புதன், ஜனவரி 08, 2025

பொதிகைச் சித்தரின் நெடும்பயணம்

 

பொதிகைச் சித்தரின் நெடும்பயணம்

மு.சிவகுருநாதன்


 

           தமிழிலக்கிய, விமர்சன, பதிப்பு மற்றும் நுண்ணரசியல் களங்களில் தனித்துவத்தோடு நீண்ட காலம் இயங்கிவரும் தோழர் வே.மு.பொதியவெற்பன் அவர்களின் இந்தச் செவ்விக் குறுநூல் அவரது ஆளுமை குறித்த தெளிவான சித்திரத்தை நமக்கு வரைந்தளிக்கிறது. எட்டு வினாக்களின் பதில்கள் வாயிலாக 48 பக்கங்களில் அவரது நெடும்பயணத்தை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றது. பொதி 76 நிகழ்வுகளை ஏற்பாடு செய்து, ‘பொதியவெற்பன் இறையியல் மெய்யியல் ஆய்வுகள்நூலைத் தொகுத்த இரா.விஜயன் இந்த நேர்காணலையும் செய்திருக்கிறார்.

       சண்முகசுந்தர நேத்தாஜி தனித்தமிழ் இயக்கம், தாயின் பெயரை முன்னெழுத்தாக்கிய சுயமரியாதை இயக்கம் ஆகியவற்றின் தாக்கத்தால் வே.மு.பொதியவெற்பன் ஆகிறார். பின்னர் அவர் சூடும் புனைப்பெயரிலும் அரசியல் செயல்படுவதை விளக்குகிறார். மு..தாசன், பித்தகுமாரன் (புதுமைப்பித்தன்), சித்தப்பறையன் (தலித்தியம்), பொதிகைச்சித்தர் (சித்தர் மரபு) போன்ற பல்வேறு தாக்கங்களுக்கு ஆட்பட்டு புனைப்பெயரிட்ட நிகழ்வுகள் அவரது ஆளுமையின் வளர்ச்சிப் போக்கையும் எடுத்துக்காட்டுகின்றன. சூரியமுகி (மா-லெ) தாக்கத்தை ஏனோ தவிர்த்துவிட்டார். ‘சூரியக்குளியல்அவரது கவிதை முயற்சிகளை வெளிப்படுத்தியது. தொடர் பயணமாககவிதா நிகழ்வுஎன நிகழ்த்து கலை வடிவத்தை உருவாக்கினார்.

       தனித்தமிழ் இயக்கம், திராவிட இயக்கம் எனப் பயணித்துப் பின்னர் பொதுவுடைமை இயக்கத்தில் (சிபிஎம்) அப்போதைய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டச் செயலாளராகப் பணிபுரிதல், புரட்சிப் பண்பாட்டு இயக்கம் (புபஇ) முனைவன் இதழ், தோழமை, சிலிக்குயில் வெளியீடுகள், பறை தொகைநூல், நிறப்பிரிகை குழுவினருடன் அதன் முதல் இதழில்  சேர்ந்துப் பணியாற்றிவிட்டுப் பின்னர் இலக்கியத்தை ஒதுக்கி அரசியலை முதன்படுத்திய அவர்களுடன் முரண்பட்டு விலகுதல் போன்ற கண்ணிகள் செவ்வியில் விளக்கம் பெறுகின்றன. .மார்க்சின் சிற்றிலக்கியங்கள்சில குறிப்புகள், நமது மருத்துவ நலப் பிரச்சினைகள், புதிய கல்விக்கொள்கை குறித்த நூல்களை வெளியிட்டதோழமையின் வரலாறு நெடியது.  அவர் எழுதப்போகும்  நான் உரித்த நான்கள்தன்வரலாறு இவற்றை விரிவாகப் பேசட்டும்.

     புதுமைப்பித்தனை படைப்பாளியாகப் பார்த்து அவரது விமர்சன மரபை கோட்டை விட்டனர். புதுமைப்பித்தன், தொ.மு.சி., பிரமிள், பொதியவெற்பன் என அந்த விமர்சனமரபு வளர்ந்துள்ளது என்கிறார். புதுமைப்பித்தனின் பலகிளைகளில் ஜெயகாந்தன்  மீது தனது முரண்பாடு உண்டு. ஏனெனில் அவர் சனாதனத்துடன் உறவைத் தக்க வைத்தவர், புதுமைப்பித்தன் அதனை வேரறுத்தவர் என்றும் சொல்கிறார்.

    ரசனை மரபு, பண்டித மரபு, வாய்மொழி மரபு ஆகியவற்றைப் புரிந்துகொள்ளாமல் மார்க்சிய விமர்சனம் பொதுத்தன்மைகளை இனங்கண்டு சிறப்பியல்புகளைக் காணாமல், .நா.சு. குழுவுடன் பிரமிளை இணைத்த அ.மார்க்ஸ், கைலாசபதி போன்றோர் கோட்டைவிடும் புள்ளியை எடுத்துக்காட்டி, புதிய பாய்ச்சலாக வந்த கா.சிவத்தம்பியை முன்னோடி எனச் சுட்டுகிறார். புதுமைப்பித்தனில் தொடங்கிய தமிழ் விமர்சன மரபில் மகத்தான பாய்ச்சலை நிகழ்த்தி வணங்காமுடியாக வாழ்ந்த தொ.மு.சி. குறித்தும் நூல் (தொமுசிவணங்காமுடி வாணர்) எழுதி வருவதாகத் தெரிவிக்கிறார். ‘தமிழின் நிறமும் ஆரிய வர்ணமும்நூலை வெளியிட்ட விஜயா வேலாயுதம் இலக்கியத்தில் பார்ப்பனியம் கிடையாது என்று வாதிட்ட விபரீத முரண்நகையையும் குறிப்பிடுகிறார். 

     வலது பொதுவுடைமைக்கென்று ஓர் அமைப்பும் (என்.சி.பி.எச்.), இடது பொதுவுடமைக்கென்று ஓர் அமைப்புமாக (பாரதி புத்தகாலயம்) இருந்த நிலையில் சிலிக்குயில் மூன்றாவது அணி சார்ந்த நூல்களையும் தலித்தியத்தை முன்னெடுத்தோம் என்று கூறுகிறார். தினந்தந்தி பாணியில் வலது, இடது என்பதுதான் நெருடலாக உள்ளது.

       வள்ளலாரின் ஆரிய, வடமொழி எதிர்ப்பை பூசி, மெழுகி அரசியல் செய்யும் மா.அரங்கநாதன், ராஜ் கௌதமன் ஆகியோரைச் சாடுகிறார். தனது மதிப்பிற்குரிய ஆசிரியர் பேரா. .நெடுஞ்செழியனது மெய்யியல் ஆய்வுகளை ஆசிவகம் குறித்த புதிய தரவுகளை முன்வைத்ததையும் குறிப்பிட்டு ஆசிவக சமயத்தைக் கட்டமைக்க முயன்றதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று ஒதுங்கிவிடுகிறார். தனக்கு மெய்யியல் கண்ணோட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய ஆசான் என்றும் பதிவு செய்கிறார். மறுபுறம் ஆசிவகத்தை முதன்மைப்படுத்திய நெடுஞ்செழியனது எழுத்துகளில் பிற அவைதீக சமயங்களான   பவுத்தம், சமணம் குறித்த காழ்ப்புணர்வு அதிகமிருப்பதையும் நாம் அவதானிக்கலாம். இதைப்பற்றியும் பேசியிருக்கலாம் என்று தோன்றுகிறது.


 

       பெரியாரியம், அம்பேத்கரியம், மார்க்சியம் ஆகிவற்றில் ஒன்றின் போதாமைகளை இன்னொன்றால் ஈடுகட்ட வேண்டும். எனவே பின் நவீனத்துவம் உள்ளிட்ட புதிய சிந்தனைப் பள்ளிகளுடன் உரையாடலைத் தொடர வேண்டும். மார்க்சியம் என்பது வற்றாத ஜீவநதி. அதன் அமலாக்க முறைகளில் தோல்வி இருக்கலாம். நாமும் வற்றாத நதியாக ஓடிக்கொண்டிருந்தால்தான் தேங்கிப்போகாமல் இருக்கமுடியும் என்றும் குறிப்பிடுகிறார்.

       இலக்கிய அமைப்புகள், அரசு தரும் விருதுகள் குறித்த காத்திரமான விமர்சனத்தை நேர்காணல் பதிவு செய்கிறது. நடுவர்கள், அமைப்பாளர்கள் தாங்களே தங்களுக்கு விருது அளித்துக் கொள்ளும் அவலம், வலதுசாரிகளுக்கு இடதுசாரிகளும்  தலித்தியர்களும் விருதளித்தும் மகிழும் நிலை, சுயமரியாதையை இழந்து விண்ணப்பித்து விருது வழங்கும் முறை போன்றவற்றை விமர்சனம் செய்வதுடன் சீர் வாசகர் வட்ட விருது இவற்றிலிருந்து மாறுபட்ட தன்மை விவரிக்கப்படுகிறது. சுயமரியாதை அரசு, திராவிட மாடல் அரசில் சுயமரியாதை உள்ளவன் எப்படி விண்ணப்பித்து விருதைப் பெறமுடியும் என்ற கேள்வியை எழுப்புகிறார். இந்த நியாயமான கேள்வி உரியவர்களின் காதில் எட்டினால் நல்லது.  

      பொதிய வெற்பனை இளம் தலைமுறையினர் முழுமையாக விளங்கிக்கொள்ளவும் அவரது நூல்களை வாசிக்கவும் இந்த நேர்காணல் நூல் ஒரு வழிகாட்டியாக அமையும்.   

 

நூல் விவரங்கள்:

 

நேத்தாஜீ முதல் பொதிகைச் சித்தர் வரை  (செவ்வி)

நேர்கண்டவர் இரா.விஜயன்

சீர் கலை இலக்கிய விழா 2024 சிறப்பு வெளியீடு

விலை: ₹ 30  பக்கங்கள்: 48

முதல் பதிப்பு: ஜனவரி 2022

வெளியீடு:

சீர்,

எண்:11, தமிழ் நகர்,

இரண்டாவது தெரு,

மருத்துவக் கல்லூரிச் சாலை,

தஞ்சாவூர் -  613004.

அலைபேசி: 9566331195, 9600652285, 9865252105

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக