வெள்ளி, டிசம்பர் 10, 2010

மனுநீதியை நிலை நாட்டிய மனுநீதிச் சோழனும் மு. கருணாநிதியும் இணையும் புள்ளி - மு. சிவகுருநாதன்

மனுநீதியை நிலை நாட்டிய மனுநீதிச் சோழனும்
மு. கருணாநிதியும் இணையும் புள்ளி
                                                               - மு. சிவகுருநாதன்

   
    தமிழக முதல்வர். மு. கருணாநிதியின் திக் விஜயங்களின் போது ‘ஆரூர் கண்ட மனுநீதிச் சோழனே ! என்ற விளம்பரப் பதாகைகள் காணக் கிடைக்கும்.  அவரது கட்சி உடன்பிறப்புக்களின் திராவிட இயக்கம் மற்றும் கருத்தியல் தெளிவில்லாத சிறுபிள்ளைத்தனமான செயல்பாடு என்றெண்ணி அதைத் தாண்டிப் போய்விடுவது வழக்கம்.  பெரியாரின் தொண்டராக அறியப்பட்ட மு. கருணாநிதி ‘பராசக்தி’ போன்ற பகுத்தறிவு கருத்துப் பிரச்சாரப் படங்களுக்கு வசனங்களை  எழுதியவர்.  அவர் அதிலெல்லாம் இம்மாதிரியான புராணக் (தொன்மம்) கதைகளை கடுமையாக ஏளனம் செய்வதுண்டு.  இப்பதாகைகள் எல்லாம் மு. கருணாநிதியின் கவனத்தில் படாமல் போயிருக்கக் கூடும் என்றெண்ணி நாம் அதைப் பெரிதுபடுத்துவதில்லை.  நெற்றியில் குங்குமத் திலகமிடுதல், தீ மிதித்தல் (ஆதிசங்கர் என்ற தி.மு.க எம்.பி. கண்டிக்கப்பட்டார்) போன்றவற்றை காட்டுமிராண்டுத்தனம் என்றும் ராமன் உள்ளிட்ட கடவுளர்களை அவ்வப்போது கிண்டல் செய்து ராமகோபாலன்களால் அடிக்கடி தாக்குதலுக்கு ஆளாகிறவராயிற்றே !  என்று நமக்கு அனுதாபம் கூட வரக்கூடும். 
   
    உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு, கோவையில் கூட்டப்பட்ட கட்சி மாநாடொன்றில் “நான் பசுவுக்காக மகனைப் பலியிட்ட மனுநீதிச் சோழன் பிறந்த மண்ணில் பிறந்தவன்” என்று பெருமைப்பட்டுக் கொண்டார்.  செம்மொழி மாநாட்டில் களப்பிரர் காலத்தில் தமிழ் அழிந்தது என்ற அரிய கண்டு பிடிப்பையும் நிகழ்த்தினார்.  இதன் காரணமாக வைதீகத்துடன் அவர் கொண்டுள்ள உறவு வெட்டவெளிச்சமானது.  மனுநீதிச்சோழன், இராசராசசோழன் என்றெல்லாம் அழைக்கப்படுவதை அவர் மிகவும் ரசிப்பதாகவே தோன்றுகிறது.
   
    மனுநீதி என்று சொல்லப்படுகின்ற மனு தர்மத்தைநிலைநாட்டுவதற்காக புனையப்பட்ட கதைதான்.  மனுநீதிச் சோழன் கதை என்பதை மு. கருணாநிதி அறியாதவரல்ல.  சிலப்பதிகாரத்தில் கண்ணகி மதுரையை எரிக்கும்போது, யாரையெல்லாம் காக்க வேண்டும் என்பதாக சொல்லப்பட்டதோ, அவர்களை காப்பதற்காக, இவ்வாறான புனைவுகள் உற்பத்தி செய்யப்பட்டது.  புனைவுகளின் சமகால முக்கியத்துவத்திற்காக ‘சோழன்’ என்ற பெயர் கூடுதல் கவனிப்பு பெறுவதாகவும், மக்கள் மனத்தில் தீவிரமாக இருத்துவதற்கும் உதவிகரமாகவும் அமையுமென்பதும் திட்டமிட்ட சூழ்ச்சிக்காரர்களின் செயலாகவும் இச்சொல் நிலைத்து விட்டது.
   
    வேதங்கள் மூலம் நால்வருணத்தை நிலைநிறுத்தி தங்களுடைய மேலாண்மையை உறுதி செய்து கொண்ட பிராமணர்கள் சட்டம் இயற்றக் கூடிய நிலையில் இருந்தததால் பகுத்தறிவு, பிராமண எதிர்ப்பு ஆகியன தடை செய்யப்பட்டு மனு பின்வருமாறு கட்டளையிட்டான்.
  
     “வேதங்கள் சுருதிகள் மற்றும் சுமிருதிகள் (வேத சாஸ்திரங்கள்) என்றும் அழைக்கப்படுகின்றன.  சுருதிகளும், சுமிருதிகளும் எல்லா வகையிலும் மீமாம்ச (விவாதம்) எல்லைக்கு அப்பாற்பட்டவை.  துவிஜர்கள் (உயர் சாதியைச் சேர்ந்த இருபிறப்பாளர்களாகிய பார்ப்பனன், சத்திரியன், வைசியன்) யாராவது சுருதிக்கோ அல்லது சுமிருதிக்கோ அடி பணிய மறுத்தால் சட்டப்படி அவர்கள் சமூகத்தை விட்டு விரட்டி அடிக்கப்படுவார்கள்.  ஏனெனில் வேதங்களை நிந்திப்பவர்கள் வேத விரோதிகளாகக் கருதப்பட்டுத் தண்டிக்கப்படுவார்கள்”.(பக் 65).  
(இந்திய வரலாற்றில் பகவத் கீதை - பிரேம்நாத் பசாஸ்).
   
    ‘சூத்திரர்கள் யார்?’  என்ற ஆய்வு நூலை எழுதிய அண்ணல் அம்பேத்கர் மனுஸ்மிருதி, ஆபஸ் தம்ப தர்ம சூத்திரம், வாசிட்டதர்ம சூத்திரம், விஷ்ணு ஸ்மிருதி, கௌதம தர்ம சூத்திரம், பிரஹஸ்பதி ஸ்மிருதி, நாரத ஸ்மிருதி போன்ற பிராமண சட்ட முறைகள் சூத்திரர்களுக்கு எதிரான சொன்னவற்றை கீழ்க்கண்டவாறு தொகுத்தளிக்கிறார்.

1.    சூத்திரர்கள் சமுதாய வரிசையில் கடைசி வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
2.    சூத்திரர்கள் தூய்மையற்றவர்கள்.  அதனால் புனிதச் செயல்களை அவர்கள் பார்க்கும்படியோ, கேட்கும்படியோ செய்யக் கூடாது.
3.    மற்ற வகுப்பினருக்கு மதிப்பு கொடுப்பது போல் சூத்திரர்களுக்கு மதிப்பு கொடுக்கக் கூடாது.
4.    சூத்திரனுடைய உயிருக்கு எவ்வித மதிப்பும் கிடையாது.  அதனால் அவனுக்கு எந்தவித நஷ்டஈடும் கொடுக்காமல் யார் வேண்டுமானாலும் அவனைக் கொன்றுவிடலாம்.  அப்படி ஏதாவது நஷ்ட ஈடு கொடுப்பதாயின் பிராமணர், சத்திரியர் மற்றும் வைசியருக்காகக் கொடுப்பத போலல்லாது மிகச் சிறிதளவே ஒரு தொகையைக் கொடுத்தால் போதும்.
5.    சூத்திரன் அறிவைப் பெறக் கூடாது.  அவனுக்குக் கல்வி போதிப்பது ஒரு பாவம்; ஒரு குற்றச் செயலுமாகும்.
6.    ஒரு சூத்திரன் சொத்துக்களைச் சேர்க்கக் கூடாது.  ஒரு பிராமணன் அவனது சொத்துக்களை தன் விருப்பப்டி எடுத்துக் கொள்ளலாம்.
7.    சூத்திரன் அரசாங்க பதவியில் இருக்கக் கூடாது.
8.    சூத்திரனது கடமைகளும், மீட்சி பெறுவதும் மேல் சாதிக்காரர்களுக்குப் பணியிடை செய்வதில் தானிருக்கிறது.
9.    மேல் சாதிக்காரர்கள் சூத்திரர்களுடன் கலப்பு மணம் செய்து கொள்ளக் கூடாது.  மேல் சாதிக்காரர்கள் சூத்திரப் பெண்களை வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்ளலாம்.  ஆனால் ஒரு சூத்திரன் ஒரு உயர் சாதிப் பெண்ணைத் தொட்டு விட்டாலோ, அவன் கடுமையான தண்டணைக்கு உள்ளாக வேண்டும்.
10.    சூத்திரன் கொத்தடிமையாகவே பிறந்தவன்;  எப்போதும் கொத்தடிமையாகவே வைக்கப்பட வேண்டியவன் (பக். 80-81).
                        ( - அம்பேத்கர் - சூத்திரர்கள் யார்?  தொகுதி - 13 )

   
    தனக்கு ஏதேனும் பிரச்சினை வந்தால் மட்டும் சூத்திரன் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் மு. கருணாநிதி இதற்கு என்ன சொல்கிறார்?  சூத்திரன் எப்படி மனுநீதிச் சோழனாவது?
   
    மநு 8 ஆவது அத்தியாயம் 380 ஆவது சுலோகத்தில் “பிராமணன் எப்பேர்பட்ட பாவமான செய்கை செய்தாலும், அவனைக் கொல்லக் கூடாது, காயமும் செய்யக் கூடாது; வேண்டுமானால் அவன் பொருளை அவனுக்குக் கொடுத்து வேற்றூருக்கு அனுப்பி விடலாம்”  காயமும் செய்யக்கூடாது; வேண்டுமானால் அவன் பொருளை அவனுக்குக் கொடுத்து வேற்றூருக்கு அனுப்பி விடலாம்” என்றும் 381 ஆவது சுலோகத்தில்’ எவ்வளவு பெரிய குற்றமானாலும், பிராமணனைக் கொல்ல வேண்டுமென்று அரசன் மனதிலும் நினைக்கக் கூடாது” என்றும், 379 ஆவது சுலோகத்தில், பிராமணனுடைய தலையை மொட்டையடிப்பது கொலை தண்டனையாகும்” என்றும்; ஸ்திரீ விஷயங்களில் சூத்திரன் காவலில்லாத பிராமண ஸ்திரியைப் புணர்ந்தால் ஆண்குறியை அறுத்து, அவன் தேக முழுவதையும் துண்டு துண்டாக வெட்டி அவனுடைய எல்லாப் பொருள்களையும் பிடுங்கிக் கொள்ள வேண்டும் என்றும்; ஒரு பிராமணன் கற்புடைய ஒரு ஸ்திரீயைத் துராக்கரதமாகப் புணர்ந்தாலுங்கூட ஆயிரம் பணத்திற்குள் அபராதம் விதிக்கவேண்டும்” (பக். 3821).  என்று மறு சாஸ்திரம் சொல்வதைப் பட்டியலிடுகிறார்.  தந்தை பெரியார் (குடிஅரசு - கட்டுரை 13.12.1925) 
வே. ஆனைமுத்து தொகுத்த பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் தொகுதி :  4.
   
    மனுதர்மம் பற்றிய அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்ற கருத்துக்களெல்லாம் இவ்வாறிருக்க திராவிட இயக்க வாரிசாக தன்னைத்தானே அறிவித்துக் கொண்டுள்ள மு. கருணாநிதி திராவிடக் கருத்தியலுக்கு முற்றிலும் நேரெதிரான திசையில் பயணப்படுகிறார் என்பது தெளிவாகிறது.
   
     2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக ஆ. ராசா பதவி விலக நேரிட்ட போது, மு. கருணாநிதி, “மனு தர்மத்திற்கு மறுபிறப்பு இல்லை’ என்றார்.  அவரது புதல்வி கனிமொழி தலைமையிலான கி. விரமணி, சுப. வீரபாண்டியன், ஜெகத் கஸ்பர் உள்ளிட்ட துதிபாடிக் கும்பல் மேற்கண்ட கருத்தையும் மனுநீதிச் சோழன் கதையையும் வழி மொழியக்கூடும்.  அரசியலில் நிரந்தரப் பகைவர்களோ, நண்பர்களோ இல்லை என்பதைப் போல நிரந்தரக் கொள்கையும் கிடையாது என்பது தற்கால அரசியலின் இயங்கியல் விதியாகிவிட்டது.
   
     ஜெ. ஜெயலலிதாவுக்குப் போட்டியாக பா.ஜ.க. வுடன் உறவு கொண்டு அக்கட்சிக்கு தமிழகத்தில் அடைக்கலம் அளித்து பெரியாரியக் கொள்கைகளை குழி தோண்டிப் புதைப்பதில் மு. கருணாநிதிக்கு ஈடு இணையில்லை.  தேவைப்படும்போது வெற்று வாய்ச்சவடால் மூலம் பகுத்தறிவு பேசுவதும் தங்கள் பதவிக்கு ஆபத்து வரும் காலத்தில் வைதீகத்துடன் கூடிக் களிப்பதும் இவர்களது செயல்பாடாக இருக்கிறது.
   
     இவ்வாண்டு அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் சமச்சீர் கல்வி பாடநூற்கள் உள்பட தற்போதைய பாடநூற்களும் வரலாற்றுப் புரட்டுக்களையும் புனைவுகளையும் உயர்த்திப் பிடிப்பவையாக இருக்கின்றன.  இருக்கின்ற பாடநூற்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.  சென்ற ஆண்டு ஓய்வுபெற்ற ஆசிரியரொருவர் எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலில் இருக்கும் நூற்றுக்கணக்கான பிழைகளை பக்கவாரியாக பட்டியலிட்டு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் அளித்தார்.  இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

     பா.ஜ.க ஆட்சியில் நமது பாடத்திட்டம் காவிமயமானதை எதிர்த்தோம்.  ஆனால் திராவிட இயக்க ஆட்சியிலும் பாடநூற்கள் காவிமயமாக இருப்பதை எங்கு போய் சொல்வது?  ஒரு சிறிய உதாரணம் மட்டும் இங்கே தருகிறேன்.  ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியலில் (பாடம் 6)  ‘சுங்கர்கள் - குஷாணர்கள் - சாதவாகனங்கள் - தமிழ்நாட்டில் சங்க காலம்’ என்றொரு பாடம் உள்ளது.
   
     அப்பாடம் பவுத்திரத்தின் ஆட்சியை வீழ்த்தி (மௌரியப் பேரரசு) வேத சமயத்தின் மேன்மையை மீண்டும் நிலைநாட்டிய புஷ்ய மித்ர சுங்கனின் பெருமை பேசுவதோடு தொடங்குகிறது.  இறுதியாக தமிழ்நாட்டில் சங்ககாலம் (கி.மு. 300 - கி.பி. 300) பற்றி பேசும் அப்பாடம் சேர மன்னன் நெடுஞ்சேரலாதன் இமயவரம்பன் என்ற பெயர் பெறக் காரணம் இமயம் வரை சென்று வென்றதாக கதையளக்கிறது.
   
       சோழ அரசனொருவன் புலிக் கொடியை இமயத்தில் பறக்க விட்டதாக சொல்லி அவன் யார் என்பதையும் ஆதாரம் என்ன என்பதையும் தெரிவிக்க மறுக்கிறது.  சங்க இலக்கியப் பாடல்களைக் கொண்டு இவ்வரலாறு புனையப்படுகிறது.  அக்காலப் பெண்கள் கணவன் பால் மட்டும் மிகுந்த அன்பு கொண்டு கற்புத்தன்மையை நிலைநாட்டியதையும் சிலப்பதிகாரம் கண்ணகி கற்பின் மாண்பை விளக்குவதாகவும் கூறுகிறது.  சங்க காலப் பெண்பாற்புலவர்களில் அவ்வையார் உள்ளிட்ட ஒரு சிலரைப் பட்டியலிடுகிறது.  அவ்வையின் கற்பைக் காக்க தமிழ்ச் சமூகம் அவரைக் கிழவியாக்கிய வரலாற்றை யார் சொல்வது?
   
    அடுத்ததாக சமயம் பற்றி சிவன், விஷ்ணு, பிரம்மன், இந்திரன், வருணன், ஆகிய கடவுளர்கள் பட்டியலிடப்படுகின்றன.  முருகனைக் காணவில்லை.  அவன் ஹரப்பா, மொகஞ்சதாரோவிற்குப் போயிருக்கலாம்.  உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் 2009-ம் ஆண்டுக்கான கலைஞர் கருணாநிதி செம்மொழி விருது பெற்ற அஸ்கோ பர்போலா இதுவரை சரியாகப் படித்தறிய முடியாத சிந்து சமவெளி சித்திர எழுத்துக்களிலிருந்து முருகனின் பெயரை கண்டடைகிறார்.  (த சன்டே இந்தியன் ஜுலை - 2010) முருகனை விரட்டிவிட்டு புனைவுகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இந்துத்துவ வரலாற்றை திராவிட இயக்க ஆட்சி தமிழகத்தில் கட்டமைக்கிறது.
   
      இறுதியாக அரசர்களின் நீதி வழங்கும் முறையைச் சொல்லி கூன்பாண்டியன், மனுநீதிச் சோழன் பற்றித் தெரிந்து கொள்ள பணிக்கிறது.  நால்வருணக் கோட்பாட்டை விதைத்து நம் சமூகத்தைப் பாழ்படுத்திய பிராமணர்கள் தமது வெறுப்பு அரசியலுக்கு உண்டாக்கிய மனு தர்மத்திற்கு விளம்பரம் செய்ய உற்பத்தி செய்யப்பட்டது தான் மனுநீதிச் சோழன் கதை.  இக்கதையில் என்ன மாதிரியான நீதி வழங்கும் முறை உணர்த்தப்படுகிறது?  இதே பாதிப்பு தானே இளங்கோவடிகளுக்கும் ஏற்பட்டு கண்ணகி மதுரை எரிக்கும் போது மனுதர்மமே முன்னுக்கு நிற்கிறது.
   
     பகுத்தறிவுவாதியான மு. கருணாநிதி ஏன் புராணக் குப்பைகளிடம் சரணடைய வேண்டியுள்ளது.  இனப்பெருமை, மொழிப் பெருமை, குலப்பெருமை, சோழப்பெருமை போன்ற பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்ட ஒருவரால் வேறு என்ன செய்ய முடியும்?

     “தமிழ் காட்டுமிராண்டிக் காலத்து மொழி” என்று சொன்ன தந்தை பெரியார், “மொழி என்பது ஒரு மனிதனுக்கு அவ்வளவு முக்கியமான சாதனம் அல்ல;  அது இயற்கை ஆனதும் அல்ல; அதற்கு ஒரு கட்டாயமும் தேவையில்லை. மொழி மனிதனுக்குக் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் அளவுக்கு விஷயங்களைப் புரிந்து கொள்ள வாய்ப்பளிக்கும் அளவிற்கு தேவையானதேயொழிய பற்றுக் கொள்ளுவதற்கு அவசியமானதல்ல.  மொழியானது சமுதாயத்திலுள்ள சூழ்நிலைக்கு ஏற்றதேயொழிய பொது வாழ்விற்கு, உணர்ச்சிக்கு ஏற்றதல்ல”  
(பக். 1766, 1767 - பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்)
என்று மொழி பற்றிய தெளிவான கருத்து கொண்டிருந்தார்.
   
      மு. கருணாநிதி ‘தமிழுக்குக் கேடு வந்தால் மந்திரி பதவியை விட்டு விடுவேன்”, என்று சொன்னதற்கு பெரியார்,” நாம் வீட்டில் தமிழ் பேசுகிறோம்.  கடிதப் போக்குவரத்து, நிர்வாகம், மக்களிடம் பேச்சு இவைகளைத் தமிழில் நடத்துகிறோம்.  சமயத்தை, சமய நூல்களை, இலக்கியத்தைத் தமிழில் கொண்டு இருக்கிறோமே ! சரி !  இதற்கு மேலும் சனியனான தமிழுக்கு என்ன வேண்டும் ?” 
(பக்.1774 - பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்)  என்று கோபப்படுகிறார்.
   
      தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதை அறியாமை எனச் சாடிய பெரியார், “தமிழ்மொழி தாய்மொழியாக உள்ள இந்நாட்டில், இந்தியைப் புகுத்தக் கூடாது என்று கிளர்ச்சி செய்தேன்.  அது என் தாய்மொழிப் பற்றுதலுக்காக என்று அல்ல; அது என் நாட்டுமொழி என்பதற்காக அல்ல; சிவபெருமானால் பேசப்பட்டது என்பதற்காக அல்ல;  அகத்திய முனிவரால் திருத்தப்பட்டதென்பதற்காக அல்ல; மந்திர சக்தி நிறைந்தது; எலும்புக் கூட்டை பெண்ணாக்கிக் கொடுக்கும் என்பதற்காக அல்ல; பின் எதற்காக?  தமிழ் இந்நாட்டு சீதோஷ்ண நிலைக்கேற்ப அமைந்துள்ளது”, (பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்)
என தமிழ்மொழி மீது சுமத்தப்பட்டுள்ள புராணக்குப்பைகளை கேலி செய்கிறார்.

      தந்தை பெரியார் மொழிப்பற்று என்னும் மூடநம்பிக்கைகளற்று மொழியை முற்றிலும் புறவயமாக அணுகினார்.  அவருடைய வாரிசாக சொல்லிக் கொள்ளும் மு. கருணாநிதிக்கு அத்தகைய வாய்ப்பு கிடைக்கவேயில்லை.   எனவேதான் பெரியாருக்கு மட்டுமல்லாமல் மனுநீதிச்சோழன், ராஜராஜன் போன்றவர்களுக்கும் வாரிசாக வலம் வர முடிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக