வெள்ளி, பிப்ரவரி 13, 2026

ஆரவல்லி மலைக்கு ஆபத்து!

 

ஆரவல்லி மலைக்கு ஆபத்து!

மு.சிவகுருநாதன்


 

           இந்தியாவின் மிகப்பழமையான மலைத்தொடர் ஆரவல்லி மலைத்தொடர் (Aravalli Range) ஆகும். இம்மலைத் தொடர் வடமேற்கு இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், அரியானா, டெல்லி, வரை நீண்டுள்ளது. அபு மலையிலுள்ள இதன் மிக உயரமான சிகரம் குரு சிகார் (Guru Shikhar) ஆகும். இதன் உயரம் 1723 மீட்டர். இமயமலை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளுடன் ஒப்பிடுகையில் இம்மலையின் உயரம் குறைவு. இமயமலைத்தொடரிலுள்ள உலகத்தில் மிக உயரமான சிகரம் 8848 மீ.; இந்தியாவின் உயரமான சிகரம் காட்வின் ஆஸ்டின் (K2)   8611 மீ. மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடரிலுள்ள ஆனைமுடி 2635 மீ., தொட்டபெட்டா 2637 மீ. கிழக்குத் தொடர்ச்சி மலையிலுள்ள உயரமான சிகரம் சோலைக்கரடு (1620 மீ) ஆகும்.  உயரம் குறைவாக உள்ளதால் இவற்றைக் குன்றுகள் என்றும் சொல்வதுண்டு. இவற்றைவிட உயரம் குறைவாகவும் அகலமானப் பரப்பையும் கொண்டவை பீடபூமி என்றும் அழைக்கப்படுகின்றன. உலகின் கூரை என்றழைக்கப்படும் திபெத் பீடபூமி விதிவிலக்காக 4500 மீ. உயரமுடையது.

          180-320 கோடி ஆண்டுகள் பழமையான இம்மலைத்தொடர் மடிப்பு மலை (Fold Mountains) வகையைச் சார்ந்தது. உலகின் மிகப் பழமையான மலைத்தொடர்களுள் இது ஒன்றாகும். இமயமலை இளம் மடிப்பு வகையைச் சேர்ந்தது. பழங்காலத்தில் இமயமலையை விட மிகவும் உயரமாக இருந்த ஆரவல்லி மலைத்தொடர், புயல், மழை, காற்று, மண்ணரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் உயரம் குறைந்துவிட்டது. இருப்பினும் பல கோடி ஆண்டுகளாக நடக்கும் நிலத் தட்டுக்களின் (tectonic plates) நகர்வு, அழுத்தம் ஆகியவற்றையும் கடந்து, பல புவியியல் செயல்பாடுகளையும் தாங்கி ஆரவல்லி மலையும் தென்னாப்பிரிக்காவிலுள்ள பார்பர்டன் மலையும் இயற்கையின் அதிசயங்களாகத் திகழ்கின்றன.

           உயரம் குறைவாக இருப்பதால் ஒன்றும் குறைவில்லை. இதனால் இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கு கிடைக்கும் நன்மைகள் பல. மிகவும் பழமையான ஆரவல்லி மலைத்தொடரில் மண்டியுள்ள புதர்க்காடுகளால் ஆண்டுக்கு, இப்பகுதியில் 50 முதல் 70 செ.மீ. வரை மழை கிடைக்கிறது. ராஜஸ்தான் தார் பாலைவனம் மேலும் விரிவாகி கிழக்கே தில்லி வரை பரவுவதைத் தடுக்கிறது. இக்குன்று இல்லையென்றால் தார்ப்பாலைவனம் கங்கைச் சமவெளி வரை நீளும் அபாயம் இருக்கிறது. இதனால் மணற்புயல்களும் தடுக்கப்படுகின்றன. ஏற்கனவே காற்று மாசால் அவதியுறும் தில்லி ஆரவல்லி மலை அழிக்கப்பட்டால் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும். எனவே இமயமலையைப் போல இப்பகுதிக்கு ஓர் இயற்கை அரணாக விளங்குகிறது. பாலைவனத்தின் மழைக்காலக் காற்றை இந்தியாவிற்குள் கொண்டு வந்து மழைப் பொழிய வைத்து, சபர்மதி, லூனி, சம்பல், பனாஸ் போன்ற பல ஆறுகளுக்கு நீராதாரமாக உள்ளது. பாறையிடுக்குகளின் வழியே மழைநீர் உட்புகுந்து நிலத்தடி நீரை செறிவூட்டுகிறது. இப்பகுதி 22 காட்டுயிர்க் காப்பகங்களையும், மூன்று புலிகள் வாழிடங்களையும் உள்ளடக்கிய பகுதி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சமணப் பள்ளிகளும் இந்துக்கோயில்களும் நிறைந்த பகுதி என்பதைக்கூட இவர்கள் காண மறுக்கின்றனர். உயரத்தை வைத்து இவற்றை மதிப்பீடு செய்வது மடமை. எனவே சதுப்புநிலம், கடற்கரை, சமவெளி, பீடபூமி, குன்று, மலை என எதுவாகினும் அந்த இயற்கைத் தோற்றத்தைப் பாதுகாக்க வேண்டிய மனித சமுதாயத்தின் கடமையாகும். 

         மணற்கல், சுண்ணாம்புக்கல், பளிங்குக்கல், கிரானைட் ஆகியவையும், ஈயம், துத்தநாகம், தாமிரம், தங்கம், டங்ஸ்டன் போன்ற கனிமங்கள் நிறைந்த பகுதியாதலால் சுரங்கப் பணிகளாலும் நகரமய ரியல் எஸ்டேட் தொழிலாலும் பெருமளவு சூழலியல் பாதிப்புக்கு ஆட்பட்டுள்ளது. இங்கு சட்டத்திற்குப் புறம்பான சுரங்கப் பணிகளைத் தடுத்து, மலைத்தொரைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை சூழலியர்களால் பல்லாண்டான முன்வைக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான வழக்கும் தொடரப்பட்டது.

      ஆரவல்லி மலைத்தொடர் சுரங்கங்கள், சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்து உச்ச நீதிமன்றம், அதன் பாதுகாப்பிற்காக உயர் அதிகாரக் குழுவை அமைக்க அரசுக்குப் பரிந்துரை செய்தது. இதற்கென ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அமைத்த குழு வழங்கிய வரையறைகளை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. இதுவே பிரச்சினைக்கு ஆதாரமாக உள்ளது. 

           100 மீ. (328 அடி) அல்லது அதற்கு அதிகமான உயரம் கொண்ட குன்றுகள் மட்டுமே ஆரவல்லி மலைகளாக கொள்ளப்படும் என்றும், 500 மீட்டர் இடைவெளிக்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட மலைகள் இருந்தால் மட்டுமே அது மலைத் தொடராக கருதப்படும் என்றும் ஒன்றிய அரசு நிபுணர் குழு அளித்த அறிகையின் வரையறையை ஏற்று நவம்பர் 20 இல் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

            இந்திய வன ஆய்வு நிறுவனத்தின் (FSI - Forest Survey of India) புள்ளிவிவரப்படி, ராஜஸ்தானில் உள்ள 12,081 ஆரவல்லி மலைக்குன்றுகளில் 1,048 (8.7%) மட்டுமே 100 மீட்டர் மற்றும் அதற்கும் அதிக உயரம் கொண்டவை என்பதால் எஞ்சியவற்றை சுரங்க மாஃபியாக்களிடம் விட ஒன்றிய அரசு முடிவு செய்திருக்கிறது. இதன்மூலம் மேற்கண்ட வரையறையைப் பூர்த்தி செய்யாத 91.3% ஆரவல்லி மலைகள் சட்டப்படியான மலைகள்இல்லை என்பதால், அழிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் இப்பகுதியின் சுற்றுச்சூழல், நிலத்தடி நீர், பல்லுயிர்த்தன்மை போன்றவற்றிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.  இந்த எதிர்ப்பை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தனது முந்தைய உத்தரவை நிறுத்தி வைத்துள்ளது. ஒன்றிய அரசுக் குழுவின் அறிக்கையில் குறைபாடுகளைக் கண்டறியவும், அறிக்கையை மறுபரிசீலனை செய்யவும் மேலும் உயர்மட்டக் குழு ஒன்றை அமைக்கவிருப்பதாகவும் நீதிமன்றம் கூறியது. ஆரவல்லி மலைத்தொடரின் வரையறைகள், அனைத்துவகை மலைகள் மற்றும் குன்றுகளின் விரிவான அறிவியல் மற்றும் புவியியல் மதிப்பீடுகளைத் துல்லியமான அளவீடு செய்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதன்மூலம் சூழலியல் ஆர்வலர்களுக்கு தற்காலிக நிம்மதி உண்டாகியிருக்கிறது.

        சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி விரிவான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவுக்கு கடிதம் மூலம் இதன் பாதிப்புகளைப் பட்டியலிட்டுள்ளார். பல்வேறு மட்டங்களில் எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும் தொடர்ந்த மக்கள் இயக்கங்களினால் மட்டுமே இப்பிரச்சினையை தீர்க்க முடியும்.

         ஆரவல்லி மலைத்தொடரில் அழிக்கப்பட்ட காடுகளில் 81% ராஜஸ்தானையும், 15.8% குஜராத்தையும், 1.7% அரியானாவையும், 1.5% தில்லியையும் சேர்ந்தவை என ஒன்றிய அரசு ஒத்துக்கொள்கிறது. மறுபுறம் ஒன்றிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ், “ஆரவல்லி மலைத்தொடர் பகுதியில் 90% பகுதி என்றும் மொத்தம் உள்ள 1.44 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவில் வெறும் 0.19% பகுதியில் மட்டுமே சுரங்கப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் இப்புதிய வரையறை மலைத்தொடருக்கு வலுவான பாதுகாப்பை வழங்குகிறது என்றும் திருவாய் மலர்ந்துள்ளார். ஒன்றிய அரசின் இரட்டை வேட நாடகத்திற்கு மேலும் ஒரு உதாரணத்தைக் காணலாம்.        

           ஜூன் 5 உலகச் சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு "தாயின் பெயரில் ஒரு மரத்தை நடுவோம்" என்ற பரப்புரையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். வழக்கம்போல தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறை தாயுடன் இணைந்து மரக்கன்று நட்டு, அதை ஒளிப்படமெடுத்து, இணையத்தில் பதிவேற்றி, சான்றிதழ்களை பெறும் சடங்குகளை வெற்றிகரமாக செய்து முடித்தது. ஒருவரே எத்தனை படங்களை வேண்டுமானாலும் பதிவேற்றலாம் என்று சொல்லி சாதனை இலக்கை எட்டியது. ஆண்களுடன் சேர்ந்து படத்தை பதிவேற்ற முடியாமல், வீட்டில் பெண்கள் இல்லாத குழந்தைகளுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியது.

           மேலும் தில்லி அரசின் மின்சாரப் பேருந்து சேவைகளையும் தொடங்கி வைத்து, தில்லி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்றும் முழங்கினார். இதனைத் தொடர்ந்து, ‘ஆரவல்லி பசுமைச் சுவர் திட்டம்தொடங்கப்பட்டது. இத்திட்டம் 2007 இல் ஆப்பிரிக்காவில் செனகல் (மேற்கு) முதல் ஜிபூட்டி (கிழக்கு) தொடங்கப்பட்ட ஆப்பிரிக்காவின் 'பெரிய பசுமைச் சுவர்' திட்டத்தை முன்னோடியாகக் கொண்டது. போர்பந்தரிலிருந்து பானிபட் வரை நீளும் இந்தப் பசுமைப் பட்டைத் திட்டம், மூன்று மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தின் 29 மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் இயல் (பூர்வீக) தாவரக் காடுகளை வளர்த்து பசுமைப் போர்வையை விரிவுபடுத்தும் முயற்சியாகச் சொல்லப்படுகிறது. இதன்முலம் ஆரவல்லி மலையை மீட்டெடுத்து மேற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள பாலைவனங்களில் இருந்து வரும் காற்று மாசைத் தடுக்கும் என்றும் முழங்கினர்.

          சொல்வது ஒன்று, செய்வது வேறு என்பதுதான் இவர்களுடைய நிலைப்பாடாகும். கார்ப்பரேட் நலன்களுக்கு மத்தியில் இவர்களிடம் சுற்றுச்சூழல் அக்கறைகளுக்கு இடமில்லை. எனவே மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் இயற்கையைப் பாதுகாக்கவும் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது. 10 மீ ஆழம் இருந்தால்தான் அது ஆறு; 100 மீ ஆழம் இருந்தால்தான் அது கடல்; 5 அடி உயரம் இருந்தால்தான் மனிதன் என்றுகூட விரைவில் வரையறைகள் உருவாக்கப்படலாம். எதற்கும் நாம் எச்சரிக்கையாக இருப்பது நமக்கும் சூழலுக்கும் நல்லது!

நன்றி: பொம்மி’ – சிறுவர் மாத இதழ் பிப்ரவரி 2026

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக