வெப்ப அலைகளும் ஈரப்பத வெப்ப அலைகளும்
மு.சிவகுருநாதன்
காலநிலை மாற்றத்தின் விளைவாக நாம் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. அவற்றில் ஒன்றுதான் வெப்ப அலைகளாகும். காடழிப்பு, காற்று மாசு, புவி வெப்பமயமாதல், நீர்நிலைகள் பாதிப்பு, மழை குறைதல் போன்ற பல்வேறு காரணங்களால் காலநிலை மாற்றச் சிக்கலை நாம் எதிர்கொண்டுள்ளோம். கோடைக்காலமான ஏப்ரல் முதல் ஜூன் முடிய இந்தியாவின் வட மற்றும் மேற்குப் பகுதிகளில் அதாவது சிந்து, கங்கை சமவெளிகளில் வீசும் வெப்பமான, வறண்ட மற்றும் புழுதிக் காற்றை ‘லூ’ (Loo) என்று அழைப்பர். கோடை வெப்பமும் தலக்காற்றுகளும் (Local Winds) ஒன்றும் புதிதல்ல என்றாலும் இத்தகைய வெப்ப அலைகளை உருவாக்கும் காற்றுகள் இன்று பரவலாகி வருகின்றன. சாதாரண வெப்ப நிலையைவிட 3°-5°C வரை உயரும்போது அது வெப்ப அலையாக மாறுகிறது. இதனால் புவிக்கும் உயிரினங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகம்.
வளிமண்டலத்தில் மேலே உள்ள உயர் அழுத்தப்பகுதி வலுவடைந்து ஒரு பகுதியின் மீது தொடர்ந்து நீடித்திருப்பதால் அப்பகுதியில் வெப்ப அலைகளை உருவாகிறது. இதனால் பூமியின் மேற்பரப்பில் அதிக வெப்பம் உணரப்படுகிறது. இந்த வெப்ப அலைகளை முன்கூட்டியே கணிக்க முடிவதால் ஒரளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
உலகில் அதிகளவில் வெப்பம் பதிவான நகரங்களில் இந்திய நகரங்கள் அதிகம். இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பம் பதிவாகியுள்ளதை புள்ளி விவரங்கள் தெளிவுபடுத்துகின்றன. எனவே இந்தியா வருங்காலங்களில் வெப்ப அலையின் கடும் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த வெப்ப அலைகள் நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் விவசாயம் மற்றும் தொழில்துறைகளில் உற்பத்தித் திறன் வெகுவாகக் குறைகிறது. கடும் வெப்பத்தால் வேளாண் பயிர்களும் பாதிக்கப்படும். கால்நடைகளும் விலங்குகளும் பெருமளவில் பாதிப்புகளை எதிர்கொள்ளும். வறட்சி அதிகமாகி காட்டுத்தீ ஏற்படுவதால் வனங்களும் வன உயிரினங்களும் அழியும். மின்தேவை அதிகமாகி தட்டுப்பாடு உண்டாகும். வெப்பத்தின் தாக்கம் கிராமங்களை ஒப்பிடும்போது நகரங்களில் அதிகமாக உள்ளது. தாவரங்கள் அழிக்கப்பட்டு கான்கிரீட் வனமாக மாறியுள்ள நகரங்கள் அதிக வெப்பத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
வெப்பஅலைகளினால் மனித உடலில் நீர் இழப்பு ஏற்படுகிறது, இதன் காரணமாக வெப்பச் சோர்வு (Heat Exhaustion) மற்றும் வெப்ப வாதம் (Heat Stroke) போன்ற பாதிப்புகள் உண்டாகின்றன. இதில் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், நோயாளிகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. தீவிரகாய்ச்சல் மற்றும் உடல் எரிச்சல், அதிகமான தாகம் மற்றும் நீரிழப்பு, உடல் பலவீனம், சோர்வு மற்றும் தலைசுற்றல், குமட்டல் மற்றும் வாந்தி, தலைவலி மற்றும் குழப்பம், தோல் வறண்டு வியர்வை நின்றுபோதல், வேகமான இதயத்துடிப்பு மற்றும் சுவாசிப்பதில் சிரமம், தசைப்பிடிப்பு மற்றும் வலி, மயக்கம் அல்லது வலிப்பு போன்ற பல்வேறு பாதிப்புகளும் அறிகுறிகளும் வெப்ப அலைகளின் தாக்கத்தால் ஏற்படும்.
இதைத் தடுக்க காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்படுகிறது. இது பெரும்பாலான உழைக்கும் வர்க்கத்திற்கு சாத்தியமில்லாத ஒன்றாகும். அன்றாட உழைப்பை நம்பியிருக்கும் விவசாயத் தொழிலாளர்கள், கட்டுமானப் பணியாளர்கள், தொழிலகப் பணியாளர்கள், வாகன ஓட்டுநர்கள், தினக்கூலிகள், சாலையோர சிறு வியாபாரிகள், வீடற்ற ஏழைகள் போன்ற பலரது வாழ்வாதார நிலை இதனால் கேள்விக்குறியாக மாறுகிறது.
தேவையின்றி வெயிலில் செல்வதைக் குறைத்தல், முடிந்தளவு வழக்கத்தைவிட அதிகளவு அதாவது இருமடங்கு குடிநீர் அருந்துதல், இயற்கையான பழச்சாறுகளை குடித்தல், வெயிலில் செல்லும்போது தலையை தொப்பி அல்லது துணிகொண்டு மறைத்தல், வெளிநிறக் குடைகளைப் பயன்படுத்துதல், அடர் வண்ணங்களைத் தவிர்த்து இளம் நிற பருத்தி ஆடைகள் அணிதல், உப்பு-சர்க்கரைக் (ORS - Oral Rehydration Solution) கரைசலை அருந்துதல், நீர்ச்சத்துள்ள பழங்களைச் சாப்பிடுதல், காற்றோட்டமான இடங்களில் இருத்தல் போன்ற நடவடிக்கைகள் பலனளிக்கும். வீட்டிலிருப்பவர்கள் கடும் வெயில் நேரத்தில் சமைப்பதைத் தவிர்க்க வேண்டும். வீட்டின் சன்னல், கதவுகளைத் திறந்து வைக்க வேண்டும். மது, தேநீர், காப்பி போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். அதிக நேரம் வெயிலில் நிறுத்தி வைத்திருக்கும் வண்டிகளில் அமர்ந்திருக்கக் கூடாது.
வசதி படைத்தவர்களுக்கு கோடை வாழிடங்கள், அறைக் குளிரூட்டிகள், வாகனக் குளிரூட்டிகள் எனப் பலவழிகள் உள்ள நிலையில் ஏழை, நடுத்தர மக்கள் கடற்கரைகளை நாடுகின்றனர். பகலில் சூரிய வெப்பத்தால் நிலப்பகுதி கடலை விட மிக விரைவாகவும் அதிகமாகவும் வெப்பமடைகிறது. நிலப்பகுதியில் காற்றழுத்தம் குறைவதால் கடலில் இருந்து நிலத்தை நோக்கி பகல் நேரத்தில் கடல் காற்று (Sea Breeze) வீசுகிறது. இக்காற்று குளிர்ச்சியாக இருப்பதால் பொதுமக்கள் கடற்கரையை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர். இதற்கு மாறாக இரவில் நிலப்பகுதி குளிர்வதால் கடலை நோக்கி வீசும் காற்று நிலக்காற்று (Land Breeze) என்றழைப்படுகிறது. கடற்கரைக்கு எப்போது செல்லலாம் என்பதை வானிலை மையங்களிடம் கேட்க வேண்டிய நிலை தற்போது உருவாகியுள்ளது.
அக்டோபர் 6 2024 அன்று இந்திய விமானப்படையின் 92வது ஆண்டுவிழாவில் சென்னை மெரினா கடற்கரையில் காலை 11 மணி முதல் 1 மணிவரை விமானப்படையின் சாகசங்கள் (Airshow) நடந்தன. இதைப் பார்வையிட லட்சக் கணக்கில் கூட்டப்பட்டனர். அங்கு சென்றவர்களில் வெப்பம் மற்றும் கூட்ட நெரிசலின் காரணமாக 5 பேர் உயிரிழந்தனர்; 200க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். இந்நிகழ்வு தமிழகத்தில் கோடையற்ற அக்டோபரில் நடந்தது. கோடைகாலத்தில் வெப்ப அலைகளும் பருவமழைக் காலத்தில் ஈரப்பத வெப்ப அலைகளும் நம்மைத் தாக்குகின்றன. வானிலை மையம் குறித்த நேரத்தில் எச்சரிக்கையை விடுத்திருத்தால் இந்த உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கும்.
அன்றைய தினத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.3°C ஆகும். வெயிலின் தாக்கம் அதிகமானதற்கு முதன்மைக் காரணம் ஈரப்பத வெப்பநிலை (Wet Bulb Temperature) ஆகும். வெறும் இது வெப்பநிலையை மட்டுமல்லாது காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் சேர்த்து கணக்கிடும் முறையாகும். வெயிலுடன் அளவுக்கதிகமான ஈரப்பதம் சேரும்பொழுது அது உடலில் வெயிலின் தாக்கத்தை அதிகரிக்கிறது. அன்று சென்னையில் 34.3°C வெயில் அடிக்கும் போது ஈரப்பதம் 70% என்றால் அது 42°C வெய்யிலுக்கு இணையான தாக்கத்தை உடலில் ஏற்படுத்தும். ஈரப்பத வெப்பநிலை 32°C இருக்கும்போது நலமுடைய மனிதர்கள்கூட 6 மணி நேரத்திற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது. உடல் பலவீனமானவார்கள் சில மணி நேரத்திலேயே மரணமடையக் கூடும்.
வெப்பநிலையுடன் காற்றில் உள்ள ஈரப்பதமும் சேர்ந்து உருவாகும் வெப்ப அலையை ஈரப்பத வெப்ப அலை (Moist heat wave) என்று சொல்கிறோம். காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்போது வியர்வை ஆவியாகாமல் உடலில் தங்குவதால், உடல் வெப்பநிலை ஆபத்தான அளவுக்கு உயர்ந்து வெப்பத் தாக்கு (Heat stroke) ஏற்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவில் வழக்கமாக கோடைகாலங்களில் நிலவும் வறண்ட வெப்ப அலைகளை விட, பருவமழை காலங்களில் நிலவும் ஈரப்பத வெப்ப அலைகள் (Moist Heat waves) மிகவும் ஆபத்தானவை என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
வழக்கமாக நமது உடல் வெப்பமடையும் போது வியர்வையை வெளியேற்றி அது காற்றில் ஆவியாவதன் மூலம் உடல் தன்னைத் தானே குளிர்வித்துக் கொள்ளும். கோடைகாலங்களில் வெகு இயல்பாக நடக்கும் இச்செயல்முறை, பருவமழைக் காலங்களில் காற்றில் ஏற்கனவே ஈரப்பதம் (Moist) அதிகமாக இருப்பதால், உடலில் சுரக்கும் வியர்வை ஆவியாக இயலாது. வியர்வை ஆவியாகாத காரணத்தால் உடலின் குளிர்ச்சி நின்றுவிடும். இதனால் உடல் வெப்பநிலை மிக வேகமாக உயர்வதால், சில மணி நேரங்களிலேயே வெப்பச் சோர்வு அல்லது மரணம் ஏற்படக்கூடும். இந்த ஆபத்தான வெப்ப அலைகளை இந்தியாவின் பருவமழை (Monsoon) தீர்மானிப்பதை காலநிலைத் தரவுகள் நிரூபிக்கின்றன.
வட இந்தியாவில் பருவமழை தீவிரமாக இருக்கும்போது ஈரப்பத வெப்ப அலை உருவாகும் வாய்ப்பு 125% இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த வானிலை நிகழ்வுகளை 2 முதல் 4 வாரங்களுக்கு முன்பே துல்லியமாகக் கணிக்க முடியும். எனவே பொது நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள், ராணுவத்தின் சாசக நிகழ்வுகள் போன்றவற்றைத் திட்டமிடவும், மருத்துவக் குழுக்களை தயார் நிலையில் இருக்கவும் இந்தக் கால அவகாசம் போதுமானதாகும். திறந்த வெளியில் வேலை செய்யும் விவசாயிகள், கட்டுமானத் தொழிலாளர்கள், பொதுக்கூட்டங்களின் பங்கேற்போர், விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்போர் மற்றும் பார்வையாளர்கள் போன்றோரைப் பாதுகாக்க வானிலை ஆய்வு மையங்கள் உரிய முறையில் முன்கூட்டியே எச்சரிக்க வேண்டும்.
வட மற்றும் மத்திய இந்தியாவில் தீவிரமான தென்மேற்குப் பருவமழை காலத்தில், அதிக மக்கள் தொகை கொண்ட கங்கைச் சமவெளி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்யும்போது, அப்பகுதி ஈரப்பத வெப்ப அலைகளின் ஆபத்தை எதிர்கொள்கிறது. பருவமழை குறையும்போது ஈரப்பத வெப்ப அலைகள் இந்தியாவின் தெற்கு மற்றும் கிழக்கு நோக்கி, குறிப்பாக தமிழ்நாடு உட்பட தீபகற்ப இந்தியாவின் கிழக்குக் கடலோரம் நோக்கி நகர்கிறது. இங்கு ஏற்கெனவே ஈரப்பதம் நிறைந்த சூழல் இருக்கும் நிலையில், மேக மூட்டம் மற்றும் மழை இல்லாமல் இருப்பதால் மேற்பரப்பு வெப்பத்தை குவித்து வெப்ப அலைகள் அதிகரிக்கிறது. எனவே வானிலை எச்சரிக்கைகளை செவிமெடுத்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் வெப்ப அலைகளைப் போன்றே ஈரப்பத வெப்ப அலைகளையும் நாம் எதிர்கொள்ளலாம்.
நன்றி: பொம்மி சிறுவர் மாத இதழ் ஜூலை 2026





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக