தமிழகமெங்கும்
செழித்திருந்த பவுத்த-சமண மதங்கள்
-மு.சிவகுருநாதன்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் கண்டிரமாணிக்கம்
கிராமத்தில் மணிகண்டன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் குழி தோண்டியபோது சுமார் ஐந்தரை
அடி உயர புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டு அச்சிலை மணிகண்டனால் அவ்வூரில் பொதுமக்களின்
பார்வைக்கு வைக்கப்பட்டது. இச்சிலையை ஆய்வு செய்த குடவாயில் பாலசுப்பிரமணியன், டாக்டர்
ஜம்புலிங்கம் உள்ளிட்ட தொல்லியல் ஆய்வாளர்கள் இந்த சிலை பிற்கால சோழர் காலத்தை அதாவது
10-11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கருத்து சொல்லியுள்ளனர்.
இப்பகுதிகளில் அடிக்கடி புத்தர், மகாவீரர் சிலைகள்
முழுமையாகவோ உடைபட்ட நிலையிலோ கிடைக்கின்றன. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் என்றழைக்கப்படுகிற
தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் புத்த-சமண மதங்கள்
கோலோச்சிய காலம் பற்றிய புதையுண்ட உண்மைகள் இவைகள் மூலம் வெளிச்சத்திற்கு வருகின்றன.
தமிழகம் முழுதும் இதுதான் உண்மை என்றபோதிலும் இந்த மாவட்டங்களை குறிப்பிட்டு சொல்வதற்குக்
காரணம் இந்தப் பகுதிகள் சோழப்பேரரசின் ஆளுகை மற்றும் பெருமை பேசப்படும் பகுதியாக இருப்பதுதான்.
தமிழ்நாடு முழுதும் களப்பிரர் காலம் தொட்டும் அல்லது
அதற்கு முன்பும் இங்கு பரவியிருந்த தமிழ் புத்தம், தமிழ் சமணம் பற்றிய ஆய்வுகள் இங்கு
முறையாக நடைபெறவில்லை. அதைச் செய்வதற்கு குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஆட்கள் இங்கில்லை.
இரா.நாகசாமி, குடவாயில் பாலசுப்பிரமணியன் போன்ற ஆய்வாளர்களிடம் தமிழ் புத்தம், தமிழ்
சமணம் குறித்த நேர்மையான ஆய்வு நோக்கம் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. இவர்களுடைய
ஆய்வுகள் முற்றிலும் சோழப்பெருமை பேசுவதாகவே இருப்பதால் நமது அவநம்பிக்கையை இங்கு பதிவு
செய்யவேண்டியுள்ளது. மயிலை.சீனி.வேங்கடசாமி போன்ற ஆளுமைகள் இன்றில்லை.
கண்டிரமாணிக்கத்தில் கிடைத்த புத்தர் சிலையை வட்டாட்சியர்,
மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகார வர்க்கம் கைப்பற்றி (இது அவர்களின் மொழி) திருவாரூர்
மாவட்ட அருங்காட்சியகத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். அருங்காட்சியக வாயிலில் வைக்கப்பட்ட
புத்தர் சிலைக்கு இந்துத்துவவாதிகளிடமிருந்து எதிர்ப்பு வரவே ஓர் சிவப்புச் சேலையால்
சுற்றி அருங்காட்சியக வாயிலில் அமர்த்தப்பட்டு பிளக்ஸ் போர்டு ஒன்றால் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
28.07.2012 அன்று பேரா.அ.மார்க்ஸ், புதுவை கோ.சுகுமாரன்,
புதுவை சு.காளிதாஸ், அமானுஷ்யன் ஆகியோருடன் நானும் திருவாரூர் அருங்காட்சியகத்திற்கு
சென்று பார்த்தவுடன் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானோம். பிளக்ஸ் தட்டி மறைப்பை எடுக்க
அனுமதி மறுக்கப்படவே சுற்றப்பட்டிருந்த சேலையை மட்டும் அகற்றி புத்தரை பக்கவாட்டில்
மட்டுமே எங்களால் படமெடுக்கமுடிந்தது. அருங்காட்சியக காப்பாளர் கருணாநிதி இச்சிலையால்
நிறைய பிரச்சினைகள் வருகிறது என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார். விரைவில் இந்தச்
சிலை சென்னைக்கு அனுப்பிவைக்கப்படுமென்றார்.
தங்களுக்குத் தேவைப்படும்போது புத்தரை விஷ்ணுவின்
அவதாரமாகச் சொல்லி விழுங்கும் இந்துத்துவம் சைவக் கோவிலுக்குள் இருக்கும் அருங்காட்சியகத்தில்
புத்தர் சிலையை வைக்க எதிர்ப்பு தெரிவிப்பதை என்ன சொல்ல? துளிகூட சகிப்புத்தன்மை இல்லாததாய்
இந்துமதம் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. அரசு ஏன் சைவ அல்லது வைணவக் கோயில்களுக்குள்
அருங்காட்சியகத்தை அமைக்கிறது? புத்த – சமண சிற்பங்கள் கிடைத்தால் அவற்றை எங்கே கொண்டுபோய்
வைப்பார்கள்? தஞ்சையில் அரண்மனையிலும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நாலுகால் மண்டபத்திலும்
அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கண்ணகி சிலைக்காக குரல் கொடுக்கும் பெருந்தலைகள்
புத்தர் சிலை இவ்வாறு அவமானப்படுத்தப்படுவது குறித்தெல்லாம் வாய் திறப்பதில்லை.
கண்டிரமாணிக்கம் கிராமத்தில் ஏற்கனவே சைவ, வைணவக்
கோயில்கள் இருக்கின்றன. புத்தருக்கும் அங்கு ஓர் கோயில் கட்டி வழிபட விரும்புகிறார்கள்.
அரசு சட்டங்கள் இதற்கு அனுமதியளிக்காது என்று அருங்காட்சியக காப்பாளர் கருணாநிதி எங்களிடம்
கூறினார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆதிரெங்கத்தில் இம்மாதிரியான நிகழ்விற்காக
போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்திப் படுகொலை செய்தது நினைவிருக்கலாம்.
புத்தர் சிலையை திருவாரூர் தியாகராஜர் கோயில் வளாகத்திலுள்ள
அருங்காட்சியகத்தில் வைப்பது பற்றி மாவட்ட ஆட்சியர் எடுத்த முடிவு விமர்சனத்திற்குரியது.
இங்கு ஒன்றை நாம் கவனிக்கவேண்டும். புத்தர் சிலையை அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக
வைத்தாலாவது பரவாயில்லை. ஏற்கனவே மூக்கு சிதைந்தநிலையில் உள்ள புத்தர் சிலையை எவ்வித
பாதுகாப்புமின்றி அருங்காட்சியக வாசலில் பொறுப்பற்ற முறையில் வைத்திருக்க மாவட்ட நிர்வாகம்
முடிவு செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சிலையை இங்கு வைக்க எதிர்ப்பு காட்டுபவர்கள் பகுத்தறிவுவாதிகளோ
வெளியிருக்கும் வேறு எவரோ இல்லை. இவர்கள் இந்தக் கோயில் சார்ந்தவர்கள். அவர்களால் புத்தர்
சிலைக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. ஏற்கனவே மூக்குடைந்த நிலையிலுள்ள புத்தர் சிலைக்கு
மேலும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு மாவட்ட நிர்வாகத்திற்குண்டு.
ஓர் சிவலிங்கம் அல்லது பெருமாள் விக்ரகத்தை இவ்வாறு வாசலில் வைத்திருக்க இவர்கள் அனுமதிப்பார்களா
என்று கேட்கவேண்டும்.
புத்தரைக் கடவுளாக்குவதோ சிலை வழிபாட்டை வலியுறுத்துவதோ
எமது விருப்பமல்ல. புத்தரும் மகாவீரரும் இந்தியாவில் தோன்றிய மாபெரும் சிந்தனையாளர்கள்.
வைதீக பாசிசத்திற்கெதிராக அடித்தட்டு மக்களைத் திரட்டி பெரும் புரட்சியை நம் மண்ணில்
நடத்தியவர்கள். மிக நீண்ட இந்திய சிந்தனை மரபை பிரதிபளித்தவர்கள். இன்று அவர்களும்
கடவுளாக மாற்றப்பட்டபோதிலும் வைதீகக் கடவுள்களின் அட்டூழியங்களை இவர்கள் நிகழ்த்தியதில்லை.
அம்பேத்கர், பெரியார் போன்றோரின் உழைப்பால் இன்றும் அடித்தட்டு மக்கள் திரளுக்கு நெருக்கமாக
இருப்பவர்கள். இவர்களை இழிவு செய்வது பெரும் மக்கள் திரளை இழிவு செய்வதாகும்.
கண்டிரமாணிக்கம் சென்று சிலை கிடைத்த இடத்தைப்
பார்வையிடும் முடிவைக் கைவிட்டு திருவாரூர் கும்பகோணம் சாலையில் அரசவனங்காடு என்ற கிராமத்திற்கு
அருகிலுள்ள தீபங்குடி தீபநாயக சுவாமி (ரிஷபதேவர்) சமணர்கோவிலுக்குச் சென்றோம். இந்து
சமய அறநிலையத் துறையின் எண்கண் செயல் அலுவலர் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோயிலில்
ரூ 60 லட்சங்கள் செலவில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இக்கோயிலின் பூசகர்
பார்சுவநாதன் கோயிலைத் திறந்து காட்டினார். சமண மதத்தின் முதலாவது தீர்த்தங்கரர் ரிஷபதேவரின்
ஆலயம் இது. இக்கோயில் முன்பு 1990 இல் புதுப்பிக்கப்பட்டது. ஒவ்வொரு முறை புதுப்பிக்கப்படும்போதும்
பழமை கொஞ்சம் கொஞ்சமாக அழிவுறுகிறது. தீபங்குடி சமணர் ஆலயம் பற்றிய எனது கட்டுரையை
வாசிக்க கீழ்க்கண்ட இணைப்பை சொடுக்கவும்
தீபங்குடி சமணப்பள்ளி
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் கண்டிரமாணிக்கம்
கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலை குறித்த பதிவுகளை முக நூலில்
(facebook) அ.மார்க்ஸ், கோமகன் போன்றோர் செய்துள்ளனர். அவற்றின் இணைப்புகள் பின்வருமாறு:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக