வியாழன், பிப்ரவரி 06, 2025

பெரியார் எதிர்ப்பரசியலின் தடம்

 

பெரியார் எதிர்ப்பரசியலின் தடம்

மு.சிவகுருநாதன்



 

         பெரியார் எதிர்ப்பரசியல் ஒன்றும் புதிதல்ல; அவர் காலந்தொட்டு நடந்துவரும் ஒன்று. பெரியார் இவற்றை வழக்கம் போலவே எதிர்கொண்டார்; வெங்காயம் என தூக்கியெறிந்து தமது பயணத்தைத் தொடர்ந்தார். நூறாண்டுகள் கடந்தும் பெரியாரியத்தை வீழ்த்த முடியவில்லை. எனவே  எதிரிகள் மாற்றுவழிகளை யோசிக்கிறார்கள்.

    பெங்களூர் குணா போன்றோர் பெரியார், திராவிடம் குறித்த எதிர்ப்புணர்வை தமது நூல்களில் பதிவு செய்துள்ளனர்.  இத்தகைய பாசிசத்தின் தமிழ் வடிவத்தை அ.மார்க்ஸ், கோ.கேசவன் போன்ற மார்க்சிய அறிஞர்கள் எதிர்கொண்டனர். காலச்சுவடு இதழ் பெரியார் மீதான காழ்ப்பை வெளிப்படுத்த ரவிக்குமாரைப் பயன்படுத்திக் கொண்டது. அவை குறித்து உடனுக்குடன் பெரியாரிய, மார்க்சிய அறிஞர்கள் பலர் இத்தகைய எதிர்ப்பாளர்களுக்கு உரிய பதிலளித்து  அம்பலப்படுத்தியுள்ளனர். இவர்களில் எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா போன்ற அறிஞர்களது பங்களிப்புக் குறிப்பிடத்தகுந்தது.  அந்த அவதூறுகளின் தொடர்ச்சியாக தற்போது தமிழ்த் தேசியக் குழுக்களைச் சேர்ந்த சிலர் சங் பரிவார் கும்பலுக்கு நிகராக பெரியார் மீது வன்மத்தை வெளிப்படுத்துகின்றனர்.

    தமிழ்த் தேசியர்கள் பல்வேறு கூறாகப் பிரிந்து நின்றபோதிலும் அவர்களுக்குள்ளாக நிறைய ஒற்றுமைகள் காணப்படுகின்றன. இந்துத்துவ ஆதரவு, இயல்பான வலதுசாரித் தன்மை, பெரியார் எதிர்ப்பு, பிற்காலச் சோழப் பெருமிதங்கள், பக்தியிலக்கிய மேன்மைகள், பழம்பெருமை கேள்வியின்றி சுமத்தல், பண்பாடு, மரபு என சாதி, மதக் கூறுகளைக் கொண்டாடுதல் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

      தமிழ்த் தேசியர்களிடம் கருத்தியல் தெளிவில்லை; உண்மையில் அவர்களிடம் கருத்தியலே இல்லை. ஆதிக்க, பிற்போக்கு, பாசிசக் கருத்தியல்களிடம்  சரணடைந்து அவற்றை தமிழ்த் தேசியமாகத் திரிக்க முயல்கின்றனர். இதனால் மத வெறுப்பரசியல் இன வெறுப்பரசியலாக மாற்றமடைகிறது. மேலும் குடிப்பெருமை சாதி, மத அரசியலுக்குத் துணையாக நிற்கிறது. எனவே வலதுசாரி மதவாதத்துடன் இயல்பான  கூட்டாளிகளாக ஒன்றிணைகின்றனர்.

    ஈழ ஆதரவு, தமிழ்ப்பண்பாடு என்கிற போர்வைகளில் இந்துத்துவ ஆட்களுடன் மேடைகளைப் பகிர்ந்துகொள்ளும் இவர்கள் பெரியார் பெயரைக் கேட்ட உடன் பதற்றமடைகின்றனர். தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில்  பெரியார் படத்தை  வைக்க மறுத்ததும் அதற்கு அவர்கள் சொல்லிய விளக்கமும் இதை எடுத்துக்காட்டும். பழ.நெடுமாறன், பெ.மணியரசன் போன்றோர் பெரியாரை எதிர்ப்பதுதான் தமிழ்த் தேசியம் என்று கட்டமைத்து வருகின்றனர். இருப்பினும் இவர்கள் தேர்தல் அரசியல் களத்திற்கு வருவதில்லை. எனவே தேர்தல் அரசியல் வெளியில் வலதுசாரிகளுக்கு ஆதரவாகப் பலர் களமிறக்கப் பட்டுள்ளனர்.

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியாரைப் பற்றித் தொடர்ந்து பல்வேறு அவதூறுகளைச் செய்து வருகிறார். அவை இப்போதுதான் பரவலாகக் கவனம் பெற்று வருகின்றன. இவற்றையும் பொருட்படுத்தக்கூடிய இளைஞர்கள் சிலர் இருப்பது வேதனையானது.  இடைத் தேர்தல் களத்தில் இவற்றை வாக்காக மாற்ற முயன்று வருகின்றனர். இவற்றின் பின்னணியில் மதவெறிப் பாசிச சக்திகளின் ஆதரவு இருப்பதை வெளிப்படையாக அறிய முடிகிறது.

    சீமான் பேசுவதற்கு ஆதாரத்தை பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தருவதாகச் சொல்கிறார். ஆடிட்டர் குருமூர்த்தி போன்றோர்கள் சங் பரிவார் கும்பலுக்கு மட்டுமல்லாமல் சீமான் போன்ற ஆட்களுக்கும் தரகு வேலையில் வெளிப்படையாக ஈடுபடுகின்றனர்.

          ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் நமக்குப் பல செய்திகளை  உணர்த்துகிறது. முதன்மை எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சி  இத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. அடுத்து பா.ஜ.க. கூட்டணியும் போட்டியிட மறுத்துள்ளது. 2026இல் நேரடியாக ஆட்சியைப் பிடிக்க விரும்பும் விஜயின் த.வெ.க. வும் தேர்தலில் பங்கேற்கவில்லை. இவை யாருக்கும் ஆதரவில்லை என்று அறிவித்துள்ள போதிலும் இவற்றின் உள்நோக்கம் நன்கு வெளிப்படுகிறது.

    இவற்றின் வாக்குகளை நா.த.கட்சிக்கு மாற்றிவிடும் வேலையாக இது மாறியிருக்கிறது. மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இக்கட்சிக்கு மறைமுகமாக உதவி செய்வதன் வாயிலாக தங்களது கொள்கைகளை செயல்படுத்த சிலர் முனைப்பு காட்டுகின்றனர். ஒருவாறு வலதுசாரிச் செயல்திட்டம் அம்பலப்பட்டுள்ளது. இதற்கு எல்லாரும் சேர்ந்து பொது வேட்பாளரையே நிறுத்தியிருக்கலாம். ஆனால் செய்ய மாட்டார்கள். தங்களுள் வேறுபாடு இருப்பதாக பொதுமக்களை நம்பவைக்க இவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

         விஜயின் பெரியார் ஆதரவு, சீமானின் பெரியார் எதிர்ப்பு, பெரியாரை முற்றாகத் துறந்த அ.இ.அ.தி.மு.க. என மூன்றையும் ஒருங்கிணைக்கும் புள்ளியாக பா.ஜ.க. உள்ளது. பின்னணிச் செயல்திட்டங்களில் தொடர்ந்து ஈடுபடும் மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் காலூன்ற குயுக்தி நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. பெரியார் பற்றி அவதூறுகளை எதிர்க்கும் மனநிலைகூட அ.தி.மு.க. விடம் இல்லை. தி.மு.க.விட பெரியாரியர்களும் மார்க்சியர்களும் இந்த அவதூறுகளுக்கு மிகக்கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர்.

        பழங்கால இந்தியாவில் பவுத்தம் சமயமாக அன்றி இயக்கமாக முன்னெடுக்கப்பட்டது. அதனாலே வைதீகத்தின் தாக்குதலுக்கு உள்ளானது. இறுதியாக அதனுள் நுழைந்த வைதீகம் பவுத்த சமய இயக்கத்தை ஒழித்தது. பிற்காலத்தில் வள்ளலார் போன்று மதச் சீர்திருத்தம் செய்தவர்களையும் ஒழித்து புனைகதைகளைப் பரப்பினர். இருபதாம் நூற்றாண்டில் பெரியார் தமது கருத்துகளை இயக்கமாக்கினார். நூறாண்மைக் கடந்தும் இதன் தாக்கம், வீச்சு தமிழ்நாட்டின் அரசியலுக்கான அசைக்கமுடியாத அடித்தளமாக உள்ளது. இந்த அடித்தளத்தை அசைக்க முடியாமல் வைதீக வலதுசாரிகள் திணறுகின்றனர் என்பதே உண்மை.

     இந்தச் சூழலில் பெரியாரும் அவரது கருத்தியலும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எவ்வாறு கொண்டு சேர்க்கப்பட்டார் என்பதை சுயவிமர்சனம் செய்துகொள்வது நல்லது எனத் தோன்றுகிறது. கடவுள் மறுப்பாளர், பார்ப்பன எதிர்ப்பாளர், பகுத்தறிவு சமூக சமத்துவப் போராளி என்கிற சிமிழுக்குள் பெரியார் அடைக்கப்பட்டுள்ளார். இதையும் தாண்டி பெரியாரின் சிந்தனை எல்லைகள் விரிவடைவதை நாம் பேசவும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும் தவறிவிட்டோம்.

          சாதி, மதம், இனம், மொழி, தேசம் என எவ்விதப் பற்றையும் வெறுத்தொதுக்கி  சுயமரியாதைப் பற்றை மட்டும் உயர்த்திப் பிடித்தவர். மொழி, தேசம், தாய்மை போன்றவை இயற்கையானதல்ல; அவை கட்டமைக்கப்படுபவை என்றார் பெரியார். தன்னை ஒரு தேசத்துரோகி என அறிவித்துக் கொண்டார்.  அதனால்தான் தேசப்பற்றை அயோக்கித்தனம், வியாபாரம் என்றெல்லாம் சாடினார்.

    மொழி, பெண்ணியம் குறித்த மிக நவீன சிந்தனைகளின் தொடக்கப் புள்ளியாக இருந்தார். ஆண்மை அழியாமல் பெண்மைக்கு விடுதலை இல்லை என்றும் பறையர் பட்டம் போகாமல் சூத்திரப்பட்டம் போகாது என்றும் செயலாற்றியவர் பெரியார்.  இதற்குத் தக்கவாறு தமது அரசியல் செயல்திட்டங்களையும் போராட்டங்களையும் வடிவமைத்தவர்.        

        அரசியலில் மதம் கலக்கக் கூடாது என்று பல்லாண்டாகப் பேசி வந்தோம். இன்று அரசியல் மதத்தின் பிடியில் சிக்குண்டு கிடக்கிறது. பெரியார் மொழி, கல்வி, பண்பாடு என சமூகக் களங்களில் மதநீக்கம் நடைபெற வேண்டும் என்று ஓயாதுப் போராடினார். புராண-இதிகாசக் குப்பைகளை குழந்தைகளிடம் திணிக்காமலும் இந்தச் சமூகம் ஏற்கனவே திணித்த அழுக்குகளை அகற்றி சுதந்திரமான சிந்தனையை மலரச்செய்வதாக கல்வி இருக்க வேண்டும் என்று பெரிதும்  விரும்பினார்.

           தமிழ் என்றால் பிராமணர்களும் உள்நுழைந்து நம்மைக் காலி செய்துவிடுவார்கள். எனவே அவர்களை வெளியேற்றுவதற்காக திராவிடக் கருத்தியலை உயர்த்திப் பிடித்தார். காவிகளின் அகண்ட பாரதம் போன்று திராவிட தேசத்தைப் பெரியார் கட்டமைக்கவில்லை. மொழியடிப்படையில்  தனித் தமிழ்நாடு கோரினார். இதன்மூலம் சிறுபான்மையினர் உள்ளிட்ட அந்நியர்களை வெளியேற்றும் பாசிசத் தேசியமாக அவற்றை முன்மொழியவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  இந்து மதக் கொடுங்கோன்மையால் பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின மக்கள் மற்றும் பெண்கள் மீதான கரிசனமாகவே அவரது செயல்திட்டங்கள் வெளிப்பட்டன. இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்த தமிழ்தேசத்தை விரும்பினார்; பாசிச வெறி கொண்ட ஒடுக்குமுறை தேசியத்தை அவர் எதிர்த்தார்.

            சென்னையில் பேராசான் கார்ல் மார்க்ஸ்க்கு சிலை வைக்கவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக வைக்கப்பட்டு வருகிறது. மே தினப் பூங்கா போன்று கார்ல் மார்க்ஸ் பூங்கா ஒன்று நிறுவப்படலாம். கூடவே அவரது சிந்தனைகளையும் எளிய மொழியில் மக்களிடம் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய முயற்சிகள் எல்லாம் பெரியார் செயல்படுத்திய முன்மாதிரிகளே. ஆட்சியதிகாரத்தில் அமர்ந்தவுடன் வேறுபணிச்சுமைகள் இருந்ததாலோ என்னவோ கருத்தியல் பரப்புரைக்கு நேரம் செலவிட இயலாமற்போனதன் பாதிப்பை தற்போது உணர முடிகிறது.

      மார்க்சிய, திராவிட இயக்கங்கள் இங்கு எப்படி வளர்த்தெடுக்கப்பட்டன என்பதை நாம் மீண்டும்  ஒருமுறை நினைவுப் படுத்திப் பார்க்க வேண்டும். சினிமா ஈர்ப்பைக் கொண்டோ, குழந்தைகளுக்கு சாக்லேட் அளிப்பது போன்று பிரபாகரன் படத்தைக் காட்டியோ இங்கு அவை வளரவில்லை.

    முந்தைய ஒன்றிய அரசு அம்பேத்கர் தொகுப்புகளில் இந்திய மொழிகளில் கொண்டுவரும் சிறப்பான திட்டத்தை செயல்படுத்தியது. இந்த வகையில் தமிழில் 37 தொகுதிகள் வெளியாயின. தற்போது தமிழ்நாடு அரசு அம்பேத்கர் நூல்களை எளிமையாக மொழியாக்கி சிறு சிறு தொகுப்பாக 100 நூல்களாக வெளியிடும் சிறப்பான திட்டத்தை  அறிவித்தது. இதன் முதல்கட்டமாக அண்ணல் அம்பேத்கரின் 10 நூல்கள் வெளியாகியுள்ளன. இதே நடைமுறையை பெரியார் நூல்களுக்கும்  பயன்படுத்தலாம். அப்போதுதான் உண்மையான பெரியாரியக் கருத்தியல் அடுத்த தலைமுறையிடம் கொண்டு சேர்க்கப்படும்.

      அரசு நூல்களை வெளியிட்டால் மட்டும் போதாது. அவற்றை அனைத்து நூலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கும் கூடுதலான படிகள் அனுப்பி அனைவரும் வாசிக்க வழியேற்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இவை குறித்த போட்டிகள் நடத்திப் பரிசளிக்கலாம். பொதுமக்களுக்கு இந்நூல்களை மலிவுவிலையில் விற்பனை செய்யவும் முன்வரவேண்டும்.

      பெரியாரது சிந்தனைகளை யாரும் ஒளித்து வைக்கவில்லை. பெரியாரியம் ஒரு பேராழியைப் போன்றது. அவரவர் விருப்பத்திற்கேற்ப சிலவற்றிற்கு முதன்மை தருகின்றனர். பெரியார் எழுத்துகளை அரசுடைமையாக்கினால் உண்மைகள் வெளிவரும் என்று சொல்வதன் உள்நோக்கம் நன்றாக விளங்குகிறது. ஒருவரது நூலை அரசுடைமையாக்கினால் அவற்றை யார் வேண்டுமானாலும் வெளியிடலாம். தங்கள் விருப்பப்படி திருத்தி வெளியிட்டு இன்றைய அவதூறுகளுக்கு மேலும் வலுசேர்க்க விரும்புகிறார்கள். எனவே அரசே அம்பேத்கர் தொகுப்பு போன்று பெரியார் தொகுதிகளை வெளியிடுவது காலத்தின் கட்டாயமாகும்.

நன்றி: பேசும் புதியசக்தி பிப்ரவரி 2025

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக