையும் உள்ளது. இங்கு நல்லொழுக்கம், நன்னெறி, நீதி போதனை, மதிப்புக்கல்வி, வாழ்க்கைக் கல்வி, அறநெறிக்கல்வி எதுவாகினும் பாடத்திட்டம் ஒன்றுதான். மனுநீதிச்சோழன், பீர்பால், தெனாலிராமன் போன்ற வருண தர்மத்தை நிலைநாட்டும் அடிப்படைவாதக் கதைகள் என்றும் நிலவுகின்றன. சமத்துவம், சமூக நீதி, பகுத்தறிவு ஆகியவற்றை மையமாகக் கொண்ட புதிய முயற்சிகள் இன்னும் பரவலாக பள்ளிகளையும் ஆசிரியர்களையும் சென்றடையவில்லை. ஆசிரியர்களுக்காக அரசு நடத்தும் ‘கனவு ஆசிரியர்’ மாத இதழில்கூட மாலன் எழுதிய ‘தப்புக் கணக்கு’ சிறுகதை மீள்பிரசுரம் பெறுகிறது. இது அடிப்படைவாத மனநிலையில் எழுதப்பட்ட ஒன்று.
குழந்தைகளுக்கான கல்வியில் அக்கறை கொள்வோர் பல தரப்பாக உள்ளனர். அவர்களில் பலர் இவற்றைக் கண்டும் காணாமல் இருக்கின்றனர். பாத பூசை, குரு தட்சணை, மாதா பிதா குரு தெய்வம் என அடிப்படைவாதக் கருத்துருவாக்கம் அனைத்து நிலைகளிலும் நடைபெறுகிறது. சில பத்தாண்டுகளாக கல்வித்துறையில் ஆழமாக வேரோடியுள்ள இவற்றை எளிதில் அகற்றமுடியும் என்று தோன்றவில்லை. தனிநபர் உரிமையாக வீட்டிலிருக்க வேண்டிய மதம் கல்விப்புலத்திற்கு வரும்போது மூடநம்பிக்கையை மட்டுமின்றி வெறுப்பையும் விதைக்கிறது. வெறும் சட்டங்களும் விதிமுறைகளும் சமூக நல்லிணக்கத்தை உருவாக்கவும் வெறுப்பைப் போக்கவும் உதவாது. தமிழக அரசால் உருவாக்கப்பட்ட கல்விக்கொள்கையிலும் இவற்றிற்கான தீர்வுகளோ செயல்திட்டங்களோ இல்லை. மகாவிஷ்ணு விவகாரம் போன்றவை அவ்வப்போது தலைப்புச்செய்தியாகி பின்னர் மறக்கப்பட்டுவிடும். இம்மாதிரியான வேலைகள் எங்கோ ஓரிடத்தில் தொடர்ந்துகொண்டே இருக்கும்.
பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் பெரும்பாலும் கல்விச்சூழலை அடிப்படையாகக் கொண்டதாக இருப்பதில்லை. அதிகாரம், காழ்ப்புணர்வு, கல்வி பற்றிய துளியும் புரிதலில்லாத அதிகார வர்க்கம் எடுக்கும் ‘குளிர்பதன முடிவுகள்’ ஆசிரியர்கள் மீதும் குழந்தைகள் மீதும் திணிக்கப்படுகின்றன. குழந்தைகள் உரிமைகள் என்று சொல்லிக் கொண்டு அவர்களின் மீது திணிக்கும் வன்முறைகள் ஏராளம். கல்வித்துறை அறிவார்ந்து செயல்படவேண்டும் என்று கோரிக்கை வைக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. மாதம் இரு சனிக்கிழமைகள் வேலை நாள், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் (10, +1,+2) விடுமுறைகள் கூட இல்லாமல் தினமும் 12 மணி நேரம் சிறைக் கொட்டடி போல் அடைத்து வைக்கப்படவேண்டும் உயர் அதிகாரிகள் விரும்புகிறார்கள். 14.09.2024 அன்று TNPSC தேர்வுகள் இருப்பதைக்கூட அறியாமல் சனிக்கிழமை வேலைநாள் என்று அறிவிப்பது பள்ளிக் கல்வித்துறைக்கு அழகல்ல. அறிவைப் பரப்பவும் அறிவு சார்ந்து சிந்திக்கவும் அறிவுப்பூர்வமாகச் செயல்படவும் பள்ளிக் கல்வித்துறை உரிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அறிவுக்கும் கல்விக்கும் தொடர்பற்ற சூழலை விதைக்கக் கூடாது.
நன்றி: காக்கைச் சிறகினிலே… - இலக்கிய மாத இதழ்: அக்டோபர் 2024
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக