புத்தர் சிலையின்
இப்போதைய நிலை - தொடரும் துயரம்
-மு.சிவகுருநாதன்
புத்தர் சிலையை மீண்டும் மறைத்திருக்கும் பிளக்ஸ் தட்டி |
அருங்காட்சியக வாசல் நோக்கித் திருப்பப்பட்ட புத்தர் சிலை |
புத்தர் சிலையின் முன் தோற்றம் |
துயரங்களுக்கு மத்தியில் சாந்தமான புத்தர் |
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் கண்டிரமாணிக்கத்தில்
கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலை துணியால் போர்த்தப்பட்டும் பிளக்ஸ் போர்டால் மறைக்கப்பட்டும்
உள்ளதை அ.மார்க்ஸ் உள்ளிட்ட நாங்கள் முகநூலில் படத்துடன் வெளிக்கொணர்ந்தோம். அதன் பின்னர்
திருச்சி காலைக்கதிர், சென்னை தினமலர் ஆகிய நாளிதழ்களில் படத்துடன் செய்தி வெளியானது.
இதனால் பதட்டமான மாவட்ட நிர்வாகம் சேலை மறைப்பையும் பிளக்ஸ் போர்டையும் தற்காலிகமாக
அகற்றியது.
இது குறித்து எனது முகநூல் மற்றும் வலைப்பூ பக்கங்களிலும்
கருத்து தெரிவித்திருந்தேன். திருவாரூர் தியாகராஜர் ஆலய மேற்குக் கோபுர வாசலில் மேற்கு
நோக்கி அருங்காட்சியக வாயிலில் வைக்கப்பட்ட புத்தர் சிலை தற்போது வடக்கு திசையை நோக்கி
அதாவது அருங்காட்சிய வாசலைப் பார்த்திருக்குமாறு திருப்பி வைக்கப்பட்டுள்ளது. மேற்கு
வாசல் வழியே நடந்து செல்வோரின் கண்களுக்கு புத்தர் சிலை படக்கூடாது என்பதற்காக கோயில்
நிர்வாகத்தின் இலட்சார்ச்சனை விழா அறிவிப்பு பிளக்ஸ் கொண்டு வழக்கம்போல் மறைத்து வைத்துள்ளனர்.
அவ்விடத்தைக் கடப்பவர்கள் உற்றுப்பார்த்தால் மட்டுமே புத்தர் சிலையின் முதுகைப் பார்க்கமுடியும்.
புத்தர் சிலையை மறைத்து வைக்கவேண்டும் என்பதில்
அரசு எந்திரம் மிகவும் கவனமாக இருப்பது தெரிகிறது. அதற்கான காரணத்தை தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், சம்மந்தப்பட்ட
தொல்லியல் மற்றும் அருங்காட்சியக துறைகள் உரிய விளக்கமளிக்கவேண்டும். புத்தர் சிலையை
திட்டமிட்டு மறைத்ததுபோல் இருக்கக்கூடாது என்பதற்காக கோயில் நிர்வாகத்தின் பிளக்ஸ்
போர்டு தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது.
சென்னையில் கண்ணகி சிலை மெரினா கடற்கரையிலிருந்து
அகற்றப்பட்டபோது தமிழகத்தின் பெரும்பான்மை கட்சிகளும் அமைப்புகளும் கண்டனக்குரல் எழுப்பியதை
நாடறியும். புத்தர் சிலை அரசு எந்திரத்தால் அவமானப்படுத்தப் படும்போது யாரும் கண்டுகொள்ளாமலிருப்பது
வேதனையளிக்கிறது. மத சார்பற்ற நாடு என்று சொல்லிக்கொள்ள நாம் வெட்கபடத்தான் வேண்டும்.
பாமியான் புத்தர் சிலை தலிபான்களால் தகர்க்கபட்டது போன்ற நிகழ்வுகளைக் கேள்வி கேட்கும்
அருகதையைக் கூட நாம் இழந்துவிடுவோம் என்று தொன்றுகிறது. இனியும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் கண்காணிப்பது அரசின் கடமையாகும்.
புத்தர் சிலை அவமதிக்கப்பட்ட
நிகழ்வில் நமக்கு எழும் வினாக்கள்
- ஓர் இந்து சைவக்கோயிலில் அருங்காட்சியகம் அமைந்திருந்தாலும் அருங்காட்சியக செயல்பாடுகளை எப்படி அறநிலையத்துறை கட்டுபடுத்தமுடியும்? அருங்காட்சியக வாசலில் வைக்கப்பட்ட சிலையை திருப்ப அல்லது மறைக்க உத்தரவிட்டது யார்?
- புத்தர் சிலையை அருங்காட்சியக உள்ளே வைக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? மூடி மறைக்கவும் திருப்பி வைக்கவும் உடன் நடவடிக்கை எடுக்கும் மாவட்ட நிர்வாகத்தால் ஏன் சிலையை உள்ளே வைக்கமுடியவில்லை?
- புத்தர் சிலையை அருங்காட்சியக வாசலில் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் யார்? யாரிடமிருந்தாவது எழுத்து மூலமான புகார் பெறப்பட்டுள்ளதா? அரசுப்பணியை செய்ய விடாமல் தடுத்த இவர்கள் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை?
- திருக்கோயில் நிர்வாகத்தின் பிளக்ஸ் தட்டி வைக்க வேறிடம் இல்லையா? சிலை போர்த்தப்பட்டிருந்தபோதும் இந்த தட்டிதான் மறைக்கப் பயன்பட்டது. கோயில் நிர்வாகம் அல்லது இந்து மத வெறியர்களின் கோரிக்கைகளுக்கு செவிமெடுக்கும் அரசு நிர்வாகம் மத சார்பற்ற சமூக, மனித உரிமை ஆர்வலர்களின் கோரிக்கையைக் கண்டுகொள்ள மறுப்பது ஏன்?
- தமிழகத்திலுள்ள அனைத்து அருங்காட்சியகங்களிலும் புத்தர், மாகாவீரர் சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளபோது இங்கு மட்டும் ஏனிந்த அநியாயம் நடக்கிறது?
- இப்போது சிலை பற்றிய குறிப்பைக் காணவில்லை. அருங்காட்சியக வாயிலில் வைக்கப்பட்டுள்ள சிலையின் பாதுகாப்பிற்கு யார் பொறுப்பு?
- புத்தர் சிலையை இவ்வாறு அவமதித்தவர்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?
- புத்தர், மகாவீரர் போன்ற மகான்கள் குறித்த அரசு அலுவலர்களின் பொதுப்புத்தி சார்ந்த கண்ணோட்டம் காவிச்சாயம் படிந்திருப்பதேன்?
- புத்தர் சிலையை அருங்காட்சியக உள்ளே வைக்காமலும் வேறிடம் கொண்டு செல்லாமலும் காலம் தாழ்த்துவது ஏன்?
- புத்தர் சிலையை மாற்றப் போகிறார்களா அல்லது அருங்காட்சியகத்தை வேறிடத்திற்கு கொண்டு செல்லப் போகிறார்களா? தெரியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக