வியாழன், ஜூலை 26, 2012

இனி சாலையெங்கும் டாஸ்மாக் எச்சரிக்கைகள்!


இனி சாலையெங்கும் டாஸ்மாக் எச்சரிக்கைகள்! 
                                
                                  - மு.சிவகுருநாதன்


    பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றை தனியாரிடம் விட்டுவிட்டு அரசுகள் மதுக்கடைகளை நடத்தத் தொடங்கியுள்ளன. அரசு எந்திரம் இலக்கு வைத்து மதுபான விற்பனையை அதிகப்படுத்தியுள்ளன. பள்ளி, கல்லூரிகள், கோயில், மருத்துவமனை, குடியிருப்பு ஏன் சமத்துவபுரங்களில் கூட டாஸ்மாக் கடைகள் திறக்கக்கப்படுகின்றன.

  சாலையோரங்களில் இருக்கும் டாஸ்மாக் மதுபானக்கடையில் குவாட்டர் வாங்கி மூடியைத்திறந்து அப்படியே ராவாக மடமடவென்று குடித்துவிட்டு அப்படியே நிதானமிழந்து வீழ்பவர்களை நாம் தினந்தோறும் பார்க்க முடியும். இதன் காரணமாக நிகழும் சாலை விபத்துகள் ஏராளம். மதுவைத் தவிர பிற காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

   தேசிய நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் பாதசாரிகளின் உயிருக்கு உத்திரவாதமின்றி அமைக்கப்படுகின்றன. சைக்கிளில் செல்வோரும் மிகுந்த சிரமத்திற்குள்ளாக நேரிடுகிறது. எவ்வளவோ தொழில்நுட்பங்கள் முன்னேறியிருக்க சைக்கிள் பின்புற பிரதிபளிப்பான் (indicators) இன்னும் பழையபடிதான் உள்ளது. அதுகூட எதேனும் லேசாக மோதினால்கூட நொறுங்கிவிடும். சாலைகளில் மரங்களில் ஒட்டப்படும் பிரதிபளிப்பான் கூட பரவாயில்லை. சைக்கிள் தயாரிக்கும் நிறுவனங்கள் ஏன் இவற்றை கவனிக்க மறுக்கின்றன. பாதசாரிகள், சைக்கிள் ஓட்டிகள் சாலைகளில் சென்று வீடு திரும்புவது உறுதியில்லாத நிலை உள்ளது.

   திருவாரூர் - திருத்துறைப்பூண்டி மாநில நெடுஞ்சாலையில் அடிக்கடி குடிபோதை சாலை விபத்துகள் நடந்தேறுகின்றன. சென்ற ஆண்டில் மணலி கிராமத்திற்கருகே நடந்த சாலை விபத்தொன்றால் நான் பல கிலோ மீட்டர் தூரம் நடந்துவர வேண்டிய நிலை ஏற்பட்டது.

  திருத்துறைப்பூண்டி திருவாரூர் நெடுஞ்சாலையில் ஆலத்தம்பாடி, மணலி ஆகிய கிராமங்களுக்கு இடையில் பழையங்குடி ஊராட்சிப் பகுதியில் தலைவர் ஏ.எஸ்.பாண்டியன் மதுபான கடைப்பகுதி என எச்சரிக்கைப் பலகை வைத்துள்ளார். தமிழகமெங்கும் இந்த மாதிரி எச்சரிக்கைப் பலகை வைக்கவேண்டும். தலித் குடியிருப்புகள் நிறைந்த இந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது. குடிபோதை விபத்துகள் அடிக்கடி நிகழும் இப்பகுதியில் வேறுவழியின்றி ஊ.ம.தலைவர்  எச்சரிக்கைப் பலகை வைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக வேகத்தடைகள் அமைக்க கோரிக்கைகள் வரலாம். தேசிய நெடுஞ்சாலைகளில் பள்ளிக்கூடப் பகுதிகளில்கூட வேகத்தடைகள் வைக்கப்படுவதில்லை.

   பள்ளிப்பகுதிகளில் வருங்கால அப்துல் கலாம்கள் நடமாடும் இடம் என்று பல இடங்களில் விளம்பரப்பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. நமது குழந்தைகளை இதைவிட மோசமாக இழிவுபடுத்தமுடியும் என எனக்குத் தோன்றவில்லை. இதைப்போல ஒவ்வொரு டாஸ்மாக் கடை அருகே சாலைகளில் மாநில அரசின் வருவாயைப் அதிகரிக்கும் புரவலர்கள் நடமாடும் இடம் வாகனங்கள் மெதுவாகச் செல்லவும் என்றுஅறிவிப்புப் பலகைகள் வைக்கலாம்.

   மக்கள் நலனைக் கணக்கில்கொள்ளாது வருவாயை மட்டும் நம்பி அரசு நடத்தும் டாஸ்மாக் சூதாட்டத்தில் அப்பாவி ஏழை கூலித்தொழிலாளிகள் பலியாவது வேதனையான உண்மை. கள்ளுக்கடைகளை மூடிவிட்டு சசிகலா, விஜய் மல்லையா போன்ற சாராய முதலைகள் நலன்கள் மட்டும் அரசால் பாதுகாக்கப்படுகின்றன.

   100 நாள் வேலைத்திட்டத்தில் வழங்கப்படும் கூலித்தொகையில் பெரும்பகுதி டாஸ்மாக் கடைகளையே சென்றடைகிறது. குடியால் உடல்நலம் கெட்டு மரணமடைவது ஒருபுறமிருக்க குடிபோதை விபத்துகள் நடப்பதால் பல்லாயிரம் உயிர்கள் மாண்டுபோகிறது. ஜெ.ஜெயலலிதாக்களும் மு.கருணாநிதிகளும் இந்நிலை நீடிக்கவே விரும்புகிறார்கள். அப்போதுதான் குவாட்டர் பாட்டிலில் குடிமகனின் வாக்கைத் தக்கவைக்க முடியும் என்பது இவர்களது அசாத்திய நம்பிக்கை. இதை மாற்றக்கூடிய சக்தி நமது குடிமகன்களிடம் இருக்கிறதா என்பதே நம்முன் எழும் மிகப்பெரிய கேள்வி.

2 கருத்துகள்:

மதிகண்ணன் சொன்னது…

ஏற்கனவே எங்கள் ஊரில் ஒரு டாஸ்மார்க் கடைப் பகுதியில் கடை / பார் இவற்றை மையப்படுத்தி இரண்டு பக்கமும் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

மு.சிவகுருநாதன் சொன்னது…

அன்புத்தோழர் மதிகண்ணன்,
தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி.
தோழமையுடன்...
மு.சிவகுருநாதன்

கருத்துரையிடுக