வெள்ளி, ஜூன் 06, 2025

தோழமை விழா

 

தோழமை விழா

மு.சிவகுருநாதன்


 

       தோழர் சி. அறிவுறுவோன் அவர்களின் முத்துவிழா 16/05/2025 அன்று மாலை  தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் இனிதே நடைபெற்றது. அவரது முன்னாள், இன்னாள் தோழர்களும் நண்பர்களும் விழாவை ஏற்பாடு செய்திருந்தனர். கண்புரை அறுவைச் சிகிச்சைக்குப் பின் கருப்புக் கண்ணாடியுடன் அறிவுறுவோன் விழாவிற்கு வருகை தந்தார். வெள்ளை வேட்டி, சட்டை மற்றும் வழக்கமான சிவப்புத்துண்டுடன் வந்த அவருக்கு நண்பர்கள் வெள்ளைத் துண்டை அணிவித்தனர்.  இவ்விழாவில்அறிவெழுச்சிஎனும் முத்துவிழா மலர் வெளியிடப்பட்டது. நிகழ்வு தொடங்கும் முன்பு பேரா.க. ஜவகர் மற்றும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் இணைந்து உருவாக்கிய தோழர் சி. அறிவுறுவோன் குறித்த முழுமைபெறாத ஆவணப்படம் திரையிடப்பட்டது.

       தோழர் என்.சீனிவாசன் தனது தலைமையுரையில், பல்வேறு தொகுப்புகளைக் கொண்டுவந்த பேரா.வீ.அரசு இங்கு வந்திருக்கிறார். அவரது ஆலோசனைகளைப் பெற்று   அறிவுறுவோனின் படைப்புகளை முழுமையாகத் தொகுக்க வேண்டும் என்றார். இரா.எட்வின் தனது உரையில், இன்றும் நமது தோழர், எனது கண்ணிலிருக்கும் லென்ஸ் 25 ஆண்டுகளைக் கடந்தது. நமது தோழர் புதிய லென்சைப் பெற்றுள்ளார். எனவே நூறாண்டைத் தாண்டியும் வாழ்ந்து நிறைய எழுத வேண்டும். ‘காக்கைச் சிறகினிலேமாத இதழில் நான்கு பக்கங்களைத் தோழருக்காக ஒதுக்கத் தயாராக இருக்கிறோம், என்றார்.

        உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் மலரை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். தன்னுரிமைப் போராட்டங்கள், மொழிவாரி மாநிலங்கள் உருவான சூழல், தமிழ் தேசிய அரசியல் போன்றவற்றைச் சுட்டிக் காட்டிய அவரது உரையில் இவ்விழாவிற்கு அறிவுறுவோன் அனுமதி அளித்ததே பெரிது என்றார். விழாவில் பேசிய பலரும் இதே கருத்தை வெளிப்படுத்தினர். உலகத் தமிழ்க் கழகம், தமிழியக்கம், விவசாயிகள் சங்கம் போன்றவற்றில் அவரது பணிகளைக் குறிப்பிட்டுப் பேசினார்கள். அவரது களப்போராளி வாழ்க்கை, போராட்டங்கள், தமிழியக்கப் பணிகள், விவசாயியாகவும் ஓமியோபதி மருத்துவராகவும்  அவரது செயல்பாடுகளை ஒவ்வொருவரும் தொட்டுக் காட்டினர்.

    நிகழ்வில்  அவரது அணுக்கத் தோழர்களும் நண்பர்களும் சில நிமிடங்கள் உரையாற்றினர். ஓவியர் ஜீவா பேசும்போது, எவ்வளவு ஜனநாயகம் பேசினாலும் களப்பணி என்று வந்துவிட்டால் ஒரு சர்வாதிகாரி போல் மாறிவிடுவார், என்றார். அவரது மூத்த மகள் நிவேதிதா, அப்பா என்றதும் அன்பும் துணிச்சலும் நினைவுக்கு வருகிறது. எங்களுக்கு முழுச் சுதந்திரமளித்து இன்றும் வழிகாட்டியாக இருக்கிறார், என்றும் குறிப்பிட்டார். 

           பேரா.வீ.அரசு வாழ்த்துரையுடன் தோழர் தமிழ் ஒளி படைப்புத் தொகுப்புகளை அறிவுறுவோனுக்கு பரிசளித்தார். பேரா.அ.மங்கையின் பரிசாக வெள்ளை வேட்டியை அளித்தார். முனைவர் கு.திருமாறன் தொல்காப்பியத்தை வழங்கினார். தோழர்கள் பல்வேறு பரிசுகள் வழங்கி தோழர் அறிவுறுவோனை வாழ்த்தினர். ரூ.200 விலையிடப்பட்டஅறிவெழுச்சிமலர் அரங்கில் ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டது. நேரமின்மையால் அறிவுறுவோன் அனைவருக்கும் நன்றி கூறி தனது ஏற்புரையை நிறைவு செய்தார். இரவுச் சிற்றுண்டியுடன் விழா இனிதே நிறைவுற்றது.

     தனித்தமிழியக்கத்தில் தொடங்கிய தோழர் சி.அறிவுறுவோனின் பயணம் ஒடுக்கப்பாட்டோர், கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள் நலன் நோக்கில் பொதுவுடைமையாளராக இயங்கிப் பின்னர் கருத்து முரண்பாட்டால் பொதுவுடைமை நோக்கிலான தமிழ் தேசியவாதியாக இயங்கிவரும் களப் போராளி ஒருவருக்கு அவர் வாழும் காலத்தில் தோழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து விழா எடுத்தும் மலர் வெளியிட்டும் சிறப்பித்தது மிகவும் பாராட்டிற்குரிய ஒன்றாகும்.

நன்றி: பேசும் புதியசக்தி - ஜூன் 2025

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக