சனி, செப்டம்பர் 05, 2026

மேகதாது அணை: ஒரு சூழலியல் பிரச்சினை

 

மேகதாது அணை: ஒரு சூழலியல் பிரச்சினை

மு.சிவகுருநாதன்


 

           பெரிய அணைகளைக் கட்டுவதுதான் வளர்ச்சி என்கிற காலமெல்லாம் மலையேறிவிட்டது. அணைக்கட்டுகளே ஆலயங்கள் என்று நேரு சொன்ன காலகட்டம் வேறு; இன்றைய காலகட்டம் வேறு. 1954 இல் பக்ரா நங்கல் கால்வாய் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும்போது இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு அணைகளை "நவீன இந்தியாவின் கோவில்கள்" (Temples of Modern India) என்று பெருமையுடன் குறிப்பிட்டார். அவரே 1958இல் நீர்ப்பாசனம் மற்றும் மின்சார வாரியக் கூட்டத்தில் பேசும்போது, பெரிய திட்டங்கள் மீதான அதீத மோகத்தை "ராட்சதத்தனம் எனும் நோய்" (Disease of Giganticism) என்று எச்சரித்ததையும் நாம் மறக்கமுடியாது.

          வேளாண்மை, நீர்மின்சக்தி, தொழிலகப் பயன்பாடு, குடிநீர் என பல்வேறு நோக்கங்களுக்காக பன்னோக்குத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்தகைய பெருந்திட்டங்கள் வளர்ச்சியின் ஓர் அங்கமாக கற்பிதம் செய்யப்படுகின்றன. உண்மையில் அவை வளர்ச்சியல்ல; வீக்கமே. மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க என்று சொல்லிக் கட்டப்படும் அணைகள் அவர்களது வாழ்வாதாரத்தைக் கேள்விக்குள்ளாகும் நிலையிலிருப்பதை பல முன்னுதாரங்களிலிருந்து அறிய முடியும். இங்கு வளர்ச்சி என்ற பெயரில் மாபெரும் திட்டங்களே செயல்படுத்தப்படுகின்றன. இதனால் பெரும் பேரழிவுகள் உருவாக வழிவகுக்கும் நிலை உருவாகிறது. இதற்கு மாற்றாக சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களும், உள்ளூர் அளவிலான மாற்று மின் உற்பத்தி நிலையங்களும் இன்றைய இந்தியாவிற்குத் தேவை. ஆனால் இவற்றைத் திட்டமிடும் ஆளும்கட்சியோ இவற்றிற்கு ஆதரவான எதிர்க்கட்சிகளோ இங்கில்லை.

       நர்மதை நதியின் குறுக்கே சர்தார் சரோவர் அணை என்ற பெரிய அணைகளைக் கட்டுவதற்கு எதிராக நர்மதா பச்சாவோ அந்தோலன் (Narmada Bachao Andolan) என்ற அமைப்பு 1985இல் தொடங்கப்பட்டு, பாபா ஆம்தே, மேதா பட்கர் போன்றோர் தலைமையில் ஆதிவாசிகள், விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து  மக்கள் இயக்கத்தை நடத்தினர். ஆனால் மக்கள் விரோத பாசிச அரசை எதிர்த்து இவர்களால் வெற்றி பெறமுடியவில்லை. வனங்களையும் கானுயிர்களையும் ஆதிவாசிகளின் வாழிடங்களையும் விழுங்கிக்கொண்டு அணை இன்று நிற்கிறது. இவர்கள் தோற்றாலும் சூழல் குறித்த விழிப்புணர்வை இந்தியளவில் இப்போராட்டம் விதைத்துள்ளது. எங்கு அணை கட்டினாலும் அல்லது பெருந்திட்டங்கள் வழியே மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்தாலும் இவர்களது போராட்டம் ஒரு முன்னோடியாக இருக்கும். இப்படியான ஒரு போராட்டம்தான் மேகதாது அணைக்கும் தேவைப்படுகிறது. ஆனால் எழுத்தாளர் நக்கீரன் போன்ற சூழலியல் ஆர்வலர்கள், பூவுலகின் நண்பர்கள், பாமக என வெகுசிலர் மட்டுமே இப்பிரச்சினை எழுப்பக்கூடிய சூழல் இருக்கிறது. இந்நிலைமை நாட்டுக்கும் சூழலுக்கும் நல்லதல்ல. மேகதாது அணை திட்டத்தை சூழலியல் பேரழிவு (Ecocide) என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  விமர்சித்து சூழலியல் நோக்கில் அறிக்கை வெளியிட்டுள்ளார். இக்கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவர் சௌமியா அன்புமணி மேகதாது திட்டம் ஒரு சூழலியல் பேரிடர் என்று சட்டமன்றத்தில் பேசினார். பிறகு காவிரியில் தடுப்பணைகள் கட்டி நீரைத் தேக்க வேண்டும் என்று சொன்னபோது "கடலில் வீணாகக் கலக்கும் நீர்", என்கிற சூழலியலுக்கு முரணாக ஒரு கருத்தை முன்வைத்தார். பசுமைத் தாயகம் எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மூலம் சூழலியல் பரப்புரை செய்யும் தலைவரது பார்வை இதுவென்றால் பிறகட்சிகளின் சூழலியல் புரிதல் பற்றி சொல்ல வேண்டியதில்லை.  

         காவிரி நதிநீர்ச் சிக்கலைக் கொஞ்சம் தொகுத்துக் கொள்வோம். 1892இல் மதராஸ்-மைசூர் ஆகிய மாகாணங்களுக்கு இடையே தொடங்கிய காவிரி நதிநீர்ப் பங்கீட்டுச் சிக்கல் இன்றுவரை தொடர்கிறது. அன்றைய ஒப்பந்தப்படி மைசூர் அரசு காவிரியின் குறுக்கே அணை கட்டவோ அல்லது பாசனப் பரப்பை அதிகரிக்கவோ செய்தால் முடிவு காவிரியின் கடைமடையான சென்னை மாகாணத்தின் அனுமதியைப் பெற வேண்டும். 1924 பிப்ரவரி 18இல் சென்னை மாகாணத்திற்கும் மைசூர் அரசிற்கும் இடையே காவிரி நீர்ப் பங்கீடு குறித்த கையெழுத்தான ஒப்பந்தம் மேட்டூர் மற்றும் கண்ணம்பாடி (கிருஷ்ணராஜசாகர்) அணைகள் கட்டுவதற்கும், காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வதற்கும் வழிவகை செய்தது. 1974இல் இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.


 

       நாட்டு விடுதலைக்குப் பிறகு 1956இல் மொழிவாரியாக மாநிலங்கள் சீரமைக்கப்பட்டன. 1960களில் காவிரியின் துணையாறுகளான ஹேமாவதி, ஹேரங்கி, கபினி ஆகியவற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணைகளைக் கட்டியது. தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை காங்கிரஸ் கர்நாடகாவிலும் இந்திய ஒன்றியத்திலும் இருந்த காங்கிரஸ் அரசுகள்  மதிக்கவில்லை. 1974இல் தஞ்சை மாவட்ட காவிரிப் பாசன விவசாயிகள் சங்கம் தொடர்ந்த வழக்கை அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியுடன் பேசி தந்திரமாகத் திரும்பப் பெறச் செய்தார். அதன் பிறகு வந்த எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக அரசு 1892 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செல்லும் என்று வாதாடியது.

              சிக்கல் தீராத காரணத்தால் தஞ்சை மாவட்ட  காவிரிப் பாசன விவசாயிகள் சங்கம் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. உச்சநீதிமன்றம் இரு மாநில அரசுகளும் கலந்து பேசி 24.04.1990க்குள் தீர்வு எட்ட வலியுறுத்தியது. பேச்சுவார்த்தையில் முடிவுகள் எட்டப்படாத நிலையில், தமிழ்நாட்டின் நீண்டகால கோரிக்கையான காவிரி நீரை  கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பான நடுவர் மன்றம் (Cauvery Water Disputes Tribunal - CWDT) 02.06.1990இல்  நிறுவப்பட்டது. இந்த நடுவர் மன்றம் 2007இல் ஆண்டில் தனது இறுதித் தீர்ப்பை வெளியிட்டதுடன், காவிரி நதியைச் தேசியச் சொத்தாகவும் அறிவித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 126 ஆண்டுகளாக மேலாக நீடித்த இச்சிக்கலுக்கு உச்ச நீதிமன்றம் 2018 பிப்ரவரி 16இல் இறுதித் தீர்ப்பை வழங்கியது. 2018ஆம் ஆண்டு காவிரி நதியைச் தேசியச் சொத்தாக அறிவித்த நடுவர் மன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.

        நடுவர் மன்றம் 25.06.1991இல் அளித்த இடைக்காலத் தீர்ப்பின்படி  205 டி.எம்.சி. நீரை கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டும். இந்திய அரசிதழில் இடைக்காலத் தீர்ப்பு 11.12.1991இல் வெளியான பின்பும் கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற ஆணையை மதிக்கவில்லை. 1998இல் பிரதமர் தலைமையில் கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி முதலமைச்சர்கள் அடங்கிய காவிரி ஆணையம் அமைக்கப்பட்டது. இதற்கு ஆலோசனை வழங்க காவிரி கண்காணிப்புக்குழு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. எதுவும் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்பதாக அமையவில்லை. மீண்டும்  உச்சநீதிமன்றத்தின் கதவைத் தட்ட வேண்டி வந்தது. இப்போதும் அதே சூழல்தான் நிலவுகிறது. உச்சநீதிமன்ற இறுதி உத்தரவு வந்தபிறகும் அதை நடைமுறைப்படுத்த கர்நாடகம் மறுக்கும்போது நமக்கு பேச்சுவார்த்தை என்கிற பேச்சுக்கே இடமில்லை. பகை நாடுகளே பேசுகின்றன, நாம் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாதா என்று கேட்பது சிறுபிள்ளைத்தனமானது.

            காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 இல் காவிரி நீரில் கர்நாடகத்துக்கு 270 டி.எம்.சி. தமிழகம், புதுச்சேரிக்கு 192 டி.எம்.சி., கேரளாவுக்கு 21 டி.எம்.சி. வழங்க வேண்டும் என்ற  தீர்ப்பை வழங்கியது. தமிழ்நாட்டிற்கு விட வேண்டிய  192 டி.எம்.சி. நீரின்  அளவுகள் மாதவாரியாக நிர்ணயிக்கப்பட்டன. 16.02.2018 அன்று இந்திய உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு 192 டி.எம்.சி. காவிரி நீர் தரவேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் கூறியது தவறு. வளர்ந்துவரும் பெங்களூருவின் குடிநீர் சிக்கலையும், தமிழ்நாட்டின் நிலத்தடி நீரின் அளவையும் நடுவர் மன்றம் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தவறிவிட்டதாகச் சொல்லி, தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட 192 டி.எம்.சி. நீரை 177.25 டி.எம்.சி.யாகக் குறைத்தது. 14.75 டி.எம்.சி. நீரை கர்நாடகத்திற்கு வழங்கி அதில்  4.75 டி.எம்.சி. பெங்களூரின் குடிநீருக்காகவும்  10 டி.எம்.சி. தொழிற்சாலைகளுக்காகவும்  அளிக்க உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் காவிரிப் பாசனப் பகுதியிலுள்ள நிலத்தடி நீரில் 20 கோடி கன அடி நீரை எடுத்து, அதில் 10 கோடி நீரைப் பாசனத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் சொன்னது. கேரளாவுக்கு அளித்த 30 டி.எம்.சி. நீரும் புதுச்சேரிக்கு உரிய 7 டி.எம்.சி. நீரும் குறைக்கப்படவில்லை.

           இந்திய அரசு ஆறு வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உத்தரவிட்டது. தமிழ்நாட்டின் அனுமதியில்லாமல் காவிரியின் குறுக்கே கர்நாடகம் இனிமேல் புதிய அணையை கட்ட முடியாது. 15 ஆண்டுகள் அமலில் இருக்கும் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இயலாது என்பதையும் தெளிவுபடுத்தியது. தமிழகத்திற்கான நீரின் அளவு குறைக்கப்பட்டது பாதகமானது. இருப்பினும் அதைக்கூட உரிய நேரத்தில் பெற முடியாமல் வெள்ள வடிகாலாக காவிரி டெல்டா மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேகதாது அணைப் பிரச்சினைக்கு  தனி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற திமுக நிலைப்பாடு சரியானதல்ல. இதன்மூலம் நமது முந்தைய உரிமைகளைக் கைவிடுவதாகிவிடும்.

          01.06.2018இல் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (Cauvery Water Management Authority - CWMA) அமைக்கப்பட்டது. கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய காவிரி ஆறு பாயும் மாநிலங்களுக்கு இடையே காவிரி ஆற்றின் நீர் வளங்களை நிர்வகிக்க இந்திய அரசின் நீர் வள அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த ஆணையம் காவிரி நதியின் நீர் வளங்களின் சேமிப்பு, பங்கீடு, ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாட்டை மேற்பார்வையிட்டு, நடுவர் மன்றத்தின் தீர்ப்பு சரியாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டியது இதன் பணியாகும்.  

       தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையே காவிரி நீரைப் பங்கிடுவது குறித்த கணக்கீடுகளைச் செய்ய, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி நீர் ஒழுங்காற்று குழு (Cauvery Water Regulation Committee - CWRC) ஒன்றிய அரசால் 2018 இல் உருவாக்கப்பட்டது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள நீர்வரத்து, மழையளவு மற்றும் அணைகளின் நீர் இருப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தும், கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு பிலிகுண்டுலு நீர்தேக்கத்திலிருந்து திறக்கப்பட வேண்டிய நீரின் அளவை கணக்கிட்டு, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு (CWMA) பரிந்துரை செய்கிறது. இவற்றினடிப்படையில்  தமிழகத்திற்குத் தேவையான தண்ணீரைத் திறக்க ஆணையம் உத்தரவிடுகிறது.  ஆனால் இந்த உத்தரவுகளை கர்நாடகம் கண்டுகொள்வதேயில்லை.

        பெங்களூரு மாநகரின் குடிநீர்த் தேவையைத் தீர்ப்பதற்கும் நீர்மின்சக்தி தயாரிக்கவும் என்று சொல்லி, ரூ.9000 கோடி மதிப்பீட்டில் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு என்கிற இடத்தில் 67.16 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொள்கிறது. ஒருபுறம் முறையான திட்டமிடலின்றி வளர்ச்சி என்ற பெயரில் பெருநகரங்களை வீங்கிப் பெருக்கவைத்து சூழலுக்குக் கேடு விளைவிக்கின்றனர். பெங்களூருக்கு மட்டுமல்ல; சென்னைக்கும் இது பொருந்தும். சூழல் விரோத நகரங்களை சட்ட விரோதமாக உருவாக்கிக் கொண்டு, மறுபுறம் வேளாண்மையை விட பெருநகரக் குடிநீர்த் தேவை முதன்மையானது என்று சொல்லி சூழலை அழித்து அணைகட்ட முயல்கின்றனர்

        உச்சநீதிமன்ற உத்தரவுகளை எதையும் செயல்படுத்தாத கர்நாடக அரசு ஒருவேளை மேகதாது அணையைக் கட்டினால் என்ன நடக்கும்? காவிரிப்படுகையின் சூழலியல் வரைபடம் முற்றாக மாறும். காவிரி டெல்டா பாலைவனமாகும். உணவு உற்பத்தி குறைவதுடன் விவசாயக் கூலித் தொழிலாளிகள் வேலையிழந்து பஞ்சம், பட்டினி ஏற்படும். வேளாண் சார்ந்த தொழில்களும் அழியும். குடிநீர்த் தட்டுப்பாடு உருவாகும். ஒருவரியில் சொல்வதானால் இது மனிதனால் உருவாக்கப்படும் சூழலியல் பேரிடராக மாறும். எனவே இது வெறும் வேளாண்மை, நீர்ப்பாசன, குடிநீர்ப் பிரச்சினை மட்டுமல்ல; ஒட்டுமொத்த சூழலையும் அழிக்கும் சூழலியல் பிரச்சினையாக உருவாகியுள்ளதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

       மேகேதாட்டு (ஆடு தாண்டும் காவிரி) அணை அமையப்போகும் இடம் பெங்களூருவிருந்து 90 கி.மீ. தொலைவில் இருக்கிறது.  கிருஷ்ணராஜ சாகர் அணை 144 கி.மீ. தொலைவில் உள்ளது. எனவே குடிநீரை கிருஷ்ணராஜ சாகரிலிருந்து பெறுவதில் எவ்வித  சிக்கலும் இல்லை. இதற்கான பல்லாயிரம் கோடிகளையும் சூழலைக் கெடுக்க வேண்டிய தேவையில்லை. தமிழ்நாட்டில் எல்லைக்கருகில் புதிய அணையைக் கட்டி காவிரி நீரை முற்றாகப் பயன்படுத்தும் பேராசையே இதன் பின்னாலிருக்கிறது. 4.75 டி.எம்.சி. ஏற்கனவே பெங்களூருவின் குடிநீர்ப் பயன்பாட்டிற்கென வரையறுத்த நிலையில் தற்போது 67 டி.எம்.சி. நீரை அணைகட்டி தடுப்பது என்ற அவர்களது சூழ்ச்சியை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

      கர்நாடகத்தில் பாயும் காவிரியின் இருபுறமும் காவிரி சரணாலயம் மாண்டியா, சாம்ராஜ் நகர் மாவட்டங்களில் அமைந்துள்ளது. 1973 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டப் பிரிவு 18 இன் கீழ் 1987 இல் தொடங்கப்பட்டு, 2013இல் விரிவுபடுத்தப்பட்ட இப்புகலிடம் 102,753 ஹெக்டேர் (253,910 ஏக்கர்) பரப்பளவைக் கொண்டது. காவிரியின் இருகரைகளிலும் அடர்ந்த காப்புக்காடுகள் உள்ளன. காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் புலி, சிறுத்தை, யானை, புள்ளிமான், சாம்பார் மான், சாம்பல் நிற ராட்சத அணில், நீர் நாய், செந்நாய், காட்டுப்பன்றி, கருப்புக் கழுத்து முயல், முதலை, ஆமைகள், மலைப்பாம்பு, நாகப்பாம்பு, பல்வேறு பறவையினங்கள், மீன் வகைகள் என பல்வேறு வகையான உயிரினங்களின் வாழிடமாக உள்ளது. இவற்றில் பல அருகிவரும் உயிரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்புகலிடத்தின் தொடர்ச்சியாக காவிரி வடக்கு மற்றும் தெற்கு வனவிலங்குப் புகலிடங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளன.

     மேகதாது அணை கட்டப்பட்டால் 12,600 ஏக்கர் வனப்பகுதி நீரில் மூழ்கும்.  அதில் காவிரி சரணாலயத்தின் சுமார் 7,800 ஏக்கர் வனப்பகுதி உள்ளது.  அரியவகை தாவரங்களும் மரங்களும் அழியும். சாம்பல் நிற ராட்சத அணில் உள்ளிட்ட வன விலங்களின் தொகை கடுமையாகக் குறையும். ஏற்கனவே அருகிவரும் மீனினமான காவிரி ஆற்றுப் புலி' (Tiger of the Cauvery) என்றழைக்கப்படும் மயில் கெண்டை மீன்கள் மற்றும் பல்வேறு மீன்களின் எண்ணிக்கையையும் பாதிப்படையும் யானைகள் மற்றும் புலிகளுக்கான முக்கிய வழித்தடமாக உள்ள இப்பகுதி பாதிப்படைந்து சூழலையும் பாதிப்பதோடு மனிதவிலங்கு மோதலுக்கும் வழிவகுக்கும்.

    காவிரியின் கடைமடைப் பாசனப் பகுதியான தமிழ்நாட்டின் அனுமதியின்றி  கர்நாடகத்தில் மேகதாது அணை போன்று எவ்விதக் கட்டுமானங்களையும் மேற்கொள்ளக்கூடாது என்றுதான் காவிரி நடுவர் மன்றமும் உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளன. எனவே மேகதாது குறித்த திட்ட அறிக்கை தயாரிப்பதும் அதற்கு 2018 இல் அனுமதியளித்த ஒன்றிய அரசின் செயலும்  சட்டத்தை மீறுவதாகும். இந்த சட்ட மீறலை கண்டுகொள்ளாத உச்சநீதிமன்றம் அணை கட்டுவதால் வனப்பகுதிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க உத்திரவிட்டுள்ளது. ஒன்றிய அரசு கர்நாடகத்திற்குச் சாதகமான நிலைப்பாடுகளை எடுத்தும் அல்லது மௌனமாகவும் கடந்துவிடுகிறது. தமிழகத்தை மட்டுமல்லாமல் இந்திய சுற்றுச்சூழலையும் பாதிக்கக் கூடிய இதுபோன்ற திட்டங்களை அனுமதிப்பதுப் பேரிடராக மாறும்.

         காவிரி நீரின் உரிமை குறித்து பேசுகிறோம். நீரைப் பயன்படுத்துவதால்  காவிரி கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு மட்டும் சொந்தமாகிவிடாது. அந்த நதி  இயற்கையின் கொடை. அதை நம் சொத்தாகக் கருதி அதன் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தும்போது   இயற்கையமைப்பு சிதைகிறது. இதன் பாதிப்பு ஒட்டுமொத்த உலகிற்கும் என்பதை உணர மறுக்கிறோம்.

      வழக்கம்போல வாட்டாள் நாகராஜ் போன்றவர்கள் தமிழ்நாட்டுக்கு எதிரான போராட்டங்களை நடத்திவரும் நிலையில் கர்நாடக சூழலியர்களின் எதிர்வினை நேர்மறையாக உள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும். கர்நாடகாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகப் போராடிவரும் கர்நாடக நில, ஜல, பரிசரா ரக்ஷண சமிதி (Karnataka Nela, Jala, Parisara Rakshana Samithi) என்கிற அமைப்பு மேகதாது அணையின் சூழல் பாதிப்புகளை எடுத்துரைத்து, அத்திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கிறது. இந்தியச் சூழலியல் போராளி மேதா பட்கரை ழைத்து, மேகேதாது திட்டத்திற்கு எதிரான சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் போராட்டத்தை நடத்தியுள்ளது. கன்னடத் திரைப்பட நடிகர் சேத்தன் போன்ற சமூக, சூழலியல் ஆர்வலர்களும்  இணைந்து, மேகதாது திட்டத்தின் மூலம்  அரசியல் கட்சிகள் சுற்றுச்சூழலுக்கு எதிராக நடத்தும் போர் நடத்துவதாகப் பேசத் தொடங்கியுள்ளனர்.

           தமிழகத்தில் இம்மாதிரியான முன்னெடுப்புகள் நடப்பதற்கான நம்பிக்கைகள் காணப்படவில்லை. ஆளும்கட்சியான தவெக, எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக போன்ற கட்சிகளிடம் சூழலியல் புரிதல் அறவே இல்லை. நமது பொறியியல் அறிஞர்கள் (!?) கல்லணை மற்றும் கீழ்பவானி கல்வாய்களில் காங்கிரீட் தளம் அமைத்து நீர் நிலத்தடியில் சேராமல் தடுத்து நீரைச் சேமிக்கின்றனர்! இல்லாவிட்டால் நீர் ஆவியாவதைத் தடுக்க வைகை அணையை தெர்மக்கோல் கொண்டு மூடியதைப்போல் விசித்திரமாக ஏதாவது செய்வார்கள். இவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? சூழலியல் அமைப்புகள் ஒருங்கிணைந்து மேகதாது அணைத் திட்டம் வெறும் இரு மாநிலங்களுக்கிடையேயான நீர்ப்பங்கீட்டுப் பிரச்சினை மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தியாவிற்குமான சூழலியல் பிரச்சினை என்பதைப் புரியவைத்து இந்த எதிர்ப்பை மக்கள் இயக்கமாக மாற்றவேண்டும். 

நன்றி: பேசும் புதியசக்திமாத இதழ் செப்டம்பர் 2026