எல் நினோ மற்றும் லா நினா
மு.சிவகுருநாதன்
பசிபிக் பெருங்கடல் பூமிப்பந்தின் மிகப்பெரிய கடலாகும். எனவே இங்கு நிகழும் காற்று மற்றும் நீரோட்டங்கள் உலகில் நேரடியான தாக்கத்தை உண்டாக்குகின்றன. தென் அரைக்கோளத்தில் நிலப்பரப்பு குறைவாக இருப்பதாலும், பசிபிக் பெருங்கடலின் தென்பகுதி வெப்பநிலை முதன்மையான ஒன்றாக உள்ளது. பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் வெப்பநிலை மாற்றங்களால் உலகளவில் காலநிலையை பாதிக்கும் இரு எதிர் நிகழ்வுகளாக அறியப்படுபவை எல் நினோ மற்றும் லா நினா ஆகியவை ஆகும்.
பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதியில் கடல் நீர் சராசரியை விட அதிகமாக வெப்பமடையும் நிகழ்வு எல் நினோ (El Nino) என்றழைக்கப்படுகிறது. எல் நினோ என்றால் ஸ்பானிய மொழியில் சிறுவன் என்று பொருள். எல்நினோவிற்கு மாறாக பசிபிக் கடற்பகுதியின் வெப்பநிலையை வழக்கத்தை விடக் குறையும் நிகழ்வு லா நினா (La Nina) என்றும் சொல்லப்படுகிறது. லா நினா என்றால் சிறுமி என்று பொருள். இவையிரண்டும் இணைந்த தென் சுழற்சி ENSO (El Nino-Southern Oscillation) என்று வழங்கப்படுகிறது. இச்சுழற்சியானது உலகளவில் வளிமண்டல சுழற்சியை மாற்றியமைக்கிறது.
நிலநடுக்கோட்டுப்பகுதியில் வெப்பமண்டலப் பகுதியில் வியாபாரக் காற்றுகள் (Trade winds) எனப்படும் கோள் காற்றுகள் (Planetary winds) வட அரைக்கோளத்தில் வடகிழக்கிலிருந்தும், தென் அரைக்கோளத்தில் தென்கிழக்கிலிருந்தும் வீசுகின்றன. இக்காற்றுகள் பசிபிக் பெருங்கடலில் உள்ள கடல் நீரோட்டங்களை பாதிப்படையச் செய்கின்றன.
இக்காற்றின் மூலம் சாதாரண சூழ்நிலைகளில் பசிபிக் பெருங்கடலின் மேல் அடுக்கில் உள்ள நீர் அதிக வெப்பமடையும் போது, அது ஆசியக் கண்டப்பகுதியை நோக்கி பாயத் தொடங்குகிறது. எனவே கீழ் அடுக்கில் உள்ள குளிர்ந்த நீர் அந்த இடத்தைப் பிடிக்கிறது. இதனால் பசிபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் உள்ள நீரின் வெப்பநிலை கிழக்குப் பகுதியில் உள்ள நீரைவிட குறைவாகவும், ஆசியாவிற்கு அருகிலுள்ள மேற்குப் பகுதியில் அதிகமாகவும் இருக்கிறது.
கிழக்குக் காற்று மெதுவாக அல்லது எதிர் திசையில் வீசத் தொடங்கினால், மேற்பரப்பு நீரின் வெப்பநிலையும் அதிகரித்து, சூடான நீர் கிழக்கு நோக்கி தென் அமெரிக்காவை நோக்கி நகரும். இந்த நிலை எல் நினோ என்று அழைக்கப்படுகிறது. ஆனால், இந்த கிழக்குக் காற்று வேகமாக வீசத் தொடங்கும் போது, சூடான நீரும் காற்றின் நீராவியும் முதலில் ஆசியாவை நோக்கி நகர்ந்து, பின்னர் இந்த குளிர்ந்த நீரும் மேற்கு நோக்கிப் பாயத் தொடங்குகிறது. இது லா நினா என்று அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, எல் நினோ காரணமாக பெருவின் கடற்கரைக்கு அப்பால் உள்ள குளிர்ந்த மேற்பரப்பு நீர் வெப்பமடைகிறது. நீர் வெப்பமடையும்போது, இயல்பான வியாபாரக் காற்றுகள் திசைமாறுகின்றன. எனவே, ஈரப்பதம் நிறைந்த காற்றின் ஓட்டம் மேற்கு பசிபிக் பகுதியிலிருந்து தென்கிழக்கு ஆசியாவிற்கு அருகிலுள்ள பகுதியான பெருவின் கடற்கரையை நோக்கித் திரும்புகிறது. இதனால் எல் நினோ ஆண்டுகளில் பெரு கனமழையைப் பெறுகிறது. மாறாக இந்தியாவில் இயல்பான பருவமழை கிடைக்காமல் பொய்த்துப் போகிறது. வெப்பநிலை மற்றும் அழுத்தக் காரணிகளில் எந்த அளவிற்கு வேறுபாடுகள் உள்ளதோ, அந்த அளவிற்கு இந்தியாவில் மழைப்பொழிவில் பாதிப்பும் உண்டாகும்.
இதற்கு மாற்றாக கிழக்கு பசிபிக் பெருங்கடலில் நீரின் வெப்பநிலை இயல்பை விடக் குளிராகும்போது நிலநடுக்கோட்டின் கிழக்குப் பசிபிக் பகுதியில் ஒரு வலுவான உயர் அழுத்தம் உருவாகிறது. அப்போது மேற்கு பசிபிக் மற்றும் ஆசியாவிற்கு அப்பால் குறைந்த அழுத்தம் நிலவும். இந்த லா நினாவானது பெரு மற்றும் ஈக்வடாரில் கடும் வறட்சியையும், ஆஸ்திரேலியாவில் பெரும் வெள்ளத்தையும், மேற்கு பசிபிக், இந்தியப் பெருங்கடல் மற்றும் சோமாலியக் கடற்கரைக்கு அப்பால் அதிக வெப்பநிலையையும், இந்தியாவில் நல்ல பருவமழையையும் கொடுக்கிறது. எனவே லா நினாவால் இந்தியாவிற்கு பலன் கிடைக்கிறது.
வழக்கமாக எல் நினோ மற்றும் லா நினா நிகழ்வுகள் 2 முதல் 8 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கின்றன. லா நினாவை விட எல் நினோ அடிக்கடி நிகழ்கிறது. இந்த நிகழ்வுகள் 9 முதல் 12 மாதங்கள் வரை நீடிக்கும் வகையில் இருக்கும். எல்நினோ கடலின் மேற்பரப்பு வெப்பமடைவதால் வறட்சி மற்றும் அதிக வெப்பத்தையும், லாநினா குளிர்வடைவதால் அதிக மழை மற்றும் குளிர்ச்சியையும் உண்டாக்குகின்றன. இவை இந்திய பருவமழை மற்றும் விவசாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
1950 ஆம் ஆண்டு முதல் இந்தியா சந்தித்த 13 வறட்சிகளில், 10 எல் நினோ ஆண்டுகளிலும், ஒன்று லா நினோ ஆண்டிலும் ஏற்பட்டுள்ளன. பொதுவாக எல் நினோவின்போது இந்தியாவில் சராசரியை விடக் குறைவான மழையே கிடைக்கிறது. பருவமழையை மட்டும் நம்பியுள்ள இந்திய விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே குறைவான மழைப்பொழிவால் சராசரிக்கு குறைவான அளவு பயிர் உற்பத்தியாகிறது.
எல் நினோவினால் ஏற்படும் கடுமையான வறட்சி மற்றும் அதனுடன் தொடர்புடைய உணவுப் பற்றாக்குறை, வெள்ளப்பெருக்கு, மழைக்குறைவு மற்றும் வெப்பநிலை உயர்வு ஆகியவை தொற்று நோய்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு, வெப்ப அழுத்தம் மற்றும் சுவாச நோய்கள் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. எல் நினோ மீன்பிடித்தலையும் மோசமாக பாதிக்கும். எல் நினோவின் போது பெருங்கடல்களில் உண்டாகும் வெப்பநிலை உயர்வு மீன் மற்றும் இதர கடல்வாழ் உயிரினங்களைப் பாதிப்பிற்குள்ளாக்கி மீன்பிடித் தொழிலையும் முடக்கும். இதனால் உலகப் பொருளாதாரம் பெருமளவு வீழ்ச்சியடையும்.
2020-2022 காலகட்டத்தில் லா நினா நிலை தொடர்ச்சியாக மூன்று முறை ஏற்பட்டது. எல் நினோவின் போது, உலக வெப்பநிலை சராசரியை விட உயர்வதும், லா நினாவின் போது குறைவதும் நடக்கிறது. மனிதனால் உருவான காலநிலை மாற்றம் ஏற்கனவே உலக வெப்பநிலையை அதிகரித்துள்ள சூழலில் எல் நினோவின் தாக்கம் இதை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் அதிக வெப்பநிலை உணரப்பட்டது. அதற்கு முன்னதாக 2020-2022 காலத்தில் மூன்று ஆண்டுகளும் எதிர்பாராத லா நினா ஆண்டுகளாக அமைந்தன. இது உலக வெப்பநிலையை ஓரளவு கட்டுக்குள் வைக்க உதவியது எனலாம்.
எல் நினோவின் போது, பசிபிக் பெருங்கடலின் மேல் உள்ள ‘ஜெட் காற்றுகள்’ தெற்கு மற்றும் கிழக்கு நோக்கி நகர்வதால் அமெரிக்கா மற்றும் மெக்சிகோ வளைகுடாவில் அதிக மழைப்பொழிவு ஏற்படுகிறது. அதேகாலத்தில் தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, மத்திய ஆப்பிரிக்கா ஆகியவை ஒப்பீட்டளவில் வறண்ட காற்றை எதிர்கொள்கின்றன. லா நினாவின் போது இதற்கு நேர்மாறாக நடக்கும்.
எல் நினோ வளிமண்டலத்தில் காற்றின் நீரோட்டங்களை பாதிக்கிறது. இதே காலகட்டத்தில் நிலநடுக்கோட்டுப் பசிபிக் பெருங்கடலில் அதிகளவில் புயல்களை உண்டாக்குகிறது. ஆனால் அட்லாண்டிக் பெருங்கடலில் குறைவான புயல்கள் ஏற்படுகின்றன. லா நினாவின் போது இதுவும் தலைகீழாக மாறும்.
எல் நினோவின் போது காற்றில் கார்பன் டை ஆக்சைடு (CO2) வாயுவின் அளவு அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. நிலநடுக்கோட்டுப் பகுதிகளில் வறண்ட காற்று தாவரங்களின் வளர்ச்சியைக் குறைப்பதால், குறைந்த கார்பன் டை ஆக்சைடு உறிஞ்சப்படுகிறது. வெப்பம் தீயை எரித்து, அதிகளவில் கார்பன் டை ஆக்சைடு காற்றில் வெளியிடப்படுகிறது.
வலுவான எல் நினோ நிகழ்வுகள், இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பருவமழை பலவீனமடைந்து குறைவதற்கும் இதனால் வறட்சி ஏற்படுவதற்கும் வழிவகுக்கின்றன. எல் நினோவின் குளிர் காற்றை விட, லா நினாவின் குளிர் காற்று இந்தியாவின் பெரும்பகுதியை ஆக்கிரமிக்கிறது.
லா நினா ஆண்டில் தென்கிழக்கு ஆசியாவில், குறிப்பாக வடமேற்கு இந்தியா மற்றும் வங்காளதேசத்தில், கோடை கால மழைப்பொழிவு இயல்பை விட அதிகமாக இருக்கும். இது பொதுவாக இந்தியப் பொருளாதாரத்திற்கு நன்மை அளிக்கிறது, ஏனெனில் அது விவசாயத்திற்கும் தொழில்துறைக்கும் பருவமழையைச் சார்ந்துள்ளது.
லா நினா சைபீரியா மற்றும் தென் சீனாவிலிருந்து குளிர்ந்த காற்றை உள்ளிழுப்பதன் மூலம் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தக் காற்று வெப்பமண்டல வெப்பத்துடன் வினைபுரிந்து, ஒரு வடக்கு -தெற்கு குறைந்த காற்றழுத்த அமைப்பை உருவாக்குகின்றன. இது பொதுவாக இந்தியாவில் இயல்பை விடக் கடுமையான குளிர்காலத்தைக் கொண்டுவருகிறது. பருவநிலை மாற்றப் பாதிப்புடன் கூடவே இந்த இயற்கை நிகழ்வையும் இணைத்துச் சிந்தித்து செயல்பட வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.
நன்றி: பொம்மி – சிறுவர் மாத இதழ், ஏப்ரல் 2026





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக