வியாழன், டிசம்பர் 23, 2010

கல்வி உரிமைச் சட்டம்: என்ன செய்யப் போகிறது ? - மு. சிவகுருநாதன்

கல்வி உரிமைச் சட்டம்:  என்ன செய்யப் போகிறது ?
                                                        
                                                           - மு. சிவகுருநாதன்
   

     நாடு விடுதலையடைந்து 63 ஆண்டுகளுக்குப் பிறகு ‘இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் - 2009’( Right of Children to Free and Compulsory Education – Act – 2009) இவ்வாண்டு ஏப்ரல் 01, 2010 அமலுக்கு வந்திருக்கிறது.  இச்சட்டத்தின் உள்ளே செல்வதற்கு முன்பு நம் நாட்டின் கல்வி நிலையை கொஞ்சம் தொகுத்துக் கொள்வோம்.

     இந்து மதம் பிராமணர் தவிர பிறர் கல்வி கற்பதை வேதங்கள் உள்ளிட்ட பிராமண சட்ட முறைகளைக் கொண்டு அறவே தடை செய்தது.  பவுத்த, சமண மதங்களின் எழுச்சி இந்திய வருணாஸ்ரம வரலாற்றில் முதல் புரட்சியாக அமைந்து பிறருக்கும் கல்வி கிடைக்க வாய்ப்பளித்தது.  வட இந்தியாவில் அசோகர், கனிஷ்கர், ஹர்ஷர் போன்ற ஒரு சில அரசர்களின் ஆதரவில் பவுத்தமும் சமணமும் செழித்தது கொஞ்சகாலந்தான்.  பின்னர் குப்தர்களின் ‘இருண்டகாலத்தில்’ மீண்டும் இந்து மதம் ‘புத்துயிர்ப்பு’ பெற்றது.

     தமிழகத்தில் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பவுத்த - சமண சமயங்கள் செல்வாக்கு பெற்றிருந்தது.  ‘பள்ளி’ என்ற சொல் கூட சமணத்தின் கொடைதான்.  தமிழர்கள் இன்றும் பெருமை பேசும் ராஜராஜன் போன்றோர் முன்னெடுத்தது வேதக்கல்வி தானே தவிர வேறில்லை.

     காலனியாதிக்க காலத்தில் செயல்பட்ட கிருத்தவ சமயப் பரப்பூழியர்கள் மூலம் பள்ளி, கல்லூரிகள் தொடங்கப்பட்டாலும் அடித்தட்டு மக்களுக்கு கல்வி எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.  இந்தியாவின் பெரு நகரங்களில் மட்டும் சில சுதேசி தனியார் நிறுவனங்கள் கல்விக் கூடங்களை நடத்தி வந்தன.

     ஆங்கிலேயர்கள் இந்தியர்களின் அறியாமையைப் போக்கி பண்பாட்டை உயர்த்தவும், கல்வி போதிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்து 1813 ஆம் ஆண்டு சிறப்புச் சட்டம் மூலம் கல்விக்கு மானியமாக 10,000 பவுண்டுகளை வழங்கினர்.  இந்த மானியத்தைக் கொண்டு வைதீக பார்ப்பனர்கள் சமஸ்கிருத சாஸ்திரங்களை சொல்லிக் கொடுக்க முயன்றபோது ராஜாராம் மோகன்ராய் போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், இவர்கள் அனைவரும் கல்வியில் வடிகட்டும் கொள்கையை  (Filtration Theory) ஆதரித்தனர் என்பதும் உண்மை.

     1820இல் சர் தாமஸ் மன்றோ சென்னை மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட போது “கல்விக்கு செலவு செய்யும் தொகை அழிவில்லாதது”, என்றார்.  1822 இல் கல்விக் குழுவும் 1823 இல் பொதுக்கல்வி இயக்குநரகமும் 1840இல் கல்வி வாரியமும் அமைக்கப்பட்டது.  1830இல் பொதுக்கல்வி இயக்குநர் குழு “ஓய்வு நேரத்தையும் நாட்டு மக்களின் மீது இயல்பான செல்வாக்கையும் கொண்டுள்ள மேல்சாதி மக்களுக்கு அளிக்கப்படும் கல்வி, எண்ணிக்கையில் அதிகமாக உள்ள அடித்தட்டு சாதியினருக்கு அளிப்பதை காட்டிலும் பயனுள்ள மாற்றத்தை ஏற்படுத்த முடியும்” என்று கூறியது.  மேல் சாதியினருக்கு மட்டும் கல்வி; அவர்கள் தங்களுக்கு கீழுள்ள அடித்தட்டு மக்களுக்கு கல்வி தருவார்கள் என்பதே அக்கால அரசு மற்றும் சீர்திருத்த வாதிகளின் எண்ணமாக இருந்தது.  இதனை வடிகட்டும் கொள்கை (Filtration Theory) என்றார்கள்.

     கவர்னர் ஜெனரல் அமைச்சரவை சட்டக்குழு உறுப்பினராக இருந்த தாமஸ் பேபிங்டன் மெக்காலே பிரபு 1835 இல் ஆங்கிலேய அரசின் கல்விக் கொள்கையை வகுத்தார்.  இவர் பகுத்தறிவிற்கு ஒவ்வாத மோசடியான சமஸ்கிருத இலக்கியங்களை கற்றுக் கொடுக்க நாட்டின் நிதியைச் செலவிட முடியாது என்றார்.  இக்கொள்கை, ரத்தத்தாலும் நிறத்தாலும் இந்தியராகவும், அறிவில், பண்பாட்டில், கருத்தில், சுவையில் ஆங்கிலேயராகவும் உள்ள ஒரு வர்க்கம் உருவாவதை எதிர்பார்த்தது.  1836 அக்டோபர் 12இல் மெக்காலே தனது தந்தைக்கு எழுதிய கடிதத்தில், “நமது கல்வித் திட்டம் கடைப்பிடிக்கப்படுமானால் இன்னும் 30 ஆண்டுகளில் வங்காளத்தில் சிலை வழிபாடு ஒழிந்து விடும் என்றும், மதத்தைப் பரப்பாமல் மத உரிமைகளில் தலையிடாமல் இயல்பான அறிவு வளர்ச்சியால் இது நடக்கும்” என்றும் எழுதுகிறார்.  ஆனால் இன்று வரை இது நடக்கவேயில்லை.

    “கல்வியும் பண்பாடும் உயர்ந்த சாதி மக்களிடமிருந்து கீழ்த்தட்டு மக்களுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும்.  அப்போதுதான் சமூகத்திற்கு ஒரு புதிய சக்தி கிடைக்கும்.  ஆனால் எப்பொழுதுமே அது கீழ்த்தட்டு மக்களிடமிருந்து மேல்தட்டு மக்களுக்குக் கொண்டு செல்லக் கூடாது”, என்று 1857-1858 ஆம் ஆண்டிற்கான பொதுக் கல்வி இயக்குநரின் அறிக்கை வடிகட்டும் கொள்கையை மீண்டும் வழி மொழிகிறது.

    கல்வி வளர்ச்சியின் ‘மகாசாசனம்’ என்றழைக்கப்பட்ட சார்லஸ் வுட் அறிக்கை 1854 இல் வெளியானது.  இதன்படி தாய்மொழி வழிக்கல்வியும் ஆங்கிலம் ஒரு பாடமாகவும் போதிக்கப்பட்டாலும் அடித்தட்டு மக்களுக்கும் தொடக்கக் கல்விக்கும் எதுவும் நடக்கவில்லை.

      1882இல் வில்லியம் ஹண்டர் தலைமையிலான இந்திய கல்வி ஆய்வுக்குழு (Hunter Commission) இந்தியாவெங்கும் பயணம் செய்து கல்வி பற்றிய விரிவான ஆய்வு மேற்கொண்டது. இந்த ஹண்டர் குழுவிடம் விண்ணப்பம் அளித்தவர்களுள், மராட்டியத்தில் தலித்களுக்காகவும், பெண்களுக்காகவும் பள்ளிகள் தொடங்கி நடத்திய முதல் இந்தியரான மகாத்மா ஜோதி ராவ் புலேயும் ஒருவர்.  1882 அக்டோபர் 19 அன்று அவர் அளித்த விண்ணப்பத்தில், அடித்தட்டு மக்களிடம் வசூலிக்கப்படும் வரி  வருவாயைக் கொண்டு மேல்தட்டு மக்களின் கல்வி நலன்களுக்கு அரசு பணத்தைச் செலவிட்டு வருகிறது என்றும், தாழ்த்தப்பட்டோர் மத்தியில் கல்வியைப் பரப்ப மேல் தட்டினர் முயற்சி எடுப்பார்கள் என்ற கற்பனையான நம்பிக்கையில் அரசாங்கம் இவ்வாறு செய்கிறது என்றும் கூறியிருந்தார்.

      பனிரெண்டு வயது வரை தொடக்கக் கல்வியை கட்டாயமாக்க வேண்டும் என்றும், தொடக்கக் கல்வி மனநிறைவு அளிக்கும் விதத்திலும், வலுவான அடிப்படையிலும் எதிர்கால வாழ்க்கைக்குப் பயனுள்ள வகையிலும் இருக்க வேண்டும் என்றும் புலே வலியுறுத்தினார்.  கல்வி வளர்ச்சி இல்லாத அடித்தட்டு மக்களுக்கு சிறப்பான உதவித் தொகைகளை அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும், பெண்கல்விக்கு உரிய முக்கியத்துவம் அளித்து தாராளமான அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மிக விரிவான விண்ணப்பத்தை ஹண்டர் குழு முன்பாக ஜோதிராவ் புலே அளித்துள்ளார்.

      1911இல் கோபாலகிருஷ்ண கோகலே அன்றைய மத்திய சட்டசபையில் தொடக்கக்கல்வி மசோதாவைக் கொண்டு வந்தார்.  அன்று சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த நிலப்பிரபுக்களும், சீர்திருத்தவாதிகளும் இம்மசோதாவை நிறைவேற்றவிடாமல் தடுத்தனர்.  இங்குள்ள பண்ணையார்களைப் போல, எல்லாரும் பள்ளிக்குச் சென்றால் மாடு மேய்க்கவும், வயல் வேலை செய்யவும் ஆட்களுக்கு எங்கே செல்வது என்ற கருத்தைத்தான் ஆதிக்கச் சமூகம் தன்னுள் கொண்டிருந்தது.

     1935 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்திய அரசியல் சட்டப்படி கல்வி மாநில அரசின் கட்டுப்பாட்டில் விடப்பட்டது.  சர் ஜான் சார்ஜன்ட் அறிக்கையின்படி 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வி என்பது வரையறுக்கப்பட்டது.  1937இல் நடைபெற்ற மாகாண சட்ட சபைகளில் காங்கிரஸ் 9 இடங்களில் பெருவெற்றி பெற்றபோது காந்தி தமது ஆதாரக்கல்வியை நிறைவேற்றவும் அதற்குரிய நிதி ஒதுக்கவும் வேண்டினார்.  ஆனால் காங்கிரஸ் நிதி நிலைமையை காரணம் காட்டி அதற்கு உடன்பட மறுத்து விட்டது.

     1948-1949 களில் நடைபெற்ற அரசியல் சாசன விவாதங்களின் போது 0-14 வயது வரை கட்டயாக் கல்வி அளிக்க வேண்டும் என்பதற்கு பெரும் எதிர்ப்பிருந்தது.  இந்த வயதெல்லை குறைக்க சிலர் விரும்பிய போது அம்பேத்கர் அதை எதிர்த்தார்.  அரசுக்கு சுமை கூடாது என்பதாலும், அரசு தாமே முன் வந்து செய்யும் என்பதாலும் 0-14 வயது வரை இலவச கட்டாயக் கல்வி என்பது அரசியல் சாசனத்தில் அடிப்படை உரிமைகளில் சேர்க்காமல் அரசு வழிகாட்டு நெறிமுறைகளில் (Directive Principles to State Policy)  சேர்க்கப்பட்டது.  இதுவே அரசு கல்வி உரிமையை தட்டிக் கழிக்க பெருவாய்ப்பாக அமைந்தது.

    1966இல் கோத்தாரி கல்விக்குழு எல்லா வகுப்பாருக்குமான பொதுப்பள்ளியை பரிந்துரை செய்தது.  இதன் வழியே அருகாமைப் பள்ளிகள் (Neighbourhood Schools) என்ற கருத்தாக்கம் பேசப்பட்டது.      இதனடிப்படையில் 1968இல் தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு அனைவருக்கும் கல்வி வலியுறுத்தப்பட்டது.  1986இல் இக்கொள்கைக்கு எதிராக புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு பொதுப்பள்ளி முறை சவக்குழிக்கு அனுப்பப்பட்டு மேட்டுக் குடியினருக்கான அரசு நவோதயா, வித்யாலயா பள்ளிகளும் சுயநிதிப் பள்ளிகளும் உருவாக வழி வகுத்தது.  எனவே, இந்தியாவில் கட்டாய இலவசக் கல்வி என்பது கானல் நீராகிப் போனது.

    1993 ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேசத்திற்கெதிரான உன்னிகிருஷ்ணன் வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு அ. மார்க்ஸ் சொல்வது போல வாராது வந்த மாமணியாக அமைந்தது.  இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் 14 வயது முடியும் வரை கல்வி ஓர் அடிப்படை உரிமையாகும்.  இந்திய அரசியல் சட்டத்தின் 21 வது பிரிவு இவ்வுரிமையை வழங்குகிறது என்பதே தீர்ப்பின் சாரமாகும்.

     இலவசக் கல்வி என்பது கல்விக் கட்டணம் மற்றும் வேறு எந்தவிதமான கட்டணமோ இல்லாத கல்வி மட்டுமல்ல; பாடநூற்கள், எழுதுபொருட்கள், சீருடை, கற்றல் கருவிகள் உள்ளிட்டதே இலவசக் கல்வி என முகிராம் சைக்கியா தலைமையிலான கல்விக்குழு வரையறை செய்தது.

    ஒன்பது ஆண்டுகளாக தூங்கிக் கொண்டிருந்து மத்திய அரசு பல்வேறு தரப்பு கோரிக்கைகளின் விளைவாக 2002 டிசம்பரில் 86 வது அரசியல் சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியது.  இதன்படி அரசியல் சட்டத்தின் 21 வது பிரிவில் 21 அ என்ற புதுப்பிரிவும் அரசியல் சட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் 45 வது பிரிவிற்கு கூடுதல் விளக்கமும் சொல்லப்பட்டது.  அரசு இயற்றும் சட்டம் ஒன்றின் மூலம் கட்டாய இலவசக் கல்வி என்கிற நிபந்தனையுடன் இத்திருத்தம் செய்யப்பட்டது.

     2003 அக்டோபரில் இச்சட்ட மசோதா மக்கள் கருத்து மற்றும் விமர்சனங்களுக்காக இணையத்தில் வெளியிடப்பட்டு, அதன் பிறகு தயாரிக்கப்பட்ட இலவச கட்டாயக் கல்வி மசோதா - 2004  என்று பெயரிடப்பட்ட புதிய மசோதா 2004 இல் இணையத்தில் வெளியிடப்பட்டது.

     2005 ஜூனில் மத்திய கல்வி நிர்வாக வாரியம் (CABE) அமைத்த குழுவொன்று வரைவு மசோதாவைத் தயாரித்து மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தது.  மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அதை சோனியாகாந்தி தலைமையிலான தேசிய ஆலோசனைக் குழுவுக்கு அனுப்பி, அக்குழு பிரதமருக்கு அனுப்பியது.  மத்திய நிதிக்குழு 2006 ஜூலையில் நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி நிராகரித்து, அவசியமான நடவடிக்கைகளுக்காக மாநிலங்களுக்கு அனுப்பி வைத்தது.

      இறுதியாக, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 (Right of Children Free and Compulsary Education – 2009) இந்தியா நாடாளுமன்றத்தினால் ஆகஸ்டு 04, 2009 இல் நிறைவேற்றப்பட்டது.  இம்மசோதா - மாநிலங்களவையில் நிறைவேறியபோது 250 உறுப்பினர்களில் வெறும் 54 பேர்தான் அவையில் இருந்தனர்.  அங்கு எவ்வித விவாதமுமின்றி குரல் வாக்கெடுப்புடன் (Voice Vote ) இம்மசோதா நிறைவேற்றப்பட்டதைப் பார்க்கும் போது நமது ஆட்சியாளர்களின் கல்வி குறித்த அக்கறை நமக்குத் தெளிவாகிறது.  2009 ஆகஸ்டு 26இல் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்ற இச்சட்டம் 2010 ஏப்ரல் முதல் தேதியிலிருந்து இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டதாக ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டது.  உலகளவில் சிறார் கல்வி உரிமையை உறுதி செய்யும் நாடுகளின் பட்டியலில் 135 வதாக இந்தியா தன்னை இணைத்துக் கொண்டது.

      இச்சட்டத்தில் ஒன்றிரண்டு சாதகமான அம்சங்கள் இடம் பெற்றிருந்தாலும் ஏற்கனவே உள்ள சட்டங்கள், கொள்கைகள், கருத்தாக்கங்கள் போன்றவற்றை மறுதலிப்பதாகவும், மீறுவதாகவும் அமைந்திருப்பது கல்வியாளர்களால் சுட்டப்படுகிறது.  மேலும், இச்சட்டம் நிறைவேற்றலிலும் நிறைய குளறுபடிகள் உள்ளன.

     இச்சட்டம் கட்டாய இலவசக் கல்விக்காக வயதெல்லை 6-14 என்கிறது.  அரசியல் சட்ட வழிகாட்டு நெறிமுறை பிரிவு 45 சொல்வது 0-14 வயது குழந்தைகளைத்தான்.  இச்சட்டம் 0-6 வயதுக் குழந்தைகளின் உரிமைகளைப் பறிக்கிறது.  3 லிருந்து 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் முன்பருவ மழலையர் கல்வி உரிமையை இச்சட்டம் கேலிக் கூத்தாக்குகிறது.

     மேலும், ஐக்கிய நாடுகளின் குழந்தை உரிமைச் சாசனம் (Convention on the Rights of the Child) 18 வயது வரை குழந்தைகள் எனச் சொல்கிறது.  அந்த உடன்படிக்கையில் கைசாத்திட்டிருக்கும் நாடான இந்தியா 15-18 வயதுக் குழந்தைகளின் உரிமைகளை இச்சட்டம் மூலம் காற்றில் பறக்க விடுகிறது.  மழலையர் கல்வி முதல் பள்ளிக் கல்வி வரை (0-18 வயது எல்லை) கட்டாய இலவசக் கல்வியை உறுதி செய்யாதது கண்டிக்கத் தக்கது.  பிரேசில், மெக்சிகோ, சீனா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் 18 வயது வரை கட்டாய  இலவசக்கல்வி அளிக்கப்படுகிறது.  “கல்வி உரிமை என்பது உயிர்வாழ் உரிமையின் பிரிக்க இயலா அம்சம்”, என்று உச்சநீதிமன்றம் கூறியதை கண்டுகொள்ளாமல் 0-6 வயதெல்லையை மறுத்து 6-14 என்று நிர்ணயம் செய்திருப்பது அரசியல் சட்ட மோசடி மட்டுமல்ல; நீதிமன்ற அவமதிப்பும் கூட.

      அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் (சுயநிதிப்பள்ளிகள்), சிறப்புப் பள்ளிகள் (நவோதயா, கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசால் நடத்தப்படும் பள்ளிகள்) போன்ற ஏற்றத் தாழ்வான கல்வியமைப்பை இச்சட்டம் உறுதி செய்கிறது.  அத்துடன் அரசுப் பள்ளிகள் 6-14 வயதுக் குழந்தைகளுக்கு கட்டாய இலவசக் கல்வியை அளிக்கும்.  அரசு உதவிபெறும் பள்ளிகள் 25% குழந்தைகளுக்கு மட்டும் கல்வியளிக்கும்.  சுய நிதிப் பள்ளிகளும், சிறப்புப் பள்ளிகளும் அருகாமையில் வசிக்கும் அடித்தட்டு மக்களின் குழந்தைகளில் 25% ஐ 2011இல் முதல் வகுப்பில் சேர்த்து 8 ஆண்டுகளில் 14 வயது வரை கட்டயா இலவசக் கல்வி அளிக்கும்.  இந்த சட்டம் 2010 ஏப்ரலில் நடைமுறையில் இருந்தாலும் முதல் பயன்பாடு 2011இல் தான் கிடைக்கிறது.  இதுவே மிகவும் கேலிக்குரிய செய்தி.  அரசு உதவி பெறாத பள்ளிகளில் சேர்க்கப்படும் 25%குழந்தைகளின் கல்விச் செலவை அரசு அப்பள்ளிக்கு அளிக்கும்.

    மத்திய அரசால் நடத்தப்படும் நவோதயாப் பள்ளிகள் மற்றும் கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளிலும் அரசு உதவி பெறாத பள்ளிகளைப் போன்று 25% அடித்தட்டு குழந்தைகளைப் படிப்படியாகச் சேர்த்தல் போதும் என்று சொல்வது எவ்வளவு பெரிய வன்முறை?  அரசுப் பள்ளிகளில் உள்ளதைப் போன்று அனைத்துக் குழந்தைகளையும் சேர்ப்பதிலிருந்து இப்பள்ளிகளுக்கு ஏன் விதி விலக்கு அளிக்கப்படுகிறது என்பது நமக்குப் புரிகிறது.  இந்தச் சிறப்புப் பள்ளிகளில் ஒரு மாணவருக்கு பத்தாயிரத்துக்கு மேல் செலவு செய்கிறது அரசு.  ஆனால் மாநில அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவனுக்கு சுமார் ஆயிரம் ரூபாய்தான் செலவாகிறது.  இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரிடமிருந்தும் வரியைப் பெற்று அதை மேல்தட்டு வர்க்கத்திற்கு மட்டும் செலவு செய்வதற்காக, அந்தப் பள்ளிகளுக்கு விதிவிலக்கு அளிப்பது சமூகநீதியில் அடங்குமா?

       தனியார் பள்ளிகள் 25% இடங்களை மட்டும் அடித்தட்டுக் குழந்தைகளுக்கு ஒதுக்கிவிட்டு மிச்சமிருப்பதை எப்படி வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம் என்றால் அவர்கள் அந்த இடங்களை அதிக விலைக்கு விற்கும் போது அப்பள்ளிகளைக் கட்டுப்படுத்த சட்டத்தில் ஒரு வழியும் இல்லை.  தமிழகத்தில் நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டணங்களை இன்று வரை செயல்படுத்த முடியவில்லை என்பதை நாம் அறிவோம்.  மேலும், இத்திட்டத்தைச் செயற்படுத்த காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.  எனவே, இன்னும் 63 ஆண்டுகளை கூட கடத்திவிடலாம்.  மண்டல் கமிஷன் ஒதுக்கீடான 27%ஐ மூன்று ஆண்டுகளில் தலா 9% என பிரித்தவர்களாயிற்றே!  அதைப்போல இந்த 25%ஐக்கூட 5 ஆண்டுகளில் தலா 5% என்று கூட அரசு திருத்தம் செய்யக்கூடும்.  இத்திட்டத்தின் அமலாக்கத்திற்கான நிதி ஒதுக்கீட்டைப் பொருத்துத்தான் நிறைவேற்றம் அமையும்.  இந்த 25ரூ அடித்தட்டு குழந்தைகள் 8 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டணப் படிப்பிற்கு மாற அவர்களின் பொருளாதாரம் உயர்ந்து விடுமா என்ன? ஓரிடத்தில் அடித்தட்டு மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தால் அதிலிறிந்து 25% பேரை எப்படி தேர்வு செய்வார்கள் என்பதும் விளங்கவில்லை.இதனால் பெரும்குழப்பமும் வன்முறையும்தான் ஏற்படும்.
 
    அரசும், உள்ளாட்சி அமைப்பும் வரையறுக்கின்ற எல்லையில் பள்ளிகள் இல்லையென்றால் இத்திட்டம் தொடங்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள் புதுப்பள்ளி தொடங்கப்பட வேண்டுமாம்.  இந்த மூன்றாண்டு காலத்தில் அப்பகுதி குழந்தைகள் எங்கு படிப்பார்கள்?  தரமான கல்வியை குழந்தைகள் பெறச் செய்ய அரசு உறுதி செய்ய வேண்டும் என்கிற இச்சட்டம் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:40 என்று வரையறுக்கிறது.  இதன் மூலம் தரமான கல்வியை எவ்வாறு உறுதி செய்வது?

     கியூபா, சோமாலியா, சவூதி அரேபியா, குவைத், பிரிட்டன், டென்மார்க், ஹங்கேரி போன்ற நாடுகளில் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:20க்கும் குறைவாகவே உள்ளது.  இங்கு 1:20 என்று நிர்ணயிக்க வேண்டுமென கல்வியாளர்கள் தொடர்ந்து கோரி வருகின்றன.  தமிழக அரசு கூட 1:35 என்று நிர்ணயம் செய்ய கொள்கையளவில் ஒத்துக் கொண்டுள்ளது.  இச்சட்டம் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:40 என்று சொல்வது அடித்தட்டுக் குழந்தைகளின் கல்வியுரிமையை மேலும் கேள்விக்குள்ளாக்குகிறது.

    இந்த விகிதத்தை 6 மாதங்களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டும்.  ஆசிரியர்கள் நிர்ணயிக்கப்பட்ட தகுதி மற்றும் பயிற்சியை 5 ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என்கிறது சட்டம்.  ஆசிரியர்களின் ஊதியம் மற்றும் படிகள் பற்றி எதுவுமில்லை.  12ஆம் வகுப்பு முடித்தவர்களை இடைநிலை ஆசிரியர்களாகவும் இளங்கலைப் பட்டம் முடித்தவர்களை பட்டதாரி ஆசிரியராகவும் சில ஆயிரம் ரூபாய்கள் என்ற தொகுப்பூதிய முறையில் நியமனம் செய்வதை இச்சட்டம் மறைமுகமாக ஊக்குவிக்கிறது.  இதுவும் படித்த இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் இல்லாத மாநிலங்களுக்கு மட்டும் பொருந்தும்.  தமிழகத்தில் உரிய கல்வித் தகுதியுடன் தேவைக்கு அதிகமாகவே இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் தகுதியிருந்தும் குறைந்த தொகுப்பூதியத்தின் கீழ் பணியாற்ற வேண்டி வரும்.  அரசும் நிதிப் பற்றாக்குறையைக் காரணமாகக் காட்டும்.  இவ்வித முறைகேடுகளுக்கு சட்ட அங்கீகாரத்தை இச்சட்டம் மாநிலங்களுக்கு வழங்கும்.

     ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளிப்பது, ஆசிரியர் பட்டயம் மற்றும் பட்டங்களை அளிக்கும் கல்வி நிறுவனங்களை ஒழுங்குப்படுத்துவது பற்றி எந்தக் கொள்கையும் இல்லை.  பீகார், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் ஆசிரியருக்கான பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்தவர்கள் போதுமானதாக இல்லாத நிலை இருக்கிறது.  ஆனால் தமிழகத்தில் தெருவெங்கும் பி.எட். கல்லூரிகளும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்.  எவ்வித அடிப்படை வசதி மற்றும் முறையான பயிற்சியின்றி லட்சக்கணக்கான தரமற்ற ஆசிரியர்களை உருவாக்கி கல்விக் கொள்ளையில் ஈடுபடுவோருக்கு மத்திய - மாநில அரசுகள் அங்கீகாரம் வழங்குகின்றன.  இடைநிலை ஆசிரியராக இருப்பவர் தொலைக்கல்வியில் பி.எட். படிக்க வாய்ப்பு இல்லை.  ஆனால் பணம் மட்டுமிருந்தால் 12ஆம் வகுப்பு படித்தவர்கள் ஆசிரியர் பயிற்சியையும், பட்டதாரிகள் பி.எட்., பட்டத்தையும் வீட்டிலிருந்த படியே பெறலாம் என்பதே இன்றைய தமிழகத்தின் அவலம்.

     கல்வியின் தரத்துடன் கட்டமைப்பு வசதிகளின் தரத்தையும் சேர்த்தே பார்க்கலாம்.  கும்பகோணம் தீ விபத்துக்குப் பிறகு கீற்றுக் கொட்டகைகள் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட ‘ஆஸ்பெட்டாஸ்’ கூரைகளாக மாற்றம் பெற்றன.  அனைவருக்கும் தொடக்கக் கல்வித் திட்டத்தின் மூலம் நிறைய வகுப்பறைக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.  இவையனைத்தும் மிக மோசமான தரத்துடன் கட்டப்படுபவை.  இவற்றின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் கூட தாண்டாது.  ஒப்பந்தகாரர்களோ, அல்லது கிராமக் கல்விக்குழுக்களோ பங்கு போட்டபிறகு எஞ்சிய தொகைக்கு ஏதோ பாழ் மண்டபங்கள் போல பள்ளிக்கூடங்கள் கட்டப்படுகின்றன.  ஆட்சிகள் மாறும் போது மேம்பாலங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் தரச் சோதனை செய்யப்படுவது போல் பள்ளிக் கட்டடங்கள் ஆய்வு செய்யப்பட்டதில்லை.

      தலைமைச் செயலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகங்கள் அனைத்தும் பல கோடிகளை விழுங்கிக் கொண்டு வானுயர்ந்து நிற்கின்றன.  இவைகள் மரத்தாலும், டைல்ஸ்களாலும் வழுவழுப்பாக இழைக்கப்படுகிறது.  ஆனால் பள்ளிக்கட்டிடங்கள், மயானக்கொட்டகை போல்தான் அமைக்கப்படுகிறது.  மரச்சாமான்களைப் பயன்படுத்தக் கூடாதென்ற தடை வேறு.

     உள்நாட்டு மொத்த உற்பத்தியில் (GDP) தற்போது 3% கல்விக்கென ஒதுக்கப்படுகிறது.  இதை 6% ஆக உயர்த்துவதாகச் சொல்கிறார்கள். இது போதாது.  வளர்ந்த, வளரும் நாடுகளில் கல்விக்கான ஒதுக்கீடு 10ரூ ஐ விட அதிகமாக உள்ளபோது குறைவான நிதியைக் கொண்டு கட்டாய இலவசக் கல்வியை அமல்படுத்த முடியாது.  6 முதல் 14 வயது வரை கட்டாய இலவசக் கல்வி அளிக்க ஆண்டுக்கு ரூ.12,000/- கோடி செலவாகும் என்று சொல்கிறார்கள்.  இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதம் கூட இல்லை.  இராணுவத்திற்கு மட்டும் ஆண்டுக்கு ஒரு இலட்சம் கோடிகளுக்கு அதிகமாகச் செலவிடப்படுவது இங்கு கவனிக்கத்தக்கது.

     இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிதிச்சுமையை மத்திய, மாநில அரசுகள் 55:45 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்வதாகச் சட்டம் சொல்கிறது.  அனைவருக்கும் தொடக்கக் கல்வித் திட்டத்தில் (SSA) மத்திய அரசின் பங்கு அதிகமாக இருந்ததால்தான் தமிழகம் உள்பட நிறைய மாநிலங்கள் அத்திட்டத்தைச் செயல்படுத்தின.  நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி இச்சட்டத்தை கிடப்பில் போடவே மாநில அரசுகள் முயலும்.

     நிதிப்பற்றாக்குறையைச் சமாளிக்க அரசு, தனியார் கூட்டுறவு என்று சொல்லி மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கல்வியை தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைத்தல், தனியார் பள்ளியை ஊக்குவித்தல் என்பதாக கல்வியை வணிகமயமாக்குவதன் மூலம் பெரும்பான்மையான அடித்தட்டு வர்க்க குழந்தைகளுக்கு அநீதி இழைக்கும் கொடுமையை அரசு எந்திரம் செவ்வனே செய்து வருகிறது.

     ஏழை - பணக்காரன் என்ற எவ்விதப் பாகுபாடும் இன்றி அனைத்துத் தரப்பு சிறார்களும் தங்களுடைய குடியிருப்பிற்கு அருகில் உள்ள பள்ளியில் சேர்ந்து கற்க வேண்டும் என்ற கருத்தாக்கம் கோத்தாரி கல்விக்குழு மற்றும் பல்வேறு கல்வியாளர்களால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.  இந்த அருகாமைப் பள்ளி (Neighbourhood Schools) என்ற வார்த்தை தான் இச்சட்டத்தில் குறிப்பிடப்படுகிறதே தவிர 25% குழந்தைகளை மட்டும் சேர்த்துக் கொள்வதற்கு அதுவும் 10 ஆண்டுகளில் சேர்ப்பதற்கு, அருகாமைப்பள்ளி என்று சொல்வதில் எந்த அர்த்தமுமில்லை.

     கல்வி உரிமைச் சட்டம் தாய்மொழி வழிக்கல்வியை உறுதி செய்யாமல் விட்டு விடுகிறது.  கற்றல், சிந்தனை, படைப்பாற்றல் ஆகியவற்றை வளர்க்க தாய்மொழி அவசியம் என்ற எண்ணத்தை இச்சட்டம் கண்டு கொள்ளவேயில்லை.  தொடக்கக் கல்வியை கூட தாய் மொழியில் அளிக்க எந்த உத்தரவாதமும் இச்சட்டத்தில் இல்லை.

     வயதுக்கான பிறப்புச்சான்று கோருவதை இச்சட்டம் தடை செய்கிறது.  கடவுச் சீட்டு (Passport) பெறுவதற்கு 1989 ஆம் ஆண்டுக்குப்பிறகு பிறந்தவர்கள் பிறப்புச் சான்று சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என்று பிறிதொரு சட்டம் சொல்கிறது.  பிறக்கும் குழந்தை ஒவ்வொன்றுக்கும் அரசு உடனடியாக பிறப்புச் சான்று வழங்குவதையும் முன்பருவ மழலையர் கல்வியையும் இச்சட்டம் கட்டாயப்படுத்த வேண்டுமல்லவா?  பின்னாட்களில் பிறந்த தேதி மாற்றத்திற்கான அலைச்சல், செலவு, கால விரயம் போன்றவற்றை யார் சுமப்பது?

    பள்ளியில் சேர்க்கப்பட்ட எந்தவொரு குழந்தையையும் பள்ளியை விட்டு வெளியேற்றுவது கூடாது என்று இச்சட்டம் சொல்கிறது.  தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிப்பதற்காக குறைவான மதிப்பெண்கள் பெறுபவர்களைத் தனித்தேர்வர்களாக மாற்றும் கொடுமை இங்கு அரங்கேறி வருகிறது.  11, 12 வகுப்புக்களை மட்டும் கொண்ட பள்ளிகளில் எவ்வாறு 6-14 வயதுக் குழந்தைகள் படிப்பதை உறுதி செய்வது?  இம்முறைகேடுகளுக்கு புகாரளிக்க அமைக்கப்படும் ஆணையம் எப்போது தீர்வு வழங்கும்?  அதுவரை அந்தக் குழந்தை எங்கு படிக்கும்?

      அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை எப்படி கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரியவில்லை.  அடிக்கடி பெயர் மாற்றியும் அங்கீகாரம் இல்லையென்றால் வேறு பள்ளியின் பெயரில் குழந்தைகளைத் தேர்வு எழுத வைக்கும் நடைமுறை தமிழ்நாட்டில் நிலவுகிறது.  இதையெல்லாம் எவ்வாறு தடுப்பார்கள் என்பது தெரியவில்லை. 

        மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேர்தல்கள், இயற்கைப் பேரிடர் தொடர்பான பணிகள் தவிர்த்த பிற பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது என்று இச்சட்டம் சொல்கிறது.  இச்சட்டத்தின் மூலம் மேற்கண்ட பணிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.  அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கான புள்ளி விவரங்கள் அளிக்கவே ஓராண்டில் பாதி நாட்கள் தேவைப்படுகிற நிலை இன்றுள்ளது.  இதை இச்சட்டத்தின் மூலம் எவ்வாறு மாற்றுவார்கள் என்று தெரியவில்லை.

      குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும் போது நன்கொடை வசூலித்தல், குழந்தை மற்றும் பெற்றோருக்கு நேர்காணல், நுழைவுத்தேர்வு போன்றவை நடத்துவதை இச்சட்டம் தடை செய்கிறது.  இதுவரையில் தனியார் பள்ளிகள் நன்கொடை வசூலிப்பதை எந்தச் சட்டத்தாலும் தடை செய்ய முடியவில்லை.  அதைப் போல நேர்காணல் மற்றும் நுழைவுத் தேர்வு வைப்பதை யார், எப்படி கண்காணித்து நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதும் விளங்கவில்லை.
குழந்தையை அருகிலுள்ள பள்ளியில் சேர்த்து ஆரம்பக் கல்வி அளிப்பது பெற்றோரின் கடமையென இச்சட்டம் சொல்கிறது.  வறுமைக் கோட்டிற்குள் வதைபடும் எண்ணற்ற இந்தியக் குடும்பங்கள், தினமும் ரூ.15 கூட கூலி பெ முடியாத நிலைமை, விலைவாசி உயர்வு, இவற்றின் காரணமாக உருவாகும் குழந்தைத் தொழிலாளர்கள் ஆகிய நிலைமைகளை இச்சட்டம் இயற்றியவர்கள் கணக்கில் கொண்டிருக்க வேண்டும்.

      கல்வி உரிமைச் சட்டம் குறித்தான புகார்களை விசாரிக்க மத்திய குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம் (NCPCR-National Commission for Protection of Child Rights) அமைக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு மாநிலமும் இதைப்போன்று மாநில குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம் ((SCPCR-State Commission for Protection of Child Rights) ) அல்லது கல்வி உரிமை பாதுகாப்பு ஆணையங்களை (REPA-Right to Education Protection Authority) இச்சட்டம் நடைமுறைக்கு வந்த 6 மாதத்திற்குள் அமைக்க வேண்டும்.  தமிழக அரசு இந்த ஆணையத்தை இன்று வரை அமைக்கவில்லை.

      மத்திய அரசின் ஆணையம் (NCPCR) எவ்வித வசதியுமின்றி 4 ஆண்டுகளாக ஒரு தலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்களுடன் முடங்கியிருக்கிறது.  மாநில ஆணையம் (SCPCR) மட்டும் செயல்படும் என்ற நம்பிக்கையும் இல்லை.  மனித உரிமை ஆணையங்கள், நுகர்வோர் நீதிமன்றங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் நாமெல்லாம் அறிந்தது தானே!

      சென்னை எழும்பூர் டான் பாஸ்கோ பள்ளியில் படித்த 6ஆம் வகுப்பு மாணவன் பிரபாகர உதயம் பெயிலாக்கக்கப்பட்டதை எதிர்த்து அம்மாணவனது தந்தை கலைக்கோட்டு உதயம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.  இலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டம் - 2009, 01.04.2010 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதால் அம்மாணவனை பெயிலாக்கியது தவறு என்றும், பெயிலாக்குவதற்கு இணக்கமான மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரின் சுற்றறிக்கை சட்ட விரோதமானது என்றும், அம்மாணவனை 7ஆம் வகுப்பில் சேர்க்க வேண்டும் எனவும், பெற்றோர் விரும்பினால் மட்டுமே மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்திரவிட்டது.

      அரசுப் பள்ளிகளில் 6-8 வகுப்புகளில் ஆயிரக்கணக்கில் தேர்ச்சி மறுக்கப்பட்டபோதிலும் அவர்கள் சார்பாக யாரும் நீதிமன்றம் செல்லவில்லை.  அனைவருக்கும் தேர்ச்சியளிக்கும் முறை வருமாண்டில் நடைமுறைக்கு வருமெனத் தெரிகிறது.  மாணவர் சேர்க்கை, நன்கொடை, நுழைவுத் தேர்வு, அருகாமைப் பள்ளியில் 25% இடங்களை ஒதுக்குவது போன்றவற்றில் பல்வேறு பிரச்சினைகளும் வழக்குகளும் வெளிப்பட வாய்ப்பு மிக அதிகம்.  அப்படி வரும் ஆயிரக்கணக்கான வழக்குகளை விசாரிக்க, உடன் நடவடிக்கை எடுக்க இந்த ஆணையங்கள் எவ்வளவு தூரம் உதவும் என்ற கேள்வி கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் முன் நிற்கிறது.

      மாநில அரசுகள் ஒவ்வொன்றும் இச்சட்டம் நிறைவேற்றலை உறுதி செய்ய 15 உறுப்பினர்கள் கொண்ட மாநில பரிந்துரைக்குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.  கட்டாய கல்வி உரிமைச் சட்ட நடைமுறையை கண்காணிக்கவும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து இக்குழு அரசுக்கு பரிந்துரை செய்யும்.  இந்தக் குழுவும் தமிழக அரசால் இதுவரை அமைக்கப்படவில்லை.

       மாநிலத்திலுள்ள ஒவ்வொரு பள்ளியும் இச்சட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ஏதுவாக பள்ளி நிர்வாகக்குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.  இக்குழுவில் நான்கில் மூன்று பங்கு உறுப்பினர்கள் கட்டாயம் குழந்தைகளின் பெற்றோராக இருக்க வேண்டும்.  அரசு எவ்வித அறிவிப்பும் வெளியிடாத நிலையில், குழந்தை உரிமை ஆணையம், மாநில பரிந்துரைக்குழு, பள்ளி நிர்வாகக்குழு போன்றவை ஓராண்டு முடியப் போகும் நிலையில் அமைக்கப்படாமல் இருப்பது வேதனைக்குரியது.  இதிலிருந்து இச்சட்டம் எப்படிச் செயல்படப் போகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

     இந்தியாவிற்கு கடன் வழங்கும் உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம் போன்ற அமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பன்னாட்டு சிறுவர்களுக்கான அவசர கால நிதியம் (UNICEF-United Nations International Children's Emergency Fund) ஆகியவை அளிக்கும் அழுத்தத்தின் காரணமாக அறிவொளி இயக்கம் போன்ற எழுத்தறிவு இயக்கங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு முழு எழுத்தறிவு பெற்றதாக ஒரு பிம்பத்தை நமது அரசு முன்பு உருவாக்கியது.  அதைப் போன்று தற்போது கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டம் என்ற பெயரில் ஒரு திட்டத்தை வெறும் ஏட்டளவில் வைத்து மீண்டும் ஒரு மாயையைக் கட்டமைக்க முயல்வது வெளிப்படையாகத் தெரிகிறது.  ஏனென்றால் கட்டாயக் கல்வியை அமல்படுத்துவதற்கு தனிச் சட்டமே தேவையில்லை.  86 வது அரசியல் சட்ட திருத்தமின்றி 45 வது பிரிவை அப்படியே செயல்படுத்துவதை விட்டு விட்டு திருத்தம், தனிச் சட்டம், 25%அடித்தட்டு மக்களுக்கு ஒதுக்கீடு என போகாத ஊருக்கு வழி சொல்வதை நாம் வேறெப்படிப் பார்க்க முடியும்?

      ஆசிரியர்கள் பள்ளிக்கு ஒழுங்காகவும் காலத்தோடும் வர வேண்டும், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் பாடங்களை கற்பிக்க வேண்டும், தனிப்பயிற்சியில் (Private Tution) ஈடுபடக் கூடாது, எந்தவொரு குழந்தைக்கும் உடல் சார்ந்த தண்டனையோ (Corporal Punishment) மனம் சார்ந்த தொந்தரவோ கொடுக்கக் கூடாது,  தேர்வில் பெயிலாக்கக் கூடாது, செயல்வழிக் கற்றல், குழந்தை மையமாகக் கொண்ட கற்பித்தல் முறைகள், படைப்பாற்றலை ஊக்குவித்தல், குழந்தைகளுக்குச் சுதந்திரமான வகுப்பறைச் சூழல், அச்சுறுத்தும் தற்போதைய தேர்வு முறைகளுக்கு மாற்றாக தொடர் மதிப்பீட்டு முறை - போன்ற ஒருசில நல்ல அம்சங்கள் இச்சட்டத்தில் இருக்கவே செய்கின்றன. ஆனால் இவை மட்டும் இச்சட்டம் முழு வெற்றியடையப் போதுமானதாக இராது என்பதே கல்வியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்களின் கவலையாகும்.

     இறுதியாக நமது நாட்டைப் பற்றி கொஞ்சம். 

     ஐக்கிய நாடுகள் சபை மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை மனித வளர்ச்சிக் குறியீட்டெண் (HDI-Human Development Intex) மூலம் அளவிடுகிறது.  ஒரு நாட்டில் வாழும் மக்கள் பெறும் கல்வி, சுற்றுப்புறச்சூழல், வருமானம், மனித உரிமைகள், ஆண்-பெண்-குழந்தை உரிமைகள், அறவியல், வாழ்நாள், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) போன்ற போன்ற பல்வேறு தரவுகளின் அடிப்படையில் இக்குறியீட்டு எண் வழங்கப்படுகிறது.  2004ஆம் ஆண்டின்படி இந்தியா 177 நாடுகளில் 126 வது இடத்தில் இருந்தது.  2010இல் 192 நாடுகளில் இந்தியாவின் பெற்றுள்ள இடம் 119 ஆகும். கடந்த ஆறு ஆண்டுகளில் 126 லிருந்து 119 க்குத்தான் முன்னேற முடிந்துள்ளது.  இதுதான் வளர்ச்சியா?  அப்துல்கலாம் போன்றவர்கள் வல்லரசு என்று காட்டு கத்தல் கத்துகிறார்களே!  இதுதான் வல்லரசின் லட்சணமா?  இக்குறியீட்டு எண்ணில் கவுதமாலா, நிகரகுவா, மொராக்கோ, தென்னாப்பிரிக்கா, வியட்நாம், இந்தோனேஷியா, மாலத்தீவுகள், தாய்லாந்து, ஸ்ரீலங்கா, சீனா போன்ற நாடுகள் இந்தியாவை விட முன்வரிசையில் உள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும்.

      2001ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி இந்தியா உலக நாடுகளில் எழுத்தறிவில் 146 வது இடத்தில் உள்ளது.  எழுத்தறிவு சதவீதம் 64.84%.  தமிழ்நாடு 73.47% பெற்று எழுத்தறிவில் 11 வது மாநிலமாக உள்ளது. இதில் பெண்களின் எழுத்தறிவு சதவீதம் மிகவும் குறைவு.  பீகார் மாநிலம் 54.1% பெற்று கடைசி இடத்தில் உள்ளது.  இந்தப் புள்ளி விவரங்கள் பழையன என்றாலும் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் என்ற விவரமே தவிர முழுஎழுத்தறிவு பெற்றவர்கள், ஆரம்பக் கல்வி பெற்றவர்கள் என்று நாம் எண்ணி விடக் கூடாது.  அறிவொளி இயக்கம் போன்ற எழுத்தறிவுத் திட்டங்களெல்லாம் இந்த மாதிரி புள்ளி விவரங்கள் அளிப்பதற்காகத் தானே நடத்தப்படுகின்றன !

      ஒரு நாடு முன்னேற வேண்டுமானால் அதற்கு அடிப்படையான முன் நிபந்தனை அனைவருக்கும் ஆரம்பக்கல்வி என்ற இலக்கை அடைவதுதான்.  இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக வேண்டுமெனில், அது தன் மக்கள் அனைவருக்கும் ஆரம்பக்கல்வியையும், ஆரோக்கியத்தையும் உத்திரவாதப்படுத்த வேண்டுமென சமூக சிந்தனையாளரும் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞருமான அமர்த்தியா சென் குறிப்பிடுகிறார்.  ஆனால் நமக்கு ஆட்சியாளர்களாக மாறிப்போன பொருளாதார மேதைகளான மன்மோகன் சிங், ப. சிதம்பரம், மாண்டேக்சிங் அனுவாலியா, பிரணாப் முகர்ஜி, கபில் சிபல், சோனியா காந்தி போன்றோர் இதற்கு எதிராக சிந்திக்கிறார்கள்; செயல்படுகிறார்கள்.  எனவேதான் ஏற்கனவே உள்ள உரிமைகளைப் பறிக்கும் ‘உரிமை’ச் சட்டங்களும் அதன் மூலம் கல்வியை வணிகமயமாக்குவதும் மத்திய அரசுப் பள்ளிகளில் கூட வெறும் 25% தான் அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்கு என்று அடம் பிடிக்கவும் முடிகிறது.

உதவியவை  :

1.    இந்திய அரசின் கல்வி உணவு உரிமைச் சட்டங்கள் - ஒரு விமர்சனம்
       -அ. மார்க்ஸ்.
2.    தமிழகப் பள்ளிக் கல்வி - பிரச்சினைகளும் தீர்வுகளும்
      (தொ)- பேரா. பிரபா கல்விமணி
3.    மகாத்மா ஜோதிராவ் புலே -தனஞ்செயகீர்
4.    இந்திய முன்னேற்ற நுழைவாயில் (www.indg.in)
5.    Right of Children to Free and Compulsory Education – Act – 2009.

வெள்ளி, டிசம்பர் 10, 2010

மனுநீதியை நிலை நாட்டிய மனுநீதிச் சோழனும் மு. கருணாநிதியும் இணையும் புள்ளி - மு. சிவகுருநாதன்

மனுநீதியை நிலை நாட்டிய மனுநீதிச் சோழனும்
மு. கருணாநிதியும் இணையும் புள்ளி
                                                               - மு. சிவகுருநாதன்

   
    தமிழக முதல்வர். மு. கருணாநிதியின் திக் விஜயங்களின் போது ‘ஆரூர் கண்ட மனுநீதிச் சோழனே ! என்ற விளம்பரப் பதாகைகள் காணக் கிடைக்கும்.  அவரது கட்சி உடன்பிறப்புக்களின் திராவிட இயக்கம் மற்றும் கருத்தியல் தெளிவில்லாத சிறுபிள்ளைத்தனமான செயல்பாடு என்றெண்ணி அதைத் தாண்டிப் போய்விடுவது வழக்கம்.  பெரியாரின் தொண்டராக அறியப்பட்ட மு. கருணாநிதி ‘பராசக்தி’ போன்ற பகுத்தறிவு கருத்துப் பிரச்சாரப் படங்களுக்கு வசனங்களை  எழுதியவர்.  அவர் அதிலெல்லாம் இம்மாதிரியான புராணக் (தொன்மம்) கதைகளை கடுமையாக ஏளனம் செய்வதுண்டு.  இப்பதாகைகள் எல்லாம் மு. கருணாநிதியின் கவனத்தில் படாமல் போயிருக்கக் கூடும் என்றெண்ணி நாம் அதைப் பெரிதுபடுத்துவதில்லை.  நெற்றியில் குங்குமத் திலகமிடுதல், தீ மிதித்தல் (ஆதிசங்கர் என்ற தி.மு.க எம்.பி. கண்டிக்கப்பட்டார்) போன்றவற்றை காட்டுமிராண்டுத்தனம் என்றும் ராமன் உள்ளிட்ட கடவுளர்களை அவ்வப்போது கிண்டல் செய்து ராமகோபாலன்களால் அடிக்கடி தாக்குதலுக்கு ஆளாகிறவராயிற்றே !  என்று நமக்கு அனுதாபம் கூட வரக்கூடும். 
   
    உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு, கோவையில் கூட்டப்பட்ட கட்சி மாநாடொன்றில் “நான் பசுவுக்காக மகனைப் பலியிட்ட மனுநீதிச் சோழன் பிறந்த மண்ணில் பிறந்தவன்” என்று பெருமைப்பட்டுக் கொண்டார்.  செம்மொழி மாநாட்டில் களப்பிரர் காலத்தில் தமிழ் அழிந்தது என்ற அரிய கண்டு பிடிப்பையும் நிகழ்த்தினார்.  இதன் காரணமாக வைதீகத்துடன் அவர் கொண்டுள்ள உறவு வெட்டவெளிச்சமானது.  மனுநீதிச்சோழன், இராசராசசோழன் என்றெல்லாம் அழைக்கப்படுவதை அவர் மிகவும் ரசிப்பதாகவே தோன்றுகிறது.
   
    மனுநீதி என்று சொல்லப்படுகின்ற மனு தர்மத்தைநிலைநாட்டுவதற்காக புனையப்பட்ட கதைதான்.  மனுநீதிச் சோழன் கதை என்பதை மு. கருணாநிதி அறியாதவரல்ல.  சிலப்பதிகாரத்தில் கண்ணகி மதுரையை எரிக்கும்போது, யாரையெல்லாம் காக்க வேண்டும் என்பதாக சொல்லப்பட்டதோ, அவர்களை காப்பதற்காக, இவ்வாறான புனைவுகள் உற்பத்தி செய்யப்பட்டது.  புனைவுகளின் சமகால முக்கியத்துவத்திற்காக ‘சோழன்’ என்ற பெயர் கூடுதல் கவனிப்பு பெறுவதாகவும், மக்கள் மனத்தில் தீவிரமாக இருத்துவதற்கும் உதவிகரமாகவும் அமையுமென்பதும் திட்டமிட்ட சூழ்ச்சிக்காரர்களின் செயலாகவும் இச்சொல் நிலைத்து விட்டது.
   
    வேதங்கள் மூலம் நால்வருணத்தை நிலைநிறுத்தி தங்களுடைய மேலாண்மையை உறுதி செய்து கொண்ட பிராமணர்கள் சட்டம் இயற்றக் கூடிய நிலையில் இருந்தததால் பகுத்தறிவு, பிராமண எதிர்ப்பு ஆகியன தடை செய்யப்பட்டு மனு பின்வருமாறு கட்டளையிட்டான்.
  
     “வேதங்கள் சுருதிகள் மற்றும் சுமிருதிகள் (வேத சாஸ்திரங்கள்) என்றும் அழைக்கப்படுகின்றன.  சுருதிகளும், சுமிருதிகளும் எல்லா வகையிலும் மீமாம்ச (விவாதம்) எல்லைக்கு அப்பாற்பட்டவை.  துவிஜர்கள் (உயர் சாதியைச் சேர்ந்த இருபிறப்பாளர்களாகிய பார்ப்பனன், சத்திரியன், வைசியன்) யாராவது சுருதிக்கோ அல்லது சுமிருதிக்கோ அடி பணிய மறுத்தால் சட்டப்படி அவர்கள் சமூகத்தை விட்டு விரட்டி அடிக்கப்படுவார்கள்.  ஏனெனில் வேதங்களை நிந்திப்பவர்கள் வேத விரோதிகளாகக் கருதப்பட்டுத் தண்டிக்கப்படுவார்கள்”.(பக் 65).  
(இந்திய வரலாற்றில் பகவத் கீதை - பிரேம்நாத் பசாஸ்).
   
    ‘சூத்திரர்கள் யார்?’  என்ற ஆய்வு நூலை எழுதிய அண்ணல் அம்பேத்கர் மனுஸ்மிருதி, ஆபஸ் தம்ப தர்ம சூத்திரம், வாசிட்டதர்ம சூத்திரம், விஷ்ணு ஸ்மிருதி, கௌதம தர்ம சூத்திரம், பிரஹஸ்பதி ஸ்மிருதி, நாரத ஸ்மிருதி போன்ற பிராமண சட்ட முறைகள் சூத்திரர்களுக்கு எதிரான சொன்னவற்றை கீழ்க்கண்டவாறு தொகுத்தளிக்கிறார்.

1.    சூத்திரர்கள் சமுதாய வரிசையில் கடைசி வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
2.    சூத்திரர்கள் தூய்மையற்றவர்கள்.  அதனால் புனிதச் செயல்களை அவர்கள் பார்க்கும்படியோ, கேட்கும்படியோ செய்யக் கூடாது.
3.    மற்ற வகுப்பினருக்கு மதிப்பு கொடுப்பது போல் சூத்திரர்களுக்கு மதிப்பு கொடுக்கக் கூடாது.
4.    சூத்திரனுடைய உயிருக்கு எவ்வித மதிப்பும் கிடையாது.  அதனால் அவனுக்கு எந்தவித நஷ்டஈடும் கொடுக்காமல் யார் வேண்டுமானாலும் அவனைக் கொன்றுவிடலாம்.  அப்படி ஏதாவது நஷ்ட ஈடு கொடுப்பதாயின் பிராமணர், சத்திரியர் மற்றும் வைசியருக்காகக் கொடுப்பத போலல்லாது மிகச் சிறிதளவே ஒரு தொகையைக் கொடுத்தால் போதும்.
5.    சூத்திரன் அறிவைப் பெறக் கூடாது.  அவனுக்குக் கல்வி போதிப்பது ஒரு பாவம்; ஒரு குற்றச் செயலுமாகும்.
6.    ஒரு சூத்திரன் சொத்துக்களைச் சேர்க்கக் கூடாது.  ஒரு பிராமணன் அவனது சொத்துக்களை தன் விருப்பப்டி எடுத்துக் கொள்ளலாம்.
7.    சூத்திரன் அரசாங்க பதவியில் இருக்கக் கூடாது.
8.    சூத்திரனது கடமைகளும், மீட்சி பெறுவதும் மேல் சாதிக்காரர்களுக்குப் பணியிடை செய்வதில் தானிருக்கிறது.
9.    மேல் சாதிக்காரர்கள் சூத்திரர்களுடன் கலப்பு மணம் செய்து கொள்ளக் கூடாது.  மேல் சாதிக்காரர்கள் சூத்திரப் பெண்களை வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்ளலாம்.  ஆனால் ஒரு சூத்திரன் ஒரு உயர் சாதிப் பெண்ணைத் தொட்டு விட்டாலோ, அவன் கடுமையான தண்டணைக்கு உள்ளாக வேண்டும்.
10.    சூத்திரன் கொத்தடிமையாகவே பிறந்தவன்;  எப்போதும் கொத்தடிமையாகவே வைக்கப்பட வேண்டியவன் (பக். 80-81).
                        ( - அம்பேத்கர் - சூத்திரர்கள் யார்?  தொகுதி - 13 )

   
    தனக்கு ஏதேனும் பிரச்சினை வந்தால் மட்டும் சூத்திரன் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் மு. கருணாநிதி இதற்கு என்ன சொல்கிறார்?  சூத்திரன் எப்படி மனுநீதிச் சோழனாவது?
   
    மநு 8 ஆவது அத்தியாயம் 380 ஆவது சுலோகத்தில் “பிராமணன் எப்பேர்பட்ட பாவமான செய்கை செய்தாலும், அவனைக் கொல்லக் கூடாது, காயமும் செய்யக் கூடாது; வேண்டுமானால் அவன் பொருளை அவனுக்குக் கொடுத்து வேற்றூருக்கு அனுப்பி விடலாம்”  காயமும் செய்யக்கூடாது; வேண்டுமானால் அவன் பொருளை அவனுக்குக் கொடுத்து வேற்றூருக்கு அனுப்பி விடலாம்” என்றும் 381 ஆவது சுலோகத்தில்’ எவ்வளவு பெரிய குற்றமானாலும், பிராமணனைக் கொல்ல வேண்டுமென்று அரசன் மனதிலும் நினைக்கக் கூடாது” என்றும், 379 ஆவது சுலோகத்தில், பிராமணனுடைய தலையை மொட்டையடிப்பது கொலை தண்டனையாகும்” என்றும்; ஸ்திரீ விஷயங்களில் சூத்திரன் காவலில்லாத பிராமண ஸ்திரியைப் புணர்ந்தால் ஆண்குறியை அறுத்து, அவன் தேக முழுவதையும் துண்டு துண்டாக வெட்டி அவனுடைய எல்லாப் பொருள்களையும் பிடுங்கிக் கொள்ள வேண்டும் என்றும்; ஒரு பிராமணன் கற்புடைய ஒரு ஸ்திரீயைத் துராக்கரதமாகப் புணர்ந்தாலுங்கூட ஆயிரம் பணத்திற்குள் அபராதம் விதிக்கவேண்டும்” (பக். 3821).  என்று மறு சாஸ்திரம் சொல்வதைப் பட்டியலிடுகிறார்.  தந்தை பெரியார் (குடிஅரசு - கட்டுரை 13.12.1925) 
வே. ஆனைமுத்து தொகுத்த பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் தொகுதி :  4.
   
    மனுதர்மம் பற்றிய அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்ற கருத்துக்களெல்லாம் இவ்வாறிருக்க திராவிட இயக்க வாரிசாக தன்னைத்தானே அறிவித்துக் கொண்டுள்ள மு. கருணாநிதி திராவிடக் கருத்தியலுக்கு முற்றிலும் நேரெதிரான திசையில் பயணப்படுகிறார் என்பது தெளிவாகிறது.
   
     2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக ஆ. ராசா பதவி விலக நேரிட்ட போது, மு. கருணாநிதி, “மனு தர்மத்திற்கு மறுபிறப்பு இல்லை’ என்றார்.  அவரது புதல்வி கனிமொழி தலைமையிலான கி. விரமணி, சுப. வீரபாண்டியன், ஜெகத் கஸ்பர் உள்ளிட்ட துதிபாடிக் கும்பல் மேற்கண்ட கருத்தையும் மனுநீதிச் சோழன் கதையையும் வழி மொழியக்கூடும்.  அரசியலில் நிரந்தரப் பகைவர்களோ, நண்பர்களோ இல்லை என்பதைப் போல நிரந்தரக் கொள்கையும் கிடையாது என்பது தற்கால அரசியலின் இயங்கியல் விதியாகிவிட்டது.
   
     ஜெ. ஜெயலலிதாவுக்குப் போட்டியாக பா.ஜ.க. வுடன் உறவு கொண்டு அக்கட்சிக்கு தமிழகத்தில் அடைக்கலம் அளித்து பெரியாரியக் கொள்கைகளை குழி தோண்டிப் புதைப்பதில் மு. கருணாநிதிக்கு ஈடு இணையில்லை.  தேவைப்படும்போது வெற்று வாய்ச்சவடால் மூலம் பகுத்தறிவு பேசுவதும் தங்கள் பதவிக்கு ஆபத்து வரும் காலத்தில் வைதீகத்துடன் கூடிக் களிப்பதும் இவர்களது செயல்பாடாக இருக்கிறது.
   
     இவ்வாண்டு அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் சமச்சீர் கல்வி பாடநூற்கள் உள்பட தற்போதைய பாடநூற்களும் வரலாற்றுப் புரட்டுக்களையும் புனைவுகளையும் உயர்த்திப் பிடிப்பவையாக இருக்கின்றன.  இருக்கின்ற பாடநூற்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.  சென்ற ஆண்டு ஓய்வுபெற்ற ஆசிரியரொருவர் எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலில் இருக்கும் நூற்றுக்கணக்கான பிழைகளை பக்கவாரியாக பட்டியலிட்டு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் அளித்தார்.  இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

     பா.ஜ.க ஆட்சியில் நமது பாடத்திட்டம் காவிமயமானதை எதிர்த்தோம்.  ஆனால் திராவிட இயக்க ஆட்சியிலும் பாடநூற்கள் காவிமயமாக இருப்பதை எங்கு போய் சொல்வது?  ஒரு சிறிய உதாரணம் மட்டும் இங்கே தருகிறேன்.  ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியலில் (பாடம் 6)  ‘சுங்கர்கள் - குஷாணர்கள் - சாதவாகனங்கள் - தமிழ்நாட்டில் சங்க காலம்’ என்றொரு பாடம் உள்ளது.
   
     அப்பாடம் பவுத்திரத்தின் ஆட்சியை வீழ்த்தி (மௌரியப் பேரரசு) வேத சமயத்தின் மேன்மையை மீண்டும் நிலைநாட்டிய புஷ்ய மித்ர சுங்கனின் பெருமை பேசுவதோடு தொடங்குகிறது.  இறுதியாக தமிழ்நாட்டில் சங்ககாலம் (கி.மு. 300 - கி.பி. 300) பற்றி பேசும் அப்பாடம் சேர மன்னன் நெடுஞ்சேரலாதன் இமயவரம்பன் என்ற பெயர் பெறக் காரணம் இமயம் வரை சென்று வென்றதாக கதையளக்கிறது.
   
       சோழ அரசனொருவன் புலிக் கொடியை இமயத்தில் பறக்க விட்டதாக சொல்லி அவன் யார் என்பதையும் ஆதாரம் என்ன என்பதையும் தெரிவிக்க மறுக்கிறது.  சங்க இலக்கியப் பாடல்களைக் கொண்டு இவ்வரலாறு புனையப்படுகிறது.  அக்காலப் பெண்கள் கணவன் பால் மட்டும் மிகுந்த அன்பு கொண்டு கற்புத்தன்மையை நிலைநாட்டியதையும் சிலப்பதிகாரம் கண்ணகி கற்பின் மாண்பை விளக்குவதாகவும் கூறுகிறது.  சங்க காலப் பெண்பாற்புலவர்களில் அவ்வையார் உள்ளிட்ட ஒரு சிலரைப் பட்டியலிடுகிறது.  அவ்வையின் கற்பைக் காக்க தமிழ்ச் சமூகம் அவரைக் கிழவியாக்கிய வரலாற்றை யார் சொல்வது?
   
    அடுத்ததாக சமயம் பற்றி சிவன், விஷ்ணு, பிரம்மன், இந்திரன், வருணன், ஆகிய கடவுளர்கள் பட்டியலிடப்படுகின்றன.  முருகனைக் காணவில்லை.  அவன் ஹரப்பா, மொகஞ்சதாரோவிற்குப் போயிருக்கலாம்.  உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் 2009-ம் ஆண்டுக்கான கலைஞர் கருணாநிதி செம்மொழி விருது பெற்ற அஸ்கோ பர்போலா இதுவரை சரியாகப் படித்தறிய முடியாத சிந்து சமவெளி சித்திர எழுத்துக்களிலிருந்து முருகனின் பெயரை கண்டடைகிறார்.  (த சன்டே இந்தியன் ஜுலை - 2010) முருகனை விரட்டிவிட்டு புனைவுகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இந்துத்துவ வரலாற்றை திராவிட இயக்க ஆட்சி தமிழகத்தில் கட்டமைக்கிறது.
   
      இறுதியாக அரசர்களின் நீதி வழங்கும் முறையைச் சொல்லி கூன்பாண்டியன், மனுநீதிச் சோழன் பற்றித் தெரிந்து கொள்ள பணிக்கிறது.  நால்வருணக் கோட்பாட்டை விதைத்து நம் சமூகத்தைப் பாழ்படுத்திய பிராமணர்கள் தமது வெறுப்பு அரசியலுக்கு உண்டாக்கிய மனு தர்மத்திற்கு விளம்பரம் செய்ய உற்பத்தி செய்யப்பட்டது தான் மனுநீதிச் சோழன் கதை.  இக்கதையில் என்ன மாதிரியான நீதி வழங்கும் முறை உணர்த்தப்படுகிறது?  இதே பாதிப்பு தானே இளங்கோவடிகளுக்கும் ஏற்பட்டு கண்ணகி மதுரை எரிக்கும் போது மனுதர்மமே முன்னுக்கு நிற்கிறது.
   
     பகுத்தறிவுவாதியான மு. கருணாநிதி ஏன் புராணக் குப்பைகளிடம் சரணடைய வேண்டியுள்ளது.  இனப்பெருமை, மொழிப் பெருமை, குலப்பெருமை, சோழப்பெருமை போன்ற பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்ட ஒருவரால் வேறு என்ன செய்ய முடியும்?

     “தமிழ் காட்டுமிராண்டிக் காலத்து மொழி” என்று சொன்ன தந்தை பெரியார், “மொழி என்பது ஒரு மனிதனுக்கு அவ்வளவு முக்கியமான சாதனம் அல்ல;  அது இயற்கை ஆனதும் அல்ல; அதற்கு ஒரு கட்டாயமும் தேவையில்லை. மொழி மனிதனுக்குக் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் அளவுக்கு விஷயங்களைப் புரிந்து கொள்ள வாய்ப்பளிக்கும் அளவிற்கு தேவையானதேயொழிய பற்றுக் கொள்ளுவதற்கு அவசியமானதல்ல.  மொழியானது சமுதாயத்திலுள்ள சூழ்நிலைக்கு ஏற்றதேயொழிய பொது வாழ்விற்கு, உணர்ச்சிக்கு ஏற்றதல்ல”  
(பக். 1766, 1767 - பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்)
என்று மொழி பற்றிய தெளிவான கருத்து கொண்டிருந்தார்.
   
      மு. கருணாநிதி ‘தமிழுக்குக் கேடு வந்தால் மந்திரி பதவியை விட்டு விடுவேன்”, என்று சொன்னதற்கு பெரியார்,” நாம் வீட்டில் தமிழ் பேசுகிறோம்.  கடிதப் போக்குவரத்து, நிர்வாகம், மக்களிடம் பேச்சு இவைகளைத் தமிழில் நடத்துகிறோம்.  சமயத்தை, சமய நூல்களை, இலக்கியத்தைத் தமிழில் கொண்டு இருக்கிறோமே ! சரி !  இதற்கு மேலும் சனியனான தமிழுக்கு என்ன வேண்டும் ?” 
(பக்.1774 - பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்)  என்று கோபப்படுகிறார்.
   
      தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதை அறியாமை எனச் சாடிய பெரியார், “தமிழ்மொழி தாய்மொழியாக உள்ள இந்நாட்டில், இந்தியைப் புகுத்தக் கூடாது என்று கிளர்ச்சி செய்தேன்.  அது என் தாய்மொழிப் பற்றுதலுக்காக என்று அல்ல; அது என் நாட்டுமொழி என்பதற்காக அல்ல; சிவபெருமானால் பேசப்பட்டது என்பதற்காக அல்ல;  அகத்திய முனிவரால் திருத்தப்பட்டதென்பதற்காக அல்ல; மந்திர சக்தி நிறைந்தது; எலும்புக் கூட்டை பெண்ணாக்கிக் கொடுக்கும் என்பதற்காக அல்ல; பின் எதற்காக?  தமிழ் இந்நாட்டு சீதோஷ்ண நிலைக்கேற்ப அமைந்துள்ளது”, (பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்)
என தமிழ்மொழி மீது சுமத்தப்பட்டுள்ள புராணக்குப்பைகளை கேலி செய்கிறார்.

      தந்தை பெரியார் மொழிப்பற்று என்னும் மூடநம்பிக்கைகளற்று மொழியை முற்றிலும் புறவயமாக அணுகினார்.  அவருடைய வாரிசாக சொல்லிக் கொள்ளும் மு. கருணாநிதிக்கு அத்தகைய வாய்ப்பு கிடைக்கவேயில்லை.   எனவேதான் பெரியாருக்கு மட்டுமல்லாமல் மனுநீதிச்சோழன், ராஜராஜன் போன்றவர்களுக்கும் வாரிசாக வலம் வர முடிகிறது.

2ஜி அலைக்கற்றை ஊழல் : நடப்பது என்ன? - மு. சிவகுருநாதன்

2ஜி அலைக்கற்றை ஊழல் :  நடப்பது என்ன?
            - மு. சிவகுருநாதன்


          ஆ. ராசாவின் பொறுப்பிலுள்ள தொலை தொடர்புத்துறை 2ஜி  (2G SPECTRUM ) அலைக்கற்றையை ஏலம் விடாமல் 2001 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட அடிமாட்டு விலையில் 2008 ஜனவரியில் 122 உரிமங்களை வழங்கியது.  அப்போதிருந்தே ரூ.60,000/- கோடி ஊழல் நடைபெற்றதாக கூறப்பட்டது.  ஊடகங்களின் விருப்பத்திற்கேற்ப இவ்வூழல் ஊற்றி மூடப்பட்டது.  இடதுசாரிகள் தவிர பிரதான எதிர்கட்சிகளும் ஊடகங்களும் இவ்வளவு காலம் ஏன் மௌனம் காத்தன என்பதை தனியே ஆராய வேண்டும்.

       தற்போது மத்திய கணக்குத் தணிக்கை அலுவலரின் (CAG - Comptroller and Auditor General of India) அறிக்கையின் மூலம் அமைச்சரவைக் குழு, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு ஆணையம் (TRAI) ஆகியவற்றின் ஆலோசனைகளையும் மீறி முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்று தேர்ந்தெடுக்கப்பட்ட சில நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கியதன் மூலம் அரசுக்கு ரூ.1,76,645 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

       டாடா, அம்பானிகளுக்கு புரோக்கராகச் செயல்பட்ட நீரா ராடியா என்ற பெண்மணியின் தொலைபேசி உரையாடல் வெளிவந்து அதன் மூலம் இந்திய அரசு பன்னாட்டு முதலாளிகளுக்கும் உள்நாட்டு முதலாளிகளுக்கும் கைகட்டி சேவகம் செய்வதை அம்பலப்படுத்தியுள்ளது.

      மூன்றாவதாக சுப்ரமணியன் சுவாமி உச்சநீதிமன்ற வழக்கின் மூலம் நீதிமன்றம் அரசுக்குக் கேட்ட கேள்விகள்போன்ற காரணங்களால் இறுதியாக பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது.  எதிர்க்கட்சிகளின் தீவிர எதிர்ப்பின் காரணமாக பிரணாப்முகர்ஜி மூலம் மு. கருணாநிதியின் சம்மதம் பெறப்பட்டு தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா பதவி விலகிய நாடகம் கடைசியில் நிகழ்த்தப்பட்டது.

        இம்மாபெரும் முறைகேட்டிற்கு யார் பொறுப்பு, யார் பலிகடா என்பதையெல்லாம் விட பிரதமர் மன்மோகன்சிங் நேர்மையானவர், அவருக்கும் இதற்கும் தொடர்பு இல்லை, அவருக்கு தி.மு.க விடமிருந்து நெருக்கடி இருந்தது, அவரது திருவாளர் பரிசுத்தம் (Mr.Clean!) இமேஜ் பாதிக்காது என ஊடகங்கள், அத்துறைக்கு முன்னர் பொறுப்பு வகித்த தி.மு.கவின் தயாநிதிமாறன், உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு தொடர்ந்த சுப்ரமணியன் சுவாமி போன்றவர்களும் கிளிப்பிள்ளை மாதிரி சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள்.

     இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை அடிக்கடி தாக்குதல் நடத்துவது தொடர்பாக மு. கருணாநிதி அடிக்கடி பிரதமருக்குக் கடிதம் எழுதுவதைப்போல அமைச்சர் ஆ. ராசாவுக்கு கடிதம் எழுதியதோடு பிரதமரின் பொறுப்பு முடிந்து விடுகிறதா என்ன?

     2ஜி அலைக்கற்றையை முறைகேடாக பெற்ற நிறுவனங்கள், இவற்றில் பல தொலை தொடர்புத்துறையில் தடம் பதிக்காத கட்டிட கட்டுமான நிறுவனங்கள் போன்றவற்றிற்கு அளிக்கப்பட்ட உரிமம் இதுவரையில் ரத்து செய்யப்படவில்லை.  இதில் இன்னும் பல நிறுவனங்கள் தங்களது தொலைத்தொடர்பு சேவையை இன்னும் தொடங்கவில்லை.  சேவை தொடங்காத 6 நிறுவனங்களுக்கு தற்போது தான் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.  இந்த ஊழலில் தொடர்புடைய பெரிய நிறுவனங்கள், முதலாளிகள் போன்றோரையும் பிரதமரையும் பாதுகாப்பதற்கு பெருவாரியான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

     இந்த ஊழல் சங்கிலியில் பா.ஜ.க.வின் தொடர்பும் முக்கியமானது.  பிரமோத் மகாஜன், அருண் ஷோரி,தயாநிதிமாறன் போன்றோர் காலத்திலிருந்தே பொதுச்சொத்து பெருமுதலாளிகளுக்கு தாரை வார்க்கப்பட்டது.  போர்ஃபர்ஸ் ஊழலை வெளிப்படுத்தி அதன் மூலம் பிரபலமான அருண் ஷோரி பா.ஜ.க. அரசில் பங்கு விலக்கல் துறை அமைச்சராகவும்  இருந்தார்.  ரிலையன்ஸ் நிறுவனம் வெளிநாட்டு அழைப்புக்களை உள்நாட்டு அழைப்புக்களாக பொய்க் கணக்கு காட்டி பெரும் கொள்ளையில் ஈடுபட்டது.  அதற்கு மிகச்சிறிய தொகை மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டது.  இதன் காரணமாக அவர்கள் பெற்ற ஆதாயம் பல்லாயிரம் கோடி ரூபாய்.  தனி நபருக்கு கையூட்டாகவும் அரசியல் கட்சிக்கு தேர்தல் நன்கொடையாக பெருந்தொகை பெறுவதற்கு பொதுச் சொத்துக்கள் பதிலீடு செய்யப்படுகின்றன.

    2009 பொதுத் தேர்தலில் 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் பிரச்சினையை பெரிதாக்க பா.ஜ.க விரும்பவில்லை.  இதில் தங்களுக்குப் பங்குண்டு என்பதை சொல்லாமல் சொன்னார்கள்.  இப்போது அவர்கள் பேசுவதற்கு வேறு பல காரணங்கள் இருக்கக் கூடும்.

    நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி பல நாட்களாக நாடாளுமன்றம் முடக்கப்பட்டிருக்கிறது.  அரசுத்தரப்போ சி.பி.அய், பொதுக்கணக்குக் குழு, அமலாக்கப்பிரிவு ஆகியவற்றின் விசாரணைiயில் இருப்பதால் நாடாளுமன்ற கூட்டுக்குழு தேவையில்லை என்று பிடிவாதம் செய்கிறது.  சுதந்திர இந்தியாவின் 63 ஆண்டு கால வரலாற்றில் இந்த மாதிரியான ஊழல்கள் பலமுறை வெளிப்பட்டும் யாரும் தண்டனை பெற்றதில்லை.  முன்னர் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அறிக்கைகளும் செயல்படுத்தப்பட்டதில்லை.  சி.பி.அய், பொதுக் கணக்குக்குழு, கூட்டுக்குழு, விசாரணைக் கமிஷன் போன்ற எதுவும் ஒன்றும் செய்துவிடப் போவதில்லை.  அவர்கள் அளிக்கும் அறிக்கைகள் குப்பைக்குதான் போகும்.  இதுதான் நடக்கும் என்பதற்கு நிறைய முன்னுதாரணங்களைச் சுட்ட முடியும்.

    உச்சநீதிமன்றத்தின் தற்போதைய நடவடிக்கைகள், கேள்விகள் போன்றவற்றைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.  நமது நீதிபதிகள் விசாரணைகளின்போது இவ்வாறு தான் மிகவும் உருப்படியாக கேள்வி எழுப்புவார்கள்.  இதனையொட்டி நாமாக தீர்ப்பை கற்பனை செய்து கொள்ளக்கூடாது.  இறுதியாக இந்தியர்களின் கூட்டு மனச்சாட்சிபடியோ, அயோத்தி தீர்ப்பைப் போன்றோ ஒரு ‘கட்ட பஞ்சாயத்து’ முடிவைச் சொல்வார்கள்.  அதுவும் அத்தீர்ப்பை அரசு செயல்படுத்த வேண்டிய கட்டாயமிருக்காது.  தனிநபர் நீதிமன்றத் தீர்ப்பை மீறினால் நீதிமன்ற அவமதிப்புக்கு (Contempt of Court) ஆளாக நேரிடலாம்.  அத்தீர்ப்பை அருந்ததிராய் போன்ற ‘தேசத்துரோகிகள்’ விமர்சித்தால் சிறைத்தண்டனை கூட கிடைக்கலாம்.  போபால் யூனியன் கார்பைடு விஷ வாயு கசிவு, நஷ்ட ஈடு தொடர்பான வழக்குகளின் கதை நமக்கெல்லாம் தெரியும்தானே !

    உச்சநீதிமன்றத்தின் செயல்பாட்டிலுள்ள இன்னொரு அரசியலையும் நாம் கவனிக்கத் தவறக் கூடாது.  சுப்ரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடும் போதெல்லாம் மிக விரைவாக காரியம் ஆவதேன்?  ‘ராமர்பாலம்’ தகர்க்கப்படக் கூடாது என்று தொடர்ந்த வழக்கில் ‘சேது சமுத்திரத்திட்டம்’ உடன் நிறுத்தப்பட்டது.

    கேபினட் அமைச்சராகவிருந்த ஆ. ராசா மீது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கிரிமினல் வழக்கு தொடர பிரதமர் அனுமதியளிக்க வேண்டும் என்ற தொடரப்பட்ட வழக்கில்தான் பிரதமரை நோக்கி பல கேள்விகள் எழுப்பப்பட்டு, அதற்கு சுப்ரமணியன் சுவாமியே பிரமருக்கு ஆதரவாக பேசியதும் நடந்தேறியது. வேறு யாரும் வழக்கு தொடர்ந்திருந்தால் இவ்வாறு நடந்திருக்கும் என்று நினைக்கத் தோன்றவில்லை.

   நர்மதை நதியின் சர்தார் சரோவர் அணைக்கட்டு பிரச்சினையில் மேதா பட்கர் (நர்மதா பச்சாவோ அந்தோலன்) தலைமையில் எவ்வளவு போராட்டங்கள், வழக்குகள்.  இறுதியில் நீதிமன்றம் அணையை உயர்த்தச் சொல்லி தீர்ப்பு சொன்னது.  அத்தீர்ப்பை ‘நாகரீக வன்முறை’ என்று விமர்சனம் செய்த அருந்தததிராய்க்கு ஒரு நாள் சிறைத் தண்டனை விதித்தது.  பன்னாட்டு, உள்நாட்டு மூலதனங்களால் பாதிக்கப்படும் மக்கள் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்குகளில் அவர்கள் சார்பாக நீதிமன்றம் செயல்பட்டதில்லை.  முதலாளிகளுக்கு எதிராக எந்தத் தீர்ப்பும் வந்ததில்லை.

     2ஜி அலைக்கற்றை வழக்கில் கூட முறைகேடாக வழங்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்ய எந்த நீதிமன்றமும் உத்திரவிடப்போவதில்லை.  இது அரசின் தனியார் மயம், தாராளமயம், உலக மயம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கையின் முடிவு, அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடுவதில்லை என்று கூறி எளிதில் தப்பித்துக் கொள்ளும்.

      அரசு தானியக் களஞ்சியங்களில் வீணாகும் உணவு தானியங்களை பட்டினியால் வாடும் ஏழை மக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்று பி.யூ.சி.எல் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டியதில்லை என்று திருவாய் மலர்ந்தார் உணவு அமைச்சராக இருக்க லாயக்கில்லாத ICC தலைவர் சரத்பவார்.  அதைக் கேட்ட நிதிமன்றம் வெகுண்டெழுந்து ஆணையைச் செயல்படுத்த வேண்டும் என்று கூறியது.  அதுவரையில் அமைதியாக இருந்து திருவாளர் பரிசுத்தம் (Mr.Clean!) மன்மோகன்சிங் அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடுவதை அனுமதிக்க முடியாது என்று எச்சரித்தார்.

      மத்தியக் கணக்குத் தணிக்கை அலுவலரின் (CAG) அறிக்கையால்தான் 2ஜி அலைக்கற்றை ஊழல் பூதாகரமாக வெளிப்பட்டது.  இதனையெடுத்து நடைபெற்ற தணிக்கைத் துறை ஆண்டுவிழாக் கூட்டத்தில் பேசிய பிரதமர், தணிக்கையாளர்கள் நேர்மையாகவும், உண்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார்.  இதே கருத்தை சென்னை தணிக்கைத்துறை கூட்டத்தில் தமிழக முதல்வர் உரையில் வலியுறுத்தியது துணை முதல்வர்மு.க. ஸ்டாலின் முதல்வர் உரையைப் படித்த போது வெளிப்பட்டது.  சி.பி.அய் போன்று வளைக்க வேண்டியவற்றை வளைத்தும் நீதிமன்றம், தேர்தல் ஆணையம், தணிக்கைத்துறை போன்றவற்றை மிரட்டியும் பல்வேறு ஊழல்களில் விசாரிக்கப்பட வேண்டிய பி.ஜே. தாமஸை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமித்தும் பல ஊழல்களை கண்டும் காணாமலும் இருக்கின்ற பிரமர் கறைபடியாதவர், செயல்படாத பிரதமர் (லேசான விமர்சனம்) என்றெல்லாம் ஊடகங்கள் சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ?

      உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம் போன்றவற்றிற்கும் அமெரிக்காவிற்கும் வேண்டப்பட்டவர்கள் மட்டும் இந்தியா அரசியலில் உயர் பதவி வகிப்பதை நாம் எப்படிப் புரிந்து கொள்வது?  நீரா ராடியாவின் உரையாடல் பதிவுகளிலிருந்து ஆ. ராசா தான் தொலை தொடர்புத் துறைக்கு மந்திரியாக வேண்டும் என்ற உள்ளூர் முதலாளிகளின் விருப்பம் வெளிப்பட்டது.  அதைப் போல அமெரிக்கா இந்தியாவில் மன்மோகன் சிங் பிரதமராகவும் ப. சிதம்பரம், ரெங்கராஜன், மாண்டேக் சிங் அனுவாலியா, சுப்பாராவ் போன்றவர்கள் நிதியமைச்சராகவும் வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.

     ரிசர்வ் வங்கி கவர்னர்களுக்கெல்லாம் யோகம் காத்திருக்கிறது.  உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனத்தில் பதவி அல்லது மாநில கவர்னர் ஆகியவற்றில் ஏதோ ஒன்று கண்டிப்பாக கிடைக்க வாய்ப்பிருக்கிறது.  பிரதமர்தான் திட்டக்குழு தலைவர்; துணைத் தலைவரும் நம்மாளாக இருக்க வேண்டும் என்று அமெரிக்க முதலாளித்துவம் எதிர்ப்பார்க்கிறது.  திட்டக்குழுவிற்கு பிரதமர் பெயரளவில் தான் தலைவர்.  செயல்பாடு துணைத் தலைவரைச் சார்ந்தது.  எனவே, மாண்டேக் சிங் அனுவாலியாக்களுக்கு ஜாக்பாட் அடிக்கிறது.  இதற்கு அடுத்து சர்வதேச நிதி நிறுவனத் (IMF) தலைவர் பதவி கூட காத்திருக்கிறது.

    தயாநிதிமாறன் வேண்டாம் ஆ. ராசாதான் வேண்டும் என இந்திய முதலாளிகள் அடம் பிடிப்பதனால் ஆ. ராசா மட்டும் ஊழல் பேர்வழி; தயாநிதிமாறன் போன்றோர் நேர்மைசாலிகள் என்று அர்த்தமல்ல.  ஏற்கனவே, டீலிங் முடிந்து விட்டது.  எனவே, புதுக்கணக்கு தொடங்க வேண்டியதில்லை.  பழகிய மாட்டை வைத்துதானே எளிதாக ஏர், வண்டி ஓட்ட முடியும்.  ‘வேதாந்தா’ நிறுவனத்திற்கு ஏதேனும் காரியம் ஆக வேண்டும் என்றால் முன்னாள் வழக்கறிஞர் ப. சிதம்பரம் அந்நிறுவனத்திற்கு பயன்படுவார் தானே !  எனவே, அந்த நிறுவனங்கள் மீண்டும் அவர்களையே நாடுகிறது.

      இதைப் போலவே அமெரிக்காவின் சர்வதேச முதலாளியம் மன்மோகன்சிங், ப. சிதம்பரம், மாண்டேக்சிங் அனுவாலியா போன்றவர்களை விரும்புகிறது.  இந்த விசுவாசமே அணுஉலை விபத்து நடந்தால் ரூ.500/- கோடி இழப்பீடு அளித்தால் போதும் என மசோதா நிறைவேற்றத் துடிக்கிறது.  ஏன் எதற்கு என்று கேள்வியில்லாமல் பன்னாட்டு மூலதனங்களுக்கு இந்தியாவை விருந்தாக்குகிறது.  நூற்றுக்கணக்கான சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், நாட்டின் கனிம வளங்களை உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளுக்கு தாரைவார்த்தல் எனப் பல்வேறு மோசடிகளை ‘வளர்ச்சித் திட்டங்கள்’ என்ற பெயரில் அரங்கேற்ற வைக்கிறது.  இதற்கு இடையூறாக இருக்கும் மாவோயிஸ்ட்டுகளை “உள்நாட்டு பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்” என வீரிடவும் வைக்கிறது.  கனிம வளங்களைப் போல 2ஜி அலைக்கற்றையும் நவீன இயற்கை வளம்.  அதை இவ்வாறு கூறுகட்டி விற்று லாபம் பார்த்திருக்கின்றன தேசிய முன்னணி (NDA) மற்றும் ஐக்கிய முன்னணி (UPA) கூட்டணி அரசுகள்.

       2ஜி அலைக்கற்றை தொடர்பான வழக்கு தொடுத்த சு. சுவாமி அமெரிக்காவிலிருந்து ஆதாரங்கள் வந்தது என்கிறார்.  மன்மோகன் சிங், சு. சுவாமிக்கிடையில் அமெரிக்க விசுவாசத்தில் பெரும் போட்டியே இருக்கும் போலிருக்கிறது.

      நீரா ராடியா பேச்சு ஒலிப்பதிவிலிருந்து ஊடகத்துறையினரின் அயோக்கியத்தனங்களும் ஒரு சேர வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன.  அவர்களும் ஆளும் வர்க்கத் தரகர்களாக நான்காவது தூண் என்று சொல்லிக் கொண்டு மூன்று தூண்களைப் போலவே கேவலமாக சீரழிந்திருப்பதை இது உணர்த்துகிறது.  ஊடகங்கள் எந்த மாதிரியான செய்திகள் வர வேண்டும், யாரைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் முன் முடிவுடன் செயல்படுகின்றன.  ஊடகத் தொழிலதிபர்களில் கையில் பத்திரிக்கை தர்மம் என்பதெல்லாம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதுதான்.  வேறு எந்தத் துறைகளிலும் அந்நிய முதலீட்டை ஆதரிக்கும் இவர்கள் தங்கள் துறையில் மட்டும் எதிர்ப்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும்.

       2ஜி அலைக்கற்றை ஊழல் பணத்தில் சோனியாகாந்திக்கு 60% மு. கருணாநிதிக்கு 30% ஆ. ராசாவுக்கு 10% என பங்கு பிரிக்கும் ‘கோமாளி’ சு. சுவாமி, இதில் தொடர்புடைய பிரதமர், முந்தைய பா.ஜ.க அரசுகள், தலைவர்கள், தொழிலதிபர்கள் ஆதாயம் அடைந்த பிறர் பற்றி ஏன் வாய் திறப்பதில்லை என்பதையும் அதன் பின்னாலுள்ள அரசியலையும் கவனிக்க வேண்டும்.

       இப்பெரும் ஊழலில் நேரடியாகவும், மறைமுகமாகவோ தொடர்புடைய அனைவரும் கூட்டுக் களவாணிகள் தான்.  அவர்களில் ஒரு சிலரை மட்டும் காப்பாற்ற ஊடகங்களும் சு. சுவாமி உள்ளிட்ட பலரும் விரும்புவது நமது அய்யத்தை அதிகரிக்கிறது. இந்நிலையில்  மு. கருணாநிதியின் ‘தலித் பாசம்’ நம்மை புல்லரிக்க வைக்கிறது.  ஊழலிலும் இட ஒதுக்கீடு கேட்பதாக ‘தினமணி’ கிண்டல் செய்கிறது.  ஆ. ராசா இத்துறை அமைச்சராக வந்ததன் பின்னணியைப் பார்த்தால் மு. கருணாநிதியின் கபட நாடகம் புலனாகும்.  ‘பசை’யான இத்துறையை தன் பேரனுக்காகப் போராடிப் பெற்று குடும்பச்சண்டையின் காரணமாக வேறு வழியின்றி அப்பதவியைப் பிடுங்கி ஆ. ராசாவிடம் அளித்தவர் மு. கருணாநிதி.  தயாநிதி மாறனை விட கட்சியில் மூத்தவரான ஆ. ராசாவுக்கு முன்னரே அத்துறை அமைச்சர் பதவியை அளிக்கவிடாமல் தடுத்தது எது?  அப்போது ஏன் ‘தலித் பாசம்’ பொங்கி எழவில்லை என்று கேட்டால் பதிலிருக்கப் போவதில்லை.

      2ஜி அலைக்கற்றை ஊழலில் பலிகடாவாக்கப்பட்டுள்ள ஆ. ராசா பிறப்பால் தலித்தாக இருக்கலாமே தவிர தலித் மக்களின் பிரதிநிதி அல்ல.  பிராமணர் சங்கம் உள்ளிட்ட எந்த சாதிச் சங்கங்களும் அரசியல் கட்சியாக மாறுகிறபோது தனித்தொகுதிகளில் வேற வழியில்லாமல் போட்டியிடச் செய்வதற்காக உற்பத்தி செய்யப்படுகின்ற இத்தலைவர்கள் அடித்தட்டு தலித் மக்களுக்கு விசுவாசமாக செயல்படுவது நடைமுறையில் சாத்தியமில்லை.  தம்முடைய கட்சித்தலைவருக்கு விசுவாசம் காட்டவே அவர்களுக்கு நேரமிருப்பதில்லை.  இல்லாவிட்டால் தங்களது பதவி கூட அவர்களுக்கு நிரந்தரமில்லை என்பதே அன்றாட யதார்த்தமாக உள்ளது.  நிலைமை இப்படியிருக்க தலித் என்று பேசுவது அர்த்தமற்ற ஒன்று.

      ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர தனித்தொகுதி தவிர்த்த பொதுத் தொகுதிகளில் ஒரு தலித்தை வேட்பாளராக நிறுத்த எந்த கட்சியும் முன்வருவதில்லை.  முரசொலி மாறன் இருந்த வரையில் தில்லியில் வேறு தி.மு.க தலைவர்கள் வெளிப்படவேயில்லை.  மாறனுக்குப் பிறகு டி.ஆர். பாலு போன்ற அடுத்தக்கட்ட தலைவர்கள் உருவாகாமல் தயாநிதி மாறன்,
மு.க.அழகிரி,கனிமொழி போன்ற குடும்ப வாரிசுகளை தொடர்ந்து உருவாக்கித்தந்துள்ள தி.மு.க தலைமை தலித் என்று நீலிக்கண்ணீர் வடிப்பது மிகவும் அபாயகரமானது.


    அம்பானி, டாடாக்களின் முகவராக செயல்பட்ட நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் அலைக்கற்றை ஊழலுக்கு முக்கிய ஆதாரமாகும்.  அதில் வெளியானது சிறுபகுதிதான் ; முற்றிலும் வெளியாக வேண்டும்.  இந்த உரையாடல் பதிவு வெளியீட்டிலும் வேண்டியவர்களைப் பாதுகாக்கும் சூழல் உருவாகும்.  இதற்கிடையில் ரத்தன் டாடா தனி நபர் அந்தரங்க உரிமையில் தலையிடுவதாகவும் உரையாடல் பதிவை வெளியிடத் தடையளிக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.

     சினிமா நடிகைகளின் அந்தரங்கத்தில் சில ஊடகங்கள் மூக்கை நுழைப்பதை தங்கள் வழக்கமாகவே கொண்டுள்ளன.  மாறாக அரசும் அரசைச் சார்ந்தவர்களும் பெருமுதலாளிகளும் பொதுச் சொத்தைக் கொள்ளையடிக்க, தங்களுக்கு சாதகமான அரசு எந்திரத்தை வளைக்கின்ற வேலையைத்தானே டாடா, அம்பானிகளுக்காக நீரா ராடியா தரகுவேலை செய்திருக்கின்றார். இது தேச நலன் சம்மந்தப்பட்டது.  டாடாவின் தனி நபர் அந்தரங்க உரிமை பற்றி கதையளப்பவர்கள் 100 கோடி இந்திய மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து எவ்வித கவலையும் கொண்டதில்லை.  ‘விக்கி லீக்ஸ்’ இணையதளம் அமெரிக்க அத்துமீறல்களை வெளியிடுவதை அந்நாட்டு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் “உலக நாடுகள் மீதான தாக்குதல்,” என்கிறார்.  எப்படி நம்ம மன்மோகன்சிங் மாதிரி பேசுகிறார்கள் பாருங்கள் !  உலக நாடுகள் மீது அமெரிக்க நடத்திய, நடத்தும் தாக்குதல்களுக்கு அமெரிக்கா என்ன பதில் சொல்லப் போகிறது?  டாடா, அம்பானி போன்றவர்கள் இந்திய மக்களின் சொத்துக்களைக் கொள்ளையடிக்க செய்த சதி ஆலோசனை வெளிப்பட்டால் தனிநபர் அந்தரங்கம் என்று நீதிமன்றத்திற்கு வருகிறார்கள்.  நீதிமன்றமும் அவர்களுக்குச் சாதகமாக தீர்ப்பெழுதக் கூடும்.  நமது பிரதமருக்கு ஏன் இதெல்லாம் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக தெரிவதில்லை?  ஏனென்றால் அவரும் அவர் சார்ந்த கட்சியும் (ஏன் எதிரணியும் கூட) மக்களுக்கானது அல்ல;  மாறாக பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கானது.

     2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு பின்னால் ஒரு பெரிய வலைப்பின்னல் இருப்பதை அவதானிக்க முடிகிறது.  பிரதமர், சோனியாகாந்தி, ஆ. ராசா, தி.மு.க., பா.ஜ.க., ஊடகத்துறையினர், அரசு அதிகாரிகள், நீரா ராடியா போன்ற தரகர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு பெருமுதலாளிகள் என பல நூறு பேர்கள் இவ்வலைப் பின்னலின் கண்ணிகளாக இருக்கின்றனர்.  நமது முந்தைய உதாரணங்களைப் பார்க்கும்போது எந்த அமைப்பின் விசாரணையும் எவ்வித பலனையும் அளிக்காமல் போகவும் வாய்ப்புண்டு.  சராசரி இந்தியனின் அன்றாட பரபரப்புக்குத் தீனிபோட்ட இவ்விவகாரம் கொஞ்ச நாட்களில் மக்களின் பொதுப்புத்தியிலிருந்து மறந்து போகவும் கூடும்.  அடுத்த வேளை உணவுக்கு உத்திரவாதம் இல்லாத பல கோடி இந்திய மக்களுக்கு இதைப்பற்றி யோசிக்க கூட முடியாமற் போகலாம்.  ஆனால் அதிகார வர்க்கம் தொடர்ந்து தனது கொள்ளையிடலுக்கான செயல் திட்டங்களை வகுத்தபடியே இருக்கும்.

33 -வது புத்தகக்கண்காட்சி (2010 ) சில நினைவுகள் -மு.சிவகுருநாதன்

33-வது சென்னை புத்தகக் கண்காட்சி – சில நினைவுகள்
– மு. சிவகுருநாதன்







    சென்னை புத்தகக் கண்காட்சி ‘கார்ப்பரேட்’ மயமாகிப் போனாலும் புத்தக விரும்பிகளுக்கு அதில் பங்கேற்பதைத் தவிர வேறு வழியில்லை. ஒவ்வோர் ஆண்டும் பொங்கலின் போது புத்தகக் கண்காட்சி நடத்தப்படுவதால் வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு அது பெருத்த சிரமத்தை உண்டாக்குகிறது.
    
       10 நாட்கள் கண்காட்சி நடைபெற்றாலும் இறுதி நாள் கூட பல்வேறு புதிய நூற்கள் வெளிவருவதுண்டு. அந்த நாட்களில் கண்காட்சியில் கலந்து கொண்டு விட்டு ஊர் திரும்புவது பண்டிகைக்காக ஊர் திரும்பும் கூட்டம் சேர்ந்து கொள்வதால் மிகுந்த சிரமமானதொன்றதாக ஆகிவிடுகிறது.

        இந்த சிரமங்களுக்கு இடம் கொடுக்காத வகையில் 33-வது சென்னை புத்தகக் கண்காட்சி டிசம்பர் 2009 இறுதியில் தொடங்கி ஜனவரி 2010ல் பொங்கலுக்கு முன்னதாகவே முடிந்து போனது ஒரு வகையில் மகிழ்ச்சியைத் தருவதாக இருந்தது.

       புத்தக வெளியீடு சந்தைமயமான இன்றைய ‘கார்ப்பரேட்’ சூழலில் ஏதேனும் சிறிய பதிப்பகங்கள் வெளியிடும் அரிய புத்தகங்களைத் தேடி வாங்க முயலும் வாசகனின் வேலை தேடல் மிகுந்ததாகும்.
இக்கண்காட்சியில் தோழர். லோகநாதனுடன் (புலம் – சென்னை) ஆறு நாட்கள் தங்கி பார்வையிடக் கூடிய ஒரு சூழல் வாய்த்தது. சென்னையின் நெரிசலைப் போலவே கண்காட்சியும் நெரிசலாகவே இருந்தது. எதிரே உள்ள கூட்ட அரங்கில் பெரும் புள்ளிகள் கலந்து கொள்ளும் அன்று வாசலிலிருந்து உள்ளே நடந்து செல்லவே மிகுந்த சிரமப்பட வேண்டியுள்ளது. அந்த வி.ஐ.பி.க்களைப் பார்க்க வரும் கூட்டம் புத்தகங்களை வாங்கும் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை. பிறகு ஏன் அவர்களை அழைத்து வெளியே திருவிழா நடத்துகிறார்கள் என்பது விளங்கவில்லை.

       கண்காட்சி அரங்கினுள் தேநீர் வாங்கிக் கொண்டு ஒதுங்கிய என்னை ஒரு கூட்டம் உள்ளேயிருந்து தள்ளிக் கொண்டு ஓடியது. நல்லவேளை மிதிபடாமல் தப்பித்தேன். அன்று சினிமா நடிகர் கமல்ஹாசனைப் பார்க்கத்தான் அந்தக் கூட்டம் ஓடியதை பிறகு அறிந்து கொள்ள முடிந்தது. இவர்கள் எல்லாம் வரும் அன்று உள்ளேவிட வெளியே கூட்டம் நிரம்பி வழிகிறது. புத்தகம் வாசிப்பு சம்மந்தப்பட்டது. வைகோ, கமல்ஹாசன் போன்ற பெரும்புள்ளிகளை அழைத்து திருவிழா நடத்துவது புத்தக விற்பனையையும் வாசிப்புப் பழக்கத்தையும் எள்ளளவும் உயர்த்தாது என்பதை பாபாஸி உணர வேண்டும்.

        சிறிய பதிப்பகங்கள் தனக்கென்று ஒரு ஸ்டால் பிடித்து தங்களது நூற்களை விற்பனை செய்வதென்பது மிகவும் சிரமமான காரியமாகும். ‘உன்னதம்’ கெளதம சித்தார்த்தன் தனது கடையில் ‘உன்னதம்’ இதழ் மற்றும் தனது வெளியீடுகளை கண்காட்சிப்படுத்தியிருந்தார். ‘உன்னதம்’ இதழுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகத் தெரிவித்தார்.

       மேலும் சில சிறிய பதிப்பகங்கள் பெரிய பதிப்பகங்களுக்கான  
முகவர்களாக தங்களை மாற்றிக் கொண்டிருந்தனர். ‘நவீன விருட்சம்’ கடை முழுவதும் ‘கிழக்கு’ பதிப்பக நூற்கள் நிரம்பியதாக இருந்தது. இதைப் போல பல உதாரணங்களைச் சொல்ல முடியும். ‘கிழக்கு’ பதிப்பகத்திற்கு நான்கு பெயர்களில் மொத்தம் 12 ஸ்டால்கள். இதைத் தவிர சிறிய பதிப்பகங்கள் பலவற்றின் பெயரில் ‘கிழக்கு’ பதிப்பக நூற்கள் குவிக்கப்பட்டிருந்தன. நல்ல நூற்கள் என்றால் பரவாயில்லை; ஒன்றிரண்டைத் தவிர பெரும்பாலும் குப்பைகளாகவே இருந்தன.
சிறிய பதிப்பகங்கள் பெரியவர்களுக்கு முகவர்களாக மாறாமல் ஒன்றிரண்டு பதிப்பகங்கள் இணைந்து ஒரு ஸ்டால் மூலம் தங்களது நூற்களைக் காட்சிப்படுத்தினால் நன்றாக இருக்கும். இவர்களை அனுமதிக்கும் பாபாசியும் சிறிய பதிப்பகங்களும் இது குறித்து யோசிக்க வேண்டும். ஒரே பதிப்பகத்தின் நூற்களை பணம் இருக்கின்ற ஒரு காரணத்திற்காக எல்லா இடங்களிலும் குவித்து வைப்பதை அனுமதிக்கக் கூடாது.
    
      சமையல், ஜோதிடம், ஆன்மீகம், எண் கணிதம், சுய முன்னேற்றம் போன்ற வழக்கமான விற்றுத் தீர்க்கின்ற நூற்கள் வரிசையில் பிரபாகரன் படம் போட்ட நிறைய புத்தகங்களை பல்வேறு பதிப்பகங்கள் வெளியிட்டிருந்தன. ஈழ மக்களின் இறுதிப் போர் துயரங்களை காசாக்கும் மனநிலையை மட்டும் இவை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
உயிர்மை, காலச்சுவடு போன்ற பெரும் பதிப்பகங்கள் குளிரூட்டப்பட்ட அரங்குககளில் டிசம்பர் 2009 முதலே நூற்றுக்கணக்கான நூற்களை வெளியிட்டு வந்தன. இதற்கு ஊடகங்கள் மூலம் செய்யப்பட்ட அபரிமிதமான விளம்பரங்களும் சாரு நிவேதிதா மூலம் கிடைத்த கூடுதல் விளம்பரமும் எளிய வாசகனின் கவனத்தை சிதறடித்ததை உணர முடிந்தது. ஆனால் இவர்களது குயுக்தியும் வியாபார தந்திரங்களும் அதிக நாட்கள் நீடிக்க வாய்ப்பு இல்லை. இவையிரண்டு போன்ற பெரிய பதிப்பகங்கள் நான்கு ஸ்டால்களில் இருபுற வழியுடன் கடைகளை அமோகமாக நடத்திக் கொண்டிருந்தனர்.

       சிறிய பதிப்பகங்களுக்கு ஸ்டால் கிடைப்பதே பெரும்பாடு. இதில் நூல் வெளியீட்டு விழாக்கள் வேறு நடத்த முடியுமா? புலம், பயணி போன்ற சிறிய வெளியீட்டு நிறுவனங்கள் தங்களது கண்காட்சிக் கடையிலேயே மாலை நேரங்களில் நூற்களை வெளியிட்டதையும் காண முடிந்தது.
அந்த வகையில் பயணி வெளியீடான “முறிந்த பனை :- இலங்கையில் தமிழர் பிரச்சனை – உள்ளிருந்து ஒரு ஆய்வு” நூலை தோழர் ராமாநுஜம் வெளியிட நான் பெற்றுக் கொண்டேன்.

        விளிம்பு நிலை ஆய்வுகளும் தமிழ்க் கதையாடல்களும்’ என்ற நூலை நான் வெளியிட ஹோமியோபதி மருத்துவர் தோழர் ராமசாமி பெற்றுக் கொண்டார். இது போன்ற நிகழ்வுகளை ஆங்காங்கே காணும்போது மகிழ்ச்சியாக இருந்தது.

       படிக்கின்ற புத்தகங்கள் குறித்து எனது வலைப்பூ (BLOG) பக்கத்தில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. அந்த ஆர்வத்தை எனது சோம்பேறித்தனம் முற்றிலுமாக தடுத்து விடுகிறது. அ. மார்க்ஸ் அடிக்கடி சொல்வார், “எழுதுவது மிகவும் எளிமையான ஒன்று” என. இனியாவது இப்பக்கங்களில் படித்த நூற்கள் பற்றியாவது சில பக்கங்களை எழுத முடிவு செய்துள்ளேன்.

        இக்கண்காட்சியில் வாங்கிய சில நூற்களின் பட்டியலை மட்டும் இங்கு தருகிறேன். இவை பற்றிய விமர்சனங்களைப் பின்னர் பார்க்கலாம்.

01. முறிந்த பனை :- இலங்கைத் தமிழர் பிரச்சனை – உள்ளிருந்து ஒரு ஆய்வு – பயணி
02. ஒகோனிக்கு எதிரான யுத்தம் – பயணி
03. ஈ.வெ.ராமசாமி என்கிற நான் (தொ) 1,2 – பாரதி
04. அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு – பாரதி
05. நேரு வழக்குகள் – பாரதி
06. பாலின பாகுபாடும் சமூக அடையாளங்களும் – பாரதி
07. என் பெயர் சிவப்பு – ஓரான்பாமுக் – காலச்சுவடு
08. ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் – காலச்சுவடு
09. இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு…… – கிழக்கு
10. தேசியம் பற்றிய மார்க்சியக் கோட்பாடு – விடியல்
11. ஆதி திராவிடன் இதழ்த் தொகுப்பு – சந்தியா
12. தியாகு – ஷோபாசக்தி – முரண் அரசியல் உரையாடல் – கொலைநிலம் – வடலி
13. முதலீட்டியமும் மானுட அழிவும் – புலம்
14. பேரினவாதத்தின் ராஜா – புலம்
15. தமிழகத்தில் பிறமொழியினர் – ம.பொ.சி. – புலம்
16. ஹோமரின் பள்ளியறை – ஒடிஸி – புலம்
17. சிறுபான்மையினர் தொடர்பான ஆணையங்கள் – முரண்
18. பயங்கரவாதம், இந்திய அரசு, காவல் துறை – முரண்
19. விளிம்பு நிலை ஆய்வுகளும் தமிழ்க் கதையாடல்களும் (தொ) – புலம்
20. தலித் அரசியல் – புலம்
21. ஈழத் தமிழ்ச் சமூக உருவாக்கமும் அரசியல் தீர்வும் – புலம்
22. இந்திய அரசின் கல்வி – உணவு உரிமைச் சட்டங்கள் – புலம்
23. அரசு – இறையாண்மை – ஆயுதப் போராட்டங்கள் – புலம்
24. லால்கர் – ஒரு மூன்றாவது பார்வை – புலம்

புதன், நவம்பர் 24, 2010

தீபங்குடி - சமணப்பள்ளி:- மு.சிவகுருநாதன்

 தீபங்குடி - சமணப்பள்ளி:-  மு.சிவகுருநாதன்
    









   தமிழக வரலாற்றில் வரலாற்று ஆசிரியர்களால்   ‘இருண்ட காலம்’ என்று வருணிக்கப்படும் காலப் பகுதி களப்பிரர்கள் (கி.பி.250 - கி.பி.600) ஆண்ட, தமிழகத்தில் சமண, பவுத்த சமயங்கள் அரச மதங்களாக கோலோச்சிய காலப்பகுதியாகும். பெரும்பாலான வரலாற்றாசிரியர்களால் புறக்கணிப்புக்கு உள்ளான இக்காலப் பகுதி பற்றிய ஆய்வை நிகழ்த்தி வரலாற்றின் இருண்ட பக்கங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர் மயிலை.சீனி. வேங்கடசாமி அவர்கள்.   அவர் சமணமும் தமிழும் என்ற தனது நூலில் தீபங்குடி பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். 


    “இதுவும் (தீபங்குடி) பழைய சமண ஊர்.   இங்கிருந்த சயங்கொண்டார் என்னும் சமணர் ‘தீபங்குடிப்பத்து’ என்னும் சிறந்த, இனிய, அழகிய பாடல்களைப் பாடியுள்ளார்.   இவரே ‘கலிங்கத்துப் பரணி’ என்னும் நூலை இயற்றியதாகக் கூறுவர்.   இத்தீபங்குடியில் இப்போதும் சமணர்கள் உள்ளனர். சமணக் கோயில் ஒன்றும் இருக்கிறது”.  

(எழுதப்பட்ட ஆண்டு 1954). 


    திருவாரூர் - கும்பகோணம் சாலையில் அரசவனங்காட்டிற்கு அருகில் தீபங்குடி என்னும் சிற்றூர் உள்ளது.   இது குடவாசல் வட்டத்தைச் சேர்ந்தது.

சமணத்தைப் பற்றிய சுருக்கமான வரலாறு:

    சமண மதத்திற்கு ஜைன மதம், ஆருகத மதம், நிகண்ட மதம், அநேகாந்தவாந்த மதம், ஸியாத்வாத மதம் என்னும் பல்வேறு பெயர்களும் உண்டு.  சமணம் என்பது துறவு நிலையைக் குறிக்கும்.  சமணக் கடவுளுக்கு அருகன் என்ற பெயரும் உண்டு.   தீர்த்தங்கரர்களுக்கு ஜீனர் (புலன்களையும் கர்மங்களையும் வென்றவர்) என்ற பட்டப் பெயர் வழங்கப்படுகிறது.   நிகண்டர் என்பது சமணக் கடவுளின் பற்றற்ற தன்மையைக் குறிக்கும்.  சமணம் மட்டுமே ஏகாந்தவாதத்தை மறுத்து அநேகாந்தவாதத்தை (ஸியாத்வாதம்) வலியுறுத்திய மதம்.


    பிறவிச் சக்கரம் எனப்படும் ஸ்வஸ்திக் சின்னம், அதன்மேல் மூன்று புள்ளிகள் (மும்மணி: நன்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம்) அதன்மேலே பிறை போன்ற கோடும் அக்கோட்டின் மேல் ஒற்றைப் புள்ளியும் (வினை நீங்கி மோட்சம் அடைதல்) சமணர்களின் தத்துவக்குறியாகும். 


    இஸ்லாமியர்களின் இறைத் தூதராக நபிகள் போற்றப்படுவது போல் சமணக் கொள்கைகளை பரப்பச் செய்தவர்கள் தீர்த்தங்கரர்கள் என்றழைக்கப்பட்டனர்.  முதலாவது தீர்த்தங்கரர் விருஷ­ப தேவர் எனப்படும் ஆதிபகவன் (தீபநாயக சுவாமி).   இவருடைய பள்ளிதான் தீபங்குடியில் உள்ளது.  இதுவரை 24 தீர்த்தங்கரர்கள் தோன்றி இருப்பதாக சமணர்கள் நம்புகின்றனர்.  24வது தீர்ததங்கரராக இருந்தவர் வர்த்தமான மகாவீரர் ஆவார்.

தீர்த்தங்கரர்களின் பெயர்ப் பட்டியல்:


    01. விரு­ஷப தேவர் (ஆதி பகவன்)
    02. அஜித நாதர்
    03. சம்பவ நாதர்
    04. அபி நந்தனார்
    05. சுமதி நாதர்
    06. பதும நாபர்
    07. சுபார்சவ நாதர்
    08. சந்திரப் பிரபர்
    09. புஷ்ப தந்தர் (சுவாதி நாதர்)
    10. சீதள நாதர் (சித்தி பட்டாரகர்)
    11. சீறியாம்ச நாதர்
    12. வாச புஜ்யர்
    13. விமல நாதர்
    14. அநந்த நாதர் (அநந்தஜித் பட்டாரகர்)
    15. தரும நாதர்
    16. சாந்தி நாதர்
    17. குந்து நாதர்
    18. அர நாதர்
    19. மல்லி நாதர்
    20. முனி சுவர்த்தர்
    21. நமி நாதர் (நமி பட்டாரகர்)
    22. நேமி நாதர் (அரிஷ்ட நேமி)
    23. பார்சுவ நாதர்
    24. வர்த்தமான மகாவீரர்.


        23-வது தீர்த்தங்கரரான பார்சுவ நாதர் கி.மு. 817 முதல் 717 வரையில் 100 ஆண்டுகள் வாழ்ந்தவர்.  அவர் வீடுபேறடைந்து 118 ஆண்டுகளுக்குப் பிறகு 24-வது தீர்த்தங்கரர் வர்த்தமான மகாவீரர் கி.மு. 599 முதல் கி.மு. 527 வரையில் 72 ஆண்டு காலம் வாழ்ந்தவர்.  பவுத்த மதத்தைத் தோற்றுவித்த புத்தரும் (கி.மு. 563 - கி.மு.483) ஆசிவக மதத்தைத் தோற்றுவித்த மற்கலியும் இவரது சம காலத்தவர்கள்.  மற்கலி மகாவீரருடன் சேர்ந்து இருந்து, பின்னர் கருத்து மாறுபட்டு ஆசிவக மதத்தை ஏற்படுத்தினார். இவர்கள் இருவரையும் விட வயதில் மூத்தவர் மகாவீரர்.  சமண மதமும் இரண்டு மதங்களையும் விட காலத்தால் முற்பட்டது.


    சமண சமயத் தீர்த்தங்கரர்கள் ஒவ்வொருவரும் காளை, யானை, குதிரை, வாலில்லா குரங்கு போன்ற இனச் சின்னங்களுடன் (totemic emblem ) தொடர்புப்படுத்தப்படுகிறார்கள்.  தொன்மைக்கால கருத்துகள், சமய அறநெறிச் சாரங்கள் ஆகியவற்றின் கலவையாக சமணம் இருப்பதாக தேவி பிரசாத் சட்டோபாத்யாயா கணிக்கிறார்.


    பவுத்தம் பல்வேறு பிரிவாக பிரிந்தது போல் சமணத்திலும் சுவேதாம்பரர், திகம்பரர், ஸ்தானகவாசிகள் போன்ற பிரிவுகள் ஏற்பட்டன.  சுவேதாம்பரர் வெண்ணிற ஆடைகளை அணிபவர்கள்.  திகம்பரர் (திக்+அம்பரம் = திகம்பரம்) என்றால் திசைகளை ஆடையாக உடுத்துபவர் என்று பொருள்.  இவர்கள் ஆடைகளை உடுத்தாத நிர்வாணிகள்; அமணர் என்றும் அழைக்கப்படுவர்.  ஸ்தானகவாசிகள் உருவ வழிபாட்டு எதிர்ப்பாளர்கள்.  இவர்கள் தமது பள்ளியில் சமண ஆகமங்களை வைத்து வணங்கக் கூடியவர்கள்.


    பெண்கள் தாழ்ந்த, இழிந்த பிறவிகள்; பாவம் செய்தவர்கள் பெண்ணாகப் பிறக்கிறார்கள் என்பது சமண மத நம்பிக்கை.  பெண்ணாகப் பிறந்தவர்கள் மோட்சம் (வீடுபேறு) அடைய முடியாது என்று நம்புகிறார்கள்.  ஆனால் சுவேதாம்பரர்கள் பெண்களும் துறவு பூண்டு வீடுபேறு அடையலாம் என்று கூறுகின்றார்.  திகம்பரர்கள் இதை மறுத்து பெண் அடுத்த பிறவியில் ஆணாகப் பிறந்தால்தான் மோட்சம் என்பதை வலியுறுத்துகின்றனர்.


    அகிம்சையை தீவிரமாக வலியுறுத்திய சமணம் துறவறத்தில் ஈடுபடும் துறவிகளுக்கு 28 வகையான ஒழுக்கங்களை தீவிரமாக கடைபிடிக்கவும் வலியுறுத்தியது.  இவையனைத்தும் தங்களைத் தாங்களே வருத்திக் கொள்ளக் கூடியவை ஆகும்.  முனிவர்களது ஒழுக்கங்கள் 28-ஐ மூல குணங்கள் என்பார்கள்.  அவை: மாவிரதங்கள் ஐந்து, சமிதி ஐந்து, ஐம்பொறி அடக்கம் ஐந்து, ஆவஸ்யகம் ஆறு, லோசம், திகம்பரம், நீராடாமை, பல் தேய்க்காமை, தரையிற் படுத்தல், நின்று உண்ணல், ஒரே வேளை உண்ணல் ஆகியவனவாகும்.  நமது ரத்த சுழற்சியை முடக்கி நரம்பு மண்டலத்தை செயலிழக்கச் செய்யும் யோகாசனங்கள் சமண முனிவர்களால் உருவாக்கப்பட்டவை.


    சைவக் கடவுள் சடைமுடி உடையவன்; எனவே சடையன் என்று கூட  அழைக்கப்பட்டான்.  முதல் தீர்த்தங்கரரான ஆதி நாதர் (ரிஷ­ப தீர்த்தங்கரர்) தவிர எஞ்சிய தீர்த்தங்கரர்கள் சடை முடியற்றவர்கள்.  இவர்களது உருவங்களும் அவ்வாறே காணப்படுகின்றன.  காரணம் சமணத் துறவொழுக்கத்தில் லோசம் என்ற தலைமயிர் வளர வளர கைகளால் பிய்த்துக் கொள்ளும் வழக்கம் உண்டு.  இந்திரன் வேண்டுகோளை ஏற்று ஆதிபகவன் தலை மயிரை பிய்த்துக் கொள்ளாமல் பாதியில் நிறுத்தி சடை முடியுடன் இருந்ததாக புராணக் கதை ஒன்றுண்டு.


    தீபங்குடியில் வாழ்ந்த (கி.பி. 11ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) பரணிக்கோர் செயங்கொண்டார் என பாராட்டப்பட்ட கலிங்கத்துப்பரணி பாடிய செயங்கொண்டார், பிற்காலச் சோழன் முதலாம் குலோத்துங்கனின் அரசவைப் புலவர்.  சோழனது கலிங்க வெற்றியையும், வீர தீரத்தையும் சைவப் புகழையும் பரணியாகப் பாடியவர்.  செயங்கொண்டார் சமணர் என்று மயிலை.சீனி.வேங்கடசாமி எழுதினாலும் பரணி பாடிய போது சமணராக இல்லாமல் சைவராக மாறியிருப்பதற்கான வாய்ப்புகள் மிகுதியாக உள்ளன.


    கலிங்கப் போரில் தோல்வி கண்ட கலிங்கப் படை வீரர்கள் புதரில் சிக்குண்டு பாதித் தலைமயிர் பிய்ந்து போன நிலையில் மீதியையும் தாங்களாகவே பிய்த்துக் கொண்டு நாங்கள் கலிங்க வீரர்கள் இல்லை; அமணர்கள் என்று பொய் சொல்லி சோழப் படைகளிடமிருந்து தப்புவதாக கலிங்கத்துப் பரணியில் பின்வரும் பாடல் வழி நமக்கு தெரிய வரும் போது அன்றும் இன்றும் போரின் விளைவுகள் நம் மனத்தில் நிழலாடுவதை தவிர்க்க முடியாது.
   
        “வரைக் கலிங்கர் தமைச்சேர மாசையயற்றி
        வன்தூறு பறித்தமயிர்க் குறையும்வாங்கி
        அரைக்கலிங்கம் உரிப்புண்ட கலிங்கரெல்லாம்
        அமணரெனப் பிழைத்தாரும் அநேகராங்கே!”
            - கலிங்கத்துப் பரணிப் பாடல்.


    உண்ணாநோன்பு இருந்து உயிர் துறத்தல் சமணப் பழக்கமாகும்.  இதற்கு வடக்கிருத்தல் (சல்லேகனை) என்று பெயர்.  தாங்க முடியாத மனவேதனை தரும் இடையூறு, தீராத நோய், மிகுந்த மூப்பு உடைய காலத்தில் சல்லேகனை (வடக்கிருத்தல்) செய்து உயிர்விடுதல் சமணர் மரபு.  தீர்த்தங்கரர்கள் வீடு பேறடைந்த வடதிசையை புண்ணிய திசையாக அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.  பத்திரபாகு, கவுந்தியடிகள் போன்ற சமயப் பெரியோர் மட்டுமல்லாது, கபிலர், சேரமான் பெருஞ்சேரலாதன், கோப்பெருஞ்சோழன் உடன் பிசிராந்தையார் மற்றும் பொத்தியார் போன்றோர் வடக்கிருந்து உயிர் துறந்த செய்திகள் சங்க இலக்கியத்தில் காணக் கிடைக்கின்றன.  சமணக் கொள்கை அக்காலத்தில் பெற்ற செல்வாக்கை இது எடுத்துக்காட்டுகிறது. அகிம்சை, ஊன் உண்ணாமை போன்ற சமணக் கொள்கைகளை சமணத்தை அழித்து இந்து மதம் ஏற்றுக் கொண்டது வியப்பான ஒன்றாகும்.   தீபாவளிப் பண்டிகை சமணர்களிடமிருந்து இந்துக்கள் பெற்ற பண்டிகையாகும்.


    தீபம் + ஆவலி = தீபாவலி ( தீபம் - விளக்கு, ஆவலி - வரிசை).  மகாவீரர் விடியற்காலையில் வீடுபேறடைந்ததால் விடியற்காலையில் நீராடிப் பின்னர் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாடுவது வழக்கமானது.  சமணம் வீழ்ந்த பிறகு இந்துக்களாக மாறிய சமணர்கள் தொடர்ந்து கொண்டாடிய  இப்பண்டிகைக்கு இந்துக்கள் பிற்காலத்தில் நரகாசுரன் கதையைப் புனைந்து கொண்டனர் என்பது தெளிவாகிறது.   சிவராத்திரியையும் சமணர் கொண்டாடுகின்றனர்.   திருக்கயிலாய மலையில் ஆதிபகவன் வீடு பேறடைந்தது மாசி சிவராத்திரி ஆகும். 


    பல்வேறு இறுக்கமான கொள்கைகளையுடைய சமணம் தமிழகத்தில் ஏழாம் நூற்றாண்டு வரை சிறப்படைய காரணம் உண்டு.  வைதீக இந்து மதம் நால் வருணக் கோட்பாட்டின் மூலம் உயர்வு - தாழ்வு கற்பித்தது.   மேலும் உழவுத்தொழிலை இழிவானதாக்கி அதில் ஈடுபடுவோரை ஒதுக்கி வைத்தது.  மாறாக, சமணம் பிறப்பால் உயர்வு - தாழ்வு பாராட்டவில்லை.  மீன் பிடித்தல், வேட்டையாடுதல் போன்ற உயிர்க் கொலை செய்யும் தொழில்களைத் தவிர்த்த பயிர்த் தொழில் போன்ற பிற தொழில்களைப் போற்றியது.
 
அதனால் பெருந்திரளான உழைக்கும் மக்கள் சமணத்தைப் பின்பற்றினர்.  சமணத் துறவிகள் ஊர் ஊராகச் சென்று தம் சமயத்தை போதிப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தனர்.   சமண முனிவர் கூட்டத்திற்கு சங்கம் என்று பெயர்.   இதுவும் தமிழகத்தில் சமணம் பரவக் காரணமாக அமைந்தது.


    பவுத்தமும், சமணமும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தது.  நோயாளிகளுக்கு இலவச மருத்துவம் செய்தனர்.  கொலை மற்றும் புலால் உண்ணுதலை அறவே தவிர்த்தனர்.   மக்களிடையே உயர்வு - தாழ்வு பாராட்டவில்லை.  ஆனாலும் இந்த இரண்டு மதங்களும் தங்களுக்குள்ளாக சண்டையிட்டு வந்தன.   இவை மட்டுமல்லாது ஆசீவகம், ஆருகதம் (சமணம்),  வைதீகம், பவுத்தம் ஆகிய நான்கும் ஒன்றையயான்று பகைத்து வந்தன.   இந்த சமயப் போர்கள் பண்டைக் காலம் தொட்டு நடைபெற்றன.   இந்த வட நாட்டு மதங்கள் குறிப்பாக சமணம், பவுத்தம் தென்னாடு வந்த பிறகும் இவற்றிற்கிடையேயான போர் நின்றபாடில்லை. 


    பண்டைக்காலத்தில் தமிழர்கள் ‘திராவிட’ (தமிழ்) மதத்தைப் பின்பற்றியிருக்கிறார்கள்.   முருகன், கொற்றவை, சிவன், திருமால் போன்ற தெய்வ வழிபாட்டை திராவிட (தமிழ்) மதமென  மயிலை.சீனி.வேங்கடசாமி வரையறுக்கிறார்.   வைதீகப் பிராமணர்களின் உயிர்ப் பலியிடுதலுக்கு நிகராக திராவிட சமயத்தாரும் முருகன், கொற்றவை போன்ற தெய்வங்களுக்கு ஆடு, மாடு, கோழிகளைப் பலியிட்டனர்.  அன்றைய வைதீக மதம் சைவம், வைணமாக பிளவுபடவும் இல்லை. 


    இந்த நிலையில் இங்கு வந்த பவுத்தமும் சமணமும் மக்களிடையே பேராதரவு பெற்ற நிலையில் களப்பிரர்கள் ஆட்சிக் காலத்தில் அரச மதமாகவும் இருந்தபடியால் சிறப்பான வளர்ச்சிப் பெற்றது.  களப்பிரர்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்த பிறகு பவுத்த, சமண சமயங்களும் வீழ்ச்சியுறத் தொடங்கின. 


    கி.பி. 7, 8, 9ஆம் நூற்றாண்டுகளில் வைதீக மதப் பிரிவான சைவமும் வைணவமும் தழைத்தோங்க பக்தி இலக்கிய காலகட்டம் பெரும்பங்கு வகித்தது.  இக்கால கட்டத்தில் நடைபெற்ற பல்வேறு வகையான சமயப் போர்களின் விளைவாக பவுத்தமும் சமணமும் தமிழகத்திலிருந்து முற்றிலும் மறையும் நிலையை அடைந்தது.


    சமணம் vs பவுத்தம்; இந்து vs  பவுத்தம்; இந்து vs சமணம் ஆகிய மும்முனைப் போராக அன்றைய சமயப் போர் இருந்தது.  வைதீக இந்து மதப் பிரிவான சைவமும் வைணவமும் இணைந்து சமண, பவுத்தத்தை எதிர்த்து நின்றது.  அவைதீக மதங்களான சமணமும் பவுத்தமும் கூட தங்களுக்குள்ளாக போரிடக்கூடிய சூழல் அக்கால கட்டத்தில் இருந்தது.   சமணம் வேதங்களை முற்றிலுமாக மறுத்தது.  பவுத்தம் அவ்வாறு இல்லை.


    கழுவேற்றுதல், கொலை செய்தல், கலகம் விளைவித்தல், உடைமைகளைக் கவர்தல், கொடுமைப்படுத்துதல், யானைகளை ஏற்றி மிதித்துக் கொல்லுதல் என்பதாக சமணத்திற்கெதிரான போரில் பல்வேறு கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன.  சமணர், சாக்கியர் தலையை அறுப்பது பற்றி தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பாடல் பேசுகிறது.


    சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்மந்தர் மதுரையில் எண்ணாயிரம் (8000) சமணர்களைக் கழுவேற்றிய செய்தியை பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலிய நூல்கள் மூலம் அறிய முடிகிறது.  மதுரை மீனாட்சியம்மன் கோயில் பொற்றாமரைக் குளத்துக்கு அருகே ஆயிரங்கால் மண்டபம்  உள்ளது.  அதில் சமணர்களைக் கழுவேற்றும் காட்சிகளை ஓவியமாகத் தீட்டி வைத்திருப்பதை இன்றும் நாம் காணலாம்.இப்போதும் கூட மதுரையில் நடைபெறும் திருவிழாவில் ஐந்து நாட்கள் கழுவேற்றும் உற்சவம் நடப்பதைக் காணலாம்.






    காஞ்சிபுரத்து அருகில் உள்ள திருவோத்தூரில் சைவ - சமண கலகம் நடைபெற்றது.  அங்குள்ள சிவன் கோயிலில் சமணர் கழுவேற்றும் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  சோழ நாட்டில் சீர்காழி பழையாறையில் நடைபெற்ற சைவ - சமணப் போரில் யானைகளைக் கொண்டு சமணர்களை மிதித்துக் கொன்றதாக வரலாறு.


    திருவாரூரில் நடந்த சைவ - சமண கலகம் பற்றி பெரியபுராணப் பாடல் வழியே அறிய முடிகிறது.  63 நாயன்மார்களில் ஒருவரான தண்டியடிகள் காலத்தில் திருவாரூரில் சமணர் செல்வாக்கு மிகுந்திருந்தது.  கமலாலயம் எனப்படும் திருக்குளம் மிகச் சிறியதாகவும் அதனைச் சுற்றி நான்கு பக்கமும் சமணர்களின் சொத்துக்கள், பள்ளிகள், பாழிகள், மடங்கள் நிறைந்திருந்தன.  குளத்தைப் பெரிதாக்க தண்டியடிகள் விரும்புகிறார்.  வழக்கம் போலவே சிவபெருமான் அரசன் கனவில் வந்து தனது விருப்பத்தை வெளிப்படுத்த சமணர்களை ஓடத் துரத்திய பிறகு சமணப் பள்ளிகள், மடங்கள், பாழிகள் ஆகியவற்றை இடித்து குளத்தை விரிவுப்படுத்திய செய்தியை கீழ்க்கண்ட பெரியபுராணப் பாடல் நமக்குத் தெளிவுப்படுத்துகிறது.


    “அன்ன வண்ணம் ஆரூரில் அமணர் கலக்கம் கண்டவர்தம்   
    சொன்ன வண்ண மேஅவரை ஓடத் தொடர்ந்து துரந்தற்பின்
    பன்னும் பாழிப் பள்ளிகளும் பறித்துக் குளஞ்சூழ் கரைபடுத்து
    மன்னவனும் மனமகிழ்ந்து வந்து தொண்டர் அடிபடிந்தான்”.


    சைவ - வைணவர்கள் பல்வேறு புனை கதைகளை உருவாக்கி அவற்றை சமணர்கள் மீது போட்டு பழி சுமத்தினார்கள்.  “போம்பழியயல்லாம் அமணர் தலையோடே”, என்ற பழமொழி இதற்குத் தகுந்த உதாரணமாகும்.


    மதுரை ஒத்தக்கடையில் அமைந்துள்ளது யானைமலை.   இம்மலை பார்ப்பதற்கு யானை படுத்திருப்பது போல் தோன்றுவதால் அப்பெயர் பெற்றிருக்கலாம்.   இங்குள்ள குகைகள் சமணர் வாழ்ந்த இடமாகும்.  2000 ஆண்டுகளுக்கு முன்னே எழுதப்பட்ட பிராமி எழுத்துக்கள் இங்கு காணப்படுகின்றன.  இவைகள் போதிய பராமரிப்பு இன்றி சிதைந்து காணப்படுகிறது.


    இங்குள்ள சமணர்கள் அழித்தும், விரட்டியும் வைணவர்கள் நரசிங்கப்பெருமாள் கோயில் அமைத்தனர்.  அத்துடன் சமணர்கள் மதுரையை அழிக்க மந்திரத்தால் யானையை உண்டாக்கி அனுப்பியதாகவும் அந்த யானையை நரசிங்கப்பெருமாள் (விஷ்ணு) அம்பெய்து கொன்றவுடன் அது கல்லாக சமைந்து போனது என்று புராணக் கதை செய்தனர்.


    இன்று இந்த யானை மலையை, தஞ்சை மாவட்ட பெருந்தச்சர் அவையத்தின் ஸ்தபதி அ.அரசு என்பவரின் குடவரைக் கோயில் மற்றும் சிற்ப நகரம் அமைக்கும் செயல் திட்டத்தை ஆராய டிசம்பர் 2009-ல் ஒரு அரசாணையை வெளியிட்டது.  அப்பகுதி மக்கள் திரண்டு போராடியதையடுத்து பிப்ரவரி 2010-ல் அரசு வெளியிட்ட அரசாணைப்படி சிற்ப நகர முடிவை கைவிடுவதாக அறிவித்தது.


    இந்த யானை மலையில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிராமி எழுத்துக்கள் காணப்படுவதோடு வடமொழி, கிரந்த மற்றும் தமிழ் வட்டெழுத்துக்களும் காணப்படுகின்றன.  சமணர்கள் வாழ்ந்த  குகைகள், படுக்கைகள், ஓவியங்கள், சிற்பங்கள் என பலவற்றை இங்கு காண முடியும்.  மகாவீரர், பார்சுவநாதர் போன்றோருடைய புடைப்புச் சிற்பங்கள் சிதைக்கப்பட்டுள்ளன.  இங்கு நரசிங்கப் பெருமாள் கோயில் கி.பி.77-ல் உருவாக்கப்பட்டது.   இன்று தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் யானை மலை சரியான பராமரிப்பு இன்றி கல்குவாரிகள் மூலம் உடைப்பு வேலைகளும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் இருந்து வருகிறது.  எஞ்சியிருக்கும்  யானை மலையின் மிச்சமும் பெருந்தச்சர் அவையத்தின் கோரிக்கை மூலம் தகர்ந்து போகவிருந்தது, இப்பொழுது மக்களின் எதிர்ப்பால் முறியடிக்கப்பட்டுள்ளது.  மீண்டும் வேறு வடிவில் இத்தகைய கோரிக்கைகள் வர வாய்ப்பு உள்ளது.    சிற்ப நகரத்திற்கு செலவு ரூ. 1500 கோடி.  அதன் மூலம் கிடைக்கும் கிரானைட் கற்கள் மூலம் ரூ.5000 கோடி வரை வருமான கிடைக்கும் என்பதே இதற்குக் காரணமாகும்.  அன்று சமணர்களுக்கு ஏற்பட்ட நிலை தங்களுக்கு எற்பட்டு விடுமோ என்ற அச்சம் அப்பகுதி மக்களுக்கு இன்றும் இருக்கிறது.


    சோழர் தலைநகரான உறையூர் (திருச்சி) மணற்புயலால்  அழிந்து போக சமணர்களின் மந்திரசக்தியால் அழிந்ததாக கதை சொல்லப்பட்டது.    சோழன் மீது கோபங்கொண்ட சிவன் மண்மழை பெய்வித்ததாக பிற்காலத்தில் மற்றொரு கதையும் புனையப்பட்டது.  உறையூர் மணற் புயலால் அழிந்தது உண்மை.  அப்பழி சமணர் மீது வைப்பதன் காரணத்தை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.


    இம்மாதிரியான சமயப் போர்களின் விளைவாக சமணர்கள் உயிருக்கு பயந்து சைவ - வைணவ சமயத்தில் இணைந்தனர்.  கூடவே தமது சமயக் கொள்கைகள், பழக்கவழக்கங்களை இந்து சமயத்தில் புகுத்தினர்.  ஊன் உண்ணாமை, உண்ணா நோன்பு போன்ற பழக்கங்கள் இவ்வாறாகவே வைதீக இந்து மதத்தை வந்தடைந்தன.


    நீலகேசி, சீவகசிந்தாமணி, திருக்கலம்பகம், திருக்குறள் போன்றவை சமண சமய நூல்களாகும்.  திருக்குறளில் வரும் ஆதி பகவன், எண்குணத்தான், மலர்மிசை ஏகினான் போன்ற சொற்கள் சமண மதம் சார்ந்தவை.   முதலாவது தீர்த்தங்கரர் விரு­பதேவரின் மற்றொரு பெயரே ஆதி பகவன் என்பதாகும். அன்று பாடலிபுரம் என்றழைக்கப்பட்ட திருப்பாதிரிப்புலியூர்  சமண மடத்தின் தலைவராய் இருந்த ஆச்சார்ய சிரீ குந்த குந்தர் எழுதிய நூல் திருக்குறள் என சமண சித்தாந்தம் சொல்கிறது.  தமிழக ஓவியர் வேணுகோபால் சர்மா என்பவர் வரைந்த ஒரு ஓவியத்தைத் திருத்தங்கள் செய்து திருவள்ளுவர் உருவம் அரசால்அறிவிக்கப்பட்டது நமக்கெல்லாம் தெரியும்தானே!    மணக்குடவர், காலிங்கர் போன்ற உரையாசிரியர்கள் தவிர பரிமேலழகர் போன்ற உரையாசிரியர்கள் அனைவரும் திருக்குறளுக்கு சைவ உரையே எழுதி வந்துள்ளனர். 


    இனி தீபங்குடி சமணப்பள்ளிக்கு வருவோம்.  பல்வேறு வகையான சமயப் போர்களுக்கிடையே இப்பள்ளி நிலைத்திருப்பது வியப்பாக உள்ளது.  நாம் அதற்குப் பல்வேறு காரணங்களைச் சொல்ல முடியும்.
       
    இன்று இக்கோயில் சமணப் பள்ளி என்று அழைக்கப்படுவதில்லை.  தீபநாயகசுவாமி திருக்கோயில் என்றே சொல்லப்படுகிறது.  இக்கோயில் இந்து சமய அறநிலைத் துறையின் கட்டுப்பாட்டில்தான் தற்போது உள்ளது.  எண்கள் கோயில் செயல் அலுவலரின் நிர்வாகத்தின் கீழ் இக்கோயில் உள்ளது.


        இக்கோயில் பார்ப்பதற்கு சைவ, வைணவக் கோயில்களைப் போலவே உள்ளது.  இங்கு நடைபெறும் அர்ச்சனை, அபிஷேகம், பூசை போன்றவை சைவ, வைணவக் கோயில்களில் உள்ளதைப் போலவே உள்ளது.  சமஸ்கிருதத்தில்தான் அர்ச்சனை செய்யப்படுகிறது.  இங்கு அர்ச்சகராகப் பணியாற்றும் திரு.பார்சுவநாதன் அபிஷேக முறையில் மாற்றம் இருப்பதாகத் தெரிவித்தார்.   சைவ - வைணவக் கோயில்களைப் போல எண்ணெய் அபிஷேகம் செய்யப்படுவதில்லை என்றும் தண்ணீர், பால், சந்தனம் என்ற வரிசையில் அபிஷேகம் இருக்கும் என்றும் தெரிவித்தார்.  அட்சய திருதியை, ஆடிவெள்ளி, நவராத்திரி, சிவராத்திரி ஆகிய பண்டிகைகள் சிறப்பாகக் கொண்டாடப்படுவதாகவும் சொன்னார்.


    இவர்கள் திகம்பரச் சமணர் (ஆடையில்லாதவர்) ஆதலால்  அருகக் கடவுள் உருவங்கள் ஆடையின்றியும் சாஸ்தா, இயக்கி போன்ற பரிவாரத் தெய்வ உருவங்கள் ஆடையுடனும் அமைக்கப்பட்டுள்ளன.  சமணக் கடவுளரின் உருவங்கள் அமர்ந்த அல்லது நின்ற வண்ணமே அமைக்கப்படுகின்றன.   பவுத்த, வைணவக் கோயில்களில் உள்ளதைப் போன்ற படுத்த வண்ணம் அமைந்த பள்ளிகொண்ட காட்சிகளை சிற்பமாக அமைக்கும் வழக்கம் சமணத்தில் இல்லை. 


    தீபங்குடி கோயிலுக்கு முன்னால் ஒரு மடம் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.  சமண முனிவர்கள் தங்கிய மடமாகவும் அல்லது அன்னசத்திரமாகவும் இருந்திருக்க வேண்டும்.



    மார்வாடிகள் என்று அழைக்கப்டும் வடநாட்டுச் சமணர்கள் வியாபாரிகளாக செல்வச் செழிப்புடன் இருக்கின்றனர்.  ஆனால் தமிழ்நாட்டிலுள்ள சமணர்கள் மிகுந்த ஏழைகளாகவே உள்ளனர்.  இங்குள்ள 10 குடும்பங்களும் மிகச் சாதாரணமாக உள்ளன.  இவர்கள் பிராமணர்களை விட உயர்ந்தவர்கள் என்று தங்களை கூறிக் கொள்வதோடு அவர்களைப் போலவே பூணூலும் அணிகிறார்கள்.   சந்தனம், குங்குமம் இட்டுக் கொள்கிறார்கள்.  புலால் உண்ணுவதில்லை.  இரவில் உண்ணாமல் சூரியன் மறைவதற்கு முன்பாக உண்ணுகின்றனர். 


    சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் இவர்களுக்கு பிற்பட்ட வகுப்பாருக்கு உள்ள சலுகைகள் கிடைப்பதில்லை.  முற்பட்ட வகுப்பு என்றே சாதிச் சான்று தமிழக அரசால் இவர்களுக்கு வழங்கப்படுகிறது.  எனவே, கல்வி, வேலை வாய்ப்புகளில் இவர்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.  கோயில் அர்ச்சகருக்கு வெகு சொற்ப ஊதியமே கிடைக்கிறது.  ஆனால் இக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் உள்ளன.   அவற்றின் மூலம் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது.


    பழமையான இக்கோயிலில் கல்வெட்டுக்கள் எதுவும் இல்லை.   இப்போது இருக்கும் கல்வெட்டுக்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு 27.07.1990ல் நடைபெற்ற குடமுழுக்கு விழாவின்போது வைக்கப்பட்டதுதான்.  பழங்கால கல்வெட்டுக்கள் எதையும் உள்ளே காணமுடிவதில்லை.   காரணம் குடமுழுக்கு, திருப்பணி என்ற பெயர்களில் புடைப்புச் சிற்பங்கள், ஓவியங்கள் ஆகியவற்றின் மீது வண்ணம் பூசுவதும், கல்வெட்டுக்களை அதன் தொன்மையைப் பற்றி ஏதுமறியாமல் உடைத்தெறிவதையும் வழக்கமாக உள்ள நாட்டில் ஆதாரங்களை தேடுவது கடினமான பணியாகும்.  பழந்தமிழ் ஓலைச் சுவடிகளின் பெருமை புரியாமல் வெந்நீர் போடுவதற்குப் பயன்படுத்தியதைப் போலத்தான் இதுவும்.


    கோயிலின் அமைப்பு, நிலை ஆகியவற்றைப் பார்க்கும்போது அதன் தொன்மை நமக்குப் புலப்படுகிறது.  இதனுடைய காலத்தைச் சரியாக கணிக்க முடியாவிட்டாலும் கோயிலின் தொன்மை, அங்கு இன்னும் வாழ்கின்ற சமணர்கள் ஆகியவற்றைக் கொண்டு நோக்கும்போது களப்பிரர் காலத்தைச் (கி.பி.250-கி.பி.600) சேர்ந்ததாக இருக்கலாம் என்பதை அவதானிக்க முடிகிறது.  


    இப்பள்ளி சமயப் போர்களில் அழிந்து போகாமல் எஞ்சியிருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.  வைதீக மதங்களான சைவம் மற்றும் வைணவத்துடன் ஒத்துப்போகும் மனநிலை காலப்போக்கில் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு.  சமணராக இருந்து சைவராக மாறிப் போன ஜெயங்கொண்டார் போன்ற இவ்வூர் பெரியவர்கள் களப்பிரர்களுக்குப் பின்னால் வந்த அரசர்களிடமும் சைவ, வைணவ மதங்களிடமும் ஓர் இணக்கமான உறவைப் பேணியிருக்கவும் கூடும் என்று நம்ப வரலாற்றில் இடமிருக்கிறது.


துணை நின்ற நூல்கள்:

    01. சமணமும் தமிழும்             -     பூம்புகார் பதிப்பகம்
    02. பெளத்தமும் தமிழும்         -    நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு
    03. களப்பிரர் காலத் தமிழகம் -    (அ.மார்க்ஸ் அவர்களின் நீண்ட பின்னுரையுடன்) விடியல் பதிப்பகம்
      (மேற்கண்ட மூன்று நூல்களும் மயிலை.சீனி. வேங்கடசாமி அவர்களால் எழுதப்பட்டவை)
    04. இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம்     -    தேவிபிரசாத் சட்டோபாத்யாயா
                            தமிழில்: வெ. கிருஷ்ணமூர்த்தி   
    05. வால்காவிலிருந்து கங்கை வரை    -    ராகுல சாங்கிருத்தியாயன்
                            தமிழில்: கண. முத்தையா
    06. பகவான் புத்தர்            -    தர்மானந்த கோஸம்பி           
                            தமிழில்: கா.ஸ்ரீ.ஸ்ரீ.
    07. மாயையும் எதார்த்தமும்        -    டி.டி.கோசாம்பி
                            தமிழில்: வி.என்.ராகவன்
    08. சொல்வதால் வாழ்கிறேன்        -    அ. மார்க்ஸ்