வெள்ளி, மார்ச் 13, 2026

வானிலை அறிவோம்!

 

வானிலை அறிவோம்!

மு.சிவகுருநாதன்


 

          பள்ளிக்கல்வியில் பத்தாம் வகுப்பு முடிய குழந்தைகளுக்கு சமூக அறிவியல் பாடத்துடன் புவியியல் பாடம் கற்றுக் கொடுக்கப்படுகிறது. வானிலை, காலநிலை போன்றவை புவியியலின் உட்பிரிவாகும். +1, +2 வகுப்புகளில் புவியியல் பாடம் இருப்பினும் அவற்றைத் தேர்வு செய்வோர் மிகவும் குறைவு; எல்லாப் பள்ளிகளிலும் அப்பாடப்பிரிவு இருக்காது. அதற்கடுத்து புவியியல் பட்ட மற்றும் பட்ட மேற்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் குறைவாகவே உள்ளன; அதைப் படிப்போரும் குறைவு. புவியியலும் அதன் உட்பிரிவுகளும் குழந்தைகளுக்கு அவசியமான வாழ்வியல் கல்வியாகும். இவற்றை தேவையான அளவில் குழந்தைகளுக்கு ஏற்ப சொல்லித்தர பாடத்திட்டங்களும் பாடங்களும் அமைக்கப்பட்டிருக்கிறதா என்பது கேள்விக்குறிதான். வானிலை, காலநிலை, பேரிடர் ஆகிய தலைப்புகளில் எளிய, எது தேவையோ அதைச் சொல்லித்தராமல் தேவையற்ற குப்பைகளை அள்ளிக்கொட்டும் இடமாக பாடநூல்கள் உள்ளதை ஒத்துக்கொண்டே ஆக வேண்டியிருக்கிறது. பேரிடர் பற்றிய பாடங்களும் பேரிடர் மேலாண்மையும் இங்கு சுனாமிக்குப் (2004) பிறகே இங்கு அறிமுகமானதையும் குறிப்பிட வேண்டியுள்ளது. வாழ்வியலுக்கு இன்றியமையாத ஒரு பாடத்தில் குழந்தைகளும் பொதுச் சமூகமும் மந்தமாக இருக்கக் கூடாது.

        வானிலை குறித்த நமது புரிதலுக்கு ஒரு எடுத்துக்காட்டை கவனிக்கலாம். வானிலையை ஆங்கிலத்தில் ‘weather’ என்றும்  காலநிலை ‘climate’ என்றும் சொல்லவேண்டும். ஆனால் பலரும் எப்போதும் “Climate சரியில்லைஎன்று சொல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். ஒரு குறிப்பிட்ட குறுகிய காலத்தில் (24 மணி நேரம் அல்லது ஒரு நாள் முதல் சில மாதங்கள் வரை) ஏற்படும் வெப்பம், அழுத்தம், ஈரப்பதம், மழை, காற்று, பனி, மேகம், சூறாவளி, பனிப்புயல், புழுதிப்புயல் போன்ற நிகழ்வுகளையும் எப்போதாவது நிகழும் இயற்கைப்பேரிடர்கள் போன்றவற்றையும் வானிலை (weather) என்றே சொல்லவேண்டும். இத்தகைய வானிலைத் தொகுப்பின் நீண்டகால சராசரி காலநிலை (climate) என்றழைக்கப்படுகிறது. இதை தட்ப வெப்பநிலை என்றும் தமிழில் சொல்வதுண்டு. 30 ஆண்டுகளுக்கு மேலான ஓரிடத்தின் வானிலைச் சராசரியே இவ்வாறு கூறப்படுகிறது.

        சென்னையில் தென் மாநிலங்களுக்கான மண்டல வானிலை ஆய்வு மையம் (RMD - Regional Meteorological Centre) அமைந்துள்ளது. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கும் புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான்-நிகோபர் தீவுகள் ஆகிய யுனியன் பிரதேசங்களுக்கும் வானிலை முன்னச்சரிக்கை தரும் அமைப்பாகும். இந்தியாவில் பிற வானிலை ஆய்வு மையங்கள் புதுதில்லி, மும்பை, நாக்பூர் (மகாராஷ்டிரா), கொல்கத்தா (மேற்கு வங்காளம்), குவஹாத்தி (அசாம்), போன்ற இடங்களில் அமைந்துள்ளது.  

      பிரிட்டிஷ் இந்தியாவில் 1875இல் வானியல் ஆய்வுத்துறை தொடங்குவதற்கு முன்பே 1792இல் வானிலை மையம் தொடங்கப்பட்ட பெருமையுடையது சென்னை. விண்மீன்களை ஆராய்தல் மற்றும் வானிலையைப் பரப்புவதை தொடக்ககால  நோக்கமாகக் கொண்டு தொடங்கிய இந்த மையம் பின்னாளில் வானிலைத் தரவுகளைச் சேகரிக்கத் தொடங்கியது. 1945 ஏப்ரல் 1 தேதி தென் மண்டல வானிலை ஆய்வு மையமாக மாற்றப்பட்டது. இந்தியாவின் பிற மையங்களைவிட சிறப்பான வசதிகள் கொண்ட மையமாக இது கருதப்படுகிறது.

        சென்னையிலுள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் வழங்கும் வானிலைத் தகவல்கள் போதுமானதாக இல்லை என்பது பலமுறை நிருபிக்கப்பட்டுள்ளது. ஒகி (2017), கஜா (2018), டித்வா (2025) போன்ற புயல்களையும் சென்னைப் பெருமழை உள்ளிட்ட பல்வேறு அதி கனமழைகளையும் சரிவரக் கணிக்கத் தவறியுள்ளது. சரியாக செயல்படாத ரேடார் உள்ளிட்ட கருவிகளைக் கொண்டு வானிலையைக் கணிக்க சிரமப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இதைச் சரிசெய்து மக்களைப் பாதுகாக்க ஒன்றிய அரசு விரும்பவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் தெற்காசிய நாடுகளில் கூட்டமைப்பின் (SAARC) உறுப்பு நாடுகளுக்கு வானிலை விவரங்களை எவ்வாறு பகிர்ந்துகொள்ளும்? என்பது வியப்பிற்குரிய ஒன்றாக உள்ளது.

     அமெரிக்க, ஐரோப்பிய மாதிரிகள் ஒப்பிட்டளவில் நவீனமாக உள்ளன. ஆனால் அவை இந்தியப் பெருங்கடல் புயல்களை மிகச்சரியாக கணிப்பதில் பெரியளவில் அக்கறை காட்டுவதில்லை. எனவே அவற்றை அப்படியே பயன்படுத்துவது இங்கு பலனளிப்பதில்லை. நமக்கான இந்திய வானிலை மாதிரியை  உருவாக்குவது பற்றி ஒன்றிய அரசும் தொடர்புடைய துறைகளும் சிந்திக்கத் தவறியுள்ளன. நாம் அதைப்போல ஒரு முன்னோடியான மாதிரியை ஏன் உருவாக்கவில்லை என்பது குறித்து இஸ்ரோவும் (ISRO) ஒன்றிய அரசும் சிந்திக்க வேண்டும்.   இந்திய வானிலை ஆய்வுகளுக்கு இஸ்ரோ மிகப்பெரிய பங்களிப்பை நல்க முடியும்.  இன்றுள்ள அதிநவீன யுகத்தில் நாட்டிற்கான வானிலை முன்னறிப்பிற்கு உரிய கவனம் செலுத்தாத நிலை குறித்து நாம் வெட்கப்பட வேண்டும். ஒன்றிய அரசுத் தரப்பின் இந்த போதாமைகளை தனியார் சுயாதீன வானிலை ஆய்வாளர்கள் போக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இவர்கள் ஒருவகையில் பொதுமக்களுக்கும் குழந்தைகளுக்கும் வானிலைகாலநிலை மற்றும் புவியியல் கல்வியை அளித்து வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.        

 

       உள்ளூர் அளவில் வரலாறுகள் எழுதப்படவேண்டும் என்று வலியுறுத்துவதைப்போல உள்ளூர் அளவிலும் வானிலை ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியது இன்றைய காலகட்டத்தில் அவசியமாக உள்ளது. தகட்டூர் ந.செல்வகுமார் (வானிலை அறிவியல்), ஹேமச்சந்திரன் (Delta Weatherman), ப்ரதீப் ஜான் (Tamilnadu Weatherman) போன்ற சுயாதீன வானிலை ஆய்வாளர்களின் கணிப்புகள் ஒப்பீட்டளவில் சிறப்பாக உள்ளன.  சென்னைக்குப் பாதிப்பு என்றால் திரளும் ஆளும் அதிகார வர்க்கம் பிறபகுதிகளுக்கு அவ்வாறான முன்னெடுப்புகளை எடுப்பதில்லை என்கிற வேதனையும் இங்குண்டு.  வானிலை மையத்தைவிட செல்வகுமார், ஹேமச்சந்திரன் ஆகியோர் டெல்டா மாவட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர்.

        நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த தகட்டூர் ந.செல்வகுமார் தனியார் வானிலை ஆய்வாளர்களில் முக்கியமானவர். ஆசிரியர் பயிற்சிக்குப்பின் ஆந்திர மாநில கடலோரங்களில் இறால் பண்ணைகளில் பணியாற்றிய காலத்தில் வானிலை ஆய்வுகளுக்கு சுயகல்வி மூலம் வந்தடைந்தவர். தொடர்ந்த தன்னார்வ உழைப்பின் மூலம் வானிலை அறிவியலை மிக எளியமுறையில் மக்களிடம் கொண்டு சேர்த்துக் கொண்டிருப்பவர். மன்னார்குடி பகுதியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றிய இவர்  புயல், மழை மற்றும் காலநிலை மாற்றங்கள் குறித்துத் துல்லியமான கணிப்புகளை அளித்து வருகிறார். டெல்டா மாவட்டங்களுக்கும் தமிழ்நாட்டின் உழவர்களுக்கும் இவரது வானிலை அறிக்கைகள் பெரிதும் பயன்பட்டு வருகின்றன. வானிலையை விரிவாக விளக்க இவர் முயற்சி செய்யும் விதம், தொனி போன்றவற்றில் சிக்கல்கள் இருப்பினும் தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கானோருக்கு இவரது அறிக்கைகள் உதவுகின்றன.  இவரின் தாக்கம் பலரை வானிலை ஆய்வை நோக்கித் திருப்பியுள்ளது.

        தமிழ்நாடு வெதர்மேன் (Tamilnadu Weatherman) என்ற பெயரில் அறியப்படும் பிரதீப் ஜான், தன்னை வானிலையை விளக்குபவர் என்று சொல்லிக் கொள்கிறார். சிறு வயதிலிருந்து தொற்றிய வானிலை ஆர்வம் அவரை இத்தகைய ஆய்வுகளுக்கு உந்தித் தள்ளியுள்ளது. இத்துறையில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் இளைஞர்டெல்டா வெதர்மேன்ஹேமச்சந்திரன். இவரும் சிறப்பான வானிலை அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். இவரது அறிக்கைகள் சுருக்கமாகவும் தெளிவாகவும் இருப்பது சிறப்பு. புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்படும் டெல்டா மாவட்டங்களுக்கு முதன்மையளிக்கும் வகையில் இவரது அறிக்கைகள் அமைகின்றன. இவர்கள் தங்களது வானிலை அறிக்கைகளை சமூக ஊடகங்கள் வழியே பகிர்ந்து மக்கள் தொண்டாற்றி வருகின்றனர். 

     எவ்வளவுதான் தொழில்நுட்பங்கள் இருப்பினும் வானிலையை கணிப்பதுச் சற்று சிக்கலானதுதான். இக்கணிப்புகள் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவை. வானிலை ஆய்வு மையம் மேம்போக்கான கணிப்புகளை வெளியிட்டு ஒதுக்கிக் கொள்ளும்போது இவர்கள் கூடுதலான முடிவுகளை வெளியிடுகின்றனர். இன்று கிடைக்கும் பல்வேறு வானிலை தொடர்பான நூற்றுக்கணக்கான இணையதளங்களிலிருந்து தரவுகளைப் பெற்று அவற்றை தீவிரமாகவும் பொறுப்பாகவும் ஆய்வு செய்து உள்ளூர் பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து கணிப்புகளை உருவாக்குகின்றனர். அவை சில சமயங்கள் பொய்த்துப் போகின்றனர். இதனால் இவர்கள் கடும் தூற்றலுக்கு உள்ளாகின்றனர். இருப்பினும் தங்கள் பணியில் மனம் தளராது ஈடுபடுவதை நாம் பாராட்டியாக வேண்டும்.

     சூழலியல் நூல்களை ஒப்பிடும்போது வானிலையியல் நூல்கள் மிகவும் குறைவு. புவியியல், வானிலை, காலநிலை, பேரிடர்கள் போன்றவற்றை எளிமையாகப் புரிந்துகொள்ள குழந்தைகளுக்கான மொழியில் அடிப்படை நூல்கள் உருவாக்கப்பட வேண்டும். அவற்றைப் பாடங்களுடன் இணைக்க வேண்டும். இதன்மூலம் இயற்கை மற்றும் சூழலை நேசிக்கவும், பாதுகாக்கவும் முடியும். 

நன்றி: பொம்மிசிறுவர் மாத இதழ் மார்ச் 2026

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக