வியாழன், ஜூன் 11, 2026

கொலம்பிய நீர்யானைகளால் இந்தியாவிற்கு சூழலியல் பாதிப்பு!

 கொலம்பிய நீர்யானைகளால் இந்தியாவிற்கு சூழலியல் பாதிப்பு

மு.சிவகுருநாதன்


 

         கொலம்பியா அரசு அயல் விலங்காக பல்கிப் பெருகிய 80 நீர்​யானை​களைக் கொல்ல முடிவு செய்​துள்​ளதை அறிந்த  இந்தியத் தொழில​திபர் ஆனந்த் அம்பானி அவற்றை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுகோள் விடுத்​துள்​ளார். மார்ச் 04, 2025 குஜராத் மாநிலம் ஜாம்நகரில், சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவில் ரிலையன்ஸ் குழுமத்தின் வன உயிரின பாதுகாப்பு, மீட்பு, மறுவாழ்வு நிலையமான வன்தாராவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து வியந்து போட்டோ ஷூட் நடத்தியது நினைவிருக்கலாம். இங்கு பிரதமர் வழக்கம்போல சுற்றுச்சூழல் நிலைத்தன்மை குறித்தெல்லாம் விரிவுரையாற்றினார். கோசாலைகளைப் போல பாதிக்கப்பட்ட யானைகள் மற்றும் வனவிலங்குகளுக்கான மீட்பு, மறுவாழ்வு மற்றும் மருத்துவ பராமரிப்பு ஆகியவை இங்கு வழங்கப்படுகின்றன. மேலும் இங்கு ஆயிரக்கணக்கான வனவிலங்குகள் இயற்கையான சூழலில் பாதுகாக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

        அந்த நீர்யானைக் கூட்டத்திற்கு இந்தியாவில் "வாழ்நாள் முழுமைக்கும் பராமரிப்பு" அளிக்கத் தயாராக இருப்பதாகவும் "ஒவ்வொரு உயிரும் முக்கியமானது என்றும் வாய்ப்புள்ள இடமெல்லாம் உயிரைப் பாதுகாப்பது நமது கூட்டுப் பொறுப்பு என்ற வன்தாராவின் நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளது. இது தமிழ்நாட்டில் வள்ளலார் யுகத்தை கண்முன் கொண்டுவருவது போலுள்ளது! மனித உயிர்கள் மற்றும் இயற்கை மீது எவ்வித கரிசனமும் காட்டாத கார்ப்பரேட்களின் இந்த ஜீவகாருண்யம் வியப்பைத் தருகிறது. இந்த வேண்டுகோள் குறித்து கொலம்பியா அரசு இதுவரை எதுவும் சொல்லாத நிலையில் அவை இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டால் ஏற்படும் தாக்கங்கள் பற்றி யாரும் யோசிக்கவில்லை.

            கொலம்​பி​யா​வின் பிரபல கோகைன் போதைப் பொருள் கடத்​தல் மன்ன​ன் பாப்லோ எஸ்​கோ​பாருக்கு ஆனந்த் அம்பானியைப் போன்று  லத்தீன் அமெரிக்​கா​வில் மிகப் பெரிய தனி​யார் உயி​ரியல் பூங்கா அமைக்க வேண்​டும் என்​பது ஆசை ஏற்பட்டது. இதற்​காக அவன் 1980 ஆம் ஆண்​டு​ ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட 3 பெண் மற்​றும் ஒரு ஆண் நீர்​யானைகளை​ கொலம்​பி​யா​வுக்கு இறக்​குமதி செய்​தான். அவற்றை வன்தாராபோன்று புயெர்டோ ட்ரியூன்ஃபோ பகுதியில் உள்ள பண்​ணை​யில் வளர்த்​து வந்தான். இதனால் இவை கோக்கைன் ஹிப்போ (cocaine hippos)  என அழைக்கப்பட்டன. இப்பண்ணையில் பல்வேறு சட்டவிரோத விலங்கினங்களை வளர்த்து வந்தான். போதைப்போருள் கடத்தல் உள்ளிட்ட  பல குற்றச்செயல்களில் ஈடுபட்ட பாப்லோ எஸ்கோபார் 1993ஆம் ஆண்டு காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனது இறப்பிற்குபின் அங்குள்ள வனவிலங்குகள் பல்வேறு விலங்கியல் பூங்காக்களுக்கு மாற்றப்பட்டன.

         நீர்யானைகளைக் கொண்டு செல்வது  மிகவும் சிரமமாக இருந்ததால் அவற்றை எந்த பூங்காவுக்கும் வழங்காமல் அங்கேயே விட்டுச் சென்று விட்டனர். விரைவில் அவை பராமரிப்பின்றி  இறந்துவிடும் என்று நினைத்தனர். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. நீர் யானைகளை வேட்டையாட தென் அமெரிக்காவில் ஒரு உயிரினமும் இல்லாததால், அதன் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. கொலம்பியாவின்  முக்கிய நீர்வழியான மக்தலெனா ஆறு மூலம் பல இடங்களுக்கும் பரவத் தொடங்கின. அந்த நீர் யானைகள் இனப்பெருக்கம் அதிகரிக்கத் தொடங்கியதும் கொலம்பிய அரசு அவற்றிற்கு வேதிப் பொருள்கள் மூலம் கருத்தடை செய்தும் பார்த்தது. இது அந்நாட்டிற்கு அயல் விலங்காதலால் உள்ளூர் தாவர இனங்களை அழிப்பதாக கொலம்பியாவின் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

         கொலம்பியாவின் மக்தலேனா பகுதியில் தற்போது 160 நீர் யானைகள் பெருகிவிட்டதாகவும் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 500 ஆக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது.  தற்போது ஹேசிண்டா நாப்போல்ஸ் (Hacienda Napoles) உயிரியல் பூங்காவாக மாற்றப்பட்டு சுற்றுலா தலமாக மாறியுள்ள நிலையில் நீர்யானைகளின் இனப்பெருக்கம் உள்ளூர் உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதால் இவற்றில் 80 நீர்யானைகளைக் கொல்ல கொலம்பியா அரசு திட்டமிட்டுள்ளது. இம்முடிவு ஆனந்த் அம்பானி போன்ற உலகம் முழு​வதும் உள்ள விலங்கு நல ஆர்​வலர்​களை வேதனையடையச் செய்​துள்ளது. 


 

          இவ்வாறு அயல் உயிரினங்களை (alien animals) வேற்றிடத்தில் மாற்றி வளர்க்கும்போது பல்வேறு வகையான சூழியல் தாக்கங்கள் உண்டாகும். உணவு சங்கிலியும் உணவு வலையும் பாதிப்படையும். இப்பகுதியிலுள்ள வேறு இயல் (native animals) உயிரினங்களுக்குத் தீங்காக மாறும். இவற்றைக் கணக்கில் கொள்ளாது பணத்திமிரில் மட்டும் செயல்புரிவது சூழலைப் பாதிக்கும் பேரிடராக மாறும். இயற்கையைப் பெருமளவில் கொள்ளையிடுவதும் அழிப்பதும் கார்ப்பரேட்கள்தான்.

          பொதுவாகவே, இங்கு இயல் தாவரங்கள் (native plants), அயல் தாவரங்கள் (alien plants) பற்றிய புரிதல்கள் இங்கு மிகக் குறைவாகவே உள்ளன. மரம் வளர்க்க வேண்டும் என்போர்கூட எத்தகைய தாவரத்தை வளர்க்க வேண்டும் என்கிற புரிதலின்றிச் செயல்படுவது வாடிக்கை. மிளகு, பனை, செங்காந்தள், ஏலக்காய். இலவங்கம், சந்தனம், தேக்கு, கருங்காலி போன்ற தமிழகத்திற்கே உரித்தான (Endemic plants) 140 தாவரங்களும் இந்தியாவில் 600 இடவரையத் தாவரங்களாக (Endemic species) உள்ளன.

 

      வேம்பு, சுரை, புளி, மிளகாய், தென்னை, உருளைக்கிழங்கு, தேயிலை போன்ற பல தமிழகத்திற்கு அயல் தாவரங்கள்தான். இவை தமிழகத்திற்கு நுழைந்த காலங்கள் வேறுபட்டன. வேம்பு, சுரை ஆகியன சங்ககாலத்திலிருந்தே இங்குள்ளது. புளி 11 ஆம் நூற்றாண்டிலும், மிளகாய் 17-18 ஆம் நூற்றாண்டிலும், உருளைக்கிழங்கு 18-19 ஆம் நூற்றாண்டிலும் இந்தியாவிற்குள் நுழைந்தன. காப்பி, தேயிலை, ரப்பர், சவுக்கு, தென்னை, யூக்லிப்டஸ் போன்ற தோட்டப்பயிர்களும், அரகேரியா, போகன்வில்லா, குடை மரம் போன்ற அலங்காரத் தாவரங்களும் அயல் தாவரங்களாகும். இவற்றால் பேரளவு காடழிப்பும் சூழலியல் சீர்கேடுகளும் நடைபெற்றுள்ளன. 

      ஒரு குறிப்பிட்ட மண்ணுக்கேற்ற இயல் தாவரங்களே விரைவாகவும் நன்றாக வளரும்; சூழலுக்கும் கேடில்லாது இருக்கும். மாறாக அயல் தாவரங்களை சூழலைக் கெடுக்கும் தன்மையுடைவை. சீமைக்கருவேலம், பார்த்தீனியம், நெய்வேலிக் காட்டாமணக்கு, ஆகாயத்தாமரை (ஐக்கோர்னியா/வெங்காயத்தாமரை), சால்வீனியா, சூபாபுல், உண்ணிச்செடி (லான்டானா) போன்றவை அயல் தாவரங்களில் மிக வேகமாக வளரும் களைகளாக (Alien invasive species)  இருக்கின்றன. இவற்றால் ஏற்படும் சூழல் சீர்கேடுகள் அதிகம்.  

        விலங்கினங்களில் இந்தியாவிலுள்ள முக்கிய ஆக்கிரமிப்பு அயல் இனங்களாக ஆப்பிரிக்க கெளுத்தி, நைல் திலாப்பியா, செவ்வயிற்று பிரான்ஹா, அலகேட்டர் கார், செவிப்புண் ஆமை எனும் வட அமெரிக்க ஆமையினம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.  இவற்றால் வரும் தீங்குகள் பலநேரங்களில் பட்டியலிடப்பட்டு வருகின்றன.

        ஆஸ்திரேலியாவில் குடியேறிகள் உணவுக்காக அங்கு முயல்களைக் கொண்டு வந்தனர். அவை தாவரங்களை அழித்த காரணத்தால் மிக்சோமடாசிஸ் என்ற பூஞ்சை நோய் மூலம் முயல்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தினர். தனது நாட்டின் தனி அடையாளமான கங்காரு, கோலா கரடி, பிளாடிபஸ் போன்ற விலங்குகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஆஸ்திரேலியா தடைவிதித்துள்ளது. இந்தியாவும் நட்சத்திர ஆமை போன்ற அழிந்துவரும் விலங்குகளின் ஏற்றுமதியைத் தடைசெய்துள்ளது.

         கலபாகோஸ்,  செய்ஷல் தீவுகளிலும் வாழ்ந்த பெரிய ஆமைகளும் ஊர்வன பல்லி இனத்தைச் சேர்ந்த பேரோந்திகளும் (Iguana) அழிந்ததற்கு தாவர உண்ணிகளான ஆடுகள் காரணமாயின. கப்பல் போக்குவரத்தால் எங்கும் எலிகள் நுழைந்துவிட்டன. அவைகளைக் கட்டுபடுத்த பூனைகளை வளர்க்கத் தொடங்கினர். இதனால் அதிகம் பறக்க இயலாத  பறவையினங்கள் பூனைகளுக்கு உணவாயின. உணவு சங்கிலியும் உணவு வலையும் குலைவது இவ்வாறுதான்.

     அண்டார்க்டிகாவின் தீவுகளில் கடல்நாய், பென்குவின், கடல் பறவைகள் அதிகளவில் உள்ளன. அங்கும் அயல் விலங்கினங்கள் நுழைந்துவிட்டன.  அங்குள்ள மென்மையான, எளிய சூழலியல் அமைப்புகளை இவை எளிதில் குலைத்துவிட முடியும் என்பதுதான் உயிர்க்கோளத்தின் ஆபத்தாகும். அப்பகுதிகளுக்குச் சென்ற அயலக உயிரினங்கள் பல சூழலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அழிந்துள்ள நிலையில் முயல், எலி, பூனை, கலைமான் ஆகியன அங்கு தப்பிப் பிழைத்துள்ளன. உலகமெங்கும் இதுபோன்று பல்வேறு வகையான உதாரணங்களைச் சுட்டமுடியும். நமது நாட்டின் வளர்ப்புப் பிராணிகளில் நாயினங்களின் பெருக்கம், மலைப்பகுதிகளில் மட்டும் காணப்பட்ட மயில்கள் சமவெளிகளில் பெருகியதன் காரணத்தையும் ஆய்வு செய்ய வேண்டும். முன்னது மனிதனுக்கு ரேபிஸ் தொற்றையும் பின்னது வேளாண்மைக்கு கடும் பாதிப்பையும் கொண்டுவரப்போகிறது. 

        இந்தியாவில் சிறுத்தை (சிவிங்கிப் புலி-சீட்டா) இனம் அழிந்த நிலையில் 2022ஆம் ஆண்டு மோடி பிறந்த நாள் செப்டம்பர் 17 அன்று நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைகள் கொண்டுவரப்பட்டு மத்தியப்பிரதேசம் குனோ (KNP) தேசிய பூங்காவில் விடப்பட்டன. அப்போது பேசிய மோடி காங்கிரஸ் அரசு சிவிங்கிப் புலியைப் பாதுகாக்கத் தவறிவிட்டது என்று குற்றஞ்சாட்டினார். அங்கு விடப்பட்ட 8 சிவிங்கிப் புலிகளில் ஆறும் குட்டிகள் மூன்று என மொத்தமாக 9 சிவிங்கிப் புலிகள் இறந்துவிட்டன. இறப்பிற்கு பராமரிப்பின்மை, உணவுப் பற்றாக்குறை (இரையாகும் உயிரினங்களின் குறைவு), காலநிலை வேறுபாடுகள் (அதிக வெப்பம், மழை) போன்ற பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

      நமீபியாவைச் சேர்ந்த சீட்டா கன்சர்வேஷன் ஃபண்ட் (Cheetah Conservation Fund - CCF) என்ற அமைப்பு இத்திட்டத்தின் பங்கேற்று வருகிறது. இவ்வமைப்பு ஒன்றிய அரசு, பூங்கா நிர்வாகம், பராமரிப்பு, கண்காணிப்பு குறித்து பல்வேறு புகார்களை அடுக்குகிறது. ஆனால் ஒன்றிய அரசோ இதை வெற்றித்திட்டமாக அறிவிக்கிறது. எஞ்சியிருக்கும் சிவிங்கிப் புலிகள் நிலையைக் கொண்டே உண்மைகளை அறிய முடியும்.

         ஒரு பகுதிக்கு அயல் உயிரினங்களைக் கொண்டுவரும் முன்பு அதுகுறித்த ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். இது அப்பகுதிக்கு பல்வேறு சிக்கல்களைக் கொண்டுவரும். இவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பால் முற்றாக அழிக்க முற்பட்டாலும் வேறு சில புதிய சிக்கல்கள் தோன்றுவது இயற்கை. காடுகளுக்கு மனிதர்கள் கூட அயல் உயிரினம்தான். வனவிலங்குகளும் பழங்குடிகளுமே காட்டின் உரிமையாளர்கள்; சொந்தக்காரர்கள்.  இன்றைய மக்கள் விரோத அரசுகள் கார்ப்பரேட்களின் நலன்களுக்காக வனங்களை அழித்து தொல்குடியினரை வெளியேற்றுகிறது; இயற்கையை அழிக்கிறது. மறுபுறம் நரேந்திர மோடி, ஆனந்த் அம்பானிகளின் நீலிக்கண்ணீர் தொடர்கிறது. 

நன்றி: பொம்மிசிறுவர் மாத இதழ், ஜூன் 2026

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக