செவ்வாய், பிப்ரவரி 17, 2026

எல்லோருக்குமான காந்தி – அணிந்துரை

 எல்லோருக்குமான காந்தி அணிந்துரை

 

ஆர். பட்டாபிராமன்


 

            காந்திகருவிலேயே திருவுடையவர்அல்லர். வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் கற்றுத் தேற முயற்சித்தவர். நன்னெறிகளின் வழியாக அரசியல், சமூக, பொருளாதாரக் கட்டமைப்பு என்ற பெருங் கனவு காந்தியிடம் இருந்தது. அகிம்சை அன்பு வழியில் உலகு மாறவேண்டும் என்ற பேரவா அவரிடம் இருந்தது. தனது கனவு இந்தியா அப்படியே உலகில் எழ வேண்டும் என நினத்தார். அரசியல் புரட்சி, சமூகப் புரட்சி, பொருளாதாரப் புரட்சி என்கிற உரத்த குரல்களின் நடுவில், மென்மையாக அவர்நன்னெறிகளின் புரட்சிஎன வாழ்ந்து காட்ட முயற்சித்தார். நடந்துகாட்டலில் நல்வாழ்க்கை என்பது அவரது செய்தி.

       உரிமை போராட்டங்களின் உயர்வு என்கிற பொதுபுத்தியிடம், கடமைசார் கடப்பாடு என அவர் பேசிப்பார்த்தார். நடைமுறைவாழ்வில் Vanguardism என்பதில்லாமல், Exemplariness என தன் முன்மாதிரியை வாழ்க்கைச் செய்தியாக்கினார். ‘பிறர் இருந்தால் நான் இல்லைஎன ஒதுக்கி உயர நினைக்கும் சமூகத்தில்பிறரின்றி நான் இல்லைஎன்பதைக் கொண்டுபோனார்.

        அறிவு சமூகத்திற்கே ஏற்றம்என்கிற இந்திய வாழ்க்கை முறையில்உழைக்காமல் உண்ணல் திருட்டுஎன்று உடலுழைப்பின் மேன்மையை கண்ணியத்தை காந்தி உயர்த்தினார். முடி திருத்துபவன் உழைப்பும் வழக்கறிஞர் உழைப்பும் சம மதிப்புடையதே என்று நூற்றாண்டுக்கு முன்பேஇந்திய சுயராஜ்யத்தில்பேசியவர். மனிதனுக்கு இடையே உயர்வு தாழ்வு வேற்றுமை பாவம் என்றவர். இந்த பூமியால் அனைவரின் தேவையையும் கொடுக்க முடியும், ஆனால் எவரின் பேராசைக்கும் அதனால் ஈடுகொடுக்கமுடியாது என்றவர்.

       காந்தி பேசிய வர்ணாஸ்ரமத்தில் உயர்வு தாழ்வு பார்வையோ, அப்படியான நடைமுறை அனுசரிப்புகளோ இல்லை. அவர் இந்து மதத்தின் பலவீனக் கண்ணியான தீண்டாமையை தன் வழியில் அசைத்துப் பார்க்கலானார். ‘Caste Must Go‘ என 1935லேயே அவர் பேசினார். மனுஸ்மிருதியை அபத்தங்களின் கட்டுக்கதை என்று கூட சொன்னவர் காந்தி. அவரின் முயற்சியை குறித்து திபோர் மெண்டேவிடம் உரையாடிய நேரு, காந்தியின் மேதமை - தீண்டாமை ஒழிப்பில் வெளிப்பட்டதாக பதிவு செய்தார். ‘சாதிக்கு எதிராக காந்திஎன்கிற அற்புத ஆய்வு நூலை நிஷிகாந்த் கோல்கே படைத்துள்ளார்.

      பிராமணர்கள் மீது காந்திக்கு விமர்சனமில்லாமல் இல்லை. விவேகானந்தரைப் போலவோ, ஆரிய சமாஜிகள் போலவோ அவர் மேல்நிலையாக்க முன்மொழிவுகளை வைக்கவில்லை. ஒரே ஒரு வர்ணம் என்றால், உடல் உழைப்பு சூத்திர வர்ணமாக மாறுவோம் என்றே அவர் பேசினார்.

      காந்திக்கு எவ்வளவு புகழ் மாலைகள் சூட்டப்பட்டனவோ, அவ்வளவு கண்டன விமர்சனங்கள், பழிப்புகள், வசவுகளும் வந்தன. தேசப்பிதா என்கிற அழைப்புகளும் இருந்தது. பத்தாம்பசலி, ரீஆக்ஷனரி, பூர்ஷ்வாவாதி, என்ன கிழித்தார் காந்தி என ஏராள சொல்லடிசூடல்களும் வரவே செய்தன.

      பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம் காந்தி மீது வைத்த விமர்சனம் - அவர் காங்கிரஸ், சாதி இந்துசுப்ரீமசிக்குநிற்கிறார் என்பதே. சுதந்திரமே அவரது இலக்கு, தீண்டாமையோ, இந்து - முஸ்லீம் ஒற்றுமையோ அல்ல என்றனர். இதை எதிரொலித்த இந்தியர்களும் உண்டு. காந்தி எந்த போராட்டத்தையும் தனித்த ஒன்றாக நடத்தவில்லை. அவருக்கு விடுதலை, இந்து முஸ்லீம் ஒற்றுமை, தீண்டாமை, நிர்மாண திட்டம் என்பவை ஒருங்கிணைந்த போராட்டமாகவே இருந்தது.

     காந்தி மீது பலருக்கும் அச்சமும் சந்தேகப் பார்வையும் இருந்திருக்கக்கூடும். தங்கள் வழியில் தங்கள் கனவை அவர்களின் சொந்த பலத்தில் நிறைவேற்ற முடியாமல் போவதற்கு, காந்தியை அவர்கள் தடையாகப் பார்த்தனர். தங்களின் எதிர்பார்ப்புகளை அவர் மீது ஏற்றி, ஏமாறும் போது விமர்சித்தனர். காந்திக்கு எவர் மீதும், எக்கருத்து மீதும் ஒவ்வாமையில்லை. அவர் எதிரி தரப்பு என எவரையும் பார்க்கவில்லை. எதிர்தரப்புடன் உரையாடலை நடத்திக்கொண்டேயிருந்தார். உண்மை எவரின் ஏகபோகமல்ல என்கிற தெளிவு காந்தியிடமிருந்தது.

     அம்பேத்கர், இந்து முஸ்லீம் பிரச்சனையில், நிலவிய இந்திய யதார்த்தத்தை கணக்கில்கொண்டு, ‘Divided Divinity’ என விமர்சித்தார். காந்தி இந்தியாவிற்கு என்ன தேவையோ அதை மனதில் வைத்து ‘United Divinity’ எனப் பேசினார். வரலாற்றில் இதுவரை ஒன்று நடக்கவில்லையென்பதால், இனியும் நடவாது என கருத வேண்டியதில்லை என்கிற மானுடத்தின் மீதான அபார நம்பிக்கை காந்தியிடம் இருந்தது. ஜின்னாவால் அவர் முன்வைத்த பாகிஸ்தான் கோரிக்கையை நடைமுறையாக்க முடிந்தது. காந்தியால் ஜின்னா முன்வைத்தஇருதேசகொள்கையை உறுதியாக நிராகரிக்க முடிந்தது


 

       இந்துக்களால் பிறர் உதவியின்றி விடுதலை பெறமுடியும் என்பது பெரும் கற்பனை, இந்தியா இந்துக்களுக்கு மட்டும் சொந்தம் என்று பேசுவது பைத்தியக்காரத்தனம் என்றார் காந்தி. இந்தியாவோ பாகிஸ்தானோ அங்குள்ள சிறுபான்மையினரை எப்படி நடத்தப்போகிறார்கள் என்பதில்தான் அவர்களின் கண்ணியம் இருக்கிறது என்றார்.

        என்னை  எவர் ஆள நினைக்கிறார்என்பதைவிட, என்னை நானே ஆளமுடியுமா என்பதையே முக்கிய சோதனையாக்கினார். சுதந்திரம் என்பதை சுயக்கட்டுப்பாட்டுடன் கூடிய ‘self rule’ என காந்தி விரிவுபடுத்தினார். இப்படி காந்தியை குறித்து எவ்வளவு பேசினாலும் பேசப் பேச அவர் விரிவடைவார்.

        இந்நூலாசிரியர் சிவகுருநாதன், மற்றும் ஒருகாந்தி சரிதையைமிக மிக எளிய வகையில் எழுதியுள்ளார். ‘எல்லோருக்குமான காந்திஎன்கிற தலைப்பே அதன் விசாலத் தன்மையை பறை சாற்றுகிறது. சிவகுருநாதன் கல்வியாளர். மாணவர்களின் உளவியல் உணர்ந்தவர். பல ஆண்டுகளாக நான் அறிந்த அறிஞர். தேர்ந்த பன்முக சிந்தனைகளின் வாசிப்பாளர். இந்திய, குறிப்பாக தமிழ்ச் சமூகச் சூழலை உள்வாங்கி நூல்களை எழுதி வருபவர். அவரின் காந்தி குறித்த இந்நூல் தமிழ் வெளியில் நன்கு பேசப்படக்கூடிய நூலாக அமையும்.

       காந்தியின் வாழ்க்கையின் அனைத்து முக்கிய புள்ளிகளையும் சிவகுருநாதன் இணைக்க பெருமுயற்சி எடுத்துள்ளார். அவரின் விரிவான வாசிப்பனுவமும், உள்வாங்கும் திறனும் எல்லோருக்குமான காந்தியில்வெளிப்படும். பிறப்பு, குடும்பச்சூழல், கல்வி, லண்டன் பாரிஸ்டர், தென்னாப்பிரிக்கா போராட்டம், இந்தியா திரும்பி 1915லிருந்து, கோட்சேவின் குண்டு சாய்த்த காலம்வரை ஓயாத பணிகள் என இந்நூலில் காலவரிசையில், ஆசிரியர் கூற்றுவழி 18 இயல்களில் பதிவாகியுள்ளன. காந்திக்கு பின்னரான இந்தியாவும் தொட்டுக்காட்டப்பட்டுள்ளது.

        வேதாரண்யத்தில் உப்புசத்தியாகிரக காலத்தில் முடிதிருத்தும் தொழிலாளி வைரப்பன் குறித்து கூட சிவகுருநாதன் சொல்லும்போது, நுணுக்கமாக செய்திகளை சேகரித்து வெளிப்படுத்தும் உழைப்பைக் காணலாம். காந்தி காலத்தில் ஊடாடிய வடபுலத்து தலைவர்களை மட்டுமின்றி, தமிழக தலைவர்களின் ஊடாட்டத்தில் உடன்படும்- எதிர்வினையாற்றும் செய்திகளையும் சிவகுருநாதன் தரமுயற்சித்துள்ளது பாராட்டிற்குரியது.

        இந்துமதம், சனாதன வர்ண தர்மம் குறித்து காந்தி அளித்திடும் விளக்கங்கள் ஆழமான புரிதலின்றி சற்று மேம்போக்காக அமைந்திருந்தனஎன்கிற மதிப்பீடு ஒன்றிற்கும் சிவகுருநாதன் இந்நூலில் வந்துள்ளார். காந்தி குறித்து தீவிர வாசிப்பாளர்கள் இதில் உடன்படமாட்டார்கள். காந்தியிடம் அளப்பரிய சமய உரையாடல்கள் இருந்தன. சமயம் குறித்த விரிவான வாசிப்பை காந்தி மேற்கொண்டவர். அவரின் மதம் சார்ந்த scholarship, intellectual capital அசாதரணமானது. மத நல்லிணக்கம் சார்ந்த மதச்சார்பின்மையை அவர் தொடர்ந்து பேசிவந்தவர். அவரின் ஆசிரம வாழ்க்கை, காலை - மாலை வழிபாட்டு முறைகள் தனித்த நடைமுறை அனுசரிப்புகளானவை.

         காந்தி சமய ஆய்வாளர் அல்லவே தவிர, நிலவும் சமூகத்தில் செயல்பாட்டாளர் ஒருவரின் ‘text- context’ என்பதில் ஆக உயர் தேர்ச்சி கொண்டவராக இருந்தார். காந்திக்கு எதிலும் இணக்கப்புள்ளிகளே தேவைப்பட்டன. ‘அழித்தொழிப்புஎன்பது அவர் நிகழ்ச்சி நிரலில் அறவேயில்லை. அவரின் செயல்பாடு உடனடி பலன்களுக்கானதா - நீண்டகாலத்திற்கானதாக இருக்கிறதே என்கிற கேள்வி வந்தபோதெல்லாம், அதைவிட குறுக்கு வழி என ஏதுமில்லை என்றே அவர் சொல்லிக்கொடுத்தார். என்ன நிலவுகிறதோ அதன் தீங்குகள் உணரப்படும்போது, அதை களைந்துசமூக நல்லிணக்கம்கொணர உழைத்தார். நம்மில் எவரும் உயர்ந்தவரும் இல்லை - தாழ்ந்தவருமில்லை என்கிற சிந்தனையை அவரவர் தன்னிடத்திலிருந்தே தொடங்கித் தொடர்வது என்பதை அவர் பயிற்சித்தார். ஓர் அடியானாலும், முடிந்தால் அனைவருடனும், இல்லையேல் தான் மட்டுமாவது என்பது அவரின் அன்றாட தொழிற்பாடாக இருந்தது.

        காந்தி குறித்த எந்த நூலும் படிக்காத ஒருவருக்கு, சிவகுருநாதன் நூல் கிட்டுமெனில், ‘எல்லோருக்குமான காந்திநல்ல நுழைவாயிலாக இருக்கும் என்றே சொல்லத்தோன்றுகிறது. சிவகுருநாதன் இந்நூலை இவ்வாறு முடித்திருப்பார்உண்மை, அன்பு, எளிமை, அகிம்சை, சகிப்புத்தன்மை, நல்லிணக்கம், அறம்சார் வாழ்வு, மது உள்ளிட்ட போதை விலக்கு, தனிமனித ஒழுக்கம் போன்றவை காந்தியத்தின் கூறுகளாகும்.”

       சமூகத்திற்கு பயன்படத்தகுந்த ஏராள நூல்களை வெளியிட்டு வரும் நன்னூல் பதிப்பகம் தோழர் காதர், இந்நூலையும் கொணர்ந்து பெருங்கடமையை செய்துள்ளார். பாராட்டுகள். சிவகுருநாதனின் அரிய உழைப்பால் வந்துள்ளஎல்லோருக்குமான காந்திகாந்தி இலக்கியக் கிடங்கில் முக்கிய சேர்மானம். வாசிப்போர் காந்தியை கண்டறியமுடியும். சிவகுருநாதனுக்கு நல்வாழ்த்துகள்!

நன்றி: தோழர் ஆர். பட்டாபிராமன்

நூல் விவரங்கள்:

 எல்லோருக்குமான காந்தி  (மகாத்மாவின் கதை) 

மு.சிவகுருநாதன்

முதல்பதிப்பு: டிசம்பர்  2025

பக்கங்கள்: 198   விலை: ரூ. 220

ISBN: 978-93-48900-21-0

நூல் வெளியீடு மற்றும் கிடைக்குமிடம்:

நன்னூல் பதிப்பகம்,

மணலி – 610203,

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம்.

அலைபேசி: 9943624956 

மின்னஞ்சல்:

 nannoolpathippagam@gmail.com

அலைபேசி:  9943624956    (G Pay)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக