சென்னை,
ஜூலை 21,2012
சென்ற 2009 ஜூன், ஜூலை
மாதங்களில் சென்னையில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகிற பகுதிகளில்
திடீர்த் தீவிபத்துக்கள் ஏறபட்டன. கூவம் முதலான கழிவு நீர்ச் சாக்கடைகளாக
மாற்றம் பெற்றுள்ள நதிக் கரைகளின் ஓரம் அமைந்திருந்த குடிசைப் பகுதிகள்
பலவும் திடீரெ மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்து சாம்பலாயின. அக்
குடிசைகளில் வாழ்ந்து வந்த எளிய மக்கள் செம்மஞ்சேரி முதலான தொலைவிலுள்ள
மாற்று இடங்களுக்குச் செல்லுமாறு வற்புறுத்தப் பட்டனர். அக்குடிசைப்
பகுதிகளில் வாழ்ந்தவர்கள் ஏற்கனவே அங்கிருந்து வெளியேற வேண்டுமென்று
எச்சரிக்கப்பட்டவர்கள் என்பதும்,. மர்மமான முறையில் தீப்பிடித்தல்,
வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் பகுதிகளாக அவை இருத்தல் ஆகியனவும்
அடித்தள மக்களின் நலன்களில் அக்கறையுள்ள பலரின் கவனத்தையும் ஈர்த்தன.
‘குடிசை மக்கள் வாழ்வுரிமை இயக்கம்’ என்னும் அமைப்பு இது தொடர்பாக சமூக
ஆர்வலர்கள் பலரும் அடங்கிய உண்மை அறியும் குழு ஒன்றை அமைத்து ஒரு விரிவான
அறிக்கையை அளித்தது.
பல
தரப்பட்ட அறிஞர்கள் மற்றும் வல்லுனர்கள் அடங்கிய அக்குழு இது தொடர்பான பல
அம்சங்களையும் ஆய்வு செய்து இரு பகுதிகளாக அவ்வறிக்கையை உருவாக்கியது.
முதற்பகுதி இத் தீவிபத்துக்கள் மக்களை வெளியேற்றுவதற்கான ஒரு திட்டவட்டமான
சதியாக இருக்கலாம் என்கிற அய்யத்தை முன் வைத்து இது குறித்த விசாரணை
ஒன்றைக் கோரியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரணங்கள் குறித்த
கோரிக்கைகள் சிலவற்றையும் முன் வைத்தது. இரண்டாம் பகுதி ஏற்கனவே தொலை
தூரங்களில் குடியேற்றப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளின் அவலங்களைச்
சுட்டிக்காட்டி, அவர்களுக்கான உடனடி நிவாரணங்கள் குறித்தும், நிலப் பறிப்பு
மற்றும் மீள் குடியேற்றம் குறித்தும் காத்திரமான சில பரிந்துரைகளை முன்
வைத்தது.
இவ்வறிக்கை உரிய அமைச்சர்கள் மற்றும்
அதிகாரிகளுக்கு அனுப்பப் பட்டதோடு ஆயிரக் கணக்கான பிரதிகள் அச்சிடப்பட்டு
மக்கள் மத்தியில் வினியோகிக்கவும் பட்டன.
எனினும் அரசு இதை
முற்றிலுமாகப் புறக்கணித்தது. பாதிக்க்கப்பட்ட மக்களுக்கு எந்தப் பலன்களும்
கிட்டவில்லை என்பதோடு குடிசைகள் எரிக்கப்படுவதும் மக்கள் வெளியேற்றப்
படுவதும் தொடர்கிறது.
இதன்
ஓர் அங்கமாகவே ஆயிரம்விளக்குக் காவல் நிலையம் அருகிலும் அப்போலோ மருத்துவ
மனையின் இதய நோய் மையத்திற்கு எதிரிலும், கூவம் நதிக்கரையை ஒட்டி
அமைந்துள்ள மக்கீஸ் கார்டன் அல்லது திடீர் நகர் (ஆற்றோரப் பகுதி) என்று
அழைக்கப்படுகிற குடிசைப்பகுதி தற்போது எரிந்துள்ளது. சென்ற ஒரு
மாதத்திற்குள் மும்முறை தீப்பற்றி சுமார் 130க்கும் மேற்பட்ட குடிசைகள்
அழிந்துள்ளன. அம்மக்கள் இன்று மழையிலும் வெயிலிலும் இருக்க இடமின்றி அவதிப்
படுகின்றனர்.
இது குறித்த உண்மைகளை அறிந்து வெளிக் கொணர கீழ்க் கண்டவாறு ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது:
- பேரா. அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், சென்னை
- வழக்குரைஞர் உதயம் மனோகரன், சென்னை
- ஶ்ரீநிவாசன், மனித உரிமை ஆர்வலர், சென்னை
- எழுத்தாளர் கவின்மலர், பத்திரிக்கையாளர், சென்னை
- சகா, பத்திரிக்கையாளர், சென்னை
- மு.திருமாவளவன், முன்னாள் அரசு கல்லூரி முதல்வர், சென்னை
- மதுமிதா தத்தா, நீதி மற்றும் அமைதிக்கான பிரச்சாரக் குழு, சென்னை
இக்குழு
நேற்றும் இன்றும் மக்கீஸ் கார்டனில் எரிக்கப்பட்ட குடிசைகளைப்
பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்கள் பலரையும் சந்தித்துப் பேசியது.
எழும்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் திரு.த.இராமதாஸ், மாவட்ட ஆட்சியர்
திரு.ஜெயந்தி, குடிசைமாற்று வாரியச் செயலரும் மாவட்ட வருவாய் வாரிய
அதைகாரியுமான திரு.செ.பன்னீர்செல்வம், வணக்கத்துக்குரிய சென்னை நகர மேயர்
திரு.சைதை துரைசாமி ஆகியோரை நேரில் சந்தித்தும்,. ஆயிரம்விளக்கு பகுதி
காவல்துறை உதவி ஆணையர் திரு. சரவணனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டும்
பேசியது.
குடிசைகள் தீப்பற்றிய நிகழ்வு
ஆயிரம்விளக்கு
கிரீம்ஸ் சாலைக்கருகில் கூவம் நதிக்கரையை ஒட்டி அமைந்துள்ள மக்கீஸ்
தோட்டப் பகுதியில் சுமார் 200 குடும்பங்கள் 60 ஆண்டு காலமாக வசித்து
வருகின்றன. கூவம் நதியின் அனைத்து அழுக்குகளையும் சுமந்துகொண்டு, எந்த
அடிப்படை வசதிகளுமில்லாத இப்பகுதியில் நீண்ட காலமாக இம்மக்கள் கொடிய
கொசுக்கடிகள் மத்தியில் வாழ்வதற்கான ஒரே காரணம், அவர்களின் வாழ்வாதாரம் இப்
பகுதியில் அமைந்துள்ளது என்பதுதான். பெண்கள் பெரும்பாலும் ‘பங்களா வேலை’,
அதாவது அருகிலுள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்கின்றனர். மற்ற நேரங்களில்
பழைய துணி விற்பது, வெற்றிலை பாக்கு விற்பது. தையல் முதலிய தொழில்களைச்
செய்கின்றனர். ஆண்கள் கூலி வேலை, துணி தேய்ப்பது, சாவு மேளம் அடிப்பது,
பெயின்ட் அடிப்பது, ஆட்டோ ஓட்டுவது, கட்டிடக் கூலி வேலை முதலான தொழில்களைச்
செய்கின்றனர்.
இவர்களின் இந்தக் குடிசை வீடுகளில் அரசு
கொடுத்த தொலைக் காட்சி, ஃபேன் முதலியன உண்டு. இக்குடிசைகளிலிருந்து சுமார்
100 குழந்தைகள் அருகிலுள்ள பள்ளிகளில் படிக்கின்றனர். குடும்பத்தில்
குறைந்த பட்சம் இருவரேனும் வேலை செய்து சம்பாதித்தால் மட்டுமே அவர்கள்
உயிர் வாழ இயலும். குழந்தைகள் படிக்க இயலும். இடம் பெயர்ந்தால் இது
சாத்தியமே இல்லை என்கிற ஒரே காரணத்திற்காகவே இவர்கள் இத்தனை கஷ்டங்களையும்
சகித்துக் கொண்டு இங்கே மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்தக்
குடிசைப் பகுதிக்கு இணையாகத்தான் கூவத்தின் மறுகரையில் மதுரவாயிலிலிருந்து
சென்னைத் துறைமுகத்தை இணைக்கும் அதிவேக உயர் நெடுஞ்சாலைப் பணி நடை
பெறுகிறது. இதற்காக அமைக்கப் படும் தூண்கள் இவ் வீடுகளுக்கு நேர்ப்
பின்புறம் அமைந்துள்ளன. இந் நெடுஞ்சாலை முழுக்க முழுக்க கூவம் ஆற்றுக்குள்
அமையுமானால் நீரோட்டத்திற்குத் தடையாக இருக்கும் என்கிற மறுப்பு
தெரிவிக்கப் பட்டதன் விளைவாக இந்தப் பாதையைச் சற்றே தள்ளி வைக்கும்(re
alignment) பொருட்டு தற்போது இப்பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்
பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தப் பணி நடைபெறும் இடங்களில் அமைந்திருந்த பல
குடிசைப் பகுதிகள்தான் மூன்றாண்டுகளுக்கு முன் திடீர் திடீரென எரிந்து
சாம்பலாயின. இது குறித்து எமது 2009 அறிக்கையில் விரிவாகக் காணலாம்.
தற்போது
நடைபெற்ற இத் தீவைப்புகள் குறித்து இப்பகுதியச் சேர்ந்தவர்களும் இன்று
வீடிழந்து நிற்பவர்களுமான முத்து மகன் டிக்சன் (42), இறந்துபோன செல்வகுமார்
மனைவி பூங்கொடி (50), பாளையத்தின் அம்மா வேணி (50), பாளையத்தின் மனைவி
தேவிகா (25), அப்பையன் மனைவி மேரி (29), மூன்று பெண்களுக்குத் தாயான
இந்திரா (45) மற்றும் அங்கே நாங்கள் சென்றபோது குழுமியிருந்த முப்பதுக்கும்
மேற்பட்ட குடிசை வாசிகள் கூறியதிலிருந்து:
சென்ற மாதம் 12
செவ்வாய் மதியம் 11.45 மணி அளவில் திடீரென வீடுகள் பற்றி எரியத் தொடங்கின.
தீயணைப்பு எந்திரங்கள் வந்து தீயை அணைப்பதற்கு முன் 70 வீடுகள் எரிந்து
சாம்பலாயின. பிரச்சினை அத்தோடு முடியவில்லை. மீண்டும் இன்னொரு செவ்வாய்
இரவு, புதன் காலை (ஜூலை2) 12.30 மணி அளவில் தீப் பற்றி இம்முறை 45 வீடுகள்
சாம்பலாயின. எஞ்சியிருந்த கூரைக் குடிசைகள் 15ம் சென்ற செவ்வாய் இரவு புதன்
காலை (ஜூலை 11) 2.30 மணி அளவில் எரிந்து சாம்பலாயின. ஆஸ்பெஸ்டாஸ் மற்றும்
கான்க்ரீட் கூரையிட்ட சில வீடுகள் மட்டுமே தற்போது தப்பியுள்ளன.
ஒவ்வொரு
வீட்டிலுமிருந்த டி.வி, டேபிள் ஃபேன், உடைகள், பிளாஸ்டிக் பொருட்கள்,
ரேஷன் கார்ட், குழந்தைகளின் பாடப் புத்தகங்கள் மற்றும் சாதிச்
சான்றிதழ்கள், ஓட்டர் ஐ.டி முதலிய எல்லாம் எரிந்து போயுள்ளன. ஒவ்வொரு
வீட்டிலும் குறைந்த பட்சம் சராசரியாக 50,000 ரூ இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இன்று அவர்கள் அனைவரும் மழையிலும் வெயிலிலும் மேற்கூரையின்றி அல்லல்
படுகின்றனர். வயது வந்த பெண் குழந்தைகளை அருகில் உறவுள்ளவர்கள் அத்தகைய
வீடுகளுக்கு அனுப்பியுள்ளனர். சில நாட்களுக்கு முன் மழை பெய்தபோது
அருகிலுள்ள கடை ஓரங்களிலும் லாட்ஜ் வாசல்களிலும் ஒதுங்கியுள்ளனர்.
மழை
இல்லாத நாட்களில் எரிந்துபோன குடிசைகளிலேயே சமைத்துச் சாப்பிட்டுவிட்டு
உறங்குகின்றனர். கூவம் நாற்றமும் கொசுக்களும்தான் அவர்களுக்குத் துணை.
இரவில் பாம்புகள் வந்துவிடுவதாகவும் ஒரு மூதாட்டி கண்ணீர் மல்கச் சொன்னார்.
அரசு நடவடிக்கைகள்
ஒவ்வொரு
முறை தீப்பற்றிக் குடிசைகள் எரிந்தவுடனும் அருகிலுள்ள ஆயிரம்விளக்குக்
காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். பாதுகாப்பும் கோரியுள்ளனர். 558/12,
661/12, 701/12 என மூன்று முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதை
நிலையத்தில் விசாரித்து அறிந்தோம். முதல் தடவையும் இரண்டாம் தடவையும்
எரிந்ததை ஒட்டிப் பாதுகாப்புக் கோரியும் எவ்விதப் பாதுகாப்பும்
கொடுக்கப்படவில்லை. எந்த அதிகாரியும் வந்து விசாரிக்கவும் இல்லை. எல்லாம்
எரிந்து முடிந்தபின் சில நாட்கள் போலீஸ்பாதுகப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அதுவும் நேற்றிரவு (ஜூலை 19) கொடுக்கப்படவில்லை.
போலீஸ்
பாதுகாப்பு இருந்தபோதே இரண்டு நாட்களுக்கு முன், இரவில் யாரோ கூவத்தின்
அக்கரையிலிருந்து மண்ணெண்ணை போத்தலை வீசியுள்ளனர். சுமார் 40ஆண்டுகளாக
வெள்ள ஆபத்து தவிர தீ விபத்து நடந்ததில்லை. சுமார் ஒரு மாத காலத்திற்குள்
ஒன்றன் பின் ஒன்றாக அத்தனை குடிசைகளும் எரியுமாறு இன்று விபத்துக்கள்
நடந்துள்ளன. திட்டமிட்டுச் செய்யப்பட்டதாகவே தோன்றும் இவ்விபத்துக்கள்
குறித்து இந்த அய்யத்தை முன் வைத்துப் புகார்கள் அளிக்கப்பட்டபோதும்
காவல்துறை அந்தக் கோணத்திலிருந்து விசாரிக்கவில்லை. இது தொடர்பாக காவல்துறை
உதவி ஆணையர் சரவணனைக் கேட்டபோது மின்கசிவால் ஏற்பட்ட விபத்து என்கிற
அடிப்படையிலேயே விசாரிக்கப் படுவதாகச் சொன்னார். இம்மக்களை இந்த
இடத்திலிருந்து வெளியேற்றுவதற்காகத் திட்டமிட்டுச் செய்யப்பட்டதாகத்
தோன்றுகிறதே, அந்தக் கோணத்தில் விசாரிக்கவில்லையா எனக் கேட்டபோது,
“அப்படியானால் அரசு செய்தது என்றல்லவா ஆகும்? அரசு இப்படிச் செய்யுமா?
மக்களுக்கு வசதிகளைத்தானே அரசு செய்து கொடுக்கும்?” என்றார்.
தீயணைப்பு
நிலைய அலுவலர் இராமதாஸ் கூறும்போது தீயணைப்புத் துறை என்பது ஒரு சேவை
அமைப்புத்தான், தீயின் காரணங்கள் குறித்துத் தாம் ஏதும் சொல்ல இயலாது
என்றார். எழும்பூர் பகுதியில் இது போல தீ விபத்து வாய்ப்புள்ள பகுதிகள்
ஐந்து தான். செய்தி கிடைத்த சில நிமிடங்களில் தாங்கள் அங்கு சென்று விட
முடியும் என்றாலும் சாலையிலேயே வண்டியை நிறுத்திவிட்டு அங்கு ஹோஸ் பைப்களை
இணைத்துத் தண்ணீர் கொண்டு செல்வதற்குள் எரிந்து முடிந்து விடுகின்றன
என்றார். இப்பகுதிகளில் 20,000 லிட்டர் தண்ணீர் பிடிக்கக்கூடிய சின்டெக்ஸ்
டாங்குகளை நிறுவுவது, சாலிட் ஹய்ட்ரன்ட் முறையில் தீயணைப்புச் சாத்தியங்கள்
முதலியன நிறுவப்பட்டால் உடனடியாகத் தீயைப் பரவாமல் தடுக்க வாய்ப்புள்ளது
என்றார். ஆனால் அரசு அத்தகைய முயற்சிகளை மேற்கொள்வதில்லை.
முதல்
விபத்து நடந்த அடுத்த நாள் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான
வளர்மதி அவர்களும் மேயர், துணை மேயர் ஆகியோரும் வந்து பார்த்துள்ளனர்.
சென்ற வாரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியல் செய்தபோதும் அமைச்சர்
வந்துள்ளார். கூட வந்தவர்கள் முழுமையாகக் குறைகளைத் தெரிவிக்கக் கூடத்
தங்களை விடவில்லை எனவும், “அம்மா அங்கெல்லாம் வரமாட்டாங்க, யாராவது
ஒருத்தர் மட்டும் பேசுங்க” எனக் கறார் பண்ணியதாகவும் கூறினர். “இங்கே ஏன்
இருக்குறீங்க/ காலி பண்ணுங்க. செம்மஞ்சேரியில மாற்று இடம் தருகிறோம்” என்று
அமைச்சர் கூறியுள்ளார். விரும்பியவர்களுக்கு செம்மஞ்சேரியில் இடம்
தருவதாகத் தானும் சொன்னதாக மேயர் எங்களிடம் கூறினார்.
தேர்தலின்போது
இதே அமைச்சர் அம்மக்ககளிடம் கூவத்தை ஒட்டி பாதுகாப்புச் சுவர் எழுப்பித்
தருவதாகவும், கான்க்ரீட் கூரைகளுடன் கூடிய வீடுகள் கட்டித் தருவதாகவும்
வாக்களித்ததை அம் மக்கள் எம்மிடம் நினைவுகூர்ந்தனர். மீண்டும் அதே இடத்தில்
கூரை போட்டுக் கொள்வதாக அவர்கள் சொன்னபோது மறுபடியும் எரிந்து போனால் தாம்
பொறுப்பல்ல என அமைச்சர் தரப்பில் கூறப்பட்டதாகவும் மக்கள் கூறினர்.
எக்காரணம்
கொண்டும் அம்மக்கள் செம்மஞ்சேரி போன்ற தொலை தூரத்திற்குச் செல்லத் தயாராக
இல்லை. “இரண்டு பேரும் சம்பாரிச்சாத்தான் பிள்ளைங்களப் படிக்க வைக்க
முடியும். அங்கே போனா வீட்டு வேலை செய்கிற எங்கள் பொம்பளைங்களுக்கு வேலை
கிடைக்காது. எங்க பிள்ளைகள் 50கி.மீ தினம் பயணம் செஞ்சு படிக்க முடியாது.
எங்க வாழ்க்கைதான் சாவு மேளம் அடிச்சும் துணி தேச்சும் கழிஞ்சு போச்சு.
எங்க பிள்ளைங்களாவது படிச்சு ஆபீசராகணும் சார்” என்றார் ஒருவர்.
அருகில்,
சுமார் 5 கி.மீ சுற்றளவுக்குள் இடம் கொடுத்தால் போகத் தயார் என எல்லோரும்
கூறினர். அமைச்சரிடம் அவ்வாறு கூறியபோது அப்படி ஏதும் இருந்தால் நீங்கள்
பார்த்துச் சொல்லுங்கள் என்று பதில் வந்துள்ளது. அப்படிச் சாத்தியம் இல்லை
என்கிற தொனியில் சற்றுக் கேலியாக அப்பதில் சொல்லப்பட்டதாக மக்கள் கூறினர்.
மேயர் அவர்களும் இக் கருத்தை எங்களிடம் கூறினார். அப்படி இடம் ஏதாவது
சொன்னால் முதல்வரிடம் சொல்லி உடனடியாகச் செய்து தருகிறேன் என்றார்.
செம்மஞ்சேரி,
பெரும்பாக்கம் முதலான புற நகர்ப் பகுதிகளில் மட்டுமே குடிசை மாற்று
வாரியம் கட்டிடங்கள் கட்ட முடியும் எனவும் நகரத்திற்குள் இனி குடிசை மாற்று
வாரியக் கட்டிடங்கள் கட்ட வாய்ப்பில்லை என்றும் குடிசை மாற்று வாரியச்
செயலர் பன்னீர்செல்வம் கூறினார்.
முதல் விபத்து நடந்து
சுமார் ஒரு மாதத்திற்குப் பின்னரே குடும்பம் ஒன்றுக்கு அய்யாயிரம் ரூபாய்
இழப்பீட்டுத் தொகையை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார். பாட நூல்கள், குடும்ப
அட்டைகள், மாற்று உடைகள் என அனைத்தையும் இழந்து நிற்கும் இவர்களுக்கு
வழக்கமாகத் தரப்படும் அரிசி, புடவை முதலான எந்த உதவிகளும் செய்யப்படவில்லை.
அரசு இம்மக்களை இவ்விடத்திலிருந்து வெளியேற்றும் நோக்குடன் செயல்படுவதாகத்
தெரிகிறதே என மாவட்ட ஆட்சியரிடம் நாங்கள் கேட்டபோது அரசுதான் இது குறித்து
முடிவெடுக்க வேண்டும், தான் ஒரு சிறிய அதிகாரி எதுவும் செய்ய இயலாது
என்றார். எனினும் சாதகமான பரிந்துரைகளை அரசுக்கு அளிப்பதாக வாக்களித்தார்.
கடந்த
ஒரு மாத காலமாக அம் மக்கள் ரேஷன் முதலானவற்றையும் பெறவில்லை. உடனடியாக
அவர்களுக்கு குடும்ப அட்டைகளை வழங்க வேண்டுமென நாங்கள் கேட்டபோது ஆது தன்
அதிகாரத்தில் இல்லை எனவும் சிவில் சப்ளை உதவி ஆணையரை அணுகுமாறும் ஆட்சியர்
கூரினார். எனினும் மேயரிடம் நாங்கள் இதைக் கூறியபோது மிகவும் விரிவாகவும்
அக்கறையுடனும் எங்களிடம் பேசிய அவர், உடனடியாக இதைச் செய்து தருவதாக
வாக்களித்தார்.
எமது பார்வைகளும் கோரிக்கைகளும்
- கடந்த
பலஆண்டுகளாகத் தீவிபத்து ஏதும் ஏற்படாத இப்பகுதியில் திடீரென விபத்துகள்
ஏற்பட்டிருப்பதும், அதுவும் தொடர்ச்சியாக மும்முறை அடுத்தடுத்து அனைத்து
வீடுகளும் எரியும் வரை விபத்துக்கள் நடந்துள்ளன என்பதும் பல அய்யங்களை
ஏற்படுத்துகின்றன. வெறும் மின்கசிவே இதற்குக் காரணம் என்றால் அடுத்தடுத்து
இப்படித் திடீரென மின்கசிவு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் அந்தக்
கோணத்திலிருந்தே காவல் துறை இதை விசாரிப்பது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.
முதல்முறை தீப்பற்றியவுடன் உரிய பாதுகாப்பை காவல்துறை
அளித்திருக்குமேயானால் அடுத்தடுத்த விபத்துக்களைத் தடுத்திருக்கலாம்.
குடிசைகள் எரிந்தது தொடர்பான இவ் விசாரணையைத் தமிழகக் காவல்துறையின்
பொறுப்பில் விடுவது எந்தப் பயனையும் அளிக்காது. திட்டமிட்டுத் தம்மை
வெளியேற்றுவதற்காகக் குடிசைகள் எரிக்கப் பட்டன என்கிற மக்களின் நியாயமான
அய்யத்திற்கு மதிப்பளித்து இது தொடர்பாக பதவியிலுள்ள நீதிபதி ஒருவரின்
தலைமையிலான விசாரணை ஒன்றிற்கு ஆணையிட வேண்டும். இவ் விசாரணையில் 2009 முதல்
இவ்வாறு வளர்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்படுகிற பகுதிகளில் நேர்ந்த
தீப்பற்றல்கள் அனைத்தும் உள்ளடக்கப்பட வேண்டும்.
- தீ விபத்தைக்
காரணம் காட்டி அம்மக்களைச் செம்மஞ்சேரி முதலான தொலை தூரப் பகுதிகளுக்கு
விரட்டியடிக்கும் அரசு முயற்சி கண்டிக்கத் தக்கது. அது அம்மக்களின்
வாழ்வில் பெரிய அழிவை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட அம் மக்கள் அனைவரும்
தலித்கள். முதல் தலைமுறையாகப் படிக்க நேர்ந்துள்ள அவர்களின் குழந்தைகளின்
எதிர்காலமும் இதனால் பாழாகும். எனவே அரசு இம்முயற்சியைக் கைவிட வேண்டும்.
அவர்களை மீண்டும் அங்கேயே வசிக்க அனுமதிப்பதோடு ஏற்கனவே குடும்ப அட்டை,
மின்வசதி ஆகியவற்றுடன் நீண்டகாலமாக அங்கேயே வாழ்ந்தவர்கள் என்கிற வகையில்
அவர்களுக்கு அமைச்சர் வளர்மதி அவர்கள் தேர்தல் காலத்தில் வாக்களித்தபடி
கூவம் கரையில் தடுப்புச் சுவர் எழுப்பி கான்க்ரீட் வீடுகள் கட்டித் தர
வேண்டும்.
- அல்லது 5 கி.மீ சுற்றளவுக்குள் இடம் ஒன்றை அரசு
கைப்பற்றி அதில் அவர்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றைக் கட்டித்
தரவேண்டும். இத்தகைய பரிந்துரைகளையும் கோரிக்கைகளையும் வைக்கும்போது அப்படி
ஒரு இடம் இருந்தால் சொல்லுங்கள் எனக் கோரிக்கை வைப்பவர்களிடமே அரசு
தரப்பில் பதிலுரைப்பது மிகவும் பொறுப்பற்ற ஒரு செயல். அரசிடமே இது
குறித்துப் போதுமான தகவல்கள், ஆவணங்கள் முதலியன இருக்கும். நிறைய அரசு
நிலங்கள் முதலியவற்றைத் தனியார்கள் ஆக்ரமித்துள்ளனர். பஞ்சமி நிலங்கள்,
வக்ஃப் நிலங்கள் ஆகியவையும் இவ்வாறு ஆக்ரமிக்கப் பட்டுள்ளன. அரசு
நினைத்தால் தற்போது சென்னை நகருக்குள் வசிக்கும் குடிசைப் பகுதியினரை
நகருக்குள்ளேயே குடியமர்த்த வாய்ப்புண்டு. சென்னை நகருக்குள் இது போன்ற
சாத்தியமுள்ள இடங்களைச் சம்பந்தப் பட்ட அரசுத் துறைகளின் மூலம்
கண்டுபிடித்து அதன் பட்டியலொன்றை வெளியிட வேண்டும். வளர்ச்சி, மற்றும்
சென்னையை அழகு படுத்தல் குறித்த மேட்டிமைப் பார்வையிலேயே நின்று கொண்டு
பிரச்சினையை அணுகினால் நகருக்குள் இடமில்லை என்பதுதான் பதிலாக வரும்.
குடிசை வாழ் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்கிற
நோக்கிலிருந்து பிரச்சினையை அணுகினால் வேறு தீர்வுகள் நமக்குக் கிடைக்கும்.
ஆனால் அரசுகள் மாறினாலும் அவற்றின் அணுகல் முறைகள் குடிசை மக்களின்
வாழ்வுரிமையைக் காக்கும் திசையில் இல்லை என்பதையே நாங்கள் சந்தித்தவர்களின்
பேச்சுக்களிலிருந்து எங்களால் உணர முடிந்தது.
- சென்னை
நகரெங்குமுள்ள தீப்பற்றும் வாய்ப்புள்ள இடங்களைக் கண்டறிந்து அங்கெல்லாம்
சாலிட் ஹைட்ரன்ட் தீயணைப்பு வசதியையும், 20,000 லி கொள்ளளவுள்ள சின்டெக்ஸ்
தொட்டி அமைப்பதையும் அரசு முன்னுரிமை அளித்து நிறைவேற்ற வேண்டும்
- பாதிக்கப்பட்டுள்ள
மக்களுக்கு அளிக்கப் பட்டுள்ள உதவித் தொகை போதாது. அரசு உடனடியாக அவர்கள்
குடும்பம் ஒவ்வொன்றிற்கும் ரூ 50,000 உதவித் தொகை அளிக்க வேண்டும். உதவித்
தொகை அளிப்பது, மாற்று இடம் தேடுவது, விபத்தில் அழிந்த ஆவணங்களைப்
புதுப்பித்துத் தருவது முதலிய பணிகள் வெவ்வேறு துறைகளிடம் இருப்பது உடனடித்
தீர்வுகளைச் சாத்தியமில்லாமல் ஆக்குகிறது. இதுபோன்ற தருணங்களில் மாவட்ட
ஆட்சியர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து இப் பணிகள் ஒருங்கிணைக்கப் படுதல்
அவசியம். உடனடியாக இம்மக்களுக்கு குடும்ப அட்டைகளை வழங்கி ரேஷன் முதலியவை
தட்டுப்பாடின்றிக் கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.
- தொலை தூரத்தில்
குடியமர்த்தப்பட்டவர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் அவர்களின்
வாழ்வாதாரம் கெடாமல் இருக்க இலவச பஸ் பாஸ் வழங்குதல் வேண்டும்.
- நகர
மத்தியிலிருந்து இம்மாதிரி அடித்தள மக்களை வெளியேற்றி துணை நகரங்களாக
உருவாகும் பகுதிகளுக்குக் கொண்டு செல்வது அங்கு உருவாகும் காட்டுமானப்
பணிகள் மற்றும் இதர நிறுவனங்களுக்கு மலிவான உழைப்புச் சக்திகளை உருவாக்கித்
தரும் மறைமுகத் திட்டமோ என்கிற அய்யமும் உள்ளது. எனவே அரசு குடிசை வாழ்
மக்களை தொலைதூரத்திற்குக் கொண்டு செல்லுதல் என்கிற முயற்சியைக் கைவிட
வேண்டும்.
- இனி கட்டப்படக் கூடிய குடிசை மாற்று வாரியக்
கட்டிடங்களில் ஒவ்வொரு வீடும் 400 சதுர அடி அளவில் இருக்க வேண்டும்.
தற்போது உள்ள 130 சதுர அடி என்பது ஒரு குடும்பம் வாழத் தகுதியற்றது.
தொடர்புக்கு:
அ.மார்க்ஸ்,
3/5, முதல் குறுக்குத் தெரு,
சாஸ்திரி நகர்,
அடையாறு,
சென்னை- 600 020.
செல்: 94441 20582, 98406 98236