வரலாறும் தொன்மமும்- தொடர்
01. அக்பர் – பீர்பால் கதைகள்
மு.சிவகுருநாதன்
பாபரில் தொடங்கி இரண்டாம் பகதூர்ஷா வரையிலான மொகலாயப் பேரரசர்கள் வரிசையில் அக்பருக்கு (1542-1605) சிறப்பான இடமுண்டு. பாபரின் பேரனான அக்பர் மொகலாயப் பேரரசை விரிவாக்கியதிலும் சிறப்பான நிர்வாக முறைகளுக்கும் பெயர் பெற்றவர். ஜலாலுதீன் முகம்மது அக்பர் 1542 அக்டோபர் 25இல் அமர்கோட்டில் பிறந்தார். அவர் பிறந்தபோது தந்தை ஹூமாயூன் மன்னராக இல்லை. ஷெர்ஷா சூர் தோற்கடித்த ஹூமாயூனுக்கு அமர்கோட்டில் ராஜபுத்திர அரசர் ரானா பிரசாத் அடைக்கலமளித்திருந்தார். மீண்டும் ஷெர்ஷாவைத் தோற்கடித்து (1556) ஆட்சியை மீட்ட ஹூமாயூன் சில மாதங்கள் மட்டுமே உயிர் வாழ்ந்தார்.
எனவே 14 வயதில் அக்பருக்கு (1556-1605) மன்னராக முடிசூடப்பட்டது. அவருடைய தாய்மாமன் பைராம் கான் (1556-1660) பாதுகாவலராக (பகர ஆளுநர்) இருந்து நான்கு ஆண்டுகள் ஆட்சியை நடத்தினார். அதன் பிறகு அக்பர் நேரடியாக தாமே ஆட்சிப்பொறுப்பை ஏற்றார்.
மொகலாயப் பேரரசின் விரிவாக்கமே பிந்தைய இந்திய உருவாக்கத்திற்கு அடித்தளமாக அமைந்தது எனலாம். ஒரு மையப்படுத்தப்பட்ட அரசையும் சிறந்த நிர்வாகக் கட்டமைப்பையும் உருவாக்கினார். போர்களில் வெற்றி பெற்றாலும் அவர்களுடன் சமரச உடன்படிக்கைகள் செய்து கொண்டார். பன்மைக் கலாச்சாரங்கள் கொண்ட நாட்டை தனது இணக்கமான நடவடிக்கைகள் மூலம் மக்கள் மனங்களை வென்றார். இந்த ஒருங்கிணைப்புகள் மூலம் வணிகமும் நாட்டின் பொருளாதாரமும் பெருவளர்ச்சி கண்டன.
கலை, இலக்கியம் மற்றும் கல்வி வளர்ச்சிக்கு இவரது செயல்பாடுகள் பெரிதும் உதவின. பல்வேறு மொழி அறிஞர்கள், கலைஞர்கள், கையெழுத்துக் கலைஞர்கள், வாசகர்கள், வேத பாராயணம் செய்வோர் போன்றோரைக் கொண்டு சமஸ்கிருதம், பாரசீகம், உருது, கிரேக்கம், லத்தீன், காஷ்மீரி போன்ற மொழிகளில் 24,000 நூல் தொகுப்புகள் கொண்ட நூலகத்தை உருவாக்கினார். பெண்கள் மட்டும் பயன்படுத்தக்கூடிய நூலகம் ஒன்றையும் ஃபதேப்பூர் சிக்ரியில் அமைத்தார். கட்டடக்கலையும் ஓவியக்கலையும் செழுமையுற்றன. இந்திய-பாரசீக கலை வடிவங்கள் இணைந்து புத்தாக்கம் அடைந்தன.
பல சமயங்கள், கலாச்சாரங்கள் நிறைந்த பகுதி என்பதால் அவற்றுக்குள் இணக்கம் ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். உள்ளூர் மதம், மொழி, கலாச்சார விழாக்களில் தன்னை இணைத்துக் கொண்டார். மத நல்லிணக்கத்தையும் சகிப்புத்தன்மையையும் பேண அனைத்து சமயங்களின் சாரமாக ‘தீன் இலாஹி’ எனும் சமயத்தைத் தோற்றுவித்தார். அதை தனது குடும்பத்தினர் உள்ளிட்ட எவர் மீதும் திணிக்க விரும்பவில்லை.
இன்றைய மக்களாட்சி அரசுகளில் கூட முந்தைய அரசின் திட்டங்களை பின்னால் வருபவர்கள் பின்பற்ற முனைவதில்லை. தனது தந்தையைத் தோற்கடித்த பகை அரசன் ஷெர்ஷாவால் கொண்டுவரப்பட்ட நிலவருவாய் முறைகளை ஏற்று அவற்றை மேம்படுத்தினார். ராணுவத்தைப் பலப்படுத்த மன்சப்தாரி முறையைக் கொண்டுவந்தார். குதிரை மற்றும் குதிரைப்படை வீரரைப் பராமாரிக்கும் பொறுப்பு மன்சப்தார்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சூஃபித் துறவி சலீம் சிஸ்டியின் சீடராக அக்பர் இருந்தார். சூஃபித் தத்துவங்கள் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் போதிப்பவை. அதன்படி அக்பர் மதச்சார்பற்றத் தன்மை கொண்டிருந்தார். சதி எனும் உடன்கட்டை ஏற்றுவதைத் தடை செய்தார். பெண்களின் திருமண வயதை உயர்த்தியதோடு, விதவை மறுமணத்தையும் ஆதரித்தார். இவரது அவையில் நவரத்தினங்கள் என அழைக்கப்பட்ட ஒன்பது பேர் அணிசெய்தனர். அவர்களில் நான்காவது இடத்தில் இருந்தவர் பீர்பால் ஆவார்.
அபுல் ஃபைசல், அபுல் ஃபைசி, தான்சேன், ராஜா மான்சிங், ராஜா தோடர்மால், முல்லா தோ – பியாசா, ஃபக்கீர் அஜியோ – தீன், அப்துல் ரஹீம் கான் கானா, ராஜா பீர்பால் ஆகியோர் நவரத்தினங்கள் என அழைக்கப்பட்டனர். முதலில் இவர்களைப் பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம்.
அபுல் ஃபைசல்:
பிரதமர், முதன்மை ஆலோசகர் (கிராண்ட் வசீர்). நவரத்தினங்களில் முதலிடம் பெற்றவர். வரலாற்று அறிஞர். அக்பர் நாமா, அயினி அக்பரி போன்ற நூல்களை எழுதியவர். பாஸ்கராவின் லீலாவதி கணித நூலையும் பைபிளையும் பாரசீக மொழியில் பெயர்த்தார். அக்பரை கருத்தியல் ரீதியாக தாராளவாதியாக மாற்றியதில் இவரின் பங்கு குறிப்பிடத்தக்கது.
ராஜா தோடர்மால்:
நிதி அமைச்சர், எழுத்தாளர். ஷெர்ஷா சூரிடம் பணியாற்றியவர். வெற்றிக்குப்பின் ஆக்ராவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். குஜராத்தின் ஆளுநராகப் பணி செய்தார். நில அளவைகள், எடை மற்றும் அளவீடுகள், வருவாய் மாவட்டங்களை உருவாக்குதல் போன்ற பணிகள் இவரது சிறப்புகளாக அமைந்தவை.
அப்துல் ரஹீம் கான் கானா:
பாதுகாப்பு அமைச்சர், சோதிடர். அக்பரின் பாதுகாவலராக இருந்த மாமா பைராம்கானின் மகன். சோதிடம் குறித்த இரு நூல்களையும் தோஹோ (ஒரு கவிதை வடிவம்) எனப்படும் எண்ணற்ற கவிதைகளையும் எழுதியுள்ளார். பாபர் நாமாவை பாரசீக மொழிக்குக் கொண்டு சென்றார்.
ராஜா பீர்பால்:
வெளியுறவுத்துறை அமைச்சர், பாடகர், கவிஞர். நீதிமன்ற (அரசவை) விதூஷகர் (நகைச்சுவைக் கோமாளி). இந்துப் பிராமணரான மகேஷ்தாஸ் என்ற பீர்பால் முன்பு ராம் சந்தின் அரசவையில் இருந்தவர். சமஸ்கிருதம், பாரசீகம், இந்தி மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். அக்பர் உருவாக்கிய தீன் இலாஹி மதத்தைத் தழுவியவர்.
முல்லா தோ – பியாசா:
உள்துறை அமைச்சர், ஆலோசகர். உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் காவல்துறைக்குப் பொறுப்பாளர். இவரது தந்தை அட்கா கான் மொகலாயப் பேரரசில் அமைச்சர் பதவியில் இருந்தவர். இவரது தாய் அக்பரின் செவிலித் தாய்களுள் ஒருவர்.
அபுல் ஃபைசி:
கவிஞர், கல்வி அமைச்சர்; அக்பரின் மகன்களுக்கு வழிகாட்டி. அபுல் ஃபைசலின் மூத்த சகோதரர். நூற்றுக்கணக்கான கவிதைகளை எழுதி நீதிமன்றக் கவிஞர் (மாலிக் உஷ் ஷூரா) பட்டம் பெற்றவர். சிறந்த அறிஞர், கல்வியாளர்.
ஃபக்கீர் அஜியோ – தீன்:
சமயத்துறை அமைச்சர், சூஃபி ஆன்மீகவாதி. அக்பரின் ஆலோசகர். ஃபக்கீர் என்றால் உருது மொழியில் முனிவர் என்பது பொருள்.
தான்சேன்:
கலாச்சார அமைச்சர்; இசைக் கலைஞர். புதிய ராகங்களை உருவாக்கி வட இந்திய இசைக்கும் இந்துஸ்தானிக்கும் உயரிய பங்களிப்பை நல்கினார். இசை குறித்த இரு நூல்களை எழுதினார். மியான் (கற்றவர்) பட்டம் பெற்றவர். இந்துவாகப் பிறந்து இஸ்லாம் தழுவியவர்.
ராஜா மான்சிங்:
மொகலாயப் படையின் தலைமைப் படைத் தளபதி. ஜெய்ப்பூர் ராஜபுத்திர அரசராக இருந்தவர். இவரது அத்தையை அக்பர் மணம் புரிந்தார். தன்னைவிட 8 வயது இளையவரான ராஜா மான்சிங்கை அக்பர் மகன் என்று அழைத்தார். 1576இல் ரானா பிரதாப்பிற்கு எதிரான ஹால்டிகாட் போரில் மொகலாயப் படைகளுக்குத் தலைமையேற்றார்.
நவரத்தினங்கள் அனைவரும் ஒவ்வொரு வகையில் சிறப்புடையவர்கள். அவர்கள் அனைவரும் அக்பரின் நன்மதிப்பைப் பெற்றவர்கள். அக்பரின் ஆலோசகர்களாகச் செயல்பட்டவர்கள். அக்பரின் ஆட்சிக்கும் நிர்வாகத்திற்கும் பெரிதும் உதவி செய்தவர்கள். பிற எட்டு பேர்கள் மீது படாத வெளிச்சம் பீர்பால் மட்டும் பெற்றதற்கான காரணங்களையும் அரசியலையும் நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டிய தேவையிருக்கிறது.
நவரத்தினங்களில் பல இந்துப் பிரதிநிதிகள் இருந்தபோதிலும் பீர்பால் ஒரு பிராமணர் என்பதால் அவரைப் பற்றிய புனைவுகள் கதை வடிவில் உற்பத்தி செய்யப்பட்டுப் பரப்பப்பட்டுள்ளன. வருணப் படிநிலை அடுக்கில் உச்சத்திலும் அறிவுக்கு உரிமைக் கொண்டாடும் சமூகமாக பிராமணச் சமூகம் இருக்கிறது. வேதங்கள், சாஸ்திரங்கள், ஸ்மிருதிகள், இதிகாசங்கள், புராணங்கள் போன்றவற்றை இதற்கெனவே அவர்கள் உருவாக்கி வைத்துள்ளனர். இம்மாதிரியான சட்டங்களை மக்களிடம் திணிக்கவும் தங்களது மேலாண்மையை நிறுவவும், உள்ளூர் மொழி மற்றும் வழக்காறுகளில் நிறைய கதைகள், புராணங்கள் வழியே உற்பத்தி செய்கின்றனர்.
அந்த வகையில் பீர்பால் கதைகள் அக்பர் என்ற மிகவும் அறிவார்ந்த, திறன்மிக்க, சகிப்புத் தன்மையுடைய முகலாயப் பேரரசரை இழிவுபடுத்துவதற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. இக்கதைகளில் கட்டமைக்கப்படும் மதம் சார்ந்த முரண் எதிர்வு ஐந்து நூற்றாண்டுகளாக தொடர்ந்து வருவதற்கு நமது கல்விமுறையும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது. அம்மை நீரின் மூலம் பரவும் ஒரு வைரஸ் நோய் என்று பாடநூல் எவ்வளவுதான் சொன்னாலும் அந்நோய் பற்றிய மூடநம்பிக்கைகளே அனைவரிடமும் கோலோச்சுகின்றன. அதைப்போலவே அக்பர் குறித்து பாடநூல்கள் எவ்வளவோ பேசினாலும் குழந்தைகள் சிறு வயதிலிருந்து கேட்டுப் படித்து வளர்ந்த பீர்பால் கதைகளின் தாக்கமே மிகுந்திருக்கும்.
கல்விப்புலங்களில் இத்தகைய நுணுக்க வேறுபாட்டை யாரும் சொல்லித் தருவதாகத் தெரியவில்லை. அதற்கான வாய்ப்புகளும் இன்றைய கல்விமுறையில் இல்லை என்றே சொல்ல முடியும். முல்லா தோ – பியாசாவை பீர்பாலுக்கு எதிராளியாகச் சித்தரிப்பதும், மறுபுறம் இவரைக் கற்பனைப்பாத்திரம் என்று புறந்தள்ளுவதும் நடக்கிறது. ஆனால் பீர்பாலுக்கு இருக்கும் பேராதரவு இக்கதைகளால் கட்டமைக்கப்பட்டவை ஆகும்.
இன்னொரு புறம் அடித்தட்டு மக்களுடைய மொழிகளில் அரசன், அதிகாரம் போன்றவற்றைக் கேள்விக்குள்ளாக்கிப் பகடி (கிண்டல்) செய்யும் வழக்காறுகளும் கதைகளும் எங்கும் உண்டு. பீர்பால் கதைகளை அந்தவகையில் அணுக இயலாது. இவைகள் முற்றிலும் எதிர்மறையானவை; ஆதிக்கச் சொல்லாடல்களை உருவாக்குபவை. கிருஷ்ண தேவராயருக்கு எதிராகப் புனையப்பட்ட தெனாலிராமன் கதைகளையும் இத்துடன் இணைத்துப் பார்க்கலாம். கிருஷ்ண தேவராயர் இந்து மன்னர் என்றபோதிலும் சத்திரிய வருணம் அறிவுக்கு உரிமை கோர முடியாது என்பதே மநுவின் சட்டமாகும்.
புராண-இதிகாசக் கதைகள் அனைத்துமே ஏமாற்றுதல், சூழ்ச்சி, தந்திரம் ஆகியனவற்றுடன் வருணதர்மம், மநுதர்மம், இந்துமத மேன்மை, கடவுளர்களின் திருவிளையாடல்கள், போர், கொலைகளை நியாயப்படுத்துதல், பிராமண குல மேன்மை என குழந்தைகளுக்கு ஒவ்வாத தீயச் சித்தரிப்புகளைக் கொண்டவை. இதனையொட்டியே பீர்பால் கதைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை வெறுமனே நகைச்சுவை என்று எளிதில் கடந்துபோக முடியாது. இக்கதைகளை ஆழ்ந்து வாசிக்கும் எவரும் இதிலுள்ள அபாயங்கள் புரிந்துகொள்ள முடியும். மேலும் இதன் மூலம் நன்னெறிகளையோ மதிப்புமிக்க விழுமியங்களையோ உண்டாக்க இயலாது என்பதுதான் உண்மை. மாறாக ஒருவித வெறுப்பை இக்கதைகள் பிஞ்சுகளின் மனங்களில் திணிப்பதை நாம் எச்சரிக்கையுடன் பார்க்க வேண்டியுள்ளது. இனி பீர்பால் கதைகளை வாசிக்கும்போது அக்பர் பற்றிய வரலாறுகளையும் நாம் நினைவுபடுத்தியாக வேண்டும்.
- வரலாற்றுக் கற்பனைகள் தொடரும்.
நன்றி: பொம்மி – சிறுவர் மாத இதழ் ஜனவரி 2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக